உள்ளடக்கத்துக்குச் செல்

பேரரசரின் புதிய ஆடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"பேரரசரின் புதிய ஆடைகள்"
ஆசிரியர்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
தொடக்கத் தலைப்பு"Kejserens nye Klæder"
நாடுடென்மார்க்
மொழிடேனிய மொழி
வகை(கள்)இலக்கிய நாடோடிக் கதை
வெளியிடப்பட்ட காலம்"குழந்தைகளுக்கான விசித்திர கதைகள்". முதற்தொகுப்பு. மூன்றாவது நூல். 1837.
பதிப்பு வகைவிசித்திரக் கதைகள் தொகுப்பு
வெளியீட்டாளர்சி. ஏ. ரெய்ட்செல்
வெளியிட்ட நாள்7  ஏப்ரல் 1837
முன்னையது"தி லிட்டில் மெர்மெய்ட்"
பின்னையது"ஒன்லி ஏ ஃபிட்லர்"

பேரரசரின் புதிய ஆடைகள் (The Emperor's New Clothes, டேனிய மொழி: Kejserens nye Klæder) ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் எழுதிய ஒரு குட்டிக் கதை ஆகும். இரு நெசவாளர்கள் பேரரசர் ஒருவருக்குப் புதிய ஆடைகள் செய்து தருவதாக வாக்களிக்கின்றனர். அவ்வாடைகளை முட்டாள்களாலும் தகுதியற்றவர்களாலும் காண முடியாது என்று கூறுகின்றனர். புதிய ஆடைகள் தயாரானதாகப் பாசாங்கு செய்கின்றனர். பேரரசர் உட்பட அனைவரும் தங்கள் கண்களுக்கு ஆடைகள் புலனாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளக் கூசி ஆடைகள் இருப்பது போல நடிக்கின்றனர். ”புதிய ஆடைகளை” அணிந்த பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் செல்கிறார். அப்போது மக்களும் அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டாது விடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பெரியவர்களைப் போன்று பாசாங்கு செய்யாமல் ”பேரரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிடுகிறது. டேனிய மொழியில் எழுதப்பட்ட இக்கதை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]

இது முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு சி. ஏ. ரெய்ட்சல் என்பவரால் கோபனாவனில் வெளியிடப்பட்டது. இத்துடன் குட்டிக் கடற்கன்னி சிறுகதையும் வெளியானது. ஆன்டர்சனின் குழந்தைகளுக்கான விசித்திரச் சிறுகதைத் தொகுப்பின் மூன்றாவதும் இறுதியானதுமான தொகுதியில் இக்கதைகள் இடம்பெற்றிருந்தன. இது பலமுறை பாட்டு நாடகமாகவும், மேடை நாடகமாகவும், இயங்குபடமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

கதை[தொகு]

சுயமோகம் மிக்க பேரரசர் ஒருவர் புது விதமான ஆடைகளை அணிவதிலும் அவற்றைப் பிறருக்குக் காட்டி மகிழ்வதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரை ஏமாற்ற நினைத்த இரு பித்தலாட்டக்காரர்கள் அவருக்குப் புது வித ஆடை ஒன்றைத் தைத்துத் தருவதாகக் கூறினார்கள். அந்த ஆடையைப் புதிய வகைத் துணி ஒன்றினால் செய்யப் போவதாகக் கூறினார்கள். அந்தத் துணி தகுதியற்றவர்கள் மற்றும் முட்டாள்களின் கண்களுக்குத் தெரியாது என்று பேரரசரிடம் சொன்னார்கள்.

அதனை நம்பிய பேரரசருக்குப் புதிய “ஆடைகளை” அணிவிப்பது போலப் பாசாங்கு செய்தார்கள். பேரரசருக்கும் அவரது அவையோருக்கும் ஆடைகள் புலனாகவில்லை. ஆனால் அதனை ஒத்துக்கொண்டால் தம்மைத் தாமே முட்டாள்களென ஒத்துக் கொள்வது போலாகும் என்று அஞ்சிய அவர்கள் ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்தனர்.

அந்த ”ஆடைகளை” அணிந்து கொண்டு பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் சென்றார். அவரது குடிமக்களும் அவர் நிர்வாணமாகச் செல்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை; புதிய ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்தனர். அவற்றை வெகுவாகப் புகழ்ந்தனர். ஆனால் கூட்டத்திலிருந்த அறியாச் சிறு குழந்தை ஒன்று மட்டும் “ஐயையோ, அரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிட்டது. வேறு சிலரும் அப்படிக் கத்தத் தொடங்கினர். அதைக் கேட்ட அரசர் தான் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் ஊர்வலத்தைத் தொடர்ந்தார்.

மூலம்[தொகு]

டான் யுவான் மனுவேல் என்ற நடுக்கால எசுப்பானிய எழுத்தாளர் கி.பி. 1335 ஆம் ஆண்டு எழுதிய ”லூக்கனார் பிரபுவின் கதைகள்” (Tales of Count Lucanor, எசுப்பானியம்: El Conde Lucanor) என்ற நூலில் இடம் பெற்றிருந்த ஒரு அறிவுரைக் கதையே ஆன்டர்சனின் பேரரசரின் புதிய ஆடைகள் கதையின் மூலமாகும்.[2] ஆன்டர்சர்னுக்கு எசுப்பானியம் தெரியாது. ஆனால் அவர் அக்கதையின் இடாய்ச்சு மொழிபெயர்ப்பைப் படித்திருந்தார்.[3] இம்மூலக்கதையில் இரு நெசவாளர்கள் ஒரு அரசருக்குச் சிறப்பு ஆடைகள் தைத்துத் தருவதாக ஏமாற்றுகின்றனர். அவ்வாடைகள் தனது மனைவியின் மகனுக்கு உண்மையில் தகப்பனாக இருப்பவருக்கு மட்டுமே தென்படும் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆன்டர்சன், தன் கதையில் இதனை அறிவாளிகளுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் மட்டும் தெரியும் ஆடைகள் என மாற்றிவிட்டார்.[4]

உருவாக்கம்[தொகு]

முதல் பதிப்பில் வெளியான வில்லெம் பெடெர்சனின் ஓவியம்

ஆன்டர்சன் முதலில் பதிப்பாளருக்கு அனுப்பிய கையெழுத்துப்படியில் கதையின் முடிவு வேறு மாதிரி இருந்தது. அதில் குடிமக்கள் அரசரின் புதிய “ஆடைகளை” மெச்சிப் புகழ்வது போல முடித்திருந்தார். குழந்தை கத்துவது இடம்பெறவில்லை. கையெழுத்துப்படி அச்சகத்தில் இருந்தபோது திடீரென மனம் மாறிய ஆன்டர்சன் கதையின் முடிவை மாற்றிவிட்டார்.[5] இந்தத் திடீர் மனமாற்றம் ஏன் என்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பெரும்பாலான அறிஞர்கள் கதையின் முடிவை ஆன்டர்சன் மாற்றியதற்குக் காரணம் இள வயதில் கோபனாவனில் அவருக்குக் கிட்டிய அனுபவங்களே காரணம் என்று கருதுகின்றனர். டேனிய சமூகத்தின் மத்திய தர மக்களிடம் அவர் கண்ட போலித்தனமும், பிறரை மட்டந்தட்டும் குணமும் அவரைப் பாதித்தன. எனவே அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வண்ணம் தனது கதையின் முடிவை மாற்றினார்.[6]

ஒரு சிறுகுழந்தைக்குத் தனது கையெழுத்துப் படியைப் படித்துக் காட்டிய பின்னால் இந்த மாற்றத்தை அவர் செய்திருக்க வேண்டும் அல்லது அவரது சிறுவயது அனுபவத்தின் அடிப்படையில் அதனைச் செய்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.[7] பிற்காலத்தில் தனது குழந்தைப் பருவத்தில் தனது தாயுடன் டென்மார்க் அரசர் ஆறாம் பிரெடரிக்கைக் காண ஒரு கூட்டத்தில் காத்திருந்ததை நினைவு கூர்ந்தார் ஆன்டர்சன். பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சிறுவன் ஆன்டர்சன் அரசரைக் கண்டவுடன் ஏமாற்றம் அடைந்து ”இவ்ரும் ஒரு சாதாரண மனிதர் தானா” என்று உரக்கக் கூறிவிட்டான். அதனைக் கேட்ட அவனது தாய் ”உனக்கு என்ன பைத்தியமா?” என்று கூறி அவன் வாயை அடைத்து விட்டார். இவ்வாறு கதையின் முடிவை மாற்றியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆன்டர்சன் இந்த மாற்றத்தால் கதையின் அங்கதத் தன்மை கூடும் என்று கருதியது உண்மை.[8]

வெளியீடு[தொகு]

1836 இல் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்

பேரரசரின் புதிய ஆடைகள், ஏப்ரல் 7, 1837 இல் கோபனாவன் நகரில் சி. ஏ. ரெய்ட்சல் என்பவரால் குட்டிக் கடற்கன்னி என்ற கதையுடன் சேர்த்து வெளியிடப்பட்டது. ஆன்டர்சனின் “குழந்தைகளுக்கான விசித்திர கதைகள்” தொகுப்பின் மூன்றாவதும் இறுதியானதுமான தொகுதியாக வெளியானது. முதல் இரு தொகுதிகளும் முறையே மே 1835 மற்றும் டிசம்பர் 1835 இல் வெளியாகியிருந்தன. ஆனால் அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.[9] எனவே மூன்றாவது தொகுதியை ஓராண்டு காலம் காத்திருந்து வெளியிட்டார் ஆன்டர்சன்.[10]

பத்தொன்பதாம் நூற்றாண்டு டென்மார்க்கில், டேனிய மரபுப் கதைகளும் ஜெர்மானிய, பிரெஞ்சு நாட்டார் கதைகளும் புதுமைகளாகக் கருதப்பட்டன. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களால் பல கூட்டங்களில் மக்களுக்குப் படித்துக் காட்டப்பட்டன. ஆன்டர்சனின் கதைகளும் விரைவில் இந்த நிகழ்வுகளின் ஒரு அங்கமாகி விட்டன. குறிப்பாகப் பேரரசரின் புதிய ஆடைகள் கதை புகழ்பெற்ற டேனிய நடிகர் லுட்விக் ஃபிஷ்டர் என்பவரின் வாசிப்பால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றது.[11] ஜூலை 1 1844 இல் கார்ல் அலெக்சாந்தர் பிரபு கூட்டிய இலக்கியக் கூட்டத்தில் ஆன்டர்சன் இக்கதையினையும் ஏனைய இரு கதைகளையும் உரக்கப் படித்துக் காட்டினார்.[12]

விமர்சனங்கள்[தொகு]

பேராசிரியர் ஜாக் சைப்ஸ், ”ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் - தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கதைசொல்லி” (Hans Christian Andersen: The Misunderstood Storyteller) என்ற நூலில் இக்கதையை குழந்தைகள் விரும்பும் காரணத்தை விளக்க முயல்கிறார். பார்வையும் அவதானிப்பும் நமது கருத்துகளைத் தீரத்துடன் முன்வைக்கும் செயல்களாக இக்கதை காட்டுகிறது. அவதானிப்பு நுண்ணறிவைத் தூண்டி, செயல்பட வைக்கிறது. எனவே குழந்தைகள் இதனை விரும்புகிறார்கள் என்பது சைப்சின் கூற்று.

இக்கதையையும், “பன்றிமேய்ப்பன்” (The swineherd) கதையையும் எழுதியபின்னால் டேனிய அரசரிடமிருந்து ஆன்டர்சன் ஒரு வைர மோதிரமும் மாணிக்கமும் பரிசு பெற்றார் என்று எழுத்தாளர் அலிசன் பிரின்ஸ் கூறுகிறார். இப்பரிசுகள் ஆன்டர்சனை மேன்மக்கள் பக்கம் இழுத்து அவரது அங்கதப் போக்கைத் தடுக்கும் முயற்சி எனப் பிரின்ஸ் கருதுகிறார். “பன்றிமேய்ப்பன்” கதையே ஆன்டர்சன் எழுதிய கடைசி அரசியல் அங்கதக் கதை என்று சுட்டிக்காட்டுகிறார். பரிசு பெற்ற சில காலத்திற்குப் பின் ஆன்டர்சன் எழுதிய “அழகற்ற வாத்துக்குஞ்சு” (The ugly duckling) கதையில் அழகற்ற வாத்துக்குஞ்சு இறுதியில் அன்னப்பறவையாக உருப்பெறுவது, ஆன்டர்சன் மேட்டுகுடியினரில் ஐக்கியமானதன் குறியீடு என்றும் பிரின்ஸ் வாதிடுகிறார்.

ஜாக்கி வல்ஷ்லாகர் எழுதிய ”ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் - ஒரு கதைசொல்லியின் வாழ்க்கை” (Hans Christian Andersen: The Life of a Storyteller) என்ற வாழ்க்கை வரலாற்றில் ஆன்டர்சன் பழைய மரபுக் கதைகளை அழகாக மறுஆக்கம் செய்யும் திறனுடன் பழைய தொன்மக் கதைகளின் அடிப்படையில் புத்தாக்கங்களைப் படைக்கும் திறனும் கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

2003 இல் வெளியான ”பேரரசரின் புதிய விமர்சனங்கள்” நூலில் பேராசிரியர் ஹாலிஸ் ராபின்ஸ், இக்கதை மிகவும் வெளிப்படையானது என்றும் அதனைக் கூர்ந்து ஆராயத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆன்டர்சன் இக்காலத்தில் தனது சமகாலத்திய சர்ச்சைகள் நான்கினை வெளிப்படுத்துவதாக ராபின்ஸ் கருதுகிறார். அவையாவன - தகுதி அடிப்படையிலான அதிகார வர்க்கம், உழைப்பின் மதிப்பு, மக்களாட்சியின் விரிவாக்கம் மற்றும் கலை விமர்சனம். இறுதியில் தோன்றும் உண்மைசொல்லிக் குழந்தையின் மூலம் கதையின் முடிச்சவிழ்வதே அதன் வெற்றிக்குக் காரணம் என்பது ராபின்சின் கருத்து.

பேராசிரியர் மாரியா டாடார் எழுதிய ”குறிப்புகளுடன் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் படைப்புகள்“ (The Annotated Hans Christian Andersen) நூலில், இக்கதை ஆன்டர்சனின் கதைகளில் நன்கறியப்பட்டவற்றுள் ஒன்று என்றும், உலகெங்கும் பெரும் புகழ் பெற்றுள்ளது என்றும் கூறுகிறார். வெவ்வேறு பண்பாடுகளில் சொல்லப்படும்போது அவற்றின் விழுமியங்களுக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது என்றும் கூறுகிறார். ”பேரரசரின் புதிய ஆடைகள்” என்ற தொடர் ஆடம்பரம், அர்த்தமற்ற டாம்பீகம், தற்பெருமை, சமூகப் போலித்தனம், சமூக மறுப்பு போன்றவற்றின் உவமையாக மாறிவிட்டது. ஆன்டர்சனின் கதைகள் குழந்தைகளுக்குப் பயமின்றி உண்மை கூறும் குணத்தைப் போதிக்கின்றன என்ற பெருமையும் இக்கதையின் மூலம் ஆன்டர்சனுக்கு கிட்டியுள்ளது.

தாக்கம்[தொகு]

முதல் பதிப்பில் வெளியான வில்லெம் பெடர்சனின் ஓவியம்

பேரரசரின் புதிய ஆடைகள் சிறுகதை பல வகையான ஊடகங்களில் பலமுறை மறுஆக்கம் கண்டுள்ளது. 1919 இல் யூரி செல்யாபியூஸ்கி இயக்கத்தில் வெளியான உருசியத் திரைப்படம், 1987 இல் சிட் சீசர் நடிப்பில் வெளியான ஒரு இசை நாடகம், மேலும் பல சிறுகதைகள், நாடகங்கள், அங்கதங்கள், இயங்குபடங்கள் அவற்றில் அடக்கம்.[1] 2010 ஆம் ஆண்டு சிக்காகோவின் ஷேக்ஸ்பியர் நாடக நிறுவனம் இக்கதையின் அடிப்படையில் ஒரு புதிய இசை நாடகத்தை உருவாக்கியது.[13]

1980 இல் கணினியியலாளர் சி. ஏ. ஜி ஹோர் படிமுறைத்தீர்வுகளில் எளிமை வேண்டும் என்பதை வலியுறுத்த “பேரரசரின் பழைய ஆடைகள்” என்ற பகடிக்கதையை எழுதினார்.[14] 1985 இல் சணலின் (நார்ச்செடி) வரலாற்றை விளக்கும் “பேரரசர் ஆடைகளின்றி இருக்கிறார்” என்ற தலைப்பில் எழுதினார்.[15]

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இக்கதைக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம்

ஆன்டர்சனின் இக்கதை சமய ஐயப்பாட்டாளர்களாலும், இறை மறுப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சமய நம்பிக்கைகள் ஆதாரமற்றிருந்தாலும் எப்படி நம்பிக்கையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை “பேரரசரின் புதிய ஆடைகள் கூட்டு அறிகுறி” என்று பெயரிட்டுள்ளனர். எப்படி ஆன்டர்சனின் கதையில் பேரரசரின் நிர்வாண நிலையை வெளிப்படையாகப் பேச ஒரு குழந்தைத் தேவைப்படுகிறதோ, அதுபோல இறை நம்பிக்கையின் ஆதாரமின்மையை உணர்த்த இறை மறுப்பாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பது அவர்களது விளக்கம்.[16]

2013 இல் கிக்ஸ்டார்டர் எனும் கூட்டு நிதிநல்கை இணையத்தளத்தில் ஜோனத்தன் லியூ என்பவர் ஒரு புதிய அட்டை விளையாட்டை உருவாககும் திட்டதிற்கு நிதி கோரினார். “பேரரசரின் புதிய ஆடைகள்” என்ற பெயர் கொண்ட அந்த ஆட்டம் ஒரு வெற்றுப் பலகை, வெற்று அட்டைகள், வெற்று காய்களுடன் உடையது என அறிவித்தார். பகடியான அந்தத் திட்டதிற்கும் சிலர் நிதி நல்கினர்.[17][18]

உவமையாகப் பயன்படல்[தொகு]

”பேரரசரின் புதிய ஆடைகள்” அல்லது “அரசர் ஆடைகளின்றி இருக்கிறார்” என்ற தொடர் தருக்கப் பொய்மைகளை (Logical fallacy) குறிக்கும் உவமையாகவும் மரபுத்தொடராகவும் பயன்படுகிறது.[19] பெரும்பான்மையின் அறியாமை என (Pluralistic ignorance) இந்த உவமையை விளக்கலாம். ”யாருக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் தங்களைத் தவிர அனைவரும் நம்புகிறார்கள் என்று ஒவ்வொருவரும் நம்புகின்றனர். எனவே தாங்களும் நம்புவது போல நடிக்கின்றனர்.” என்ற நிலையை இக்கதை சித்தரிக்கின்றது.[20][21]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Andersen 2005a 4
 2. In Spanish:Exemplo XXXIIº – De lo que contesció a un rey con los burladores que fizieron el paño. In English: Of that which happened to a King and three Impostors from Count Lucanor; of the Fifty Pleasant Stories of Patronio, written by the Prince Don Juan Manuel and first translated into English by James York, M. D., 1868, Gibbings & Company, Limited; London; 1899; pp. xiii–xvi. Accessed 2010-03-06. This version of the tale is one of those collected by Idries Shah in World Tales.
 3. Bredsdorff 312–3
 4. Wullschlager 2000, p. 176
 5. Wullschlager 2000, p. 177
 6. Andersen 2005b, p. 427
 7. Bredsdorff, p. 313
 8. Frank, p. 110
 9. Wullschlager 2000, p. 165
 10. Andersen 2005d, p. 228
 11. Andersen 2005d, p. 246
 12. Andersen 2005d, p. 305
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
 14. 1980 Turing Award Lecture; Communications of the ACM 24 (2), (February 1981): pp. 75–83.
 15. Herer, Jack. 1985. The Emperor Wears No Clothes. Ah Ha Publishing, Van Nuys, CA.
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
 17. "BoardGameGeek thread on "The Big Reveal".
 18. "ENC Kickstarter Page".
 19. Graves, Joseph L. (2003). The Emperor's New Clothes: Biological Theories of Race at the Millennium, p. 1; Hollis Robbins, "The Emperor's New Critique," New Literary History, Vol. 34, No. 4, Autumn 2003; retrieved 2013-3-1.
 20. Zellner, William W. and Marc Petrowsky. (1998). Sects, Cults, and Spiritual Communities: A Sociological Analysis, p. 13; excerpt, "Like the villagers in the story of the emperor's new clothes, members of the inner circle were unwilling to reveal their ignorance by challenging .... As a result, they suppressed whatever doubts they had an worked even harder to make sense of what, in the final analysis, may have been nonsensical."
 21. Hansen, Jens Ulrik. (2011). "A Logic-Based Approach to Pluralistic Ignorance" at Academia.edu; retrieved 2013-3-1.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசரின்_புதிய_ஆடைகள்&oldid=3937355" இலிருந்து மீள்விக்கப்பட்டது