கற்றாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்றாழை
ஆலோ சக்கோட்ரீனா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: மூடிய விதைப்பயிர்கள்
தரப்படுத்தப்படாத: மோனோகாட்கள்
வரிசை: அஸ்பாரகல்கள்
குடும்பம்: அஸ்ஃபோடெலிசீ
பேரினம்: கற்றாழை
கேரோலஸ் லின்னேயஸ்
சோற்றுக் கற்றாழை

கற்றாழை (About this soundஒலிப்பு ) (Aloë vera): பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. (ஆங்கிலம்: Indian Aloes) இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.[1] கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (ஆந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.

அமைப்பு[தொகு]

பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும். பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; மற்ற வகைகளில், கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம். இதில் சதையுள்ள இலைகள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து ஆழமான பச்சை வரை நிறத்தில் வேறுபடுகின்றன. சிலநேரங்களில் அவை ஒரே நிறமாகவோ பல வண்ணங்களாகவோ இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள் மரங்கள் போன்று இருக்கும்.[2]

இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிய முட்களுடன் இருக்கும். கற்றாழையின் பூக்கள், குழாய் வடிவத்திலும், அதிகமாக மஞ்சள், இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும், அடர்த்தியான கொத்துகளாகவும், சாதாரணமாக அல்லது கிளைகளுடன் இலையில்லாத தண்டுகளாகவும் இருக்கும். எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம், வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க இக்குறுஞ்செடி பல பருவங்கள் வாழக்கூடியதாகும்.

வகைகள்[தொகு]

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிறத் திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.[3]

ஏ.பி.ஜி III முறைமையில் (2009), இந்த வகை தாவர இனத்தைச் சார்ந்த அந்தோறியேசியே குடும்பத்தின் ஆஸ்போடெலீசி என்ற துணைக்குடும்பப் பிரிவில் வைத்தது.[4] கடந்தகாலத்தில் இந்த வகைத் தாவரம், அலோசி குடும்பங்கள் மற்றும் லில்லியேசீயே அல்லது லில்லி குடும்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. காஸ்டீரியா , ஹாவார்தியா மற்றும் நிஃபோஃபியா போன்ற இனங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகும் தாவர இனங்களுக்கு இதே போன்ற வளர்ச்சி இருக்கும். இந்த இனங்களும் பிரபலமாகச் சோற்றுக் கற்றாழைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த வகைத் தாவரம் சிலநேரங்களில் அமெரிக்கக் கற்றாழை (அகேவே அமெரிக்கானா) என்றும் அழைக்கப்படுகிறது. இது அஸ்பரகேசியே(en:Asparagaceae) என்ற வேறொரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை:

 1. குர்குவா கற்றாழை (அலோ பார்படென்ஸ் (Aloe vera))
 2. கேப் கற்றாழை( அலோ பெராக்ஸ் (Aloe ferox)))
 3. சாகோட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி (Aloe perryi))

இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காகச் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவை.[5]

அடங்கியுள்ள பொருள்கள்[தொகு]

அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன.சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.[6]

புகழ்பெற்ற கலாசாரம்[தொகு]

ஆலோ வோசி

நமிபியாவின் குடிமை ஹெரால்டிரியில் இருப்பது போல ஆலோ ருப்ரோலுடீ ஹெரால்டிரியில் நிறைந்து காணப்படுகிறது.[7]

பயன்கள்[தொகு]

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.[5]

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில்[தொகு]

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக முறையாக அதன் “கூழி” உலகெங்கிலும் சருமப்பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. ஆலோ வேறா மனிதர்களின் உடலுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மருந்துவ குணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்று அறிவியல் சார்ந்த மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதரிக்கப்படுகின்றது. இலைகளில் உள்ள கூழ்(ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

மருத்துவத்தில்[தொகு]

கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, குடல்புண், கருப்பை நோய்கள், மூலநோய், கண்ணோய்கள் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.[5]

அலங்காரச் செடிகள்[தொகு]

கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.

பயிரிடும் முறை[தொகு]

செடிகள், நட்ட இரண்டாவது வருடத்தில்தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாகக் கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்தவுடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) பிரித்தெடுக்கப் பட வேண்டும்.

வரலாற்று ரீதியான பயன்பாடுகள்[தொகு]

சதைப்பற்றுள்ள செடிகள், இந்தக் கற்றாழை போன்று அதனுடைய பெரிய சதையுள்ள இலைகள், தண்டுகள் அல்லது வேர்களில் தண்ணீரை சேமித்து வைக்கும். இந்தப் படத்தில் கற்றாழை இலை இரண்டாக வெட்டப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட சூழலிலும் அவைகளை உயிர் பிழைக்க வைக்கிறது.

கற்றாழை இனங்கள் மனிதர்களால் வரலாற்று ரீதியாகப் பல வகைகளில் பயன்படுத்தப்படுவது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றவையோடு ஒப்பிடும்போது குறைவாக இருப்பினும், மருத்துவம் சார்ந்த பயன்பாடுகளின் ஆவணங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளது.[8]

கற்றாழையில் 500 இனங்கள் இருப்பினும், சில கற்றாழை இனங்களே பாரம்பரியமாக மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆலோவேறா, கற்றாழை இனத்திலேயே மிகவும் பொதுவாக மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரமாகும். இதில் ஆலோ பெரியீ (இது வடகிழக்கு ஆபிரிக்காவில் காணப்படுகிறது) மற்றும் ஆலோ ஃபெராக்ஸும் (இது தென்னாபிரிக்காவில் காணப்படுகிறது) சேர்க்கப்படுகிறது. கிரேக்கர்களும் ரோமர்களும் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆலோ வேறாவை பயன்படுத்தினர். இடைக்காலங்களில், இலைகளின் உள்ளே காணப்படும் மஞ்சள் நிற திரவம் பேதி ஊக்கியாகப் பயன்படுத்தப்பட்டது.[சான்று தேவை] பேதியை ஏற்படுத்தும் தன்மையை உடைய பதப்படுத்தப்பட்ட கற்றாழை பொதுவாக மலமிளக்கியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பதப்படுத்தப்பட்ட ஆலோ வேறா சாறு, பேதியை ஏற்படுத்தும் தன்மையுடையதாக இருக்கவில்லை.

சில வகைகள், குறிப்பாக ஆலோ வேறா , மாற்று மருந்தாகவும், வீட்டு முதல் மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரளவு தெளிவுள்ள உட்புற தாவரத்திசுக்கூழ்மமும், கற்றாழை தாவரத்தை அடிப்பதினால் வெளியாகும் மஞ்சள் நிற அலோயின் பிசினும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஆற்றுவதற்காக உடலுக்கு வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகிறது. செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்காக, ஆலோ வேறா சாறு பொதுவாக மூலிகை மருந்தாக உட்கொள்ளப்படுகிறது[9]ஆலோ வேறா மருத்துவத்தை மற்ற சாதாரணமான நெறிமுறைகளின் சிகிச்சையோடு ஒப்பிடும்போது, காயங்களை ஆற்றுவதை குறிப்பிடத் தக்க அளவு மெதுவாகச் செய்கிறது என்று சில நவீன ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன.[10] ஆலோ வேறாவிற்கு அதிகமான மருத்துவ பயன்கள் இருப்பதாக எந்த வித ஆதாரத்தையும், மற்ற தோராயமாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் திறனாய்வுகள் கொடுக்கவில்லை.[11][12]

இன்றைய சூழலில், சோற்றுக் கற்றாழை, மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது மற்றும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலைகளில் காணப்படும் கூழ்மம், சிறிய எரிகாயங்கள், காயங்கள் மற்றும் படைநோய், படர்தாமரை போன்ற பல தோல் குறைகளையும் ஆற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செடியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு, பலவகையான செரிமான நிலைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உட்கொள்ளப்படுகிறது. 1950களில், பல மேற்கத்திய நாடுகளில், இந்த வகை மூலிகை மருத்துவ பயன்பாடு பிரபலமானது. கூழ்மத்தின் தாக்கம் உடனே நிகழும்; இது காயங்களின் மேலே ஒரு மெல்லிய தோல் போன்ற படலத்தை ஏற்படுத்தி, நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

கற்றாழை கூழ்மத்தை உட்கொள்ளுவதனால் ஏற்படும் சாத்தியமான பயன்பாடுகளைக் குறித்த சில ஆய்வுகள் உள்ளன. கற்றாழையில் உள்ள பொருட்கள் கட்டிகள் வளர்வதைத் தடுக்கும்.[13] விலங்கு மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட சில ஆய்வுகள், கற்றாழையின் சாற்றில் குறிப்பிடத் தக்க அளவு ஆண்டி-ஹைப்பர்க்ளைசிமிக் பயன் இருப்பதாகக் கூறுகின்றன. இது டைப் II நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகள், மனிதர்களில் செய்யப்பட்டு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.[14]

ஓ.டி.சி மலமிளக்கி பொருட்களில் உள்ள அலோயின்[தொகு]

மருந்துக்கடைகளின் மருந்துச்சீட்டு இல்லாமல் நேரடியாக வாங்கும் மருந்து பொருட்களில் மலமிளக்கி பொருட்களாகக் கற்றாழை செடியில் உள்ள மஞ்சள் நிற தாவர இனப்பாலான அலோயினை பயன்படுத்துதலை, 2002 ஆம் ஆண்டு மே 9ம் தேதி U.S. உணவு மற்றும் மருந்து வழங்குதல் நிறுவனம் இறுதிகட்ட விதியாகத் தடை செய்தது.[15] இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான கற்றாழை சாற்றில் குறிப்பிடத் தக்க அளவு அலோயின் இருப்பதில்லை.

வேதியியல் பண்புகள்[தொகு]

டபுல்யூ. ஏ. ஹென்ஸ்டோன் படி, அலோயின்களின் இரண்டு பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளது: (1) நட்டாலியன்கள், நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து, பிக்ரிக் மற்றும் ஆக்ஸாலிக் அமிலத்தைக் கொடுக்கிறது. இது நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து சிவப்பு நிறத்தைக் கொடுப்பதில்லை; (2) பார்பலாயின்கள், நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து ஆலோயடிக் அமிலம் (C7H2N3O5), க்ரைசாமிக் அமிலம் (C7H2N2O6), பிக்ரிக் மற்றும் ஆக்ஸாலிக் அமிலங்களைக் கொடுக்கிறது. இது அமிலத்தினால் சிகப்பு நிறமாகிறது. இரண்டாவது குழு, a-பார்பலாயின்களாக பிரிக்கப்படலாம். இது பார்படாஸ் கற்றாழை யிலிருந்து பெறப்படுகிறது. இது சூடேற்றி உலர வைக்கும்போது சிகப்பு நிறமடைகிறது. b-பார்பலாயின்கள், சோகோடிரைன் மற்றும் ஸான்ஸிபார் கற்றாழை யிலிருந்து பெறப்படுகிறது. இது சாதாரண நைட்ரிக் அமிலத்தினால் சூடேற்றும்போது அல்லது உலர வைப்பதில் புகையமிலத்தினால் சிகப்பு நிறமடைகிறது. நட்டாலியன் (2C17H13O7·H2O) ஆழமான மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. பார்பலாயின் (C17H18O7) அரியப்பளிங்குகள். கற்றாழை இனங்களுக்குத் துரிதமாக ஆவியாகக்கூடிய எண்ணெயின் வாசனையுள்ளது. இது, அதற்கே உரிய வாசனையாகும்.[சான்று தேவை]

முதன்மையற்ற நிகழ்வு[தொகு]

பாட்டம் அஞ்சல் தலையில் உள்ள கற்றாழை மரம். 1919.

தென் காகாசஸ் பகுதியில் உள்ள ஜார்ஜியாவின் ஒரு தன்னாட்சி பகுதியான பாட்டம்மினால், 1919 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் காணப்பட்ட ஓர் கற்றாழை மரம்.

இனங்கள்[தொகு]

கற்றாழை இனத்தில், சுமார் 500 வகை இனங்கள் உள்ளன. இதில் உள்ளடங்கும் இனங்களாவன:

 • ஆலோ வேறா - உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
 • ஆலோ அர்போரெசென்ஸ் - உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது
 • ஆலோ அரிஸ்டாட்டா - பந்த செடி, இழை வார் கற்றாழை
 • ஆலோ டிக்கோடோமா - க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்
 • ஆலோ நீரீன்சிஸ்
 • ஆலோ வெரீகட்டா - கௌதாரி மார்புடைய கற்றாழை , புலி கற்றாழை
 • ஆலோ பார்பாடென்சிஸ் - குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை . இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.
 • ஆலோ வைல்டீ

படங்கள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. Tamilkurinji, சோற்றுக்,கற்றாழை,,,குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe,,spicata,,Aloe,perji.,,,Tamil News. "சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.மருத்துவம் - மூலிகை வைத்தியம்- பாட்டி வைத்தியம் - நாட்டு மருத்துவம் - கை மருத்துவம் - Ayurveda – Yoga – Naturopathy – Unani – Siddha – Homoeopathy – Patti vaithyam – Tamilkurinji". http://www.tamilkurinji.in/Maruthuvam_detail.php?/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/,/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/&id=12968. 
 2. "கற்றாழை மரங்களின் படங்கள்". http://www.superstock.com/stock-photography/Aloe/Tree. 
 3. "சோற்றுக் கற்றாழை அதிசயத் தாவரம் ! - குப்பிழான் .நெற் - kuppilan.net". http://kuppilan.net/?p=3142. 
 4. "Asparagales". http://www.mobot.org/MOBOT/Research/APweb/orders/asparagalesweb.htm#Asphodelaceae. 
 5. 5.0 5.1 5.2 "Agriculture ::Nutrient Management :: Fertilizer Conversion". http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_medicinalcrops_aloe_ta01.html. 
 6. தமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் அதன் பயன்களும். அமானுஷ்யம்.காம்.
 7. name="titleNAMIBIA – WINDHOEK">"NAMIBIA – WINDHOEK". http://www.ngw.nl/int/afr/windhoek.htm. பார்த்த நாள்: 2008-01-24. 
 8. ரெனால்ஸ், டி (எட்) ஆலோஸ்: த ஜீனஸ் ஆலோ . CRC ப்ரஸ். ISBN 978-0-415-30672-0
 9. "aloe for heartburn". http://findarticles.com/p/articles/mi_m0FKA/is_4_69/ai_n18791510.  "aloe alt med". http://altmedicine.about.com/od/therapiesfrometol/a/heartburn.htm.  "Aloe IBS study". http://www.medscape.com/viewarticle/546327. .
 10. name="pmid2047051">Schmidt JM, Greenspoon JS (1991). "Aloe vera dermal wound gel is associated with a delay in wound healing". Obstet Gynecol 78 (1): 115–7. பப்மெட்:2047051. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_1991-07_78_1/page/115. 
 11. name="pmid16149293">Richardson J, Smith JE, McIntyre M, Thomas R, Pilkington K (2005). "Aloe vera for preventing radiation-induced skin reactions: a systematic literature review". Clin Oncol (R Coll Radiol) 17 (6): 478–84. பப்மெட்:16149293. 
 12. Ernst E, Pittler MH, Stevinson C (2002). "Complementary/alternative medicine in dermatology: evidence-assessed efficacy of two diseases and two treatments". Am J Clin Dermatol 3 (5): 341–8. doi:10.2165/00128071-200203050-00006. பப்மெட்:12069640. 
 13. name="pmid17613130">Cosmetic Ingredient Review Expert, Panel (2007). "Final report on the safety assessment of Aloe andongensis extract, Aloe andongensis leaf juice, Aloe arborescens leaf extract, Aloe arborescens leaf juice, Aloe arborescens leaf protoplasts, Aloe barbadensis flower extract, Aloe barbadensis leaf, Aloe barbadensis leaf extract, Aloe barbadensis leaf juice, Aloe barbadensis leaf polysaccharides, Aloe barbadensis leaf water, Aloe ferox leaf extract, Aloe ferox leaf juice, and Aloe ferox leaf juice extract". Int. J. Toxicol. 26 Suppl 2: 1–50. doi:10.1080/10915810701351186. பப்மெட்:17613130. 
 14. name="pmid16819181">Tanaka M, Misawa E, Ito Y, Habara N, Nomaguchi K, Yamada M, Toida T, Hayasawa H, Takase M, Inagaki M, Higuchi R (2006). "Identification of five phytosterols from Aloe vera gel as anti-diabetic compounds". Biol. Pharm. Bull.=) 29 (7): 1418–22. doi:10.1248/bpb.29.1418. பப்மெட்:16819181. 
 15. name="pmid12001972">Food And Drug Administration,, HHS (2002). "Status of certain additional over-the-counter drug category II and III active ingredients. Final rule". Fed Regist 67 (90): 31125–7. பப்மெட்:12001972. 

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aloe
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றாழை&oldid=3731261" இருந்து மீள்விக்கப்பட்டது