லேட் சமர்
லேட் சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஐயோனியன் கிளர்ச்சி பகுதி | |||||||
லேட், மிலீட்டஸ், மற்றும் மைக்கேல் தீபகற்பத்தின் வரைபடம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐயோனியா | பாரசீகப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Dionysius of Phocaea | தேடிஸ் (?) | ||||||
பலம் | |||||||
353 கப்பல்கள் (எரோடோடஸ்) | 600 கப்பல்கள் (எரோடோடஸ்) | ||||||
இழப்புகள் | |||||||
246 கப்பல்கள் | 57 கப்பல்கள் |
லேட் சமர் (Battle of Lade, பண்டைக் கிரேக்கம்: Ναυμαχία τῆς Λάδης என்பது கிமு 494 இல் ஐயோனியன் கிளர்ச்சியின் போது நிகழ்ந்த ஒரு கடற்படைப் போர் ஆகும். இது ஐயோனியன் நகரங்களின் கூட்டணிக்கும் ( லெஸ்போயர்கள் உள்ளிட்ட), பேரரசர் டேரியசின் அகாமனிசியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் ஆகும். இதில் பாரசீகர்கள் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதால், கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
வரலாறு
[தொகு]சின்ன ஆசியாவில் இருந்த கிரேக்க நகரங்களை மேலாதிக்கம் செய்ய பாரசீகத்தால் நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகளின் மீதான அதிருப்தியே ஐயோனியன் கிளர்ச்சி ஏற்பட காரணமாயிற்று. கிமு 499 இல், மிலீட்டசின் அப்போதைய ஆட்சியாளரான அரிசுடோகோரசு, மிலீட்டசில் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில், நக்சசைக் கைப்பற்றுவதற்காக பாரசீக ஆளுநர் ஆர்டபெர்னசுடன் இணைந்து கூட்டுப் போர்ப் பயணத்தைத் தொடங்கினார். இந்தப் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. மேலும் இதன் பிறகு தன் பதவியில் இருந்து உடனடியாக அகற்றப்படும் நிலை உள்ளதை உணர்ந்த அரிசுடோகோரசு, பாரசீக மன்னர் பேரரசர் டேரியசுக்கு எதிராக ஐயோனியா முழுவதையும் கிளர்ச்சிக்கு தூண்டினார். துவக்கத்தில், கிமு 498 இல், ஐயோனியர்கள் ஏதென்சு மற்றும் எரீத்திரியாவின் துருப்புக்களின் ஆதரவுடன் தாக்குதலை மேற்கொண்டனர். எபேசஸ் போரில் தோல்வியடையும் முன், சர்திசைக் கைப்பற்றினர். பின்னர் கிளர்ச்சி காரியா மற்றும் சைப்பிரசு வரை பரவியது. சின்ன ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகள் பாரசீக போர்த்தொடர் எந்த தீர்க்கமான விளைவையும் ஏற்படுத்தாமல் தொடர்ந்தது. கிமு 494 வாக்கில், பாரசீக இராணுவமும் கடற்படையும் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, கிளர்ச்சியின் மையப்பகுதியான மிலீட்டஸ் மீது கவனம் செலுத்தின.
ஐயோனியர்கள் கடல் வழியாக மிலீட்டசைப் பாதுகாக்க முயன்றனர், மிலீட்டசின் பாதுகாப்பை மிலீசியர்களிடம் விட்டுவிட்டனர். ஐயோனியன் கடற்படை மிலீட்டஸ் கடற்கரையில் உள்ள லேட் தீவில் கூடியது. பாரசீகர்கள் லேட்டில் வெற்றி பெறுவது குறித்து ஐயம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே ஐயோனியக் கூட்டணியில் இருந்து சிலரை விலக்கிவிட முயற்சித்தனர். இந்த முயற்சி முதலில் தோல்வியடைந்தாலும், இறுதியாக சாமியர் கடற்படை பாரசீகர்களின் சலுகையை ஏற்றுக்கொண்டது. பாரசீக மற்றும் ஐயோனியன் கடற்படைகள் சந்தித்தபோது, சாமியர்கள் போரில் இருந்து விலகிச் சென்றனர். இதனால் ஐயோனியர் அணியின் பலத்தில் சரிவு ஏற்பட்டது. ஐயோனியன் குழுவில் இன்னும் சில கப்பல்களும் உடனிருந்து பார்சீகர்களுக்கு எதிராக துணிந்து போரிட்டாலும், போர் தோல்வியடைந்தது.
லேடில் ஏற்பட்ட தோல்வியுடன், ஐயோனியன் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டு, பாரசீகர்கள் கிளர்ச்சியாளர்களின் கடைசி பசறையை இல்லாது ஒழித்து, பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான பணியைத் தொடங்கினர். அதன் பிறகு சின்ன ஆசியா மீண்டும் பாரசீக ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டாலும், கிளர்ச்சியை ஆதரித்ததற்காக ஏதென்சையும் எரித்திரியாவையும் தண்டிப்பதாக டேரியஸ் சபதம் செய்தார். மேலும், கிரேக்கத்தின் எண்ணற்ற நகர அரசுகள் தனது பேரரசின் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதைக் கண்டு, அவர் முழு கிரேக்கத்தையும் கைப்பற்ற முடிவு செய்தார். இவ்வாறாக ஐயோனியன் கிளர்ச்சியானது பண்டைய கிரேக்கத்திற்கும் பாரசீகத்திற்கும் இடையிலான முதல் நேரடி பெரிய மோதலான கிரேக்க-பாரசீகப் போர்களுக்கு காரணமாயிற்று. கிமு 492 இல், கிரேக்க-பாரசீகப் போர்களான கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு, ஐயோனியன் கிளர்ச்சியின் நேரடி விளைவாகத் தொடங்கியது.
பின்னணி
[தொகு]மைசீனியன் நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த இருண்ட காலத்தில், கணிசமான எண்ணிக்கையிலான கிரேக்கர்கள் சின்ன ஆசியாவுக்கு குடிபெயர்ந்தனர். இந்த குடியேறிகள் ஏயோலியன்கள், டோரியன்கள், அயோனியர்கள் ஆகிய மூன்று பழங்குடி குழுக்களைச் சேர்ந்தவர்கள்.[1] அயோனியர்கள் லிடியா மற்றும் காரியா கடற்கரைகளில் குடியேறினர். ஐயோனியாவை சேர்ந்த பன்னிரண்டு நகரங்களை நிறுவினர்.[1] அவை காரியாவில் உள்ள மிலீட்டஸ், மியூஸ், பிரீனே ; லிடியாவில் உள்ள எபேசஸ், கொலோஃபோன், லெபெடோஸ், தீயோஸ், கிளாசோமினே, போசியா, எரித்ரே ; மற்றும் சாமோஸ் மற்றும் சியோஸ் தீவுகள் ஆகும்.[2] கிமு 560 இல் புகழ்பெற்ற லிடியன் மன்னர் கிரீசசுவால் கைப்பற்றப்படும் வரை ஐயோனியா நகரங்கள் சுதந்திரமானவையகவே இருந்தன.[3] லிடியன் ஆட்சியின் கீழ் இருந்த, லிடியாவை புதியதாக உருவான பேரரசர் சைரசின், அகாமனிசியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது.[4] பாரசீகர்களால் ஐயோனியர்களை நேரடியாக ஆட்சி செய்வது கடினமாக இருந்தது. அதனால் பேரரசினால் கைப்பற்றபட்ட யூதேயாவின் ஆசாரியத்துவம் போன்ற இடங்களை ஆள, சைரசால் உயரடுக்கு பூர்வீக குழுவினரை அடையாளம் காணப்பட்டனர்.[5] பாரசீகர்கள் ஒவ்வொரு ஐயோனிய நகரங்களிலும் ஒரு சர்வாதிகாரியை தங்களின் தலையாட்டிகளாக நியமித்தனர். இது ஐயோனியர்களுக்குள் உள் மோதல்களைக் கொண்டுவந்தது. மேலும், ஒரு சர்வாதிகாரி தானே ஒரு சுயாதீனமான ஆட்சியை வழங்க முற்பட்டால், அவரை தங்கள் பலத்தைக் கொண்டு அப்பதவியில் இருந்து மாற்றினர்.[5] இதனால் சர்வாதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்; அவர்கள் பாரசீகர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தங்கள் சக குடிமக்களுக்கு தங்கள் மீது ஏற்படும் மோசமான வெறுப்பை அவர்கள் திசை திருப்ப வேண்டியிருந்தது.[5]
ஐயோனியாவை பாரசீகம் வெற்றிகண்ட சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, நான்காவது பாரசீக மன்னர் முதலாம் டேரியஸ் ஆட்சியில், மிலேசிய சர்வாதிகாரியான அரிசுடோகோரசு இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாயினார்.[6] கிமு 500 இல், அரிசுடோகோரசை நக்ச்சில் இருந்து நாடுகடத்தப்பட்ட சிலர் அணுகினர். அந்தத் தீவை அவரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டனர்.[7] நக்சோசை வெல்வதன் மூலம் மிலேட்டசில் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதைக் கண்ட அரிசுடோகோரசு, நக்சோஸ் மீது கூட்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் யோசனையுடன், லிடியா, அர்டாபெர்னெஸ் என்ற பாரசீக ஆளுனரை அணுகினார். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.[8]
இந்த போர்ப் பயணம் கிமு 499 வசந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.[9] படை நான்கு மாதங்கள் நக்சியர்களை முற்றுகையிட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் பாரசீகர்கள் மற்றும் அரிசுடோகோரசு இருவரும் முற்றுகையினால் பணத்தை இழந்தனர். எனவே விரக்தியுடன் மீண்டும் பிரதான நிலப்பகுதிக்கு படைகளுடன் பயணித்தனர்.[10] அரிசுடோகோரசு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருப்பதை உணர்ந்தார். மேலும் பாரசீக ஆளுநர் ஆர்டபெர்னசால் தனது பதவி பறிக்கப்படும் ஆபத்து இருப்பதை நன்கு உணர்ந்தார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வழியாக, அரிசுடோகோரசு தன் சொந்த குடிமக்களான மிலேசியர்களைத் பாரசீக எஜமானர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டி, அதன் மூலம் ஐயோனியன் கிளர்ச்சியைத் தொடங்கினார்.[11] அரிசுடோகோரசின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், பாரசீகர்களால் நிறுவப்பட்ட சர்வாதிகார ஆட்சியின் முதன்மைக் குறைபாட்டால் அச்சமயத்தில் ஐயோனியா கிளர்ச்சிக்கான கொதி நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.[12] அரிசுடோகோரசின் செயல்கள் வெடிமருந்து கிடங்கில் கொள்ளியை வைத்தது போலானது. அதன்பிறகு ஐயோனியா முழுவதும் கிளர்ச்சித் தீ பற்றி எரிந்தது. அதன் விளைவாக எல்லா இடங்களிலும் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு, அதற்கு பதில் சனநாயக அரசுகள் நிறுவப்பட்டன.[13]
அரிசுடோகோரசு எலனிய சின்ன ஆசியா முழுவதையும் கிளர்ச்சிக்குள் கொண்டு வந்தார். ஆனால் பாரசீகர்களை எதிர்த்துப் போராடுவதற்கு கிரேக்கர்களுக்கு மேலும் கூட்டாளிகள் தேவை என்பதை தெளிவாக உணர்ந்தார்.[14] கிமு 499 குளிர்காலத்தில், அவர் நட்பு நாடுகளைத் திரட்டும் முயற்சியில் கிரேக்க பிரதான நிலப்பகுதிக்கு கப்பலில் சென்றார். அவர் எசுபார்தன்களின் ஆதரவைத் திரட்டுவதில் தோல்வியுற்றார். ஆனால் ஏதென்சு மற்றும் எரீத்திரியா நகரங்கள் கிளர்ச்சியை ஆதரிக்க ஒப்புக்கொண்டன.[14] கிமு 498 வசந்த காலத்தில், இருபது கப்பல்களைக் கொண்ட ஏதெனியன் படை, எரித்திரியாவில் இருந்து ஐந்து கப்பல்கள் என, மொத்தம் இருபத்தைந்து கப்பல்கள் ஐயோனியாவுக்குப் புறப்பட்டன.[15] அவர்கள் எபேச்சுக்கு அருகிலுள்ள முக்கிய ஐயோனியன் படையுடன் இணைந்தனர்.[16] இந்த படை பின்னர் எபேசியர்களால் மலைகள் வழியாக அர்டாபெர்னசின் சத்ரபால் தலைநகரான சர்டிஸ் வரை வழிநடத்தப்பட்டது.[15] கிரேக்கர்கள் பாரசீகர்கள் மீது திடுமென தாக்குதல் நடத்தினர். மேலும் கீழ் நகரத்தை கைப்பற்றினர். இருப்பினும், கீழ் நகரம் தீப்பிடித்தது. அதனால் கிரேக்கர்கள், மனச்சோர்வடைந்தனர். பின்னர் நகரத்திலிருந்து பின்வாங்கி, எபேச்சுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கினர்.[17] சின்ன ஆசியாவில் இருந்த பாரசீகப் படைகள் கிரேக்கப் படைகளைப் பின்தொடர்ந்து எபேச்சுக்கு வெளியே அவர்களைப் பிடித்தது. மனச்சோர்வடைந்திருந்த கிரேக்கர்கள் பாரசீகர்களுடன் பொருதவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் எபேச்சில் நடந்த போரில் அவர்கள் முற்றிலும் வீழ்த்தப்பட்டனர்.[15] போரில் இருந்து தப்பிய அயோனியர்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குச் சென்றனர். மீதமுள்ள ஏதெனியர்கள் மற்றும் எரீத்திரியர்கள் தங்கள் கப்பல்களுக்கு வந்து, கிரேக்கத்திற்குத் திரும்பினர்.[15][18]
இதுபோன்ற பின்னடைவுகள் இருந்தபோதிலும், கிளர்ச்சி மேலும் பரவியது. அயோனியர்கள் தார்தனெல்சு நீரிணை மற்றும் மர்மரா கடலுக்கு ஆட்களை அனுப்பி, பைசாந்தியம் மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களைக் கைப்பற்றினர்.[19] அவர்கள் காரியர்களையும் கிளர்ச்சியில் சேர வற்புறுத்தினர்.[19] மேலும், கிளர்ச்சி பரவுவதைக் கண்ட, சைப்பிரசு இராச்சியங்களும் எந்த வெளி ஆட்களின் வற்புறுத்தலும் இல்லாமல் பாரசீக ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன.[20] அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பாரசீக இராணுவமும் கடற்படையும் காரியா மற்றும் சைப்பிரசில் நடந்த கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதில் முழுமையான கவனம் செலுத்தியது. மேலும் இந்த காலக்கட்டங்களில் ஐயோனியா அமைதியற்ற நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.[21] பாரசீக எதிர் தாக்குதலின் உச்சத்தில், அரிசுடோகோரசு, தனது நிலை ஆட்டங்காணுவதை உணர்ந்து, மிலேட்டஸ் மற்றும் கிளர்ச்சியின் தலைமைப் பதவியை கைவிட முடிவு செய்தார். மேலும் அவர் மிலேட்டசை விட்டு வெளியேறினார். அவரைப் பற்றி எதிர்மறையான பார்வை கொண்ட எரோடோடஸ், அரிஸ்டகோரஸ் தனது பதவியை இழந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறுகிறார்.[22]
கிளர்ச்சியின் ஆறாவது ஆண்டில் (கிமு 494), பாரசீகப் படைகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டன. மேலும் தங்களிடம் மீண்டும் அடிபணிந்த சைப்ரியாட்கள், எகிப்தியர்கள், சிலிசியன்கள், போனீசியர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட கடற்படைகளையும் தங்களுடன் சேர்ந்து கொண்டனர். பாரசீகர்கள் நேரடியாக மிலேட்டசுக்குச் சென்றனர், மற்ற கோட்டைகள் குறித்து சிறிதும் கவனம் செலுத்தவில்லை. காரணம் கிளர்ச்சியின் மையப்பகுதிக்கே சென்று கிளர்ச்சியைச் சமாளிக்கும் நோக்கமாக இருக்கலாம்.[23] இந்த நேரத்தில் பேரரசர் டேரியசால் கிரேக்க விவகாரங்களில் நிபுணரான மீடியன் தளபதி தேடிசை ஐயோனியாவுக்கு அனுப்பப்பட்டார். எனவே இந்த பாரசீகத் தாக்குதலின் ஒட்டுமொத்தக் தலைமையும் இவரே எனத் தெரிகிறது.[12] இந்த போர் படைகளின் அணுகுமுறையைக் கேள்விப்பட்ட அயோனியர்கள் பனியோனியத்தில் (புனித சந்திப்பு மைதானம்) சந்தித்தனர், மேலும் தரையில் சண்டையிட முயற்சிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். மிலேசியர்கள் தங்கள் சுவர்களைப் பாதுப்பதை விட்டுவிட்டனர். அதற்கு பதிலாக, அவர்கள் தங்களால் இயன்ற ஒவ்வொரு கப்பலையும் திரட்டி, "கடலில் மிலேட்டசுக்காகப் போராடுவதற்காக" மிலேட்டஸ் கடற்கரையில் உள்ள லேட் தீவுக்கு செல்ல முடிவு செய்தனர்.[23]
எதிர் சக்திகள்
[தொகு]கிரேக்கர்கள்
[தொகு]இந்த போரில் ஐயோனியன் நகரங்கள் லெஸ்போசின் ஏயோலியன்களால் சமருக்காக ஒன்றிணைக்கப்பட்டன. ஒவ்வொரு அரசும் வழங்கிய கப்பல்களின் எண்ணிக்கையை எரோடோடசு பட்டியலிட்டுள்ளார்:[24]
நகரம் | கப்பல்களின் எண்ணிக்கை |
---|---|
சியோஸ் | 100 |
மிலீட்டஸ் | 80 |
லெஸ்போஸ் | 70 |
சாமோஸ் | 60 |
டியோஸ் | 17 |
பிரீனே | 12 |
எரித்ரே | 8 |
மியூஸ் | 3 |
ஃபோசியா | 3 |
மொத்தம் | 353 |
பாரசீகர்கள்
[தொகு]பாரசீகக் கடற்படையில் 600 கப்பல்கள் இருந்ததாக எரோடோடசு கூறுகிறார்,[25] போனீசியர்கள், எகிப்தியர்கள், சிலிசியர்கள், சைப்ரஸ்கள் ஆகியோரின் கிளர்ச்சிகள் அண்மையில்தான் அடக்கப்பட்டிருந்தது.[23] பாரசீகக் கடற்படைக்கு மூத்த மீடியன் தளபதி தோடிஸ் தலைமை வகித்திருக்கலாம்; பாரசீக பதிவுகளில் அவர் போரின் பிற்காலத்தில் டேரியசால் ஐயோனியாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.[21] இருப்பினும், எரோடோடசு இந்த போர்தொடரில் கலந்துகொண்ட பாரசீக தளபதிகள் எவரையும் குறிப்பிடவில்லை.
முன்னுரை
[தொகு]பாரசீகர்கள் லேட் கடற்கரையில் வந்து ஐயோனியன் கப்பல்களின் எண்ணிக்கையை அறிந்ததும், கிரேக்கர்களை தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் கவலைப்படத் தொடங்கினர். மேலும் அவர்கள் தோல்வியுற்றால் டேரியசின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமென்று அஞ்சினர்.[25] கிளர்ச்சியினால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐயோனியன் சர்வாதிகாரிகளும் பாரசீகர்களுடன் இருந்தனர். எரோடோடசின் கூற்றுப்படி, அவர்கள் இச்சமயத்தில் பாரசீகர்கள் அறிவுறுத்தியபடி தாங்கள் முன்பு ஆண்ட பிரதேசத்தினருக்கு போரில் ஈடுபடவேண்டாம் என்ற அறிவுறுத்தல்களை வழங்கினர்:
"ஐயோனியா நாட்டு மக்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அரசரின் தலைமைக்கு சிறந்த சேவை செய்வதை இப்போது உறுதிபடுத்துங்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நாட்டு மக்களை மற்ற கூட்டணி சக்திகளிடமிருந்து பிரிக்க முயற்சியுங்கள். அதற்காக இந்த வாக்குறுதியை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்: அவர்கள் செய்த கிளர்ச்சிக்காக எந்தத் தீங்கும் செய்யப்படமாட்டாது, அவர்களுடைய கோவில்களோ, வீடுகளோ எரிக்கப்படாது. எந்த வகையிலும் அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படாது. ஆனால் இதையும் மீறி அவர்கள் போரிடத் தொடங்கினால், அவர்களுக்கு ஏற்படப்போகும் கதியைச் சொல்லுங்கள்: அவர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டால், அவர்கள் அடிமைகளாக இருப்பார்கள்; நாங்கள் அவர்களின் ஆண் பிள்ளைகளை திருநங்கைகளாக ஆக்கி, அவர்களின் கண்ணிப் பெண்களை பாக்ட்ராவுக்கு சிறைபிடித்து சென்றும், அவர்களின் நிலத்தை மற்றவர்களிடம் ஒப்படைப்போம்." [25]
முன்னாள் சர்வாதிகாரிகள் இவ்வாறு தங்கள் உறவினர்களுக்கு செய்திகளை அனுப்பினார்கள். ஆனால் ஐயோனியர்கள் அவர்கள் அறிவித்த சலுகைகளை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் மட்டுமே இவ்வாறு அணுகப்பட்டதாக நினைத்தனர் - வெவ்வேறு குழுக்கள் இடையே இந்த சலுகைகள் குறித்த எந்த விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை. அதனால் துரோகத்திற்கான சாத்தியம் உள்ளதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.[25]
ஐயோனியர்கள் போரின் நடத்தை பற்றி விவாதிக்க கூட்டங்களை நடத்தினர். ஃபோசியன் தளபதியான தியோனிசிஸ் கிரேக்கப் படைக்கு பயிற்சி அளித்து வழிநடத்த முன்வந்தனர்:
"ஐயோனிய மக்களே சுதந்திர மனிதர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி, தப்பி ஓடிய அடிமைகளாக இருந்தாலும் சரி நமது விவகாரங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றன. நீங்கள் இப்போது கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள ஒப்புக்கொண்டால், தற்போதைக்கு நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் எதிரிகளை வென்று சுதந்திரம் பெறுவது உங்கள் ஆற்றலில் இருக்கிறது; ஆனால் நீங்கள் பலவீனமாகவும் ஒழுங்கற்றவராகவும் இருந்தால், உங்கள் கிளர்ச்சிக்காக அரசரிமிருந்து தண்டனை பெறுவதில் இருந்து உங்களை காப்பாற்றும் எதையும் நான் காணவில்லை. என்னை நம்பி உங்களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்; (தெய்வங்கள் நம்மிடம் நியாயமாக நடந்து கொண்டால்) நமது எதிரிகள் நம்மைப் போரில் சந்திக்க மாட்டார்கள். அல்லது அப்படி அவர்கள் நம்முடன் போரிட்டால் அவர்கள் முற்றாக முறியடிக்கப்படுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்." [26]
இவ்வாறு தியோனீசியசு ஒரு தீவிர பயிற்சித் திட்டத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் படகோட்டிகளுக்கு இடிக்கும் சூழ்ச்சிகளிலும், கடற்படையினருக்குப் போரில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தார். ஏழு நாட்களுக்கு ஐயோனியர்கள் இந்த சூழலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் கடின உழைப்புக்கு தயாராக இல்லாததால், அவர்கள் அதற்குக் கீழ்ப்படிய மறுத்து, அதற்கு பதிலாக முகாமிலேயே தங்கினர்.[27] எரோடோடசின் கூற்றுப்படி, ஐயோனியன் முகாமில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் பிளவுகளைக் கண்டவுடன், சாமோசியர்கள் பாரசீக பாரசீக சலுகைகளை விடுவதற்கு பதிலாக அதை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[28] இருப்பினும், சில நவீன வரலாற்றாசிரியர்கள் கிரேக்க முகாமில் கருத்து வேறுபாடு பற்றிய கருத்தை நிராகரிக்கின்றனர். எரோடோடசு லேட் பற்றிய தனது தரவுகளை சாமோசியர்களிடமிருந்து பெற்றார். அபோது அவர்கள் தங்கள் துரோகத்துக்கு சப்பைக் கட்டும் விதமாக, அவர்கள் இந்தக் கதையைக் காரணமாக கூறியதாக கூறப்படுகிறது.[21] எப்படியிருந்தாலும், சாமோசியர்கள் மற்ற கிரேக்கர்களுடன் சமர் நடவடிக்கைகளுக்குள் இருந்தனர்.[28]
சமர்
[தொகு]டியோனீசியசுக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பிறகு, பாரசீக கடற்படை ஐயோனியர்களைத் தாக்க நகர்ந்தது. "ஐயோனியர்களில் யார் துணிச்சலானவர்கள் அல்லது கோழைகள் என்று என்னால் சரியாகச் சொல்ல முடியாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள்" என்று எரோடோடஸ் குறிப்பிடுவதால், தொடர்ந்த போரில் குழப்பம் நீடித்தது.[29] ஆயினும்கூட, போரின் துவக்கத்திலேயே, ஒரு சாமோசியர் குழு ஒப்புக்கொண்டபடி தங்கள் படகுகளுடன் போர்க்களத்தை விட்டு வெளியேறியது என்பது தெளிவாகிறது. இருப்பினும், 11 சாமோசியர் கப்பல்கள் மற்ற ஐயோனியர்களை விட்டு வெளியேற மறுத்து, போரில் ஈடுபட்டனர். பிற்காலத்தில், சாமோசியர்கள் இந்த குழுவினரின் துணிச்சலையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் தங்கள் சந்தையில் ஒரு நிணைவுத் தூணை அமைத்தனர்.[29] சாமோசியர் குழுவினர் வெளியேறுவதைப் பார்த்து, மேற்குப் பகுதியில் இருந்த அவர்களது அண்டை நாட்டாரான லெஸ்பியன்களும் தளத்தைவிட்டு ஓடிவிட்டனர். ஐயோனியன் போரணியின் மேற்குப் பகுதி முழுவதும் மிக விரைவாக சரிந்தது.[29] நிலைமை மிகவும் அவநம்பிக்கை அளிப்பதாக மாறியதால் மற்ற ஐயோனியக் குழுக்களும் தப்பி ஓடின.
பெரிய சியான் கடற்படை மட்டுமே தங்கள் தளத்தில் நின்றதாகத் தெரிகிறது, ஒருவேளை வேறு சில கப்பல்களும் அவர்களுடன் இருந்திருக்கலாம். அவர்கள் துணிச்சலுடன் போரிட்டனர், ஆனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[30] இறுதியில் மீதமுள்ள சியான் கப்பல்கள் சியோசுக்கு திரும்பிச் சென்றன, இதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது.[31]
பின்விளைவுகள்
[தொகு]ஐயோனியன் கடற்படையின் தோல்வியால், கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. மீலீட்டஸ் நகரத்தை பாரசீகர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றினர். எரோடோடசின் கூற்றுப்படி, நகரின் பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டனர், பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கபட்டனர்.[32] பரவலான அழிவின் அறிகுறிகளைக் காட்டும், தொல்லியல் சான்றுகள் இதை ஓரளவு உறுதிப்படுத்துகின்றன. லேடி சமருக்குப் பிறகு நகரத்தின் பெரும்பகுதி கைவிடப்பட்டது.[21] இருப்பினும், சில மைலேசியர்கள் மிலீட்டசில் தங்கியிருந்தனர் (அல்லது விரைவாக திரும்பி வந்தனர்), இருப்பினும் நகரம் அதன் முந்தைய பெருமையை மீண்டும் அடையவில்லை.[12]
லேடி சமருக்குப் பிறகு காரியாவின் பெரும்பாலான பகுதிகள் பாரசீகர்களிடம் சரணடைந்தன. இருப்பினும் சில கோட்டைகள் படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட வேண்டியிருந்தது.[33] பாரசீக இராணுவம் பின்னர் ஒவ்வொரு குடியேற்றத்தையும் எடுத்துக் தன் வசம் கொண்டது. அனத்தோலியா முழுவதும் உறுதியாக பாரசீக ஆட்சிக்குத் திரும்பியதால், கிளர்ச்சி இறுதியாக முடிவுக்கு வந்தது.[34]
பாரசீகர்களைப் பொறுத்தவரை, கிமு 493 இன் இறுதியில் இருந்த ஒரே முடிக்கப்படாத பணியாக கிளர்ச்சியை ஆதரித்த ஏதென்சு, எரித்திரியா ஆகியவற்றிற்கு சரியான பாடம் கற்பிக்காதது ஆகும்.[35] ஐயோனியன் கிளர்ச்சியானது டேரியசின் பேரரசின் நிலைத்தன்மைக்கு கடுமையாக அச்சுறுத்தியது. மேலும் கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிகளை சரியாக கையாளாமல் விட்டால் மீண்டும் தங்கள் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்துல் ஏற்படும் என்று கருதினர். ஏதென்சு மற்றும் எரித்திரியாவை அழிக்கவேண்டும் என்பது தொடங்கி கிரேக்கத்தை முழுமையாக வெற்றி கொள்ள டேரியஸ் சிந்திக்கத் தொடங்கினார்.[35] இதன் விளைவாக கிரேக்கத்தின் மீதான முதல் பாரசீக படையெடுப்பானது, அடுத்த ஆண்டு, கிமு 492 இல் தொடங்கியது. மார்தோனியசு (ஐயோனியா வழியாக) கிரேக்கத்தை முற்றுகையிட அனுப்பப்பட்டார். மேலும் முடிந்தால் ஏதென்சு மற்றும் எரேட்ரியாவுக்குச் செல்லவும் அறிவுருத்தப்பட்டார்.[36] கிளர்ச்சிகளின் போது பாரசீக ஆட்சியிலிருந்து விடுபட்ட திரேசு மீண்டும் அடிபணிந்தது. மேலும் மாசிடோனியா பாரசீகத்திற்கு அடிமையாக மாற வேண்டிய கட்டாயம் உண்டானது. இருப்பினும், பாரசீக கடற்படை பேரழிவுக்கு உள்ளானதால் அதன் முன்னேற்றம் நிறுத்தப்பட்டது.[36] கிமு 490 இல் தேடிஸ் மற்றும் அர்டாபெர்னெஸ் ஆகியோரின் தலைமையின் கீழ் இரண்டாவது போர்ப் பயணம் தொடங்கப்பட்டது. இந்தப் படைகள் ஏஜியன் கடல் வழியாகச் சென்று, யூபோயாவை அடையும் முன், சைக்லேட்சைக் கைப்பற்றியது. எரித்திரியா முற்றுகையிடப்பட்டு, கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் படை அட்டிகாவிற்கு நகர்ந்தது. மராத்தான் விரிகுடாவில் தரையிறங்கிய அவர்கள், ஏதெனிய இராணுவத்தை எதிர்கொண்டனர். மேலும் புகழ்பெற்ற மராத்தான் சமரில் தோற்கடிக்கப்பட்டனர். இதன் மூலம் கிரேக்கத்தை அடிபணியச் செய்வதற்கான முதல் பாரசீக போர் முயற்சி முடிவுக்கு வந்தது.[37]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Herodotus I, 142–151
- ↑ Herodotus I, 142
- ↑ Herodotus I, 26
- ↑ Herodotus I, 141
- ↑ 5.0 5.1 5.2 Holland, p. 147–151.
- ↑ Holland, pp. 153–154.
- ↑ Herodotus V, 30
- ↑ Herodotus V, 31
- ↑ Herodotus V, 33
- ↑ Herodotus V, 34
- ↑ Herodotus V, 35
- ↑ 12.0 12.1 12.2 Fine, pp. 269–277.
- ↑ Holland, pp. 155–157.
- ↑ 14.0 14.1 Holland, pp. 157–159.
- ↑ 15.0 15.1 15.2 15.3 Holland, pp. 160–162.
- ↑ Herodotus V, 100
- ↑ Herodotus V, 101
- ↑ Herodotus V, 102
- ↑ 19.0 19.1 Herodotus V, 103
- ↑ Herodotus V, 104
- ↑ 21.0 21.1 21.2 21.3 Boardman et al, pp. 481–490.
- ↑ Herodotus V, 124–126
- ↑ 23.0 23.1 23.2 Herodotus VI, 6
- ↑ Herodotus VI, 8
- ↑ 25.0 25.1 25.2 25.3 Herodotus VI, 9
- ↑ Herodotus VI, 11
- ↑ Herodotus VI, 12
- ↑ 28.0 28.1 Herodotus VI, 13
- ↑ 29.0 29.1 29.2 Herodotus VI, 14
- ↑ Herodotus VI, 15
- ↑ Herodotus VI, 16
- ↑ Herodotus VI, 19
- ↑ Herodotus VI, 25
- ↑ Herodotus VI, 33
- ↑ 35.0 35.1 Holland, pp. 175–177.
- ↑ 36.0 36.1 Herodotus VI, 43
- ↑ Herodotus VI, 94–116