புனித பேதுரு கல்லறை
புனித பேதுரு கல்லறை (Saint Peter's tomb) என்பது வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ் புனித பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டதாக நிர்ணயிக்கப்படும் நினைவுக் கட்டடத்தையும் அதைச் சூழ்ந்துள்ள கல்லறைக் குழிகளையும் உள்ளடக்கிய இடம் ஆகும்.[1]
கி.பி. 130-300 கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட நினைவுக் கட்டடத் தொகுதியின் (mausoleum) மேற்கு ஓரத்தில் பேதுரு கல்லறை உள்ளது.[2][3]
கல்லறை இடத்தில் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுதல்
[தொகு]கி.பி. சுமார் 330 இல், காண்ஸ்டண்டைன் மன்னர் ஆட்சியின்போது புனித பேதுரு கல்லறைமீது ஒரு பெருங்கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கான அடித்தளம் அமைத்தபோது ஏற்கெனவே இருந்த நினைவுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, மண்ணால் நிரப்பப்பட வேண்டியதாயிற்று.[4]
இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே புனித பேதுரு கல்லறைப் பகுதியில் அமைந்த இரண்டாம் நூற்றாண்டு நினைவிடத்தில் (shrine) இரண்டு முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின்போது பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புனித பேதுருவின் எலும்புகள் உறுதிப்படுத்தப்படுதல்
[தொகு]அந்த எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில், புனித பேதுருவின் கல்லறை இன்று புனித பேதுரு பெருங்கோவில் எழுகின்ற இடத்தின் கீழ் உள்ளது என்பது உறுதி என்றாலும், புனித பேதுருவின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஐயத்துக்கு இடமில்லாத முறையில் உறுதியாகக் கூற இயலவில்லை என்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1950இல் அறிக்கை விடுத்தார்.[5]
அதன் பின் மேலும் பல எலும்புகள் கிடைத்தன. அவற்றோடு ஒரு கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அக்கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுருவின் மீபொருள்கள் (relics) அடையாளம் காணப்பட்டன என்று 1968ஆம் ஆண்டு, சூன் மாதம் 26ஆம் நாள் அறிவித்தார்.
ஆய்வாளர் முடிவு
[தொகு]புனித பேதுருவின் கல்லறையாகத் திருச்சபையால் கருதப்படும் இடம் இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் நடுப் பீடத்தின் கீழே அமைந்துள்ள நினைவுக் கட்டடத்தின் (aedicula) அடிமட்டத்தில் உள்ளது. அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் நான்கு மனிதர்களின் எலும்புகளும் மற்றும் சில ஆடுமாடு எலும்புகளும் ஆகும்.
முதல் அகழ்வாய்வு முயற்சி 1939இலிருந்து 1950 வரை நடந்தது. 1953இல் மற்றுமொரு எலும்புத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்புத் தொகுதி, அகழ்வாய்வாளர்களுக்குத் தெரியாமல் அகற்றப்பட்டிருந்தது. அந்த எலும்புத் தொகுதி, அருகேயிருந்த ஒரு புதையிடத்திலிருந்து (niche) அகற்றப்பட்டதாகும். அப்புதையிடம் இருப்பது "வரைசுவர்" (graffiti wall) என்று அழைக்கப்படும் சுவரின் வடக்கே ஆகும். அந்த வரைசுவர் "சிவப்புச் சுவர்" (red wall) என்னும் ஒரு சுவரோடு இணைகிறது. சிவப்புச் சுவர், மேலே கூறப்பட்ட புதையிடத்தின் வலப்புறம் உள்ளது.[6]
புதையிடத்திலிருந்து பெறப்பட்ட எலும்புத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த எலும்புகள் சுமார் 60-70 வயதுடைய ஆண் ஒருவரின் எலும்புகள் என்று கண்டறியப்பட்டது. அகழ்வாய்வு அறிஞர் மார்கரீத்தா குவார்தூச்சி (Margherita Guarducci) என்பவர் அந்த எலும்புகள் புனித பேதுருவின் எலும்புகளே என்று தகுந்த காரணங்களோடு நிறுவியுள்ளார். அவர் கூற்றுப்படி, கி.பி. 313இல் உரோமைப் பேரரசில் கிறித்தவர் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்று மன்னர் காண்ஸ்டண்டைன் ஆணை பிறப்பித்த காலத்தில், பேதுருவின் எலும்புகள் நினைவுக்கட்டடப் பகுதியிலிருந்து (aedicula) எடுக்கப்பட்டு, புதையிடத்தில் (niche) பாதுகாப்பாக வைக்கப்பட்டன.[7]
வத்திக்கான் குன்றத்தில் புனித பேதுருவின் இறப்பு
[தொகு]திருச்சபை வரலாற்று ஆசிரியரும் மன்னர் காண்ஸ்டண்டைன் காலத்தில் வாழ்ந்தவருமாகிய யூசேபியஸ் (263-339) என்பவர் கூற்றுப்படி, "பேதுரு உரோமைக்கு வந்து, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு உயிர்துறந்தார்."[8] இச்செய்தியை ஓரிஜன் (இறப்பு: சுமார் 254) என்னும் பண்டைக் கிறித்தவ அறிஞர் ஏற்கெனவே கூறியதாகவும் யூசேபியஸ் குறிப்பிடுகிறார்.
பேதுரு எங்கே, எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய குறிப்பு தெர்த்தூல்லியன் (சுமார் 160-220) எழுத்துகளிலும் உள்ளது.[9] அவர் கூற்றுப்படி, நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில் பேதுருவும் கொல்லப்பட்டார்.
உரோமை வரலாற்றாசிரியர் டாசிட்டஸ் தரும் குறிப்பு
[தொகு]உரோமையின் தலைசிறந்த வரலாற்றாசிரியராகக் கருதப்படுகின்ற டாசிட்டஸ் (கி.பி. 56-117) என்பவர் நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தை விவரிக்கும்போது, பேதுருவின் சாவுபற்றித் தனியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அம்மன்னனின் ஆட்சியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்:[10]:
“ | கிறித்தவர்கள் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு உயிர்துறந்தார்கள்; சிலுவையில் அறையப்பட்டார்கள்; தீக்கிரையாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்கள். | ” |
மேலும், டாசிட்டஸ் கூற்றுப்படி, கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் நீரோ மன்னனின் விளையாட்டுப் பேரரங்கில், அரச தோட்டங்கள் அமைந்திருந்த இடத்தில் நடந்தன. கி.பி. 64இல் நீரோ மன்னன் ஆட்சியில் உரோமை நகர் தீப்பற்றி எரிந்ததின்[11] விளைவாக "மாபெரும் விளையாட்டரங்கம்" (circus maximus)[12] என்று அழைக்கப்பட்ட ஆட்டக்களம் பெரும் சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குக் களிப்பூட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் (கிறித்தவர்களைத் துன்புறுத்தி விலங்குகளுக்கு இரையாக்கியது உட்பட) நீரோ விளையாட்டரங்கில்தான் நடைபெற்றன.
பிற ஆதாரங்கள்
[தொகு]மேற்கூறிய செய்திகளை உறுதிப்படுத்துகின்ற பிற ஆதாரங்களும் உள்ளன. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பேதுரு மற்றும் பவுல் ஆற்றிய திருப்பணிகள்" (Acts of Peter and Paul) என்னும் நூல் பேதுரு சிலுவையில் அறையுண்டு இறந்ததைக் குறிப்பிடுகிறது[13]:
“ | புனித மனிதர்கள் பேதுருவின் உடலைச் சிலுவையிலிருந்து இரகசியமாக இறக்கினர். பின்னர் அவ்வுடலை வத்திக்கான் என்று அழைக்கப்படுகின்ற நவுமாக்கியா (Naumachia) என்னுமிடத்தில் ஒரு தேவதாரு மரத்தடியில் அடக்கினர். | ” |
மேலே "நவுமாக்கியா" என்று குறிப்பிடப்படும் இடம் நீரோவின் விளையாட்டரங்கத்தின் நடுவே அமைக்கப்பட்ட செயற்கை ஏரி. அங்கே மக்களைக் களிப்பூட்டுவதற்காகக் கப்பல் சண்டை நடத்தினர். "வத்திக்கான்" என்று குறிக்கப்படுவது அக்காலத்தில் நீரோ விளையாட்டரங்கத்தை அடுத்திருந்த ஒரு குன்றம். அதன் அருகே டைபர் ஆறு ஓடியது. கிறித்தவர்களும் உரோமை சமயத்தவரும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அப்பகுதியில் இருந்தது.
ஆயர் தியோனீசியசு எழுதிய கடித ஆதாரம்
[தொகு]கொரிந்து நகரில் ஆயராக இருந்த தியோனீசியசு என்பவர் திருத்தந்தை சொத்தேருக்கு (இறப்பு: கிபி 174) ஒரு நன்றிக் கடிதம் எழுதினார்.
திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதைக் கிரேக்க நாட்டில் கொரிந்து திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த உரோமைத் திருச்சபைக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு கடிதம் எழுதினார். அதில் கீழ்வருமாறு கூறுகிறார்[14]:
“ | நீங்கள் அனுப்பிய உதவியாலும் அறிவுரையாலும் கொரிந்தியர்களாகிய எங்களையும் உரோமையர்களாகிய உங்களையும் ஒன்றாக இணைத்திருக்கிறீர்கள். நம் இரு சபைகளுமே பேதுரு மற்றும் பவுல் என்னும் இருவரால் நடப்பட்டவை. அவர்கள் இருவரும் கொரிந்து நகரில் திருச்சபையை நட்டுவளர்த்தார்கள்; எங்களுக்குத் தம் போதனையால் அறிவூட்டினார்கள். அதுபோலவே அவர்கள் இருவரும் இத்தாலியிலும் போதித்தார்கள். ஒரே வேளையில் மறைச்சாட்சிகளாக உயிர்துறந்தார்கள். | ” |
பேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம்
[தொகு]பேதுரு வத்திக்கான் குன்றுப் பகுதியில் துன்புற்று இறந்ததால் அப்பகுதியிலேயே அவருடைய உடலைக் கிறித்தவர்கள் அடக்கம் செய்தார்கள். மரபுப்படி, முதலில் பேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம் கிறித்தவர்களுக்கு உரிமையானதாக இருந்தது. வத்திக்கான் குன்றில் கிறித்தவர்களுக்கும் உரோமை சமயத்தவர்க்கும் பயன்பட்ட ஒரு கல்லறைத் தோட்டம் இருந்தது. அக்கல்லறைத் தோட்டம் அக்கால உரோமை நகரில் நன்கு அறியப்பட்ட சாலைகளுள் ஒன்றாகிய "கொர்னேலியா சாலை" அருகே அமைந்தது.
பேதுருவின் கல்லறை என்பது நிலத்துக்கு அடியில் தோண்டி கட்டப்பட்ட "நிலவறை" (vault). சாலையிலிருந்து நிலத்துக்குக் கீழே இறங்கிச் சென்ற படிகள் வழியாக அந்த நிலவறையை அடைய முடிந்தது. நிலவறையின் மையப் பகுதியில் உடலடங்கிய கற்பெட்டி (sarcophagus) இருந்தது.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis = Book of the Popes) என்னும் தொகுப்பின்படி,[15]திருத்தந்தை அனகிலேத்துஸ் பேதுரு இறந்த உடனேயே அவருக்காகக் கட்டப்பட்ட நிலத்தடி கல்லறையின் மீது ஒரு "கல்லறை நினைவகத்தை" (sepulchral monument) கட்டினார்.[16] இது ஒரு சிற்றறை போன்றது. அதில் மூன்று அல்லது நான்கு பேர் கல்லறைமேல் முழந்தாட்படியிட்டு இறைவேண்டல் செய்ய வசதியாக அமைந்தது.
மன்னர் ஜூலியன் தரும் குறிப்பு
[தொகு]காண்ஸ்டண்டைன் வழியில் வந்த மன்னர் ஜூலியன் (ஆட்சி: 355-363)[17] கிறித்தவ மதத்தை எதிர்த்து, பண்டைய உரோமை மதத்தை ஆதரித்தவர். அவர் 363இல் எழுதிய நூலில் பின்வருமாறு கூறுகிறார்:[18]
“ | பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் கல்லறைகள் வழிபாட்டிடங்களாக மாறிவிட்டன. கிறித்தவர்கள் அங்கே சென்று இரகசியமாக வழிபடுகிறார்கள். | ” |
காயுஸ் குறிப்பிடுகின்ற "வெற்றிச் சின்னம்"
[தொகு]மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த காயுஸ் என்னும் குரு (Caius the presbyter)[19] புரோக்ளுஸ் என்னும் மொந்தானியக் கொள்கையரை எதிர்த்து எழுதிய நூலின் சிறு பகுதிகள் பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் யோசேபுசின் நூல்களிலிருந்து தெரியவருகின்றன. காயுஸ் பின்வருமாறு கூறுகிறார்:[20]
“ | திருத்தூதர்களின் வெற்றிச் சின்னங்களை நான் உங்களுக்குக் காட்ட முடியும். இந்தத் திருச்சபைக்கு அடித்தளம் இட்ட மனிதர்களின் வெற்றிச் சின்னங்களைக் காணவேண்டும் என்றால், நீங்கள் வத்திக்கானுக்கோ, ஓஸ்தியா சாலைக்கோ சென்றால் போதும். | ” |
மேலே குறிப்பிடப்படுகின்ற "வெற்றிச் சின்னம்" என்பது மூல மொழியில் trophoea ஆகும். அதன் பொருள் "வெற்றிச் சின்னம்" (trophy), அதாவது "சாவின் மீது வெற்றிகொண்டோருக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கல்லறை" என்றாகும்.[14] திருத்தூதர்களாகிய பேதுரு, பவுல் ஆகிய இருவரும் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாலும், பேதுருவின் வெற்றிச் சினனம் ("கல்லறை") வத்திக்கான் குன்றிலும், பவுலின் வெற்றி சின்னம் ("கல்லறை") ஓஸ்தியா சாலையிலும் உள்ளன. இத்தகவலை எடுத்துக் கூறி, காயுஸ் என்பவர் திருச்சபையின் உண்மைப் போதனையை மொந்தானியக் கொள்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்.
வலேரியன் மன்னன் ஆட்சி காலத்தில்
[தொகு]உரோமை ஆட்சியில் துன்புறுத்தப்பட்ட கிறித்தவர்கள் திருத்தூதர்களாகிய பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் கல்லறைகளுக்குத் திருப்பயணமாகச் சென்றார்கள். அக்கல்லறைகளில் அவர்கள் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தபோது வன்முறையாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு, துன்புறுத்தப் பட்டார்கள் என்னும் செய்தி "மறைச்சாட்சியரின் வாழ்க்கை" (Acts of the Martyrs) என்னும் நூல் தொகுப்பில் குறிக்கப்பட்டுள்ளது.[21]
வலேரியன் என்னும் உரோமை மன்னன் காலத்தில் (ஆட்சி: 253-260)[22] கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை மிகவும் கொடூரமாயி்ற்று. இறந்தோரின் உடலுக்குப் பாதுகாப்பு அளித்த உரோமைச் சட்டம் புறக்கணிக்கப்பட்ட அக்கால கட்டத்தில், கி.பி. 258இல் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் உடல்களின் மீபொருள்கள் (relics) அவர்களுடைய கல்லறைகளிலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்புக்காகப் புனித செபஸ்தியான் சுரங்கக் கல்லறைத் தோட்டத்தில் இரவோடு இரவாக மறைத்துவைக்கப்பட்டன என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வலேரியன் மன்னனின் ஆட்சி முடிந்ததும், கி.பி.260ஆம் ஆண்டில் அம்மீபொருள்கள் மீண்டும் பழைய கல்லறையிடத்திற்கே கொண்டுசேர்க்கப்பட்டிருக்கலாம்.[21]
மன்னர் காண்ஸ்டண்டைன் புனித பேதுருவுக்குக் கோவில் கட்டுதல்
[தொகு]முதலாம் காண்ஸ்ட்ண்டைன் என்றும் மகா காண்ஸ்டண்டைன் என்றும் அழைக்கப்படுகின்ற மன்னர் உரோமைப் பேரரசர் ஆனதும், கி.பி. 313இல் கிறித்தவர்களுக்கு மதச்சுதந்திரம் வழங்கி ஆணை பிறப்பித்தார்.[23] அதன்படி, கிறித்தவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன; அரசின் அடக்குமுறையும் மறைந்தது.
கிறித்தவர்கள் தங்கள் மத வழிபாட்டுக்காகக் கோவில்கள் கட்டுவதற்கான உரிமை பெற்றார்கள். உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பிய பேதுரு, பவுல் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தனிப்பட்ட வணக்கத்துக்கு உரியதாகக் கருதப்பட்டதால், அவ்விடங்களில் சிறப்புமிக்க கோவில்களைக் கட்டும் திட்டம் உருவாகியது.
காண்ஸ்டண்டைன் அக்கோவில்களைக் கட்டுவதற்கு நிதி உதவி அளித்தார்.
பேதுருவின் கல்லறை அமைந்திருந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக வத்திக்கான் குன்றத்தின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டது. புதிய கோவிலின் நடுப்பீடம் பேதுரு கல்லறைக்கு நேர் மேலே அமையுமாறு திட்டமிடப்பட்டது. ஆனால் பேதுரு கல்லறைக்கு மேலே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த நினைவுக் கூடத்தை என்ன செய்வதென்ற சிக்கல் எழுந்தது.
கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் அந்த நினைவுக்கூடத்திற்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்துவது வழக்கம். எனவே அந்த நினைவுக்கூடம் அழிந்துவிடலாகாது என்று அவர்கள் விரும்பினர்.[21]
புதிய கோவிலைக் கட்டியபோது பேதுரு நினைவுக்கூடம் ஒரு சிற்றாலயமாக மாற்றுருப் பெற்றது. அது இன்று "நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம்" (Chapel of the Confession) என்று அழைக்கப்படுகிறது. பேதுரு கிறித்தவ நம்பிக்கைக்காகச் சாகவும் அஞ்சவில்லை என்பதன் சின்னமாக அச்சிற்றாலயம் எழுப்பப்பட்டது.[24] அச்சிற்றாலயத்தின் மேலே புதிய கோவிலின் நடுப்பகுதியின் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது. கீழ்த்தளம் சிறிது உயர்த்தப்பட்டு, "நம்பிக்கை அறிக்கைச் சிற்றாலயத்தின்" நேர்மேலே புதிய கோவிலின் பீடம் வருமாறு கட்டப்பட்டது.
இந்தக் கட்டட அமைப்பு இன்றுவரை நீடித்துள்ளது.
காண்ஸ்டண்டைன் பேதுரு கல்லறையை மிகச் சிறப்பாக அலங்கரித்தார் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு கூறுகிறது.[16]
பேதுருவின் உடலை உள்ளடக்கிய கற்பெட்டி (sarcophagus) நான்கு பக்கங்களிலும் வெண்கலத்தால் போர்த்தப்பட்டது; அதன் நீள, அகல, உயர அளவை ஒவ்வொன்றும் 5 அடி; அதன்மேல் 150 பவுண்டு எடையுள்ள ஒரு தங்கச் சிலுவை நிறுவப்பட்டது; "அரச மாட்சி நிறைந்த ஒளிமிக்க இந்த இல்லிடம் காண்ஸ்டண்டைன் அகுஸ்துஸ் மற்றும் ஹெலேனா அகுஸ்தா ஆகியோரால் எழுப்பப்பட்டது" என்னும் வாசகம் அதன்மேல் பொறிக்கப்பட்டது. இத்தகவல்களை மேற்கூறிய "திருத்தந்தையர் நூல்" தருகிறது.
பேதுரு கல்லறையை அணிசெய்த பொன்னையும் வெள்ளியையும் பிற செல்வங்களையும் 846இல் உரோமை மேல் படையெடுத்து வந்த சாரசீனியர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று கருதப்படுகிறது.[25][26]
புனித பேதுருவின் மண்டையோடு 9ஆம் நூற்றாண்டிலிருந்து புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுவதாக ஒரு மரபு உள்ளது. அங்குதான் புனித பவுலின் மண்டையோடும் உளதாகவும் கூறப்படுகிறது.[27]
அண்மைக் காலத்தில் நடந்த முதல் அகழ்வாய்வு
[தொகு]கி.பி. 1939-1949 காலகட்டத்தில் வத்திக்கானின் மேற்பார்வையில் பேதுரு கல்லறையின் கீழே அகழ்வாய்வு நிகழ்ந்தது. அகழ்வாய்வுக் குழுவுக்கு வத்திக்கான் தரப்பில் மேற்பார்வையாளராக மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ் (Monsignor Ludwig Kaas) என்பவர் நியமிக்கப்பட்டார்.[28]
திருத்தந்தை பன்னிரண்டாம் பயசுக்கு மொன்சிஞ்ஞோர் காஸ் நெருங்கிய ஆலோசராகச் செயல்பட்டவர். புனித பேதுரு கல்லறையின் கீழ் அகழாய்வு நடத்தும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பைக் காசிடம் திருத்தந்தை ஒப்படைத்தார்.[29]
அகழ்வாய்வுக் குழுவின் அயரா முயற்சியினால் இன்றைய பேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே கி.பி. 2-3 நூற்றாண்டுகளைச் சார்ந்த உரோமை சமய இறந்தோர் நினைவுக் கட்டடத் தொகுதி (mausoleum) கண்டுபிடிக்கப்பட்டது.[30] அது "வத்திக்கான் கல்லறைத் தோட்டம்" (Vatican Necropolis)[31] என்று அழைக்கப்படுகிறது.
முன்னாட்களில் காண்ஸ்டண்டைன் மன்னர் கட்டிய பேதுரு கோவில் வேலையும், பின்னர் 16ஆம் நூற்றாண்டில் பெர்னீனியால் உருவாக்கப்பட்ட வெண்கல சிறப்புக் குடைக் கோபுரம் (baldacchino) எழுப்ப அடித்தளம் தோண்டப்பட்டதும் வத்திக்கான் கல்லறைத் தோட்டத்தின் நினைவுக் கட்டடங்களைப் பெரும்பாலும் அழித்துவிட்டன.
அவ்வாறு ஓரளவு அழிந்தவற்றுள் "ஜூலியஸ் கல்லறை" (Tomb of the Julii) சிறப்புவாய்ந்தது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த அக்கல்லறையில் அமைக்கப்பட்ட கற்பதிகை ஓவியங்கள் கிறித்தவ சமயக் கருத்துகளைச் சித்தரிக்கின்றன. ஓர் ஓவியத்தில் இயேசு சூரியனாகச் சித்தரிக்கப்படுகிறார். பழைய கிரேக்க-உரோமை மதத்தில் சூரியக் கடவுள் இருந்தது போல, இங்கே இயேசு சூரியனாகவும், ஒரு தேரில் விண்ணகம் செல்வதாகவும் உருவகிக்கப்படுகிறார்.[32]
அதே கல்லறையில் யோனா ஓவியம், மீன்பிடிப்பவர் ஓவியம் (ஒருவேளை பேதுருவாக இருக்கலாம்), இயேசு நல்ல ஆயராகக் காண்பிக்கப்படும் ஓவியம் போன்ற கற்பதிகை ஓவியங்கள் உள்ளன. இவை கிறித்தவ சமயக் கருத்துக்களைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் மிகப் பழமையானவையாகக் கருதப்படுகின்றன. இந்த ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டில் தெரியவந்தன.
இன்றைய புனித பேதுரு நடுப்பீடத்தின் நேர் கீழாக நினைவுச் சின்னம் எதுவும் கட்டப்பட்டதில்லை. அதிக ஆழமற்ற புதைகுழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் எழுத்துகள் பதிக்கப்பட்ட ஓர் ஓடு வெஸ்பாசியன் மன்னன் காலத்தது என்று தெரிகிறது (ஆட்சிக்காலம்: கி.பி. 69-79). பின்னர் தோண்டப்பட்ட குழிகள் எல்லாம் நடுப்பகுதியைக் கவனமாகத் தவிர்த்து, அதைச் சுற்றி மட்டுமே தோண்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[33]
நடுப்பீடத்தின் கீழே அமைந்த சுவரைத் தொட்டு ஒரு நினைவுச் சின்னம் கி.பி. சுமார் 160இல் கட்டப்பட்டது எனவும் தெரிகிறது.
பேதுரு கல்லறை தொடர்பான மேற்கூறிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டதும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.[34]
புனித பேதுருவின் எலும்புகள் 1942இல் இடம் மாற்றப்படுதல்
[தொகு]பேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே 1942இல் அகழ்வாய்வு நடத்தியபோது நிர்வாகியாக இருந்த மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ், தோண்டப்பட்ட இடத்தினருகில் இருந்த மற்றொரு கல்லறையில் அடக்கப்பட்ட ஒருவரின் மீபொருள்களை (relics) கண்டார். அம்மீபொருள்களுக்குத் தகுந்த வணக்கம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், அகழாய்வு நெறிமுறைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், அவர் அம்மீபொருள்களை மற்றோர் இடத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு பணித்தார். இச்செய்தியை அவர் அகழாய்வுக் குழுவினரிடம் தெரிவிக்கவில்லை.[35]
மொன்சிஞ்ஞோர் காஸ் 1952, ஏப்ரல் 15ஆம் நாள் காலமானார். அதைத் தொடர்ந்து பேராசியர் மார்கரித்தா குவார்தூச்சி என்பவர் பேதுரு கல்லறை அகழ்வாய்வுக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றார்.
அகழ்வாய்வு அறிஞர் மார்கரித்தா குவார்தூச்சி வழங்கிய முடிவுகள்
[தொகு]முதலில் நடந்த அகழ்வாய்வின்போது அகற்றப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டிருந்த குழி குவார்தூச்சியின் கவனத்தை ஈர்த்தது. நினைவுப் பீடத்தில் இருந்த அக்குழி 77 செமீ நீளம், 29 செமீ அகலம், 315 செமீ உயரமுடையதாகவும், உள்பகுதியில் பளிங்குக் கல்லால் போர்த்தப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, குவார்தூச்சி அக்குழியில் என்ன இருந்தது என்று விசாரிக்கலானார். அப்போது, அக்குழியிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சில எலும்புகள் அகற்றப்பட்டு, ஒரு மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செய்தி தற்செயலாகத் தெரியவந்தது. அந்த எலும்புகளை ஆய்ந்து தகவல் தரும்படி வெனெராந்தோ கொரேந்தி என்னும் தொல்பொருள் வல்லுநரை 1956அணுகினார்கள். அவர் தம்.ஆய்வு முடிவுகளை 1963இல் தெரிவித்தார்.
மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட எலும்புகள் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த, சுமார் 60-70 வயதுடைய ஆணின் எலும்புகள் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழிடத்தில் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் பேதுரு பற்றிய குறிப்பு இருந்தது. கிரேக்க மொழியில் கிபி 2-3 நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இரு சொற்கள் "Πέτ(ρος) ένι" = "(Pet(ros) eni)" என்று எழுதப்பட்டுள்ளன. அதற்கு "பேதுரு இங்கே உள்ளார்" என்றோ, அல்லது அழிந்துபோன எழுத்துகளைக் கருத்தில் கொண்டு "பேதுரு அமைதியில் துயில்கிறார்" என்றோ மொழிபெயர்ப்பு அமையலாம்.
எவ்வாறாயினும், இன்று பேதுருவின் கல்லறை என்று கருதப்படும் இடத்தில் கிபி 2-3ஆம் நூற்றாண்டிலிருந்தே பேதுருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து ஐயமில்லை.
கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் உண்மையிலேயே இயேசுவின் சீடர் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் தான் என்று அகழ்வாய்வு அறிஞர் குவார்தூச்சி நிறுவியுள்ளார்.[36]
பேதுரு கல்லறைபற்றித் திருத்தந்தை ஆறாம் பவுல் வெளியிட்ட அறிக்கை
[தொகு]அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய முடிவின் அடிப்படையில் திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே நடத்தப்பட்ட ஆய்வின் பயனாகத் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன என்று 1968, ஜூன் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறுநாள் புனித பேதுருவின் எலும்புகள் அவை அகழ்ந்தெடுக்கப்படுமுன் இருந்த அதே இடத்தில் 19 சிறிய ஒளி ஊடுருவு கண்ணாடிப் பெட்டிகளில் (plexiglass) இடப்பட்டு திரும்பவும் வைக்கப்பட்டன. 9 சிறு எலும்புத் துண்டுகள் வெள்ளியாலாகிய மீபொருள் காப்பகப் பெட்டியில் (reliquary) இடப்பட்டு திருத்தந்தையின் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டன. அப்பெட்டியில் ஒட்டப்பட்ட வாசகத்தில் "இங்கே இருப்பவை புனித பேதுருவின் எலும்புத் துண்டுகளென நம்பப்படுகிறது" என்னும் குறிப்பு உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ புனித பேதுரு கல்லறை
- ↑ பேதுரு கல்லறை அடையாளம் காட்டப்படும் வரைபடம், இங்கே: map. கல்லறைப் பகுதி "P" என்னும் எழுத்தால் குறிக்கப்பட்டுள்ளது. கல்லறையின் விவரத் தகவல் குறிப்புகள், இங்கே: drawing.
- ↑ Guarducci, Margherita. "THE TOMB OF ST. PETER". Hawthorn Books. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27. இச்சிறு கட்டடங்கள் உருவாக்கப்பட்ட காலம் கி.பி. 130இலிருந்து 300 வரை என்று தெரிகிறது.
- ↑ Walsh, John Evangelist. "The Bones of St. Peter". Doubleday & Co. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
- ↑ எலும்புகளோடு நாணயங்களும் கிடைத்தன. அவை மிகவும் முற்பட்ட நினைவிடத்தின் கீழ் ஒரு குழியில் இருந்தன. "அண்டோனியுஸ் பீயுஸ் மன்னன் காலத்து (138-161) நாணயம் ஒன்று; 168-185 காலத்து நாணயங்கள்.ஆறு; 285-325 காலத்து நாணயங்கள் நாற்பதுக்கும் மேல்" என்று Roger T. O'Callaghan கூறுகிறார். காண்க: Roger T. O'Callaghan, "Vatican Excavations and the Tomb of Peter", The Biblical Archaeologist 16.4 (December 1953) p. 71. அதிகாரப்பூர்வ அறிக்கையில் இக்கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரப்படவில்லை.
- ↑ Walsh, John Evangelist. "The Bones of St. Peter". Doubleday & Co. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
- ↑ Guarducci, Margherita. "The Remains of Peter". பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
- ↑ Eusebius (1999). Eusebius: The Church History. Kregel Academic.
- ↑ Tertullian. Scorpiace, Antidote for the Scorpion's Sting. OrthodoxEbooks.
- ↑ Cornelius Tacitus (1895). Annals of Tacitus. Macmillan and Co.
- ↑ மாபெரும் உரோமைத் தீ விபத்து
- ↑ மாபெரும் விளையாட்டரங்கம் (உரோமை)
- ↑ Barnes, Arthur (2006). St. Peter in Rome and His Tomb on the Vatican Hill. Kessinger Publishing.
- ↑ 14.0 14.1 Schaff, Philip (1904). A select library of Nicene and post-Nicene fathers of the Christian church. The Christian literature company..
- ↑ திருத்தந்தையர் நூல்
- ↑ 16.0 16.1 The book of the popes (Liber pontificalis). Columbia University Press. 1916.
- ↑ மன்னர் ஜூலியன்
- ↑ Julian (Emperor of Rome) (2004). Julian's against the Galileans. Prometheus Books.
- ↑ காயுஸ்
- ↑ காயுஸ் தரும் சான்று
- ↑ 21.0 21.1 21.2 "Tomb of St. Peter". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ மன்னன் வலேரியன்
- ↑ காண்ஸ்டண்டைன் மன்னரும் கிறித்தவமும்
- ↑ நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம்
- ↑ Lanciani, Rodolfo Amedeo (1899). The destruction of ancient Rome. Macmillan company.
- ↑ சாரசீனியர் உரோமையைச் சூறையாடல்
- ↑ Cuming, H. Syer (December 1870). "Notes on a group of reliquaries". J. British Archeological Association. http://books.google.com/books?id=UDAGAAAAQAAJ&pg=PA272.
- ↑ St. Peter's Basilica, Rome - Archaeology and the Great Churches of the World
- ↑ லூட்விக் காஸ்
- ↑ Officially published as Esplorazioni sotto la Confessione de San Pietro in Vaticano, B.M. Apollonj,, A. Ferrua SJ, E. Josi, E. Kirschbaum SJ, eds., 2 vols. (Vatican City) 1951; the results were assessed in Roger T. O'Callaghan, "Recent Excavations underneath the Vatican Crypts", in The Biblical Archaeologist 12 (1949:1-23) and "Vatican Excavations and the Tomb of Peter", The Biblical Archaeologist 16.4 (December 1953:70-87).
- ↑ வத்திக்கான் கல்லறைத் தோட்டம்
- ↑ இயேசு சூரியனாக உருவகிக்கப்படும் ஓவியம்
- ↑ This is the "open area P'. (O'Callaghan 1953:76).
- ↑ Life Magazine, March 27, 1950:65-79, 82, 85 (noted by O'Callaghan 1953, note 1); the niche shrine described in O'Callaghan 1953:77ff.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-01-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ குவார்தூச்சி ஆய்வு முடிவுகள்
வத்திக்கான் நகரம் வழங்கும் பல்லூடக இணைப்பு
[தொகு]பிற வெளி இணைப்புகள்
[தொகு]- Margherita Guarducci, The Tomb of St. Peter பரணிடப்பட்டது 2010-02-12 at the வந்தவழி இயந்திரம் குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழ்வாய்வில் பங்கேற்றவர்.
- The Bones of St Peter by John Evangelist Walsh பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம் திருத்தூதர் பேதுருவின் உடலைத் தேடி நிகழ்ந்த ஆய்வுபற்றிய முதல் முழு விவரிப்பு இது.
- Map of the Vatican Necropolis- கல்லறைகள்பற்றிய செயலூடகப் படம்.
- "Tomb of St. Peter". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.