விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகத்து 2018

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி (1821–1881) ஒரு உருசியப் புதின எழுத்தாளரும் சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும் பத்திரிக்கையாளரும் மெய்யியலாளரும் ஆவார். 19-ஆம் நூற்றாண்டு உருசியாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை இவரது படைப்புகள் ஆராய்பவை. பல்வேறு வகையான தத்துவ ஆன்மீக பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ‘குற்றமும் தண்டனையும்’ (1866), ‘அசடன்’ (1869), ‘அசுரர்கள்‘ (1872) ‘கரமசோவ் சகோதரர்கள்’ (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு. மேலும்...


பாரிசின் விடுவிப்பு என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாட்சி செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை என்றும் அறியப்படுகிறது. 1940ம் ஆண்டு பிரான்சை செருமனி தாக்கிக் கைபற்றியது. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு செருமனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி செருமானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. மேலும்...


செப்டம்பர் 2018

செங்கிஸ் கான் (1162–1227) கிபி 1206ல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடிப் பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். இவர் பெரும்பகுதி ஐரோவாசியாவை வெற்றிகொண்ட படையெடுப்புளைத் தொடங்கினார். இவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மங்கோலியப் பேரரசானது மத்திய ஆசியா மற்றும் சீனாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. மேலும்...


குளச்சல் போர் என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவிதாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்றது. கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கிய பங்கு ஆற்றியது. மார்த்தாண்டர் தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காக பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த தேசிங்க நாடு, நெடுமங்காடு அரசுகள் மீது போர் தொடுத்ததால் டச்சு வணிகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதனால் 1739 முதல் டச்சு படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர். மேலும்...


அக்டோபர் 2018

ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...


எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...