உள்ளடக்கத்துக்குச் செல்

டோரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோரியர் (Dorians (/ˈdɔːriənz/; கிரேக்க மொழி: Δωριεῖς, Dōrieîs, ஒருமை Δωριεύς, Dōrieús) என்போர் பண்டைய கிரேக்கத்தின் நான்கு முக்கிய இனக்குழுக்களில் ( பிறர் ஏயோலியன்கள், அச்சேயர்கள் மற்றும் அயோனியர்கள் ) ஒருவர் ஆவர். [1] இவர்கள் குறித்து துவக்ககால இலக்கியக் குறிப்புகள் ஒடிசியில் காணப்படுகின்றன. [2] இவர்கள் ஏற்கனவே கிரீட் தீவில் வசித்து வந்தவர்களாவர்.

இவர்கள் வாழ்க்கை முறை மற்றும் சமூக அமைப்பில் வேறுபட்டவர்களாக இருந்தனர். டோரியர்கள் டோரிக் கிரேக்க பேச்சுவழக்கு மற்றும் சமூக மற்றும் வரலாற்று மரபுகளால் வேறுபடுத்தப்பட்டனர்.

கிமு 5 ஆம் நூற்றாண்டில், டோரியர்கள் மற்றும் அயோனியர்கள் அரசியல் ரீதியாக முக்கியமான இரண்டு கிரேக்க இனக் குழுக்களாக இருந்தனர். அவர்களின் இறுதி மோதல் பெலோபொன்னேசியன் போரில் விளைந்தது. ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்கர்களில் எந்த அளவிற்கு "அயோனியர்" அல்லது "டோரியர்" என்று தனித்து அடையாளம் காணப்பட்டனர் என்பது சர்ச்சைக்குரியது. ஏதெனியரின் போர் தொடர்களில் டோரியர் எதிர்ப்பு கூறுகள் இருந்தபோதிலும், ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்க கலாச்சாரத்தில் உண்மையான இனக் கூறு எதுவும் இல்லை என்று எட்வார்ட் வில் தீவிரமாக முடிவு செய்துள்ளார். மறுபுறம் ஜான் ஆல்டி ஐந்தாம் நூற்றாண்டின் செயல்பாடுகளுக்கு இனம் ஒரு தூண்டுகோலாக இருந்தது என்ற முடிவுக்கு ஆதாரங்களை கொடுத்து மறுவிளக்கம் அளிக்கிறார். [3] கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டு இலக்கிய பாரம்பரியத்தின் மூலம் இந்த இன அடையாளங்களை பார்க்கும் நவீனர்கள் தங்கள் சொந்த சமூக அரசியலால் ஆழமாக செல்வாக்கு பெற்றுள்ளனர்.

தோற்றம்

[தொகு]

டோரியர்களின் பிறப்பிடம் குறித்த தகவல்கள் மாறுபடுகின்றன. பண்டைய காலங்களில் பரவலாக நம்பப்பட்ட ஒரு கோட்பாடின்படி, இவர்கள் மாசிடோனியா மற்றும் எபிரஸ் போன்ற வடக்கு கிரீஸின் மலைப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் தெளிவற்ற சூழ்நிலைகளில் தெற்கே பெலோபொன்னீஸ், சில ஏஜியன் தீவுகள், மாக்னா கிரேசியா, லேபிதோஸ் மற்றும் கிரீட் ஆகியவற்றிற்கு வந்தனர். தொன்மவியல் இவர்களுக்கு கிரேக்க வம்சாவலியை கொடுத்தன. இந்த இனத்தின் பெயருக்குரிய நிறுவனர், கிரேக்கர்களின் குலபதியாக டோரஸ் மகன் ஹல்லன் குறிப்பிடப்படுகிறார்.

வருகை

[தொகு]

வடபகுதியில் இருந்து டோரியர்கள் கி.மு. 1104 இல் பெலொப்பொனேசிவுக்கு படையெடுத்து வந்து குடியேறினர் என்று கருதப்படுகிறது. அக்கீயர்கள் மிகுதியாக வெண்கலத்தை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். ஆனால் நாடோடிகளாக இருந்த டோரியர் இரும்பை பயன்படுத்தினர். இதனால் இவர்களின் கையே ஓங்கியது. பெலொப்பொனேசிவில் ஆங்காங்கு ஆண்டு கொண்டிருந்த அக்கீய மன்னர்களை தங்கள் வாளுக்கு இரையாக்கினர். அக்கீயர்களின் பண்பாட்டுச் சின்னங்கள் பலவற்றை அழித்தனர். மைசீனி நகரம் உட்பட பல நகரங்கள் அழிக்கப்பட்டன.[4]

பெலொப்பொனேசிவின் பல பகுதிகளுக்கும் சென்று பரவிய டோரியர்களில் ஒரு பிரிவினர், தெற்கே லாசிடீமோன் (Lacedaemon) என்ற கணவாய்ப் பிரதேசத்தை தங்கள் நிறந்தர வாழ்விடமாக கொண்டனர். இதன் மையத்தில் இருந்த ஸ்பாட்டா என்ற சிற்றூர் தொகுதி இவர்களின் தலைநகரமாக ஆனது. இதுவே பின்னர் ஸ்பார்ட்டா நகர அரசாக வளர்ந்தது.[4]

டோரியர்களின் வருகைக்குப் பிறகு அவர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாத அக்கீயர் முதலான இனத்தவர் பெலொப்பொனேசிவை விட்டு வெளியாறி கிரேக்கத்தின் பிற பகுதிகளுக்கும், கிரேக்ககத்தைச் சூழ்ந்துள்ள தீவுகளிலும் சிறிய ஆசியாவின் கடலோரப் பகுதிகளிலும் குடியேறினர். இந்தப் பகுதிகளுக்கு பிறகு வந்த டோரியர்களும் காலம் செல்லச் செல்ல சில நூற்றாண்டுகளிலு அவர்களுடன் கலந்தனர்.[4]

விளைவுகள்

[தொகு]

டோரியர்களின் தெற்கு நோக்கிய படையெடுப்புக்குப் பிறகு சுமார் முந்நூறு நூற்றாண்டுகள் கிரேக்கத்தின் வாழ்வில் இருள் சூழ்ந்தது. அரசியல் ஒழுங்கு இல்லை. இதனால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனானான். வணிகமும், வேளாண்மையும் சீர்குலைந்தன. அடிக்கடி போர்கள் நடந்துவந்தன. மக்களிடையே வறுமை அதிகரித்து. அமைதியையும், பாதுகாப்பையும் தேடி ஊர்வூராக மக்கள் அலைந்தனர். இவ்வாறு கிரேக்கம் கி.மு. பதினோறாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. எட்டாம் நூற்றாண்டுவரை சுமார் 300 ஆண்டுகாலம் அல்லல்பட்டது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. Apollodorus, Library, I, 7.3
  2. Homer, Odyssey, Book XIX (Line 177).
  3. Alty, John (1982). "Dorians and Ionians". The Journal of Hellenic Studies 102: 1–14. doi:10.2307/631122. 
  4. 4.0 4.1 4.2 4.3 வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 48–51.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரியர்&oldid=3342522" இலிருந்து மீள்விக்கப்பட்டது