ஏதெனியன் சனநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் ஃபோல்ட்ஸ் வரைந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியம், ஏதெனிய அரசியல்வாதி பெரிக்கிளீசு தனது புகழ்பெற்ற இரங்கல் உரையை எக்லேசியா மன்றத்தில் ஆற்றுவதை சித்தரிக்கிறது.
தெமோன் சனநாயகத்தால் முடிசூட்டப்படுவதை சித்தரிக்கும் ஒரு புடைப்புச் சிற்பம். சுமார் கி.மு 276 பண்டைய அகோர அருங்காட்சியகம் .

ஏதெனியன் சனநாயகம் (Athenian democracy) என்பது ஏதென்சு நகரம் மற்றும் அட்டிகாவைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஏதென்சு கிரேக்க நகர அரசில் ( பொலிஸ் என அறியப்படுகிறது) கிமு 6 ஆம் நூற்றாண்டில் உருவானது ஆகும். ஏதென்சு மிகவும் பிரபலமான பண்டைய கிரேக்க சனநாயக நகர அரசு என்றாலும், இதுவே முதல் சனநாயக அரசு அல்ல; ஏதென்சுக்கு முன் பல நகர அரசுகள் இதேபோன்ற சனநாயக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன.[1][2] கிமு 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரேக்க நகர அரசுகளில் பாதிக்கும் மேற்பட்டவை சனநாயக நாடுகளாக இருந்திருக்கலாம் என்று ஓபர் (2015) குறிப்பிடுகிறார்.[3]

ஏதென்சின் அரசாட்சி முறைமையானது சட்டம் மற்றும் நிர்வாக மசோதாக்களை நடைமுறைப்படுத்தியது. இதில் பங்கேற்பவர்கள் வயதுவந்த, ஆண் குடிமக்களாக (அதாவது, அடிமைகளுக்கும், பெண்களுக்கும், பல தலைமுறைகளாக ஏதென்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை. ) இருப்பர். மொத்த மக்கள் தொகையில் குடியுரிமை உடையோர் எண்ணிக்கை "அநேகமாக 30 விழுக்காட்டிற்கு மேல் இல்லை".[4]

சோலோன் ( கிமு 594 இல்), கிளீசுத்தனீசு ( கிமு 508-07 இல்), எபியால்ட்டீசு (கிமு 462 இல்) ஆகியோர் ஏதெனிய சனநாயகத்தின் வளர்ச்சியில் பங்களித்தனர். குடிமக்களை அவர்களின் பொருளாதார நிலையை அடிப்படையாக கொள்ளாமல், அவர்கள் வாழ்ந்த இடத்தின் அடிப்படையில் பத்து குழுக்களாக அமைப்பதன் மூலம் பிரபுக்களின் வரம்பற்ற அதிகாரத்தை கிளீசுத்தனீசு உடைத்தார்.[5] ஏதென்சில் நீண்ட காலம் பொறுப்பில் நீடித்த சனநாயகத் தலைவர் பெரிக்கிளீசு ஆவார். அவரது மரணத்திற்குப் பிறகு, பெலோபொன்னேசியப் போரின் முடிவில் சிலவர் ஆட்சிக்குழுவின் புரட்சிகளால் ஏதெனியன் சனநாயகம் இரண்டு முறை குறைந்த காலம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இது யூக்ளிட்சின் தலைமையில் மீட்டெடுக்கப்பட்ட பிறகு ஓரளவு மாற்றியமைக்கப்பட்டது; சனநாயக அமைப்பு குறித்த மிக விரிவான தரவுகள் நான்காம்-நூற்றாண்டைச் சார்ந்தவை. கிமு 322 இல் மாசிடோனியர்களால் சனநாயகம் ஒடுக்கப்பட்டது. ஏதெனியன் நிர்வாக அமைப்புகள் பின்னர் புத்துயிர் பெற்றன. ஆனால் அவை உண்மையான சனநாயகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தன என்பது விவாதத்திற்குரியது.

வரலாறு[தொகு]

வளர்ச்சி[தொகு]

பண்டைய கிரேக்கத்தில் சனநாயக ஆட்சியை நிறுவிய அரசாக ஏதென்சு மட்டும் இருந்தது என்று கூறுவதற்கு இல்லை. சனநாயக பாணியிலான அரசாங்கங்களை ஏற்றுக்கொண்ட மற்ற கிரேக்க நகரங்களை அரிசுட்டாட்டில் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், சனநாயக அமைப்புகளின் எழுச்சி பற்றிய தரவுகள் ஏதென்சைக் குறிக்கின்றன. ஏனெனில் இந்த நகர அரசு மட்டுமே கிரேக்க சனநாயகத்தின் எழுச்சி மற்றும் அதன் தன்மை போன்றவற்றை ஊகிக்க போதுமான வரலாற்று பதிவுகளைக் கொண்டுள்ளது.[6]

ஏதென்சில் சனநாயகம் ஏற்படுவதற்கு முன் தொடர்ச்சியான ஏதென்சானது ஆர்கோன்கள் அல்லது தலைமை நீதிபதிகளால் ஆளப்பட்டது. மேலும் முன்னாள் ஆர்கோன்களை உறுப்பினர்களாக கொண்ட அரியோப்பாகு என்ற அவை அரசில் ஆற்றல் மிக்கதாக இருந்தது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக பொதுவாக பிரபுக்களே இருந்தனர். கிமு 621 இல், திராகோ, அப்போது நடைமுறையில் இருந்த வாய்வழிச் சட்டத்தை நீதிமன்றத்தால் மட்டும் செயல்படுத்தும் எழுத்துவடிவ சட்டங்களாக மாற்றினார்.[7][8] இவர் இயற்றிய சட்டங்கள், பின்னர் கொடூரமான அரசியலமைப்பு என்று அறியப்பட்டன. அவை பெரும்பாலும் கடுமையானயாகவும், கட்டுப்படுகள் மிக்கவையாகவும் இருந்தனத்தன. பின்னர் அவை இரத்து செய்யப்பட்டன. இ்ந்த எழுதப்பட்ட சட்டங்கள் அதன் வகையில் முதலில் வந்தவைகளில் ஒன்றாகும். மேலும் இது ஏதெனிய சனநாயகத்தின் ஆரம்பகால முன்னேற்றங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.[9] கிமு 594 இல், சோலோன் முதன்மை ஆர்கோனாக நியமிக்கப்பட்டார் மேலும் ஏதெனியன் சமூகம் முழுவதும் ஊடுருவிய சமத்துவமின்மையினால் எழத் தொடங்கிய சில மோதலைத் தணிக்கும் முயற்சியாக பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை செய்யத் தொடங்கினார். அவரது சீர்திருத்தங்கள் இறுதியில் ஏதெனியன் குடியுரிமையை மறுவரையறை செய்தன. இது அட்டிகாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியலில் தக்க இடத்தை வழங்கியது. அதன்படி ஏதெனியன் குடிமக்கள் சட்டசபை கூட்டங்களில் பங்கேற்க உரிமை பெற்றனர். இதன் மூலம் அரசாங்கத்தின் மீது பெரும் செல்வர்களான பிரபுக்கள் கொண்டிருந்த பெருமளவிலான செல்வாக்கை உடைக்க சோலன் முயன்றார். அவரது அரசியலமைப்பானது ஏதென்சில் சொத்து மதிப்பை அடிப்படையாக கொண்டு நான்கு வகுப்புகளாக உருவாக்குவதாக இருந்தது. அவை பென்டகோசியோமெடிம்னோய், ஹிப்பிஸ், ஜூகிடாய், தீட்ஸ் போன்றவை ஆகும். பெண்டகோசியோமெடிம்னோய் குறைந்தபட்சம் 500 மெடிம்னோய், ஹிப்பிஸ் 300-500 மெடிம்னோய், ஜூகிடாய் 200-300 மெடிம்னோய், தீட்கள் 200-300 மெடிம்னோய் என வருவாயை அடிப்படையாக கொண்டு ஒரு நபரின் பண்ணை எவ்வளவு மெடிம்னோய்களை ஈட்டுகிறது என்பதன் அடிப்படையில் வகைப்பாடுகள் செய்யப்பட்டன.[10] சொத்து வைத்திருந்த ஏதென்சின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் இடத்தை வழங்குவதன் மூலம், நகர-அரசின் சமூக கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்தார். இந்த சீர்திருத்தங்களின் படி, பூலி அவையில் (400 உறுப்பினர்களைக் கொண்ட அவை, ஏதென்சின் நான்கு பிரிவில் ஒவ்வொன்றிலிருந்தும் 100 உறுப்பினர்கள்) தினசரி விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைத்தனர்.[7] முன்பு இந்தப் பணியைச் செய்துவந்த அரியோபாகு, அதன் பிறகு "சட்டங்களின் பாதுகாவலர்" என்ற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது.[11] சனநாயகத்திற்கான மற்றொரு முக்கிய பகுதியாக, சோலோன் எக்லேசியா என்ற சட்டமன்றத்தை அமைத்தார். இதில் நகரின் அனைத்து ஆண் குடிமக்களும் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும் சோலோன் குடிமக்கள் மீதிருந்த கடன்களை இரத்து செய்து, கடனாளிகளை விடுவித்தார். மேலும் கடன்கள் பெற்றதற்காக அடிமைகள் ஆகும் வழக்கத்தை ஒழித்தது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்களையும் செய்தார்.[12]

கிமு 561 இல், புதிய சனநாயகமானது சர்வாதிகாரி பிசிசுட்ரேடசுவால் தூக்கியெறியப்பட்டது. ஆனால் 510 இல் அவரது மகன் ஹிப்பியாஸ் நடுகடத்தப்பட்ட பின்னர் சனநாயகம் மீண்டும் மலர்ந்தது. கி.மு 508 மற்றும் 507 இல் ஆட்சியாளரான கிளீசுத்தனீசு அரசியலில் சீர்திருத்தங்களை வெளியிட்டார். இவை அரசியலில் உயர்குடி குடும்பங்களின் ஆதிக்கத்தை குறைத்தது மேலும் ஒவ்வொரு ஏதெனியனையும் நகரத்தின் ஆட்சி அதிகாரத்துடன் இணைத்தது. அட்டிகாவில் சுதந்திரமாக வசிப்பவர்களை ஏதென்சின் குடிமக்கள் என்று கிளீசுத்தனசு முறையாக அடையாளப்படுத்தினார். இது அவர்களுக்கு அதிகாரத்தையும் குடிமை ஒற்றுமை உணர்வையும் அளித்தது.[13] பாரம்பரிய பழங்குடி பிரிவினரை அரசியல் ரீதியாக பொருத்தமற்றதாக்கி, பத்து புதிய பழங்குடி பிரிவுகளை உருவாக்கினார். ஒவ்வொன்றும் சுமார் மூன்று டிரிட்டிகளால் (புவியியல் பிரிவுகள்) உருவாக்கப்பட்டடன. ஒவ்வொன்றும் பல தெமெக்கள் (மேலும் உட்பிரிவுகள்) கொண்டவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆண் குடிமகனும் தனது தெம்மில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.[14]

மூன்றாவது சீர்திருத்தங்கள் 462/1 இல் எபியால்டீசால் மேற்கொள்ளப்பட்டன. எபியால்டீசின் எதிர்ப்பாளர்கள் அவரின் எதிர்ப்பையும் மீறி எசுபார்த்தாவில் அடிமைகளின் கலகத்தை அடக்க எசுபார்த்தாவுக்கு உதவ முயன்று அதனால், அவமானங்களை அடைந்ததனர். இதனால் எதிர்ப்பாளர்கள் அரசியல் ரீதியாக வலிமை குன்றினர். இந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட எபியால்டீசு படுகொலை போன்ற வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றமாக பிரபுக்கள் நிரம்பிய அரியோபாகஸ் அவையின் அதிகாரங்களை குறைக்க சட்டமன்றத்தை வற்புறுத்தினார். அதே நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு, அரியோபாகசின் உறுப்பினர் தகுதியானது குடியுரிமையின் கீழ் மட்டம் வரை கொண்டுவரப்பட்டது.[15]

கிமு 413 இல் சிசிலியன் படையெடுப்பில் ஏதென்சின் பேரழிவுகரமான தோல்வியைத் தொடர்ந்து, குடிமக்கள் குழுவானது நகரத்தை அழிவுக்கு இட்டுச் செல்லுவதற்கு காரணமானது என்று கருதப்பட்ட தீவிர சனநாயகத்த் தன்மையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. அவர்களின் முயற்சியால், துவக்கத்தில் அரசியலமைப்பு வழிகள் மூலம் நடத்தப்பட்டன. கி.மு. 411 இன் ஏதெனியன் புரட்சியானது முடிவில் 400 சர்வாதிகாரிகள் என்ற சிலவர் ஆட்சிக்குழுவை நிறுவுவதில் முடிந்தது. சிலவர் ஆட்சிக்குழு நான்கு மாதங்கள் மட்டுமே நீடித்தது. அது மீண்டும் தீவிர சனநாயக அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. கிமு 404 இல் ஏதென்சு எசுபார்த்தாவிடம் சரணடையும் வரை சனநாயக ஆட்சிகள் ஆட்சி நீடித்தது. பின்னர் எசுபார்த்தன் ஆதரவு குழுவினரான முப்பது கொடுங்கோலர்கள் கைகளில் அரசாங்கம் ஒப்படைக்கப்பட்டது.[16] ஒரு ஆண்டுக்குப் பிறகு, சனநாயக சார்பு பிரிவினர் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுத்தனர். மேலும் இரண்டாம் பிலிப்பின் மாசிடோனிய இராணுவம் கிமு 338 இல் ஏதென்சைக் கைப்பற்றும் வரை சனநாயக வடிவங்கள் நீடித்தன.[17]

குறிப்புகள்[தொகு]

 1. Eric W. Robinson (1997). The First Democracies: Early Popular Government Outside Athens. Historia – Einzelschriften. Stuttgart, Germany: Franz Steiner Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-515-06951-9. 
 2. Eric W. Robinson (2011). Democracy beyond Athens: Popular Government in the Greek Classical Age. Cambridge, England: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-84331-7. 
 3. Josiah Ober, The Rise and Fall of Classical Greece (2015) Princeton University Press, USA.
 4. Thorley, John (2005). Athenian Democracy. Lancaster Pamphlets in Ancient History. Routledge. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-79335-8. https://books.google.com/books?id=iU6EAgAAQBAJ&pg=PA74. 
 5. "Ancient Greek civilization – The reforms of Cleisthenes". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2021-03-10 அன்று பார்க்கப்பட்டது.
 6. Clarke, PB. and Foweraker, Encyclopedia of Democratic Thought. Routledge, 2003, p. 196.
 7. 7.0 7.1 Thorley, J., Athenian Democracy, Routledge, 2005, p.10.
 8. Farrar, C., The Origins of Democratic Thinking: The Invention of Politics in Classical Athens, CUP Archive, 25 Aug 1989, p.7.
 9. "Draconian laws | Definition & Facts". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2021-05-05 அன்று பார்க்கப்பட்டது.
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Areopagus.
 12. "Solon's laws | Greek history". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2021-05-05 அன்று பார்க்கப்பட்டது.
 13. Farrar, C., The Origins of Democratic Thinking: The Invention of Politics in Classical Athens, CUP Archive, 25 Aug 1989, p.21.
 14. Thorley, J., Athenian Democracy, Routledge, 2005, p.25.
 15. Thorley, J., Athenian Democracy, Routledge, 2005, pp. 55–56
 16. Blackwell, Christopher. "The Development of Athenian Democracy". Dēmos: Classical Athenian Democracy. Stoa. 4 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 17. "The Final End of Athenian Democracy". பொது ஒளிபரப்புச் சேவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதெனியன்_சனநாயகம்&oldid=3647883" இருந்து மீள்விக்கப்பட்டது