பாரம்பரிய ஏதென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Athens
Ἀθῆναι
கிமு 508–கிமு 322
அதீனாவின் ஆந்தை, ஏதென்சின் புரவலர் of
அதீனாவின் ஆந்தை, ஏதென்சின் புரவலர்
டெலியன் கூட்டணி ("ஏதெனியன் பேரரசு") மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. ஏதெனியன் பிரதேசம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது பெலோபொன்னேசியன் போருக்கு முன் கிமு 431 இல் இருந்த நிலைமைபடி.
டெலியன் கூட்டணி ("ஏதெனியன் பேரரசு") மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. ஏதெனியன் பிரதேசம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது பெலோபொன்னேசியன் போருக்கு முன் கிமு 431 இல் இருந்த நிலைமைபடி.
தலைநகரம்ஏதென்ஸ்
பேசப்படும் மொழிகள்Attic Greek
சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம்ஏதெனியன் சனநாயகம்
ஸ்ரடிகெஸ் 
• கிமு 449–429
பெரிக்கிளீசு
சட்டமன்றம்எக்லேசியா
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• கிளீசுத்தனீசு ஏதெனியனை நிறுவுகிறார்
கிமு 508
கிமு 478–404 (கிமு 404–403 முப்பது கொடுங்கோலர்கள்)
கிமு 378–355
கிமு 322
மக்கள் தொகை
• கிமு 5 ஆம் நூற்றாண்டு1
250~370,000 (குடிமை உரிமைகள் கொண்ட ஆடவர்: 30~40,000)
நாணயம்திராக்மா
முந்தையது
பின்னையது
பிசிசுட்ரேடசு
கொரிந்து கூட்டணி

ஏதென்ஸ் நகரம் ( பண்டைக் கிரேக்கம்Ἀθῆναι நவீன கிரேக்கம் : Αθήναι அதீன் அல்லது, பொதுவாக ஒருமையில், Αθήνα அதீனா) பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) [1] குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது. இது கிரேக்கத்தின் அட்டிகாவில் அமைந்துள்ளது. எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியன் போரில் இது டெலியன் கூட்டணியை வழிநடத்தியது. ஏதெனியன் சனநாயகமானது கிமு 508 இல் இசகோரசின் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்து கிளீசுத்தனீசுவின் கீழ் நிறுவப்பட்டது. இந்த அரசு அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது. ஏதெனிய சனநாயகமானது சில காலம் தடைகளுக்கு ஆளாகினாலும் கிமு 322 வரை ( லாமியன் போருக்குப் பிறகு) 180 ஆண்டுகளாக நீடித்தது. ஏதெனியன் மேலாதிக்கத்தின் உச்ச வளர்ச்சியானது கிமு 440 முதல் 430 வரை எட்டப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்று அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய காலத்தில், ஏதென்சு கலை, கல்வி, மெய்யியல் போன்றவற்றின் மையமாக இருந்தது. பிளேட்டோவின் கல்விக்கழகம் மற்றும் அரிஸ்டாட்டிலின் லைசியம் ஆகியவற்றின் அமைவிடமாக இருந்தது. [2] ஏதென்சு சாக்கிரட்டீசு, பிளேட்டோ, பெரிக்கிளீசு, அரிஸ்டாஃபனீஸ், சாஃபக்கிளீசு மேலும் பண்டைய உலகின் பல முதன்மை மெய்யியலாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பிறப்பிடமாகவும் இருந்தது. இது மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றும், சனநாயகத்தின் பிறப்பிடமாகவும் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. [3] இதன் கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் அப்போதைய அறியப்பட்ட ஐரோப்பிய கண்டத்தின் மற்ற பகுதிகளில் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது ஆகும். [4]

வரலாறு[தொகு]

அதிகார எழுச்சி (கிமு 508–448)[தொகு]

பிசிசுட்ரேடசுவின் மகன் இப்பியாஸ், சுமார் கிமு 527 இல் அவரது தந்தை இறந்த பிறகு ஏதென்சை அவரது சகோதரர் இப்பார்க்கசுடன் இணைந்து ஆட்சி செய்தார். சுமார் 514 இல் இப்பர்கசு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இப்பியாஸ் தனித்து ஆட்சியை ஏற்றுக்கொண்டார். மேலும் அவரது சகோதரரின் இழப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, கொடுங்கோலனாக செயல்பட்டு, மோசமான ஒரு தலைவராக ஆனார். இப்பியாசு ஏதெனியன் உன்னத குடும்பங்களில் 700 பேரை நாடுகடத்தினார். அவர்களில் கிளீசுத்தனீசு குடும்பம், அல்க்மேயோனிட்ஸ் குடும்பம் போன்றவை அடங்கும். நாடுகடத்தப்பட்ட, அவர்கள் தெல்பிக்குச் சென்றனர். தெலிப்யில் உள்ள அப்போலோ கோயில் பூசாரியான பைத்தியாவிடம், எசுபார்த்தன்கள் அட்டிகாவை ஆக்கிரமித்து இப்பியாசை வீழ்த்த வேண்டும் என்று அவர்களுக்கு செல்லவேண்டும் என்பதற்காக பூசாரிக்கு கையூட்டு கொடுத்ததாகக் எரோடோட்டசு [5] கூறுகிறார். அது பல முறை நடந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் இப்பியாசைத் தூக்கி எறிய எசுபார்த்தன் படையை முதலாம் கிளியோமினெஸ் வழிநடத்தினார். அதில் வெற்றியடைந்து ஏதென்சில் சிலவர் ஆட்சியை நிறுவினார். ஆனால் பல ஏதெனியர்கள் போல எசுபார்த்தன் ஆதரவு சிலவர் ஆட்சியை கிளீசுத்தனீசு விரும்பவில்லை. அதனால் அதிகார மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொண்டார். இதன் விளைவாக ஏதென்சின் சனநாயகவாதிகளின் உதவியுடனும், நடுத்தர வர்கத்தினரின் ஆதரவுடனும் அதிகாரத்தைக் கைப்பற்றினார். சனநாயகவாதிகளின் ஆதரவு இல்லையானால், அவர் தோற்கடிக்கப்பட்டிருப்பார். எனவே ஏதெனியன் சனநாயகம் அதை வளர்த்தெடுத்த மனிதனுக்கு பெரிதும் உதவியது. கிளீசுதனிசின் சீர்திருத்தங்களானது பாரம்பரிய நான்கு அயனியன் "பழங்குடியினரை" (பைல்) அவர்கள் வாழ்ந்த இடத்தின் அடிப்படையில் பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவற்றிற்கு கிரேக்கத்தின் புகழ்பெற்ற நாயகர்களின் பெயரிடப்பட்டது. அந்தப் பிரிவுகள் எந்த வர்க்கத்தின் அடிப்படையிலும் இல்லாமல், அவை வாக்காளர்களர் சேர்ந்த பகுதிகளாக செயல்பட்டன. ஒவ்வொரு பழங்குடியினரும் மூன்று திரிட்டிகளாகப் பிரிக்கப்பட்டனர் (கடற்கரை பகுதி ஒன்று; நகரப் பகுதி, ஊரகப் பகுதி ஒன்று), ஒவ்வொரு டிரிட்டிகளும் தங்கள் மக்கள்தொகையைப் பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தெமெக்களைக் கொண்டிருந்தன. பாரம்பரிய பழங்குடி பிரிவினரை அரசியல் ரீதியாக பொருத்தமற்றதாக்கி, பத்து புதிய பழங்குடி பிரிவுகளை உருவாக்கினார். இது உள்ளூர் அரசாங்கத்தின் அடிப்படையாக மாறியது. பழங்குடியினர் ஒவ்வொரு நாளும் ஏதென்சை ஆளும் அவையான பூலிக்கு ஐம்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். நகைச்சுவைக் கவிஞர்களால் எழுதப்பட்டு, நகர அரங்குகளில் நிகழ்த்தப்படும் அரசியல் நையாண்டிகளால் வாக்காளர்களின் பொதுக் கருத்தில் தாக்கம் ஏற்பட்ட வாய்ப்பு இருந்தது. [6] எக்லேசியா அல்லது சட்டமன்றம் அனைத்து குடிமக்களும் நிறைந்திருந்தது. மேலும் சட்டமன்றமானது உச்ச நீதிமன்றமாகவும் செயல்பட்டது. கொலை வழக்குகள் மற்றும் சமய விசயங்களைத் தவிர, இது அரியோப்பாகுவின் எஞ்சியுள்ள கடமைகளை செய்வதாக மாறியது. பத்து ஸ்ரடிகெஸ்கள் (ஜெனரல்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பரவலாக நிறைய அலுவலர்கள் இருந்தனர்.

துவக்ககால ஏதெனியன் நாணயம், கிமு 5 ஆம் நூற்றாண்டு. பிரித்தானிய அருங்காட்சியகம்

கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஏதென்சின் வளர்ச்சிக்கு லாரியன் வெள்ளி சுரங்கங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. அப்போது ஏதெனியர்கள் தாதுவை சுத்திகரித்து, செம்மைபடுத்தவும் கற்றுக்கொண்டனர். மேலும் தெமிஸ்ட்டோக்ளீனீசின் முயற்சியின் பேரில் ஒரு பெரிய கடற்படையை உருவாக்க அந்த செல்வத்தை பயன்படுத்தினர். [7]

பாரசீக பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சின்ன ஆசியாவின் ஐயோனியன் கிரேக்கர்களுக்கு உதவ கிமு 499 இல் ஏதென்சு தன் கடற்படைகளை அனுப்பியது (பார்க்க ஐயோனியன் கிளர்ச்சி ). இது கிரேக்கத்தின் மீது பாரசீகர்கள் இரண்டு முறை படையெடுக்க காரணமாயிற்று. இந்த இரண்டு படையெடுப்புகளையும் தளபதிகளும் அரசியல்வாதிகளுமான மில்டியாடீசு மற்றும் தெமிஸ்ட்டோக்ளீஸ் ( பாரசீகப் போர்களைப் பார்க்கவும்) தலைமையிலான நடவடிக்கைகளில் முறியடிக்கபட்டன. 490 இல் மில்டியாடீசு தலைமையிலான ஏதெனியர்கள், மாராத்தான் சமரில் மன்னர் முதலாம் டேரியசால் வழிநடத்தப்பட்ட பாரசீகர்களின் முதல் படையெடுப்பைத் தடுத்தனர். 480 இல் பாரசீகர்கள் தங்கள் புதிய மன்னரான முதலாம் செர்கசின் கீழ் மீண்டும் படையெடுத்து வந்தனர். எசுபார்தன் மன்னர் லியோனிடாசு தலைமையிலான எலெனியக் கூட்டணியில் 7,000 வீரர்களைக் கொண்டு 100,000-250,000 படைபலம் கொண்ட செர்கசின் இராணுவத்திற்கு எதிராக தெர்மோபைலேயின் குறுகிய பாதையில் எதிர்கொண்டு போர்புரிந்தனர். அப்போரில் மன்னர் லியோனிடாசு மற்றும் 300 பிற எசுபார்த்தன் உயரடுக்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், ஏதெனியர்கள் ஆர்ட்டெமிசியத்தில் ஒரு முடிவுக்கு வராத கடற்ப் போரை நடத்தினர். எவ்வாறாயினும், பாரசீக முன்னேற்றத்தை தடுக்க அந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. பாரசீகப் படைகள் விரைவில் போயோட்டியா வழியாக அணிவகுத்து, தீப்சை தங்கள் நடவடிக்கைகளுக்கு தளமாக அமைத்துக் கொண்டு, தெற்கு கிரேக்கத்திற்குள் நுழைந்தது. ஏதென்சை நோக்கி பாரசீக படைகள் வருவதை உணர்ந்து அதன் மக்கள் அங்கிருந்து முன்னதாகவே வெளியேறி இருந்தனர். இந்நிலையில் பாரசீகர்கள் மக்கள் இல்லாத ஏதென்சைக் கைப்பற்றி அழித்தனர். அதைத் தொடர்ந்து, ஏதெனியர்களும் அவர்களது கூட்டாளிகளும், தெமிஸ்ட்டோக்ளீஸ் தலைமையில், சலாமிஸ் சமரில் பாரசீக கடற்படையை கடற்போரில் தோற்கடித்தனர். கிரேக்கர்கள் தோற்கடிக்கப்படுவதைக் காண்பதற்காக பாரசீக மன்னர் செர்க்செஸ் கடற்கரையை ஒட்டியுள்ள குன்றில் ஒரு சிம்மாசனத்தை அமைத்து அதில் இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, போரில் பாரசீகர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பிறகு ஏதென்சு தன் போரை ஆசியா மைனருக்கு கொண்டு சென்றது. அது ஈட்டிய வெற்றிகளால் ஏஜியன் மற்றும் கிரேக்கத்தின் பல பகுதிகளை ஏதெனியன் ஆதிக்கக் கூட்டணியான டெலியன் கூட்டணியில் ஒன்றிணைத்தது.

ஏதெனியன் மேலாதிக்கம் (கிமு 448–430)[தொகு]

பெரிக்கிளீசு - ஒரு ஏதெனியன் தளபதி, அரசியல்வாதி, பேச்சாளர் ஆவார். அவரது காலத்தின் மற்ற ஆளுமைகள் அரசியல், மெய்யியல், கட்டிடக்கலை, சிற்பம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மனிதர்களை விட தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவர் கலை, இலக்கியம் போன்றவற்றை வளர்த்தார். மேலும் ஏதென்சுக்கு அதன் வரலாற்று காலம் முழுவதும் திரும்பக் கிடைக்காத ஒரு சிறப்பைக் கொடுத்தார். ஏராளமான பொதுப்பணித் திட்டங்களைச் செயல்படுத்தி குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார். எனவே, அவரது காலத்தை ஏதெனியன் பொற்காலம் என்று அழைக்கின்றனர். தென்கிழக்கு அட்டிகாவில் உள்ள லாரியத்தில் வெட்டியெடுக்கப்பட்ட வெள்ளி ஏதென்சின் இந்த "பொற்கால" செழுமைக்கு பெரிதும் பயன்பட்டது.

சனநாயகப் பிரிவின் தலைவராக எபியால்ட்டீசு இருந்த காலத்தில், பெரிக்கிளீசு அவரது துணைவராக இருந்தார். எபியால்ட்டீஸ் அவரது எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டபிறகு, பெரிகிளீசு நுழைந்து கி.மு 445 இல் ஜெனரலாக அல்லது ஸ்ரடிக்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; கிமு 429 இல் அவர் இறக்கும் வரை அவர் தொடர்ந்து ஏதெனியன் சட்டமன்றத்தின் தேர்தல் மூலம் பதவியில் தேர்ந்தெடுக்கபட்டு நீடித்து வந்தார். பார்த்தினன், ஏதெனா தேவிக்கு ஆடம்பரமாக கட்டபட்ட கோயில் போன்றவை, பெரிகிளீசின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்பட்டன. [8]

பெலோபொன்னேசியன் போர் (கிமு 431–404)[தொகு]

ஏதென்சில் உள்ள நவீன தேசிய அகாடமி, அதன் நெடிய தூண்களில் அப்பல்லோவும், ஏதெனாவும். முன்னே அமர்ந்த நிலையில் சாக்ரடீசும், பிளாட்டோவும்

ஏதென்சின் மேலாதிக்கத்தினால் மற்ற நகரங்களிடையே ஏற்பட்ட வெறுப்பு கிமு 431 இல் பெலோபொன்னேசியன் போருக்கு வழிவகுத்தது. இது ஏதென்சையும் அதன் பெருகிய வளர்ந்த கடல் சாம்ராஜ்யத்தையும் எசுபார்த்தா தலைமையிலான நில அடிப்படையிலான அரசுகளின் கூட்டணியை எதிராக நிறுத்தியது. இந்த மோதல் கடலில் ஏதெனியன் ஆளுமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டி நடந்தது ஆகும். ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையேயான இந்தப் போர், எசுபார்த்தா தனக்கான சொந்தமாக கடற்படையை உருவாக்கிய பிறகு ஏதெனியன் அரசு தோல்வியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஏதெனியன் சனநாயகம் கிமு 411 இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் சிறிதுகாலம் தூக்கியெறியப்பட்டது. அது போரை மோசமாகக் கையாண்டதால் ஏற்பட்டது. ஆனால் சனநாயகம் விரைவாக மீட்டெடுக்கப்பட்டது. கிமு 404 இல் ஏதென்சின் முழுத் தோல்வியுடன் போர் முடிந்தது. தோல்விக்கு காரணமாக பெரும்பாலும் சனநாயக அரசியல்வாதிகளான கிளியோன் மற்றும் கிளியோபோன் போன்றவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதால், எசுபார்த்தன் இராணுவத்தின் ( முப்பது கொடுங்கோலர்களின் ஆட்சி) உதவியுடன் சனநாயகத்திற்கு எதிராக ஒரு அரசு இருந்தது. 403 இல், திராசிபுலசால் சனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது.

கொரிந்தியப் போர் மற்றும் இரண்டாம் ஏதெனியன் கூட்டணி (கிமு 395–355)[தொகு]

எசுபார்த்தாவின் முன்னாள் கூட்டாளிகள் ஏதென்சை அது வெற்றிகொண்ட பிறகான அதன் ஏகாதிபத்தியக் கொள்கைகளால் விரைவில் அதற்கு எதிராகத் திரும்பின. மேலும் ஏதென்சின் முன்னாள் எதிரிகளான தீப்ஸ், கொரிந்து போன்றவை அதன் கூட்டாளிகளாக மாறின. ஆர்கோஸ், தீப்ஸ், கொரிந்து போன்றவை ஏதென்சுடன் கூட்டு சேர்ந்து, கிமு 395-387 வில் எசுபார்த்தாவுக்கு எதிராக தீவிரமாக கொரிந்தியப் போரில் போரிட்டன. எசுபார்த்தாவிற்கு எதிராக உருவான இந்த எதிர்ப்பானது ஏதென்சுக்கு ஏதெனியன் இரண்டாவது கூட்டணியை நிறுவ உதவியது. இறுதியாக கிமு 371 இல் தீப்ஸ் லியூக்ட்ரா சமரில் எசுபார்த்தாவை தோற்கடித்தது. இருப்பினும், அதன்பின்னர் ஏதென்சு உட்பட மற்ற கிரேக்க நகரங்கள் தீப்சுக்கு எதிராகத் திரும்பின. அதன் தலைவரான இராணுவ மேதை எபமினோண்டாசின் மரணத்துடன் அதன் மேலாதிக்கம் மாண்டினியா போரில் (கிமு 362) முடிவுக்கு வந்தது.

மாசிடோனின் கீழ் ஏதென்சு (கிமு 355–322)[தொகு]

இருப்பினும், நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஏதெனிய விவகாரங்களில் வடக்கு கிரேக்க இராச்சியமான மாசிடோனியா ஆதிக்கம் செலுத்தியது. கிமு 338 இல் இரண்டாம் பிலிப்பின் படைகள் ஏதென்சை செரோனியா போரில் தோற்கடித்து, ஏதெனிய சுதந்திரத்தை கட்டுப்படுத்தியது. கிமு 338-37 குளிர்காலத்தில் மாசிடோனியா, ஏதென்சு மற்றும் பிற கிரேக்க அரசுகள் கொரிந்து கூட்டணியின் ஒரு பகுதியாக மாறின. மேலும், அவரது மகன் அலெக்சாந்தரின் வெற்றிகள் கிரேக்க எல்லைகளை விரிவுபடுத்தியது. அதன்பிறகு பாரம்பரிய கிரேக்க நகர அரசுகள் வழக்கற்றுப் போயின. மாசிடோனிய ஆட்சியாளரான ஆண்டிபேட்டர் ஏதெனியன் அரசாங்கத்தை கலைத்து, அங்கு கிமு 322 இல் செல்வக்குழு ஆட்சி அமைப்பை நிறுவினார் (பார்க்க லாமியன் போர் மற்றும் டெமெட்ரியஸ் ஃபலேரியஸ் ). ஏதென்ஸ் ஒரு அறிவார்ந்த கலாச்சார வாழ்க்கையுடைய ஒரு பணக்கார நகரமாக இருந்தது, ஆனால் ஒரு சுதந்திர சக்தி என்று இல்லாமல்போனது.

நகரம்[தொகு]

பருந்துப் பார்வை[தொகு]

பண்டைய ஏதென்சின் வரைபடம் நடுவில் அக்ரோபோலிஸ், வடமேற்கில் அகோரா மற்றும் நகர மதில் சுவர்களைக் காட்டுகிறது.

ஏதென்சு நகரம் அட்டிகாவில், கடலில் இருந்து சுமார் 30 ஸ்டேடியாவில், லைகாபெட்டஸ் மலையின் தென்மேற்கு சரிவில், மேற்கில் செபிசஸ், தெற்கே இலிசோசு மற்றும் வடக்கே எரிடானோஸ் ஆகிய சிறிய ஆறுகளுக்கு இடையில் இருந்தது. ஏதென்சு மதில் சூழ்ந்த நகரமாக சுமார் 1.5 km (0.93 mi) விட்டம் கொண்டதாக இருந்தது. நகரமானது அதன் உச்ச உயர்வு காலத்தில் இந்தச் சுவர்களுக்கு அப்பால் பரந்து விரிந்த புறநகர்ப் பகுதிகள் கொண்டதாக இருந்தது. அக்ரோபோலிஸ் இந்த மதில் சுவர் பகுதியின் மையத்திற்கு தெற்கே இருந்தது. கிமு 480 இல் செர்கசால் நகரம் எரிக்கப்பட்டது, ஆனால் விரைவில் தெமிஸ்டோகள்ளீசின் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் கட்டப்பட்டது. மேலும் சிமோன் மற்றும் குறிப்பாக பெரிக்கிளீசு காலத்தில் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் கட்டபட்டு நகரம் அழகூட்டப்பட்டது. அந்தக் காலத்தில் (கிமு 461-429) அது மிகப்பெரிய சிறப்பை எட்டியது. அதன் அழகு முக்கியமாக அதன் பொதுக் கட்டிடங்களால் விளங்கியது. ஏனெனில் தனியார் வீடுகள் பெரும்பாலும் சிறியவை மேலும் அதன் தெருக்கள் மோசமாக அமைக்கப்பட்டிருந்தன. பெலோபொன்னேசியன் போரின் முடிவில், இது 10,000 இக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டிருந்தது. [9] ஒரு வீட்டிற்கு 12 குடியிருப்பாளர்கள் என்ற விகிதத்தில் 120,000 மக்களைக் கொண்டதாக ஆனது. இருப்பினும் சில எழுத்தாளர்கள் 180,000 மக்களைக் கொண்டிருந்தது என்கின்றனர். ஏதென்சு இரண்டு வெவ்வேறு பகுதிகளைக் கொண்டிருந்தது:

  • நகரம், என அழைக்கப்படும் பகுதி, மேல் நகரம் அல்லது அக்ரோபோலிஸ் மற்றும் கீழ் நகரம் என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. இது தெமிஸ்ட்டோக்ளீஸ் சுவர்களால் சூழப்பட்டிருந்தது.
  • பிரேயஸ் துறைமுக நகரமும், தெமிஸ்ட்டோக்ளீஸ் சுவர்களால் சூழப்பட்டிருந்தது. மேலும் மற்றும் பெரிக்கிளீசுவின் கீழ் கட்டப்பட்ட நெடுஞ் சுவர்களால் நகரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

நகர மதில் சுவர்கள்[தொகு]

ஏதென்சின் சுற்றுப்புறங்களின் வரைபடம் பிரேயஸ், பலேரம் மற்றும் நீண்ட சுவர்களைக் காட்டுகிறது

நகரம் வெண்கல காலத்திலிருந்து தற்காப்பு மதில் சுவர்களால் சூழப்பட்டதாக இருந்தது. மேலும் அவை பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் கட்டப்பட்டு நீட்டிக்கப்பட்டன.

கூடுதலாக, நீண்ட மதில்கள் எனப்படும் சுவர்கள் பிரேயசை ஏதென்சுடன் இணைக்கும் வகையில் இரண்டு இணையான சுவர்களைக் கொண்டதாக இருந்தன. அவை 40 ஸ்டேடியன் நீளம் (4.5 மைல்கள், 7 கிமீ), ஒன்றுக்கொன்று இணையாக சென்றன. அவற்றுக்கிடையே ஒரு குறுகிய பாதையும் இருந்தது. மேலும், கிழக்கில் பலேரம் வரை ஒரு சுவர், 35 ஸ்டேடியா நீளம் (4 மைல்கள், 6.5 கிமீ) கொண்டதாக இருந்தது. ஆக மொத்தம் மூன்று நீண்ட மதில்கள் இருந்தன; ஆனால் நீண்ட மதில்கள் என்ற பெயர் பிரேயசை இணைக்கும் இரண்டிற்குள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது, அதே சமயம் பலேரத்திற்கு இட்டுச் செல்லும் சுவர் ஃபலேரியன் சுவர் என்று அழைக்கப்பட்டது. சுவர்களின் முழு சுற்றும் 174.5 ஸ்டேடியா (கிட்டத்தட்ட 22 மைல்கள், 35 கிமீ), இதில் 43 ஸ்டேடியா (5.5 மைல்கள், 9 கிமீ) நகரத்தைச் சேர்ந்தது, 75 ஸ்டேடியா (9.5 மைல்கள், 15 கிமீ) நீளமான சுவர்கள் மற்றும் 56.5 ஸ்டேடியா (7 மைல்கள், 11 கிமீ) பிரேயஸ், முனிச்சியா மற்றும் ஃபலேரம் வரை இருந்தன.

அக்ரோபோலிசு (மேல் நகரம்)[தொகு]

அக்ரோபோலிசு 1846 ஆம் ஆண்டு லியோ வான் கிளென்சின் ஓவியத்தில் கற்பனையாக வரையப்பட்டது.

அக்ரோபோலிசு, அதன் புகழ்பெற்ற நிறுவனர் செக்ரோப்சால் செக்ரோபியா என்றும் அழைக்கப்பட்டது. இந்த நகரின் நடுவில் ஒரு செங்குத்தான பாறை, சுமார் 50 மீட்டர் உயரம், 350 மீட்டர் நீளம் மற்றும் 150 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இந்த நகரம் முதலில் பெலாஸ்சியர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பண்டைய செப்பமுறாக் கற்காரைக் கட்டடச் சுவரகளால் சூழப்பட்டிருந்தது. பெலோபொன்னேசியன் போரின் போது இந்த சுவரின் வடக்கு பகுதி மட்டுமே எஞ்சியிருந்தது, மேலும் இந்த பகுதி இன்னும் பெலஸ்ஜிக் சுவர் என்று அழைக்கப்படுகிறது; சிமோனால் புனரமைக்கப்பட்ட தெற்கு பகுதி சிமோனியன் சுவர் என்று அழைக்கப்படுகிறது. அக்ரோபோலிசின் மேற்கு முனையின், அணுகல் மட்டுமே நடைமுறையில் இருந்தது. பெரிக்கிளீசால் கட்டப்பட்ட "நுழைவாயில்கள்" என்ற பிரம்மாண்டமான பிராபிலேயா என்னும் நுழைவாயில் இருந்தது. அதன் வலது சிறகின் முன் அதீனா நைக்கின் சிறிய கோயில் இருந்தது . அக்ரோபோலிசின் மையமானது கோயில்கள், வெண்கல மற்றும் பளிங்கு சிலைகள் மற்றும் பல்வேறு கலைப் படைப்புகள் கொண்டதாக இருந்தது. கோவில்களில், "கன்னி" தெய்வமான ஏதெனாவிற்கு புனிதமான பார்த்தினன் கோவில்களில் மிகப் பெரியதானது. மேலும் பார்த்தீனனுக்கு வடக்கே அற்புதமான எரெச்தியொன் கட்டடம் உள்ளது. அதில் மூன்று தனித்தனி கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று அதீனா போலியாஸ் அல்லது "நகரின் காவல் தெய்வம்" என்பதாகும்.

அகோரா (கீழ் நகரம்)[தொகு]

கீழ் நகரம் அக்ரோபோலிசைச் சுற்றியுள்ள சமவெளியில் கட்டப்பட்டது. ஆனால் இந்த சமவெளியில் குறிப்பாக தென்மேற்கு பகுதியில் பல மலைகள் உள்ளன. மேற்குப் பக்கத்தில் சுவர்கள் நிம்ஃப்ஸ் மற்றும் பினெக்ஸ் மலையைத் தழுவியதாக இருந்தன. தென்கிழக்கில் மதிலுக்கு அருகில் இலிசோசு பாய்ந்தது.

கலாச்சாரம்[தொகு]

அக்ரோபோலிசில் உள்ள காரியடைட்ஸ் சிலைகள்.

பாரசீகப் போர்களின் முடிவில் இருந்து மாசிடோனியர்கள் ஏதென்சை வெற்றி கொள்ளும் வரையிலான காலகட்டத்தில் இலக்கியம், மெய்யியல் (பார்க்க கிரேக்க மெய்யியல் ) மற்றும் கலைகள் ( கிரேக்க நாடகத்தைப் பார்க்கவும்) ஆகியவற்றின் மையமாக ஏதென்சு உச்சநிலையை அடைந்திருந்தது. மேற்கத்திய கலாச்சார மற்றும் அறிவார்ந்த வரலாற்றின் மிக முக்கியமான சில ஆளுமைகள் இந்த காலகட்டத்தில் ஏதென்சில் வாழ்ந்தனர்: நாடக கலைஞர்களான எசுக்கிலசு, அரிஸ்டாஃபனீஸ், யூரிப்பிடீசு, சாஃபக்கிளீசு, மெய்யியலாளர்களான அரிசுட்டாட்டில், பிளேட்டோ, சாக்கிரட்டீசு, வரலாற்றாசிரியர்களான எரோடோட்டசு, துசிடிடீசு, செனபோன் கவிஞரான சிமோனிடிஸ்., சிற்பி பீடியசு போன்றோர் வழ்ந்தனர். இந்த காலகட்டத்தின் முன்னணி அரசியல்வாதி பெரிக்கிளீசு ஆவார், அவர் பார்த்தினன் மற்றும் பாரம்பரிய ஏதென்சின் பிற பெரிய கலைச் சின்னங்களை உருவாக்க டெலியன் கூட்டணி உறுப்பினர்கள் செலுத்திய கப்பத் தொகையைப் பயன்படுத்தினார். [10]

குறிப்புகள்[தொகு]

  1. Democracy and knowledge: innovation and learning in classical Athens by Josiah Ober p. 40 ISBN 0-691-13347-6 (2008)
  2. "Plato's Academy". Hellenic Ministry of Culture. www.culture.gr. Archived from the original on 2007-03-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-28.
  3. "Ancient History in depth The Democratic Experiment". BBC. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
  4. Encarta: Ancient Greece பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 26 January 2007. 2009-10-31.
  5. Translated Robin Waterfield, Herodotus (1998). The Histories. Oxford University Press. 
  6. Henderson, J. (1993) Comic Hero versus Political Elite pp.307–19 in Tragedy, Comedy and the Polis. Levante Editori. 1993. 
  7. "Lavrion Ancient Silver Mines". ancient-greece.org. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  8. Camp, John (2001). The Archaeology of Athens. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780300081978. https://archive.org/details/archaeologyofath00camp. 
  9. Xenophon, Mem. iii. 6.14
  10. Thucydides, 2.41.1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்பரிய_ஏதென்சு&oldid=3878553" இலிருந்து மீள்விக்கப்பட்டது