உமறுப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமறுப் புலவர் (4 திசம்பர் 1642 - 28 சூலை 1703)[1][2] முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் இவரது பிறந்தநாளை அரசு விழாவாக மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொண்டாட 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.[3]

சீறாப்புராணம் இயற்றல்[தொகு]

செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படியே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் (3 காண்டம் + 92 படலம் + 5027 பாடல்கள்) நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.

உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமறுப்_புலவர்&oldid=3586285" இருந்து மீள்விக்கப்பட்டது