உள்ளடக்கத்துக்குச் செல்

மான் கொம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளர்ந்த சிவப்பு மான், டென்மார்க் (2009)
வளரும் பருவத்தின் தொடக்கத்தில் சிவப்பு மான்

மான் கொம்பு (Antler) என்பது செர்விடே (மான்) குடும்ப உறுப்பினர்களுக்கு காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். இது மானின் மண்டை ஓட்டின் நீட்சிகளாக அமைந்துள்ளது. மான் கொம்புகள் என்பவை எலும்பு, குருத்தெலும்பு, இணைப்பிழையம், தோல், நரம்பு, குருதிக்குழல் ஆகியவற்றால் ஆன ஒரு அமைப்பாகும். மான் கொம்பானது துருவ மான் / கரிபோவைத் தவிர பொதுவாக ஆண் மான்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன.[1] மானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கிளைகளுடைய இக்கொம்புகள் கலைக் கொம்புகள் என்று அழைக்கப்படும். மான் கொம்புகள் குறித்த காலத்திற்கு ஒருமுறை உதிர்ந்து மீண்டும் வளரக்கூடியன. இவை முதன்மையாக பெண்மான்களை கவரும் வகையில், இரண்டாம் நிலை பால் ஈர்ப்புப் பண்புகளாகவும்[2] ஆயுதங்களாகவும் செயல்படுகின்றன.

மான்களைத் தவிர கொம்பு உள்ள பிற உயிரினங்களான செம்மறி ஆடுகள், காட்டெருதுகள், மாடுகள், பிராங்ஹார்ன்கள் போன்ற மாட்டுக் குடும்ப விலங்குகளில் பொதுவாக கொம்புகள் உதிர்வதில்லை. கொம்பின் உட்புறம் எலும்பாலும் அதன் வெளிப்புறம் நகமியத்தால் (கொரட்டின்)[3] (மனித விரல் நகங்கள், கால் நகங்களில் உள்ள அதே பொருள்) ஆன உறையாலும் மூடப்பட்டிருக்கும்.

கட்டமைப்பும், வளர்ச்சியும்[தொகு]

ஆண் தரிசு மான்கள் சண்டையிடுதல்
இந்தியாவின் சில்வாசாவில் இரண்டு கடமான்கள் சண்டையிடுகின்றன.

மானின் கொம்புகள் தனித்துவமானவை. மானின் மூதாதையர்களுக்கு தந்தப் பற்கள் (மேல்தாடையில் வளர்ந்த கோரைப் பற்கள்) இருந்தன. பெரும்பாலான இனங்களுக்கு, தந்தப் பற்களுக்குப் பதிலாக கொம்புகள் தோன்றின. இருப்பினும், ஒரு சில நவீன இனங்கள் (நீர் மான்) தந்தப் பற்களைக் கொண்டவையாகவும், கொம்புகள் அற்றவையாகவும் உள்ளன. மேலும் கேளையாடு சிறிய கொம்புகளையும், தந்தப் பற்களையும் கொண்டுள்ளன. கத்தூரி மான்கள் கொம்புகளுக்குப் பதிலாக தந்தப் பற்களைத் தாங்கி நிற்கின்றன.[4]

பொதுவாக ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் காணப்படுகின்றன. பெண் மான்களில் துருவ மான்களுக்கு (வட அமெரிக்காவில் கரிபோ என்று அழைக்கப்படுகின்றன) மட்டுமே கொம்புகள் காணப்படுகின்றன. என்றாலும் பொதுவாக இந்த கொம்புகள் ஆண் மான்களை விட சிறியவை.[5] பிராங்ஹார்னின் "கொம்புகள்" கொம்புகளின் சில வரையரைகளை நிறைவு செய்கின்றன. ஆனால் இவை நகமியங்களைக் கொண்டிருப்பதால் உண்மையான கொம்புகளாகக் கருதப்படுவதில்லை.[6]

சிவப்பு மானின் கொம்பில் உள்ள கிளைகள். வளரக்கூடிய கொம்பின் மேற்புறம் வெல்வெட் போன்ற ரோமங்கள் அடங்கிய தோல் கொண்டது. இதில் ஆக்சிசன், ஊட்டச்சத்து போன்றவற்றைக் கொண்டு செல்லும் குருதி ஓட்டம் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு கொம்பும் மண்டை ஓட்டின் ஒரு இணைப்பு புள்ளியிலிருந்து வளரும். முதலில் இவை வெல்வெட் போன்ற முடிச்சுகளாகக் காணப்படும். பின்னர் இது குருதிக்குழல்கள் கொண்ட தோலால் ஆனவையாகும். இந்த குருதிக்குழல்கள் வளரும் எலும்புக்கு தேவைப்படும் ஆக்சிசன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு வருகின்றன. எலும்புச் சத்து இதில் தொடர்ச்சியாக சேரும்போது வளர்ச்சி விரைவாக நடக்கிறது. மான் கொம்புகள் வளரும் காலத்தில் மென்மையானதாக இருக்கும். அப்போது புண் ஆகும் வாய்ப்பு உள்ளதால் இச்சமயத்தில் மான்கள் பொதுவாக சண்டையிடுவதில்லை. இக்காலத்தில் சண்டையிடுவதாக இருந்தால் தலையைப் பயன்படுத்தாமல், முன் கால்களால் தாக்கி சண்டையிடும். மான் கொம்புகளானது ஆண் மான்கள் பெண் மான்களை ஈர்க்கும் பாலியல் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.[7] மற்றும் மற்ற பாலூட்டிகளின் கொம்புகளை விட மான் கொம்புகள் வேகமாக இவை வளரும். மண்டை ஒட்டில் முடிச்சாகத் தோன்றி வளரும் கொம்புகள் ஆரம்பத்தில் குருத்தெலும்புகளுடன் எலும்பு திசுக்களாக மாற்றமடைகின்றன. கொம்பு தன் முழு அளவை அடைந்தவுடன், அடியில் வளையம் போன்ற எலும்பு வரம்பு உண்டாக்கும். இந்த வளையத்தின் நெருக்கத்தினால் கொம்பிற்கு செல்லும் குருதி கொஞ்சம் கொஞ்சமாக தடைபடுகிறது. இதனால் கொம்பின் மேல் இருக்கும் வெல்வெட் போன்ற தோல் காய்ந்து விடும். காய்ந்த இந்த தோல் உரிந்து மீதமுள்ள கொம்பு கெட்டியான எலும்புகளைக் கொண்ட உறுதியான கொம்பாக மாறுகிறது. குளிர் காலத்தின் முடிவில் அல்லது இளவேனில் துவக்கத்தில் கொம்புகள் உதிர தயாராகின்றன. கொம்பின் அடியில் காம்பின் நுனியில் எலும்பு உள்ளுறிஞ்சப்படுகிறது. இதனால் கொம்பு அடியில் பிடிப்பில்லாததால் ஒரு கட்டத்தில் உதிர்ந்து விடும்.[4] குளிர் நாடுகளில் வாழும் மான் இனங்களில் கொம்புகள் குளிர் காலத்தில் விழுந்து கோடைக் காலத்தில் முளைக்கத் துவங்குகின்றன.

வெவ்வேறு ஐரோப்பிய மான் இனங்களில் ஆண்டுக்கு ஆண்டு கொம்புகளின் அளவு அதிகரிப்பதைக் காட்டும் 1891 ஆண்டைய விளக்கப் படம்

பெரும்பாலான ஆர்க்டிக் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வாழும் மான் இனங்களில், கொம்பு வளர்தல் மற்றும் உதிர்தல் ஆண்டுதோறும் நடக்கும்.[8] ஒவ்வொரு ஆண்டும் கொம்புகள் உதிர்ந்து மீண்டும் வளர்ந்தாலும், இவற்றின் அளவு அந்த விலங்கின் வயதைப் பொறுத்து மாறுபடும். மானின் வயது ஏற ஏற கொம்புகள் அளவு ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. வெப்பமண்டல இனங்களில், வருடத்தின் எந்த நேரத்திலும் கொம்புகள் உதிரலாம். மேலும் கடமான் போன்ற சில வகைகளில், பல காரணிகளைப் பொறுத்து ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் கொம்புகள் உதிர்கின்றன. சில பூமத்திய ரேகை மான் இனங்களுக்கு கொம்புகளை உதிர்ப்பதில்லை.

பெண் மான்கள் இருக்கும் எல்லைக்குள் இரண்டு ஆண் மான்கள் சென்றுவிட்டால் இரு ஆண் மான்களும் அவற்றை அடைய கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்தி சண்டையிடும். மான்களின் கொம்புகள் பெண் மான்களை கவரக்கூடிய கம்பீரத்தை வழங்கும் பொருளாக செயல்படுகின்றன.[9][10] சண்டையிடும்போது சில சமயம் மான்களின் கிளைக் கொம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து மாட்டிக் கொள்வது உண்டு. இச்சமயத்தில் இரண்டு மான்களும் தலை தாழ்ந்த நிலையில் உணவு நீரின்றி இறக்க நேரிடலாம். அல்லது வேட்டையாடி விலங்குகளுக்கு எளிதில் இரையாகலாம்.

பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் பிரித்து எடுக்க முடியாத நிலையில் உள்ள இரண்டு மான்களின் கொம்புகள் மண்டையோடுகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கேட்கும் உணர்கொம்பு[தொகு]

கோஸ்ட்ரோமா மூஸ் பண்ணையில் வளர்க்கப்படும் ஆறு வயது ஐரோவாசியக் காட்டுமான் [11]

ஐரோவாசியக் காட்டுமானில், கொம்புகள் பெரிய செவிப்புலக் கருவியாக செயல்படுகின்றன என்று அறிப்படுகின்றது. கொம்புகள் இல்லாத கடமான்களை விட கொம்புகள் உள்ள மான்கள் அதிக காது கேட்கும் திறன் கொண்டவையாக உள்ளன.[12]

பல்வகைப்படுத்தல்[தொகு]

மான்களின் உடல் அளவு, அவற்றின் வாழ்விடம், நடத்தை (சண்டை மற்றும் இனச்சேர்க்கை) ஆகியவற்றைப் பொறுத்து கொம்புகளின் அமைப்பில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.[13]

கேப்ரோலினே[தொகு]

செர்வினே[தொகு]

பயன்பாடு[தொகு]

சூழலியல் பங்கு[தொகு]

உதிர்ந்த கொம்புகள் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்களைக் கொண்டதாக உள்ளன. அவை அணில், முள்ளம்பன்றி, முயல், எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளால் கடித்து உண்ணப்படுகின்றன. இந்த தாதுக்கள் மண்ணில் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் விலங்குகளிடையே இது பொதுவான ஒரு நடத்தையாக உள்ளது.[14][15]

வேட்டை[தொகு]

மானின் கொம்புடனான தலைகள் அலங்காரக் கேடையங்களாக மதிப்பிடப்படுகின்றன. அவற்றில் பெரிய அளவுள்ளவை அதிக மதிப்புடையவையாக மதிக்கப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் பாடம்செய்யும் நிறுவனமான ரோலண்ட் வார்டு லிமிடெட், நிறுவனம் இவற்றின் அளவுகளை பதிவுகளாக கொண்டிருக்கும் முதல் அமைப்பாகும். ஒரு காலத்திற்கு மொத்த நீளம் அல்லது விரிவு ஆகியவை மட்டுமே பதிவு செய்யப்பட்டன. நூற்றாண்டின் நடுப்பகுதியில், பல்வேறு பரிமாணங்கள் அடிப்படையில் சிக்கலான குறிப்பு முறைகள் உருவாகின. மேலும் அவை அதிக மதிப் பெற்ற கொம்புகள் குறித்து விரிவான பதிவுகளை கொண்டுள்ளன.[16] பண்ணைகளில் வேட்டையாடுவதற்காக வளர்க்கப்படும் மான்கள் அவற்றின் கொம்புகளின் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.[17]

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள யார்கசயரில் குறிப்பாக ரோ மான் வேட்டை பிரபலமாக உள்ளது. ஏனெனில் அங்கு வளர்க்கப்படும் மான்கள் பெரிய கொம்புகள் கொண்டவையாக உள்ளன. இங்கு வளர்க்கப்படும் மான்களின் கொம்புகள் பெரியதாக வளர்வதற்கு இப்பிராந்தியத்தில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து இருப்பதே காரணமாகும். சுண்ணாம்புச் சத்தை மான்கள் உட்கொள்வதால் அவை கொம்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.[18]

கொம்புகள் சேகரிப்பு[தொகு]

அலாஸ்காவின் டெனாலி தேசியப் பூங்காவில் சேகரிக்கபட்ட ஒரு ஐரோவாசியக் காட்டுமான் கொம்பு (2010)
கிழக்கு ஓக்லஹோமாவில் ஒரு மான் கொம்பு அது உதிர்ந்த சிறிது நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

கொம்புகள் சேகரிப்பது என்பது அதில் அர்ப்பணிப்பும், பயிற்சியும் உள்ளவர்களைக் கவர்கிறது. ஐக்கிய இரச்சியத்தில் திசம்பர் நடுப்பகுதியிலிருந்து பெப்ரவரியின் நடுப்பகுதி வரை கொம்பு சேகரிப்புப் பருவமாகக் கருதப்படுகிறது. ஏனெனின் அதுதான் அங்கு காட்டுமான்களின் கொம்புகள் உதிரும் பருவம் ஆகும். வட அமெரிக்க கொம்பு சேகரிப்பு சங்கம் (ஷெட் ஹண்டிங் கிளப்) 1991 இல் நிறுவப்பட்டது. இது இந்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான ஒரு அமைப்பாகும்.[14]

அமெரிக்காவில் 2017 இல் மான் கொம்புகள் ஒரு பவுண்டுக்கு சுமார் US$10 விலையைப் பெறுகின்றன. நல்ல நிலையில் உள்ள பெரிய கொம்புகள் அதிக விலையைப் பெறுகின்றன. மிகவும் விரும்பத்தக்க கொம்புகள் என்பவை உதிர்ந்த உடனேயே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். வானிலை காரணமாகவோ அல்லது சிறிய விலங்குகளால் கடிக்கப்பட்டதாலோ சேதமடைந்த கொம்புகள் மதிப்பு குறைவானவையாக கருதப்படுகின்றன. ஒரே மானின் சோடிக் கொம்புகள் மிகவும் விரும்பத்தக்க சேகரிப்பு ஆகும். ஆனால் பெரும்பாலும் கொம்புகள் தனித்தனியாகவே உதிர்கின்றன. அதனால் பல மைல்கள் தொலைவில் அவை காணப்படும். கொம்பு சேகரிப்பில் ஆர்வமுள்ள சிலர் பயிற்சி பெற்ற நாய்களை அதற்கு பயன்படுத்துகின்றனர்.[19] பெரும்பாலான கொம்பு சேகரிப்பாளர்கள் உதிர்ந்த கொம்புகளைக் கண்டறிய 'ஒற்றையடிப் பாதைகளை' (மான்கள் அடிக்கடி ஓடும் பாதைகள்) பின்தொடருவார்கள்.

பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களில், விலங்குகளின் உடல் பாகங்களை வைத்திருப்பது அல்லது வர்த்தகம் செய்வது ஓரளவு கட்டுப்படுத்தபட்டுள்ளது. ஆனால் கொம்புகள் வணிகம் மட்டும் பரவலாக அனுமதிக்கப்படுகிறது.[20] கனடாவின் தேசிய பூங்காக்களில், மான் கொம்புகளை எடுப்பது அதிகபட்சமாக C$25,000 அபராதம் விதிக்கப்படும் குற்றமாகும். ஏனெனில் கனேடிய அரசாங்கம் கொம்புகள் கனடா மக்களுக்கு சொந்தமானது என்றும் அவை சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒரு பகுதி என்றும் கருதுகிறது.[21]

அலங்கார மற்றும் கருவி பயன்பாட்டிற்கான செதுக்குதல்[தொகு]

சிவப்பு மான் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு ஜெர்மன் தூள் குடுவை, சு  1570 வாலஸ் சேகரிப்பு, லண்டன் (2010)

வரலாற்றில் கருவிகள், ஆயுதங்கள், ஆபரணங்கள், பொம்மைகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான ஒரு பொருளாகமான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய பழைய கற்காலத்தின் பிற்பகுதியில் ஒரு முக்கியமான மூலப் பொருளாக இருந்தது. வைக்கிங் காலம் மற்றும் இடைக்கால காலத்தில், சீப்பு தயாரிப்பதில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்தது. பிந்தைய காலங்களில், தந்தத்திற்கான மலிவான மாற்றாக மான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக வேட்டையாடுவதற்கான உபகரணங்களான குதிரை சேணம், துப்பாக்கிகள், குத்துவாள், தூள் குடுவைகள், பொத்தான்கள் போன்றவற்றை உருவாக்கத் தேவைப்படும் ஒரு பொருளாக இருந்தன. சுவரில் மாட்டப்பட்ட சோடி மான் கொம்புகளின் அலங்கார அமைப்பு குறைந்தது இடைக்காலத்திலிருந்தே பிரபலமாக உள்ளது. தமிழ்நாட்டில் புல்வாய் மான்களின் கொம்பைக் கொண்டு மடுவு என்னும் போர்க் கருவி உருவிக்கப்பட்டு பெருமளவில் புழக்கத்தில் இருந்தது.

இனுவிட்டுவின் ஒரு குழுவினரான நெட்சிலிக் மக்கள் மான் கொம்புகளைப் பயன்படுத்தி வில் மற்றும் அம்புகளை உருவாக்கினர். விலங்குகளின் தசைநார்களின் இழைகளால் பின்னப்பட்ட கயிறை வில்லை உறுதி ஆக்கினர்.[22] பல அமெரிக்க பழங்குடியினரும் வில்களை உருவாக்க கொம்புகளை பயன்படுத்தினர். புரூக்ளின் அருங்காட்சியகத்தில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்ட மான் கொம்பு வில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[23]

வரலாற்றில், பொருத்தமான இனத்தைச் சேர்ந்த பெரிய மான் கொம்புகள் (எ.கா. சிவப்பு மான் ) பொருத்தமான அளவில் வெட்டப்பட்டு அதன் ஒரு முனை பிக்காக்காசாக பயன்படுத்தப்பட்டது.

சடங்கு பாத்திரங்கள்[தொகு]

மான் கொம்புகளை உடைய தலைக்கவசங்கள் ஷாமன்கள் மற்றும் பல்வேறு பண்பாடுகளின் ஆன்மீக பிரமுகர்களும், நடனமாடிகளும் அணிந்தனர். 10,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை ஐரோப்பாவின் ஸ்டார் காரின் என்னும் இடைக் கற்கால தளத்தில் அகழ்ந்தெடுக்கபட்டுள்ளன. யாக்கி மான் நடனம் போன்ற பாரம்பரிய நடனங்களில் மான் கொம்புகள் இன்னும் அணியப்படுகின்றன.[சான்று தேவை]

உணவுப் பயன்பாடு[தொகு]

எல்க் மற்றும் மான்களின் கொம்புகள் வெல்வெட் கொம்பு நிலையில் ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுக் குறைநிரப்பியாக அல்லது மாற்று மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[24] மான் கொம்பு சாறு மேற்கத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கட்டு வீரர்கள் இடையில் பிரபலமாக உள்ளது. ஏனெனில் இச்சாறானது, அதன் சுவடு அளவு IGF-1, தசை திசுக்களை உருவாக்க மற்றும் சரிசெய்ய உதவும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இந்த விளைவுகளுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை.[25][26]

எல்க், மான், மூஸ் கொம்புகள் நாய் கடித்து விளையாட உகந்த பிரபலமான வடிவங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றை நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்காக வாங்குகின்றனர்.

கொம்பு சேகரிப்பில் நாய்கள்[தொகு]

நாய்கள் சில சமயங்களில் உதிர்ந்த மான் கொம்புகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வட அமெரிக்க ஷெட் ஹண்டிங் டாக் அசோசியேஷன் (நாஷ்டா) மக்கள் தங்கள் நாய்களுக்கு மான் கொம்புகளைக் கண்டறியும் பயிற்சி அளிக்க விரும்பும் மக்களுக்கு உதவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Arctic Wildlife – Arctic Studies Center". naturalhistory.si.edu. Archived from the original on May 1, 2018. பார்க்கப்பட்ட நாள் May 1, 2018.
 2. "Sexual selection" பரணிடப்பட்டது செப்டெம்பர் 1, 2022 at the வந்தவழி இயந்திரம். Darwin Correspondence Project. University of Cambridge. Retrieved 1 September 2022.
 3. Love, Heather. "What Is The Difference Between Horns And Antlers?". A Moment of Science – Indiana Public Media. பார்க்கப்பட்ட நாள் December 5, 2020.
 4. 4.0 4.1 Hall, Brian K. (2005). "Antlers". Bones and Cartilage: Developmental and Evolutionary Skeletal Biology. Academic Press. pp. 103–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-319060-6. பார்க்கப்பட்ட நாள் November 8, 2010.
 5. Antlered Doe பரணிடப்பட்டது பெப்பிரவரி 29, 2012 at the வந்தவழி இயந்திரம்
 6. "Mammals: Pronghorn". San Diego Zoo. பார்க்கப்பட்ட நாள் June 27, 2013.
 7. Malo, A. F.; Roldan, E. R. S.; Garde, J.; Soler, A. J.; Gomendio, M. (2005). "Antlers honestly advertise sperm production and quality". Proceedings of the Royal Society B: Biological Sciences 272 (1559): 149–57. doi:10.1098/rspb.2004.2933. பப்மெட்:15695205. 
 8. Rössner, Gertrud E.; Costeur, Loïc; Scheyer, Torsten M. (2020-12-16). "Antiquity and fundamental processes of the antler cycle in Cervidae (Mammalia)" (in en). The Science of Nature 108 (1): 3. doi:10.1007/s00114-020-01713-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-1904. பப்மெட்:33326046. பப்மெட் சென்ட்ரல்:7744388. https://doi.org/10.1007/s00114-020-01713-x. 
 9. {{cite book}}: Empty citation (help)
 10. Morina, Daniel L.; Demarais, Steve; Strickland, Bronson K.; Larson, Jamie E. (2018-04-01). "While males fight, females choose: male phenotypic quality informs female mate choice in mammals" (in en). Animal Behaviour 138: 69–74. doi:10.1016/j.anbehav.2018.02.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3472. https://www.sciencedirect.com/science/article/pii/S000334721830054X. 
 11. "Moose as a domestic animal". The Kostroma moose farm. Archived from the original on December 10, 2016.
 12. Bubenik, George A.; Bubenik, Peter G. (2008). "Palmated antlers of moose may serve as a parabolic reflector of sounds". European Journal of Wildlife Research 54 (3): 533–5. doi:10.1007/s10344-007-0165-4. https://engagedscholarship.csuohio.edu/cgi/viewcontent.cgi?article=1221&context=scimath_facpub. 
 13. Gilbert, Clément; Ropiquet, Anne; Hassanin, Alexandre (2006). "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–17. doi:10.1016/j.ympev.2006.02.017. பப்மெட்:16584894. 
 14. 14.0 14.1 George A. Feldhamer; William J. McShea (January 26, 2012). Deer: The Animal Answer Guide. JHU Press. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0387-8.
 15. Dennis Walrod. Antlers: A Guide to Collecting, Scoring, Mounting, and Carving. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-0596-7.
 16. Bauer, Erwin A. (1995). Antlers: Nature's Majestic Crown.
 17. Laskow, Sarah (August 27, 2014). "Antler Farm". Medium (service). Archived from the original on September 3, 2014. பார்க்கப்பட்ட நாள் August 28, 2014.
 18. Fieldsports Britain. "Fieldsports Britain: Grouse on the Glorious Twelfth, roebucks and". fieldsportschannel.tv. Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் October 30, 2012.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 19. Dennis Walrod (2010). Antlers: A Guide to Collecting, Scoring, Mounting, and Carving. Stackpole Books. pp. 44–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-0596-7.
 20. Dennis Walrod (2010). Antlers: A Guide to Collecting, Scoring, Mounting, and Carving. Stackpole Books. pp. 46–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-0596-7.
 21. Susan Quinlan. "Parks Canada reminds visitors you can look, but don't touch". http://content.yudu.com/Library/A1uowk/PrairiePostWestNovem/resources/3.htm. 
 22. . 1989. {{cite book}}: Missing or empty |title= (help)
 23. "Bow, Bow Case, Arrows and Quiver". Brooklyn Museum.
 24. "Velvet Antler – Research Summary". www.vitaminsinamerica.com. Archived from the original on October 18, 2017. பார்க்கப்பட்ட நாள் May 1, 2018.
 25. DiSalvo (September 18, 2015). How to Squeeze Snake Oil from Deer Antlers and Make Millions. [1] forbes.com
 26. Sleivert, G; Burke, V; Palmer, C; Walmsley, A; Gerrard, D; Haines, S; Littlejohn, R (2003). "The effects of deer antler velvet extract or powder supplementation on aerobic power, erythropoiesis, and muscular strength and endurance characteristics". International Journal of Sport Nutrition and Exercise Metabolism 13 (3): 251–65. doi:10.1123/ijsnem.13.3.251. பப்மெட்:14669926. http://journals.humankinetics.com/ijsnem-back-issues/IJSNEMVolume13Issue3September/TheEffectsofDeerAntlerVelvetExtractorPowderSupplementationonAerobicPowerErythropoiesisandMuscularStrengthandEnduranceCharacteristics. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_கொம்பு&oldid=3813987" இலிருந்து மீள்விக்கப்பட்டது