உள்ளடக்கத்துக்குச் செல்

பைங்குடில் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் பைங்குடில் விளைவுச் செயல்பாடு

பைங்குடில் விளைவு அல்லது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமைக்குடில் விளைவு (இலங்கை வழக்கு: பச்சை வீட்டு விளைவு' Greenhouse Effect) என்பது, பூமியின் (அல்லது வேறு கோள்களின்) மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில் இருக்கும் பைங்குடில் வளிமங்களினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும்.

இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சானது, பூமியை அடையும்போது, வளிமண்டலத்தில் உள்ள வளிமமும், முகிலும், நிலத்தில் உள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களைத் தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொரு பகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை விடக்கூடிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும். ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தினூடாக வெளியேற எத்தனிக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளியேற முடியாமல் இவற்றினால் பிடிக்கப்பட்டு, வளிமண்டலத்தினுள்ளாகவே பல திசைகளிலும் வெளியேறும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும்.[1][2]

இயற்கையாக ஒரு சமநிலையில் இந்த வெப்பக்கதிர்வீச்சு நிகழும்போது, வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக் கொள்ளப்படுவதுடன், உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்றச் சூழலும் கிடைப்பதனால் இது இயற்கைப் பசுமை இல்ல விளைவு எனப்படும். ஆனால் மனிதர்களின் செயற்பாடுகளினால், வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, அவற்றின் விளைவாகப் பூமியின் வெப்பநிலை பாதகமான நிலையை நோக்கிச் செல்கின்றது[3]. இதனாலேயே பூமியில் உள்ள உயிரினங்களுக்குப் பாதகமான புவி சூடாதல் நிகழ்கின்றது.

பசுமை இல்ல வாயுக்கள் காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைதரசு ஆக்சைட்டு, ஓசோன், குளோரோ புளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவி போன்றவையாகும்.[4][5]

பைங்குடில்

[தொகு]
ஆர் எச் எஸ் பைங்குடில் பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் உள்ள ஒரு நவீனப் பைங்குடில்

பசுமைக்குடில்கள் எனப்படுபவை தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை, ஈரப்பதத்தினை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியதாக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் ஆகும். இவை குளிர்ப் பிரதேசங்களில் பாதகமான சூழலிலும் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பொருளால் செய்ததாகும். ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப்படும் பச்சைத் தாவரங்கள், கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினைபட்டுச் சூரியக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. மேலும் இக்கூரையானது, அதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியேறாமல் தடுக்கும் அமைப்பினது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம்.

குளிர்ப் பிரதேசங்களில் பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடும். இதனால் அந்தச் செடிகள் பயனற்றுப் போகும். இதைத் தடுக்கத்தான் இந்தக் கண்ணாடிக் குடில். அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்பநிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் கண்ணாடிகள் தடுத்துக் காக்கின்றன. இதனால் அந்தச் செடிகள் தொடர்ந்து வளர முடியும். இதனைத் தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.

பைங்குடில் விளைவு

[தொகு]
சூரியன் ,விண்வெளி, புவியின் வளிமண்டலம், மற்றும் புவியின் மேற்பரப்பி்ற்கு இடையே ஏற்படும் வெப்பஆற்றல் பரிமாற்றங்களை விளக்கும் கருத்துப்படம். இதில் வெப்ப ஆற்றலைத் தன்பால் இழுக்கும் தன்மை கொண்ட தொட்டியைப் போல் விண்வெளி செயல்படுகிறது. புவியின் மேற்பரப்பிலிருந்து கதிரியக்கத்தால் உமிழ்ந்த ஆற்றலைப் புதுப்பிக்க இயலுவதற்கான காரணமே புவியில் பைங்குடில் விளைவுகள்.

பைங்குடில் விளைவு என்றால் என்ன?" என்பதற்கான சுருக்கமான விளக்கம் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.[6]

புவியின் பசுமை இல்ல விளைவு

[தொகு]

புவியின் இந்த இயங்கு முறையானது ஒரு உண்மையான சூரியப் பைங்குடிலில் நடைபெறும் இயங்கு முறையினைப் போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இதன் செயல்முறையானது உள்ளே இருக்கும் வெப்பக் காற்றைத் தனிப்படுத்தி, வெப்பச் சுழற்சி மூலமாக வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கிறது.

பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் எதிரொளிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. இந்தப் பசுமை இல்ல வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் எதிரொளிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவை உள்வாங்கிக் கொள்கின்றன. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி உள்ளிருக்கும் வெப்ப வெளியேற்றத்தைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியால் வெளிப்படுத்தப்படும் வெப்ப ஆற்றலை உள்வாங்கிக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆய்வுகள்

[தொகு]

சான் போரியர் என்ற பிரான்சு நாட்டு அறிவியலறிஞர் 1824 ஆம் ஆண்டு பைங்குடில் விளைவினை முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் பைங்குடில் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார். 1858 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஜோன் டின்டால் என்பவர் நம்பத்தக வகையில் பரிசோதனைகளை நடத்தி இக்கருத்தை வலுப்படுத்தினார். மேலும் 1896 ஆம் ஆண்டில் சுவாந்தே ஆரினியசு என்பவர் அதனை அளந்து தன் அறிக்கையை வெளியிட்டார்[10].

வளிமண்டலமும் பைங்குடில் விளைவும் இல்லாமல் இருந்தால், புவியின் மேல்பரப்பின் சராசரி வெப்பமானது 14° செல்சியசுக்குப் (57 °F)பதிலாக −18 °C (−0.4 °F) ஆக இருந்திருக்கும்.[11][12][13]. தற்போது புவியின் கீழ் வெளிமண்டலத்தில் வெப்பத்தின் அளவானது, புவியின் சராசரி வெப்பத்தை விட அதிக முரண்பாட்டுடன் காணப்படுகிறது.[14] இந்த உலக அளவிலான வெப்ப உயர்வுக்கு, குறிப்பாக மனிதர்கள் உருவாக்கிய புவி வெப்ப உயர்வு (ஏ ஜி டப்), வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவின் செறிவை அதிகரித்து அதனால் பைங்குடில் விளைவு மேலும் மிகையானதே காரணம் எனலாம்.[15]

அடிப்படை இயங்குமுறை

[தொகு]

புவியானது சூரியனிடம் இருந்து முக்கியமாகக் காண்புறு ஒளி மூலமாக வெப்ப ஆற்றலைப் பெறுகிறது. வளிமண்டலமானது காண்புறு ஒளியைப் பொறுத்த வரை தெள்ளத் தெளிவாக இருப்பதால், சூரியனிடமிருந்து வரும் வெப்ப ஆற்றலை 50 விழுக்காடு புவியின் மேற்பரப்பு உறிஞ்சுகிறது. பூச்சிய வெப்பநிலைக்கு மேல் வெப்பம் கொண்ட பொருட்களைப் போலவே, புவியின் மேல்பாகமும் அகச்சிவப்புக் கதிர் எல்லைப் பகுதியில் வெப்ப ஆற்றலைக் கதிரியக்கம் மூலம் வெளியேற்றுகிறது. அகச்சிவப்புக் கதிர் வீச்சிற்கு தெள்ளத் தெளிவாக இல்லாததால், பைங்குடில் வாயுக்கள் அதனை உறிஞ்சி விடுகிறது. அனைத்து திசைகளில் இருந்தும் அகச்சிவப்பு கதிர் வீச்சு உறிஞ்சப் படுவதால், வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுப் பொருட்களும் சூடேறுகிறது. வளிமண்டலமும் (அதன் வெப்பம் காரணமாக, புவியைப் போலவே) அகச்சிவப்பு கதிர் வீச்சினை எல்லா திசைகளிலும் பரப்புகிறது. இதனால், புவியின் மேற்பரப்பு மற்றும் கீழ் வளிமண்டலம் ஆகியவை பைங்குடில் வாயுக்களின் வெப்பம் காரணமாகச் சூடேறி விடுகிறது, ஆதலால் உயிரினங்கள் புவியில் வாழ ஏற்றச் சூழ்நிலை ஏற்படுகின்றது.[11]

விரிவான விளக்கம்

[தொகு]
பல வகையான பைங்குடில் வாயுக்களால் உருவான உறிஞ்சற்பட்டைகள் மேலும் அதனால் சூரிய கதிர் வீச்சு மற்றும் புவியின் மேல்பரப்பிலிருந்து மேல்நோக்கி செல்லும் வெப்ப கதிர் வீச்சிலும் ஏற்படும் தாக்கம் மேல்நோக்கி செல்லும் கதிர் வீச்சின் அதிக அளவு உறிஞ்சப் படுகிறது, அதுவே பைங்குடில் விளைவிற்கு காரணமாக அமைகிறது.

கதிர் வீச்சின் மூலமாகச் சூரியனிடமிருந்து புவி தன் சக்தியைப பெறுகிறது. இந்தச் சக்தியானது காண்புறு ஒளி அலை வரிசை வாயிலாகவும் மற்றும் அதற்கு மிகவும் அருகாமையிலான அகச்சிவப்பு அலைவரிசைகளிலும் இருந்தே பெறுகிறது. புவிக்கு வந்தடைந்த சூரியனின் கதிர்வீச்சின் 30% ஆற்றலைத் திருப்பி அனுப்பி விடுகிறது. மீதமுள்ள 70% உறிஞ்சப் படுவதால், பூமி, கடல் மற்றும் வளிமண்டலம் சூடேறுகிறது.

புவியின் வெப்பமானது சீரான நிலைக்கு வருவதற்கும் மேலும் அது விரைவாகச் சூடேறவோ அல்லது குளிர்ந்து போகாமலோ இருப்பதற்கும், புவி உறிஞ்சிய சூரியனின் கதிர்வீச்சின் அளவும் அகச்சிவப்பு அலை வரிசை கொண்ட கதிர்வீச்சின் மூலம் விண்வெளிக்கு வெளியேற்றிய அளவும் சமச்சீராக இருத்தல் வேண்டும். வெப்பம் ஏற ஏற அகச்சிவப்பு கதிர் வீச்சின் வேகம் செறிவேறுவதால், புவியின் வெப்பமானது உறிஞ்சிய சூரியனின் கற்றைக்கு ஏற்ப அகச்சிவப்பு கற்றையில் மாறுபாடுகள் வரையறுக்கும் என்று நினைக்கத் தோன்றும்.

காண்புறும் சூரிய கதிர் வீச்சானது புவியின் மேற்பரப்பினைச் சூடேற்றுகிறது, வளிமண்டலத்தை அல்ல, ஆனால் விண்வெளிக்கு தப்பி விடும் அகச்சிவப்பு கதிர் வீச்சானாது மேல்பரப்பிலிருந்து அல்லாமல் வளிமண்டலத்தின் மேல் பாகத்தில் இருந்தே அதிகமாக உமிழப்படுகிறது. மேற்பரப்பிலிருந்து உமிழப்படும் அகச்சிவப்பு ஒளித்துகள்கள் பைங்குடில் வாயுக்கள் மற்றும் மேகங்களால் வளிமண்டலத்திலேயே உறிஞ்சப் படுவதால், நேராக விண்வெளிக்குத் தப்பி செல்வதில்லை.

புவி மேற்பரப்பில் மட்டும் சூடேறுவதற்கான காரணத்தை ஒரு எளிதான பைங்குடில் விளைவிற்கான எடுத்துக்காட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம், இது வெப்பச் சலனம் அல்லது சுழற்சியினால் வளிமண்டலத்திற்கு ஏற்படும் வெப்ப உயர்வைக் கருத்தில் கொள்வதில்லை மேலும் நீராவியானது குளிர்ந்து திரவமாவதும் வெப்பத்தால் நீராவி ஆவதும் கருத்தில் கொள்வதில்லை. இந்தத் தூய்மையான கதிர் வீச்சினை மட்டும் கொண்ட நிகழ்வு, நாம் வளிமண்டலத்தை விண்வெளி நோக்கி மேற்புறமும், புவியை நோக்கிக் கீழ்புறமும், அகச்சிவப்பு கதிர் வீச்சினை உமிழ்வதாகக் காணலாம். இப்படி மேல் நோக்கி உமிழ்ந்த அகச்சிவப்பு கற்றையானது சூரியனிலிருந்து உறிஞ்சிய சூரிய ஒளியின் கற்றையை மட்டும் அல்லாமல், வளிமண்டலத்தால் கீழ் நோக்கி உமிழ்ந்த அகச்சிவப்பு கற்றையையும் சமச்சீர் படுத்த வேண்டும்.

உள்நோக்கி வரும் சூரியனின் கதிர் வீச்சு மற்றும் அகச்சிவப்புக் கதிர் இயக்கத்திற்கு சமமாக மேற்பரப்பிலிருந்து உமிழ்ந்த கதிரியக்கத்தின் அளவை அடையும் வரை, மேற்பரப்பின் வெப்பம் உயர்ந்து கொண்டே போகும்.வெப்பச் சுழற்சி மற்றும் மறை வெப்பத்தினையும் கணக்கில் கொண்டு உண்மையான நிலைமையை அறிவதென்பது சிக்கல் கொண்டதாகும்.

ஒளிபுகாவியல்பு

[தொகு]

வளிமண்டலத்தின் ஒளிபுகாவியல்பு என்பது புவியிலிருந்து எந்த உயரத்தில் மிகையான ஒளித்துகள்கள் விண்வெளி நோக்கி உமிழ்கிறது என்பதை சார்ந்தது ஆகும். வளிமண்டலம் அதிகமாக ஒளி புகாத் தன்மையுடன் இருந்தால், அதிக உயரத்தில் இருந்தே ஒளித் துகள்கள் வளிமண்டலத்திலிருந்து விண்வெளி நோக்கி உமிழப் படும், ஏனென்றால் அப்போது விண்வெளியை அகச்சிவப்பு கதிரியக்கத்தில் பார்வை இட, ஒருவர் மேலும் உயரத்திற்கு செல்ல வேண்டும். வெப்பத்தின் அளவினை ஒத்தே அகச்சிவப்பு கதிர் இயக்கம் உமிழ்வதால், இந்த உமிழும் அளவினை பொறுத்தே வெளிமண்டல்த்தின் வெப்பம் சரியான முறையில் உமிழப் படும் கற்றையின் அளவானது உறிஞ்சப் படும் சூரிய ஒளிக் கற்றைக்கு சமமாக இருக்கும் நிலையை அடைந்து வரையறுக்கிறது.

ஆனால் வளிமண்டலத்தின் வெப்பமானது, மேல் பரப்பிலிருந்து உயரம் கூடக் கூடக் குறைந்து வரும், அதாவது சராசரியாக ஒரு கிலோ மீட்டருக்குச் சுமார் 6.5 ° செல்சியஸ் என்ற விகிதத்தில் குறையும், அதாவது ஒருவன் மேற்பரப்பிலிருந்து 10 முதல் 15 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் அடுக்கு மண்டலத்தை அடையும் வரை.

விண்வெளிக்கு தப்பிச் செல்லும் மிக்க அகச் சிவப்பு ஒளித் துகள்கள் அடிவளிமண்டலத்தில் இருந்தே உமிழகிறது, அதாவது மேல் நிலப்பரப்பு மற்றும் அடுக்கு மண்டலத்திற்கும் இடையே அடைபட்டுள்ள இடம், அதனால் நாம் அடிவளி மண்டலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. விண்வெளி நோக்கி உமிழப்படும் அகச்சிவப்பு கதிர் இயக்கத்தின் உயரத்தில் நிலவும் வெப்பத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, மேற்பரப்பளவில் நிலவும் வெப்பத்தை கிலோமீட்டருக்கு 6.5° என்ற அளவில் உயர்த்திக் கொண்டே போகலாம், இதனைச் சுற்றுச் சூழலின் உயரத்திற்கேற்ப வெப்பத்தின் மாறுபாடு விகிதம் என்பர், ஒருவன் மேல்பரப்பை அடையும் வரை இதைச் செய்யலாம்.

வளிமண்டலம் மிகவும் ஒளி புகாவியல்பு கொண்டு இருந்தால், மேலும் உமிழப்படும் உயரம் அதிகமாக இருந்தால், மேற்பரப்பில் வெப்பம் அதிகமாக இருக்கும், ஏனென்றால் உயரத்திற்கேற்ப வெப்பத்தின் மாறுபாடு விகிதம் அதிகரித்தும் மற்றும் நீளமாகப் பார்க்கையில் அதிக தூரம் செல்ல வேண்டி உள்ளதாலும்.

தனிப்பட்ட முறையில் பைங்குடில் விளைவுபற்றித் தெரிந்து கொள்வதற்கு, இந்த முறை குறைவான இயல்புணர்வு கொண்டதாக இருந்தாலும், இந்தக் குறைவு மதிப்பீடு பெற்ற கதிர் இயக்க-வெப்பச் சலனம் கொண்ட படம் தான் பைங்குடில் விளைவுபற்றித் துவக்கத்தில் விளக்குவதற்கு காலநிலை எடுத்துக்காட்டாக வானிலை பற்றிய எழுத்தேடுகளில் பயன்படுத்துகின்றனர்.

பைங்குடில் வாயுக்கள்

[தொகு]

வரிசைக் கிரமப் படி, புவியில் அதிகமாகக் காணப்படும் பைங்குடில் வாயுக்கள் கீழே தரப் பட்டுள்ளன:

இந்த வாயுக்கள் பைங்குடில் விளைவுக்குக் காரணியாக இருப்பதற்கு வரிசைப் படுத்தும் பொது, முதன்மை பெறுபவை:

 • நீராவி, அதன் பங்கேற்பு 36–70%
 • கரியமில வாயு அல்லது கார்பன் டை ஆக்சைடு, அதன் பங்கேற்பு 9–26%
 • மீதேன் வாயு அல்லது சாண வாயு, அதன் பங்கேற்பு 4–9%
 • ஓசோன், அதன் பங்கேற்பு 3–7%

மேகங்களானவை, வாயுப் பொருளாக இல்லாமலேயே, அகச் சிவப்பு கதிர் இயக்கத்தினை உறிஞ்சவும், உமிழவும் செய்கின்றன, மேலும் அதனால் பைங்குடில் விளைவினை பாதிக்கவும் செய்கின்றன.[16][17].

முறையற்ற கால நிலை மாற்றம்

[தொகு]

நேர்ப்பின்னூட்டம் காரணமாக இருக்கும் அனைத்து பைங்குடில் வாயுக்களும் வளிமண்டலத்திற்குள் நீராவியாக மாறிவிடும்போது, இயற்கைக்கு மாறுபட்ட கால நிலை மாற்றம் ஏற்படுகிறது[18]. வெள்ளிகோளில் கரியமில வாயு மற்றும் நீராவி சம்பந்தப்பட்ட மாறுபட்ட பைங்குடில் விளைவு நடந்திருக்கலாம்.மனித இன உலைவுகளால் அது போன்ற நிகழ்வு புவியில் நடைபெற வாய்ப்பில்லை, இருந்தாலும் ஆர்க்டிக் நிரந்தர உறைபனியிலிருந்து ஆர்க்டிக் மீதேன் வாயு வெளியேற்றத்தால் நிலையற்ற கால நிலை மாற்ற விளைவுகள், போன்றவை நடக்கலாம் என்று கருதப்படுகிறதுக்லாத்ரேட்ஸ் எனப்படுபவையும் மீதேன் வாயுவினை கொண்டுள்ளதால், அவை கூட 'முறையற்ற கால நிலை மாற்றம்' ஏற்படுத்தலாம் என்று கருதப் படுகிறது

மனிதன் மிகைப்படுத்திய பைங்குடில் விளைவு

[தொகு]

மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் வாயுக்களில், அதிகமாகக் கதிர் இயக்கப் பின் விளைவுகளை வித்திடுவது கரியமில வாயு ஆகும். மனித இனத்தினரின் அதிகரித்து வரும் தொழில் செயல் பாடுகளினால் (புதைப்படிம எரிபொருள் எரிப்பு) மற்றும் இதர சிமென்ட் உற்பத்தி, காடுகளை அழித்தல்[19] போன்ற செயல்பாடுகளால் கரியமில வாயுவின் CO2 செறிவு அளவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது. நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது. அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது. மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (நெகிழி) பெருக்கம் விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் பைங்குடில் வாயுக்களின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு

மாவன லோவாவில் உள்ள வானியல் ஆய்வகத்தில் நடந்த சோதனை ஆய்வின் படி (கரி அமில வாயுவின்) செறிவு அளவு 1960 ஆம் ஆண்டில் CO2 313 பிபிஎம் (மில்லியனில் காணும் பாகம்) அளவு இருந்தது 2005 ஆம் ஆண்டில் 375 பிபிஎம் அளவிற்கு (உலர்ந்த காற்றில் காணப் படும் மோல் பின்னம் [20]) அதிகரித்துள்ளது. தற்போது காணப் படும் CO2 அளவு புவிச்சரிதவியலுக்குரிய பதிவு செய்யப்பட பனி உள்ளக தரவு [21] ஆவணத்தின் மீப்பெருமதிப்பு அளவினை (~300 ppm)மீறி உள்ளது.

ஒரு பொருளை எரிப்பதால் உருவாகும் கரி அமில வாயு புவியின் கால நிலை மாற்றங்களில் பின் விளைவுகளை ஏற்படுத்தும், இது ஒரு தனிவகையான மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் விளைவு ஆகும், இதனை முதன் முதலாக ச்வந்தே அற்ஹீநியஸ் என்பவர் 1896 ஆண்டில் விளக்கி உள்ளார், இதனை "கால்லெண்டர் விளைவு" என்றும் கூறுவர்.

இது ஒரு பைங்குடில் வாயுவாக இருப்பதால், CO2 செறிவு அளவு அதிகரித்தால், வெப்ப அகச்சிவப்பு காரணமாக வளிமண்டலத்தில் மேலும் அதிகமாக உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் ஏற்படும், அதன் விளைவு வெப்ப அளவு அதிகரித்தலே. காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த மதிப்பீடு அறிக்கையின் படி, "20 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் உலகளவிலாகச் சராசரி வெப்பத்தின் அளவு உயர்வதற்கான காரணம் மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் வாயுக்களின் செறிவூட்டமாகவே இருக்கலாம் "[22].

கடந்த 800,000 ஆண்டுகளாக,[23] பனி உள்ளக தரவு கரியமில வாயுவின் அளவானது குறைந்தபட்சமாக 180 பிபிஎம் முதல் தொழில் வளர்ச்சி துவங்காத சமய அளவான 270 பிபிஎம் (ppm) வரை இருந்ததாகக் காட்டுகின்றது[24]. சில பழம் காலநிலை ஆராய்வாளர்கள் கரியமில வாயுவின் இவ்வேறுபாடினை இக்காலப்பகுதியின் கால நிலை வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாகக் கருதுகின்றனர்[25].

மனிதனால் ஏற்பட்ட புவி வெப்ப உயர்விற்கான பதில்களை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்:

 • இசைவாக்கம் - புவி வெப்ப உயர்வினை எதிர்கொள்ளுதல், வெள்ளப்பாதுகாப்பு அமைத்தல் போன்றவை அமைப்பதனால்
 • எதிர் விளைவைக் குறைத்தல் -கார்பன் உமிழ்தலை குறைத்தல், அதாவது புதிப்பிக்க இயன்ற சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் சக்தியின் ஆற்றலை மேம்படுத்து்ம் திட்டங்கள் போன்றவை.
 • புவிபொறியியல் - கால நிலை மாறுதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாகக் கொண்டுவருதல். எ.கா. சூரிய கதிர் இயக்க நிருவாகம்

மனிதர்களால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு நாடுகள் வாரியாக

[தொகு]
நாடுகள் 1000 டன் கரியமில வாயு வெளியேற்றம் ஒவ்வொரு நொடி/நிமிடத்திற்கும் ஒவ்வொரு நபரும் வெளிவிடும் கரியமில வாயு (ஆண்டிற்கு)டன் அளவுகளில்
இந்தியா 20.9 நொடி 1.32
சீனா 5.2 நொடி 4.59
பாகிஸ்தான் 35.9 நிமிடம் 0.8
இலங்கை 4.2 நிமிடம் 0.26
ரஷ்யா 20 நொடி 11.21
ஜப்பான் 24.8 நொடி 10.1
சூடான் 48.6 நிமிடம் 0.27
நைஜீரியா 5.4 நிமிடம் 0.67
தென்னாப்பிரிக்கா 1.3 நிமிடம் 8.5
கென்யா 43.3 நிமிடம் 0.32
அமெரிக்கா 5.3 நிமிடம் 19.62
மெக்சிகோ 1.3நிமிடம் 3.97
கனடா 5.63நொடி 16.87
பொலிவியா 46.1நிமிடம் 1.23
ஆஸ்திரேலியா 1.3 நிமிடம் 18.59
ஜெர்மனி 35.8 நிமிடம் 10.69
இத்தாலி 1.1 நிமிடம் 8.39
லக்சம்பர்க் 43.4 நிமிடம் 24.92
இங்கிலாந்து 56.5 நொடி 9.15
ஐக்கிய அரபு நாடுகள் 3.8 நிமிடம் 30.2
சவூதி அரேபியா 1.4 நிமிடம் 13.56

பைங்குடில் விளைவும் வெப்பம் அதிகரித்தலும்

[தொகு]

தொழில்மயமாக்கம், வேளாண்மை விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் வளிமண்டலத்தில் உள்ள பசுமைஇல்ல வாயுக்கள் சராசரி அளவுகளிலிருந்து மாறுபட்டு வேகமாக அதிகரித்துள்ளது. இது உலகம் அதிக வெப்பமடைவதை நோக்கி இட்டுச் செல்கிறது.

விரைவில் நீர்த்துப் போகக்கூடிய புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவற்றை எரிப்பதனாலும், மேலும் மரங்களை வெட்டி எரிப்பதனாலும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளிவருகின்றன. பசுமை இல்ல விளைவுக்கு 70 சதவிகிதம் கார்பன்_டை_-ஆக்ஸைடு காரணமாகிறது. சாண எரிவாயுத் தொட்டிகளிலிருந்து மீத்தேன் உற்பத்தியாகிறது. விவசாய நிலங்களின் நீர் நிறைந்த நெல் வயல்களில் போடப்படும் நைட்ரஜன் தொடர்புடைய உரங்கள்மூலம் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியாகிறது.

இப்பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ச்சியாக இதேவேகத்தில் வெளியேறுமானால், கி.பி. 2030இல் பூமியின் வெப்பமானது 3 டிகிரி சென்டி கிரேட் அதிகரிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். உயரும் வெப்ப நிலை மாற்றத்தால் கடல்கள் சூடேறுகின்றன. பனிப் பாறைகள் உருகத் தொடங்குகின்றன. துருவப் பகுதியில் பனி மலை-களும் உருகிக் கடல் நீரின் அளவைப் பெரும் வெள்ள அபாயம் ஏற்பட வழி வகுக்கிறது. உலகின் பல பகுதிகளில் கடலரிப்பை ஏற்படுத்துகிறது.

1993 ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு கடல்நீரால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது. ஒரு சிறு மாற்றம் கடல் மட்ட அளவில் ஏற்பட்டால்கூட பல தீவுகள் எளிதில் அழியும் என்று இதிலிருந்து நாம் அறிய முடியும். மேலும், மாலத்தீவுகளில் உள்ள அதிக உயரமான நிலப்பரப்பானது கடல் மட்டத்தைவிட 2 மீட்டர் அளவு உயரத்தில் உள்ளது.

அமில மழை

[தொகு]

புதை படிவ எரி-பொருள்கள் எரிவதனால் கந்தக மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் உண்டாகின்றன. இந்த மாசுக்கள் வளிமண்டலத்தில் உள்ள நிராவியுடன் வினைபுரிந்து கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தை உண்டாக்குகின்றன. இது அமில மழையாகவும், பனியாகவும் பெய்கிறது. அமில மழையானது ஏரிகள், காடுகள், காட்டு விலங்குகள், விவசாய நிலப்பகுதிகள், குடிநீர்ப் பகுதிகள் மற்றும் மனித உடல்நலத்திற்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஓசோன் படலம் மெலிவடைதல்

[தொகு]

ஓசோன் படலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. ஓசோன் என்பது 3 ஆச்சிஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்ததாகும். சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் நம்மை ஓசோன் படலம் பாதுகாக்கின்றது. இப்படலம் பல மாசுக்களினால் அழிக்கப்படுகின்றது. குறிப்பாகக் குளோரோ ஃபுளோரோ கார்பன் என்ற வேதிப்பொருளைக் கூறலாம். ஒரு குளோரோ ஃபுளோரோ கார்பன் மூலக்கூறு 1 லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்க வல்லது. குளோரோ ஃபுளோரோ கார்பன் இயற்கையாகக் கிடைப்பதில்லை. மாறாக, செயற்கையாகத்தான் தயாரிக்கப்படுகிறது. குளிர்பதனப் பெட்டிகள், குளிர்விக்கும் பெட்டிகள், தீயணைப்புப் பெட்டிகள் போன்றவற்றிலும், ஏரோசால் டின்களில் முன்செலுத்தியாகவும், பிளாஸ்டிக் பொருளாகவும், மின்னணுத் தொழிற் சாலைகளில் கரைப்பானாகவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது.

ஓசோன் படலம் மெலிவடைவதால், புற ஊதாக் கதிர்களின் வீச்சுகள் எளிதாகவும், வேகமாகவும் நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்கிறது. மனித உடலில் நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இது மீன் வளத்தையும், விவசாய விளைச்சலையும் குறைக்கும்.

புகை மூட்டம்

[தொகு]

காற்று மாசுபடுவதற்குத் தொழிற்சாலைகளிலிருந்தும், மின் நிலையங்களிலிருந்தும், போக்குவரத்து வாகனங்களிலிருந்தும் வெளிவரும் புகையே முக்கியக் காரணமாகும். இப்புகையானது புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதனால் வெளிவருகிறது. புகை மூட்டம் எனப்படுவது பின்னர் மூடுபனியுடன் புகை கலந்த கலவையாகிறது. இது சாதரணமாக, பனிக் காலத்தில் அதிகக் தொழிற்சாலைகளுள்ள பகுதியிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும் காணப்படுகிறது. இப்புகைமூட்டமானது அதிகமான அளவில், நச்சுத் தன்மை கொண்ட உட்பொருளான ஓசோனைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன்_டை-ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோ ஃபுளோரோ கார்பன் மற்றும் பல வாயுக்கள், ஆச்சிஜன் மூலக்கூறு ஒன்றுடன், ஒரு ஆக்சிஜன் அணுவை வேதிவினை புரியவைக்கும் வினையூக்கியாகச் செயல்பட்டு வளிமண்டலத்தின் கீழுள்ள அடுக்குகளில் இவ்வினையிலிருந்து ஓசோன் உற்பத்தியாகிறது. வளிமண்டலத்தின் மேலுள்ள அடுக்குகளில் இம்மாசுக்கள் ஓசோன் படலத்தை அழிக்க உதவி செய்கின்றன. இப்புகை மூட்டம் அதிகரிப்பதால் சுவாசித்தல் சம்பந்தமான நோய்களும், கண் எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சலும் அதிகமாகின்றன. மரங்கள் மற்றும் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவதற்குப் புகை மூட்டம் முக்கியக் காரணமாக விளங்குகிறது.[5]

பகுதிப் பொருள்கள்

[தொகு]

தூசி மற்றும் சிறிய துகள்கள் போன்றவையே பகுதிப் பொருள்களாகும். இவை வளிமண்டலத்தில் கலந்து தம் பங்கிற்குக் காற்றை மாசுபடுத்துகின்றன. இப்பொருள்கள் சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பகுதிப் பொருள்கள் இலைகளின் மேற்புறத்தில் படிந்து தாவரங்களின் ஒளிச்சேர்க்கையிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. புவி வெப்பமடைவதால், நமது உடலுக்கு, நமது உணவுப் பாதுகாப்பையும், உலகின் பிற உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, நமது புவியைக் காக்க, நாம் புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாகக் காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்தக் கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்தக் கேடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்களென விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.

எதிர்காலச் சிக்கல்கள்

[தொகு]

வெப்பநிலை மாற்றம் மனித குலத்துக்கே அபாயமானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலை,0.3-0.60c வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு நமக்கு மிகவும் குறைந்த அளவாகத் தோன்றலாம். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேரழிவுக்கு இவை வழி வகுக்கும்.

வேளாண்மை

[தொகு]

அதிகரித்துவரும் மக்கள் தொகை உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

வானிலை

[தொகு]

உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மாற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகதரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது.

கடல் மட்டம் அதிகரித்தல்

[தொகு]

வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு, கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது , நீர்நிலைகள் உயர்வாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.[26]

உடல் நலம்

[தொகு]

பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காடுகள் மற்றும் வனவிலங்குகள்

[தொகு]

இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகுவிரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்ப மாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

[தொகு]

புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல் (உ.ம். நிலக்கரி போன்ற எரிபொருட்கள்). புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல்; (சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை). மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மரங்களை வளர்த்தல், மக்கிப் போகாத நெகிழி பொன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்.ஆகியவற்றின் மூலம் இப்பசுமை இல்ல விளைவினை ஓரளவு குறைக்க முடியும்.

பைங்குடில்கள் இயங்கும் முறை

[தொகு]

"பைங்குடில் விளைவு" என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது, ஏன் என்றால் உண்மையான பைங்குடில்கள் வளிமண்டலத்தில் இயங்குவது போலச் செயல்படுவதில்லை. கதிர்வீச்சிற்கு்ம் வெப்ப சலனத்திற்கும் இடையிலான வழிமுறைகளில் உள்ள தனித்தன்மையை சரியாக கண்டு்கொள்ளப் படுவதில்லை[27].

தோட்டம் இடுவதற்கான பயன்படுத்திய பைங்குடில்களை மூலமாகக் கொண்டதே 'பைங்குடில் விளைவு' என்ற வார்த்தை ஆகும், ஆனால் இந்தப் பைங்குடில் இயங்கும் விதம் சொன்னது போல வேறுபட்டதாகும்.[28] இதனைப் பற்றி எழுதிய பல ஆய்வாளர்கள், ஒரு பைங்குடில் எவ்வாறு "வெப்பப் பொறி" என்ற ஒப்புமை மூலமாக வெப்ப சலனத்தை ஒரு வரையறைக்குள் வைப்பது என்பது முதல் எப்படி வளிமண்டலம் இதைப் போலவே வேறுபட்ட விதத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சினை பசுமை இல்ல வாயுக்கள் உறிஞ்சி இயங்குகின்றது என்பதையும் விளக்கியுள்ளனர்[29].

ஒரு பைங்குடில் சாதரணமாகக் கண்ணாடி, நெகிழி அல்லது அதைப் போன்றா ஒரு பொருளைக் கொண்டு கட்டியது ஆகும். சூரியன் அதற்குள் அடைபட்டிருக்கும் நிலத்தை முக்கியமாகச் சூடேற்றுவதால், அதுவே பிற்பாடு பைங்குடிலில் இருக்கும் காற்றினையும் சூடேற்றுகிறது. இந்தக் காற்றானது வெப்பம் அடைந்து கொண்டே போகும், ஏன் என்றால் அது பைங்குடிலில் உள்ளே அடைபட்டுள்ளது, ஆனால் பைங்குடிலுக்கு வெளியே உள்ள சூழ்நிலையில், மேற்பரப்பில் வெப்பம் ஏறிய காற்றானது மேல் நோக்கிச் சென்று குளிர்ந்த காற்றுடன் கலக்கின்றது.[30] இப்படியாகப் பைங்குடில் முக்கியமாக வெப்ப சலனத்தைத் தடுத்து பணி செய்பவை ஆகும்;

ஆனால் வளிமண்டல பைங்குடில் விளைவானது கதிர் இயக்க நாட்டத்தைக் குறைத்து செயல்படுகிறது, வெப்ப சலனத்தை அல்ல.[28][31]

புவியல்லாத இதர பொருட்கள்

[தொகு]

நமது சூரிய மண்டலத்தில், செவ்வாய், வெள்ளி, திங்கள் டைட்டான் ஆகியவை கூடப் பைங்குடில் விளைவினை வெளிப் படுத்துகின்றன.

டைட்டானில் எதிர்மறையான பைங்குடில் விளைவு காணப்படுகிறது, அதன் வளிமண்டலம் சூரிய கதிர் வீச்சினை உறிஞ்சிக் கொள்கிறது ஆனால் அதில் அகச்சிவப்பு கதிர் வீச்சு தெள்ளத் தெளிவாக உள்ளது.

புளூட்டோ கிரகமும் பைங்குடில் விளைவிற்கு எதிரான நடத்தையைக் கொண்டது.[32][33][34].

அடிக்குறிப்புகள்

[தொகு]
 1. "The Free Dictionary". பார்க்கப்பட்ட நாள் மே 19, 2013.
 2. "What is the Greenhouse Effect?". IPCC Fourth Assessment Report: Climate Change 2007. International Panel on Climate Change – IPCC. Archived from the original on 2018-11-30. பார்க்கப்பட்ட நாள் மே 19, 2013.
 3. "What is the Greenhouse Effect?". பார்க்கப்பட்ட நாள் மே 19, 2013.
 4. "IPCC AR4 SYR Appendix Glossary" (PDF). Archived from the original (PDF) on 17 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 December 2008.
 5. 5.0 5.1 http://viduthalai.periyar.org.in/20100703/snews07.html
 6. நான்காவது மதிப்பீடு அறிக்கை, அத்தியாயம் 1 ,பக்கம் 115[தொடர்பிழந்த இணைப்பு]
 7. ஸ்டீபான் எச். ஸ்நீடர், புவி உருண்டை மற்றும் உயிரினக் கோளம் இடையிலான இடர்பாடுகள் மற்றும் கால நிலை மாற்றம், லெனார்ட் ஒ. பெங்க்த்சன் மற்றும் க்ளாஸ் யு. ஹாம்மர், ஆசிரியர்கள், காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக அச்சகம், 2001, ஐஎஸ்பிஎன் 0521782384, பிபி. 90-91.
 8. ஈ.க்லாச்சன், வி. ஏ. கொச்றான், மற்றும் டி.பி.டேவீஸ், கால நிலை மாற்றம்: அறிவியல், உத்திகள், மற்றும் பதில்கள், மிச்சிகன் பல்கலைக் கழகம், 2001. ப . 373.
 9. ஏ. அல்லாபி மற்றும் பி. அல்லாபி, புவி அறிவியலை பற்றிய ஒரு அகராதி ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1999, ஐஎஸ்பிஎன் 0192800795, ப 244. 244.
 10. "வருடாந்தர விமர்சனம் (பதிவு செய்ய வேண்டியது )". Archived from the original on 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 11. 11.0 11.1 காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை பரணிடப்பட்டது 2018-11-26 at the வந்தவழி இயந்திரம்[1] பரணிடப்பட்டது 2018-11-26 at the வந்தவழி இயந்திரம் முதல் அத்தியாயம்: வானிலை மாற்ற அறிவியல் குறித்த சரித்திர மேலோட்டம்/0} பக்கம் 97
 12. "வி 1003 அறிவியல் மற்றும் சமூகம் - சூரிய கதிர் வீச்சு". Archived from the original on 2009-08-10. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 13. "சூரிய கதிர் வீச்சு மற்றும் புவியின் ஆற்றல் சரியீடு". Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 14. "ஒன்றாக்கப்பட்ட நிலம் காற்று மற்றும் கடல் மேல்பரப்பு வெப்ப நிலை தரவு". Archived from the original on 2008-04-07. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 15. "அதிகரிக்கும் பைங்குடில் விளைவு". Archived from the original on 2009-08-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 16. "Earth's Annual Global Mean Energy Budget" (PDF). Archived from the original (PDF) on 2006-03-30. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 17. Water vapour: feedback or forcing?
 18. Kasting, James F.(1991). "Runaway and moist greenhouse atmospheres and the evolution of Earth and Venus.". Planetary Sciences: American and Soviet Research/Proceedings from the U.S.-U.S.S.R. Workshop on Planetary Sciences, 234-245, Commission on Engineering and Technical Systems (CETS). 2009 அன்று அணுகப்பட்டது..
 19. ஐ பி சி சி நான்காவது மதிப்பீடு அறிக்கை, செயற்குழு I அறிக்கை "இயற்பியல் அறிவியல் ஆதாரம் " பரணிடப்பட்டது 2011-03-15 at the வந்தவழி இயந்திரம் அத்தியாயம் 7
 20. "Atmospheric Carbon Dioxide – Mauna Loa". Archived from the original on 2019-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 21. ஹான்சன் ஜெ.வானிலை மாற்றம் 68 , 269, 2005 ஐ எஸ் எஸ் என் 0165-0009 பரணிடப்பட்டது 2020-05-12 at the வந்தவழி இயந்திரம்
 22. ஐ பி சி சி நான்காவது மதிப்பீடு அறிக்கைகருத்துத்தொகுப்பு அறிக்கை: கொள்கை முடிவு செய்பவர்களுக்கான சுருக்கம் (ப.5 )
 23. பிபிசி செய்திகள் ஆழம் மிகுந்த பனி சொல்லும் கால நிலையின் கதை
 24. ரசாயன மற்றும் பொறியியல் செய்திகள்:புதிய தகவல் - பனி உள்ளகம் பதிவு நீட்டப் படுதல்
 25. போவன், மார்க்;மெல்லிய பனி: உலகின் மிகப் பெரிய மலைகளில் நிலவும் வானிலை ரகசியங்களை வெளிப் படுத்துதல்; அவுள் புத்தகங்கள், 2005.
 26. http://jtmadhavan.wordpress.com/page/4/
 27. ஈபிஏ வின் கால நிலை மாற்றத்திற்கான தளம்
 28. 28.0 28.1 Schroeder, Daniel V. (2000). An introduction to thermal physics. San Francisco, California: Addison-Wesley. pp. 305–307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-321-27779-1. ... this mechanism is called the greenhouse effect, even though most greenhouses depend primarily on a different mechanism (namely, limiting convective cooling).
 29. "ஜி பி 25 வெப் புத்தகம் |அத்தியாயம் 7". Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 30. ர .டபி்ல்யு. வுட் , ( 1909 ) . (1909) "பைங்குடில் தத்துவம் பற்றிய குறிப்பு," பிலோசொபிகல் வெளியீடு , 17 , பக்கங்கள் 319–320. இதனை கணினியில் வெப்தளத்தில் உடன் செயலாக்க ர .டபி்ல்யு. வுட்: பைங்குடில் தத்துவம் பற்றிய குறிப்பு பார்க்கவும்.
 31. * பீக்சொடோ, ஜெ பி மற்றும் ஊர்த், ஏ எச் : கால நிலையின் இயற்பியல், அமெரிக்க இயற்பியல் நிறுவனம்,1992. எடுத்துக்காட்டு: "...சொல்லப் போனால் நீராவி பைங்குடில் விளைவு என்ற பெயர் தவறானது, ஏன் என்றால் சாதாரணமான பைங்குடில் வெப்பமானது வெப்பச்சலனத்தை குறைப்பதால் வருவதாகும்."
 32. "ஏ டி எம் eS 211 - குறிப்புகள்". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 33. டைடான் :: கிரீன்ஹவுஸ் மற்றும் எதிர்மறை கிரீன்ஹவுஸ் :: வான் உயிரியல் வெளியீடு - புவி அறிவியல் - படிப்படியான வளர்ச்சி வினியோகம் உலக வாழ்க்கையின் மூலாதாரம் - வாழ்க்கைக்கும் அப்பால் :: வான் உயிர் இயல் ஆனது புவியை படிப்பது …
 34. SPACE.com - ப்ளூடோ நினைத்ததை விட குளிர்சியாக உள்ளது

குறிப்புகள்

[தொகு]
 • புவியின் கதிர்வீச்சின் வரவு செலவுத் திட்டம், http://marine.rutgers.edu/mrs/education/class/yuri/erb.html பரணிடப்பட்டது 2006-09-01 at the வந்தவழி இயந்திரம்
 • பிலீசில், ஆர் ஜி மற்றும் பசிஞர், ஜெ ஏ : வளிமண்டல இயற்பியலுக்கான ஒரு துவக்கம், இரண்டாம் பதிப்பு , 1980
 • ஐ பி சி சி தாக்கல் அறிக்கைகள், பாருங்கள் http://www.ipcc.ch/
 • ஆன் ஹெண்டர்சன் செல்லேர்ஸ் மற்றும் மக்கப்பே, கே : ஒரு வானிலை போன்ற பொருள் தொடக்கப் பாடம் (எடுத்துக் காட்டு :கிரீன்ஹவுஸ் விளைவு : நீண்ட அலை வரிசை கொண்ட கதிர் வீச்சினை புவியின் மேல்பரப்பில் திரும்பவும் கதிர்வீச்சு மூலமாக அனுப்புவதால் வளிமண்டலத்தில் ஏற்படும் விளைவு. கண்ணாடியால் செய்யப் பட்ட வீடுகளுடன் அதற்கு யாதொரு சம்பந்தமும் இல்லை, எவை வெப்பமான காற்றை அதன் மேல்் பரப்பில் அடைத்து வைக்கிறதோ.) ).
 • இட்சோ, எஸ்.பி.: "கரியமில வாயு : நண்பனா அல்லது எதிரியா," 1982 (எடுத்துக் காட்டு : ...இதற்கான சொற்றொடர் சரியாக அமைக்கப் படவில்லை, ஏன் என்றால் ஒரு கிரீன்ஹவுஸ் அதன் உள்புறத்தை எப்படி வெப்பத்துடன் வைத்துக் கொள்கிறதோ,அதே போல CO2 ஆனது புவியை சூடாக வைத்துக் கொள்வது இல்லை. ).
 • கேஹ்ல். ஜெ.டி., மற்றும் திரேன்பெர்த், கே. (1997)"புவியின் சராசரியான உலக அளவு சக்தி வருடாந்தர வரவு செலவு கணக்கு," சிற்றேடு அமேரிக்கன் மிடீரியலோசிகல் சொசைடி '78 (2), 197–208.

வெளியிணைப்புகள்

[தொகு]
 greenhouse effect – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைங்குடில்_விளைவு&oldid=3583099" இலிருந்து மீள்விக்கப்பட்டது