திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°57′46″N 79°38′52″E / 10.9627°N 79.6477°E |
பெயர் | |
பெயர்: | ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமீயச்சூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீமேகநாதர் (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர்) |
உற்சவர்: | பஞ்சமூர்த்தி |
தாயார்: | ஸ்ரீலலிதாம்பிகை (சாந்தநாயகி) |
தல விருட்சம்: | வில்வ மரம் |
தீர்த்தம்: | சூர்ய புஷ்கரணி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | விமானம்: கஜப்ருஷ்ட அமைப்பு |
கோயில்களின் எண்ணிக்கை: | இரண்டு |
வரலாறு | |
தொன்மை: | சோழர் கால கோயில் |
திருமீயச்சூர் மேகநாதர் கோயில் என்பது சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டான் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார். கிருத யுகத்திலிருந்து உள்ள திருக்கோயில் இது.
இக்கோயிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கோயில்களான இந்த இரு கோயில்களும், இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை.[1]
இது சோழ நாட்டு காவிரி தென்கரையின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 56 வது கோவிலாகவும், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 119 வது தேவாரத் தலமாகவும் அமைந்துள்ளது.
ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.[1]
பெயர்க்காரணம்
[தொகு]சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது, சூரியனால் உடல் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியன் ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.[2]
அமைப்பு
[தொகு]கிழக்கு நோக்கிய அமைந்துள்ள கோயிலின் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து மற்றொரு கோபுரம் உள்ளது. எதிரே உள்ள திருச்சுற்றில் விசுவநாதர் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் லலிதாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அங்கே பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் மேகநாதசாமி முயற்சிநாதர் உள்ளார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சேத்திர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாரூடர் ஆகியோர் உள்ளனர். விமானம் கஜபிரஷ்ட அமைப்பை உடையது. திருச்சுற்றில் தேயுலிங்கம், விநாயகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யம லிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வருணலிங்கம், நிருத்வி லிங்கம், அகத்திய லிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம், சித்தி விநாயகர், மகாலட்சுமி, பிரித்வி லிங்கம், உள்ளிட்டோர் உள்ளனர். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்
[தொகு]திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.
கங்காதரர் சிற்பம்
[தொகு]கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் தெற்கு தேவகோட்டத்தில் உள்ள சிற்பம் சிற்பக் கலையின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள மூர்த்தியின் வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர். இச்சிற்பத்தில் அம்பாளில் முகத்தில் வலது புறம் கோபமாகவும், இடது புறம் பார்த்தால் புன்னகைத் தவழும் நிலையிலும் இருப்பதைக் காணலாம்.உலகில் கணவன் – மனைவிக்கான இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. [3]
சிறப்புகள்
[தொகு]- தலவரலாறின்படி காசிப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகிய இருவரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பிள்ளைபேறு பெற்றனர்.
- சூரிய பகவான் இங்கு தவமியற்றி சாப விமோசனம் பெற்றார்.
- ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 21 லிருந்து 27 வரை சூரிய கிரணங்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடும்.
புராண காலத்தில் இங்கு பிறந்தோர்
[தொகு]- கருடன்
- அருணன்(சூரியனின் தேரோட்டி)
- வாலி
- சுக்ரீவன்
- எமன்
- சனீஸ்வரன்
பரிகாரத் தலம்.
[தொகு]கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு பரிகாரமாக உண்பர்.
தங்கக்கொலுசு
[தொகு]1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலின் குடமுழுக்கு 8.2.2015 அன்று நடைபெற்றது. காலை 8ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காலை 10.00 மணிக்கு மேகநாதசுவாமி, லலிதாம்பாள், சகலபுவனேஷ்வரர், மின்னும் மேகலாம்பாள், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது. மாலை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.[4]
தேரோட்டம்
[தொகு]147 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலில் தேரோட்டம் 23 சனவரி 2018இல் நடைபெற்றது. [5]
படத்தொகுப்பு
[தொகு]-
ராஜகோபுரம்
-
கொடிமரம்
-
முன்மண்டபம்
-
மூலவர் மேகநாதர் விமானம்
-
மேகநாதர் விமானம், சகலபுவனேஸ்வரர் விமானம்
-
வலது புறத்திலிருந்து விமானம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 குமுதம் ஜோதிடம்; 5.9.2008; பக்கம் 3,4,5,6
- ↑ அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
- ↑ பார்வதி அருண்குமார், திகட்டாத இன்பம் அளிக்கும் திருமீயச்சூர் திருக்கோயில், தினமணி ஜோதிடம், 2 பிப்ரவரி 2015
- ↑ திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் குடமுழுக்கு, தினமணி, 9.2.2015
- ↑ திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் தேரோட்டம் : 147 ஆண்டுகளுக்குப் பின் பவனி வந்த மரத்தேர், தினமணி, 24 சனவரி 2018
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]திருமீயச்சூர் மேகநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருமாகாளம் மகாகாளநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 56 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 56 |