விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 24, 2011
Ushakov Nerukotvorniy.jpg

திருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். கிரேக்க மொழியில் இது εἰκών என அழைக்கப்படுகிறது. மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன. கிறித்தவ கீழைத் திருச்சபைத் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், இயேசு, அன்னை மரியா, புனிதர்கள், வானதூதர்கள், திருச்சிலுவை போன்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு. முப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. யூத மரபைப் பின்பற்றி, கடவுளுக்குக் கையாலான சிலைகளை உருவாக்கலாகாது என்னும் எண்ணம் அக்காலத்தில் நிலவியது. தம்மைச் சூழ்ந்திருந்த கிரேக்க-உரோமைய சமயங்களிலிருந்து தங்கள் சமயத்தை வேறுபடுத்திக் காட்டவும் கிறித்தவர் இவ்வாறு செய்தனர். மேலும்..


Eagle nebula pillars.jpg

விண்மீன்கள் உருவாக்கம் என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஒரு அமைப்பைப் பெறுதல் ஆகும். நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வாயுக்கள் என்பன மூலக்கூற்று முகில்களில் காணப்படுகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுட்காலமும் பெரிய விண்மீன்கள் கூடிய ஆயுட்காலமும் கொண்டுள்ளன. சுருள் விண்மீன் திரள் போன்ற பால் வழியில் விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே ஐதரசன், ஈலியம் போன்ற வளிமங்களைக் கொண்டுள்ளன, மிகவும் அடர்த்தியாக உள்ள இத்தகைய நிலை வான்புகையுரு என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன. மேலும்...


டிசம்பர் 18, 2011

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். பெண்களில் மலட்டுத்தன்மைக்கு பலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாக இருக்கும் வேளையில், கருக்கட்டல் செயல்முறை கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாக கருக்கட்டல் நிகழ்த்தப்படும். இம்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதனால், விலை குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். இம்முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும்..


Raja of Bobbilli.jpg

பொபிலி அரசர் (1901–1978) 1930களில் நீதிக்கட்சியின் தலைவராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் இருந்தவர். பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், ஆந்திர சடடமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள பொபிலி அரசகுலத்தில் பிறந்தார். இவரது தந்தை பொபிலியின் ஜமீனாக இருந்தவர். 1921-ல் தந்தை மறைந்த பின் 1921 இல் பொபிலியின் பதின்மூன்றாவது அரசராக அறிவிக்கப்பட்டார். 1930 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீதிக்கட்சித் தலைவரும், சென்னை முதல்வருமான முனுசாமி நாயுடுக்கு எதிராக கட்சிக்குள் போர்க் கொடி தூக்கினார். அமைச்சர் பதவி கிட்டாத ஜமீந்தார்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 1932 அக்டோபரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் 5 இல் சென்னை மாகாண முதல்வரானார். 1937 வரை நீடித்த இவரது ஆட்சிக் காலத்தில், நீதிக்கட்சி உட்கட்சிப் பூசல்களால் நலிந்து மக்களின் ஆதரவையும் இழந்து அக்காலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வியடைந்தது. மேலும்...


டிசம்பர் 11, 2011
Spinning top - prague.jpg

பம்பரம் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். உலகின் பல பகுதிகளிலும் இது விளையாடப்படுகிறது. பம்பரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம் மற்றும் கந்தபுராணம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பரம் தயாரித்தல் என்பது ஒரு கலையாகும். பம்பரம் பொதுவாக கொய்யா மரக்கட்டை அல்லது கருவேல மரக்கடையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மரக்கட்டைகளை முதலில் செதுக்க வேண்டும். பின்பு அதனுடன் ஆணியை இணைக்க வேண்டும். இதைச் சுழற்ற ஒரு மீட்டர் நீளமுள்ள கயிறு பயன்படுத்தப்படுகிறது. பம்பரம் மற்றும் கயிறை பயன்படுத்தி விளையாட்டைத் துவங்க வேண்டும். பம்பர விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் 1950-ஆம் ஆண்டு வரையில் பரவலாக விளையாடப்பட்டது. இது ஒரு கைத்திற விளையாட்டு. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என 3 வகை உண்டு. தரையில் அல்லது உள்ளங்கையில் பம்பரத்தை யார் அதிக நேரம் சுழலச் செய்கிறார்கள் என்று பார்த்துப் பழம் சொல்வது ஓயாக்கட்டை. பட்டவனின் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வட்டத்திலிருந்து அகற்றி ஒரு எல்லை-வரைச் சுற்றிவிடும் பம்பரத்தாலேயே அகற்றிக்கொண்டு சென்று, பட்டவன் பம்பரத்தை உடைத்துவிடுவது உடைத்த-கட்டை. வட்டத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வெளியேற்றுவது பம்பரக்குத்து. மேலும்..


Janaki Athi Nahappan2.jpg

ஜானகி ஆதி நாகப்பன் (பிறப்பு: 1925) மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயாவின் விடுதலைக்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா-இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீரராகக் களம் கண்டவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண். 1946 இல் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரசை உருவாக்கினார். ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980-1986 வரை ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்தான். மேலும்...


டிசம்பர் 4, 2011
Game Ammanai.jpg

அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப் பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, மன்னன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடுவர். இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியை கூறிக் காயை வீசிப் பிடித்து “அம்மானை“ என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி “அம்மானை“ என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து “அம்மானை“ என்பாள். இதுவே “அம்மானை“ விளையாடும் முறையாகும். மேலும்..


D. R. Kaprekar.gif

கப்ரேக்கர் (1905-1986), மகாராட்டிரத்தைச் சேர்ந்த கணிதவியலாளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக எண்கள்பால் ஈடுபாடு கொண்டு கணிதத்தில் ஆய்வு செய்தவர். எண்ணியலில் அவர் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். கப்ரேக்கர் மாறிலி, கப்ரேக்கர் எண் ஆகியவை அவரது கண்டறிதல்களே. முதுகலைப் பட்டம் பெறாதிருந்தும் அவர் எண்ணியலில் பல கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார்; அவரது பல எண்ணியல் வித்தைகள் விளையாட்டுக் கணிதத்தில் இன்று பயன்படுத்தப்படுகின்றன. பள்ளியில் அவர் ஒரு சராசரி மாணவனாக இருந்த போதிலும் எண்கள் உலகில் காணப்படும் எண்ணிலா விந்தைகளைக் கண்டு மனதைப் பறிகொடுத்து சிந்திக்கவும் தொடங்கினார். எண்களின் பலப் பல சிறப்பியல்புகளைத் தானே முனைந்து கண்டு பிடிக்கத் துவங்கினார். பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டே எண்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டர். தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் கழகக் கூட்டங்களிலும். இந்திய கணிதவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டங்களிலும். நடைபெறும் கருத்தரங்குகளிலும் வெளிப்படுத்தினார். மேலும்...


நவம்பர் 27, 2011
Jelly cc11.jpg

சொறிமுட்டை என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையான தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டும் இருக்கின்றன. மேலும்..


Rhenius.jpg

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (1790-1838) செருமனியில் பிறந்து தமிழ்நாட்டில் கிறித்தவ மதப் போதகராகப் பணியாற்றியவர். சமயப் பணியுடன் தமிழ் இலக்கியப் பங்களிப்பும் செய்தவர். சாதீயப் பாகுபாடுகளைப் போக்கி சமத்துவக் குடியிருப்புகளை உருவாக்கியதுடன் பெண்கள் கல்விக்கு முன்னின்று பள்ளிகளைத் தொடங்கியவர். சமூகத்திற்கு உதவும் பல சங்கங்களைத் தோற்றுவித்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த இவர் 1814 இல் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். செருமானியப் போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களை ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது. மேலும்...


நவம்பர் 20, 2011
Al-Qarawiyyin University, Fes, Morocco - Var 132.jpg

அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1947 இற் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டதாயினும் இதன் தொடக்கம் பொ.கா. 859 ஆம் ஆண்டிலாகும். அப்போது இது ஒரு மத்ரசாவாக, அதாவது பள்ளிவாசற் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டது. கரவிய்யீன் மத்ரசா முஸ்லிம் உலகின் முதன்மையான ஆன்மீகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதுடன் இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது. நடுக் காலத்தின் போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் இந்த மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி சில காலம் இங்கு பயின்றதாக அல்லது பணியாற்றியதாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக மட்டத்திலான பட்டங்களை வழங்குவனவும் பன்னெடுங்காலமாகத் தொடர்ச்சியாக இயங்குவனவுமான நிறுவனங்களில் இதுவே உலகிலேயே மிகவும் பழைமையானது எனக் கின்னசு உலக சாதனை நூல் சான்று வழங்கியுள்ளது. மேலும்..


Clarke sm.jpg

சேர் ஆர்தர் சி. கிளார்க் (1917–2008) பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார். 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி என்ற புதினமும் 1968 இல் அதே பெயரில் இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் இவரது இந்த தொலைநோக்குக்கு, மிகத் தெள்ளத் தெளிவான சான்றுகளாகும். புவியில் இருந்து பார்க்கும் பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று அறிவியல் புகழ்பெற்ற கருத்தை இவர் 1945 இல் முன்வைத்தார். 1962-ல் இவர் போலியோ நோயினால் தாக்குண்டார். தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையில் கொழும்பைத் தேர்ந்தெடுத்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார். மேலும்...


நவம்பர் 13, 2011
Fort St. George, Chennai 2.jpg

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பது சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில் இருந்த மேலவையைக் குறிக்கும். பிரித்தானிய அரசு, இந்தியக் கவுன்சில் சட்டம் (1861) ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையை 1861இல் உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்குப் பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்து வந்தது. 1920-1937இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை வழக்கில் இருந்தபோது மாகாணத்தின் ஓரங்க சட்டமன்றமாக இது செயல்பட்டது. 1937இல் மாநிலத் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறிய போது அதன் மேலவையாகச் செயல்பட்டது. 1950இல் இந்தியா குடியரசாகிய போது உருவான சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகவே தொடர்ந்தது. 1986இல் எம். ஜி. இராமச்சந்திரனின் ஆட்சியில் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது. 2010இல் இந்த அவையை மீண்டும் தோற்றுவிக்க இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அதற்கான திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் 2011ல் இம்மீட்டுருவாக்க முயற்சி தற்போதைய ஜெ. ஜெயலலிதா அரசால் கைவிடப்பட்டது. மேலும்..


Carl von Linné.jpg

கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன. மேலும்...


நவம்பர் 6, 2011
Durio kutej F 070203 ime.jpg

முள்நாறிப் பழம் என்பது கெனஸ் டுரியோ என்கின்ற மரத்தில் இருந்து விளைகின்ற ஒரு பழம். இப்பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதிலுள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியில் இப்பழத்தை டுரியான் என்றழைப்பார்கள். முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும். இவை தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளைகின்றது. மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாக கிடைப்பதுண்டு. சராசரி ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முற்களை தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொருத் தன்மையுமுண்டு. அதாவது அப்பழத்தின் வாடை. மேலும்...


த. பிரகாசம் (1872–1957) இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் பிரபல வழக்கறிஞரும் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவான போது அதன் முதலாவது முதலமைச்சராகப் பணியாற்றினார். 1921 இல் இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுராஜ்யம் என்ற தேசியவாத நாளிதழைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். 1926 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 இல் சைமன் கமிஷனுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தீரத்துடன் காவல்துறை அடக்குமுறைகளை எதிர் கொண்டதால், "ஆந்திர கேசரி" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1930 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மாநில சுயாட்சியின் கீழ் 1946 இல் நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் காங்கிரசு மீண்டும் வெற்றி பெற்றது. தெலுங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரகாசம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும்...


அக்டோபர் 30, 2011
Jaguar head shot.jpg

உயிரியலில் பல்லுருத்தோற்றம் எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில், அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் ஆகும். அதாவது ஓர் இனத்தின் இனத்தொகையில், அல்லது அவ்வினம் வாழும் சேர்ந்திருப்பில் அல்லது சமூகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே, பாலின வேறுபாடுகள் தவிர்த்த, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய, தொடரற்ற, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் ஆகும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே வாழ்விடத்தை, ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற இனச்சேர்க்கை செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்ற பண்பை உடைய ஒரு இனமாக வரையறுக்கப்படும். பல்லுருத்தோற்றம் இயற்கையில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, உயிரியற் பல்வகைமை, மரபியல் வேறுபாடு, இசைவாக்கம் என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட சூழலில் ஓர் இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும். இதனால் இந்த பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல சந்ததிகளூடாகப் பேணப்படும். மேலும்...


Orang Asli in Malaysia.jpg

மலேசியப் பழங்குடியினர் அல்லது "ஒராங் அஸ்லி" எனப்படுவோர் தீபகற்ப மலேசியாவின் பூர்வீகக் குடியினர். கிபி 1ம் நூற்றாண்டில் முதல் இந்திய வணிகர்கள் வந்து இறங்கும் வரை அஸ்லி பழங்குடியினர் அவர்கள் இருந்த இடத்திலே வசித்தனர். உட்புறப் பகுதியில் வாழ்ந்த அவர்கள், பிசின் அல்லது களிம்பு, நறுமணக் கட்டைகள், தோகைகள் முதலியவற்றை மாற்றாக உப்பு, துணிமணி மற்றும் இரும்புக் கருவிகள் பண்டமாற்று செய்தனர். மலாய் ஆட்சியாளர் தோற்றத்தின் போது அஸ்லி பழங்குடி அடிமைகளை பண்டமாற்றத்திற்கு பயன்படுத்தினர். மேலும் வெளி உலகத் தொடர்பைத் தடுப்பதற்கு உட்புறப் பகுதிக்கு குடியேறினர். ஆங்கிலேயரின் காலனித்துவ வருகையால் மேலும் அவர்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை கிறித்தவ மதபோதர்களும் மனித இன ஆராய்ச்சியாளர்களும் குறி வைத்தனர். 1948 முதல் 1960 வரையிலான மலேசிய அவசர காலத்தின் போது அஸ்லி பழங்குடியினர் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்காக இருந்தனர். அவர்கள் உதவியுடன் மலாய் இராணுவம் கம்யூனிசக் கலகக்காரர்களை தோற்கடித்தது. மேலும்...


அக்டோபர் 23, 2011
Zzzou.jpg

ஓஊ என்பது ஹவாய் தீவுகளுக்குத் தனிச் சிறப்பான மிக அருகிவிட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம். ஓஊ பறவை 7.1 அங் நீளமான, பெரிய, சதைப் பற்றுள்ள ஒரு பறவையாகும். இவற்றின் ஆண் பறவைகள் வெளிச்சமான மஞ்சள் நிறத் தலையையும் கடும் பச்சை நிற முதுகுப் பகுதியையும் இளம் பச்சை நிற வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும். இவற்றின் பெண் பறவைகள் ஆண் பறவைகளிலும் பார்க்க சற்று நிறங் குறைந்தும் தலை இளம் பச்சை நிறத்திலமைந்தும் இருக்கும். ஓஊ பறவையின் ஒலி தொடர்ச்சியாகக் கூடிக் குறைவதால் தனியான இசை கொண்ட இனிய பாடல் போன்று தோன்றும். ஓஊ பறவையின் தனித் தன்மையதான சொண்டு, இப்பறவையினம் விரும்பி உட்கொள்ளும் ஈஈ பழங்களை உண்பதற்குத் தகைவுள்ளதாக அமைந்துள்ளது. அப்பழங்கள் காய்க்காத காலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வேறு உணவுகளைத் தேடச் சென்றுவிடும். இது பல்வேறு இடங்களிலும் காலத்துக்குக் காலம் கிடைக்கும் பழங்களைத் தேடி நெடுந் தொலைவு பறந்து செல்லும் நாடோடிப் பறவையினமாகும். மேலும்...


சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1874-1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். 1921 இல் சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார். யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த இவர் கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். இலங்கைக்கு ஆணிலப்பதம் எனப்படும் டொமினியன் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் 1931 அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். மேலும்...


அக்டோபர் 16, 2011

கம்பார் நகரம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ளது. மலேசியாவில் மிகவும் விரைந்து வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. 2007 மே மாதம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கம்பார் பண்டார் பாரு எனும் புதிய துணை நகரத்தில் 20,000 மாணவர்கள் உயர் படிப்புகளைப் படித்து வருகின்றனர். கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் உள்ளன. இந்நகரம் 1887 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஈயக் கனிமத்திற்கு பெயர் போன கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கிறது. கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப் பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. 1941-1945 காலப்பகுதியில் சப்பானியர்கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இங்குதான் வலாற்றுப் புகழ் பெற்ற "கம்பார் போர்" நடந்ததுமேலும்...


Nikolaus Kopernikus.jpg

நிக்கோலாசு கோப்பர்னிக்கசு (1473-1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். புரட்சிகரமான சூரியமையக் கொள்கையை வகுத்துத் தந்து வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமி யை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானவியல் அறிஞரான டாலமி கி.பி. 140-ல் புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிஸ்ட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால் இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது என அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் போலந்தில் பிறந்தவர். சிலர் இவர், செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்று கருதுகிறார்கள். மேலும்...


அக்டோபர் 9, 2011
Aspergillus.gif

அஃப்ளாடாக்சின்கள் எனப்படுபவை ஆஸ்பெர்ஜிலஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த சில இன பூஞ்சைகளால் உருவாக்கப்பட்டு, இயற்கையில் காணப்படும் ஒருவகை பூஞ்சை நஞ்சுகள் ஆகும். இவ்வகை நஞ்சுகளை உருவாக்கும் முக்கியமான இனங்கள், ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் ஆகும். இந்தபூஞ்சை நஞ்சுகள் இதுவரை கண்டறியப்பட்ட நஞ்சுத் தன்மைக் கொண்ட பொருட்களுள் மிகவும் சக்திவாய்ந்த புற்றுநோய் உருவாக்கும் பொருட்களாக அறியப்படுகின்றது. இவை உடலுக்குள் நுழைந்தபின் கல்லீரலில் நிகழும் வளர்சிதைமாற்றம் காரணமாக, வினைபுரியும் ஈபாக்சைடு இடையினங்களாகவோ அல்லது ஹைட்ராக்சில் ஏற்றப்பட்டு குறைந்த தீங்கு விளைவிக்கும் அஃப்ளாடாக்சின் M1 ஆகவோ மாற்றம் பெறுகின்றன. மேலும்...


Francisbyelgreco.jpg

அசிசியின் புனித பிரான்சிசு (1182–1226) ஒரு கிறித்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இவர் திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் குருப்பட்டம் பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வு கொண்டு அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை. பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா நகருக்கு எதிராக அசிசி நகர் போர் தொடுத்தபோது, இருபது வயதே நிறைந்த இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவறச் சபையைத் தொடங்கினார். மேலும்...


அக்டோபர் 2, 2011
Vijayawardss.gif

விஜய் விருதுகள் என்பவை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளாகும். இவை 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்த விருதுகளில் பொதுமக்கள் வாக்குகளின் மூலம் தங்களுக்கு பிடித்தவர்களை 6 திரைப்படத் துறைகளில் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. முதல் விஜய் விருதுகள் விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் அனைத்தும் 2005ஆம் வருடத்துக்கு மட்டும் கொடுக்கப்படாமல், 2005 வரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் சேர்த்து கணக்கிட்டு கொடுக்கப்பட்டது. இந்த முறை அடுத்து வந்த விழாக்களில் மாற்றியமைக்கப்பட்டதன் படி தற்போது 32 விருதுகள் அந்தந்த வருடத்தில் வந்த திரைப்படங்களுக்காக கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்...


KNatesaIyer.jpg

கோ. நடேசையர் (1887-1947) தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையகத்தில் குடியேறிய தமிழறிஞரும் பதிப்பாளரும் அரசியல்வாதியும் ஆவார். 1924 முதல் இலங்கை சட்டசபையிலும், பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர். 1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தகமித்திரன் என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார். அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களை உருவாக்கினார். அச்சங்கத்தின் கிளை ஒன்றைத் தோற்றுவிக்க இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் சென்றவர், அங்கே மலைநாட்டில் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாக நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் கொதித்து, இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கினார். அங்கு தேசநேசன் உட்படப் பல பத்திரிகைகளை நடாத்தினார். இலங்கை தேசிய காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டார். 11 ஆண்டுகள் பிரித்தானிய இலங்கையின் சட்டசபையில் உறுப்பினராக இருந்தார். மேலும்...


செப்டம்பர் 25, 2011
Justice Party 1920s.jpg

நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. சென்னையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாக 1917ம் ஆண்டு டி. எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் இக்கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920-37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாக செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார் கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். மேலும்...


Infant Jesus of Prague.jpg

பிராகா நகர் குழந்தை இயேசு என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசின் பிராகாவில் உள்ள வெற்றி அன்னையின் ஆலயத்தில் அமைந்துள்ளது. 1628ல் இளவரசி பொலிக்சேனா பிராகா கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதில் இருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்த சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்த சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது. இன்றளவும், பிராகாவின் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகாவின் குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன. மேலும்...


செப்டம்பர் 18, 2011
Onapookkalam.jpg

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா. கொல்லவருசம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி இது கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாக கிபி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபலி என்ற கேரள மன்னன் வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணம் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். மேலும்...


Triangle.NinePointCircle.svg

வடிவவியலில் எந்தவொரு முக்கோணத்துக்கும் ஒன்பது-புள்ளி வட்டம் வரைய முடியும். முக்கோணத்தின் ஒன்பது முக்கியமான புள்ளிகளின் வழியே செல்வதால் இந்த வட்டம் ஒன்பது-புள்ளி வட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நடுப்புள்ளிகள், மூன்று குத்துக்கோடுகளின் அடிகள், ஒவ்வொரு உச்சியையும் அதன் செங்குத்து மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகியன இந்தப் புள்ளிகளாகும். ஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது, அம்முக்கோணத்தின் மூன்று வெளிவட்டங்களை வெளிப்புறமாகவும் உள்வட்டத்தை உட்புறமாகவும் தொடும் எனவும் 1822 -ல் கார்ல் ஃபோயர்பாக் கண்டு பிடித்தார். இக்கண்டுபிடிப்பு ஃபோயர்பாக் தேற்றம் என அழைக்கப்படுகிறது. ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரமானது, அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காகும். மேலும்...


செப்டம்பர் 11, 2011
Aceh Sultanate en.svg

அச்சே சுல்தானகம் இன்றைய இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் வடகோடி மற்றும் அதனை அண்டிய சிறு தீவுகளில் அமைந்துள்ள அச்சே மாநிலத்தில் அமைந்திருந்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பிராந்தியத்தின் வலு மிக்க அரசாகத் திகழ்ந்தது. அதன் தலைநகராக குதராஜா எனப்பட்ட இன்றைய பண்டா அச்சே திகழ்ந்தது. அது மிக்க வன்மையாகத் திகழ்ந்த காலத்தில் மலாக்கா நீரிணையூடான வர்த்தகப் போட்டி மற்றும் அதனூடான மிளகு மற்றும் வெள்ளீய ஏற்றுமதி என்பவற்றிலான ஆதிக்கத் தேவை காரணமாக மலாயத் தீபகற்கத்தில் திகழ்ந்த ஜொகோர் சுல்தானகத்தினதும் மலாக்காவில் அரசு செலுத்திய போர்த்துக்கேயரினதும் மிகப் பெரும் எதிரியாக இருந்ததுடன் காலத்துக்குக் காலம் அதில் வெற்றியீட்டியும் வந்தது. அச்சே சுல்தானகம் அதன் இராணுவ வலிமை காரணமாக மட்டுமன்றி அதில் காணப்பட்ட இசுலாமிய அறிவு வளங்கள் மற்றும் வணிக வெற்றிகள் என்பவற்றுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அச்சே சுல்தானகத்தின் தோற்றம் 1471 இல் வியட்நாமியரால் சம்பா இராச்சியத்தின் தலைநகர் அழிக்கப்பட்ட பின்னர் அச்சே பகுதியில் தலைநகரை அமைத்து ஆட்சி செய்வதற்காக சம்பாவின் அரசரால் அவரது மகனை அனுப்பி வைத்ததுடன் தொடங்குகிறது. மேலும்...


Ziegenbalg.png

சீகன்பால்க் (1682-1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது சீர்திருத்தத் திருச்சபையின் மத போதகர் ஆவர். டென்மார்க் மன்னர், டேனியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் குடியேற்றத்துக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டு ஹென்ரிச் புளுட்ச்சோ என்பவருடன் 1706-இல் தரங்கம்பாடியை வந்தடைந்தார். சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். போர்ச்சுக்கீசத்தையும், தமிழையும் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்தார். பால்க்சீகன் 1708 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1714 இல் சீகன்பால்குவினால் விவிலியம் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். மேலும்...


செப்டம்பர் 4, 2011
King alcohol.jpg

குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது. குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூக சூழல், மனத்தகைவு, மன நலம், மரபியல் முற்சார்பு, வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும் பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது. மேலும்...


Coin of Ukraine Sukhomlin R.jpg

வசீலி சுகோம்லின்சுக்கி (1918–1970) உக்ரைனில் வாழ்ந்த ஒரு கல்வியாளர். இவர் உக்ரைன் நாட்டிலுள்ள சுமார் 3000 மக்கள் வசித்து வந்த பாவ்லிச்சு என்ற சிற்றூரிலுள்ள பள்ளியின் தலைமையாசிரியராக இருபது ஆண்டுகள் இருந்தார். சிறந்த பண்பாளராக ஒரு மாணவரை உருவாக்குவதில் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார் வசீலி. இன்றும் கூட அவர் தொடங்கிய கல்விச் சீர்திருத்தங்களைக் காண பாவ்லிச்சு பள்ளிக்கு பல இடங்களிலிருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். முழுமையான கல்விக்கு உள்ளகமாக அறக்கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். அறக்கல்வி என்று அவர் வரையறுத்தது, இயற்கையின் அழகைத் துய்க்கும் அளவிற்கு மாணவர்களை நுட்பமானவர்களாக்குதல், கலை மற்றும் மனித உறவுகள் குறித்த நுட்பங்களை அறியச்செய்தல் ஆகியவையே. ஒரு மாணவருக்கு உடல்-சார், அறிவு-சார் வளர்ச்சியோடு தொழில்-சார் அறிவும் தேவை என்று திடமாக நம்பினார். அவரது கல்விமுறையில் மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும்...


ஆகத்து 28, 2011
Tamil-alphabet-அஅ.svg

என்பது தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "அகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆனா" என்பது வழக்கம். தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும். தமிழில் உள்ள சுட்டெழுத்துக்கள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும். எ+கா: அப்பெண் (அ + பெண்). மேலும்...


TodaijiKokuzo.jpg

பௌத்த சித்தாந்தத்தில், போதிசத்துவர் என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் போதிசத்துவர் என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றனர். கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னைப் போதுசத்துவர் என்றே அழைத்துக்கொண்டார். மகாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள். மகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர். மேலும்...


ஆகத்து 21, 2011
Mimus polyglottus1 cropped.png

டு கில் எ மாக்கிங் பேர்ட் 1960-ல் ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுதி வெளிவந்த ஒரு புனைவுப் புதினம். மிகவும் பிரபலமடைந்த இப்புதினம் புலிட்சர் பரிசு பெற்றது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது. புதினத்தை எழுதி முடிக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. லீ எழுதி வெளியான புதினம் இது ஒன்று மட்டும்தான். இக்கதையின் கருத்தும் கதாபாத்திரங்களும் லீ சிறுவயதில் வாழ்ந்த ஊரில் வசித்த மனிதர்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் களமாகக் கொண்டுள்ளது. கதை முழுவதும் 6 வயது சிறுமியான ஸ்கெளட் தனது அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவளது தந்தையின் அன்பும் அரவணைப்பும், அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறைக்கு வரும் நண்பனோடு விளையாடிய விளையாட்டுக்கள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை அழகாக விவரிக்கிறது. இக்கதையில் அக்காலத்திய இனப்பாகுபாட்டினால் நடந்த கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டாலும் கதை சொல்லும் முறையில் நகைச்சுவை இழையோடுகிறது. மேலும்...


Paul Carus.JPG

பால் கேரஸ் (1852-1919) ஒரு செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியல் பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர். கேரஸ் ஒரு கட்டுக்கோப்பான கிறித்தவச் சீர்திருத்தக் குடும்பத்தில் செருமனியில் பிறந்தார். பிரான்சில் முனைவர் பட்டம் பெற்றவர். பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி 1884-ல் அமெரிக்கா சென்றார். கேரஸ் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்று கருதலாம். அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பினை அவர் ஆராய்ந்தார். கிழக்கு தேசிய மதங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்திய பலரில் அவரும் முக்கியமானவர் ஆவார். குறிப்பாக பௌத்தத்தை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தது, டீ. டி. சுசுக்கியின் பௌத்த நூல்களின் மொழி பெயர்ப்புக்கு உதவியது என்று அவரது பங்கு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதங்கள் பரிணாமம் அடையும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. இறுதியில் இந்த தொன்ம மதங்களின் எச்சங்களிலிருந்து உண்மையை சாரமாக கொண்ட ஒரு இறுதியான உலக மதம் பிறக்கும் என்று அவர் ஆழ்ந்து நம்பினார். மேலும்...


ஆகத்து 14, 2011
Supplicating Pilgrim at Masjid Al Haram. Mecca, Saudi Arabia.jpg

ஹஜ் என்பது இசுலாமியர் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இசுலாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு இசுலாமியன் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லா) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் புனித பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12வது மாதம் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும். ஹஜ் புனிதப் பயணம் முகமது நபியின் வாழ்கையின் தொடர்பில் 7-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகும். காபாவை ஏழு முறை இடப்புறமாக வலம் வந்தும் அல்-சபா, அல்-மார்வாஹ் மலைகளின் நடுவே மாறி மாறி ஓடியும் அறபாத் மலைக்கு சென்றும் சம்சம் கிணறின் புனித நீரைப் பருகியும் சாத்தானின் மீது கல்லெறிந்தும் வழிபட்டனர். பின் தலையை மொட்டை அடித்து, ஒரு விலங்கைப் பலியிட்டு ஈத் அல்-அதா எனும் மூன்று நாள் திருவிழாவான தியாகத் திருநாளைக் கொண்டாடுவர். மேலும்...


PiusX, Bain.jpg

திருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்கத் திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர். மேலும்...


ஆகத்து 7, 2011
NormandySupply edit.jpg

ஓவர்லார்ட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டுப் போர் நடவடிக்கை. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. 1944, சூன் 6ல் தொடங்கிய நார்மாண்டி படையிறக்கம் முதல் ஆகத்து 24ல் பாரிசு நகரம் வீழ்ந்தது வரையான நிகழ்வுகள் ஓவர்லார்ட் நடவடிக்கை எனக் கருதப்படுகின்றன. நான்கு ஆண்டுகளாக நாட்சி ஜெர்மனியின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பாவை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் நேச நாடுகளின் படைகளுடன், செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு கடந்த அரசுப் படைகளும் கலந்து கொண்டன. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. மேலும்...


Sri Aravan.jpg

அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன், மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். 'கூத்தாண்டவர்' என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானை கிராம தெய்வமாக வழிபடும் பகுதியில் தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமுமாவார். குருசேத்திரப் போரில் அரவான் வீர மரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே கடவுளுக்கு பலி கொடுத்ததை சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காக கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. மேலும்...


சூலை 31, 2011
Pascal's triangle 5.svg

ஈருறுப்புத் தேற்றம் என்பது அடிப்படை இயற்கணிதத்தில் ஓர் ஈருறுப்புக் கோவையின் அடுக்குகளின் இயற்கணித விரிவுகளைத் தருகிறது. (x + y)nன் விரிவை, axbyc என்ற வடிவில் உள்ள உறுப்புகளின் கூட்டலாக எழுதலாம். b,c இரண்டும் குறையற்ற முழுஎண்கள், b + c = n ஆகும். ஒவ்வோர் உறுப்பின் குணகமான a ஆனது n, bஇன் மதிப்புகளைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட மிகை முழுஎண்ணாகும். விரிவிலுள்ள உறுப்புகளில் பூச்சியஅடுக்கு கொண்ட பகுதி இருந்தால் அப்பகுதியை எழுதாமலேயே விட்டுவிடலாம். ஈருறுப்புக் குணகங்களும் அவற்றின் முக்கோண அமைப்பும், கிபி 17ம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கணிதவியலாளர் பிலைஸ் பாஸ்கலின் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டாலும், அவருக்கு முந்தைய காலத்துக் கணிதவியலாளர்களும் அவற்றைப் பற்றி அறிந்திருந்தனர். இந்தியக் கணிதவியலாளரான பிங்கலர் கிமு 3ம் நூற்றாண்டில் உயர்வரிசை அடுக்குகளுக்கான விரிவினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்...


H.S. Olcott-portrait-300.jpg

ஹென்றி ஆல்காட் (1832-1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிகையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களில் ஒருவர். ஐரோப்பிய வேர்களைக் கொண்ட பிரபலங்களில் முதன் முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையே சாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார். இலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். அமெரிக்க உள்நாட்டு போரின் காலங்களில் அவர் ராணுவத்தில் பணியாற்றி பின்னர் வழக்கறிஞர் ஆனார். எலனா பிளவாத்ஸ்கியின் அறிமுகம் மற்றும் நட்பு, அவருள் இருந்த தணியாத ஆன்மிக மோகம் இவை அனைத்தும் இணைந்து பிரும்மஞான சங்கம் தொடங்குவதற்கான முகாந்திரத்தைக் கொடுத்தன. மேலும்...


சூலை 24, 2011
Momordica cymbalaria fruits.jpg

அதலை என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இது தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதலைச்செடிகள் பொதுவாக இயல்பில் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயற்காடுகளில் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்து விழுந்து விட்டாலும் மண்ணுக்கடியில் உள்ள கிழங்கு உயிருடன் இருக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்காட்பட்ட முயல்களில் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. மேலும்...


1st BRIC summit leaders.jpg

பிரிக் நாடுகள் என்பது பொருளாதார வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள வளரும் நாடுகளான பிரேசில், உருசியா, இந்தியா, சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பைக் குறிக்கும். ”பிரிக்” என்ற பெயரை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் உலகப் பொருளாதார ஆய்வு வல்லுனர் ஜிம் ஓநீல் சூட்டினார். பிரிக் நாடுகள் நான்கும் 2050-ஆம் ஆண்டுவாக்கில் உலகின் தற்போதையப் பணக்கார நாடுகளை விட அதிகளவு வளர்ச்சி பெற்றிருக்கும். மேலும், இந்நாடுகள் உலக நிலப்பரப்பில் 25 விழுக்காட்டிற்கு மேலும் உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேலும் பெற்றுள்ளன. மெக்சிகோ, தென் கொரியா ஆகிய நாடுகள் மட்டுமே ஒப்பீட்டளவில் பிரிக் நாடுகளுடன் வளர்ச்சி பெற்று வருபவையாக உள்ளன. ஆனால், 2005ஆம் ஆண்டு ஆய்வின்படி இவ்விரு நாடுகளும் வளர்ச்சியடைந்தவையாகக் கருதப்பட்டதால் இப்பட்டியலில் இணைக்கப்படவில்லை. பிரிக் கூட்டமைப்பின் முதல் மாநாடு 2009, சூன் 16 அன்று உருசியாவின் எகடேரின்பர்க் நகரில் நடந்தது. இதில் பல்முனை உலக ஒழுங்கை மையப்படுத்தி அறைகூவல் விடுக்கப்பட்டது. மேலும் உலகப் பணப் பரிமாற்றத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தின் மீதான நேரடித் தாக்குதலாக இந்த ஆலோசனை அமைந்தது. மேலும்...


சூலை 17, 2011
Chestnut-breasted Malkoha2.jpg

கபில மார்புப் பூங்குயில் என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். தென்கிழக்காசியாவில் மியன்மார் முதல் கீழைச் சாவகம், பிலிப்பீன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளிற் பரவிக் காணப்படும் இப்பறவையினம் 49 செமீ வரை வளரக்கூடியது. இதன் மேற்பகுதி சாம்பல் மற்றும் கடும் பச்சை நிறமாகவும் கீழ்ப் பகுதி செங்கபில நிறமாகவும் இருப்பதுடன் வெளிறிய மஞ்சள் நிறத்திலான அதன் சொண்டு சற்றுப் பெரிதாகவும் மேற்பகுதி கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். இப்பறவைகளின் இறகுகளின் நிறங்களினடிப்படையில் ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படும். ஏராளமான ஏனைய குயிலினங்களைப் போலன்றி, கபில மார்புப் பூங்குயில்கள் தம் கூடுகளைத் தாமே கட்டுவதுடன் தம் குஞ்சுகளையும் பராமரிக்கும் தன்மையுடைனவாகும். இப்பறவைகளின் இயற்கை வாழிடங்கள் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளும் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டலக் கண்டற் காடுகளுமாகும். இவை பொதுவாக மரங்களின் அடர்ந்த இலைகளுக்கிடையிலேயே வசிக்கும். இந்நாட்களில் இப்பறவைகளின் வாழிடங்களான காடுகள் பெரிதும் அழிக்கப்படுகின்றன. மேலும்...


Sangili2.jpg

முதலாம் சங்கிலி (ஏழாம் செகராசசேகரன்) 1519 முதல் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன். போர்த்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போர்த்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன. முதலாம் சங்கிலி யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆறாம் பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளுமே கடுமையாக எதிர்த்துவந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். மேலும்...


சூலை 10, 2011
Crocus sativus2.jpg

குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு எனும் செடியின் பூவிலிருந்துத் தருவிக்கப்படும் நறுமணப் பொருளாகும். இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலக முடிகளும் சூல் தண்டுகளும் சமையலில் நறுமணத்திற்கும் வண்ணமூட்டவும் பயன்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது, நீண்டகாலமாக உலகின் மிகவும் விலை உயர்ந்த நறுமணப் பொருளாக இருந்துவருகிறது. பொதுவாக இப்பூ ஊதா நிறம் கொண்டதாகும். இதில் எளிதில் ஆவியாகும் ஆவியாகா நறுமணமிகு 150க்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் உள்ளன. இது 3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. வடமேற்கு ஈரானில் 50,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்களில் இதன் நிறமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குங்குமப்பூ உற்பத்தியில் ஈரான் முதலிடம் வகிக்கிறது. குங்குமப்பூவின் தரம் அதன் நிறம், சுவை, நறுமணம் ஆகியவற்றை வைத்து அளவிடப்படுகிறது. குங்குமப்பூவின் வலிமையான சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த பழுப்பு-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் வகை உலகின் அடர்நிறக் குங்குமப்பூ வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. மேலும்...


FrThaninayagam.jpg

தனிநாயகம் அடிகள் (1913-1980) ஈழத்துத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர். யாழ்ப்பாணம், கரம்பொனில் இந்துவாகப் பிறந்தவர், கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிசுலாசு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், லண்டனில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகவும், பிரான்சுக் கல்லூரியிலும், நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றினார். கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தார். தமிழ்க் கல்ச்சர் என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். மொத்தம் 137 நூல்களை எழுதினார். மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை கோலாலம்பூரில் நடத்தினார். மேலும்...


சூலை 3, 2011
Quartz, Tibet.jpg

குவார்ட்சு புவியின் மேலோட்டில் ஃபெல்ட்ஸ்பாருக்கு அடுத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் கனிமமாகும். குவார்ட்சில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில மதிப்பு மிகு இரத்தினக் கற்களாகும். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் குவார்ட்சின் சில வகைகள் நகைகள் செய்யவும் கல்லோவியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. குவார்ட்சு முக்கோண படிக அமைப்பைச் சார்ந்தது. இதன் நல்லியல்பு படிக வடிவம் ஒவ்வொரு பக்கத்திலும் ஆறு பக்க பிரமிடுகளைக் கொண்டு முடிவுறும் ஆறு பக்கப் பட்டகமாகும். இயற்கையில் குவார்ட்சு படிகங்கள் பளிங்கிருமைத் தன்மை, குலைவுத்தன்மை உடையனவாகவும் அருகிலுள்ள படிகங்களுடனோ பிற கனிமங்களுடனோ உள்வளர்ச்சி உடையனவாகவும் உள்ளன. மேலும் சில நேரங்களில் பக்கங்கள்/முகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்துப் படிகம் மிகப் பெரியதாகக் காட்சியளிக்கும். அனைத்து குவார்ட்சு வகைகளும் இயற்கையில் கிடைப்பதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் குவார்ட்சு படிகங்கள் மிகத் தூய்மையானவை. இவை சிலிக்கான் செதில்கள் உற்பத்தியில் முதன்மையானப் பங்காற்றுகின்றன. இவை அரியவை மேலும் விலைஅதிகமானவை. அதிதூய்மையான குவார்ட்சு சுரங்கம் அமெரிக்காவின் வடக்கு கரொலைனா மாநிலத்திலுள்ள ஸ்ப்ரூஸ் பைன் சுரங்கத்தில் கிடைக்கின்றன. மேலும்...


VeeraPazhassi.JPG

வீர கேரள வர்மா பழசி இராசா (1753-1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்புப் பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது. பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலைப் போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793-1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பிரித்தாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர் பழசிராசாவை அவரது மலபார் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தனர். இதனால் பழசிராசா தனது மிக அண்மைய நண்பர்களுடனும் மனைவியுடனும் காடுகளில் வசிக்க வேண்டியதானது. 1802 இல் தலக்கால் சந்து பனமரம் கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த 25 ஆங்கிலேயரை கொன்று வெற்றிக் கொடி நாட்டினர். இந்நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு புத்துயிர் தந்தது. மேலும்...


சூன் 26, 2011
Harmonium2.jpg

ஆர்மோனியம் விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி. பிரெஞ்சு நாட்டவரான அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840 இல் இதனை உருவாக்கினார். இவை அமுக்கத் துருத்திவகை, உறிஞ்சு துருத்திவகை என இரு வகைப்படும். ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக்கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். ஆனால் வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படும் அமுக்க வகையைச் சார்ந்தவை. மேலைநாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த 1900 காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் இவை உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்களற்ற பெட்டிகளுடன் கூடியவை முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்டவை வரை உருவாகின. 1930களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் இவற்றுக்கான வரவேற்பும் குறையத் தொடங்கியது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள இவை பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. மேலும்...


Sherlock Holmes Portrait Paget.jpg

ஷெர்லக் ஹோம்ஸ் இசுக்காட்லாந்திய எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறியும் கதை மாந்தர். இலண்டன் நகரில் வாழ்ந்த ஓம்சு ஒரு தனியார் துப்பறிவாளர். தனது கூர்மையான தருக்க காரணமாய்தல், வேடமணியும் திறமை, தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர். 1887-இல் வெளியான எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் புதினத்தில் முதலில் தோன்றிய ஓம்சு, மொத்தம் நான்கு புதினங்கள் மற்றும் 56 சிறுகதைகளில் தோன்றியுள்ளார். 1927 வரை ஓம்சு தோன்றிய சிறுகதைகளும் புதினங்களும் தொடர்களாக வெளிவந்தன. அவை 1880-1914 காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை சித்தரித்தன. ஓம்சு கதைகள் துப்பறிவுப் புனைவுப் பாணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல முறை மறுபதிப்பு கண்ட இக்கதைகள் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் வாசகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. கோனன் டோயில் எழுதிய நூல்களைத் தவிர பல எழுத்தாளர்களும் ஓம்சு கதைகளை எழுதியுள்ளனர். ஓம்சின் கதைகளைக் களமாகக் கொண்டு பல நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும்..


சூன் 19, 2011
Yala deer.jpg

யால தேசிய வனம் இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஆகக் கூடிய எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் செல்வதும் பரப்பளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இவ்வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 190 மைல் தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இக்காடு அதில் வசிக்கும் ஏராளமான வனவிலங்குகள் தொடர்பில் மிகப் பிரபலமானதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானைகளினதும் நீரியற் பறவைகளினதும் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யால தேசிய வனத்தினுள் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். உலகில் சிறுத்தைகள் செறிவு மிகக் கூடிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004 கடற்கோளினால் இவ்வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009-இல் இக்காட்டினுட் பகுதிப் பாதுகாப்பு சிறப்பாக்கப்பட்டது முதல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது. மேலும்..


Anna-kamaraj.png

1967ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தலாகும். இத்தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரசு கட்சி தோல்வியடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதன்முறை. 40 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. அன்றுமுதல் இன்றுவரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம், கட்சித் தலைவர் காமராசர் ஆகியோரும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினர். திமுக தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 14 மாவட்டங்களில் 10இல் தனிப்பெரும்பான்மை பெற்றது. தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அண்ணாத்துரை பதவி விலகி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் தமிழகச் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும்பஞ்சம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், திமுக வேட்பாளர் எம்ஜியார் கொலைமுயற்சி முதலியவை எதிர்க்கட்சிக்கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்தன. மேலும்..


சூன் 12, 2011
SantaMariaMaggiore front.jpg

புனித மரியா பெருங்கோவில் என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. இக்கோவில் உரோமை நகரில் "எஸ்குயிலின்" என்னும் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போது உள்ள கட்டடம் கிபி 432-440 ஆண்டுக் காலத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவரால் எழுப்பப்பட்டு, புனித மரியாவின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. 431 இல் நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில் அன்னை மரியா கடவுளும் மனிதருமாகிய இயேசுவை இவ்வுலகிற்கு ஈன்றளித்ததால் உண்மையாகவே "கடவுளின் தாய்" என்னும் வணக்கத்துக்கு உரியவர் என்னும் கிறித்தவக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித மரியா கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி, அழகுபடுத்தினார். கோவிலில் உள்ள "வெற்றி வளைவு" என்னும் பகுதி அத்திருத்தந்தை காலத்தைச் சார்ந்ததே. அதில் "ஆயர் சிக்ஸ்துஸ் கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" என்னும் பதிவு உள்ளது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு கலை அம்சங்களில் முக்கியமான ஒன்று கோவிலின் நடு நீள்பகுதியை அணி செய்கின்ற பதிகைக்கல் ஓவியங்கள் ஆகும். மேலும்..


Retrato de Parameswara.jpg

பரமேசுவரா (1344-1414) என்பவர் மலாக்கா பேரரசை உருவாக்கியவர். இவருடைய மற்ற பெயர்கள் இஸ்கந்தார் ஷா, ஸ்ரீ மகாராஜா. இவர் துமாசிக் (இன்றைய சிங்கப்பூர்) எனும் இடத்தில் இருந்து வந்து மலாக்காவை 1402ல் உருவாக்கினார். ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீவிஜயப் பேரரசின் செல்வாக்கு 14ம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஜாவாவில் சிங்கசாரி எனும் ஓர் அரசு வலிமை வாய்ந்த பெரும் அரசானது. அரசக் குடும்பத்தினரும் பல ஆயிரம் மக்களும் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தி, சிங்கப்பூர் என்ற ஊரை உருவாக்கினார். இவருக்குப் பிறகு அவருடைய மகன் பராக்கிரம வீர ராஜா சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவருடைய காலத்தில் மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. பரமேசுவரா சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பித்து தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள மீன்பிடி கிராமம் ஒன்றை அடைந்தார். இக்கிராமமே இன்றைய மலாக்கா மாநகரம் உருவான இடம். வட சுமாத்திராவில் பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேசுவரா 1409 இல் திருமணம் செய்து இசுலாமிய சமயத்தில் இணைந்து தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். மேலும்..


சூன் 5, 2011
Popcorn02.jpg

சோளப்பொரி மக்காச்சோள மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து, காற்றடைத்து உருவாவது ஆகும். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைப் போலவே மக்காச்சோளத்தின் மணிகளும் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் வளர்ந்து பட்டென்ற ஒலியுடன் வெடிக்கின்றன. சிலவகை மக்காச்சோளங்களை சோளப்பொரி செய்வதற்காகவே பயிரிடுகின்றனர். பெரும்பாலும் உண்ணுவதற்காகவே செய்யப்படும் சோளப்பொரியைச் சில வேளைகளில் அணி செய்யவும் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். கடைகளில் பெரிய அளவில் இவற்றைப் பொரிக்கும் இயந்திரத்தை சார்லசு கிரிட்டோர்சு என்பவர் முதலில் உருவாக்கினார். இவற்றைச் சமைக்கும் முறையைப் பொருத்து இவற்றை உடல்நலத்துக்கேற்ற உணவுகள் என்றோ தவிர்க்கப்பட வேண்டியவை என்றோ கருதுகின்றனர். சோளப்பொரியை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்கப் பழங்குடியினர் கண்டு பிடித்துள்ளனர். 16ம் நூற்றாண்டுவாக்கில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த ஆங்கிலேயர், பழங்குடியினரிடம் இருந்து இதைப்பற்றி அறிந்தனர். இரண்டாம் உலகப்போருக்குமுன் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது பிற உணவுகளைக் காட்டிலும் சோளப்பொரி மலிவாக இருந்ததால் வெகுவாகப் பரவியது. மேலும்..


பெரியசாமி தூரன் (1908-1987) நாட்டுப்பற்றாளர், தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கருநாடக இசை வல்லுனர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழின் முதலாவது விரிவான பல்துறைக் கலைக்களஞ்சியமான தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் வெளியிட்டார். பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ. தூரன் தமிழில் கீர்த்தனைகள் புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுவர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. ஈரோட்டைச் சேர்ந்தவர். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான பொன்னர் சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது. கொங்கு வேளாளரில் இவர் "தூரன்" குலம் சார்ந்தவர் ஆனதால் "தூரன்" என்று பெயரில் இணைத்துக் கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று ஆசிரியப் பயிற்சியும் பெற்றார். சென்னையில் கல்வி கற்கும்போதே சக மாணவர்களுடன் இணைந்து "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார். மேலும்..


மே 29, 2011
ExcelsiorPano2.jpg

ஈப்போ என்பது மலேசிய மாநகரங்களில் ஒரு முக்கியமான நகரம். இது பேராக் மாநிலத்தின் தலைப்பட்டணம். மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்றும் போற்றப்படுகிறது. சீன மொழியில் பாலோ என்று அழைக்கிறார்கள். ஈயத்தைத் தோண்டியெடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். கோடீசுவரர்களின் சொர்க்க பூமி எனும் அடைமொழியும் அதற்கு உண்டு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு. இந்த நகரம் கோலாலம்பூரில் இருந்து 200 கி.மீ தொலைவில் வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடைய முடியும். 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி அதன் மக்கள் தொகை 710,798. 19 ஆம் நூற்றாண்டில் ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது. சீனாவில் இருந்து இலட்சக்கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியா, பர்மா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வணிகம் செய்ய வந்தனர். அதனால் மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தளமாகவும் இருந்தது. மேலும்..


இம்மானுவேல் சேகரன் (1924-1957) தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே இந்திய இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார். 1953 இல் இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தியனார். 1954 இல் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். 1957 இல் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும்..


மே 22, 2011

பெரிபெரி எனப்படுவது தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோய். தயமின் வளர்சிதைமாற்றங்களில் சிறப்பான பங்கை ஆற்றுகின்றது. குளுக்கோசு போன்ற காபோவைதரேட்டு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சக்தியை உருவாக்கும் வினைத்தாக்கங்களுக்கு துணை நொதியமாகச் செயற்படுகின்றது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் உயிர்ச்சத்தின் பங்கு தேவையானது. பெரிபெரி நோயில் மிக்க களைப்படைதல், சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதயக்குழலியத் தொகுதி, நரம்புத்தொகுதி, தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி என்பவையும் பாதிப்படையும். தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், உடன் இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் என்பவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியைப் பிரதானமான உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழி ஏற்படுத்தும். மேலும்..


RettamalaiSrinivasan.jpg

இரட்டைமலை சீனிவாசன் (1859-1945) தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். வழக்கறிஞர். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார். 1891 இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார். 1900 இல் வேலை தேடித் தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டது. அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். 1921 இல் நாடு திரும்பினார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்த பொதுத் தேர்தலின் போது 1923 இல் சீனிவாசன், எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10 தாழ்த்தப்பட்டோர் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார். மேலும்..


மே 15, 2011
Genesis in a Tamil bible from 1723.jpg

தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது. மேலும்..


சலாகுத்தீன் அயூப் (1137-1193) பிரபலமான இசுலாமியப் பேரரசர். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முசுலிமான சலாவுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர். இப்போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார். இவரது ஆட்சியின் உச்சத்தில் அயூபிப் பேரரசு எகிப்து, சிரியா, இராக், ஏமன் மற்றும் மேற்கு கரை அரேபிய தீபகறபத்தை உள்ளடக்கியதாக இருந்தது. சலாவுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையை பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களை தவிர மற்ற எவர்களையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களை தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் எருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும்..


மே 8, 2011
Concorde.planview.arp.jpg

கான்கார்ட் வானூர்தி சுழல் தாரை எந்திரம் கொண்ட ஒலியை விட வேகமாக செல்லும் பயணிகள் வானூர்தி. இது இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி இருநாட்டு வானூர்தி அமைப்பகங்களாலும் தயாரிக்கப்பட்டு முதன் முறையாக 1969-ல் பறக்கவிடப்பட்டது. 1976-ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவைக்கு கொண்டுவரப்பட்டது. இவ்வானூர்தி லண்டன், பாரிஸ், நியூ யார்க் மற்றும் வாசிங்டன், டி. சி. நகரங்களுக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தது. இதன் பயண நேரம் மற்ற வானூர்திகளின் பயண நேரத்தில் பாதி மட்டுமே ஆகும். மொத்தம் 20 கான்கார்ட் விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆதலால் இத்திட்டம் இருநாடுகளுக்கும் பெருத்த நட்டத்தை விளைவித்தது. மேலும் இருநாட்டு வானூர்தி நிறுவனங்களும் வானூர்திகளை வாங்க அரசாங்கமே நிதியுதவி அளித்தது. 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்தின் காரணமாக கான்கார்ட் பயணிகள் போக்குவரத்து 2003 இல் நிறுத்தப்பட்டது. கான்கார்ட் எனும் பெயரே இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வானூர்தி உருவாக்க உடன்படிக்கையைக் காட்டுகிறது. பிரித்தானியாவில் வழக்கமான வடிவமைப்பில் அல்லாத அனைத்து வானூர்திகளும் கான்கார்ட் என்றே அழைக்கப்படுகிறது. வான்வழிப் போக்குவரத்தில் ஓர் மைல்கல்லாகவும் முக்கியமான சின்னமாகவும் இவ்விமானம் கருதப்படுகிறது. மேலும்..


Sybil-kartigasu.jpg

சிபில் கார்த்திகேசு (1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாறியவர். ஜப்பானிய படையினரை எதிர்த்த மலேசிய எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். ஐக்கிய இராச்சியம் மற்றும் பொது நலவாயத்தின் இரண்டாவது உயரிய விருதான ஜார்ஜ் பதக்கம் பெற்றவர். மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகிறது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர். சிபில் தனது கணவர் மரு. கார்த்திகேசுவுடன் சேர்ந்து ஈப்போவில் ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். மலாயாக் கம்னியூஸ்டு கட்சிப் போராளிகள் சப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராக மறைந்து இருந்து சப்பானியர்களைத் தாக்கி வந்தனர். காயம் அடைந்த போராளிகள் சிபிலின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப்பட்டு இலவசமாக மருத்துவம் செய்யப்பட்டது. அதனால் சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் அவர் பெற்றார். சிபில் சப்பானியர்களினால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார். மேலும்..


மே 1, 2011
Plankton collage.jpg

மிதவைவாழிகள் அல்லது அலைவாழிகள் என்பவை நீர்நிலைகளிலோ நீர்பரப்புகளிலோ மிதந்து வாழும் உயிரினங்கள் ஆகும். இந்நீர்பரப்புகள் கடல்நீர், நன்னீர்ப் பரப்புகள் இரண்டுக்கும் பொதுவானதாகும். மிதவைவாழிகள் என வரையறுக்கப்படுவது அது வாழும் சூழ்நிலையை ஒத்து வரையறுக்கப்படுகின்றது. இவ்வரையரைக்கும் அதன் குணத்திற்கும் சம்பந்தமில்லை. இவை பெரும்பாலும் நீர்வாழ் பேருயிர்களுக்கு உணவாக பயன்படுகின்றன. இவற்றில் சிறிய பாக்டீரியாக்கள் முதல் பெரியதான சொறிமுட்டை வரை அடங்கியுள்ளன. மிதவைவாழிகள் பற்றற்று நீர்போன போக்கில் நகர்ந்துகொண்டே வாழக்கூடியது. இவைகளில் சில தனக்கு கொடுக்கப்பட்ட நகருறுப்புக்களை வைத்து நீரோட்டத்திற்கு செங்குத்தாக நகர்வதும் உண்டு. இவ்வாறு நீந்தும் உயிரானது சில நேரங்களில் பல தொலைவுகள் ஆழமாக நகரக்கூடியதாகவும் உள்ளது. இவைகளை மூன்றாக வகைப்படுத்துகின்றனர். மிதவைவாழியாக வாழும் காலத்தை வைத்தும், அதில் உள்ள உயிர்களின் தன்மைகளை வைத்தும் மற்றும் அதன் அளவுகளை வைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலான மீன்களிற்கு உணவு ஆதலால் இவைகளைப் பயன்படுத்துவதால் மீன்வளர்ப்பில் அதிக லாபம் காண முடியும். மேலும்..


M n nambiar.jpg

மாஞ்சேரி நாராயணன் நம்பியார் (1919-2008) கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 இல் பக்த ராம்தாஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் மாதண்ணா என்ற நகைச்சுவை வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. 1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும்..


ஏப்ரல் 24, 2011
BenedictineEasterVigil.jpg

பாஸ்கா திருவிழிப்பு என்பது இயேசு சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் ஆண்டுதோறும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம் ஆகும். இது புனித சனிக்கிழமை மாலையில், பொழுது சாய்ந்த பிறகு முன்னிரவு நேரத்தில் கொண்டாடப்படும். மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வருகின்ற உயிர்த்தெழுதல் ஞாயிறின் தொடக்கமாக அமைகிறது. மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயிர்த்தெழுதலாலும் வென்று, மனிதருக்குப் புது வாழ்வு அளித்தார் என்று கிறித்தவர்கள் நம்புவதால் கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மையமாக இவ்விழா உள்ளது. வழிபாடு நடைபெறும் கோவிலில் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். கோவில் முற்றத்தில் இருள்சூழ்ந்த நிலையில் புதுத்தீ உருவாக்கப்படும். அங்கு குருவும் திருப்பணியாளரும் செல்வர். மக்களும் சூழ்ந்து நிற்பர். ஒருவர் பாஸ்கா திரியை எடுத்துச் செல்வார். சாவினின்று வாழ்வுக்குக் கடந்துசென்ற இயேசு மனிதருக்குப் புது வாழ்வு அளிக்கிறார் என்னும் கருத்தை உள்ளடக்கிய இறைவேண்டலுக்குப் பின் குரு தீயை மந்திரிப்பார். அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும். மேலும்..


Luso Tamil Catechism Lisbon 1554.JPG

தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடக்கக் கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது. முதல் தமிழ் புத்தகம் 1554, பெப்ரவரி 11 இல் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு" என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. மேலும்..


ஏப்ரல் 17, 2011
Touched by His Noodly Appendage.jpg

பறக்கும் இடியாப்ப அரக்கன் என்பது பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை அல்லது பாசுத்தாஃபாரியனியம் என்ற பகடி சமயத்தின் கடவுள். இச்சமயமும் கடவுளும் 2005ம் ஆண்டு அமெரிக்காவில் பாபி எண்டர்சன் என்ற கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின் கேன்சசு மாநிலத்தில் கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கொள்கைக்கு மாற்றாக நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கையை பாடமாக அனுமதித்தற்கு தனது எதிர்ப்பைக்காட்டும் வகையில் எண்டர்சன் இவற்றை உருவாக்கினார். கேன்சசு வாரியத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதிய எண்டர்சன் அதில், நுண்ணறிவு வடிவமைப்பைப் பாடமாக்கினால், தான் நம்பும் “பறக்கும் இடியாப்ப அரக்க”னையும் பாடமாக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். எண்டர்சனின் இணையதளத்தில் வெளியான அக்கடிதம் விரைவில் உலகப் புகழ்பெற்று, ஒர் இணையத் தோற்றப்பாடாகவே ஆகிவிட்டது. பின் இடியாப்ப அரக்கன் பற்றி எண்டர்சன் ஒரு நூலையும் எழுதினார். பல்வேறு மதங்களின் புனித விசயங்களை நையாண்டி செய்து இப்பகடிமதத்தின் மைய நம்பிக்கைகளும், புனித புத்தகங்களும் சிறப்பு நாட்களும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இறைமறுப்பாளர்களும் இடியாப்ப அரக்கனை வரவேற்று நுண்ணறிவு கோட்பாட்டை எதிர்க்கும் இயக்கத்தின் சின்னமாக அதை மாற்றிவிட்டனர். மேலும்..


விளாடிமிர் நபோக்கோவ் (1899-1977) ஒரு பன்மொழித் திறமை கொண்ட உருசிய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் உருசிய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் பூச்சியியலிலும் பங்களிப்புச் செய்துள்ளதுடன், சதுரங்கப் பிரச்சினைகளிலும் ஆர்வம் காட்டினார். நபோக்கோவின் லொலித்தா (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பரவலாக அறியப்பட்ட இவரது புதினமும் இதுவே. இவரது தந்தை சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. நபோக்கோவ் சிறுவயது முதலே பிரெஞ்சு, ஆங்கிலம் உட்பட மும்மொழியாளராக இருந்தார். தன்வரலாற்று நினைவுகளை நூலாக எழுதிய நபோக்கோவ் தனது சலுகைகள் கொண்ட இளமைக்கால விவரங்கள் பலவற்றை விரிவாக விளக்கியுள்ளார். தனது இளமைக் காலத்தை மிகத் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய அவரது திறமை அவர் நிரந்தரமாக நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் உதவியது. 1919 இல் நபோக்கோவ் குடும்பத்தினர் நாடுகடந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றனர். மேலும்..


Simon ushakov last supper 1685.jpg

பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர். மேலும்..


ஏப்ரல் 10, 2011
Paradox hermaph 060924 ltn.jpg

ஆசிய மரநாய் தெற்காசிய நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் வாழும் புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய ஊனுண்ணி விலங்காகும். 2008ஆம் ஆண்டு இது தீவாய்ப்புக் கவலையற்ற இனமாக வகைப்படுத்தப்பட்டது. ஏனெனில், ஆசிய மரநாய்கள் பல்வேறு வகையான வாழிடங்களுக்கும் எளிதில் இசைவாக்கம் அடையக்கூடியவை. மேலும் இவை மிகப் பெரும் எண்ணிக்கையில் நன்கு பரவிக் காணப்படுகின்றன. இவை மாம்பழம், இறம்புட்டான், கோப்பி போன்ற பழங்களையும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும். ஆசிய மரநாய்கள் வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ரக்கூன் விலங்குகளைப் போன்று குழிகள் முதலானவற்றில் வாழும். மேலும் இவை எலிக்கோனியா போன்ற தாவரங்களின் கள்ளையும் உட்கொள்வதால் கள்ளுண்ணும் பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சித் துண்டுகளிலிருந்து பெறப்படும் கொழுப்பு ஆளிவிதை எண்ணெயுடன் சொறி சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கோப்பி லுவாக் என்பது விலங்குகள் பகுதியாக உட்கொண்ட கோப்பிப் பழங்களை அவற்றின் வாயிலிருந்து பறித்தெடுத்துத் தயாரித்ததாகும். தற்காலத்தில் உலகில் மிக உயர்ந்ததும் ஆகக் கூடிய விலை கொண்டதுமான கோப்பி வகை இதுவாகும். இதற்கு இந்த மரநாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்..


Angaian Kailasanathan.jpg

அங்கையன் கைலாசநாதன் (1942-1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை வானொலியில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவல் இவரது "கடல் காற்று" என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். இரண்டாவது பதிப்பையும் கண்டது. விவசாயிகளின் ஆதிக்கத்தை விவரிக்கிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டதாரியான இவர் ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி ஆவார். "மணிக்குரல் ஒலித்தது' என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட பல மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். புதினங்கள், வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். சிங்களப் புதினம் ஒன்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். "சமூக தீபம்' என்ற இதழை வெளியிட்டார். வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. மேலும்..


ஏப்ரல் 3, 2011
Hw cineret sea.JPG

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது. இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர் போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்தையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபும் ஆவர். கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார். மேலும்..


Kamini Roy.jpg

காமினி ராய் (1864–1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. கிழக்கு வங்கத்தில் பிறந்த இவர் இந்தியாவிலேயே முதல் பெண் முதுகலை சிறப்புப் பட்டதாரி. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் அலோ ஓ சாயா 1889ல் வெளியானது. பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டுமென கல்கத்தாவிலுள்ள ஒரு பள்ளியில் பேசும்போது கூறினார். 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1926ல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர். 1922-23 இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கொல்கத்தாப் பல்கழைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கெளரவித்தது. மேலும்..


மார்ச் 27, 2011
Srilankamountainforest.jpg

இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இப்பகுதி உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும். இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்க மிக்க குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இக்காடுகளில் மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகள், இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இக்காடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட், பாசி, பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. இக்காடுகளில் மரங்கள் 10-15மீ உயரம் வளர்கின்றன. இவை இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும். மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன. மேலும்..


Annie Besant 1895.gif

அன்னி வூட் பெசண்ட் (18471933) பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர். ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் பிறந்தவர், தனது 19வது வயதில் பிராங்க் பெசண்ட் என்ற மதகுருவை மணந்தார். இறைமறுப்புவாதியான அன்னி, கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார். பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். அச்சபையின் சார்பில் 1893 இல் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார். 1893 இல் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துப் பல நூல்களை எழுதினார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார். மேலும்..


மார்ச் 20, 2011
Rajaji1939.jpg

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 152 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். 1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1946 முதல் சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரசு காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. பி. எஸ். குமாரசுவாமிராஜா முதல்வராக இருந்தார். முக்கிய எதிர்க்கட்சிகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கிசான் மசுதூர் பிரஜா கட்சியும் இருந்தன. ஈ. வெ. இராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம், அண்ணாவின் திமுக நேரடியாகத் தேர்தலில் பங்கு பெறவில்லை. இக்கட்சிகளைத் தவிர காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாநில முஸ்லிம் லீக், நீதிக்கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், பட்டியல் ஜாதிகள் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன. காங்கிரசு 152 இடங்களில் வென்றாலும், அதற்கு தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. மேலும்..


Perak state locator.PNG

பேராக் என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று. இதன் வடக்கே தாய்லாந்தின் யாலா மாநிலம் உள்ளது. பேராக் மாநிலத்திற்கு வட மேற்கே பினாங்கு மாநிலம் உள்ளது. பேராக் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ. வரலாற்றுச் சான்றுகளின் படி வெள்ளீயம் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு வந்தது. பேராக் என்றால் மலாய் மொழியில் வெள்ளீயம் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈப்போ மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஈப்போவை மலேசியாவின் இரண்டாவது தலைநகரமாகத் தரம் மேம்படுத்தி வழி நடத்தினர். வெள்ளீயத்தின் விலை உலகளாவிய அளவில் குறைந்ததன் காரணமாகப் பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்தது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சியும் தேக்கம் அடைந்தது. ஈப்போவில் வரலாற்றுப் புகழ்மிக்க பல கட்டடங்கள் உள்ளன. அவற்றில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஈப்போ நகரத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். 18 விழுக்காட்டினர் இந்தியர்கள். மேலும்..


மார்ச் 13, 2011
Worldcup1987.jpg

1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான நான்காவது போட்டியாகும். இப்போட்டிகள் இந்தியா, பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இவை பதிவாயின. இதில் அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது. அத்துடன் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகித்தான் ஆகியன அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாமல் போயின. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுத்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. மேலும்..


Baskaran.JPG

சு. தியடோர் பாஸ்கரன் தமிழக எழுத்தாளரும், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரும் ஆவார். பாஸ்கரன் தாராபுரத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். 1964ல் இந்திய அஞ்சல் துறையில் சேர்ந்தார். அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு அலிகாரில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் தி மெசேஜ் பியரர்ஸ் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல் தி ஐ ஆஃப் தி செர்பன்ட் 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது. மேலும்..


மார்ச் 6, 2011
World Cuo 1979.jpg

1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 பந்துப் பரிமாற்றங்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. மேலும்..


Malayapuram Singaravelu Chettiar.jpg

ம. சிங்காரவேலர் (1860-1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார். இவர் இந்தியாவில் முதன்முறையாக மே நாளைக் கொண்டாடியவர். மேலும் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னைத் தொழிற்சங்கத்தை 1918இல் தொடங்கினார். காமராஜர் தொடங்கிய மதிய உணவுத்திட்டத்தினை அவருக்கு முன்பே வெற்றிகரமாகச் சென்னையில் நடத்திக் காட்டியவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் பங்கு கொண்டு தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். இவரைப் போற்றும் விதமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. மேலும்..


பெப்ரவரி 27, 2011
Venn diagram cmyk.svg

வென் படம் என்பது கணங்களின் முடிவுறு தொகுப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய தொடர்புகளைப் பற்றிய விளக்கப் படமாகும். 1880களில் பிரித்தானிய தர்க்கவாதியும் மெய்யியலாளருமான ஜான் வென், கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகளைப் படங்களின் மூலம் விளக்கலாம் என்ற தனது கருத்திற்கு வடிவமைத்தார். வென்படங்கள், அடிப்படைக் கணக்கோட்பாட்டினைச் சொல்லித்தரவும், நிகழ்தகவு, தருக்கம், புள்ளியியல், மொழியியல், கணினியியல் ஆகிய துறைகளிலுள்ள எளிய கணங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை விளக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வென் படங்கள் ஒரு தளத்தில் வரையப்பட்ட மூடிய வளைவரைகளைக் (curves) கொண்டவையாகும். அவை பொதுவாக ஒன்றின் மீது ஒன்று வெட்டிக்கொள்ளூம் வட்டங்களைக் கொண்டிருக்கும். வட்டத்தின் உட்பகுதி அதற்குரிய கணத்திலுள்ள உறுப்புகளையும் வெளிப்பகுதி அக்கணத்தில் இல்லாத உறுப்புகளையும் குறிக்கும். இரண்டு கணங்களைப் பற்றிய வென்படத்தில் ஒரு வட்டம் எல்லாவிதமான மரச்சாமான்களின் கணம், மற்றொன்று எல்லாவகையான மேசைகளின் கணம் என்றால் இரு வட்டங்களுக்கும் பொதுவான பரப்பு மரமேசைகளைக் குறிக்கும்.மேலும்..


Ggponnambalam.jpg

ஜி. ஜி. பொன்னம்பலம் (1901-1977) இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1934 இல் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1944 இல் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் "ஐம்பதுக்கு ஐம்பது" என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இவரது மகன், குமார் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும்..


பெப்ரவரி 20, 2011
Common carp.jpg

கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள், 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும், 180-210 சிற்றினங்களும் உள்ளன. இதன் தாயகம் ஐரோப்பாவும், ஆசியாவும் ஆகும். எனினும், உலகின் பல நாடுகளில் பணத்திற்காகவும், நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தவும், அழகுணர்வுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய சூழ்நிலையில் இவை நிலைத்து வாழ்கின்றன. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். ஆற்றில் வாழும் சில கெண்டைமீன்களின் தேவைகளும் நடத்தையும் கட்டமைப்பும் வேறு வகையானவை. இது மற்ற மீன்களை வேட்டையாடுவதில்லை. பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிர்களையும் நீர்த் தாவரங்களையுமே இது உணவாகக் கொள்கிறது. மேலும்..


Alexander Ivanovich Kuprin 7.jpg

அலெக்சாண்டர் குப்ரின் (1870-1938) புகழ்பெற்ற உருசிய எழுத்தாளர். உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர். 1896 இல் வெளிவந்த மலோஹ் என்ற குறுநாவல் குப்ரினைப் புகழ்பெறச்செய்தது. இரட்டையர் சண்டை (1905) அவரை உருசியர்களிடையே மிக விரும்பத்தக்கவராக நிலைநிறுத்தியது. போல்ஷெவிக் புரட்சி நிகழ்ந்தபோது குப்ரின் அந்த புரட்சியால் மக்கள் கொடுமைக்குள்ளாவதைக் கண்டு கொதிப்படைந்து உருசியாவை விட்டு வெளியேறி பாரிஸ் சென்றார். அங்கு குப்ரின் வறுமையில் இருந்தார். அங்கே இருக்கும்போது அவரால் எந்த இலக்கிய ஆக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலத்தை இழந்தார். குப்ரின் நாடு திரும்பினார். இதனை முதலாளித்துவ ஐரோப்பாவின் தோல்வி என்று இடதுசாரிகள் எழுதினார்கள். ஸ்டாலினியத்தை துதித்து எழுதும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்கு அவர் மறுத்தார். உருசியாவிற்கு மீண்டால் எழுத முடியும் என்ற அவரது கனவு வீணாகியது. நாடு திரும்பியபின் குப்ரின் எதையுமே எழுதவில்லை. மேலும்..


பெப்ரவரி 13, 2011
Pashupatinath.Overview.jpg

பசுபதிநாத் கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோயில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கானதாகும். 17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாத் நேபாளம் மதசார்பற்ற நாடாக மாறும் வரை அதன் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேபாளத்திலும் இந்தியாவிலும் பிறக்காத எவரும் கோவில் நிர்வாகத்தால் இந்து எனக் கருதப்படுவதில்லை. இந்து அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கருநாடகத்தைச் சேர்ந்த சிமோகா மாவட்டத்திலிருந்து மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி ஏற்பட்ட பின்னர் இந்நடைமுறை மாற்றம் கண்டது. நேபாள பூசாரிகள் மாவோயிச அரசினால் ஆதரிக்கப்பட்டனர். மேலும்..


Siddilebbe.jpg

மு. கா. சித்திலெப்பை (1838-1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். அசன்பே சரித்திரம் என்ற ஈழத்தின் முதலாவது தமிழ் புதினத்தை எழுதியவர். ஈழ இசுலாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார். அறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். சர் சயேத் அகமது கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். இசுலாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது. 1884 ஆம் ஆண்டில் கொழும்பில் முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான சித்திலெப்பை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும்..


பெப்ரவரி 6, 2011
Afghanistan Statua di Budda 2.jpg

பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, ஆப்கனித்தானில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பெரும் புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச்சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்து முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன. சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும். அந்நாளைய தலிபான் அரசு இஸ்லாமியச் சட்ட முறைமைக்கு எதிரானதாகக் கூறி, 2001 இல் இச்சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. மேலும்..


HowardSomerwell.jpg

தியடோர் சாமர்வெல் (1890-1975) ஒரு பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரும், மலையேற்ற நிபுணரும் சமூக சேவகரும் ஆவார். எவரெஸ்ட் சிகரத்துக்கு இருமுறை ஏற முயன்றவர். நாற்பது ஆண்டுகள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றினார். சாமர்வெல் இங்கிலாந்தில் பிறந்தவர். பெற்றோர் செருப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தார்கள். கேம்ப்ரிட்ஜில் மருத்துவம் பயின்றார். முதலாம் உலகப் போரில் ஈடுபட்டு 1915 முதல் 1918 வரை பிரான்சில் பிரித்தானிய இராணுவ வீரராகப் பணியாற்றினார். போரில் கண்ட காட்சிகள் அவரை ஆழமான அமைதி விரும்பியாக மாற்றின. கிறித்தவ நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டது. இந்தியாவெங்கும் பயணம் செய்த சாமர்வெல் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கே கண்ட வறுமையால் வருத்தம் அடைந்த அவர் நெய்யூர் என்ற ஊரில் இருந்த லண்டன் மிஷன் அமைப்புடன் இணைந்து மருத்துவப்பணி செய்ய ஆரம்பித்தார். அவருக்கு லண்டனில் காத்திருந்த பிரகாசமான எதிர்காலத்தை உதறி நெய்யூரிலேயே தங்கி மருத்துவசேவை செய்ய ஆரம்பித்தார். ஒரு பெரிய மருத்துவக்குழுவையே பயிற்சிகொடுத்து உருவாக்கினார். அறுவை சிகிச்சைக்கு அவரே பல புதிய முறைகளை கண்டுபிடித்தார். மேலும்..


சனவரி 30, 2011

தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் என்ற கட்டுரை தமிழகத் திரைப்படத்துறை திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் வகித்த பங்கை விவரிக்கிறது. திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் நீடிக்கவும் தமிழ்த் திரைப்படங்கள் அவற்றுக்கு பெரிதும் உதவியுள்ளன. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் செயலலிதா எனத் திரைப்படத் துறையினர் ஐந்து பேர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர். 1930களின் மத்தியிலிருந்து பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி வந்தனர். 1937 சட்டமன்றத் தேர்தலில் பிரபல நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாள் இந்திய தேசிய காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். எம். ஆர். இராதா தனது நாடகங்களின் வாயிலாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பி வந்தார். 1940களில் தி.க வில் அண்ணாதுரையின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திமுகவின் ஆதரவாளர்கள் தயாரித்த திரைப்படங்களில் அதன் கொள்கைகளான திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவை வெளிப்படுத்தப்பட்டன.மேலும்..


Mamut lanudo cropped.jpg

கம்பளி யானை (woolly mammoth) என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வடஅரைக் கோளத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும் மிருக இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இம்மிருகங்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். வட அமெரிக்காவிலும் வடக்கு யூரேசியாப் பகுதியில் சைபீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், மற்றும் பனியில் உறைந்த எலும்புக்கூடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த விலங்குகள் பற்றி அறியவந்துள்ளது. குறைந்தது 150,000 ஆண்டு வயதான இவ்விலங்கு பற்றிய முதலாவது தரவு யூரேசியாவின் உறைபனிப் பரவலின் போது பெறப்பட்டது. சைபீரியாவின் துந்திரா பனிக்காட்டில் புதையுண்டிருந்த கம்பளி யானையொன்று 1999 இல் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிதைவடையாத உடலைக் கொண்ட இந்த ஆண் யானை சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும்..


சனவரி 23, 2011
Enten und Gänse als Gartenhelfer.jpg

நிலைகொள் வேளாண்மை என்பது சூழலியல் மானிட வாழிடத்தையும், உணவுற்பத்தி முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்ட வேளாண்மை முறை ஆகும். நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த ஆத்திரேலிய சூழலியலாளர் பில் மொலிசன், "நிலைகொள் விவசாயம் என்பது நிலைப்பேறான மானிடச் சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இம்முறை ஏனைய மாற்றுப் பண்ணை முறைகளான சேதனப்பண்ணையாக்கம், நிலைப்பேறான வேளாண்மை, சூழல் வேளாண்மை ஆகியவற்றிலிருந்து தனித்துவமானது. இது தனித்தனி கொள்கைகளுக்குப் பதிலாக புவியைப் பராமரித்தல், மக்களைப் பராமரித்தல், மக்கள்தொகைக்கும் நுகர்வுக்குமான எல்லைகளை வகுத்தல் போன்ற முழுப் பூகோள சமூகத்தினதும் வாழ்விருப்பு பற்றிக் கருதுகிறது. உற்பத்தித் திறனுள்ள சூழல் தொகுதியை உருவாக்குவதிலும் மற்றும் பாழடைந்த சூழல் தொகுதியை மனித நிலைத்திருப்புக்கு மீளுருவாக்கம் செய்வதிலும் நிலைகொள் வேளாண்மை பயன்படும். வேதியியல் மாசாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சி மருந்துகளின் பயன்பாடற்ற சேதனப்பண்ணையாக்கத்தை நிலைகொள் வேளாண்மை மேம்படுத்துகின்றது. மேலும்..


Joseph Nicéphore Niépce..jpg

யோசெப் நிசிபோர் நியெப்சு (1765-1833) என்ற பிரான்சியர் ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை. 1825 இல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். 1829 முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். 1833 இல் நியேப்சு இறந்த பின்னர் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு டாகுவேரியோவகை என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து பிரான்சு அரசுக்கு விற்றார். நியெப்சு 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. மேலும்..


சனவரி 16, 2011
Common clownfish curves dnsmpl.jpg

ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். 1877 இல் பெனெட் என்பவர் பாசி-காளான்களிடையே காணப்பட்ட தொடர்பை விளக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். ஒன்றிய வாழ்வு என்ற பதமானது மிகவும் பரந்த உயிரியல் இடைவினைகளை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையில் இந்த ஒன்றிய வாழ்வானது அண்டி வாழ்தல், இணைவாழ்வு அல்லது சமபங்கித்துவம், ஒட்டுண்ணி வாழ்வு எனப் பகுக்கப்படுகின்றது. சில ஒன்றிய வாழ் உயிரினங்களில் அப்படியான வாழ்வு இன்றியமையாததாக இருக்கின்றது. அவ்விரு உயிரினங்களும் தமது வாழ்வுக்கு ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையாக, ஒன்றுக்கொன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்கின்றன. சில பாசி காளான்கள் தனித்தனியாக இருப்பின் வாழும் திறனற்றவையாக இருக்கின்றன. வேறு சில உயிரினங்கள் அமையத்திற்கேற்றபடி ஒன்றிய வாழ்வை மேற்கொண்டு, மாற்றுச் சூழலில் தனித்தியங்கும் பண்பையும் கொண்டிருக்கின்றன. மேலும்..


ARMudaliar.jpg

திவான் பகதூர் சர் ஆற்காடு ராமசாமி முதலியார் (18871976) ஒரு இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதியும், ராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிர்வாகம் மற்றும் ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர். ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1918 இல் ராமசாமி முதலியார், டாக்டர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது. இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களது மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கமிக்கவையாக அமைந்திருந்தன. மேலும்..


சனவரி 9, 2011
Rengkanathan.png

ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் முதலில் தமிழ் 99 விசைப்பலகைத் தளக்கோலமே சீர்தரமாக்கப்பட்டிருந்தபோதிலும் இலங்கைக் கணினிப் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் தமிழ் 99 கைவிடப்பட்டு ரெங்கநாதன் வடிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது சந்தையில் உள்ள மும்மொழி விசைப்பலகைகளில் இவ் இலங்கைச் சீர்தர விசைப்பலகைத் தளக்கோலமே பொறிக்கப்பட்டுள்ளது. ரெங்கநாதன் என்ற பெயர் இடப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படவில்லை. பாமினி வகைத் தளக்கோலங்களைக் குறிக்க பேச்சளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெமிங்டன் என்ற தமிழ் தட்டச்சுப்பொறியின் பெயர் மருவி ரெங்கநாதன் என்று ஆகியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. மேலும்..


Samikannu Vincent.jpg

சாமிக்கண்ணு வின்சென்ட் (1883 - 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும் நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் சினிமா கொட்டகையைக் கட்டினார். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது). மேலும்..


சனவரி 2, 2011
Chung king mansions.jpg

சுங்கிங் மென்சன் ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். ஹொங்கொங் வாழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் பயணிகள் மத்தியில் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும். ஹொங்கொங்கில் எங்குமே இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்த ஒரே கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான தங்குமிட இல்லங்கள் உள்ளன. தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 1961 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. தமிழர்கள், ஹொங்கொங்கில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், அதிகமானோர் இந்த கட்டடத்தின் அருகிலேயே வசிக்கின்றனர். சிலர் இக்கட்டத்தின் மேல் மாடிகளிலும் வசிக்கின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரும் அடிக்கடி ஒன்று கூடும் இடமாகவும் இக்கட்டடமே திகழ்கிறது. மேலும்..


டி. என். தீர்த்தகிரி (1880-1953) தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். தீர்த்தகிரியார் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரது அணியில் அவர்களின் தோழராக இருந்தார். ஆஷ் துரையின் படுகொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கி போடப்பட்ட பெயர்களில் தீர்த்தகிரியாரின் பெயரும் ஒன்று. இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அதனால் முதலில் சுதந்திரம் நமது பிறப்புரிமையென்று குரல்கொடுத்த திலகரின் வழியில் சென்றவர். ஆயினும் காந்தியடிகளின் அகிம்சை நெறியே அரசியல் வழக்கானபோது அதனை ஏற்றுத் தொண்டனாக சுதந்திரப்போரில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே வாழ்ந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்தை பரப்ப நாடகம் சிறந்த உத்தியாகயிருந்தது. இவர் பலமுறை வள்ளித் திருமணம், கோவலன், சதாரம் போன்ற நாடகங்களைத் தானே எழுதியும், நடித்தும் அரங்கேற்றினார். மேலும்..

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்