கல்கா ஆற்று யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்கோலிய குதிரை வில்லாளர்கள்.

கல்கா ஆற்று யுத்தம் (உக்ரைனியன்: Битва на річці Калка, உருசியம்: Битва на реке Калке)[1][2] என்பது மங்கோலியப் பேரரசின் செபே மற்றும் வல்லமையான சுபுதையின் ராணுவங்கள் மற்றும், பல்வேறு ருஸ் சமஸ்தானங்களின் கூட்டமைப்பிற்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். கீவ், கலிசியா-வோலினியா மற்றும் குமன்கள் ஆகியோர் ருஸ் சமஸ்தானங்களில் அடங்குவர். அவர்கள் தைரிய மிசுதிலாவ் மற்றும் கீவின் மூன்றம் மிசுதிலாவ் ஆகியோரின் தலைமையில் போரிட்டனர். இந்த யுத்தமானது மே 31, 1223 ஆம் ஆண்டு உக்ரைனின் தற்கால டோனட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள கல்கா ஆற்றின் கரையில் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் தீர்க்கமான வெற்றியை பெற்றனர்.

மங்கோலியர்களின் நடு ஆசிய படையெடுப்பு மற்றும் இறுதியாக குவாரசமிய பேரரசின் வீழ்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு தளபதிகள் செபே மற்றும் சுபுதை தலைமையிலான ஒரு மங்கோலிய படையானது ஈராக்-இ அஜம் பகுதிக்கு முன்னேறியது. செபே மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானிடம் காக்கேசியா வழியாக முதன்மை ராணுவத்துடன் திரும்ப இணைவதற்கு முன் தங்களது படையெடுப்புகளை சிலவருடங்களுக்கு தொடர அனுமதி கோரினர். செங்கிஸ்கானின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில், இருவரும் சார்சியா ராச்சியம் மீது ஒரு சோதனை ராணுவ ஓட்டத்தை நடத்தி தாக்கினர். போர் பயணத்தை மேற்கொள்ள இருவருக்கும் செங்கிஸ்கான் அனுமதி வழங்கினார். காக்கேசிய வழியாக சென்றவர்கள் முதலில் காக்கேசிய பழங்குடியினரின் ஒருங்கிணைந்த ராணுவத்தை தோற்கடித்தனர். பின்னர் குமன்களை தோற்கடித்தனர். குமன் கான் தனது மருமகன் கலிசியா-வோலினியாவின் இளவரசனான தைரிய மிசுதிலாவின் அவைக்கு தப்பித்து ஓடினார். மங்கோலியர்களை எதிர்த்துப் போர் புரிய உதவுவதற்கு அவரை சம்மதிக்க வைத்தார். தைரிய மிசுதிலாவ், கீவின் மூன்றாம் மிசுதிலாவ் உள்ளிட்ட ருஸ் இளவரசர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை உருவாக்கினார்.

ஒருங்கிணைந்த ருஸ் இராணுவமானது முதலில் மங்கோலியர்களின் முன்வரிசை படையை தோற்கடித்தது. ருஸ் ராணுவம் தோற்று ஓடுவது போல் நடித்த மங்கோலியர்களை துரத்தியது. பல நாட்களுக்கு இவ்வாறு துரத்தினர். இதன் காரணமாக ருஸ் இராணுவமானது பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு இருந்தது. மங்கோலியர்கள் பிறகு கல்கா ஆற்றின் கரையில் யுத்த அணிவகுப்பில் நின்றனர். தைரிய மிசுதிலாவ் மற்றும் அவரது கூட்டாளிகள் எஞ்சிய ராணுவத்திற்காக காத்திருக்காமல் மங்கோலியர்களை தாக்கினர். தோற்கடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த குழப்பத்தில் மற்ற பல இளவரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கீவின் மிசுதிலாவ் ஒரு அரண் நிறைந்த முகாமிற்கு பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்தவர் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பான வழி திரும்பிச்செல்ல கிடைக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சரணடைந்தார். எனினும் சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அவர்களை கொன்றனர். கீவின் மிசுதிலாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். தைரிய மிசுதிலாவ் தப்பித்தார். மங்கோலியர்கள் ஆசியாவிற்கு திரும்பினர். அங்கு அவர்கள் செங்கிஸ்கானுடன் இணைந்தனர்.

பின்புலம்[தொகு]

1219 ஆம் ஆண்டு தனது தூதுவர்களை கொன்றதற்கு பதிலடியாக,[3] மங்கோலிய கானாகிய செங்கிஸ்கான் குவாரசமிய பேரரசு மீது படையெடுத்தார்.[4] மூன்று ஆண்டுகள் நீடித்த அந்த படையெடுப்பில் செங்கிஸ்கான் மற்றும் அவரது தளபதிகள் குவாரசமிய இராணுவங்களை அழித்து பேரரசை சிதைவுற செய்தனர். குவாரசமிய சுல்தானாகிய அலா அத்-தின் முகமது காஸ்பியன் கடலிலிருந்த ஒரு தீவில் நோய்க்கு பலியானார். தனது மகன் ஜலால் அத்-தின் மிங்புர்னுவை நிலமற்றவராக விட்டுச் சென்றார்.[5]

முகமத்தை துரத்திய மங்கோலிய தளபதிகளில் ஒருவரான செபே முகமத்தின் இறப்பைப் பற்றி கேள்விப்பட்ட பொழுது செங்கிஸ்கானிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கால அவகாசம் கொடுக்குமாறு கோரினார். அவ்வருடங்களில் தனது படையெடுப்புகளை தொடர்ந்து விட்டு பிறகு காக்கேசிய வழியாக மங்கோலியாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.[6]

செங்கிஸின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில் செபே மற்றும், முகமத்தை துரத்திய மற்றொரு தளபதியான சுபுதை ஆகியோர் தங்களது 20,000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை வழிநடத்தினர். இந்த ராணுவத்தில் ஒவ்வொருவரும் ஒரு தியுமன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.[6] அவர்கள் தங்களுக்கு பின்னர் அழிவின் பாதையை விட்டு சென்றனர். பாரசீக ஈராக் (ஈராக்-இ அஜம்) மற்றும் அசர்பைஜான் ஆகிய பகுதிகள் வழியே சென்றனர். ரே, சஞ்சன் மற்றும் கஸ்வின் ஆகிய நகரங்களை சூறையாடினர். ஹமாதான் நகரம் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதே நேரத்தில் அசர்பைஜானின் அட்டாபெக்கான ஒஸ்பெக் தனது தலைநகரமான தப்ரிசை மங்கோலியர்களுக்கு ஒரு பெரிய தொகை, உடை மற்றும் மங்கோலியர்களின் சிறந்த ஆயுதங்களான குதிரைகள் ஆகியவற்றை அளித்ததன் மூலம் அழிவிலிருந்து காப்பாற்றினார்.[7]

தப்ரிசிலிருந்து மங்கோலியர்கள் வடக்கு நோக்கி முன்னேறினர். தங்களது குளிர்கால முகாமை முகன் புல்வெளிகளில் அமைத்தனர். அங்கு மங்கோலிய ராணுவமானது குர்து இன மற்றும் துருக்மேனிய படைகளின் வரவால் வலுவடைந்தது. அவர்கள் தங்களது சேவையை மங்கோலியர்களுக்கு அளிக்க முன்வந்தனர்.[8]

உசாத்துணை[தொகு]

  1. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 118.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; R100-G என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 87.
  4. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 98.
  5. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 106.
  6. 6.0 6.1 de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 107.
  7. de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 116.
  8. Gabriel, Subotai The Valiant: Genghis Khan's Greatest General, p. 89.
    * de Hartog, Genghis Khan: Conqueror of the World, p. 116
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கா_ஆற்று_யுத்தம்&oldid=3030576" இருந்து மீள்விக்கப்பட்டது