உப்பு (வேதியியல்)
வேதியியலில் உப்பு (ⓘ) (salt) என்பது ஒரு காடியும், காரமும் சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் மின்ம முனைப்படும் சேர்மங்கள் ஆகும். உப்புகளில் நேர்மின்மம் கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், எதிர்மின்மம் கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள். பரவலாக அறிந்த, உணவில் சேர்க்கும் உப்பாகிய சோடியம் குளோரைடு (NaCl) ஓர் உப்பு. இதுபோல வேறு பல குளோரைடுகளும் கரிமமல்லா வேதிப்பொருள்களால் உருவாகும். அசிட்டேட்டு (CH3COO−) என்பன கரிம வேதியியல் வினைகளில் உருவாகும் கரிம வேதி உப்புகள்.
உப்புகளில் பல வகைகள் உள்ளன. நீரில் கரைந்திருக்கும் பொழுது மின்மக்கூறுடைய ஐதராக்சைடு (OH) உருவாக்கும் உப்புகளுக்கு கார உப்புகள் என்று பெயர். நீரில் கரைந்திருக்கும் பொழுது ஐதரோனியம் (hydronium ion, H3O+) உண்டாக்கும் உப்புகளுக்கு காடி உப்புகள் என்று பெயர். கார உப்புகளும் அல்லாமல், காடி உப்புகளும் அல்லாமல் உள்ளவற்றை நடுமை உப்புகள் என்பர். இருநிலையி அல்லது சுவிட்டரயான் (Zwitterion) எனப்பாடும் பொருட்கள் நேர்மின்ம அல்லது எதிர்மின்ம அடுப்பகுதியும் அதற்கு எதிரான மின்மம் உடைய சூழ்பகுதியும் இருந்தபொழுதும், அவை உப்புகள் எனப்படமாட்டாது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள், அமினோகாடிகளும், பெப்டைடுகளும், புரதங்களும் ஆகும்.
உப்புகள் நீரில் கரைந்திருந்தால் மின்கரைசல் எனப் பெயர் பெறும். இவை மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்டவை. இக்கடத்தும் பண்பு உருகிய உப்புகளும் பெற்றிருக்கும். பல மின்மமுற்ற அணுக்களும், மூலக்கூறுகளும் கொண்ட கலவையான பிற சில கரைசல்களில், எடுத்துக்காட்டாக செல்கூழ்மம் (cytoplasm), குருதி, சிறுநீர், மரச்சாறு முதலானவற்றில், நீர் ஆவியாக மாறிப் பிரிந்தபின் தனியான உப்புகள் ஏதும் தங்கி நிற்காமல் இருக்கும். இவற்றில் மின்மமுற்ற அணுக்களையும் மூலக்கூறுகளையும் கொண்டு உப்புகள் வரையறை செய்யப்படுகின்றன.
பண்புகள்
[தொகு]நிறம்
[தொகு]சமையலில் பயன்படும் அன்றாட உப்பாகிய சோடியம் குளோரைடு நிறமல்லாமல் இருக்கும் அல்லது வெள்லை நிறத்தில் காணப்படும். பிற உப்புகள் அவற்றின் படிகத் துகள்களின் பரும அளவுகளைப் பொருத்தும் அவற்றின் தனி படிகங்களுக்கு இடையே உள்ள இடைமுகங்கங்களில் இருந்து எதிர்வுபடும் ஒளியைப் பொருத்தும் பல்வேறு நிறங்கள் தோன்றக்கூடும். படிகங்களின் பரும அளவுகள் பெரிதாக இருப்பின் ஒளியூடுருவுத் தன்மை கொண்டதாகவும், சிறுசிறு பல்படிகங்களாக இருப்பின், ஒளியூடுருவாத் தன்மையுடன் வெள்ளை நிறமாக இருக்கலாம். சில படிகங்கள் இயற்கையிலேயே ஒளியூட்ருவாத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
உப்புகள் பற்பல நிறங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாகச் சில கீழுள்ள பட்டியலில் உள்ளன:
நிறம் | உப்பு |
---|---|
மஞ்சள் | சோடியம் குரோமேட்டு (sodium chromate) |
செம்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் | பொட்டாசியம் டை-குரோமேட்டு(potassium dichromate) |
சிவப்பு | மெர்க்குரி சல்பைடு (Cinnabar அல்லது mercury sulfide) |
கத்தரிப்பூ நிறம் (mauve) | கோபால்ட் (II) குளோரைடு (cobalt(II) chloride), ஹெக்ஸா-ஐதரேட்டு (hexahydrate) |
நீலம் | செப்பு (II) சல்பேட்டு (copper(II) sulfate), பெண்ட்டா ஐதரேட்டு (pentahydrate) |
பிரழ்சியன் நீலம் (Prussian blue) | பெர்ரிக் ஹெக்ஸா-சயனோபெர்ரேட்டு (ferric hexacyanoferrate) |
பச்சை | நிக்கல் (II) ஆக்சைடு (nickel(II) oxide) |
நிறமற்றது | மக்னீசியம் சல்பேட்டு (magnesium sulfate) |
வெள்ளை, மற்றும் கருப்பு | மாங்கனீசு (IV) ஆக்சைடு (Manganese(IV) oxide) |
பெரும்பாலான கனிம மற்றும் கரிமமல்லா நிறமூட்டிகளும், கரும சாயப்பொருட்களும் உப்புகளே.
சுவை
[தொகு]உணவில் பரவலாகப் பயன்படும் உப்பு (சோடியம் குளோரைடு) கரிப்புத்தன்மை கொண்டதாயினும், பல்வேறு உப்புகள் எல்லா சுவைகளும் (மேற்கு உலகில் கூறப்படும் அந்து சுவைகளும்) கொண்டிருப்பனவாக உள்ளன. இனிப்பு சுவை தரும் ஈய டை-அசிட்டேட் (lead diacetate) (இதனை உட்கொண்டால் ஈய நச்சு விளைவுகள் ஏற்படும்), பொட்டாசியம் பை-டார்ட்டரேட்டு (potassium bitartrate) புளிப்புச் சுவையும், பொட்டாசியம் சல்பேட்டு கசப்புச் சுவையும், மோனொசோடியம் குளூட்டமேட்டு (monosodium glutamate), உமாமிச் சுவை (umami) எனப்படும் தூண்டுக்காரச்சுவையும் கொண்டதாகும்
மணம்
[தொகு]கடு காடி, கடு காரங்களின் உப்புகள் ஆவியடையா நிலையில் இருப்பதால் மணமற்றதாக இருக்கும். வலுகுறைகாடிகள் அல்லது வலுகுறைகாரங்கள் ஈரப்பதத்தாலோ வேறு பல வேதி வினையாலோ பல்வேறு மணம் தரலாம்.
கரைதிறன்
[தொகு]பல அயனி சேர்மங்கள் நீர் அல்லது ஏனைய கரைப்பான்களில் கரையக் கூடியனவாக உள்ளன. தனித்துவமான அயன் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சேர்மமும் குறித்த ஒரு கரைப்பானில் தனக்கேயுரிய கரைதிறனைக் கொண்டுள்ளது.
உருவாக்கம்
[தொகு]உப்புக்கள் இரு பொருட்களுக்கு இடையில் நடைபெறும் வேதியியற் தாக்கத்தின் காரணமாகத் தோற்றம் பெறுகின்றன. கீழுள்ளவற்றுக்கு இடையில் நடைபெறும் வேதியியற் தாக்கத்தின் மூலம் உப்புக்கள் உருவாகின்றன.
- அமிலத்திற்கும் காரத்திற்கும் இடையில், உதாரணம், NH3 + HCl → NH4Cl
- உலோகத்திற்கும் அமிலத்திற்கும் இடையில், உதாரணம், Mg + H2SO4 → MgSO4 + H2
- உலோகத்திற்கும் அலோகத்திற்கும் இடையில், உதாரணம், Ca + Cl2 → CaCl2
- காரத்திற்கும் நீரிலி அமிலத்திற்கும் இடையில், உதாரணம், 2 NaOH + Cl2O → 2 NaClO + H2O
- அமிலத்திற்கும் நீரிலி காரத்திற்கும், உதாரணம், 2 HNO3 + Na2O → 2 NaNO3 + H2O
- வேவ்வேறான உப்புக் கரசல்கள் கலக்கப்படும் போதும் புதிய உப்புக்கள் தோற்றமடைகின்றன , அவற்றின் அயன்கள் மீண்டும் இணையும், அத்தோடு புதிய உப்பானது கரையாததாகவும் வீழ்படிவாகவும் இருக்கும்.
- Pb(NO3)2(aq) + Na2SO4(aq) → PbSO4(s) + 2 NaNO3(aq)
சான்றுகள்
[தொகு]- Mark Kurlansky (2002). Salt: A World History. Walker Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-200161-9.