யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும், அச் சமுதாயத்தின், உலக நோக்கு, பண்பாடு, அதன் வரலாறு சார்ந்த பல அம்சங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலே, யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

பின்னணி[தொகு]

இலங்கையிலே கிறீஸ்துவுக்கு முந்திய காலப் பகுதிகளிலேயே தமிழர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அத்துடன் தமிழர்கள், சிங்களவர்களிடமிருந்து அனுராதபுரத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்வுகளும், கிறிஸ்துவுக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன. எனினும் யாழ்ப்பாணப் பகுதியிலே, இன்றைய யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அடிப்படையாகத் தனித்துவமான சமுதாயக் கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கம், ஏறத்தாள, ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் ஆட்சியின் கீழ் அமைந்த யாழ்ப்பாண அரசின் தோற்றத்துடனேயே ஆரம்பமானது எனலாம்.

யாழ்ப்பாண அரசுக்காலப் பெயர்கள்[தொகு]

யாழ்ப்பாண அரசுக் காலப்பகுதியைப் பற்றிப் பேசுகின்ற கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் காணப்படுகின்ற மக்கட்பெயர்களில், அரசர்களினதும், அவர்கள் குடும்பத்தினர் சிலரதும் பெயர்கள் தவிர, யாழ்ப்பாண நாட்டின் பகுதிகளை நிர்வகிப்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சிலரது பெயர்களும் உள்ளன. யாழ்ப்பாணத்துப் பொது மக்களின் பெயர்கள் மிகவும் குறைவே.

அரசர்களின் பெயர்கள்[தொகு]

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது.

.......செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்............[1]

இதன்படி பாண்டியன் (செழிய சேகரன்) மகன் செகராசன் என்னும் சிங்கை ஆரியன் என்பதே அவனை அடையாளம் காட்டும் தகவல்கள். இதில், முதற்பகுதி தந்தையையும், அடுத்த பகுதி இடப்பட்ட பெயரையும் குறித்தது. மூன்றாம் பகுதி சிங்கை. பிற்பகுதி, ஆரியன் என்பதாகும். சிங்கை என்பது சிங்கபுரம் அல்லது சிங்கைநகர் என்னும், இந்த அரச வம்சத்தவரோடு தொடர்புள்ள, இடப்பெயரைக் குறிக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது எனினும், எங்கேயுள்ளது என்பது பற்றியும் அதனுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பின் தன்மை பற்றியும் ஒத்த கருத்து இல்லை. ஆரியன் என்பது இவர்கள் பிராமணர்கள் என்பதைக் குறிப்பதாகச் சிலரும், இவர்கள் கலிங்கத்து ஆரியர் இனத்தவர் என்பதைக் குறிப்பதாக வேறு சிலரும் கூறுகிறார்கள்.

ஒல்லாந்தர் காலத்து இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட வைபவமாலைப்படி, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட அரசர்களில் 1460 க்கு முற்பட்டவர்களின் பெயர்கள் மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தன. இவற்றின் அமைப்பு பின்வருமாறு இருந்தது.

1 2 3
இடப்பட்ட பெயர் தொடர்புடைய இடப்பெயர் சாதி அல்லது இனப்பெயர்
 • குலசேகர சிங்கை ஆரியன்
 • குலோத்துங்க சிங்கை ஆரியன்
 • கனகசூரிய சிங்கை ஆரியன்

என்னும் பெயர்கள் எடுத்துக்காட்டுகள் ஆகும். இதன் பின் வந்த அரசர்களின் பெயர்களுடன் சிங்கை ஆரியன், அல்லது சிங்கையாரியன் என்ற பகுதி சேர்க்கப்படுவதில்லை. கனகசூரிய சிங்கையாரிய மன்னனுக்குப் பின்வந்த அவனது மகனான பரராசசேகரன் தன்பெயரைச் சிங்கைப் பரராசசேகரன் எனவும், தனது தம்பியின் பெயரைச் சிங்கைச் செகராச சேகரன் எனவும் மாற்றிக்கொண்டதாக வைபவமாலை கூறுகின்றது[2]. ஆயினும், பரராசசேகரன், செகராசசேகரன் என்பன யாழ்ப்பாண மன்னர்கள் மாற்றி மாற்றி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்கள் எனப் பின்வந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பின்வந்த அரசர்களையும் இளவரசர்களையும் குறிப்பிடும்போது, வைபவமாலை, வெறுமனே அவர்கள் பெயர்களை மட்டுமே தருகின்றது.

எடுத்துக்காட்டு: பண்டாரம், பரநிருப சிங்கன், சங்கிலி

போத்துக்கீசரின் கட்டுப் பாட்டின் கீழ் அரசு புரிந்த யாழ்ப்பாண அரசர்களின் பெயர்களும், போத்துக்கீசர் எழுதிய நூல்களில் [3], எதிர்மன்னசிங்க குமாரன் (Hendaramana Cinga Cumara), பெரிய பிள்ளை, குஞ்சி நயினார், சங்கிலி என ஒற்றைப் பெயர்களாகவே குறிக்கப்பட்டுள்ளன.

பகுதித் தலைவர் பெயர்கள்[தொகு]

இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களாகக் குறிப்பிடப்படும் பகுதித் தலைவர்களின் பெயர்கள் பல முன் குறிப்பிட்ட யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலே காணப்படுகின்றன. இவர்கள் அனைவரதும் பெயர்கள் அக்காலத் தமிழ் நாட்டு வழக்கப்படியே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்களுள், பாண்டி மழவன், செண்பக மாப்பாணன் போன்ற சிலருடைய பெயர்களுடன் சாதிப்பெயர்கள் சேர்ந்துள்ளன. பெரும்பாலானவர்கள் ஒற்றைப் பெயராலேயே குறிக்கப்படுகின்றார்கள். எனினும், இவர்களது ஊர், சாதி முதலியன தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகப் பேராயிரவன் என்பவனைப்பற்றிக் கூறும்போது, அவனது ஊர், சாதி என்பவற்றையும் குறித்து,

கோட்டுமே ழத்துவசன் கோவற் பதிவாசன்
சூட்டு மலர்க்காவித் தொடைவாசன் - நாட்டமுறும்
ஆதிக்க வேளாளன் ஆயுங் கலையனைத்துஞ்
சாதிக்க ரூப சவுந்தரியன் - ஆதித்தன்
ஓரா யிரங்கதிரோ(டு) ஒத்தவொளிப் பொற்பணியோன்
பேரா யிரவனெனும் பேரரசைச்.....

என்கிறது கைலாயமாலை.

சமூகப் படிநிலையில் கீழே போகப்போக, பெயர்கள் மேலும் எளிமையாவதைக் காணமுடிகின்றது. சோதையன், தெல்லி, நாகன், நீலவன், நீலன் போன்ற இவ்வாறான பல பெயர்கள் வையாபாடலிலே காணப்படுகின்றன.

தமிழர் பெயரிடல் மரபு[தொகு]

பொதுவாகத் தமிழர்களின் பெயர்களாக வழங்கியவை அவர்களுக்கு இடப்பட்ட பெயராகிய ஒற்றைப் பெயர்களேயாகும். வேறு பல சமூகத்தவர்களைப் போல் குடும்பப் பெயரோ, நடுப்பெயர், முதற் பெயர் போன்ற கூறுகளைக் கொண்ட பெயரிடல் முறைமையோ தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை. ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகள் காரணமாக, முக்கியமாகச் சட்டம் சார்ந்த தேவைகளுக்காக ஐரோப்பியர் முறைமையைப் போன்ற, ஒரு முதற் பெயர், இறுதிப் பெயர் ஆகியவற்றைத் தழுவிய முறைகள் தமிழர் மத்தியில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். பொதுவாகத் தந்தையுடைய பெயரையும் சேர்த்துக்கொண்டு இரண்டு கூறுகளைக்கொண்ட பெயர் புழக்கத்துக்கு வந்தது. (எ.கா: முத்துவேலு கருணாநிதி). தமிழ் நாட்டில் ஊர்ப் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு. (எ.கா: சி. என். அண்ணாதுரை - காஞ்சிபுரம் (Conjeevaram) நடராஜன் (Natarajan) அண்ணாதுரை). அண்ணாமலைச் செட்டியார், முத்துராமலிங்கத் தேவர் எனச் சாதிப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.

யாழ்ப்பாண மரபு[தொகு]

யாழ்ப்பாணத்துப் பெயர்களைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை:

 1. இந்துப் பெயர்கள்
 2. கிறிஸ்தவப் பெயர்கள்
 3. முஸ்லிம் பெயர்கள்

இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.

இந்துக்கள்[தொகு]

ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு:

 • ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயர்களின் பகுதிகளாக அமையாமை.
 • பிராமணர்களையும், பிற்காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய செட்டிமார்கள் போன்ற சில வகுப்பினரையும் தவிர ஏனையோர் சாதியை அடையாளப்படுத்தும் ஒட்டுகளைகளைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தமை.

மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன.

(தந்தை பெயர்) (சொந்தப் பெயர்)

பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு.

 1. பொன்னம்பலம் கணேசன்
 2. பொ. கணேசன்
 3. பொன். கணேசன்

முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும்.

சின்னத்தம்பி பொன்னம்பலம் கணேசன்

இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும்.

சி. பொ. கணேசன்

பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை.

பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும்.

(சொந்தப் பெயர்) (தந்தை பெயர்)

ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்றைவிடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க.

 1. சுந்தரி பொன்னம்பலம்
 2. பொ. சுந்தரி
 3. சு. பொன்னம்பலம்

யாழ்ப்பாணத்து இந்துப் பெயர் அமைப்பு[தொகு]

மொழி[தொகு]

யாழ்ப்பாணத்தவர் பெரும்பாலும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இதனால் அவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் சிவன், முருகன், பிள்ளையார், உமாதேவி, விஷ்ணு போன்ற கடவுளரின் பெயர்களையும், வேறு பல பரிவார தெய்வங்களின் பெயர்களையும், சமயப் பெரியார்களின் பெயர்களையும் குறிக்கின்றன. இவை தவிரச் சமயம் சாராத பொதுப் பெயர்களையும் காணமுடியும்.

யாழ்ப்பாணத்தில் காணும் இந்துப் பெயர்களில், தமிழ், வடமொழி, வேறு மொழிகள் என்பவற்றை இனங்காணமுடியும். சமயத் துறையில் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம் இருந்ததனால், கடவுட் பெயர்கள் பெரும்பாலும் அம் மொழியிலேயே இருக்கின்றன. அதனால் மக்கட் பெயரிலும் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம். எடுத்துக் காட்டாக,

விநாயகமூர்த்தி, ஸ்ரீஸ்கந்தராஜா, பாஸ்கரன் போன்ற ஆண்களின் பெயர்களும், தனலட்சுமி, சரஸ்வதி, இராஜேஸ்வரி போன்ற பெண்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களே. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் இப்பெயர்களைத் தமிழ் மொழி மரபுக்கு ஏற்றபடி மாற்றிப் பயன்படுத்துவது உண்டு. இது எழுத்தில் மட்டும், பேச்சில் மட்டும் அல்லது இரண்டிலும் கைக்கொள்ளப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, ரத்னம் என்பதை இரத்தினம் என்று எழுதுவார்கள், பேச்சில் பெரும்பாலும் ரெத்தினம் அல்லது ரத்தினம் என்பது வழக்கம். ஆனால், சரஸ்வதி என்பதைப் பெரும்பாலும் அப்படியே எழுதினாலும் பேசும்பொழுது சரசுவதி என்ற பயன்பாட்டைக் காணலாம். கணேஷன் என்பது எழுத்திலும், பேச்சிலும் கணேசன் என்றே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற கணேஷ், ராஜ், கார்த்திக், முருகேஷ் போன்ற பயன்பாடுகள் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

ஒப்பீட்டளவில் தூய தமிழ்ப் பெயர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். பழைய காலத்திலும், பிற்காலத்தில் சிறப்பாகப் பொருளாதார மற்றும் சமூக அடிப்படைகளில் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழ்ப் பெயர்கள் கூடுதலாகக் காணப்பட்டன.

முருகன், நல்லதம்பி, பொன்னையா, எழிலன், கண்ணன், மணிமாறன், சேரன் போன்ற ஆண்களுக்குரிய பெயர்களும், அன்னப்பிள்ளை, பொன்னி, சின்னம்மா, பொன்மணி, கயல்விழி போன்ற பெண்களுடைய பெயர்களும் தமிழ்ப் பெயர்களாகும்.

சொற்களின் எண்ணிக்கை[தொகு]

யாழ்ப்பாணத்து மக்கட் பெயர்களை அவற்றை உருவாக்கிய சொற்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வகுத்து ஆராயலாம். பொதுவாகத் தமிழில் பல சொற்கள் இணைந்து பெயரை உருவாக்கும்போது சில சந்தர்ப்பங்களில் விளைவு ஒரு சொல்லாகவே கணிக்கப்படுகின்றது. இக்கட்டுரையில் சொற்களின் எண்ணிக்கை என்னும்போது பெயரை உருவாக்கிய தனியாகப் பொருள் தரக்கூடிய சொற்களே கருதப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள் ஒரு சொல், இரண்டு சொற்கள், அல்லது மூன்று சொற்களுக்குள் அடங்கிவிடுகின்றன. அதற்கு மேற்பட்ட சொற்கள் கொண்டவை மிகவும் குறைவே.

ஒருசொற் பெயர்கள்

முருகன், வேலன், சிவா, எழிலன், அமுதன், உமா, வள்ளி, பொன்னி, பத்மா போன்ற பெயர்கள் ஒரு சொற்பெயர்கள். ஒரு சொற் பெயர்களிற் சில மேலும் பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாதவை. சிவா, குமார், உமா, வள்ளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வேறு சிலவற்றை அடிச்சொல்லாகவும் விகுதிகளாகவும் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக,

முருகன் > முருகு + அன் (ஆண்பால் விகுதி)
வேலன் > வேல் + அன் (ஆண்பால் விகுதி)
பொன்னி > பொன் + இ (பெண்பால் விகுதி)

ஆண்பால் விகுதிகளைக் கொண்ட பெயர்கள் பெரும்பாலும் அன், என்பதுடன், மரியாதைக்குரிய அர் என்னும் விகுதியும் கொண்டு அமைவதுண்டு.

முருகு + அன் > முருகன்
முருகு + அர் > முருகர்

சில பெயர்களில், குறிப்பிட்ட நபரைக் குறித்து மரியாதையாகப் பேசும்போது அன், ஆர் என்ற இரு விகுதிகள் சேர்ந்து அமைவதுண்டு.

முருகு + அன் + ஆர் > முருகனார்
வேல் + அன் + ஆர் > வேலனார்

இரண்டு சொற்களாலான பெயர்கள்

இரண்டு சொற் பெயர்களின் தன்மைகள்பற்றிப் பார்க்கலாம்.

தனியாக நின்று பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் இணைந்து உருவாவனவே இருசொற் பெயர்கள்.

 • சிவபாலன் (சிவ(ன்) + பாலன்)
 • பொன்னம்பலம் (பொன் + அம்பலம்)
 • செல்வநாயகி (செல்வ(ம்) + நாயகி)

இரு சொற் பெயர்களில், முதற்பகுதி, இறுதிப்பகுதி என்று பிரித்துப் பார்க்கலாம். பெயரை உருவாக்ககூடிய பல சொற்கள் இரண்டு இடங்களிலுமே வரக்கூடியவை. முருகு என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அது முதற்பகுதியாக அமையும்போது, முருகேசன் (முருகு + ஈசன்) போன்ற பெயர்களும், இறுதிப்பகுதியாக அமையும்போது, வேல்முருகு போன்ற பெயர்களும் உருவாகின்றன. இதே போல,

சொல் முற்பகுதி பிற்பகுதி
செல்வம் செல்வநாயகம் அருட்செல்வம்
இரத்தினம் இரத்தினவேல் குணரத்தினம்
தேவன் தேவராசா குமாரதேவன்
ராஜா ராஜநாயகம் சிவராஜா
பாலன் பாலகுமார் சிவபாலன்
அம்பலம் அம்பலவாணர் தில்லையம்பலம்
தம்பி தம்பிராசா நல்லதம்பி
அம்மா அம்மாக்கண்ணு பொன்னம்மா
இலட்சுமி விஜயலட்சுமி இலட்சுமிதேவி
சிங்கம் சிங்கராசா பாலசிங்கம்
சோதி சோதிராசா பரஞ்சோதி

போன்ற பல சொற்கள் இரு பகுதிகளிலும் அமைந்து பெயர்களை உருவாக்கக் கூடியவை. எனினும், பெரும்பாலும் முன்பகுதியிலேயே வரும் சொற்களும், பின்பகுதியிலேயே அதிகம் வரக்கூடிய சொற்களும் உள்ளன.

முற்பகுதியிலேயே அதிகம் வரும் சொற்களும் அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

சிவ : சிவராசா, சிவகுமாரன், சிவபாலன், சிவகடாட்சம், சிவகுமாரி, சிவானந்தன், சிவரூபன், சிவஞானம், சிவமலர்

நாக : நாகராசா, நாகமணி, நாகரத்தினம், நாகேந்திரன், நாகேஸ்வரி, நாகம்மா

பால : பாலேந்திரா, பாலசிங்கம், பாலகுமார், பாலராஜன், பாலசுந்தரம், பாலசுந்தரி, பாலராணி

ஞான : ஞானசுந்தரம், ஞானேந்திரா, ஞானானந்தன், ஞானேஸ்வரன், ஞானேஸ்வரி

சின்ன : சின்னத்தம்பி, சின்னராசா, சின்னக்குட்டி, சின்னையா, சின்னாச்சி, சின்னமணி, சின்னம்மா, சின்னத்தங்கம்

இராம : இராமநாதன், இராமச்சந்திரன், இராமேஸ்வரன்

குமார : குமாரராஜா, குமாரதேவன், குமாரசிங்கம், குமாரசாமி

குண : குணசீலன், குணபாலன், குணரத்தினம், குணராசா, குணசேகரம், குணசிங்கம், குணரஞ்சிதம்.

மூன்று சொற்களாலான பெயர்கள்

இவை தனியாக நின்று பொருள் தரக்கூடிய மூன்று சொற்கள் இணைந்து உருவாகும் பெயர்கள் ஆகும். இவ்வாறான முச்சொற் பெயர்களின் கூறுகளும் இரு சொற் பெயர்களில் பயன்படும் கூறுகள் போன்றவையே. பொதுவான முச்சொற் பெயர்கள் மேலதிகமாக ஒரு கூறு சேர்க்கப்பட்ட இருசொற் பெயர்களாகவே காணப்படுகின்றன. இருசொற் பெயர்களுக்கு முதலில், இடையில் அல்லது இறுதியில் புதிய கூறுகள் சேர்க்கப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:

பாலசிங்கம் > சிவபாலசிங்கம்
இரத்தினவேலு > இரத்தினவேலுப்பிள்ளை
சிவராசா > சிவமகாராசா

நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள்

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

 1. நடராசன், பி. (பதிப்பாசிரியர்), இராஜராஜேசுவரி கணேசலிங்கம் (உரையாசிரியர்), முத்துராச கவிராசரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983
 2. Brito, C., The Yalpana-Vaipava-Malai, or The History of the Kingdon of Jaffna, Translated from the Tamil, Colombo, 1879. p 25. (மறுபதிப்பு: Asian Educational Services, 1999, New Delhi.)(மூலம்: மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை)
 3. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, (translated by Perera, S.G., from Portuguese), Colombo, 1930, (மறுபதிப்பு: Asian Educational Services, 1992, New Delhi)

வெளி இணைப்புகள்[தொகு]