விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2023
- சனவரி
நீண்ட மதில்கள் பண்டைய கிரேக்கத்தில் பல இடங்களில் குறிப்பாக கொரிந்து, மெகாரா போன்ற நகரங்களில் நீண்ட மதில் சுவர்கள் கட்டப்பட்டிருந்தாலும், நீண்ட மதில்கள் என்பது பொதுவாக ஏதென்சின் முதன்மை நகரத்தையும் அதன் பிரேயஸ் மற்றும் பலேரம் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட சுவர்களைக் குறிப்பதாக உள்ளது. இது பல கட்டங்களில் கட்டப்பட்டது. போரின்போது நடக்கும் முற்றுகையின் போது கூட கடலுடன் பாதுகாப்பான இணைப்பைக் கொடுத்தது. இந்த மதில்கள் சுமார் 6 கிலோமீட்டர் நீண்டிருந்தன. மேலும்...
கல்கா ஆற்று யுத்தம் என்பது மங்கோலியப் பேரரசின் செபே மற்றும் சுபுதையின் இராணுவங்கள் மற்றும், பல்வேறு உரூசு வேள் பகுதிகளின் கூட்டமைப்பிற்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். கீவ், கலிசியா-வோலினியா மற்றும் குமன்கள் ஆகியோர் உரூசு வேள் பகுதிகளில் அடங்குவர். அவர்கள் தைரிய மிசுதிலாவ் மற்றும் கீவின் மூன்றம் மிசுதிலாவ் ஆகியோரின் தலைமையில் போரிட்டனர். இந்த யுத்தமானது மே 31, 1223 ஆம் ஆண்டு உக்ரைனின் தற்கால தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள கல்கா ஆற்றின் கரையில் நடைபெற்றது. மேலும்...
ஏதெனியன் சனநாயகம் என்பது ஏதென்சு நகரம் மற்றும் அட்டிகாவைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஏதென்சு கிரேக்க நகர அரசில் ( பொலிஸ் என அறியப்படுகிறது) கிமு 6 ஆம் நூற்றாண்டில் உருவானது ஆகும். ஏதென்சு மிகவும் பிரபலமான பண்டைய கிரேக்க சனநாயக நகர அரசு என்றாலும், இதுவே முதல் சனநாயக அரசு அல்ல; ஏதென்சுக்கு முன் பல நகர அரசுகள் இதேபோன்ற சனநாயக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன. கிமு 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரேக்க நகர அரசுகளில் பாதிக்கும் மேற்பட்டவை சனநாயக நாடுகளாக இருந்திருக்கலாம் என்று ஓபர் குறிப்பிடுகிறார். மேலும்...
அக்பர் என அழைக்கப்படும் அபூல் பாத் சலாலுத்தீன் முகம்மது அக்பர் என்பவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 வரை ஆட்சி புரிந்தார். இவர் தன் தந்தை உமாயூனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இவருக்கு வயது குறைவாக இருந்ததால் பைராம் கான் அரசப் பிரதிநிதியாக ஆட்சியைக் கவனித்துக் கொண்டார். ஒரு வலிமையான ஆளுமையாகவும் வெற்றிகரமான தளபதியாகவும் திகழ்ந்த அக்பர் படிப்படியாக முகலாயப் பேரரசை விரிவுபடுத்தி பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை முகலாயப் பேரரசுக்குள் கொண்டுவந்தார். எனினும், அக்பரின் சக்தியும் செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. மேலும்...
- மார்ச்
குலாகு கான் என்பவர் ஒரு மங்கோலிய மன்னன் ஆவார். இவர் மேற்கு ஆசியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இவரது தந்தை பெயர் டொலுய். இவரது தாயார் கெரயிடு பழங்குடியினத்தைச் சேர்ந்த இளவரசியான சோர்காக்டனி பெகி. இவர் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். இவருக்கு மோங்கே கான் மற்றும் குப்லாய் கான் என்ற இரு அண்ணன்களும், அரிக் போகே என்ற ஒரு தம்பியும் உண்டு. குலாகுவின் இராணுவம் தென்மேற்குப் பகுதியில் மங்கோலியப் பேரரசைப் பெரிதும் விரிவாக்கம் செய்தது. இவர் பாரசீகத்தில் ஈல்கானரசு எனும் பேரரசைத் தோற்றுவித்தார்.மேலும்...
நினிவே என்பது பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நகரமான நினிவே, தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில், நினிவே சமவெளியில் மோசுல் நகரத்திற்கு வெளியே உள்ளது. நினிவே நகரம் டைகிரிசு ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. நினேவா நகரம், கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது. நினிவே நகரத்திற்கு 60 கிமீ தொலைவிலும், நிம்ருத்திற்கு தெற்கில் 65 கிமீ தொலைவிலும் பண்டைய அசூர் நகரம் உள்ளது. புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது. மேலும்...
- ஏப்ரல்
பேரரசர் அலெக்சாந்தர் என்பவர் பண்டைக் கிரேக்க இராச்சியமான மாசிடோனின் மன்னன் ஆவார். இவர் பொதுவாக மகா அலெக்சாந்தர் என்று அறியப்படுகிறார். இவர் தனது தந்தை இரண்டாம் பிலிப்புக்குப் பிறகு, கி. மு. 336ஆம் ஆண்டில், தன் 20ஆம் வயதில் அரியணைக்கு வந்தார். தன்னுடைய பெரும்பாலான ஆட்சிக் காலத்தை மேற்கு ஆசியா மற்றும் எகிப்து முழுவதும் நடத்திய ஒரு நீண்ட இராணுவப் படையெடுப்பில் செலவழித்தார். தன் 30ஆம் வயதில் வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார். மேலும்...
ஏதென்சில் கொள்ளைநோய் என்பது பெலோபொன்னேசியப் போரின் இரண்டாம் ஆண்டில் (கிமு 430) பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகர அரசை பேரழிவிற்கு உட்படுத்திய ஒரு கொள்ளைநோய் ஆகும். அப்போது ஏதென்சு வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. கொள்ளைநோயால் 75,000 முதல் 100,000 மக்கள் இறந்தனர். அது ஏதென்சு மக்கள்தொகையில் கால் பகுதியினராவர். இந்த நோய் தொற்று ஏதென்சு நகரின் துறைமுகமும் உணவு போன்ற அடிப்படை பொருட்களைக் கொண்டுவர ஒரே ஆதாரமான பிரேயஸ் துறைமுகம் வழியாக ஏதென்சுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. கிழக்கு மத்தியதரைக் கடலின் பெரும்பகுதிகளில் நோய் குறைந்த தாக்கத்துடன் இருந்தாலும், இங்கு பெருமளவில் பரவியது. மேலும்...
- மே
குனாக்சா சமர் என்பது கிமு 401 கோடையின் பிற்பகுதியில் பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சஸ் மற்றும் அவரது தம்பி இளைய சைரஸ் ஆகியோருக்கு இடையே அகாமனிசிய சிம்மாசனத்தைக் கைப்பற்ற நடந்த சமராகும். சைரசின் கிளர்ச்சியால் நடந்த இந்த பெரும் போரானது பாபிலோனுக்கு வடக்கே 70 கிமீ, தொலைவில் யூப்ரடீசின் இடது கரையில் உள்ள குனாக்சா என்ற இடத்தில் நடந்தது. இந்தப் போரின் முதன்மை சான்றாக இப்போரில் கலந்துகொண்ட கிரேக்க வீரர் செனபோன் எழுதிய நூல் உள்ளது. மேலும்...
மகாஜனபாதங்கள் என்பவை பண்டைக்கால இந்தியாவில் நிலைத்திருந்த 16 இராச்சியங்கள் அல்லது சிலவர் ஆட்சிக் குடியரசுகள் ஆகும். இவை இரண்டாம் நகரமயமாக்கல் காலத்தின் போது கி. மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. 4ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தன. கி. மு. 6 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலமானது ஆரம்ப கால இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இக்காலத்தின் போது இந்தியாவின் முதல் பெரும் நகரங்கள் தோன்றின. சமண இயக்கங்களின் (பௌத்தம் மற்றும் சைனம் உள்ளிட்ட) வளர்ச்சியின் காலமாகவும் இது திகழ்ந்தது.மேலும்...
- சூன்
இரண்டாம் உலகப் போர் என்பது 1939 முதல் 1945 வரை நடைபெற்ற ஓர் உலகப் போர் ஆகும். அனைத்து உலக வல்லமைகள் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. இரண்டாவது உலகப் போரானது ஓர் ஒட்டுமொத்தப் போர் ஆகும். இதில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். எக்காலத்திலும் போரில் பயன்படுத்தப்பட்ட 2 அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும்...
சோலோனிய அரசியலமைப்பு என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதென்சுக்காக சோலோனால் உருவாக்கப்பட்டதாகும். சோலோனின் காலத்தில், மக்கள் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக ஏதெனியன் அரசு கிட்டத்தட்ட துண்டு துண்டாகிவந்தது. திராகோவின் பழைய சட்டங்களைத் திருத்த அல்லது ஒழிக்க சோலன் விரும்பினார். அவர் குடிமை மற்றும் தனிநபர் வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய சட்டங்களின் கோட்பாட்டை அறிவித்தார், அதன் நன்மையால் ஏற்பட்ட விளைவுகள் அவரது அரசியலமைப்பின் முடிவுக்குப் பிறகும் நீண்ட காலம் நீடித்தது.மேலும்...
- சூலை
அட்டிலா என்பவர் ஊணர்களின் ஆட்சியாளராக 434 முதல் 453 வரை திகழ்ந்தவர் ஆவார். இவர் பொதுவாக ஊணன் அட்டிலா என்று அழைக்கப்படுகிறார். நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஊணர்கள், ஆசுத்திரகோத்துகள், ஆலன்கள், பல்கர்கள், மற்றும் பிறரை உள்ளடக்கிய ஒரு பழங்குடியினப் பேரரசின் தலைவனாகத் திகழ்ந்தார். உலக வரலாற்றின் மிக சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியின் போது, மேற்கு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசுகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய எதிரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும்...
மார்தோனியசு என்பவர் கிமு 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கத்துடனான பாரசீகப் போர்களின் போது முன்னணி பாரசீக இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் பிளாட்டியா போரில் இறந்தார். மார்தோனியசு அகாமனிசிய இளவரசர் டேரியஸ் அரியணையைக் கைப்பற்றியபோது அவருக்கு உதவிய பாரசீக பிரபுவான கோப்ரியாசின் மகன் ஆவார். புதிய மன்னருக்கும் அவரது நண்பருக்கும் இடையிலான கூட்டணி இராசதந்திர திருமணங்களால் உறுதிப்படுத்தப்பட்டது: மேலும்...
- ஆகத்து
சிவாஜி என்பவர் ஓர் இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பீஜாப்பூரின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார். இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாக அமைந்தது. 1674ஆம் ஆண்டு அலுவல்ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார். மேலும்...
லேட் சமர் என்பது கிமு 494 இல் ஐயோனியன் கிளர்ச்சியின் போது நிகழ்ந்த ஒரு கடற்படைப் போர் ஆகும். இது ஐயோனியன் நகரங்களின் கூட்டணிக்கும் (லெஸ்போயர்கள் உள்ளிட்ட), பேரரசர் டேரியசின் அகாமனிசியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் ஆகும். இதில் பாரசீகர்கள் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதால், கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பாரசீக இராணுவம் ஒவ்வொரு குடியேற்றத்தையும் தன் வசம் கொண்டது. சின்ன ஆசியா முழுவதும் உறுதியாக பாரசீக ஆட்சிக்குத் திரும்பியதால், கிளர்ச்சி இறுதியாக முடிவுக்கு வந்தது. மேலும்...
- செப்டம்பர்
இப்போக்கிரட்டீசு உறுதிமொழி என்பது வரலாற்று ரீதியாக மருத்துவர் களால் ஏற்கப்பட்டுவரும் நன்னெறி உறுதிமொழியாகும் . இது மிகவும் பரவலாக அறியப்பட்ட கிரேக்க மருத்துவ நூல்களில் இடம்பெற்ற ஒன்றாகும். இதன் அசல் வடிவத்தில், நோய்களைக் குணப்படுத்தக்கூடிய கடவுளர்கள் என்று கிரேக்கர்கள் நம்பிய வெவ்வேறு கடவுளர்கள், தேவதைகளின் பெயர்களால் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கத்திய உலகில் மருத்துவ நன்நெறிகளின் ஆரம்பகால வெளிப்பாடாக இந்த உறுதிமொழி உள்ளது. இது மருத்துவ தன்நெறிகளின் பல கொள்கைகளை வலியுறுத்துகிறது. அவை இன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. மேலும்...
பாபுர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மிர்சா சாகிருதீன் முகம்மது ஆகும். இவர் தன் தந்தை மற்றும் தாய் வழியே, முறையே தைமூர் மற்றும் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார். இவருக்கு இறப்பிற்குப் பிந்தைய பெயராக பிர்தவ்சு மகானி ('சொர்க்கத்தில் வாழ்பவர்') என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பாபுர் சகதாயி துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டவர் ஆவார். இவர் பெர்கானாப் பள்ளத்தாக்கின் ஆண்டிஜனில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) பிறந்தார்.மேலும்...
- அக்டோபர்
மான் கொம்பு என்பது செர்விடே (மான்) குடும்ப உறுப்பினர்களுக்கு காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். இது மானின் மண்டை ஓட்டின் நீட்சிகளாக அமைந்துள்ளது. மான் கொம்புகள் என்பவை எலும்பு, குருத்தெலும்பு, இணைப்பிழையம், தோல், நரம்பு, குருதிக்குழல் ஆகியவற்றால் ஆன ஒரு அமைப்பாகும். மான் கொம்பானது துருவ மான் / கரிபோவைத் தவிர பொதுவாக ஆண் மான்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன. மானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கிளைகளுடைய இக்கொம்புகள் கலைக் கொம்புகள் என்று அழைக்கப்பபடும். மான் கொம்புகள் குறித்த காலத்திற்கு ஒருமுறை உதிர்ந்து மீண்டும் வளரக்கூடியன. மேலும்...
அசோகர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட மௌரியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பொதுவாக மகா அசோகர் என்று அறியப்படுகிறார். இவர் அண். பொ.ஊ.மு. 268 முதல் அண். பொ.ஊ.மு. 232 வரை ஆட்சி புரிந்தார். இவரது பேரரசானது இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பெரும் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அது மேற்கில் தற்போதைய ஆப்கானித்தான் முதல் கிழக்கில் தற்போதைய வங்காளதேசம் வரை பரவியிருந்தது. இவரது பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இவர் பௌத்தத்தின் புரவலராக விளங்கினார். மேலும்...
- நவம்பர்
முதலாம் உலகப் போர் வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன. சண்டைகளில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கை, பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக 50 இலட்சம் குடிமக்கள் இறந்தனர். மேலும்...
மெகாரியன் ஆணை என்பது பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு சற்று முன்னர் ஏதெனியன் பேரரசால் சு. கிமு 432 இல் மெகாரா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் தொகுப்பாகும். இந்த நடவடிக்கையானது வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக பொருளாதாரத் தடையை முதலில் பயன்படுத்தபட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு காரணமாக கிரேக்க தெய்வமான டிமிடருக்கான புனித நிலமானன ஹைரா ஆர்காஸ் எனப்படும் இடத்தில் மெகாரியர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது, அவர்களைக் கண்டிக்க அவர்களின் நகரத்திற்கு அனுப்பப்பட்ட ஏதெனியன் அறிவிப்பாளர் கொல்லப்பட்டது மற்றும் ஏதென்சிலிருந்து தப்பி ஓடிவந்த அடிமைகளுக்கு அடைக்கலம் கொடுத்தது போன்றவை கூறப்பட்டன. மேலும்...
- திசம்பர்
உரோமைப் பேரரசு என்பது பண்டைய உரோமின் குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலம் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின் நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர். முதலாவது உரோமைப் பேரரசராகச் சீசர் அகத்தசின் பொறுப்பேற்பு முதல், 3ஆம் நூற்றாண்டின் இராணுவ, அரசற்ற நிலை வரை இது உரோமை இத்தாலியை இதன் மாகாணங்களின் முதன்மைப் பகுதியாகக் கொண்டிருந்தது. உரோம் நகரம் இதன் ஒரே தலைநகராக இருந்தது. இப்பேரரசானது பிறகு பல பேரரசர்களால் ஆளப்பட்டது. மேலும்...
மெலோஸ் முற்றுகை என்பது ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே நடந்த போரான பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 416 இல் நடந்த ஒரு முற்றுகைப் போராகும். மெலோஸ் என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவில் உள்ளது. மெலியன்கள் எசுபார்த்தாவுடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் போரில் நடுநிலை வகித்தனர். கி.மு 416 கோடையில் ஏதென்சு மெலோஸ் மீது படையெடுத்தது. மெலியன்கள் சரணடைந்து ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தது. அதற்கு மெலியர்கள் மறுத்துவிட்டனர், எனவே ஏதெனியர்கள் அந்த நகரத்தை முற்றுகையிட்டனர். மேலும்...