உள்ளடக்கத்துக்குச் செல்

புனித பேதுரு பேராலயம்

ஆள்கூறுகள்: 41°54′8″N 12°27′12″E / 41.90222°N 12.45333°E / 41.90222; 12.45333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித பேதுரு பெருங்கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புனித பேதுரு பேராலயம்
Papal Basilica of Saint Peter
Basilica Sancti Petri (இலத்தீன்)
Basilica Papale di San Pietro in Vaticano (இத்தாலியம்)
புனித பேதுரு பேராலயத்தின் உள் தோற்றம். ஜொவான்னி பவுலோ பன்னீனியால் வரையப்பட்டது.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வத்திக்கான் நகரம்
புவியியல் ஆள்கூறுகள்41°54′8″N 12°27′12″E / 41.90222°N 12.45333°E / 41.90222; 12.45333
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1626
நிலைஉயர் பேராலயம் (Major Basilica)
இணையத்
தளம்
(இத்தாலியம்)

புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்[1]. இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் "பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் "பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். இப்பெருங்கோவில் பின்-மறுமலர்ச்சிக்கால (Late Renaissance) கலைப்பாணியில் அமைந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு[2].

புனித பேதுருவின் கல்லறை

[தொகு]

கத்தோலிக்க மரபின்படி, இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும், உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு. எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார்.

புனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்களாகிய பல திருத்தந்தையர் இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய ஒரு கோவில் இருந்தது. அந்தப் பழைய கோவிலின்மீது கட்டப்பட்டு எழுந்துநிற்கின்ற இன்றைய பேராலயக் கட்டட வேலை 1506ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் தொடங்கி, 1626ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் நிறைவுபெற்றது.

உரோமையில் அமைந்துள்ள எண்ணிறந்த பிற கோவில்களைவிடப் பெயர் பெற்றதாக இத்தேவாலயம் இருப்பினும், உரோமை ஆயராகிய திருத்தந்தையின் "ஆயர் இருக்கை" உள்ள கோவில் இதுவன்று. திருத்தந்தையின் "ஆயர் இருக்கை" (cathedra = chair) அமைந்துள்ள "மறைமாவட்ட ஆலயம்" (cathedral) லாத்தரன் பேராலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் வேறு இரு பெருங்கோவில்கள் (Major basilica) புனித மரியா பெருங்கோவிலும், புனித பவுல் பெருங்கோவிலும் ஆகும்.

புகழ் மிக்க திருத்தலம்

[தொகு]

புனித பேதுரு பெருங்கோவில் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். இங்கு நிகழ்கின்ற சிறப்பு வழிபாடுகளும், இதன் வரலாற்றுத் தொடர்புகளும் இதை ஒரு புகழ்பெற்ற வழிபாட்டிடமாக ஆக்கியுள்ளன. இக்கோவிலில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாடுகளில் திருத்தந்தை வழக்கமாகப் பங்கேற்பார். கிறித்தவ சமயத்தில் புரடஸ்தாந்து சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு நடந்த கத்தோலிக்கச் சீர்திருத்தத்தோடு இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இக்கோவிலை அணிசெய்கின்ற பல கலைப் படைப்புகள் மைக்கலாஞ்சலோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். கட்டடக்கலை ஆக்கம் என்ற வகையில் இக் கட்டடம் அக்காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப்பட்டது.

Panorama showing the facade of St Peter's at the centre with the arms of Berninis colonnade sweeping out on either side. It is midday and tourists are walking and taking photographs.
புனித பேதுரு பெருங்கோவில் முகப்பின் அகல்பரப்புக் காட்சியும் வெளிமுற்றத்தின் விரிபார்வையும்

பேதுரு பேராலயத்தின் அமைப்பு: பொதுப் பார்வை

[தொகு]

வத்திக்கான் நகரில் அமைந்துள்ள இக்கோவில் உரோமை நகரின் டைபர் ஆற்றின் மேற்கே, ஜனிக்குலம் குன்றுக்கும், ஹேட்ரியன் நினைவகத்திற்கும் அருகே உள்ளது. இக்கோவிலின் மையக் குவிமாடம் உரோமை நகரின் உயர்ந்த கட்டட அமைப்புகளுள் முதன்மையாக விளங்குகிறது. கோவிலை அணுகிச் செல்ல "புனித பேதுரு வெளிமுற்றம்" (St. Peter's Square) என்னும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இம்முற்றம் பரந்து விரிந்த ஒரு வெளி ஆகும். இரு பிரிவுகளாக அமைந்த இந்தப் பெருவெளியின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. முதல் பிரிவு முட்டை வடிவிலும், இரண்டாம் பிரிவு சரிவக வடிவிலும் உள்ளது. பேராலயத்தின் முகப்பு உயரமான தூண்களைக் கொண்டதும், வெளிமுற்றத்தின் இறுதியில் நீண்டு அமைந்ததுமாகவும் உள்ளது. கோவிலின் வாயிலைச் சென்றடைய பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் இருபக்கமும் 5.55 மீட்டர் (18.2 அடி) உயரமுள்ள புனித பேதுரு, புனித பவுல் சிலைகள் உள்ளன. இவ்விரு புனிதர்களும் உரோமையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அங்கே மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தார்கள் என்பது மரபு.

பேதுரு பேராலயம் "இலத்தீன் சிலுவை" வடிவத்தில் உள்ளது. ஆயினும் கட்டடத்தின் முதல் வரைவுப்படி மையக் கட்டட அமைப்பு கருதப்பட்டது. அதன் தாக்கம் இன்றைய கட்டட அமைப்பிலும் தெரிகிறது. கட்டடத்தின் மைய அமைப்பு மாபெரும் குவிமாடம் ஆகும். அது வெளிப்பார்வைக்கும் உட்பார்வைக்கும் மிகப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது. இது உலகிலேயே மிகப் பெரும் குவிமாடங்களுள் ஒன்று ஆகும்.

கோவிலின் நுழைவாயிலில் ஒரு முன் முற்றம் உள்ளது. அது முகப்பின் ஒருபுறமிருந்து மறுபுறம் வரை நீண்டுள்ளது. கோவிலின் முகப்பு வலமிருந்து இடமாக 116 மீட்டர், கீழிருந்து மேலாக 53 மீட்டர் அளவுடையது. கோவில் முகப்பின் மேல்மாடி மையத்திலிருந்து, கீழே புனித பேதுரு வெளிமுற்றத்தில் கூடியிருக்கும் மக்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக, ஒரு புதுத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்த மேல்மாடி மையத்திலிருந்துதான் "திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!" என்னும் அறிவிப்பு வழங்கப்படும்.

நுழைவாயில் பல கதவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒரு கதவு "திருக்கதவு" (Holy Door) என்று அழைக்கப்படுகிறது. அது "ஜூபிலி ஆண்டு" என்னும் சிறப்புக் கொண்டாட்டத்தின் போது மட்டுமே திறக்கப்படும்.

கிறித்தவத்தில் திருத்தூதர் பேதுருவின் முதலிடம்

[தொகு]

புனித பேதுரு நினைவாக எழுப்பப்பட்டுள்ள வத்திக்கான் பெருங்கோவில் விவிலிய அடிப்படையில் ஊன்றியதாகும். ஒருநாள் வட பாலஸ்தீனாவில் எர்மோன் மலையடிவாரத்தில் இயேசு சீமோன் பேதுருவுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்:

இச்சொற்களைக் கூறிய இயேசு சீமோன் என்பவருக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்தார். பேதுருவுக்கு ஒரு முக்கிய பணியையும் கொடுத்தார். இயேசு நிறுவப்போகின்ற புதிய சமூகத்திற்குப் (சபைக்கு) பேதுரு தலைவராக இருப்பார் என்று இயேசு முன்னறிவித்தார்.

மேலும், இயேசு சிலுவையில் இறந்து, உயிர்பெற்றெழுந்த பிறகு, சீமோன் பேதுருவிடம் திருச்சபையின் பொறுப்பை ஒப்படைத்ததை யோவான் நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளார்:

இவ்வாறு, இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருச்சபையின் பொறுப்பை ஏற்றார் என்பது திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தெரியவருகிறது. யூதாசுக்குப் பதிலாக மத்தியா என்னும் சீடரைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப் பேதுரு ஏற்பாடு செய்தார். எருசலேமில் யூதர்களின் முன்னிலையில் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தவரும் பேதுருவே. பிற இனத்தவராகிய கொர்னேலியு என்பவரைக் கிறித்தவத்துக்குக் கொணர்ந்தவரும் பேதுருதான். தொடக்கக் காலத் திருச்சபையில் பேதுரு சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பது புதிய ஏற்பாட்டின் பிற நூல்களிலிருந்தும் தெரிகிறது. பேதுரு உரோமை நகரில் கிறித்தவ மறை பற்றி அறிவித்தார் என்றும், திருச்சபையில் அவர் கொண்டிருந்த முதன்மை அதிகாரத்தை அவருடைய வாரிசுகளுக்கு வழிவழியாக வர வழிசெய்தார் என்றும், இந்த அதிகாரத்தைத் திருத்தந்தை (போப்பாண்டவர்) கொண்டிருக்கிறார் என்றும் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் நம்புகின்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூல் கூறுவது போல, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பேதுரு எருசலேமில் சிறிது காலம் தங்கியிருந்தார். கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் "அவர் புறப்பட்டு வேறோர் இடத்திற்குப் போய்விட்டார்" என்னும் குறிப்பு உள்ளது (திருத்தூதர் பணிகள் 12:17). இக்குறிப்புக்குப் பின் திருத்தூதர் பணிகள் நூலில் பேதுரு பற்றி வேறு தகவல்கள் இல்லை. ஆயினும் வேறு மூலங்களிலிருந்து பேதுரு சிரியா நாட்டு அந்தியோக்கியா நகருக்குச் சென்றார் என்றும், அங்கிருந்து உரோமை நகர் சென்றார் என்றும் அங்கே மறைச்சாட்சியாக உயிர்நீத்தார் என்றும் அறிகிறோம்.

பேதுரு உரோமைக்குச் சென்று, அங்கு மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. புதிய ஏற்பாட்டு நூல்களாகிய 1 பேதுரு என்னும் மடலிலும் 2 பேதுரு என்னும் மடலிலும் தவிர, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பேதுருவின் பணி பற்றிய குறிப்புகள் உள்ளன. உரோமை நகரின் ஆயராகப் பணிபுரிந்த கிளமெண்ட் என்னும் திருத்தந்தை கி.பி. சுமார் 95இல் எழுதிய கடிதத்தில் "பேதுரு உரோமையில் மறைச்சாட்சியாக இறந்தார்" என்று குறிப்பிட்டார். திருத்தூதர்களின் சீடர்களுள் பலரை அறிந்தவரும் ஹியராப்பொலிஸ் நகரில் ஆயராக இருந்தவருமாகிய பப்பியாஸ் என்பவர் பேதுரு உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பியதாகக் கூறுகிறார்.

பேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றம்

[தொகு]

புனித பேதுரு பெருங்கோவில் தன்னிலேயே உலகப் புகழ் பெற்றது. அக்கோவிலின் முன் அமைந்த பரந்த வெளிமுற்றம் கோவிலின் சிறப்பை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டுகிறது[3]. இவ்வெளிமுற்றம் நீள்வட்ட வடிவம் கொண்டது; அது பின்னர் நீள்சதுரமாக மாறுகின்றது. இம்முற்றத்தை 1656-1667இல் வடிவமைத்தவர் ஜான் லொரேன்ஸோ பெர்னீனி என்னும் தலைசிறந்த கட்டடக் கலைஞர் ஆவார். அரவணைப்பதற்கு நீட்டப்படுகின்ற கைகளைப் போல இம்முற்றத்தின் இரு பக்கங்களும் அமைந்துள்ளன. "திருச்சபை என்னும் அன்னை தன் இரு கைகளையும் விரித்து மக்களை அரவணைப்பதாக" இவ்வெளிமுற்றத்தை அமைத்ததாக பெர்னீனியே கூறியுள்ளார்.

கோவில் முகப்பை நோக்கி நின்று பார்க்கும்போது வெளிமுற்றத்தின் நீள்வட்ட வடிவப் பகுதி வலமிருந்து இடமாக 240 மீட்டர் அதிக நீள அளவுடையது; வெளிமுற்றம் முழுவதும் பின்னிருந்து முன்னாக 320 மீட்டர் அதிக அளவுடையது.

தூண் வரிசைக் கூட்டம்
புனித பேதுரு வெளிமுற்றத்தின் இரு பக்கங்களிலும் மொத்தம் 284 சீர்நிலைத்தூண்களும் 88 மதில்தூண்களும் நான்கு நெடுவரிசையாக அமைந்து பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. இத்தூண்கள் டோரிக் என்னும் கலைப்பாணியைச் சார்ந்தவை. இத்தூண்கள் வரிசையில் வலப்புறம் 70, இடப்புறம் 70 என்று 140 புனிதர்களின் திருச்சிலைகள் எழுகின்றன. இச்சிலைகளைச் செதுக்கிய சிற்பிகள் பலராவர். சிலைகள் செதுக்கப்பட்ட காலம் 1662-1703 ஆகும்.

தூண்வரிசையின் ஓரமாக நடந்து சென்றால் அவை அசைந்துசெல்வது போன்ற பிரமை ஏற்படும். வெளிமுற்றத்தின் நீள்வட்ட மையப் புள்ளிகளின் (elliptical centers) மேல் நின்றுகொண்டு தூண்வரிசையைப் பார்த்தால் நான்கு வரிசைகளும் தனித்தனியாகத் தெரிவதற்குப் பதிலாக ஒரே வரிசையில் இருப்பது போல் தோன்றும் வகையில் பெர்னீனி அவற்றை எழுப்பியுள்ளது வியப்புக்குரியது.

ஊசிமுனைத் தூண்
புனித பேதுரு வெளிமுற்றத்தின் நடுவில் உயர்ந்தெழுகின்ற ஊசிமுனைத் தூண் (obelisk) குறிப்பிடத்தக்கது. இத்தூண் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். எகிப்தியரின் நம்பிக்கைப்படி, வானுயர எழுகின்ற ஊசித் தூண் வானகத்தையும் வையகத்தையும் இணைக்கின்ற அடையாளம் ஆகும். வானகத்திலிருந்து தெய்வ சக்தி மண்ணகம் வந்தடைவதை ஊசித் தூண் குறித்துநின்றது.

புனித பேதுரு கோவில் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் எகிப்து நாட்டில் செந்நிறக் கல் பாறையிலிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லால் ஆனது. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட அந்த ஊசித் தூண் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் எகிப்து நாட்டில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பேரரசன் கலிகுலா (ஆட்சிக் காலம்: கி.பி. 37-41) இந்த ஊசித் தூணை எகிப்தின் பண்டைய நகராகிய ஹேலியோப்பொலிஸ் ("சூரிய நகர்") என்னும் இடத்திலிருந்து கடல் வழியாக உரோமைக்குக் கொண்டுவந்து, தாம் கட்டிய மாபெரும் விளையாட்டு மைதானத்தில் கி.பி. 37இல் எழுப்பினார். விளையாட்டு மைதான வேலை பேரரசன் நீரோ காலத்தில் நிறைவுற்றது. எனவே இன்றைய வத்திக்கான் பகுதியில் புனித பேதுரு பெருங்கோவிலின் இறுதியிலிருந்து வெளிமுற்றப்பகுதியையும் தாண்டிச் செல்லும். அளவுக்கு அந்த விளையாட்டு மைதானம் விரிந்திருந்தது. முன்னாட்களின் அமைந்திருந்த அம்மாபெரும் விளையாட்டு மைதானம் நீரோ பெயரால் வழங்கப்பட்டது.

கி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகரில் தீப்பற்றி அழிவு ஏற்பட்டதற்கு கிறித்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி, நீரோ பல கிறித்தவர்களைக் கொன்றார். அவ்வாறு இறந்தோரில் புனித பேதுருவும் ஒருவர் என்றும் அவர் இன்றைய வத்திக்கான் பகுதியில் நீரோ ஆட்சியில் "ஊசித் தூண் அருகே" தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்றும் கிறித்தவ வரலாறு கூறுகிறது.

கி.பி. 1586ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர் அந்த ஊசித் தூணை பேதுரு கோவில் வெளிமுற்ற மையத்தில் எழுப்ப ஆணையிட்டார். ஊசித் தூணை சுமார் 900 அடி நகர்த்திக் கொண்டுவந்து எழுப்பிட நான்கு மாதங்கள் ஆனதாம். மேலும் அவ்வேலையைச் செய்ய 900 ஆட்களும், 40 குதிரைகளும் 44 உயர்த்துபொறிகளும் தேவைப்பட்டனவாம்.

பேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் ஒரு சூரியக் கடிகாரமாகவும் பயன்படுகிறது. சூரிய ஒளி வீசும்போது ஊசித் தூணின் நிழல் நண்பகலில் தரையில் வரையப்பட்ட கோள் மண்டலக் குறிகளில் (zodiac signs) விழுவதைக் கொண்டு காலத்தையும் நாளையும் கணிக்கலாம்.

இந்த ஊசித் தூண் உரோமையர் காலத்தில் "தெய்வீக அகுஸ்துஸ்", "தெய்வீக திபேரியுஸ்" என்று உரோமை மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இப்போதோ இத்தூண் இயேசு கிறித்துவின் சிலுவைச் சின்னத்தை உச்சியில் தாங்கி நிற்கிறது. தூணின் அடிமட்டத்தில் இலத்தீன் மொழியில் "கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து ஆள்கிறார், கிறிஸ்து கோலோச்சுகிறார். கிறிஸ்து தம் மக்களை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பாராக" என்னும் சொற்றொடர் பதிக்கப்பட்டுள்ளது.

மைக்கலாஞ்சலோவின் "Pietà" ("தாயும் சேயும்") பளிங்குச் சிலை

[தொகு]
மைக்கலாஞ்சலோ உருவாக்கிய "தாயும் சேயும்" (Pietà) பளிங்குச் சிலை. ஆண்டு: 1498-1499. காப்பியம்:புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் நகரம்.

பேதுரு பெருங்கோவிலின் உள்ளே கிறித்தவ மறைசார்ந்த எண்ணிறந்த கலைப் பொருள்களும் நினைவுச் சின்னங்களும் உள்ளன. அவை அனைத்துள்ளும் போற்றற்குரிய இடத்தைப் பெறுவது மைக்கலாஞ்சலோ செதுக்கிய "பியேட்டா" (Pietà) ("தாயும் சேயும்") என்னும் கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும்[4].

மறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் "பியேட்டா" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். அப்போது அவருக்கு வயது 25.

புனித பேதுரு பெருங்கோவிலில் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ள இச்சிலை உலக அளவில் தலைசிறந்த பளிங்குச் சிற்பமாகக் கருதப்படுகிறது.

இன்று, புனித பேதுரு கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளது. எண்ணிறந்த சிலைகளையும் ஓவியங்களையும் கோவில்களையும் உருவாக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தாயும் சேயும்" (பியேட்டா) சிலையில் மரியா துன்பத்தில் துவழ்ந்து புலம்புபவராக இல்லை. இயேசுவின் முகத்திலும் ஆழ்ந்த அமைதி தவழ்கிறது. அவர் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.

கோவிலின் மாபெரும் குவிமாடம்

[தொகு]
புனித பேதுரு கோவிலின் குவிமாடத்தின் உள் தோற்றம்.

புனித பேதுரு பெருங்கோவிலின் பிரமாண்டமான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது அதன் சிறப்புமிக்க குவிமாடம் (Dome) ஆகும்.

கோவில் தளத்திலிருந்து இக்குவிமாடத்தின் உச்சிவரை 136.57 மீட்டர் (448.1 அடி) உயரம் உள்ளது. உலகத்திலுள்ள மிக உயர்ந்த குவிமாடம் இதுவே. பயணிகள் இக்குவிமாடத்தின் உச்சிவரை ஏறிச்செல்ல முடியும். முதல் கூரையைச் சென்றடைந்ததும் உரோமை நகரின் பரந்து விரிந்த காட்சி கண்களைக் கவர்வதாய் உள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்று, குவிமாடத்தின் உள்பகுதியை அருகிலிருந்து பார்த்து அனுபவிக்க முடியும். மேலிருந்து கீழே கோவிலின் உட்பகுதியை நோக்கும்போது, அதன் உயரம், விரிவு, நீளம் எத்துணை என ஓரளவு அறியலாம். குவிமாடத்தை அடைய 360 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

குவிமாடத்தின் உள் விட்டம் 41.47 மீட்டர் (136.1 அடி). இக்குவிமாடத்தின் உள் விட்டத்தை அளவில் விஞ்சிய மாடங்கள் இதற்கு முன்னால் கட்டப்பட்ட "அனைத்துக் கடவுளர் கோவில்" (Pantheon) என்னும் பண்டைய உரோமைப் பேரரசுக் காலக் கட்டடமும், தொடக்க மறுமலர்ச்சிக் காலக் கட்டடமாகிய புளோரன்சு பெருங்கோவிலின் குவிமாடமும் ஆகும்.

அனைத்துக் கடவுளர் கோவில் என்னும் கட்டடத்தின் குவிமாட உள் விட்டம் 43.3 மீட்டர் (142 அடி); புளோரன்சு கோவில் குவிமாட உள் விட்டம் 44 மீட்டர் (114 அடி) ஆகும்.

காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கிபி 537இல் கட்டி முடிக்கப்பட்ட "திரு ஞானக் கோவில்"(Hagia Sophia) என்னும் கோவில் மாடத்தின் விட்டத்தைவிட, புனித பேதுரு பெருங்கோவில் குவிமாட விட்டம் 9.1 மீட்டர் (30 அடி) கூடுதல் ஆகும்.

கிறித்தவ உலகில் மாபெரும் குவிமாடமாக எண்ணிக் கட்டப்பட்ட பேதுரு பெருங்கோவில் குவிமாடத்தை வடிவமைப்பதற்குக் கட்டடக் கலைஞர்கள் அதற்கு முன்னரே கட்டப்பட்ட "அனைத்துக் கடவுளர் கோவில்" குவிமாடத்தையும், புளோரன்சு கோவில் குவிமாடத்தையும் துல்லியமாக ஆய்ந்தனர்; கட்டடத் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முயன்றனர்.

கலைஞர் பிரமாந்தே முயற்சி

[தொகு]

பேதுரு கோவில் குவிமாடத்தை வடிவமைக்க கலைஞர் பிரமாந்தே முதலில் "அனைத்துக் கடவுளர் கோவில்" குவிமாடத்தின் கட்டட நுட்பங்களைத் துல்லியமாக ஆய்ந்தார். ஆயினும், "அனைத்துக் கடவுளர் கோவில்" குவிமாடம் தரையிலிருந்தே மேல் எழுகின்றது. மாறாக, பேதுரு கோவில் குவிமாடம் நான்கு பெரும் தூண் தொகுதிகளின் மேல் ஓர் அடிமாடம் கொண்டு, அதன் மேல் எழுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பிரமாந்தே புனித பேதுரு கோவில் குவிமாடத்தின் முதல் வரைவை உருவாக்கினார்.

கலைஞர் சான்கால்லோ முயற்சி

[தொகு]

சான்கால்லோ என்னும் கலைஞர் புளோரன்சு கோவில் குவிமாடத்தைக் கண்முன் கொண்டு ஒரு வரைவு உருவாக்கினார். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினம் என்றும் தோன்றலாயிற்று.

மைக்கலாஞ்சலோ திட்டம்

[தொகு]

குவிமாட வரைவை மைக்கலாஞ்சலோ 1547இல் திருத்தியமைத்தார். அப்போது அவருக்கு வயது 72. குவிமாட வேலையை அவர் முன்னின்று நடத்தினார். அதன் அடிமண்டபம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அவர் 1564இல் இறந்தார்.

குவிமாடம் நிறைவுபெறல்

[தொகு]

மைக்கலாஞ்சலோவில் இறப்புக்குப் பின் அவர் கொடுத்திருந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சில திருத்தங்களுடன், ஜாக்கமொ தெல்லா போர்த்தா என்னும் கலைஞரும் ஃபொன்டானா என்னும் கலைஞரும் குவிமாடத்தை 1590இல் நிறைவுக்குக் கொணர்ந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவர் ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர்.

குவிமாடத்தில் செதுக்கப்பட்டுள்ள விவிலிய பாடம்

[தொகு]

புனித பேதுருவின் நினைவாக எழுகின்ற இப்பெருங்கோவிலில் அவரைச் சிறப்பிக்கும் விவிலிய மேற்கோள் குவிமாடத்தின் உட்பகுதியில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் 2 அடி உயரம் கொண்டு, பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றது.

மத்தேயு நற்செய்தியில் இயேசு பேதுருவை நோக்கிக் கூறிய சொற்கள் இவை (மத்தேயு 16:18-19). தமிழில்,

குவிமாடத்தின் சிறப்பு அம்சங்கள்

[தொகு]

புனித பேதுரு கல்லறையின் மேல் பிரமாண்டமாக எழுகின்ற இக்குவிமாடத்தின் சுற்றுப் புறமாக 16 பெரிய சாளரங்கள் உள்ளன. உயர்ந்தெழுகின்ற உச்சிப் பகுதியிலிருந்து கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவில் உள்ளகத்தை ஒளிர்விக்கின்றன.

குவிமாடம் அமர்ந்திருக்கின்ற நான்கு பெரிய தொகுப்புத் தூண்களின் உட்குவிப் பகுதியில் உயர்ந்த பளிங்குச் சிலைகள் உள்ளன.

கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையருள் பதினாறு பேர்களின் ஓவியங்கள் குவி உள்ளன. இயேசு, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், திருத்தூதர்கள் ஆகியோரின் ஓவியங்களும் இருக்கின்றன.

குவிமாடத்தின் உச்சிப்பகுதியில் விண்ணகக் காட்சி தோன்றுகிறது. அங்கே தந்தையாம் கடவுளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரைச் சூழ்ந்து வானதூதர்கள் உள்ளனர். அப்பகுதியின் வெளிவட்டத்தில் S. PETRI GLORIAE SIXTUS PP. V A. MDXC PONTIF. V என்னும் வாசகம் உள்ளது. அது தமிழில் "இக்கோவில் புனித பேதுருவின் மாட்சிமைக்காக, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டசால் 1590ஆம் ஆண்டு, அவர்தம் ஐந்தாம் ஆட்சியாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது" என வரும்.

கோவிலின் உள் நடுப்பகுதி

[தொகு]
புனித பேதுரு வெண்கலச் சிற்பம். காப்பிடம்: பேதுரு கோவில், வத்திக்கான்.

பேதுரு கோவிலின் உள் நடுப்பகுதி (Nave) நேராகக் கோவிலின் மையப் பீடத்துக்கு இட்டுச் செல்கிறது. மையப் பீடத்தின் கீழே புனித பேதுரு கல்லறை உள்ளது.

கோவிலுக்குள் நுழைந்ததும் உள் நடுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள வட்டவடிவமான பளிங்குக் கல்தட்டை (porphyry slab) காணலாம். அந்த இடத்தில்தான், பழைய பேதுரு கோவில் உயர் பீடத்தின் முன் சார்லிமேன், பிற புனித உரோமைப் பேரரசர்கள் முழந்தாட்படியிட்டு, அரசர்களாக முடிசூடப்பட்டார்கள்.

கோவிலின் உள் நடுப்பகுதியில் உலகிலுள்ள மாபெரும் கிறித்தவப் பெருங்கோவில்களின் நீளம் என்னவென்று காட்டுகின்ற ஒப்பமைப் பட்டியல் உள்ளது. அந்த ஒப்பீட்டிலிருந்து பேதுரு பெருங்கோவிலின் நீளம் 186.36 மீட்டர் என்று தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள 31 கோவில்களுள் இறுதியாக வருவது நியூயார்க்கில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் ஆகும் (101.19 மீட்டர்).

இருபுறமும் உள்ள பெருந்தூண்களின் குழிவிடங்களில் புனிதர்களின் சிலைகள் உள்ளன. அவற்றுள் துறவற சபைகளை நிறுவிய 39 புனிதர்களின் சிலைகளை உயர்ந்து எழுவதைக் காணலாம். வலது புறம் அமைந்திருக்கின்ற முதல் சிலை புனித அவிலா தெரேசாவின் திருவுருவம் ஆகும். இவர் கார்மேல் சபையைத் திருத்தி அமைத்த புனிதர் ஆவார்.

புனித பேதுரு அரியணையில் அமர்ந்திருப்பது போல் ஒரு வெண்கலச் சிலை உள்ளது. அச்சிலை கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் கருதினாலும், 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அர்னோல்ஃபோ தி காம்பியோ என்னும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. திருப்பயணியர் அச்சிலையின் கால்களை (குறிப்பாக வலது காலை) தொட்டு முத்தி செய்வது வழக்கம். இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் செய்து வந்துள்ளதால் பேதுருவின் கால்கள் தேய்ந்து பளபளவென்று தோற்றமளிக்கின்றன. பேதுருவின் வலது கை உயர்ந்து, ஆசி வழங்குகிறது. இடது கையில் இரு திறவுகோல்கள் உள்ளன. அவை பேதுருவுக்கு இயேசு ஆட்சியதிகாரம் கொடுத்ததன் அடையாளம்.

புனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள கல்லறைகளும் நினைவுக் கூடங்களும்

[தொகு]
புனித பேதுரு கல்லறை. காப்பிடம்: புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்.

புனித பேதுரு பெருங்கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே புனித பேதுருவின் கல்லறை உள்ளது. அக்கல்லறை மீது, புனித பேதுருவுக்கு வணக்கம் செலுத்தவும், அவரை நினைவுகூரவும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. மன்னர் காண்ஸ்டண்டைன் வத்திக்கான் குன்றைச் சமப்படுத்தி, பேதுரு கல்லறையின் மீது மாபெரும் கோவிலைக் கட்ட முடிவு செய்தார். கோவில் கட்டட வேலை கி.பி. 326-333 அளவில் தொடங்கி 33 ஆண்டுகள் நடந்தது.[5]

காண்ஸ்டண்டைன் கட்டிய கோவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை நிலைத்திருந்தது. இன்று தோற்றமளிக்கும் பெருங்கோவில் 1506-1626 ஆண்டுக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

புனித பேதுருவின் கல்லறை தவிர, கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை கோவிலின் கீழே அமைந்துள்ள வத்திக்கான் குகையிடத்தில் உள்ளன. சில கல்லறைகள் முழுமையாகவும், சில சிறிதளவோ பெருமளவோ சேதமுற்ற நிலையிலும் உள்ளன. கோவிலில் உள்ள கல்லறைகள்:

  • பேதுரு உட்பட திருத்தந்தையர்களின் கல்லறைகள் - 91;
  • புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஓட்டோ கல்லறை;
  • கோவிலில் இசை வல்லுநராகப் பணிபுரிந்த ஜொவான்னி பியெர்லூயிஜி தா பலெஸ்த்ரீனா கல்லறை
  • இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கத்தோலிக்க அரச குடும்பத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்; அவருடைய இரு மகன்கள்; சார்லஸ் எட்வர்ட் ஸ்டூவர்ட்; ஹென்றி பெனடிக்ட் ஸ்டூவர்ட். இவர்களுக்கு திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் (ஆட்சி: 1700-1721) புகலிடம் கொடுத்திருந்தார்.
  • ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்டின் மனைவி மரியா கிளமெண்டீனா சொபியேஸ்கா கல்லறை;
  • கத்தோலிக்க கிறித்தவ சபையில் சேரும் பொருட்டு அரச பதவியைத் துறந்த சுவீடன் நாட்டு அரசி கிறிஸ்தீனா கல்லறை;
  • திருத்தந்தையருக்கு ஆதரவாயிருந்த டஸ்கனி சீமாட்டி மெட்டில்டா கல்லறை.

புனித பேதுரு பெருங்கோவிலில் மிக அண்மையில் அடக்கம் செய்யப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆவார். அவரது அடக்கம் 2005, ஏப்பிரல் 8ஆம் நாள் நடைபெற்றது.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_பேதுரு_பேராலயம்&oldid=2784284" இலிருந்து மீள்விக்கப்பட்டது