நத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிறிஸ்துமஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நத்தார்
Worship of the shepherds by bronzino.jpg
பிற பெயர்(கள்)கிறித்து பிறப்புப் பெருவிழா, நத்தார்[1]
கடைபிடிப்போர்கிறித்தவர்கள்
வகைகிறித்தவப் பெருவிழா
முக்கியத்துவம்இயேசுவின் பிறப்பு
அனுசரிப்புகள்திருப்பலி, பரிசுப் பரிமாற்றங்கள், குடும்பச் சந்திப்புகள், கிறித்துமசு மரங்களை அலங்கரித்தல், குடில் வைத்தல்
நாள்திசம்பர் 25

நத்தார்,[1] கிறித்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறித்துமசு (Christmas) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.[2] இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.[3]

கிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறித்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

வரலாறு

கிறித்துவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்

குளிர்காலக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறித்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.[4] தொடக்கத்தில் கிறித்துமசு ஒரு முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது. மேலும் ஆரம்பகால கிறித்துவ சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.[5] இன்றைய சமூகத்தில் கிறித்துமசு முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறித்துவதுக்கு முந்தைய காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த குளிர்காலக் கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:

சடுர்நலியா பண்டிகை

இயேசுவை ஒளிவீசும் சூரியனாக சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்

உரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சடுர்நலியா எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்காலக் கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகளு வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது.[6] சடுர்நலியா கொண்டாட்டத்தின் போது வணிக நடவடிக்கைகள் பின் தள்ளப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன.[7] சடுர்நலியா கொண்டாட்டம் சனிக் கடவுளை (Saturn) மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் திசம்பர் 17 முதல் திசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.[8]

நட்டாலிசு சோலிசு இன்விட்டி (natalis solis invicti) பண்டிகை

உரோமர்கள் திசம்பர் 25ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நட்டாலிசு சோலிசு இன்விட்டி என்ற பண்டிகையைக் கொண்டாடினர்.[9] இது கி.மு. 222 முதல் 218 வரை உரோமின் அரசனாக இருந்த எலகாபலுசு காலத்தில் உரோமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 275 முதல் 270 வரை அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.[10] சோல் இன்விட்டுசு ("வெற்றிவீரன் சூரியன்" அல்லது "தோல்வியடையாத சூரியன்") என்பது சிரியாவில் பழங்காலத்தில் வழிபடப்பட்ட கடவுள் ஆகும்.[11][12] திசம்பர் 25 குளிர்கால நாளாக கருதப்பட்டது. இதை உரோமர்கள் புருமா என அழைத்தனர்.[6] சூலியசு சீசர் கி.மு. 45இல் சூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது இந்தக குறிப்பிட்ட நாள் குளிர்காலத்தில் திசம்பர் 25 அன்று வந்தது. எனினும் தற்காலத்தில் அது திசம்பர் 21 அல்லது 22இல் வருகின்றது. சோல் இன்விட்டுசு கிறித்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.[13] சில ஆரம்ப கிறித்துவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மறு உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்,[14] எடுத்துக்காட்டாக, சிபிரியன் என்ற கிறித்துவ ஆயர் "கி.மு 300கள் முதல் கிபி 258 வரை" என்கிற தகவல் தொகுப்பில்) பின்வருமாறு எழுதியுள்ளார்:

மார்ச்சு 25ஆம் நாள் மரியா என்கிற மேரி (மரியம்) இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, திசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறித்து பிறப்புவிழாவைக் கொண்டாடத் துவங்கினர்.

எனவே இன்றைய ஆய்வு முடிவுகளின்படி "இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார்" என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் துவக்க காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விட்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர் எனக் கொள்ளலாம்.

சூல் பண்டிகை

சூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்

எசுக்காண்டினாவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் சூல் பண்டிகையை திசம்பர் இறுதி முதல் சனவரி துவங்கும் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது தோர் எனும் இடியின் கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். அப்போது அந்த நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு ஒளித் துண்டுகளும் புத்தாண்டில் பிறக்கப் போகும் கால்நடைகளைக் குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியும் வரை பண்டிகை தொடரும். இது 12 நாட்கள் வரை கூட நிகழும்.[15] செருமனியில் இது போன்ற ஒரு பண்டிகை மிட்டுவிண்டனெச்சு (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.[16] வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறித்துவத்துக்கு மாறியது. அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறித்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எசுக்காண்டினாவியா மக்கள் கிறித்துமசு பண்டிகையை இன்றும் சூல் என்றே அழைக்கின்றனர். சூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறித்துமசு என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது.[17]

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

ஒரிஜென் என்கிற ஒரு துவக்க கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.

இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் பயணியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவர் கி.பி. 221இல் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய நூல் ஒன்று அறிவிக்கிறது.[14] இந்த நாள் இயேசு மரியாளின் கருவில் உருவாகியதாகக் கருதப்பட்ட மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வரும் நாளாகும்.[18] மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் கிறிஸ்தவ நம்பிக்கையில் இடம் பெறுகிறது.[18] ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் எனக் கருதினார்கள்.[18] இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும். இது "தீர்க்கதரிசிகள் (இறைத்தூதர்கள்) முழுமையான எண்ணிக்கை உள்ள நாட்கள் அளவுக்கே உயிர் வாழ்வார்கள்' என்ற யூதர்களின் நம்பிக்கை காரணமாக எழுந்ததாகும்.[18] துவக்க கால கிறிஸ்தவ அவைகளில் இயேசுவின் பிறந்தநாள் ஒரு திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி. 245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் எகிப்திய ஃபர்வோனைப் போல இயேசுவின் பிறப்பைக் கொண்டாடக் கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வார்கள் என்றும் புனிதர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.[5] ஒரிஜெனின் இந்தக் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப் பழைமையான ஒரு குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் ரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.[13][19] கி.பி. 360களின் ஆதாரம் ஒன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றது. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததைக் கொண்டாடும் திருநாளின் (ஜனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினர் என்றாலும் அப்போது இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[20] இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் ஜனவரி 6 கிறிஸ்துவின் பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது. இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.

ஆரிய வம்சப் பேரரசன் வாலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு "தந்தை, மகன், தூய ஆவி (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என மூன்று பேராக உள்ளார் கடவுள்" என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் கிழக்கு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன.

கான்ஸ்டான்டினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கான்ஸ்டான்டினோபிள் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கி.பி 381இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் என்பவர் பதவி விலகியதைத் தொடர்ந்து இது வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் என்பவர் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்ற பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[13]

மத்திய காலம்

கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்

ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் "புனித மார்டினின் நாற்பது நாட்கள்" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் திருவருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது.[21] இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது.[21] 12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.[21]

கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.[21] யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள்.[21] விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் புத்தாண்டு நாளில் பரிசுகள் பரிமாறப்பட்டது.

சமய மறுசீரமைப்பும் 1800களும்

கிறிஸ்துமஸ் தந்தை

கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது சீர்திருத்தத் திருச்சபைகள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை "பாப்பரசரின் ஆடம்பரம்" எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை "விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு ஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. கண்டர்பெரி பல கிழமைகளுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள்.[22] 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சில அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை.

அமெரிக்காவின் புதிய இங்கிலாந்தில் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்; பொஸ்டன் நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் நியூயார்க் வர்ஜீனியா நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர். அமெரிக்க புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது.

1820களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட "கிறிஸ்மஸ் கெரொல்ஸ்" என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது. [23]

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் "The Sketch Book of Geoffrey Crayon", "Old Christmas" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன, இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர்.[24] மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான யேர்மனிய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்

"மீண்டும் கிறிஸ்துமஸ்": (1907) கார்ல் லார்சன்

1914 இல் முதலாம் உலகப் போரின் போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.[25]

20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மத சார்பானதா சார்பற்றதா என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. சிலர் கிறிஸ்துமஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையானது மதத்தையும் நாட்டையும் பிரித்தல் என்பதற்கு முரணானது என வாதிட்டார்கள். "லின்ச் எதிர் டொனெலி (1984)"[26], "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" [27] வழக்குகள் உட்பட பல முறை நீதிமன்றத்தும் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" வழக்கில் நீதிமன்றமானது கிறிஸ்மஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டமையானது, அதில் காணப்படும் மதசார்பற்ற அம்சங்கள் காரணமாக சட்ட மீறல் அல்ல என தீர்ப்பளித்தது. இதனை டிசம்பர் 19, 2000 இல் அமெரிக்க உயர் நீதி மன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.

21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அம்சங்களைக் ஒன்றுசேர கொண்டுள்ளது. டிசம்பர் 26,2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் காரணமாக இலங்கை, இந்தியாவின் கடற்கரை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறைந்தாலும், தற்போது வழக்கம்போல ஒரு சமூக விழாவாக, குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பிறப்பு

இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாக, மத்தேயு, லூக்கா என்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.இயேசு பிறந்ததற்கு அடையாளமாக விண்மீன் ஒன்று வானில் தோன்றியது.

இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

பிரதேச கொண்டாட்டங்கள்

இலங்கையில் கிறிஸ்துமஸ்

ஆங்கிலேயர்கள் காணப்படும் 19 ஆம் நூற்றாண்டு ஓவியம். பின்னனியில் அலங்காரப் பொருட்கள்

கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ் எழுதிய "Topographia Christiana" என்ற நூலில் அக்காலப் பகுதியில் தப்ரபேனில் கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும், ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.[28] மேலும் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலுவைகளாலும் வவுனியாவுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருமுழுக்குத் தொட்டியின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர் புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக மகாவம்சம் கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.[29]

இலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.[30]

இலங்கையில் கிறிஸ்தவர்கள் 7-8 விழுக்காடு மட்டுமே உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர். பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு பல விழாக்களும் எடுக்ப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். டிசம்பர் மாததில் ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம்.

கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.

இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்

கடை ஒன்றில் அலங்காரப் பொருட்கள், கேரளா

இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி (Good Friday), மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும்.

டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர்.

வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.

கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்கள்

 1. 1.0 1.1 நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய மொழிச் சொல்லின் தமிழாக்கமாகும். இலத்தீன் மொழியில் பிறந்த நாள் என்பது dies natalis ஆகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உண்டு என்பதை அறிக.
 2. ஓடினிக் ரைட், Yule
 3. ஒக்ஸ்போட் ஆங்கில கிறிஸ்தவ அகராதி (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280.
 4. ""Easter", கத்தோலிக்க கலைக்களஞ்சியம், 1913.
 5. 5.0 5.1 ""Natal Day", The Catholic Encyclopedia, 1913.
 6. 6.0 6.1 Bruma, University of Tennessee
 7. Sempronia, Julilla, "Ancient Voices: Saturnalia, AncientWorlds 2004.
 8. Mosley, John, "Common Errors in 'Star of Bethlehem' Planetarium Shows", Planetarian, Third Quarter 1981.
 9. ""Mithraism", The Catholic Encyclopedia, 1913.
 10. "Sol." Encyclopedia Britannica, Chicago (2006).
 11. Why திசம்பர் 25? Christian History and Biography magazine
 12. Saturnalia? History Channel
 13. 13.0 13.1 13.2 13.3 "Christmas", The Catholic Encyclopedia, 1913.
 14. 14.0 14.1 "Christmas, Encyclopædia Britannica Chicago: Encyclopædia Britannica, 2006.
 15. An Ancient Holiday History Channel
 16. Reichmann, Ruth, "Christmas"[தொடர்பிழந்த இணைப்பு].
 17. Yule. The American Heritage® Dictionary of the English Language, Fourth Edition. Retrieved திசம்பர் 03, 2006.
 18. 18.0 18.1 18.2 18.3 "The Feast of the Annunciation", Catholic Encyclopedia, 1998.
 19. இந்நாட்குறிப்பு ரோமைச் சேர்ந்த ஒரு பிரபுக்காக எழுதப்பட்டது. இதன் ஒரு பகுதியை எழுதிய பிலோகலசின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் பற்றி "VIII kal. ian. natus Christus in Betleem Iude" எனக் குறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பு அதற்கு முந்திய குறிப்புகளின் மறுபதிப்பு எனக் கருதப்படுவதால் இக்குறிப்பின் நாள் சில வேளைகளில் கி.பி. 336 எனவும் கொடுக்கப்படுவது உண்டு.
 20. Pokhilko, Hieromonk Nicholas,"The Formation of Epiphany according to Different Traditions
 21. 21.0 21.1 21.2 21.3 21.4 Murray, Alexander, ",மத்தியக்கால கிறிஸ்துமஸ்",History Today, திசம்பர் 1986, 36 (12), pp. 31 – 39.
 22. Durston, Chris, "Lords of Misrule: The Puritan War on Christmas 1642-60", History Today, திசம்பர் 1985, 35 (12) pp. 7 – 14.
 23. Rowell, Geoffrey, "Dickens and the Construction of Christmas" பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம், History Today, திசம்பர் 1993, 43 (12), pp. 17 – 24.
 24. The history of Christmas: Christmas history in America, 2006
 25. Baker, Chris, The Christmas Truce of 1914, 1996
 26. Lynch vs. Donnelly (1984)
 27. Ganulin v. United States பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம் (1999)
 28. Topographia Christiana (1897) pp. 91-128. Book 3
 29. "Features". பார்த்த நாள் 31 December 2015.
 30. "2003-12-25 செய்தி குறிப்பு". மூல முகவரியிலிருந்து 2004-03-12 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Christmas
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தார்&oldid=3273328" இருந்து மீள்விக்கப்பட்டது