உள்ளடக்கத்துக்குச் செல்

ஏதென்சில் கொள்ளைநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பண்டைய நகரத்தில் கொள்ளைநோய், மைக்கேல் ஸ்வீர்ட்ஸ் ஓவியம், சுமார். 1652–1654

ஏதென்சில் கொள்ளைநோய் (Plague of Athens, பண்டைக் கிரேக்கம்Λοιμὸς τῶν Ἀθηνῶν , Loimos tôn Athênôn ) என்பது பெலோபொன்னேசியப் போரின் இரண்டாம் ஆண்டில் (கிமு 430) பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகர அரசை பேரழிவிற்கு உட்படுத்திய ஒரு கொள்ளைநோய் ஆகும். அப்போது ஏதென்சு வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. கொள்ளைநோயால் 75,000 முதல் 100,000 மக்கள் இறந்தனர். அது ஏதென்சு மக்கள்தொகையில் கால் பகுதியினராவர். இந்த நோய் தொற்று ஏதென்சு நகரின் துறைமுகமும் உணவு போன்ற அடிப்படை பொருட்களைக் கொண்டுவர ஒரே ஆதாரமான பிரேயஸ் துறைமுகம் வழியாக ஏதென்சுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.[1] கிழக்கு மத்தியதரைக் கடலின் பெரும்பகுதிகளில் நோய் குறைந்த தாக்கத்துடன் இருந்தாலும், இங்கு பெருமளவில் பரவியது.[2]

ஏதென்சின் சமூகத்தில் கொள்ளைநோய் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக சட்டம், சமய நம்பிக்கை போன்றவை பின்பற்றப்படாத நிலை உருவானது; பதிலுக்கு சட்டங்கள் கடுமையானதாக மாறியன. இதன் விளைவாக குடிமக்கள் அல்லாதவர்கள் ஏதெனியன் என்று கூறியதற்காக தண்டிக்கப்பட்டனர். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏதென்சின் தலைவரான பெரிக்கிள்சும் இருந்தார்.[3] கிமு 429 மற்றும் கிமு 427/426 குளிர்காலத்தில் கொள்ளைநோய் இரண்டு முறை மீண்டும் வந்தது. சுமார் 30 நோய் உயிரிகள் கொள்ளை நோயை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.[4]

பின்னணி

[தொகு]

எசுபார்த்தாவும் அதன் கூட்டாளிகளில் கொரிந்தைத் தவிர மற்றவை, ஏறக்குறைய நிலம் சார்ந்த சக்திகளாகும். அவை கிட்டத்தட்ட தோற்கடிக்க முடியாத பெரிய தரைப்படைகளைக் கொண்டிருந்தன. கிமு 431 இல் தொடங்கி எசுபார்த்தாவும், அதன் கூட்டாணி படைகளும் ஏதென்சுக்கு எதிராக போர்த் தொடரில் ஈடுபட்டபோது, தரைப்போரில் அவர்களை வெல்வது சாத்தியமற்றது என்பதால் பெரிக்கிள்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏதெனியர்கள் ஏதென்சின் நகர மதில்களுக்குள் பின்வாங்கும் உத்தியைப் பின்பற்றினர். அதேசமயம் ஏதெனியன் கடற்படை எசுபார்த்தாவை கடலோரங்களில் தாக்கி பதிலடி கொடுத்தது. துரதிர்ஷ்டவசமாக, நகர அரண்களுக்குள் பின்வாங்கும் உத்தியால் அட்டிக்காவின் ஊரகப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிவந்த மக்கள் ஏற்கனவே அதிக மக்கள்தொகை கொண்ட ஏதென்சு நகரத்திற்கு பெருமளவில் இடம்பெயர்ந்து வந்தனர். இதனால் அதிக மக்கள்தொகையால் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் நெருக்கடியாக வாழும் சூழலால் ஏற்பட்ட மோசமான சுகாதார சிக்கல் காரணமாக, ஏதென்சு நோய்கள் பரவும் இடமாக மாறியது. இதனால் பல குடிமக்கள் இறந்தனர். போர் காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்று வரலாற்றில், ஏதென்சின் 'கொள்ளைநோய்' ஒரு பக்கம் துன்பத்தை மட்டுப்படுத்தியது மேலும் போரின் இறுதி முடிவில் கொள்ளை நோயால் ஏற்பட்ட பாதிப்பு குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்ட்ரி ஆப் த பெலோபொன்னேசியன் வார் நூலின் வரலாற்று ஆசிரியரியரான துசிடிடீஸ் இந்த நோய் தாக்கி உயிர் பிழைத்தார்.[5] தொற்றுநோயைப் பற்றி அவர் விவரிக்கிறார்; அதில் எத்தியோப்பியாவிலிருந்து வந்து எகிப்து மற்றும் லிபியா வழியாக கிரேக்க உலகில் பரவி மத்தியதரைக் கடல் முழுவதும் பரவியதைப் பற்றி எழுதுகிறார்; கொள்ளைநோய் மிகவும் தீவிரமானது, கொடியது, அதன் தன்மையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது, மேலும் அதன் தன்மையை நன்கு அறியாத மருத்துவர்கள் உதவியாளர்கள் நோயாளிகளுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளர்கள் போன்றோரே வேகமாக இறந்தனர். நெரிசல் மிகுந்த ஏதென்சில், இந்த நோய் 25% மக்களைக் கொன்றது. ஏதென்சில் பெருமளவில் நடக்கும் இறுதிச் சடங்குகள் எசுபார்த்தன்கள் தங்கள் படைகளை திரும்பப் பெறச் செய்தது, நோயுற்ற எதிரியுடன் தொடர்பு கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஏதென்சின் காலாட்படையினரும், கடற்படை நிபுணர்கள் பலரும் இறந்தனர்.

ஏதென்சில் கொள்ளைநோய் குறித்து 1994–95 வரை தொல்லியல் சான்று கிடைக்கவில்லை. அதன்பிறகே அங்கு அகழ்வாய்வில் முதல் வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.[6] இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, துசிடிடீசின் வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் எச்சங்களைக் கொண்டு செய்யப்படும் பகுப்பாய்வு போன்ற்றால் தொற்றுநோய்க்கான காரணத்தை தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளபட்டது.

சமூக தாக்கங்கள்

[தொகு]

ஏதெனியன் கொள்ளைநோய் பற்றிய குறிப்புகள் தொற்றுநோயினால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகளை வரைபடமாக விவரிக்கின்றன. துசிடிடீசின் குறிப்புகள், கொள்ளைநோய் காலத்தில் சமூக ஒழுக்கங்கள் முற்றிலும் மறைந்துவிட்டதை தெளிவாக விவரிக்கிறது:

சமூகம் மற்றும் சமய நடத்தையில் ஏதெனியன் கொள்ளைநோய் உணரப்பட்ட தாக்கம், கறுப்புச் சாவு என்று அழைக்கப்படும் நடுக்கால தொற்றுநோய்கள் குறித்த குறிப்புகளிலும் எதிரொலித்தது.[7]

சட்டத்தின் மீதான அச்சம்

[தொகு]

மக்கள் ஏற்கனவே மரண பீதியில் வாழ்ந்ததால் சட்டத்திற்கு பயப்படுவதை நிறுத்திவிட்டார்கள் என்று துசிடிடிஸ் கூறுகிறார். அதேபோல, மக்கள் பணத்தைக் கண்மூடித்தனமாகச் செலவு செய்யத் தொடங்கினர். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தாலும் அதன் பலனை அனுபவிக்க தாங்கள் நீண்ட காலம் வாழ வாய்பில்லை என்று பலர் கருதினர். அதே நேரத்தில் ஏழைகளில் சிலர் எதிர்பாராத விதமாக தங்கள் உறவினர்களின் சொத்துக்களைப் பெற்று பணக்காரர்களாக ஆனார்கள். சமூகத்தில் நற்பெயரோடு நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்காததால் (நீண்டகாலம் வாழ முடியாது என்று கருதியதால்), மக்கள் மரியாதையுடன் நடந்துகொள்ள மறுத்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[8]

நோயாளிகளையும் இறந்தவர்களையும் கவனித்தல்

[தொகு]
ஏதென்சில் கொள்ளைநோயின் போது இறந்த 11 வயது சிறுமி மிர்டிஸ். அவள் எலும்புக்கூடு கெராமிகோஸ் வெகுஜன கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது, ஏதென்சின் தேசிய தொல்லியல் அருங்காட்சியகம்

மக்களிடம் கெளரவமான நடத்தை இல்லாமல் போனதற்கு மற்றொரு காரணம் தொற்றினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை உயர்ந்து வந்தது ஆகும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பவர்கள் நோயால் பிடிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர். இதனால், யாரும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளத் தயாராக இல்லாமல் பலர் கவனிப்பாரின்றி இறந்தனர். பிணங்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டு, அழுக விடப்பட்டன அல்லது கூட்டாக புதைகுழிகளுக்குள் தள்ளப்பட்டன. சில சமயங்களில் இறந்தவர்களைச் சுமந்து செல்பவர்கள் ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிணங்களைக் கண்டு, கொண்டு சென்ற பிணத்தை அதில் தள்ளிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுவார்கள். சிலர் பிறர் சேகரித்து வேத்துள்ள எரிபொருளை தங்கள் பிணங்களை எரிப்பதற்காக எடுத்துக்கொண்டனர். கொள்ளைநோய்லிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ந்தவர்களாக ஆயினர். பின்னர் அவர்கள் நோயாளிகளை பராமரிக்கும் முக்கிய பராமரிப்பாளர்களாக ஆயினர்.[9]

கிமு 430 மற்றும் 426 க்கு இடையிலான ஒரு வெகுஜன கல்லறையானது ஏறக்குறைய 1,000 பேரை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக ஏதென்சின் பண்டைய கெராமிகோஸ் கல்லறைக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. வெகுஜன கல்லறை ஒரு தாழ்வான சுவரை எல்லையாக கொண்டிருந்தது. அது கல்லறையை ஈரநிலத்திலிருந்து பிரித்துகாத்தது போல் தெரிகிறது. 1994–95 இல் தோண்டப்பட்ட, அம்பு வடிவ கல்லறையில் மொத்தம் 240 பேர் புதைக்கப்பட்டிருக்கலாம், அவர்களில் குறைந்தது பத்து பேர் குழந்தைகளாவர்.

தொல்லியல் மூன்றாவது எபோரியா (இயக்குனர்) அகழ்வாராய்ச்சியாளர் எஃபி பாசியோடோபௌலோ-வலவனி, கூற்றின்படி "வெகுஜன புதைகுழியானது ஒரு நினைவுச்சின்னத் தன்மை அற்றதாக இருந்தது. அதில் முறையான சடங்குப் பொருட்கள் இல்லாமல் இருந்தது. இவை ஒரு பீதியில் வெகுஜன அடக்கம் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டுகின்றன, இந்த இறப்புகள் கொள்ளைநோய் காரணமாக இருக்கலாம்." [10]

இந்த நேரத்தில், பெலோபொன்னேசியப் போரின் அகதிகள் ஏதென்சின் நீண்ட சுவர்களுக்குள் குடியேறினர். ஏதென்சு நகரம் மற்றும் பிரேயஸ் துறைமுகம் ஆகிய இரண்டிலும் மக்கள் தொகையை உயர்த்தது. அந்த நேரத்தில் அங்கு மக்கள்தொகை மூன்று மடங்காக அதிகரித்து. அதனால் ஏற்பட்ட சுகாதார சிக்கல் தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரித்தது.[11]

சமயத்தின் மீதான நம்பிக்கை இழப்பு

[தொகு]

கொள்ளைநோய் சமயப் பற்றில் ஊசலாட்டத்தையும், ஐயத்தையும் ஏற்படுத்தியது. கடவுளின் மீதுள்ள பக்தி கொண்டுள்ளவர்களையும் நோய் தாக்கியதால், மக்கள் கடவுளால் கைவிடப்பட்டதாக உணர்ந்தனர். கடவுளை வணங்குவதால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.[12] ஏதெனியன் கிராமப்புறங்களில் இருந்து வந்த அகதிகள் கோயில்களில் தங்கும் நிலைக்கு ஆளானதால், கோயில்களே பெரும் துயரங்களின் தளங்களாக ஆயின. விரைவில் புனித கட்டிடங்கள் பிணங்களும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களாலும் நிரம்பின. கடவுள்கள் எசுபார்த்தாவை ஆதரித்தார்கள் என்பதற்கான சான்றாக ஏதெனியர்கள் கொள்ளைநோயை சுட்டிக்காட்டினர். மேலும் அவர்கள் தங்கள் முழு பலத்துடன் போராடினால் அப்பல்லோவே (நோய் மற்றும் மருத்துவத்திற்கான கடவுள்) எசுபார்த்தாவுக்காக போராடுவார் என்று ஒரு ஆரக்கிள் மூலம் இது ஆதரிக்கப்பட்டது. "ஒரு டோரியன் [ஸ்பார்டன்] போர் வரும், அதனுடன் ஒரு கொள்ளைநோயைக் கொண்டு வரும்" என்று முந்தைய ஆரக்கிள் எச்சரித்தது.[13]

பின்விளைவுகள்

[தொகு]

கொள்ளைநோய் ஒரு எதிர்பாராத நிகழ்வாகும், இதன் விளைவாக பண்டைய கிரேக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய உயிர் இழப்பு மற்றும் ஏதெனியன் சமுதாயத்தில் பிறழ்வு ஏற்பட்டது. செல்வந்தர்கள் பலர் இறப்பதாலும், அவர்களின் செல்வம் தாழ்ந்த வகுப்பில் இருந்த அவர்களின் உறவினர்களின் வசம் சென்றதாலும் குடிமக்களுக்கு இடையிலான அதிகார சமநிலை மாறிவிட்டது. துசிடிடீசின் கூற்றுப்படி, நோய்வாய்ப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்காக மிகவும் அனுதாபம் கொண்டார்கள்: அவர்களை இனி எந்த நோயும் தாக்காது என்று நம்பினர். அதனால் எஞ்சியிருக்கும் நோயாளிகளுக்கு உதவ உயிர் பிழைத்தவர்களில் பலர் முன்வந்தனர். எஞ்சியுள்ள மெட்டிக்குகள் பலர் தங்கள் குறித்த ஆவணங்களை போலியாக தயாரித்தார்கள் அல்லது தங்கள் அசல் நிலையை மறைத்து ஏதேனிய குடிமக்களாக ஆவதற்காக அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்தவர்கள் என கண்டறியப்பட்டது. அவர்களில் பலர் பிடிபட்டவுடன் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட்டனர். இதன் விளைவாக யார் ஏதெனியன் குடிமகனாக ஆகலாம் என்பது குறித்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் அவர்களில் வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அரசியல் அதிகாரத்தின் அளவு இரண்டும் குறைக்கப்பட்டது. ஆதனால் ஏதென்சில் மக்கள் உரிமைகளில் ஒரு சரிவு ஏற்பட்டது.[14]

பெலோபொன்னேசியப் போரில் இரண்டு ஆண்டுகளில் ஏதென்சுக்கு கொள்ளைநோய் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, அதிலிருந்து ஏதென்சு மீளவே இல்லை. அவர்களது அரசியல் பலம் வலுவிழந்து. அவர்களது படைகள், குடிகள் மத்தியில் மன உறுதியும் கணிசமாகக் குறைந்தது. ஏதென்சு பின்னர் எசுபார்த்தாவால் தோற்கடிக்கப்பட்டது. அதனால் பண்டைய கிரேக்கத்தில் ஒரு வலுவான சக்தி என்பதிலிருந்து வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. Littman, Robert J. (October 2009). "The plague of Athens: epidemiology and paleopathology". The Mount Sinai Journal of Medicine, New York 76 (5): 456–467. doi:10.1002/msj.20137. பன்னாட்டுத் தர தொடர் எண்:1931-7581. பப்மெட்:19787658. 
  2. Thucydides, History of the Peloponnesian War 2.48.1
  3. "Plague in the Ancient World: A Study from Thucydides to Justinian by Christine A. Smith". Archived from the original on 2017-08-06. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
  4. Manolis J. Papagrigorakis, Christos Yapijakis, and Philippos N.Synodinos, ‘Typhoid Fever Epidemic in Ancient Athens,’ in Didier Raoult, Michel Drancourt, Paleomicrobiology: Past Human Infections, Springer Science & Business Media, 2008 pp. 161–173.
  5. History of the Peloponnesian War 2.48.3
  6. "Plague Victims Found: Mass Burial in Athens – Archaeology Magazine Archive". archive.archaeology.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  7. Aberth, John (2016-04-30). The Black Death: The Great Mortality of 1348–1350: A Brief History with Documents. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-10349-9.
  8. Thucydides, History of the Peloponnesian War 2.53
  9. Thucydides, History of the Peloponnesian War 2.51
  10. Axarlis, Nikos (April 15, 1998). "Plague Victims Found: Mass Burial in Athens". http://archive.archaeology.org/online/news/kerameikos.html. 
  11. Martínez, Javier (2017). "Political consequences of the Plague of Athens". Graeco-Latina Brunensia 22 (1): 135–146. doi:10.5817/GLB2017-1-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:1803-7402. 
  12. Thuc. 2.53
  13. For both oracles, see Thuc. 2.54
  14. Martínez, Javier (2017). "Political consequences of the Plague of Athens" (in en). Graeco-Latina Brunensia 22 (1): 135–146. doi:10.5817/GLB2017-1-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:1803-7402. http://digilib.phil.muni.cz/handle/11222.digilib/136470. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதென்சில்_கொள்ளைநோய்&oldid=3696150" இலிருந்து மீள்விக்கப்பட்டது