விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 16, 2014
Black-white photograph of Emily Dickinson2.png

எமிலி டிக்கின்சன் (டிசம்பர் 10, 1830மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார். டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. மேலும்...


Hca33.jpg

பேரரசரின் புதிய ஆடைகள் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் எழுதிய ஒரு குட்டிக் கதை ஆகும். இரு நெசவாளர்கள் பேரரசர் ஒருவருக்கு புதிய ஆடைகள் செய்து தருவதாக வாக்களிக்கின்றனர். அவ்வாடைகளை முட்டாள்களாலும் தகுதியற்றவர்களாலும் காணமுடியாது என்று கூறுகின்றனர். புதிய ஆடைகள் தயாரானதாகப் பாசாங்கு செய்கின்றனர். பேரரசர் உட்பட அனைவரும் தங்கள் கண்களுக்கு ஆடைகள் புலனாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளக் கூசி ஆடைகள் இருப்பது போல நடிக்கின்றனர். ”புதிய ஆடைகளை” அணிந்த பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் செல்கிறார். அப்போது மக்களும் அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதை சுட்டிக்காட்டாது விடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பெரியவர்களைப் போன்று பாசாங்கு செய்யாமல் ”பேரரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிடுகிறது. டேனிய மொழியில் எழுதப்பட்ட இக்கதை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும்...

நவம்பர் 9, 2014
Golconda Fort 005.jpg

கோல்கொண்டா தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், புராதன கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும். குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது. 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். மேலும்...


Invisible Pink Unicorn.svg

காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை இறை நம்பிக்கையை அங்கதம் செய்யும் பகடி சமயத்தின் ஒரு பெண் கடவுளாகும். கொம்புக்குதிரை வடிவத்தைக் கொண்டிருக்கும் இக்கடவுளைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் என்று இறை நம்பிக்கையின் முரண்பாட்டை சுட்டிக்காட்ட, இறைமறுப்பாளர்களும் பிற சமய ஐயப்பாட்டாளர்களும் இக்கருத்துருவைப் பயன்படுத்துகின்றனர். இது ரசலின் தேனீர் கேத்தலின் தற்கால மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பறக்கும் இடியாப்ப அரக்கனும் ஒப்பு நோக்கக்கூடியவை. காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்கு பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதமாகும். மேலும்...

செப்டம்பர் 14, 2014
Calcium chloride CaCl2.jpg

கல்சியம் குளோரைட்டு என்பது கல்சியம் மற்றும் குளோரின் அடங்கிய உப்பு ஆகும். அறைவெப்ப நிலையில் திண்மமாக காணப்படுவதுடன் வழமையான அயனி ஐலைடாகவும் நடந்துகொள்ளும். தாவரங்களின் தட்பவெப்ப நிலைகளை பேணுவதற்கும், பாதையில் பனி மற்றும் தூசினை கட்டுப்படுத்தவும், இது பயன்படுத்தப்படுகிறது. இதன் நீர் உறிஞ்சும் திறனினால், நீரற்ற கல்சியம் குளோரைட்டு, காற்று புகாத கொள்கலனில் அடைத்து பாதுகாக்கப்படுகிறது. கல்சியம் குளோரைட்டு தண்ணீரில் கரைதிறனைக் கொண்டிருப்பதால், கல்சியம் அயனி, கரைசலை உருவாக்கிட மூலப்பொருள் ஆகப் பயன்படுத்தப்படும். இவ் பண்பினால் கரைசல்களில் இருந்து அயனிகளை பிரித்தெடுக்க இது பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் குளோரைட்டு, கரைசலில் உயர்வான வெப்ப அடக்க மாற்றத்தினைக் கொண்டுள்ளது. தண்ணீரில் கரைசலை உண்டாக்கும் போது கணிசமான வெப்ப உயர்வு ஏற்படும். மேலும்...


Kalpana Chawla, NASA photo portrait in orange suit.jpg

கல்பனா சாவ்லா (1961-2003) இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கல்பனா 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 இல் அவரது முதல் பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ்-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் 1997 நவம்பர் 19 முதல் ஆயத்தமானார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். 2003 பெப்ரவரி 1 இல் ஏழு வீரர்களுடன் எஸ்டிஎஸ்-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார். மேலும்...

செப்டம்பர் 7, 2014
HathiGumphaInscription.jpg

ஹாத்திகும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலர் என்பவரால் கிமு 2-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது. இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது.மேலும்...


CassieChetty.jpg

சைமன் காசிச்செட்டி (1807-1860) 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. இவர் எழுதிய நூல்களுள் "தமிழ் புளூட்டாக்" மிக முக்கியமானது. இது 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. மேலும்...


சூலை 6, 2014
Istanbul collage 5j.jpg

இசுதான்புல் துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மேலும்...


Card. Mahony's Scrutiny Ballot, 2013.jpg

திருத்தந்தைத் தேர்தல் என்பது கர்தினால்கள் உரோமை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய ஆயரைத் தேர்வு செய்யக் கூடும் கூட்டம் ஆகும். புனித பேதுருவின் வழிவந்தவர் என கத்தோலிக்கர்களால் நம்பப்படும் உரோமை ஆயர், திருத்தந்தை என அழைக்கப்படுகின்றார். திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையின் கண்கானும் தலைவராக ஏற்கப்படுகின்றார். திருத்தந்தை வத்திக்கான் நாட்டின் அரசுத் தலைவரும் ஆவார். ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடப்பில் உள்ள மிகப் பழைமையான முறை திருப்பீடத் தேர்தல் முறையாகும். காலம் காலமாக நடைப்பெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான திருத்தந்தை பத்தாம் கிரகோரி 1274 இல் இரண்டாம் இலியோன்சு பொதுச்சங்கத்தின் போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாக பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வைக்கவும், புதிய திருத்தந்தையை தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாதெனவும் உத்தரவிட்டார். மேலும்...


சூன் 29, 2014
BRA orthographic.svg

பிரேசில் என்பது தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது. பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அத்திலாந்திக் பெருங்கடல் உள்ளது. எக்குவடோர், சிலி தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரபூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே. மேலும்...


Ecology symbol.svg

புவி நாள் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜான் மெக்கானெல் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒருவர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது. மேலும்...


சூன் 22, 2014
Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg

ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். மேலும்...


ShipTracks MODIS 2005may11.jpg

காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் என்பது பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பல் என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரியைச் சுற்றிலும் உள்ளதான பருவ நிலை நிகழ்வுகளின் பரம்பலின் மாற்றமாகவோ இருக்கலாம் (எடுத்துக் காட்டாக, மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான தீவிர பருவ நிலை மாற்றங்கள்). தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதான, பெரும்பாலும் சுழற்சியான, எல் நினொ-தெற்கு அலைவு போன்ற தட்பவெப்ப உருமாதிரிகளாக இருக்கலாம்; அல்லது புழுதிப் புயல் போன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒற்றை நிகழ்வுகளாக வரலாம். மேலும்...


சூன் 15, 2014
European honey bee extracts nectar.jpg

பூச்சி கணுக்காலிகள் (ஆத்திரப்போடா) வகையுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று சோடிக் கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு சோடி உணர்வுறுப்புக்களையும் கொண்டவையாக இருக்கும். இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வுத்துறை பூச்சியியல் எனப்படும். உலகிலுள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன. மேலும்...


Het Baldakijn van Bernini - The Baldachinno.jpg

புனித பேதுரு கல்லறை என்பது வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ் புனித பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டதாக நிர்ணயிக்கப்படும் நினைவுக் கட்டடத்தையும் அதைச் சூழ்ந்துள்ள கல்லறைக் குழிகளையும் உள்ளடக்கிய இடம் ஆகும். கி.பி. 130-300 காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட நினைவுக் கட்டடத் தொகுதியின் மேற்கு ஓரத்தில் பேதுரு கல்லறை உள்ளது. கி.பி. சுமார் 330 இல், காண்ஸ்டண்டைன் மன்னர் ஆட்சியின்போது புனித பேதுரு கல்லறை மீது ஒரு பெருங்கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கான அடித்தளம் அமைத்த போது ஏற்கெனவே இருந்த நினைவுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, மண்ணால் நிரப்பப்பட வேண்டியதாயிற்று. இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே புனித பேதுரு கல்லறைப் பகுதியில் அமைந்த இரண்டாம் நூற்றாண்டு நினைவிடத்தில் இரண்டு முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின் போது பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும்...


சூன் 8, 2014
RHSGlasshouse.JPG

பைங்குடில் விளைவு என்பது பூமியின் மேற்பரப்பிலுள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில் இருக்கும் பைங்குடில் வளிமங்களினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும். இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சு, பூமியை அடையும்போது, வளிமண்டலத்திலுள்ள வளிமமும், முகிலும், நிலத்திலுள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களை தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு மீண்டும் விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொரு பகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை விடக் கூடிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி, வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும்.மேலும்...


Zhakaram.svg

தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும். சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும்...


சூன் 1, 2014
SavithaPress1.jpg

நிகழ்த்து கலை என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவங்கள் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டது. இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகின்றன. இது பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும். நுண்மையான உறுப்புக்களையும், நுண்ணிய திறன்களையும் நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன இதனுள் அடங்கும். ஒரு கலைஞனின் நுண்கலை வடிவின் சிறப்புக் கூறுகள் பார்வையாளர்களின் மத்தியில் வெளிப்படுத்தப்படும்போது அது நிகழ்த்து கலையாக வடிவம் கொள்கின்றதெனலாம். மேலும்...


Açaizeiro no palácio.JPG

அசாய் பனை என்பது ஈட்டர்பே ஒலெராசியா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். பழத்திற்காகவும் மேன்மையான நுங்குக்காவும் பயிரிடப்படும் ஈட்டர்பே பேரினத்தைச் சேர்ந்த பனை மர இனமாகும். 'அழுகின்ற அல்லது தண்ணீர் வெளியேற்றும் பழம்' என்று பொருள்படும் துபியன் வார்த்தையான இவாசா'ய் யின் ஐரோப்பியத் தழுவலில் இருந்து இப்பெயர் வந்ததாகும். சமீப ஆண்டுகளில் அசாய்ய் பழத்துக்கான உலகளாவிய தேவை விரிவடைந்து வருகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது அசாய்ய் பனை பயிரிடப்படுகிறது. இதுனுடன் நெருங்கிய தொடர்புடைய இனமான ஈட்டர்பே எடுலிஸ் (Euterpe edulis) (ஜுகாரா) தற்போது நுங்கிற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் எட்டு இனங்கள் பெலைஸிலிருந்து தெற்கு நோக்கி பிரேசில் மற்றும் பெரு வரையான மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவை. குறிப்பாக இவை சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குச் சமவெளிகளில் வளர்கின்றன. அசாய் பனைகள் 3 மீட்டர்கள் நீளம் வரையான இறகு வடிவ இலைகளுடன், 15 முதல் 30 மீட்டர்கள் வளரக்கூடிய உயரமான ஒல்லிய பனைகள் ஆகும். மேலும்...


மே 25, 2014
Marche sel.jpg

உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை என்பது காலனிய இந்தியாவில் பிரித்தானியர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாக செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது. மேலும்...


Aloe succotrina - Köhler–s Medizinal-Pflanzen-007.jpg

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும் மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. மேலும்...


மே 18, 2014
Andhra Pradesh locator map (1956-2014).svg

ஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும். நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஐதராபாத் ஏ-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது. இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்பட படப்பிடிப்பகமான ராமோஜி திரைப்பட நகரம், அத்துடன் இந்தியாவின் இராண்டாவது இடம் வகிக்கும் பெரிய தொழிற்சாலையான டோலிவுட் என பெயர் பெற்ற ஆந்திரத் திரைப்படத்துறை ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இந்நகரம் மிகையான விளையாட்டு அரங்கங்களுடன் பற்பல விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டுப் புகலிடமாகவும் அமைந்துள்ளது. அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகள் இங்கு மிகுதியான அளவில் நடக்கின்றன. ஐதராபாத்தில் வசிக்கும் மக்களை ஐதராபாதி என்று அழைக்கின்றனர். இந்நகரம் பழமையுடன் புதுமையும் இணைந்த நவீன நகரமாக விளங்குகிறது. மேலும்...


TamilNadu Logo.svg

தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2011–12) இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரியதாகும். தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. மேலும்...


மே 11, 2014
1979 Iranian Revolution.jpg

ஈரானியப் புரட்சி என்பது ஈரானின் இசுலாமியப் புரட்சி என்றும் 1979 புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பலவீ அரசமரபின் அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இசுலாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் அமைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது. இப்புரட்சிக்கு இடதுசாரி அமைப்புகளும் இசுலாமிய அமைப்புகளும் ஈரானிய மாணவர் இயக்கமும் துணைபுரிந்தன. புரட்சியின் தொடக்கத்தில் சா அரசைக் காப்பாற்ற சோவியத் ஒன்றியம் முயன்றாலும் இசுலாமிய குடியரசை சோவியத் ஒன்றியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. இப்புரட்சி உலகுக்கு பெரும் வியப்பைத் தந்தது. புரட்சிக்குத் தேவையானவை எனக் கருதப்படும் பொருளாதார நெருக்கடி, அடித்தட்டு மக்களின் புரட்சி, போரில் தோல்வி, கட்டுப்படாத இராணுவம் போன்ற காரணங்கள் இப்புரட்சிக்கு தேவைப்படாததே இதற்கு காரணமாகும். இப்புரட்சி மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்பு கொண்ட இசுலாமிய ஆதிக்க கொள்கை உடையதாக மாறியது. இப்புரட்சி ஒப்பீட்டளவில் வன்முறையற்றதாக இருந்தது. மேலும்...


LH 95.jpg

வானியல் என்பது விண்பொருட்கள் பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஓர் அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும். வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பாபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது. அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. மேலும்...


மே 4, 2014
Flag of ASEAN.png

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு அல்லது ஆசியான் என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன. அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன. மேலும்...


N-Mesopotamia and Syria english.svg

மெசொப்பொத்தேமியா என்பது, தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பிரதேசமாகும். இன்றைய ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. மெசொபொதேமியாவானது, மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்கூறிய இரண்டு ஆற்றுச் சமவெளி முழுவதையும், சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய நாகரிகமாகத் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்றாகும். இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று. மேலும்...


ஏப்ரல் 26, 2014
Dai Ön Yeke Mongghul Ulus.PNG

யுவான் அரசமரபு குப்லாய் கானால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் மங்கோலியாவின் போர்சிசிங் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தென் சீனாவை ஆட்சி புரிந்த சாங் அரசமரபு மன்னர்களை வெற்றி கொண்டவர். குப்லாய் கானுக்கு முன்னரும் மங்கோலியர்கள் சீனாவின் (தற்கால வடக்குச் சீனா) பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளார்கள். ஆனால் 1271 இல் குப்லாய் கான் யுவான் அரசமரபைப் தோற்றுவிக்கும் வரை சீன மரபுப்படி புதிய அரசமரபு எதையும் உருவாக்கவில்லை. 1271லிருந்து 1368 வரை இவர் தோற்றுவித்த யுவான் மரபு அரசர்கள் ஆட்சி புரிந்தனர். இதுவே சீனாவில் வெளிநாட்டவர் உருவாக்கிய முதல் அரசமரபாகும். இவர்கள் தற்காலத்திய சீனாவின் பெரும்பகுதிகளையும் தற்கால மங்கோலியாவையும் ஆட்சி புரிந்தார்கள். மேலும்...


மணியம்மையார் (1920-1978) என அறியப்பட்ட அரசியல்மணி, திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் ஈ. வெ. இரா.வின் இரண்டாவது மனைவி ஆவார். பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தவர். சொற்பொழிவாளர்; எழுத்தாளர், நிர்வாகி. திராவிடர் கழகத்தின் பல்வேறு களப்போராட்டங்களைத் தலைமையேற்று பல தடவைகள் சிறைக்கும் சென்றுள்ளார். 1949 இல் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார். 1974 இல் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. 1974 டிசம்பரில் நடந்த இராவணம் லீலை நிகழ்வுக்கு தலைமை வகித்தார். 1977 இல் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும்...


ஏப்ரல் 21, 2014
ASW-Title Pic.png

ஆப்கான் சோவியத் போர் (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுன்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரனமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான முகாசிதீகளுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும்...


Anastomus oscitans - Bueng Boraphet.jpg

நத்தை குத்தி நாரை (Anastomus oscitans) நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பறவையினமாகும். இந்த தனிச்சிறப்புள்ள பறவையினம் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாக காணப்பெறுகின்றன. தன் இடத்தில் தங்கும் பறவையெனினும் சிறு தூரம் வரை உணவு கிடைக்கும் இடங்களுக்கு பயணிப்பதும் உண்டு. இவை சற்றே சாம்பல் கலந்த வெள்ளை நிறமும் பளபளக்கும் கருமை நிற சிறகும் வாலும் கொண்டிருக்க, கருத்த உடல் பகுதிகள் ஒருவகை பச்சை வண்ணம் அல்லது ஊதா போன்ற நிறத்தில் உலோகப்பளப்பளப்பை காண்பிக்கின்றன. புதிதாய் பிறந்த குஞ்சுகளிலும், இளம் பறவைகளிலும் இவ்வாறான துளை காண இயலாது, எனினும் வண்ணங்கள் பெற்றோரைப் போன்றே இருக்கும். இவ்வகையான துவாரத்தினால் இவை தன் முக்கிய இரையான நத்தைகளை வெகு இலாவகமாக வாயாளுகின்றன என்பதனாலேயே, இவ்வினத்திற்கு இப்பெயர் வரக்காரணம். மேலும்...


ஏப்ரல் 14, 2014
Quadratic equation coefficients.png

கணிதத்தில், இருபடிச் சமன்பாடு (Quadratic equation) என்பது ஒரு இருபடிப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடாகும். இதன் பொது வடிவம்:

இங்கு x ஒரு மாறி. a, b, மற்றும் c மாறிலிகள். மேலும் a ≠ 0. ஏனெனில் a = 0 -ஆக இருந்தால் இச்சமன்பாடு, ஒருபடிச் சமன்பாடாகிவிடும்.

மாறிலிகள் a, b, மற்றும் c, முறையே இருபடிக் கெழு, ஒருபடிக் கெழு மற்றும் மாறியைச் சாரா உறுப்பு எனவும் அழைக்கப்படுகின்றன. "quadratic" என்ற வார்த்தை சதுரத்தைக் குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லான quadratus, என்பதிலிருந்து பிறந்ததாகும். இருபடிச் சமன்பாட்டை காரணிப்படுத்துதல், வர்க்க நிரப்பி முறை, வரைபடம், நியூட்டன் முறை மற்றும் இருபடி வாய்ப்பாடு ஆகிய வழிகளில் தீர்க்கலாம். மேலும்...


ஆ. பு. வள்ளிநாயகம் (1953 ஆகத்து 192007 மே 19) ஒரு விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். இவர் 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது முதல் தனது இறுதிநாள் வரை அரசியற் செயற்பாட்டாளாராகப் பணியாற்றினார். ஆதிக்க எதிர்ப்பு, சாதி மறுப்பு, பொதுவுடைமை ஏற்பு ஆகியன அவருடைய அரசியற் கொள்கைகளாக இருந்தன.

வள்ளிநாயகத்திற்கு மதுரை தலித் ஆதார மையம் 2005 ஆம் ஆண்டில் விடுதலை வேர் என்னும் விருதினை வழங்கியது. 2007 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின் விருதாக அவருக்கு தலித் முரசு – பாலம் கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது. மேலும்...


ஏப்ரல் 7, 2014
I. Mayandi Bharathi.png

ஐ. மாயாண்டி பாரதி (1917, தமிழ்நாடு) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர். இவர் உப்புச் சத்தியாகிரகம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்புகுதல் போராட்டம், இரண்டாம் உலகப்போருக்கு எதிரான போராட்டம், ஆகத்து புரட்சி, 1950 களில் பொதுவுடமைவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாழ்ந்த போராட்டங்ககளில் பங்கெடுத்துவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாக பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பியவர்; பரப்பி வருபவர். மாயாண்டி பாரதி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவையானவை: படுகளத்தில் பாரதமாதா (1939), தூக்கு மேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள், போருக்குத் தயார்! , விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும் (2012), அரசு என்றால் என்ன?. மேலும்...


Blue circle for diabetes.svg

இன்சுலின் சாராத நீரிழிவு அல்லது முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவு (Diabetes mellitus type 2), இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும், ஒரு வளர்சிதைமாற்ற நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் (90%), மற்ற பத்து சதவிகிதத்தினர் (10%) முதன்மையாக ஒன்றாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1), கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில், உடற் பருமன் ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.


மார்ச் 30, 2014
Croup steeple sign.jpg

தொண்டைக் கட்டு அல்லது குரல்வளை, மூச்சுக்குழாய் அழற்சி என்பது சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒரு மருத்துவ நிலைமையாகும். இதன்போது தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல் போன்ற சுவாசப்பாதையின் மேல் பகுதிகளில் அழற்சி ஏற்படுகின்றது. இது சுவாசப்பாதையில், தீவிரமாக இருக்கும் தீநுண்ம நோய்த்தொற்றினாலேயே வழக்கமாக தூண்டப்படுகின்றது. இந்தத் தொற்றானது தொண்டையின் உள்ளாக வீக்கத்தை ஏற்படுத்தி, இயல்பான சுவாசத்திற்கு இடையூறு செய்து “குரைத்தல்” போன்ற இருமல், மிகைமூச்சொலி, மற்றும் கீச்சுக்குரல் போன்ற நிலைகளை ஏற்படுத்துகிறது. இது மிதமான, நடுத்தரமான அல்லது கடுமையான அறிகுறிகளை உண்டாக்கலாம். இவை பெரும்பாலும் இரவில் மோசமாகலாம். பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளும் தெரோயிட்டு மருந்தை ஒரு தடவை அளிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எப்போதாகிலும் எப்பினஃப்ரீன் மூச்சிழுத்தல் மூலம் உள்ளெடுக்கப்படல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பித்தல் அரிதாகவே இருக்கும். மேலும்


Euler's formula-ta.svg

கணிதத்தில் ஆய்லரின் வாய்ப்பாடு முக்கோணவியல் சார்புகளுக்கும் மெய்ப்புனை (சிக்கலெண்) அடுக்குறிச் சார்புக்கும் இடையிலான தொடர்பைத் தருகிறது. கணிதவியலாளர் ஆய்லரின் பெயரால் இவ் வாய்ப்பாடு அழைக்கப்படுகிறது.  x என்ற ஏதேனுமொரு மெய்யெண்ணுக்கு,

இங்கு கணித மாறிலி e , இயல்மடக்கையின் அடிமானம்; i கற்பனை அலகு; cos மற்றும் sin இரண்டும், x (ரேடியன்களில்) கோணத்தின் முக்கோணவியல் சார்புகள்.

என்பதை எனச் சுருக்கி,
எனவும் இவ் வாய்ப்பாடு எழுதப்படுகிறது

x ஒரு சிக்கலெண்ணாக இருந்தாலும் இவ் வாய்ப்பாடு பொருந்தும். இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் இவ் வாய்ப்பாட்டை "கணிதத்தின் மிக முக்கியமான வாய்ப்பாடு" என அழைத்தார். மேலும்...


மார்ச் 24, 2014
Periodic table compilation.svg

ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ள, ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இது 1869ல் திமீத்ரி மென்டெலெயேவ் வெளியிட்ட முதல் தனிம அட்டவணையில் முதிர்ச்சி அடைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில வேதியியல் வல்லுனர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய வேதியியல் வல்லுனரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக எளிதில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. மேலும்...


Badami-chalukya-empire-map.svg

ஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம் ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றி பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன. மேலும்...


பெப்ரவரி 23, 2014
Brooklyn Museum - Jesus Discourses with His Disciples (Jésus s'entretient avec ses disciples) - James Tissot.jpg

இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு என்பது, இயேசுவின் இளமைப் பருவத்திற்கும் (12 வயது) அவர் தமது 30ஆம் வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்குவதற்கான முயற்சியைக் குறிக்கும். கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின் “மறைந்த வாழ்வு” பல விதங்களில் பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புனைவுகளை மைய நீரோட்ட கிறித்தவ சபைகள் உண்மையென ஏற்பதில்லை. புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களிலும் காணப்படாத செய்திகளைக் கூறுவதற்காக எழுந்த நூல்கள் பண்டைக் காலத்திலிருந்தே தோன்றியுள்ளன. இயேசுவைப் பற்றி குறிப்பாக இரண்டு காலக்கட்டங்கள் ”மர்மமாக” உள்ளன. இயேசுவின் இளமைப் பருவம் பற்றி நற்செய்திச் செய்திகள் பல உள்ளன. மேலும்...


Salai 1.jpg

சாலை இளந்திரையன் (1930-1998) தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் பிறந்தவர் சாலை இளந்திரையன். சென்னை மாநிலக் கல்லூரியில் கலை இளவர், கலை முதுவர் பட்டங்களையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மாணவப் பருவத்திலேயே கதை, கவிதை, கட்டுரை என எழுத்துப்பணியில் ஈடுபட்ட சாலை இளந்திரையன் எழுபதிற்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். 1964 ஆம் ஆண்டில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவினர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது மாநாட்டில் கலந்து கொண்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி முக்கியப் பணியாற்றினார். மேலும்...


பெப்ரவரி 5, 2014

கே. முத்தையா (1918 - 2003) விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்தவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தமிழ்நாடு, தஞ்சாவூர் முடப்புளிக்காட்டில் பிறந்தவர். 1932 இல் பெரியார் சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்து பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1939 முதல் 1942 வரை தலைமறைவாக இருந்து பணியாற்றினார். மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர். மேலும்...


Kazakhstan (orthographic projection).svg

கசக்ஸ்தான் மத்திய ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்ஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 கிமீ² பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக உருசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்ஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகை 17 மில்லியனாகும். கசக்ஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாக கசக்ஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. மேலும்...


சனவரி 5, 2014
T.Sathasiva Iyer Ceylon.jpg

தி. சதாசிவ ஐயர் (1882 - 1950) ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார். சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். காளிதாசரின் இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழிலே பாடல்கள் எழுதியுள்ளார். மட்டக்களப்பில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றி பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக பணியில் இருந்தார். மேலும்...


Inverse Functions Domain and Range.png

கணிதத்தில் நேர்மாறுச் சார்பு என்பது ஒரு சார்பினால் ஏற்படக்கூடிய விளைவை இல்லாமல் செய்யக்கூடிய விளைவுடைய மற்றதொரு சார்பாகும். x எனும் உள்ளீட்டின் ƒ சார்புக்குரிய வெளியீடு y எனில் நேர்மாறுச் சார்பு g ஆனது y -ஐ உள்ளிடாகவும் x -ஐ வெளியீடாகவும் கொண்டிருக்கும். அதாவது: :ƒ(x)=y எனில், g(y)=x. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குறியீட்டில் g(ƒ(x))=x எனக் குறிக்கலாம். சார்புகளின் சேர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி, g(x) சார்பை ƒ(x) சார்புடன் சேர்க்கக் கிடைக்கும் இப்புதுச் சார்பு மாறி x -ஐ எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியேத் திருப்பித் தருகிறது. ஒரு சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருந்தால் அச்சார்பு நேர்மாற்றத்தக்கச் சார்பு எனப்படும். நேர்மாற்றத்தக்க சார்புகளின் நேர்மாறுச் சார்புகள் தனித்தன்மை உடையவை. அதாவது ஒரு நேர்மாற்றத்தக்கச் சார்புக்கு ஒரேயொரு நேர்மாறுச் சார்புதான் உண்டு. ƒ சார்பின் நேர்மாறுச் சார்பின் குறியீடு: ƒ−1 இது f -ன் நேர்மாறு எனக் கூறப்படும். மேலும்...

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்