விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 29, 2013
Abraham Pandithar.png

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவக் கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்தவர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராக பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அவரே இவற்றை எழுதி, ஒவ்வொன்றுக்கும் இசையமைத்து அவற்றின் சுரங்களையும் வெளியிட்டார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். மேலும்...


Red-knobbed.starfish.arp.jpg

விண்மீன் உயிரி அல்லது நட்சத்திர மீன்கள் என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் உயிரினமாகும். உலகக் கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 விதமான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன, இவை பெருங்கடற் பகுதிகளில் மட்டுமல்லாது துருவக் கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன. அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. பலவகைப்பட்ட உடலமைப்புக்களையும் உணவருந்தும் முறையையும் கொண்டுள்ளன. சூழ்நிலையியல், உயிரியல் போன்றவற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஊதாக் கடல் விண்மீன் போன்ற உயிரினங்கள் மறைதிறவு இனக் கருதுகோள் தொடர்பாகப் பரவலாக அறியப்பட்டவையாகும். கலிபோர்னிய கருநீலச்சிப்பி இனங்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி, அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும், இது சூழ்நிலையைப் பாதிப்புக்குள்ளாக்கின்றது. மேலும்...


டிசம்பர் 22, 2013
StJohnsAshfield StainedGlass GoodShepherd-frame crop.jpg

இயேசு கிறித்து (கி.மு. 4 – கி.பி. 30) கிறித்தவ சமயத்தின் மைய நபரும், கிறித்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். இவர் நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்றும் அழைக்கப்படுகிறார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததாகவும், அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர். கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, இசுலாம் மற்றும் பகாய் போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு இறைத்தூதராகக் கருதுகின்றன. இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை. மேலும்...


Rock Fort Temple.jpg

திருச்சிராப்பள்ளி (திருச்சி) நகரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான். மேலும்...


டிசம்பர் 8, 2013
Munneswaram.jpg

முன்னேசுவரம் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. இக்கோவில் இலங்கையில் உள்ள பஞ்ச ஈசுவரங்களில் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி பல இனத்தவரும் வழிபட்டு வருகின்றனர். இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை இராமர், வியாசர் முதலியோர் வழிபட்டதாக தட்சணகைலாசபுராணம் குறிப்பிடுகின்றது. குளக்கோட்ட மன்னன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணம் செய்ததுடன், அதற்கு 64 கிராமங்களை வழங்கியதாகவும் முன்னேஸ்வர மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததுடன் பல கிராமங்களையும் மானியமாக அளித்துள்ளான். போர்த்துக்கேயர் 1578 இல் முன்னேசுவர ஆலயத்தை அழித்துச் சூறையாடி, இத்தலத்துக்கு உரித்துடையதான வளம் மிகுந்த நிலங்களையும் அபகரித்தனர். மேலும்...


சுந்தர சண்முகனார் (1922-1977) புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர். தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்டவர். நூல் தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. 70 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. சண்முகனார் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் பட்டம் பெற்றார். 1952 இல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியேற்றார். 1947-இல் புதுச்சேரியில் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின்னர் புதுவை அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.மேலும்...


டிசம்பர் 1, 2013
சோழ குதிரைப்படை.jpg

சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். அவரே கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் தலைவர். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது. மேலும்...


SA Ganapathy.jpg

எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்கு பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர். மேலும்...


நவம்பர் 24, 2013
Tamil-Brahmi.png

தமிழ்ப் பிராமி அல்லது தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிப்புரலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டது) மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், அயலிலுள்ள இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும். மேலும்...


வே. தில்லைநாயகம் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார். மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962 ஆம் ஆண்டில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். மேலும்...


நவம்பர் 17, 2013
Batalla de Cerro Gordo.jpg

மெக்சிக்கோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845ம் ஆண்டு அமெரிக்கா டெக்சாசை தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிக்கோ இப்போரை நடத்தியது. 1836 ல் டெக்சாசு மெக்சிக்கோவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி மெக்சிக்கோவில் இருந்து பிரிந்தாலும் மெக்சிக்கோ டெக்சாசைத் தன்னுடைய பகுதியாகக் கருதியது. 1846ன் வசந்த காலத்திலிருந்து 1847ன் இலையுதிர் காலம் வரை பெரும் போர் நடைபெற்றது. அமெரிக்கப் படைகள் விரைவாக நியு மெக்சிக்கோவையும் கலிபோர்னியாவையும் கைப்பற்றின. வடகிழக்கு, வடமேற்கு மெக்சிக்கோவின் சில பகுதிகளையும் அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. அமெரிக்கக் கப்பற் படையின் பசிபிக்குப் பகுதிப் படை பாகா கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள பல படைத்தளங்களைக் கைப்பற்றியது. மற்றொரு அமெரிக்கப்படை மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றியது. இப்போரில் அமெரிக்கா வெற்றிபெற்றது. மேலும்...


Bhima and Dharmaraja temples.jpg

மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. மேலும்...


நவம்பர் 10, 2013
Chess gameboard..jpg

சதுரங்கத்தில் கோட்டை கட்டுதல் என்பது அரசனையும் அதே நிறக் கோட்டைகளுள் ஏதேனுமொன்றையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சதுரங்க சிறப்பு நகர்வு ஆகும். கோட்டை கட்டுதல் என்பது அரசனை முதலாவது வரிசையிலுள்ள கோட்டையை நோக்கி இரண்டு கட்டங்கள் நகர்த்தி, அக்கோட்டையை அரசன் கடந்து வந்த கட்டத்துக்குள் வைப்பதைக் குறிக்கும். அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் போட்டி தொடங்கியதிலிருந்து நகர்த்தப்படாமலும் அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடைப்பட்ட கட்டங்கள் கைப்பற்றப்படாமலும் அந்நகர்வில் அரசன் முற்றுகையில் இல்லாதிருந்தாலும் அரசனை முற்றுகைகு ஆளாக்கக்கூடிய கட்டத்தைக் கடக்கவோ அடையவோ நேராவிட்டாலும் மட்டுமே கோட்டை கட்ட முடியும். கோட்டை கட்டுதலானது சதுரங்க விதிமுறைகளுள் அடங்குகின்றது. மேலும்...


A Pamphlet on Gobinda Doms Gang, under the Criminal Tribes Act (VI of 1924), dated 1942.jpg

குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல் நடத்துவதோ அல்லது அவர்களை கைது செய்வதற்கோ எந்தவித பிடியாணையும் இல்லாமல் இந்த சட்டத்தின் பெயரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் 1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாக குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் அமுலாகியது. மேலும்...


நவம்பர் 3, 2013
1stAlameinBritDefense.jpg

மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் அல்லது பாலைவனப் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. இதில் மூன்று முறை அச்சு நாட்டுப் படைகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இறுதியில் துனிசியாவுக்குப் பின்வாங்கின. 1940ல் ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் படைகள் பல நேச நாடுகளைத் தோற்கடித்தன. ஐரோப்பாவில் ஜெர்மனிக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே வடக்கு ஆப்பிரிக்காவில் தனது படைகளும் வெற்றிபெற வேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி விரும்பினார். ஆப்பிரிக்காவில் இத்தாலிய காலனியான லிபிய நாட்டிலிருந்து நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்து மீது இத்தாலியப் படைகள் படையெடுத்தன. ஆனால் நேச நாட்டுப் படைகளின் எதிர்த்தாக்குதலால் எகிப்திலிருந்து விரட்டப்பட்டன. முசோலினியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் என்ற படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். மேலும்...


Charles Darwin 200 year exhibition Brazil4.jpg

தொடுதிரை என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும். இச்சொல் பொதுவாக கருவிகளின் படங்காட்டிகளை விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி போன்ற பிற பட்டுவ பொருட்களையும் உணர கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள், முழுக் கணினிகள், கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன. தொடுதிரை இரண்டு முக்கிய நிறைவுகளை கொண்டுள்ளது. முதலில், இது சுட்டி அல்லது தொடுபலகையினால் சுட்டுமுள்ளை நேரற்று கட்டுப்படுத்துவதைப் போலல்லாமல், எது படங்காட்டப்படுகிறதோ அதனை நேராக அணுகுகிறது. அடுத்ததாக, இது மேலே குறிப்பிட்டப்படி அணுகுவதற்கு வேறெந்த இடையூடகக் கருவிகளும் தேவையில்லை (தற்போதைய தொடுதிரைகளில் உகப்புள்ள (கட்டாயமற்ற) ஒயிலாணியை தவிர). அத்தகைய படங்காட்டிகள் கணினிகளோடும், முனையங்களாக வலையிணக்கங்களோடும் கோர்க்கப்படுகின்றன. மேலும்...


அக்டோபர் 27, 2013
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.JPG

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னன். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்டான். இவனை இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழ வேந்தன், சேர வேந்தன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தான். இவன் போருக்குச் சென்ற போது சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியை கழட்டவில்லை என்பது இவன் மிகச் சிறிய வயதிலேயே போருக்குச் சென்றவன் என்பதைக் காட்டுகிறது. இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. மேலும்...


Agar plate with colonies.jpg

வளர்ப்பூடகம் என்பது நுண்ணுயிர்கள், உயிரணுக்கள், இழையம் போன்றவை வளர்வதற்கு தேவையான போசாக்கைக் கொண்டிருக்கும், செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒரு திரவ, அல்லது கூழ்போன்ற (பகுதி-திண்ம) அல்லது திண்மப் பதார்த்தமாகும். சைகொட்ரலா படென்சு போன்ற சில பாசி வகைத் தாவரங்களும் வளர்ப்பூடகமாகப் பயன்படும். வேற்பட்ட வகையான உயிரணுக்கள் வளர்வதற்கு வேறுபட்ட வளர்ப்பூடகங்கள் தேவைப்படும். வளர்ப்பூடகங்கள் உயிரணு வளர்ப்பு, இழைய வளர்ப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும். வைரசுக்கள் கட்டாயமான ஒட்டுண்ணி வாழ்வு வாழும் உயிரினங்களாக இருப்பதனால், அவற்றை வளர்ப்பதாயின் அவற்றிற்கான வளர்ப்பூடகத்தில் உயிருள்ள உயிரணுக்கள் இருத்தல் அவசியமாகும். வளர்ப்பூடகங்கள் முக்கியமாக இரு வகைப்படும். ஒன்று நுண்ணுயிர்களை ஆய்வு கூடங்களில் வளர்த்தெடுக்க உதவுபவை. மற்றையது, தாவரம், விலங்குகளிலிருந்து பெறப்படும் சில உயிரணுக்களோ, கலங்களோ வளர்வதற்குத் தேவையான வளர்ப்பூடகங்கள். மேலும்...


அக்டோபர் 20, 2013
Siege of a city, medieval miniature.jpg

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் இந்நகரை முற்றுகையிட்டு கைப்பற்ற ஆணையிட்டான். இந்நகரைக் கிழக்கு உரோமைப் பேரரசு என்றழைக்கப்பட்ட பைசாந்தியத்தின் அரசன் பதினொன்றாம் கான்சுடன்டைன் காத்து நின்றான். இம்முற்றுகை ஏப்பிரல் 6, 1453 முதல் மே 29, 1453 வரை நடந்தது. கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி 1500 ஆண்டுகள் நீடித்த உரோமைப் பேரரசுக்கு முடிவு கட்டியது. இந்நகர வீழ்ச்சி ஒட்டோமான் பேரரசு ஐரோப்பா நோக்கி முன்னேறுவதற்குக் குறுக்கே நின்ற சிறு தடையை நீக்கிவிட்டது. கான்சுடன்டினோப்பிளைக் கைப்பற்றியதும் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் ஒட்டோமான் பேரரசின் தலைநகராக இருந்த ஏடிரியானோபிளை கான்சுடன்டினோப்பிளுக்கு மாற்றினார் . கான்சுடன்டிநோப்பிளின் வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த கிழக்கு உரோமைப் பேரரசின் (பைசாந்தியப் பேரரசு) வீழ்ச்சியும் ஐரோப்பிய இடைக்காலத்தின் முடிவு என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும்...


Standard deviation diagram.svg

நியமவிலகல் அல்லது திட்ட விலக்கம் (standard deviation, σ) என்பது, ஒரு தரவிலுள்ள ஒவ்வொரு மதிப்பும் அத்தரவின் சராசரி மதிப்பிலிருந்து எவ்வளவு விலகி உள்ளது என்பதைக் கணிப்பதாகும். இக்கருத்துரு, நிகழ்தகவுக் கோட்பாடு, புள்ளிவிவர தொகுப்பாக்கம், நிகழ்தகவுப் பரவல் (probability distribution) ஆகிய பல துறைகளில் அடிப்படைக் கருத்தாகப் பயன்படுகின்றது. நியமவிலகல், பரவற்படியின் வர்க்கமூலமாக அமைகிறது. பரவற்படி போன்று இல்லாமல், தரவின் அலகிலேயே அமைவது, நியமவிலகலின் ஒரு சிறப்புப் பண்பு. தரவின் ஒவ்வொரு தரவுப் புள்ளியும் அத் தரவின் சராசரியில் இருந்து மாறுபடும் அளவினை வர்க்கப்படுத்தி, பின் அவ்வாறு கிடைக்கும் வர்க்கங்களின் சராசரியின் வர்க்கமூலம் காணக் கிடைக்கும் அளவு, அத்தரவின் நியமவிலகல் ஆகும். ’மாறுபாடு’ அல்லது ’பரவல்’ ன் அளவீடாக நியமவிலகல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகச், சராசரியிலிருந்து தரவு எந்தளவிற்கு மாறுபட்டிருக்கிறது என்பதை நியமவிலகலின் மதிப்புக் காட்டுகிறது. குறைவான நியமவிலகல், தரவுப் புள்ளிகள் சராசரிக்கு மிகவும் நெருங்கிச் செல்பவையாக இருப்பதையும், அதிக அளவு நியமவிலகல் தரவு பரந்து விரிந்திருக்கிறது என்பதையும் காட்டும். மேலும்...


அக்டோபர் 13, 2013
Appakuddy.jpg

தங்கம்மா அப்பாக்குட்டி (1925-2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் தலைவராகச் செயற்பட்டு வந்தார். "சிவத்தமிழ்செல்வி" என்று அழைக்கப்பட்டு வந்தார். பயிற்றப்பட்ட தமிழாசிரியையான இவர் தமிழையும் சைவத்தையும் முறையாகக் கற்று 1952 இல் பாலபண்டிதராகத் தேர்வடைந்து 1958இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். யாழ் பகுதியில் இறை வழிபாட்டை மேம்படுத்தும் வழியில் அங்கு ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் இவருக்கு முதன்மையான பங்குண்டு. சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் துவக்கினார். ஆலய வளாகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கென "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவி சேவையாற்றி வந்தார். ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதிபர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். மேலும்...


சஞ்சிக்கூலிகள் என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் ஆகும். இது சஞ்சி எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள். மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி அங்கிருந்து ஆள் பிடித்து வருமாறு பணிக்கப்பட்டனர். கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர். இப்படி அழைத்து வரப்படுவற்கு கங்காணி முறை என்று பெயர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு வந்தார்கள். இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப்படுத்தினர். 1826 இல் ரீயூனியன் தீவுக்கூட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆகவே, பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டு வருவதற்கு முதல் அத்திவாரத்தைப் போட்டனர். மேலும்...


அக்டோபர் 6, 2013

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது இவரது காலத்தில்தான். "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் சுவாமிகள். பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார். தனது 24வது அகவையில் நாடகத்துறையில் ஈடுபட்டார். சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார். மேலும்...


TPI1 structure.png

நொதியம் என்னும் புரதப் பொருள் உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லாக் கலங்களின் இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ்வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் எந்த உயிரினமும் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மாந்த உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள். நொதி, பிற சேர்மங்களுடன் சேர்ந்து நுட்பச் செறிவு மிகுந்த வேதியியல் பொருள் அமைப்புகளை உருவாக்கி அதன் வழி வேதி வினைகள் நிகழ வழி வகுக்கின்றது. ஆனால் நொதி தன் இயல்பு மாறாமல் இருந்து இறுதியில் விடுபடுகின்றது. ஒரு நொதி ஒரு மணித்துளியில் தன் வினையை மில்லியன் கணக்கான தடவை செய்ய வல்லது. மாந்த உடலில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை நொதிகள் உருவாகி செயல்படுகின்றன. மிக விரைவாக வினை ஆற்றுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வினைகளை மட்டுமே மிக மிகத் துல்லியமாய், தக்க சூழலில் மட்டுமே, பூட்டும் அதற்கான திறவுகோலும் போல் மிகுதேர்ச்சியுடன் இயக்குகின்றது. செடிகொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல் மாந்தர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சு விடுவது ஆகிய அனைத்துமே நொதிகளின் இன்றியமையாத துணையால் நிகழ்வன. மேலும்...



செப்டம்பர் 29, 2013
Devasahayam Pillai 2a.JPG

தேவசகாயம் பிள்ளை (படம்) என்பவர் கத்தோலிக்க கிறித்தவ திருச்சபையினால் "முத்திப்பேறு பெற்றவர்" என்று அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712, ஏப்ரல் 23 அன்று இந்து சமயக் குடும்பத்தில் பிறந்த நீலகண்ட பிள்ளை எனும் இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்குக் "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது. திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி 1752, சனவரி 14 அன்று ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை எனுமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் உயிர் துறந்த இறந்த இடம் தேவசகாயம் மலை என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்குச் செல்லும் மக்கள் இறைவேண்டல்களை நடத்தத் தொடங்கினர். கத்தோலிக்க கிறித்தவர்களால் இவர் மறைச்சாட்சியாக கருதப்படுகின்றார். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு மறைமாவட்ட கிறித்தவர்கள் இவருக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக இவரை மறைச்சாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" (அருளாளர்) என்று 2012, திசம்பர் 2 ஆம் நாள் அறிவிப்பு செய்தது. மேலும்...


Chennai beach2.jpg

ஆழிப்பேரலை அல்லது சுனாமி அல்லது கடற்கோள் என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள் சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கி செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும். ‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர். “அலோன்" என்ற வார்த்தைக்கு பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர். மேலும்...


செப்டம்பர் 22, 2013
Silkworm & cocoon.jpg

பட்டுப்புழு வளர்ப்பு என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலமான 30 நாட்கள் முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10 முதல் 12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5 முதல் 6 முறை மல்பரி இலை அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60 முதல் 70 நாட்கள் ஆகும். அறுவடை செய்த கூடுகளை குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30 முதல் 40 கிலோ தாங்கக்கூடிய நைலான்/சணல் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். 100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60 முதல் 70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700 முதல் 900 கிலோ கூடுகளைப் பெறமுடியும் மேலும்...


ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில்ரைட் மற்றும் வில்பர்ரைட் (படம்) என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது. மேலும்...


செப்டம்பர் 15, 2013
Everest North Face toward Base Camp Tibet Luca Galuzzi 2006 edit 1.jpg

இமயமலை இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லையாக சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். புவியில் மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடரும், உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமுமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்று. எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்து-அருணாசலப் பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இமயமலை மூன்று இணையான உப தொடர்களை கொண்டது. இது பூட்டான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாக கொண்டுள்ளது. சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா நதிகளில் உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாக கருதப்படுகிறது. மேலும்...


Sir Muthu Coomaraswamy.jpg

சேர் முத்து குமாரசுவாமி (1833-1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக பதவி வகித்து சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். முத்து குமாரசாமி ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். இவரின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் , முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 இல் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 இல் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். மேலும்...


செப்டம்பர் 8, 2013
Autism-stacking-cans 2nd edit.jpg

மதியிறுக்கம் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை, இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன. இவ்வேறுபாட்டின் பரம்பல் அமெரிக்காவில் 166 பேரில் ஒருவர் என்றும் ஆயிரத்தில் ஒருவர் என்றும் வெவ்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அறுதியிடல் பொதுவாக உளவியல் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதற்கென மருத்துவப் பரிசோதனைகளும் உள்ளன. உடல்நிலைப் பரிசோதனையில் இது பொதுவாகத் தெரிய வருவதில்லை. "இது ஒரு நோயல்ல" மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர். இக்குறைபாடு பொதுவாகக் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன் ஏற்படும். மேலும்...


JayaprakashNarayanLakshminarayanLal.jpg

ஜெயபிரகாஷ் நாராயண் (1902-1979) இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர். தமது அமைதியான முழுப் புரட்சி என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட பொதுவுடமைவாதி. இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷ் பெரும் பங்காற்றினார் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரசம், சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடதுசாரிகள் அல்லாத கட்சிகளை இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுத்தினார். இந்தியாவில் 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர். 1965ஆம் ஆண்டு இவரது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும்...


செப்டம்பர் 1, 2013

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, 'மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்' (சனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி என்பவரின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். மேலும்...


Dambulla 01.jpg

இலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள் என எட்டுக் களங்கள் யுனிசெப் நிறுவனத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை முறையே அனுராதபுரம் புனித நகர் (1982), பொலன்னறுவை புராதன நகர் (1982), சிகிரியா (1982), சிங்கராஜக் காடு (1988), கண்டி புனித நகர் (1988), காலி பழைய நகரும் அதன் தற்காப்பு கோட்டை கொத்தளங்களும் (1988), தம்புள்ளை பொற்கோவில் (1991) மற்றும் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010) ஆகும். அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு புராதன நகரமாகும். அனுராதபுரம் நாட்டின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகர்களில் ஒன்றாக கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை விளங்கியதாக நம்பப்படுகின்றது. இங்கு சிங்கள, தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். தென்னிந்தியப் படையெடுப்புகள் காரணமாக இதன் தலைநகர் என்ற நிலை மாற்றப்பட்டது. உலகிலுள்ள முக்கிய தொல்பொருள் களங்களில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வுகள் இதன் வரலாற்றுத் தொடர்பு கி.மு. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என குறிப்பிடுகின்றன. மேலும்...


ஆகஸ்ட் 25, 2013
அகரமேறிய மெய் முறைமை.png

அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி எழுத்துக்களின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி எழுத்துத்தொடரில் காணப்படும் க் என்னும் மெய் எழுத்தை குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி (+) மட்டும் கொண்டு குறிப்பிட்டு க, கா போன்ற அகர ஆகரமேறிய எழுத்துக்களைக் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேல் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு (ஒலிக் குறியீடு.jpg) குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். அதுவே க், க என்னும் மெய் எழுத்தையும், அகரமேறிய மெய் எழுத்தையும் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி (+) மட்டும் கொண்டு குறிப்பிட்டு, கா என்னும் ஆகரமேறிய எழுத்துக்களைக் மட்டும் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு (ஒலிக் குறியீடு.jpg) குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும். ஐராவதம் மகாதேவன் என்ற தொல்லியலாளர் இம்முறையை உருவாக்கி தமிழ் பிராமி எழுத்துக்களை மூன்று வளர்ச்சி நிலைகளாக பிரித்தார். தொல்லியல் அறிஞரான நடன காசிநாதன் இம்முறையை மேலும் விரிவுப்படுத்தி தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி நிலைகளை நான்காக பிரித்தார். (படம்)


Acropolis from south-west.jpg

ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை விளங்கியது. இரும்புக் கால புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாக கி.மு.508இல் கிளீஸ்தீன்ஸினால் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாக மக்களாட்சி ஏதென்சில் தோற்றம்பெற்றது. 1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.


ஆகஸ்ட் 18, 2013
River-Nile-near-Aswan.jpg

நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் உலகின் மிக நீளமான ஆறு ஆகும். 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கின்றது. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும். நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின. மேலும்...


Secretsharing-3-point.png

கணிதத்தில், நேரியல் சமன்பாடுகளின் தொகுதி அல்லது ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதி என்பது, மாறிகளையும் மாறிகளின் எண்ணிக்கையையும் சமமாகக் கொண்ட ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுப்பாகும். கணிதத்தில் ஒருபடிய அமைப்புகள் அல்லது ஒருங்கியங்கள், என்பன தற்காலக் கணிதத்தின் அடிப்படைத் துறைகளில் ஒன்றான நேரியல் இயற்கணிதத்தின் ஒரு பிரிவாகும். ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதியின் தீர்வு அத்தொகுதியில் உள்ள அனைத்துச் சமன்பாடுகளையும் நிறைவு செய்யும் வகையில் அமையும் x1, x2, ..., xn என்ற மாறிகளின் மதிப்பாகும். அவ்வாறு அமையும் தீர்வுகளைக் கொண்ட கணம் அத்தொகுதியின் தீர்வுகணம் எனப்படும். ஒருபடியச் சமன்பாடுகளின் தொகுதி, பின்வரும் மூன்று விதங்களுள் ஒன்றாக அமையும்: முடிவிலாத் தீர்வுகளைக் கொண்டது, ஒரேயொரு தனித்தீர்வு கொண்டது, தீர்வே இல்லாதது. மேலும்...


ஆகஸ்ட் 11, 2013
Pole-south.gif

தென் துருவம் என்பது, புவியின் தென் அரைக்கோளத்தில் உள்ள, அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இது புவியின் தென் அரைக்கோளத்தின் தென் கோடியில் வட துருவத்துக்கு நேர் எதிரே, அண்டார்ட்டிக்காக் கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐக்கிய அமெரிக்கா, அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் எனும் நிரந்தரமான நிலையம் ஒன்றை 1956 இல் அமைத்தது. அன்று முதல் இந் நிலையத்தில் பணியாட்கள் நிரந்தரமாக இங்கே பணி புரிகின்றனர். பெருங்கடற்பகுதியாக உள்ள வட துருவத்தைப் போலன்றி தென் துருவம் ஓர் மலைப்பாங்கான கண்டப்பகுதியாகும். மேலும் மிகவும் உயரத்தில் சூறைக்காற்று நிலவும் இடத்தில் அமைந்துள்ளது. மனிதர்கள் வாழும் பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. அண்மையிலுள்ள கடற்பகுதியிலிருந்து நில ஆய்வாளர்கள் ஆயிரம் மைல்களுக்கும் மேலாக பனிபடர்ந்த நிலப்பகுதியில் மலையேற்றங்கள் நடத்தி பீடபூமியை அடைய வேண்டும். 1820இல், பல புவி ஆய்வாளர்கள் முதன்முதலாக அண்டார்டிக்கா கண்டத்தை கண்டறிந்தனர். இவர்களில் முதலாவதாக உருசியாவைச் சேர்ந்த ஃபாடி பெல்லிங்சாசென்னும் மிக்கைல் லாசரெவ்வும் முன்நடத்திய குழுவினர் இருந்தனர். ஓராண்டு கழித்து அமெரிக்கரான ஜான் டேவிஸ் இக்கண்டத்தில் காலடி பதித்த முதலாமவராக சாதனை படைத்தார். மேலும்...


Hellen Keller circa 1920.jpg

எலன் கெல்லர் (1880-1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். 1887 இல் எலனின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். சிறிது சிறிதாக எழுதக் கற்றுக் கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட எலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு எலனின் படைப்புகளில் இது இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். மேலும்...


ஆகஸ்ட் 4, 2013
Shiva Bijapur.jpg

சிவன் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவரையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். சிவனை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து, மொகஞ்சதாரோ நாகரிகங்களில் சிவ வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்திணைத் தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது. மேலும்...


Printing Telegraph.jpg

தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் ஒரு வகைக் குறிமுறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்த குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். புகைக் குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள் மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன. 19ம் நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை மின்சாரத் தந்தி மூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் வானொலிக் கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. இணையம் வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட மின்னஞ்சல்கள், குறுஞ் செய்திகள், உடனடி செய்திகள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த சாமுவெல் மோர்சு கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார். மேலும்...


சூலை 28, 2013
01 khafre north.jpg

பிரமிடு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக்கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும். இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தையேத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் அனைத்தும் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டும்தான். பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பிரமிடுகள் எகிப்துடன் அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளைக் கொண்ட நாடாக சூடான் விளங்குகிறது. மேலும்


Somasundara bharathiar.jpg

சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879 - திசம்பர் 14, 1959) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரான இவருக்கும், சுப்பிரமணிய பாரதியாருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த புலவர் இருவரது கவித்திறன்களையும் கண்டு மகிழ்ந்து ஒரே நேரத்தில் பாரதி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். வழக்கறிஞராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய இவர் பல பாடல்களையும், நூல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக, தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடும் தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் முன்னின்று செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்


சூலை 21, 2013

கண்டம் எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆத்திரேலியா ஆகும். நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா. ஏழு கண்டங்களாக சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும்...


டோனி பெர்னாண்டஸ் என்றழைக்கப்படும் டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு: 30 ஏப்ரல்1964) ஓர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். 1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். 1987-1989 வரை சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். 1991 இல் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரானார். 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.மேலும்...


சூலை 14, 2013
Valvai Tamils Kappal Paravapathini.JPG

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் 'கலம்செய் கம்மியர்' எனப்பட்டனர். சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.சங்ககால தமிழர் கலங்கள் வேந்தர்களால் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தப் பட்டதோடு நில்லாமல் இலங்கையை போரில் வெல்லுவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் பாண்டியப் பேரரசு (கி.பி. 550 - 950), சோழப் பேரரசு (கி.பி. 850 - 1250), இரண்டாம் பாண்டியர் பேரரசு (கி.பி. 1150 - 1350) போன்ற காலங்களில் தமிழர் கப்பல்கள் வணிகத்தில் சிறப்புற்றதோடு நில்லாமல் கடல் கடந்து இலங்கை, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றனர். மேலும்...


கத்தேரி தேக்கக்விதா, (1656–1680), (திருமுழுக்கு பெயர்: கேத்ரின் தேக்கக்விதா) என்றும் 'மோகாக்கியரின் லில்லி மலர்' என்றும் அறியப்படுபவர் ஒரு அல்கோன்குயின்-மோகாக்கிய கத்தோலிக்க கன்னியரும், பொது நிலைத்துறவியும் ஆவார். இவர் தற்போது நியூயார்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தவர். சிறுவயதில் பெரியம்மையால் தாக்கப்பட்டு பிழைத்தவர். இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். தனது 19ஆம் அகவையில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி திருமுழுக்குப் பெற்றார். இதன்பின் தனது வாழ்நாளை இயேசு சபை மறைபணி தளமான மொண்ட்ரியாலில் உள்ள கானாவாக்கே கிராமத்தில் கழித்தார். இவர் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார். அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1980இல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2012 அக்டோபர் 21, இல் புனித பேதுரு பேராலயத்தில் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும்...


சூலை 7, 2013

தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார். தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர் மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார். மேலும்...


Iqra.jpg

குரான் அல்லது திருக்குரான்(குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, யிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது. முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன. மேலும்...


சூன் 30, 2013
Lord Kelvin photograph.jpg

வில்லியம் தாம்சன் (1824-1907) அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தவர். வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவ பரிந்துரைத்து ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்க்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு கெல்வின் பிரபு எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது. தொடக்கத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. மேலும்...


Triangle.Centroid.svg

திணிவு மையம் அல்லது வடிவுசார் மையம் அல்லது ஈர்ப்பு மையம் என்பது, அவ்வடிவத்தை சம விலக்களவு கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கும் கோடுகள் அனைத்தும் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். வடிவவியலில் திணிவு மையம் என்பது ஒரு தளவுருவத்தின் இருபரிமாண வடிவம் ஆகும். சாதாரணமாக, திணிவு மையத்தை X -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் சராசரியாகக் கருதலாம். திணிவு மையத்தின் இந்த இருபரிமாண வரையறையை n -பரிமாணத்திற்கும் நீட்டிக்கலாம். n -பரிமாணத்திலுள்ள ஒரு பொருள் X -ன் திணிவுமையம் என்பது, அதனை சம விலக்களவு கொண்ட இரு பாகங்களாகப் பிரிக்கும் மீத்தளங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். இயற்பியலில், திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது நிறை மையம் அல்லது புவியீர்ப்பு மையத்தையும் குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை அடர்த்தி அல்லது தன்எடைகளால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும். மேலும்...


சூன் 23, 2013
Oliver Cromwell by Samuel Cooper.jpg

ஆலிவர் கிராம்வெல் (ஒலிவர் குரொம்வெல், 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்த செயல் வீரர். இவர் இங்கிலாந்தின் வரம்பற்ற முடியாட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற மக்களாட்சி அரச முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். 1628 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தமது 30 ஆம் வயதில் தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களால் அலக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது வரம்பற்ற முடியாட்சி மீது நம்பிக்கை கொண்டு அதை நடைமுறைப்படுத்த விரும்பிய முதலாம் சார்லஸ் மன்னர் இங்கிலாந்தை ஆண்டு வந்தார். எனவே 1629 -ல் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தாமே நாட்டை ஆளத் தொடங்கினார். எனவே கிராம்வெல் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் சார்லஸ் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவே இல்லை. 1640 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மன்னருக்குப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அந்தப் புதிய நாடாளுமன்றத்தில் ஆலிவர் கிராம்வெல் 1642 வரை உறுப்பினராக இருந்தார். மேலும்...


Phaseolus vulgaris seed.jpg

வித்து அல்லது விதை என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாக தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது. விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறை மூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்கு சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். மேலும்...


சூன் 16, 2013
GreatWall 2004 Summer 4.jpg

சீனப் பெருஞ் சுவர் (நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சீன வரலாற்றில் சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும்...


Joseph Lister 1902.jpg

ஜோசப் லிஸ்டர் (5 ஏப்ரல் 1827 – 10 பிப்ரவரி 1912) அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த பிரித்தானிய அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார். விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளை கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளை சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார். லிஸ்டர் இங்கிலாந்தில் உள்ள அப்ட்டன் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். தாயார் இசபெல்லா. ஜோசப் லிஸ்டர் லண்டனிலுள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்த இவர் 1852 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். 'கிளாஸ்கோ தேசிய மருத்துவ மனையில்' 1861 ஆம் ஆண்டில் இவர் ஒரு அறுவை மருத்துவராகச் சேர்ந்தார். இந்தப் பணிக் காலத்தின் போது தான் நோய்நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறையை இவர் கண்டு பிடித்தார்.


சூன் 9, 2013

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்பது 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், பேராக் மாநில அரசாங்கத்தைச் சட்டபூர்வமாக ஆட்சி செய்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஆகும். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர். அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார். பேராக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் மாநில முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடினின் கோரிக்கையை, பேராக் சுல்தான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது. தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். நிஜார் ஜமாலுடினுக்கும் புதிய முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிருக்கும் இடையே ஒரு நீதிமன்ற போரே நடைபெற்றது. இறுதியில், 2010 பிப்ரவரி மாதம், சாம்ரி அப்துல் காதிர்தான் சட்டப்படியான முதலமைச்சர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. மேலும்...


Salini 1.jpg

சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் 'கனகசவுந்தரி' என்பது ஆகும். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் திசம்பர் 221933 ஆம் நாள் வணிகர் வே. சங்கரலிங்கம் – சிவகாமி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகளாவும் மூன்றாவது மகவாகவும் கனகசவுந்தரி பிறந்தார். கனகசவுந்தரி தந்தை வே. சங்கரலிங்கம் மும்பை நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் மேலாளராகச் சிறிதுகாலமும் மதுரையில் இரண்டு ஆண்டுகளும் வாழ்ந்தார். எனவே கனகசவுந்தரி தனது எட்டாம் வயது வரை மும்பையிலும் பத்தாம் வயது வரை மதுரையிலும் வாழ்ந்தார். பின்னர் இவரது குடும்பம் விருதுநகருக்குத் திரும்பி அவ்வூரின் தெற்குத் தேர் வீதியில் குடியேறியது. இதனால் இவர் தனது 16ஆம் வயது வரை விருதுநகரில் வாழ்ந்தார். கனக சவுந்தரி தனது தொடக்கக் கல்வியை மும்பை நகரில் பெற்றார். இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கினார். அப்பொழுது அக்கல்லூரியின் தமிழ்மன்றத்தின் செயலாளராக 1950 – 51ஆம் கல்வியாண்டிலும் தலைவராக 1951 – 52 ஆம் கல்வியாண்டிலும் பணியாற்றினார். மேலும்...


சூன் 2, 2013
Ilakkuvanar attai padam.jpg

சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909- செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாம் புதல்வராகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய இவரது தந்தையார் மறைவுக்குப் பின் திண்ணைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தன் பிள்ளை படிக்கவேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் இராசாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெயரை, இவரது தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். மேலும்...


MAC Chepauk stadium.jpg

2013 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 6 அல்லது 2013 ஐபிஎல்), ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 3, 2013 முதல் மே 26, 2013 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதன் துவக்க விழா ஏப்ரல் 2, 2013 அன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் அரங்கத்தில் நடந்தது. குளிர்பான நிறுவனமான பெப்சி புரக்கும் முதல் பருவமாக இது அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் பருவமாகவும் இது அமைந்துள்ளது. முந்தைய பருவ வெற்றியாளர்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள விளையாடினர். 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை புரவலராக இருந்த டிஎல்எப் நிறுவனத்திற்கு மாற்றாக பெப்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு 250 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த டிஎல்எப் நிறுவனம் சென்ற ஆண்டுடன் முடிவடைந்த தனது ஒப்பந்தப்புள்ளியை புதுப்பிக்காதநிலையில் பெப்சி நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 2017 வரை, 396.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மேலும்...


மே 26, 2013
MotherTeresa 090.jpg

அன்னை தெரேசா (1910-1997) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ச் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். மேலும்...


The Wire.jpg

தி வயர் ஒரு அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகத் தொடர். அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தைக் கதைக்களமாகக் கொண்டது. இதனை உருவாக்கி பெரும்பாலான பகுதிகளை எழுதியவர் எழுத்தாளர் டேவிட் சைமன். ஐந்து பருவங்களும் அறுபது அத்தியாயங்களும் கொண்ட இத்தொடரை அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் எச்பிஓ 2002-2008 காலகட்டத்தில் ஒளிபரப்பியது. தி வயரின் ஐந்து பருவங்களும் பால்டிமோர் நகரின் சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருள் வணிகம், நகரின் துறைமுகச் சூழல், நகர அரசும் நிர்வாக அமைப்புகளும், பள்ளிச் சூழல் மற்றும் அச்சு ஊடகச் சூழல் இவற்றில் ஏதேனும் ஒரு கூற்றினை மையமாகக் கொண்டவை. மேலோட்டமாகப் பார்க்கையில் தி வயர் ஒரு குற்ற நாடகமாகத் தெரிந்தாலும் அது உண்மையில் ஒரு அமெரிக்க நகரம், அதில் மக்கள் எப்படி வாழ்கின்றனர், தனிமனித வாழ்வில் அமைப்புகளின் தாக்கம், ஒருவர் எப்படி இறுதியில் தனது கொள்கைகளைக் கைவிட்டு தான் சார்ந்திருக்கும் அமைப்பின் பகுதியாகப் போகிறார் என்பன பற்றியானது என சைமன் கூறியுள்ளார். இத்தொடர் அமெரிக்க நகர வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிப்பதோடு பல சமூக-அரசியல் கூறுகளை ஆழமாக நோக்குகிறது. மேலும்...


மே 19, 2013

தமிழ் நாடக வரலாறு என்பது தமிழர் வளர்த்த நாடகக்கலையின் தோற்றம், ஏற்றம் மற்றும் வீழ்ச்சியினைக் குறிப்பதாகும் தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பதும் தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்த நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. மேலும்...


Bundesarchiv Bild 183-1985-0531-314, Torgau, Begegnung amerikanische-sowjetische Soldaten.jpg

ஐரோப்பிய களத்தின் மேற்குப் போர்முனை இரண்டாம் உலகப் போரில் டென்மார்க்,நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நாசி ஜெர்மனியின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாகப் பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான வான்படை சண்டையில் ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான நேச நாட்டு படைகளின் கடல்வழிப் படையெடுப்புடன் தொடங்கியது. ஏப்ரல் 30ல் முற்றுகையிடப்பட்ட பெர்லின் நகரில் ஹிட்லர் தனது பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் இரண்டாம் உலகப் போர் முற்றுப்பெற்றது.மேலும்...


மே 12, 2013
Gajalakshmi in Tanjore Painting.png

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது. சோழர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள், மற்றும் திருச்சி, மற்றும் மதுரை நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். பல நூற்றாண்டுகளாக நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய 'மூச்சிகள்' எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்தப் பாணி ஓவியங்கள் குலத் தொழிலாகப் படைக்கப்பட்டன. மேலும்...


Altitudes and orthic triangle SVG.svg

குத்துக்கோடு என்பது வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் ஒரு உச்சியிலிருந்து அந்த உச்சியின் எதிர்ப்பக்கத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் கோட்டிற்கு வரையப்படும் ஒரு செங்குத்துக்கோடாகும். எதிர்ப்பக்கத்தைக் கொண்டிருக்கும் கோடானது அப்பக்கத்தின் நீட்சி எனப்படும். இந்தப் பக்க நீட்டிப்பும் குத்துக்கோடும் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குத்துக்கோட்டின் அடி எனப்படும். குத்துக்கோடு வரையப்படும் முக்கோணத்தின் உச்சிக்கும் குத்துக்கோட்டின் அடிக்கும் இடையேயுள்ள தூரம் குத்துக்கோட்டின் நீளம் எனப்படும். குத்துக்கோட்டின் நீளம் முக்கோணத்தின் பரப்பைக் காண்பதற்குப் பயன்படுகிறது. முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துக்கோட்டின் நீளம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியளவாக முக்கோணத்தின் பரப்பு அமையும். முக்கோணவியல் சார்புகள் மூலம் குத்துக்கோட்டின் நீளமானது முக்கோணத்தின் பக்கநீளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு இருசமபக்க முக்கோணத்தின் சமமில்லாத மூன்றாவது பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் அடி, அப்பக்கத்தின் நடுப்புள்ளியாக அமையும். மேலும்...


மே 5, 2013
Thoranam.jpg

கீற்று முடைதல் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு கைத்தொழில்ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை (கிடுகு) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள் போன்றவற்றை அமைப்பார்கள். பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முடைதல் சொல்லுக்கு பின்னுதல், கட்டுதல், நிரைத்தல் என்ற பொருள்கள் உண்டு. கீற்று முடை தொழில் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தென் இந்தியாவில் இருந்திருக்கிறது. கிடுகினால் குடிசைகளும், பனை ஓலைகளினால் பறைகளும் கூரைகளும் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டை சுற்றி வேலிகள் அமைப்பதற்கும் கிடுகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை கிடுகு வேலி என்று கூறுவது வழக்கம். மேலும்...


வி. வி. வைரமுத்து (1924 - 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு வைரமுத்து மகனாகப் பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடங்கினார். பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் இசை மேதையாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். இலங்கை திரும்பியவருக்கு இரத்தினபுரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. நாடகக்கலையில் ஆர்வமுள்ள வைரமுத்து, அடிக்கடி விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்து மேடை நாடகங்களில் நடிப்பார். இதனால் இவரின் ஆசிரியர் வேலை பறி போனது. மேலும்...


ஏப்ரல் 28, 2013
Batticaloa Lagoon.jpg

மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்லடிப் பாலத்திலிருந்து ஒலியற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப்படுகின்றது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது. மேலும்...


Padi in India.jpg

பண்டையத் தமிழர் அளவை முறைகள் மிகவும் ஆய்ந்து நோக்கத்தக்கவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று சிலரும் சிறந்த அளவை முறைகளைப் பயன்படுத்தினர் என்றும் பல ஆய்வாவாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாவாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளியினாலான உழக்குகளும் படி என்ற அளவைக்கருவியும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. மேலும்...


ஏப்ரல் 21, 2013
Saluvanakuppam vel.jpg

சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர்.பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது.இந்தியப் பெருங்கடல் சுனாமியால் வெளிப்பட்ட ஒரு பாறையில் காணப்பட்டக் கல்வெட்டுக் குறிப்புகளால் இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடித்தனர். மேலும்...


John Grisham crop.jpg

ஜான் கிரிஷாம் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்பான புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை. மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், சட்டம் பயின்றார்; பத்தாண்டுகள் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1984-90 காலகட்டத்தில் மிஸ்சிசிப்பி மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1984 இல் எழுதத்தொடங்கிய அவரது முதல் புதினமான எ டைம் டூ கில் 1990 இல் வெளியானது. அவரது அடுத்த புதினம் தி ஃபிர்ம் (1991) ஏழு மில்லியன் படிகள் விற்பனையாகி அவருக்கு புகழைத் தேடித்தந்தது. அமெரிக்க சட்டம், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் அவரது புதினங்கள் உலகெங்கும் உள்ள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் 250 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் முதல் பதிப்பே இருபது லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மூவருள் கிரிஷாமும் ஒருவர் (மற்ற இருவர் - டாம் கிளான்சி மற்றும் ஜே. கே. ரௌலிங்). கிரிஷாம் எழுத்தாளர்களுக்கான பிரித்தானிய காலக்சி விருதினை வென்றுள்ளார். அவர் எழுதிய எட்டு புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும்...


ஏப்ரல் 14, 2013
Selangor state locator.svg

சிலாங்கூர் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் ஏசான்' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' எனும் அரபுமொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது. ஆக தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக ஷா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான். மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. சீனத் தளபதி செங் ஹோ 1400களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...


Descartes Circles.svg

டேக்கார்ட்டின் தேற்றம் அல்லது 'தெக்காட்டின் தேற்றம்' என்பதுவடிவவியலில் பிரெஞ்சு அறிஞர் ரெனே டேக்கார்ட்டின் பெயரில் வழங்கும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு நான்கு வட்டங்களின் உறவைப் பற்றிய தேற்றமாகும். இவற்றை முத்தமிடும் நான்கு வட்டங்கள் என்றும் கூறுவதுண்டு. ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு மூன்று வட்டங்கள் இருந்தால், மூன்று வட்டங்களையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு நான்காவது வட்டத்தை வரைய இத்தேற்றத்தைப் பயன்படுத்தலாம். தொடு வட்டங்களைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து வந்துள்ளார்கள். பண்டைய கிரேக்கத்தில் (கி.மு. 300களில்) வாழ்ந்த பெர்கா ஊரைச் சேர்ந்த 'பெர்கா அப்போலினியசு' என்பவர் தொடுகோடுகள் பற்றி ஒரு தனி நூலே எழுதியுள்ளார். ஆனால் அது இன்று கிடைக்கும் அவர் நூல்களில் ஒன்றாக இல்லை. பின்னர் 'ரெனே டேக்கார்ட்' கி.பி. 1643 இல் பொஃகீமிய இளவரசியார் எலிசபெத் என்பாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்தத் தொடுவட்டங்களைப் பற்றி ஒரு தீர்வை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். இதன் பயனாக இத்தேற்றத்திற்கு இவர் பெயர் வழங்கலாயிற்று. மேலும்...


ஏப்ரல் 7, 2013
Nobel Prize.png

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். மேலும்...


சக்தி வை. கோவிந்தன்.jpg

வை. கோவிந்தன் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் 'சக்தி அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் 'சக்தி வை. கோவிந்தன்' என அழைக்கப்படுகிறார். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் 'தமிழ்ப் பதிப்புலகின் தந்தை' எனப் புகழப்படுகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றியவர். 1935ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்து 'சக்தி' என்னும் அச்சகத்தையும் 1935ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 'சக்தி' என்னும் 'திங்கள் இதழையும்' தொடங்கினார். இந்த இதழ் 1950ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. சற்று இடைவெளிக்குப் பின்னர், 1953 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 1954ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது. சுத்தானந்த பாரதியாருக்குப் பின்னர், இவ்விதழின் ஆசிரியர்களாக தி. ஜ. ரங்கநாதன், சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜய பாஸ்கரன் ஆகியோர் பணியாற்றினர். மேலும்...


மார்ச்சு 31, 2013
Anonymous - Prise de la Bastille.jpg

பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) என்பது பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவத் திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் போன்றவை பரவின. இடதுசாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர். 1789 இல் பிரெஞ்சு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லோட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். மேலும்...


Noah's Ark Hong Kong.JPG

நோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பேரழிவு தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஆங்காங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமான கப்பலாகும். சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து பைபிளில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும். பழைய ஏற்பாட்டில், யெனிசசில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த நோவாவின் பேழை குறித்த குறிப்புகள் வருகின்றன. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டு பண்ணுகிறார். ஆனால் நீதி தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்றக் கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக் கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே இப்பேழை ஆகும். கடல் முகப்பில் ஐந்து நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. மேலும்...


மார்ச்சு 24, 2013
தமிழில் குமரிக்கண்டம்.jpg

குமரிக்கண்டம் என்னும் பெரும் நிலப்பகுதி இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். மேலும்...


அம்பிகா சீனிவாசன் மலேசியாவில் சமய, சட்ட, பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதியாளர். பொதுத் தேர்தல்களில் நியாயமான, நேர்மையான ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் பெர்சே பேரணி அமைப்பின் தலைவர். மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதைப் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் செவேலியர் விருதைப் பெற்றவர். அம்பிகா சீனிவாசன், மலேசியப் பெண்களிடம் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில், உலகின் சில நாடுகள் அவருக்கு விருதுகளையும், சாதனைச் சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்து உள்ளன. அம்பிகா சீனிவாசன் ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் சீனிவாச அய்யாங்காரின் பேத்தியாவார். இவருடைய சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல இலட்சம் மலேசியர்கள் இவர் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர். மேலும்...


மார்ச்சு 17, 2013
Terry Fox Denkmal.jpg

டெர்ரி பாக்ஸ் கனடாவைச் சேர்ந்த தடகள விளையாட்டாளர் மற்றும் புற்று நோய் ஆய்வு செயற்பாட்டாளர். இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்டத் தனது வலதுகால் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த ஓட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் புற்றுநோய் அவரது நுரையீரல் வரை பரவி, ஓட்டத்தைத் தொடங்கி 143 நாட்களில் (5373 கிமீ) ஓட்டத்தை நிறுத்தவும், அவரது மரணத்துக்கும் காரணமானது. எனினும் அவரது ஓட்ட முயற்சி உலக முழுவதும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1981 இல் நடந்த வருடாந்திர டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். தற்போது இந்த ஓட்டம் புற்றுநோய் ஆய்விற்காக நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஒருநாள் நன்கொடை திரட்டும் நிகழ்வாக உள்ளது. 500 மில்லியன் கனடிய டாலருக்கும் மேலான பணம் அவர் பெயரில் திரட்டப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முந்தின இரவு டெர்ரி பாக்ஸ், டிக் டிராம் என்பவரின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. புற்றுநோயின் பாதிப்பால் காலை இழந்த டிக் டிராம் நியூயார்க் நகரில் நெடுந்தொலைவு ஓட்டம் ஓடியவர். அக்கட்டுரையினால் உந்தப்பட்ட பாக்ஸ் 14 மாத பயிற்சி எடுத்துக் கொண்டார். மேலும்...


History of Indonesia.png

தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது. தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது. மேலும்...


மார்ச்சு 10, 2013
TamilNadu Logo.svg

திருவில்லிப்புத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும். திருவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. மேலும்...


Elephas maximus maximus.jpg

இலங்கை யானை என்பது அடையாளம் காணப்பட்ட மூன்று ஆசிய யானைத் துணை இனங்களில் ஒன்றும், இலங்கையை வாழ்விடமாகக் கொண்டதும் ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்பில் கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆக குறைவடைந்து காணப்படுகின்றது. இவ்வினம் வாழ்விட இழப்பு, சீர்கேட்டு நிலை, பிளவு என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.உடவளவை தேசியப் பூங்கா, யால தேசிய வனம், வில்பத்து தேசிய வனம், மின்னேரியா தேசிய வனம் ஆகியன இலங்கை யானைகளைக் காணக்கூடிய முக்கிய இடங்களாகும்.பொதுவாக ஆசிய யானைகள் அவற்றின் தும்பிக்கை முனையில் ஒன்றை விரல் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தமற்றும் காணப்படும். பெரிய விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள யானைகள் 150 கி.கி தாவரங்களை ஒரு நாளைய உணவாகக் கொள்ளும். இவற்றின் தோல் நிறம் இந்திய யானைகளைவிட கருமையாகவும், அதிக மங்கல் புள்ளிகள் காதுகளிலும், முகத்திலும், தும்பிக்கையிலும், வயிற்றிலும் காணப்படும். 7 வீதமான ஆண் யானைகள் மாத்திரமே தந்தத்தினையுடையன.மேலும்...


மார்ச்சு 3, 2013
Animal Farm - 1st edition.jpg

விலங்குப் பண்ணை என்பது ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ஒரு உருவகப் புதினம் ஆகும். இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், இரண்டாம் உலகப் போருக்கு முன், ஸ்டாலின் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலித்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது சோவியத் ஒன்றியத்தின் உளவுத்துறையுடன் ஆர்வெலுக்கு நேர்ந்த அனுபவங்கள், கம்யூனிசத்தின் தீய தாக்கங்களாக அவர் கருதியவை அவரை மாஸ்கோவிலிருந்து திணிக்கப்பட்ட ஸ்டாலினியத்துக்கு எதிராக அவரைத் திருப்பின. டைம் நாளிதழ் இந்தப் புத்தகத்தை சிறந்த 100 ஆங்கில மொழிப் புதினங்களில் (1923 முதல் 2005 வரை) ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது மேற்கத்திய உலகின் சிறந்த புத்தகங்கள் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.இப்புதினத்தில் வரும் விலங்கினக்கொள்கை சோவியத் ஒன்றியத்தின் எதிரொளியாக, குறிப்பாக 1910 முதல் 1940 வரையான கால கட்டத்தில் ரஷ்ய புரட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனை மாற்றங்களை சித்தரிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. மேலும்...


Area.svg

பரப்பளவு அல்லது பரப்பு என்பதுகணிதத்தில் இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு தளத்தில் எவ்வளவு பரவி உள்ளன என்பதைத் தருகின்ற ஒரு அளவையாகும். ஒரு வடிவத்தின் மாதிரியை குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு வளைகோட்டின் நீளம் மற்றும் முப்பரிமாணத்தில் ஒரு திண்மப்பொருளின் கனஅளவு ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம். ஒரு வடிவத்தின் பரப்பளவை நிலைத்த பரப்பளவு கொண்ட சதுரங்களின் பரப்பளவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். அனைத்துலக முறை அலகுகளில் பரப்பளவின் திட்ட அலகு (SI) சதுர மீட்டர் (மீ2) ஆகும். ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பினைக் குறிக்கிறது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதொரு வடிவத்தின் பரப்பளவு, ஒரு மீட்டர் பக்க நீளம் கொண்ட மூன்று சதுரங்களின் பரப்பளவுகளுக்குச் சமம். எந்தவொரு வடிவத்தின் பரப்பளவும் ஒரு மெய்யெண்ணாகும். மேலும்...


பிப்ரவரி 24, 2013
Ilayanpudur copper plates.jpg

பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும். இந்த செப்பேடுகளில் பாண்டியர் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள் என்றும் அகத்தியரை குல குருவாக கொண்டனர் எனவும் இந்துக் கடவுளான இந்திரனை பலமுறை தோற்கடித்தனர் என்றும் ஆழ்கடலே வற்றும் அளவில் வேல் எறிந்தனர் என்றும் தொன்மக்கதைகள் கூறப்பட்டுள்ளன. மேலும்...


Monensin2.png

சோடியம் ஒரு தனிமம் ஆகும். சோடாவிலிருந்து பெறப்பட்டதால் இது 'சோடியம்' எனப் பெயர் பெற்றது. இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியம் செறிவுற்றுள்ளது. இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புகளாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாக பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுகளிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது. 1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். மேலும்...


பிப்ரவரி 17, 2013
Kamarajar cropped.jpeg

காமராசர் (1903-1975) ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 1954 இல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராசர் அமைச்சரவையில் 8 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார். காமராசர் காலத்திலேயே பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவச் சோதனைக் கருவிகள் தொழிற்சாலை போன்ற பல திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்ற இவரது திட்டம் "காமராசர் திட்டம் என்றே அழைக்கப்பட்டது. மேலும்...


MAC pink lipstick (1).jpg

உதட்டுச் சாயம் என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள். உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில், வகைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் தங்களின் அன்றாட ஒப்பனையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். கிமு 3300 – கிமு 1300களிலேயே உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினர். சிந்துவெளி நாகரிகத்தின் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண விழாக்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர். மேலும்...


பிப்ரவரி 10, 2013
UEFA Euro 2012 logo.svg.png

யூரோ 2012 எனப்படும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளிடையே நடத்தப்பட்ட 14வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகும். போட்டியின் இறுதிக்கட்டச் சுற்றை 2012 சூன் 8 முதல் சூலை 1 வரை போலந்தும் உக்ரைனும் இணைந்து ஏற்று நடத்தின; இரு நாடுகளுக்கும் இந்தப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் 51 நாடுகளுக்கிடையே ஆகத்து 2010 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்று வந்தன. ஏற்று நடத்தும் போலந்து, உக்ரைனைத் தவிர 14 நாடுகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.யூரோ 2012 போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைனில் நடத்துவதற்கு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறுச் சிக்கல்களால் இந்த இரு நாடுகளும் இப்போட்டிகளை நடத்துமா என்ற கேள்விக்குறி பலமுறை எழுந்தது. மேலும்...


Tr icsi 03.jpg

மலட்டுத்தன்மை சிகிச்சை எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும்போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சை அல்லது மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பமாகும். இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும். உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்று மூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.மேலும்...


பிப்ரவரி 3, 2013
Aerial view of Nauru.jpg

நவூரு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடும், உலகின் மிகச்சிறிய குடியரசு நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபாடானது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளன. அரசாங்கமோ அல்லது அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் சொந்தக்காரருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது. மேலும்...


Simpson's paradox continuous.svg

இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண் என்பது புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கணிப்பிலும் இருவேறு குழுக்களின் இயைபுகள் அவற்றை இணைத்துப் பார்க்கையில் தலைகீழாகும் விளைவாகும். இதனை சிம்புசனின் தோற்றமுரண் என்றும் வழங்குவர். இவ்விளைவு சமூகவியலிலும் மருத்துவ ஆய்வுகளிலும் அடிக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் தேர்தலில் ஓர் அணி மொத்த வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக வந்தும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறும் நிலை இருப்பதுண்டு. அந்த அணி வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று சில இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும். அதே போன்ற வேறு சில பெரிய தொகுதிகளில் சிறிய வேறுபாட்டில் தோல்வியையும் கண்டிருப்பார்கள். ஆனால் மாற்று அணியினர் பல தொகுதிகளிலும் சிறிய வேறுபாட்டுடன் வெற்றி பெற்றிருப்பார்கள். அதனால் ஒப்பீட்டளவில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூடுதல் தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள். இவ்விளைவினால்தான் கடைசிநேரம் முடிவு செய்யும் கட்சிசாரா வாக்காளர்களின் வாக்குகளும் சில சிறு கட்சிகளின் வாக்குகளும் முதன்மை பெறுகின்றன. மேலும்...


ஜனவரி 27, 2013
Kasupillai.jpg

கா. சு. பிள்ளை (1888-1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறிய இவர். 1908ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் கலை உறுப்பினர் தேர்வு மற்றும் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகவும் வெற்றி பெற்றார். வரலாறு, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், சட்ட முதுவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சைவக்குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார். மேலும்....


15lakhs years ago.jpg

தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தமிழ்கத்தில் கற்கால ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் இராபர்ட் புருசு ஃபூட் ஆவார். இதுவரை செய்யப்பட்ட அகழாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்காலக்கட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பழங்கற்காலம் (கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 10,000 வரை) இருந்த போது மானிடர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது. இடைக்கற்காலத்திலேயே தமிழக மாந்தர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். கற்காலத்தின் கடைசிக்கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு.2000 வரை நிலவியது. அதன் பிறகு பெருங்கற்சமூகம், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம் தமிழகத்தில் வழக்கிழந்தது. தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போது என இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. அதன் காரணம்... மேலும்....


ஜனவரி 20, 2013
Lord Muruga Batu Caves.jpg

பத்துமலை என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குடைவரைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரில் இருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும்...


Electromagnetism.svg

மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இதில் மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். தானியங்கிகள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகவும் கைத்தொழிற் துறையில் அதிக எடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். மேலும்....


ஜனவரி 13, 2013
Hand loom in Devikapuram.jpg

தமிழர் நெசவுக்கலை என்பது வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை ஆகும். பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. மேலும்...


Determinant parallelepiped.svg

அணிக்கோவை என்பதுகணிதத்தில், நேரியல் இயற்கணிதப் பிரிவில் ஒவ்வொரு சதுர அணியுடனும் இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும். அச்சதுர அணியின் உறுப்புகள் ஒரு நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் குணகங்களாக இருக்கும்போது அந்த அணியின் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சமன்பாடுகளின் தீர்வு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதேபோல அச்சதுர அணி ஒரு நேரியல் உருமாற்றத்தைக் குறிக்கும்போது அதன் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே அந்த உருமாற்றத்திற்கு நேர்மாறு உருமாற்றம் இருக்க முடியும். மெய்யெண் உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணியின் அணிக்கோவை மதிப்பின் உள்ளுணர்வான விளக்கத்தைப் பின்வருமாறு தரலாம். ஒரு அணிக்கோவையின் தனி மதிப்பானது, அதன் அணி குறிப்பிடும் உருமாற்றத்தினால் மாறும் பரப்பின் (கன அளவு) பெருக்கத்தின் (குறுக்கம்) அளவைக் குறிக்கிறது. மேலும்...


ஜனவரி 6, 2013
VTSambanthan.jpg

வீ. தி. சம்பந்தன் என்று அறியப்படும் துன் வீராசாமி திருஞான சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். மலேசிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவியை அலங்கரித்தவர். மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். இந்தியாவின் ’பாரத ரத்னா’ விருதிற்கு இணையான, மலேசியாவின் உயரிய, துன் விருதைப் பெற்ற முதல் தமிழர். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய தேசிய இயக்கத்தின் கொளகைகளினால் ஈர்க்கப் பட்டார். சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்றோரின் அரசியல் கொளகைகளில் ஈடுபாடு கொண்டு இந்திய தேசிய காங்கிரசு இளைஞர் அணியில், இணைந்து தீவிரமாகச் செயல் பட்டார். மேலும்.....


Punjab map.svg

பஞ்சாப் பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி. சிந்துவின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ், மற்றும் பியாஸ் ஆகிய “ஐந்து நதிகள்” பாய்வதால் இப்பகுதி பஞ்சாப் என அழைக்கப்படுகிறது.பஞ்சாப் ஒரு நெடிய வரலாற்றையும் செறிந்த பண்பாட்டு மரபையும் கொண்டுள்ளது. பஞ்சாப் மக்கள் பஞ்சாபிகள் என அழைக்கப்படுகின்றனர், அவர்களது மொழி பஞ்சாபி. பஞ்சாப் பகுதியின் 58% பாகிஸ்தானிலும் மீதமுள்ள 42% இந்திய குடியரசிலும் உள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களால் நிரம்பியிருக்கும் இந்தப் பகுதியில் சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அரபு நாட்டினர், துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், பலோசிகள், இந்துக்கள் மற்றும் பிரிட்டிசார் ஆகியோர் வசிக்கின்றனர். மேலும்....,


முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்