பசுமைக்குடில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெனீவாவில் அமைந்துள்ள ஜார்டின் தாவரவியல் பூங்காவிலுள்ள பசுமைக்குடில் ஒன்றின் வெளித்தோற்றம்
உருசியாவிலுள்ள Saint Petersburg தாவரவியல் பூங்காவிலுள்ள பசுமைக்குடிலின் உள்தோற்றம், படத்தில் மிகப்பெரிய நீராம்பலின் (Victoria amazonica) இலைகள் தெரிகின்றன.

தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை, ஈரப்பதனை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியதாக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் அல்லது அமைப்புக்கள் பசுமைக்குடில்கள் எனப்படுகின்றன.

சுவர்கள், கூரைகள் ஒளிபுகவிடும் தன்மை கொண்ட கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு பசுமைக்குடில்கள் அமைக்கப்படுவதனால், தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியை வழங்கவும், கட்டட அமைப்பின் தன்மையால் தாவரத்திற்குச் சாதகமான ஈரப்பதனை வழங்கக் கூடியதாகவும் இவை அமைக்கப்படுகின்றன. கண்ணாடி அல்லது நெகிழியினால் மூடப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுவதனால், உள்ளே இருந்து வெப்பம் வெளியேறாது தவிர்க்கப்பட்டு, குளிரான வெளிச்சூழல் இருக்கையில் தாவரங்கள் உள்ளாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் முக்கியமாக சூழலினால் இலகுவில் பாதிப்படையக் கூடிய இளம்தாவரங்களான நாற்றுக்களைப் பாதுகாக்கவும், சாதகமற்ற பருவகாலங்களிலும் தாவர உற்பத்தி, விருத்தியைச் செய்யவும் இந்த பசுமைக்குடில்கள் உதவுகின்றன. அத்துடன் பலத்த காற்று போன்ற பாதகமான சூழல்களைத் தவிர்க்கவும் உதவுகின்றன.[1][2].

பசுமைக்குடிலை மூடியுள்ள ஒளிபுகவிடும் தன்மை கொண்ட பொருட்களினூடாக கண்ணுக்குப் புலப்படும் சூரியக் கதிர்வீச்சு உள்ளே வரும்போது, அங்கிருக்கும் தாவரங்கள், மண் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களாலும் உறிஞ்சப்பட்டு, வெப்ப ஆற்றலாக மாறும். அவ்வாறு வெப்பமான பொருட்களால் அவற்றைச் சுற்றியுள்ள காற்றும் வெப்பமடையும். அந்த வெப்பம் வெளியேறாது அதனை மூடியுள்ள சுவர், கூரை பாதுகாக்கும். அத்துடன், வெப்பமடைந்த தாவரம், மற்றும் ஏனைய பொருட்களிலிருந்து ஒரு பகுதி வெப்ப ஆற்றலானது, அதிர்வெண் கூடிய அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றை கொண்ட வெப்பக் கதிர்வீச்சாக வெளியேறும். மூடப்பட்ட அமைப்பினுள் இருப்பதனால், அவ்வாறு வெளியேறும் ஆற்றலின் ஒரு பகுதியும் சுற்றியுள்ள காற்றில் பிடிக்கப்படும். சுற்றியுள்ள காற்றில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் பெறப்படும் காபனீரொக்சைட்டு அதிகளவில் இருக்கும். இந்த வளிமம் அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றையை உறிஞ்சி, பல திசைகளிலும் வெளிவிடும் ஆற்றல் கொண்டதாக இருப்பதனால் இது பைங்குடில் வளிமங்களில் ஒன்றாக இருக்கின்றது[3][4][5]. இது போன்ற ஒரு செயற்பாடு, பூமியைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்திலும் நிகழ்ந்து வெப்பம் அதிகரித்தலையே பைங்குடில் விளைவு என்கின்றோம்.

இவை வேறுபட்ட அளவுகளில் அமைக்கப்படுகின்றன. சிறிய குடிசைகளாகவோ, அல்லது வணிக நோக்கில் மிகப்பெரிய அளவிலான கட்டடங்களாகவோ, அல்லது வீட்டினுள்ளேயே தனிப்பட்டவர்கள் தமது தேவைக்காக அமைக்கும் மிகச் சிறிய பெட்டிகள் வடிவிலானவையாகவோ இருக்கலாம். மிகச் சிறியவற்றை en:Cold Frame என அழைக்கப்படும்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Free Dictionary". பார்த்த நாள் மே 19, 2013.
  2. "Dictionary.com". பார்த்த நாள் மே 19, 2013.
  3. "What are the greenhouse gases". CBBC New round, BBC. பார்த்த நாள் மே 20, 2013.
  4. "What are the main Greenhouse Gases, Greenhouse Gas emissions". EPA, United States Enviornmental Protection Agency. பார்த்த நாள் மே 20, 2013.
  5. "Introduction, What are the Greenhouse Gases". National Oceanic and Atmospheric Administration National Climatic Data Center. பார்த்த நாள் மே 20, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமைக்குடில்&oldid=1977871" இருந்து மீள்விக்கப்பட்டது