முகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விமானத்தின் ஜன்னல் வழி கண்ட Stratocumulus perlucidus முகில்.

முகில் அல்லது மேகம் (cloud) என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.[1] வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. வானிலையியலில், முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை முகில் இயற்பியல் எனப்படுகின்றது.

புவியில் ஒடுங்கும் பொருள் நீராவி ஆகும். இது, பொதுவாக 0.01 மிமீ விட்டம் கொண்ட மிகச் சிறிய பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே முகில் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான முகில்கள் 70%-95% வரையான கண்ணுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் முகில்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. முகில் சிறுதுளிகள் ஒளியைச் சிதறச் செய்யும் திறன் கொண்டவை. இதனால் முகிலின் ஆழம் அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக முகிலின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.

முகில்களின் வகைகள்[தொகு]

உயரத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட முகில்கள்

ஒரே மாதிரி இரண்டு முகில்கள் இருப்பதில்லை. மேலும் அவற்றின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றின் பொதுவான வடிவத்தை வைத்து அவற்றை வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு உயரங்களிலும் வெவ்வேறு நிலையிலும் உருவாகிற முகில்கள் வெவ்வேறு வடிவங்களிலிருக்கும். முகில்களின் உயரத்தையும் வெப்ப நிலையையும் பொறுத்து அவற்றிலுள்ள துகள்களும் வேறுப்பட்டிருக்கும்.

1890இல் ஓட்டோ ஜெஸ்ஸி (Otto Jesse) என்பவர் அடிவளிமண்டலத்திற்கு மேல் இருக்கும் மேகங்களை கண்டுபிடித்தார். அதற்கு இருளில் ஒளிரும் முகில்கள் (noctilucent) என்று பெயரிட்டார்.[2] இவை மற்ற மேகங்களை விட அதிக உயரத்தில் இருப்பவை. அவற்றை அடுத்து வெள்ளைச்சிப்பி (nacreous)[3] மேகங்கள் எனப்படுகிறவை 12 முதல் 18 மைல் வரையிலான உயரங்களிலிருக்கும். அவை மிக மெலிந்தவை. அழகான நிறங்களைக் காட்டுகிறவை. அவற்றில் தூசுகளும் நீர்த்துளிகளும் அடங்கியிருக்கும். அவற்றைச் சுரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் மறைந்த பிறகு இரவிலும் மட்டுமே காண முடியும்.

பூமியிலிருந்து ஐந்து மைல்களுக்கு மேற்பட்ட உயரங்களில் சிர்ரஸ்(cirrus), சிர்ரோஸ்ட்ரேட்டஸ் (cirrostratus), சிர்ரோக்யுமுலஸ் (cirrocumulus) என்ற வகை மேகங்கள் காணப்படும். சிர்ரஸ் மேகங்கள் இறகுகளைப் போல இழை இழையாக இருக்கும். சர்ரோஸ்டரேட்டஸ் மேகங்கள் மெலிந்த வெண்ணிறப் படலங்களாகத் தோற்றமளிக்கும். சிர்ரோக்யுமுலஸ் மேகங்கள் சிறிய வட்டமான பொதிகளாகத் தெரியும். அவை மேலே வெள்ளையாகவும் அடியில் கறுப்பாகவுமிருக்கும். இவையெல்லாம் நுண்ணிய பனித் தூளாலான மேகங்கள்.

குறைந்த உயரங்களிலுள்ள மேகங்கள் சிறு நீர்த்துளிகளாலானவை. பூமியிலிருந்து இரண்டு முதல் நான்கு மைல் வரையான உயரங்களிலிருப்பவை ஆல்டோக்யுமுலஸ் (Altocumulus) முகில்கள் எனப்படும். அவை சிர்ரோக்யுமுலஸ் மேகங்களை விடப் பெரிய வட்டமான பொதிகளாகத் தோன்றும். அதே உயரங்களில் ஆல்டோஸ்ட்ரேட்டஸ் (Altostratus) என்ற மென் படல வகை மேகங்களும் உள்ளன. இவை பல வேளைகளில் வானம் முழுவதையும் ஒரு மெல்லிய சாம்பல் நிறத் திரையைப் போல மூடியிருப்பதைப் பார்க்கலாம். அப்போது சூரியனும் சந்திரனும் மங்கலான ஒளி மொத்தைகளைப் போலத்தோறமளிக்கும்.

க்யுமுலஸ் மற்றும் ஸ்ட்ரேட்டோ க்யுமுலஸ்

பூமியிலிருந்து சுமார் ஒரு மைல் உயரத்தில் ஸ்ட்ரேடோக்யுமுலஸ் (Stratocumulus) என்ற வகை மேகங்கள் காணப்படுகின்றன. அவை பெரியவையாக வைக்கோல் போர்களைப் போலத் தோற்றமளிக்கும். அதே உயரங்களில் நிம்போஸ்ட்ரேட்டஸ் (Nimbostratus) என்ற மழை தரும் மேகங்களும் உலவுகின்றன. அவை கருப்பாகத் தடித்தடியாக, உருவமில்லா மொத்தைகளாக இருக்கும். அவற்றும் கீழே தரையிலிருந்து 600 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் ஸ்ட்ரேட்டஸ்(stratus) என்ற வகை மேகங்கள் உள்ளன. அவை உயரத்திலமைந்துள்ள மூடுபனிப் படலங்களே. க்யுமுலஸ் (cumulus), க்யுமுலோ நிம்பஸ் (cumulonimbus) என்ற வகை மேகங்கள் பெரிது பெரிதாக தோற்றமளிக்கிறது. அவைதான் இடி மின்னல்களையும் புயல் காற்றுகளையும் உண்டாக்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Weather Terms". National Weather Service. பார்த்த நாள் 21 June 2013.
  2. World Meteorological Organization, தொகுப்பாசிரியர் (1975). Noctilucent, International Cloud Atlas. I. p. 66. ISBN 92-63-10407-7. http://library.wmo.int/pmb_ged/wmo_407_en-v1.pdf. பார்த்த நாள்: 26 August 2014. 
  3. World Meteorological Organization, தொகுப்பாசிரியர் (1975). Nacreous, International Cloud Atlas. I. p. 65. ISBN 92-63-10407-7. http://library.wmo.int/pmb_ged/wmo_407_en-v1.pdf. பார்த்த நாள்: 26 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்&oldid=2388466" இருந்து மீள்விக்கப்பட்டது