உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பலி (வழிபாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
15ஆம் நூற்றாண்டின் திருப்பலி

திருப்பலி அல்லது பலிப்பூசை (Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் ஆகும். இதை இயேசு கிறிஸ்துவின் கல்வாரிப் பலியின் (சிலுவை மரணம்) மறு-நிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். திருப்பலி இரத்தம் சிந்தாதப் பலி என்று அழைக்கப்படுகிறது.

கத்தோலிக்க இறையியல்

[தொகு]

நம் மீட்பர் தனது இறுதி இரவுணவின்போது, தன் உடலும் இரத்தமும் உள்ளடங்கிய நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார். இப்பலியினால் தான் மீண்டும் வருமளவும் தனது சிலுவைப் பலியை நூற்றாண்டுகளுக்கும் நிலைத்திருக்கச் செய்யவும், அதற்காக தன் அன்பு மணமகளாம் திருச்சபையிடம் தனது மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை ஒப்படைக்கவும் இவ்வாறு செய்தார்.[1]

ஒப்புக்கொடுக்கும் முறையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்றபடி சிலுவைப் பலியும், அதனைத் திருப்பலியில் அருட்சாதன முறைப்படி புதுப்பித்தலும் ஒன்றே; அருட்சாதன முறையில் புதுப்பிக்கும் பலியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது இறுதி இரவுணவின்போது ஏற்படுத்தி, அதைத் தன் நினைவாக நிறைவேற்றுமாறு திருத்தூதர்களுக்குக் கட்டளை இட்டார். ஆகவே திருப்பலி ஒரே சமயத்தில் புகழ்ச்சிப் பலியாகவும், நன்றியறிதல் பலியாகவும், சினந்தணிக்கும் பலியாகவும், பாவப் பரிகாரப் பலியாகவும் அமைந்துள்ளது.[2]

விவிலியச் சான்றுகள்

[தொகு]
ஜுவான் டி ஃப்லான்டஸ் வரைந்த ஆண்டவரின் இறுதி இரவுணவு

கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபையும் திருப்பலியை ஓர் அருளடையாளமாக (sacrament) ஏற்கின்றன. திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும் இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு.

லூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் "பலி" (sacrifice) என்று கருதுவதைவிட "திருவிருந்து" (communion) என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன.

எல்லாக் கிறித்தவ சபைகளும் இயேசு நற்கருணை விருந்தினை ஏற்படுத்தியதை ஏற்கின்றன. அவ்விருந்துக்கும் திருப்பலி வழிபாட்டுக்கும் ஆதாரமாகக் கீழ்வரும் விவிலியப் பகுதிகள் காட்டப்படுகின்றன:

மத்தேயு நற்செய்தி: "அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்."[3]

மாற்கு நற்செய்தி: "அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்." [4]

லூக்கா நற்செய்தி: "இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, 'இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, 'இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை' என்றார்."[5]

திருத்தூதர் பணிகள்: "அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்."[6]

1 கொரிந்தியர் 10: "கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்." [7]

1 கொரிந்தியர் 11: "ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்." [8]

மேற்கூறிய விவிலியக் கூற்றுகளின் அடிப்படையில் கத்தோலிக்க திருச்சபை திருப்பலியைக் கொண்டாடுகிறது. எனினும், கொண்டாட்ட முறை காலப்போக்கில் உருவெடுத்தது.

திருப்பலி வழிபாட்டு முறை

[தொகு]
நற்கருணை வழங்கப்படுகிறது

திருப்பலி வழிபாடு இரண்டு வழிபாட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகியவை ஆகும். இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்துள்ளன. ஏனெனில், திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும், கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள். மேலும், ஒரு சில சடங்குகள் திருப்பலி கொண்டாட்டத்துக்கு தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்துள்ளன.[9]

இறைவாக்கு வழிபாடு

[தொகு]

தொடக்கச் சடங்கு: வருகை பவனி, தொடக்க வாழ்த்து - தூண்டுதல் உரை, மனத்துயர் முயற்சி, வானவர் கீதம் (குறிப்பிட்ட நாட்களில் மட்டும்), சபை மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.[10]

இறைவாக்கு அறிவிப்பு: முதல் வாசகம், பதிலுரைப் பாடல், இரண்டாம் வாசகம் (ஞாயிறு, பெருவிழா நாட்களில் மட்டும்), நற்செய்திக்கு முன் (அல்லேலூயா) வாழ்த்தொலி, நற்செய்தி வாசகம், மறையுரை, விசுவாச அறிக்கை (ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்), இறைமக்கள் மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.[10]

நற்கருணை வழிபாடு

[தொகு]

நற்கருணை கொண்டாட்டம்: காணிக்கை பவனி, அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுத்தல், நற்கருணை மன்றாட்டு, நற்கருணை எழுந்தேற்றம், இறுதிப் புகழுரை, இயேசு கற்பித்த செபம், சமாதான வாழ்த்து, அப்பம் பிடுதல், நற்கருணைத் திருவிருந்து, நன்றி மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.[10]

முடிவுச் சடங்கு: அறிவிப்புகள் (முக்கிய நாட்களில் மட்டும்), வாழ்த்து ஆசீர், பிரியா விடை, முடிவு பவனி ஆகியவற்றை உள்ளடக்கியது.[10]

திருப்பலி உடைகள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் அருட்பணியாளர்கள் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன. அவை,

வெள்ளை (பொன், வெள்ளி): தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது.

பச்சை: வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், வார நாள்களிலும் ஞாயிறன்றும் அணியப்படுகிறது.

சிவப்பு: நெருப்பு மற்றும் இரத்தத்தின் அடையாளம். மறைசாட்சிகளாக இறந்த புனிதர்களின் விழாக்கள், புனித வெள்ளி, குருத்து ஞாயிறு, தூய ஆவியின் வருகைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.

ஊதா: தவம் மற்றும் பரிகாரத்தின் அடையாளம். திருவருகைக்காலம், தவக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் அணியப்படுகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. இறைபணி எண்: 47
  2. திருப்பலி புத்தக போதனை எண்: 2
  3. மத்தேயு 26:26-29
  4. மாற்கு 14:22-25
  5. லூக்கா 22:19-20
  6. திருத்தூதர் பணிகள் 2:42
  7. 1 கொரிந்தியர் 10:16-17
  8. 1 கொரிந்தியர் 11:23-26
  9. திருப்பலி புத்தக போதனை எண்: 8
  10. 10.0 10.1 10.2 10.3 கத்தோலிக்க திருப்பலி புத்தகம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பலி_(வழிபாடு)&oldid=3604389" இலிருந்து மீள்விக்கப்பட்டது