விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 15

கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகளும், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துதல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல் என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாடங்களின் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மதச் சார்பற்ற பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.


Juletræet.jpg

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான அங்கமாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அண்மித்த நாட்களில் இம்மர அழகூட்டங்களை காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.


நவம்பர் 27
Chocolate.jpg

சாக்கலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும். மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி, வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை.


EttayapuramPalaceRemains.jpg

எட்டயபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர, உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார். எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.


நவம்பர் 26

இளையராஜா (பிறப்பு - ஜூன் 2, 1943) என்று பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.


Borassus shape.jpg

பனை, ஒரு மரம் என்று தமிழில் வழங்கப்படினும், தாவரவியல் ரீதியில் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


நவம்பர் 25
Raja Ravi Varma.jpg

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 6, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.


Flag of Sri Lanka.svg

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு (சிலோன் என்று 1972க்கு முன்பும்) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பாலுள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். அமைதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. கடந்த சில வருடங்களாக அமுலிலிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நோர்வே நாட்டின் அனுசரணையோடு 2002இன் முற்பகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.


நவம்பர் 24
Chennai train station.jpg

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காம் பெரிய நகரும் ஆகும். 1996ஆம் வருடத்திற்கு முன்னர் இந்நகரம் மதறாஸ் (Madras) என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதலே சென்னை நகரம் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.


Marie Curie (Nobel-Chem).png

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ல் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களை கண்டு பிடித்தார்.


நவம்பர் 23
Flag of the United Kingdom (3-5).svg

ஐக்கிய இராச்சியம், மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது காமன்வெல்த் நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK என்றோ அல்லது (தவறுதலாக) பாரிய பிரிட்டன் என்றோ பிரிட்டன் என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பாரிய பிரிட்டன் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப் படுகிறது.


Bankimchandra Chattapadhay.jpg

வந்தே மாதரம், இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் எழுதப்பட்டது. பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள். இதற்கு எதிராக, பன்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார்.


நவம்பர் 22
Flag of India.svg

இந்தியா, தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.


Apples.jpg

ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.


நவம்பர் 21
T2288.jpg

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப் படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப் படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச இயல்வதால்).


Lightmatter chimp.jpg

முதனி (Primate) என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கி்ப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு, புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். உயிரின வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படும் இனம் இந்த முதனி இனம்.


நவம்பர் 20
Gmail logo.png

கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில், இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, இச்சேவை சோதனை நிலையில் (Beta) உள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. ஜிமெயில், ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாகவும் வழங்கப்படுகின்றது.


Zhakaram.svg

தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் ஏழு கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.


நவம்பர் 19
Rukmini Devi.jpg

ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 - பிப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாக்ஷேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். பத்மபூஷன் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.


Pygoscelis papua.jpg

பென்குயின்கள் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.


நவம்பர் 18
Transasia trade routes 1stC CE gr2.png

பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.


Panthera tigris tigris.jpg

புலி ஒரு காட்டு விலங்காகும். உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்து புலிகளை அடையாளம் காணலாம். காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே. நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். ஆறு-எட்டு கி.மீ. அகலமுள்ள நதிகளை சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கி.மீ வரை நீந்த இயலும். தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பை புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்காகும். உலகில் உள்ள மொத்தப் புலிகளில் இராயல் பெங்கால் புலி எனப்படும் வங்காளப் புலிகளே 80% ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகின்றன. பெரும்பான்மையாக புலிகள் ஆசிய நாடுகளிலேயே காணப்படுகின்றன.


நவம்பர் 17
Miguel Ángel, por Daniele da Volterra (detalle).jpg

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.


Hanagami Danjo no jo Arakage fighting a giant salamander.jpg

நாட்டார் பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும். இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.


நவம்பர் 16
Kinship Iraquois.jpg

ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இரோகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவோய்ஸ் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது. இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர்.


Vasco da Gama (without background).jpg

போத்துக்கீசர் என்னும் சொல் போர்த்துக்கல் நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்களை அல்லது போத்துக்கீச மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களைக் கொண்டவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். போத்துக்கீசர் தெற்கு ஐரோப்பிய மக்களாவர். இவர்கள் ரோமருக்கு முற்பட்ட கெல்ட்டிக் மற்றும் ஐபீரிய இனக்குழுக்களின் கலப்பினால் உருவானவர்கள். ரோமக் கலாச்சாரத்தின் செல்வாக்குப் பெருமளவுக்கு போத்துக்கீசக் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. இது தவிர, கிரேக்கர், போனீசியர், கார்த்தஜீனியர் போன்றோரின் செல்வாக்கும் சிறிய அளவில் இவர்களிடம் காணப்படுகின்றது. போத்துக்கீச மொழி இலத்தீனில் இருந்து உருவானது.


நவம்பர் 15
Jaf map tamil.png

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும், அச் சமுதாயத்தின், உலக நோக்கு, பண்பாடு, அதன் வரலாறு சார்ந்த பல அம்சங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலே, யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.


Thanjavur Tower.JPG

இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப்பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக்கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்ககூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.


நவம்பர் 14
Gustav Klimt 010.jpg

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல், மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன. ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு, கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.


IVC Map.png

சிந்துவெளி நாகரிகம், எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.


நவம்பர் 13

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன.


BambooFlowering.jpg

மௌ டம் (Mau tam) என்பது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக நோய் பரவ வாய்ப்புண்டாகிறது.


நவம்பர் 12
Cethosia cyane.jpg

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. இப்பூச்சி முட்டையிலிருந்து பட்டாம்பூச்சியாய் வளர்ச்சியடைவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை.


Shiva as the Lord of Dance LACMA edit.jpg

இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்