கதிரியக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்குறியீடு கதிரியக்கப் பொருள்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. இதன் யூனிக்கோடுக் குறியீடு U+2622 (☢) என்பதாகும்

கதிரியக்கம் (radioactivity, radioactive decay, அல்லது nuclear decay) என்பது சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மேல் மாந்தர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், புற்று நோய் முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.

சில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் நேர்மின்னிகளும் (புரோட்டான்களும்), மின்மம் அற்ற நொதுமிகளும் (நியூட்ரான்களும்) இருக்கும் பொழுது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலையுறுதி பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவின் உட்துகள்களை (அணுத் துணிக்கைகளை) உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வு எவ்வகை சீரும் வரிசையும் இன்றி ஓர் சீருறாச் [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட அணுவின் சிதைவு எப்பொழுது ஏற்படும் என எதிர்வு கூற முடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு அணுக்கரு மாற்றம் எனப்படும்.

அனைத்துலக முறை அலகுகள் (SI) கதிரியக்கத்தின் அலகு பேக்குரெல் (becquerel (Bq)) ஆகும். ஒரு கதிரியக்கப் பொருளில், ஒரு நொடியில் ஒரு சிதைவு நிகழ்வு ஏற்படுமாயின், அது ஒரு Bq கதிரியக்கம் கொண்டதெனக் கூறப்படும். இயல்பான அளவு கொண்ட மாதிரி ஒன்றில் பெருமளவு அணுக்கள் காணப்படுமாதாலால், ஒரு Bq அளவு என்பது ஒரு மிகமிகக் குறைவான கதிரியக்கமாகும். பொதுவாகக் கதிரியக்கம் கிகா பேக்குரெல் (giga becquerel) அளவுகளிலேயே நிகழ்கின்றது.

கண்டுபிடிப்பு[தொகு]

1896 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியலாளர் ஹென்றி பேக்குரல் என்பவர் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். சில யுரேனிய உப்புக்களை ஓர் ஒளிப்படத்தட்டின் மீது வைத்து, அத்தட்டு கறுப்புக் காகிதத்தினால் சுற்றி ஓர் இருட்டு அறையில் வைக்கப்பட்டது. இத்தட்டு உருமாற்றப்பட்ட போது (develop) அது பாதிக்கப்படிருந்ததை அவதானித்தார். இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப்ப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்

Deflection of nuclear radiation in a magnetic field en.svg

இயற்கையிலேயே அணுஎண் 92 உம் அதற்கு மேலுமுள்ள தனிமங்கள் கதிரியக்கம் கொண்டுள்ளன. எந்த வித புறத் தூண்டுதலுமின்றி தாமாக இது நிகழ்கிறது. அதிக வெப்பநிலையோ குறைந்த வெப்பநிலையோ, எப்படிப்பட்ட காந்த, மின் புலங்களாலும் கதிரியக்க நிகழ்வு பாதிக்கப்படுவதில்லை. கதிரியக்கத்தின் போது α,β,γ என மூன்று விதமான கதிர்கள் வெளிப்படுகின்றன. α கதிர்கள் ஈலியத்தின் கருக்களே என்றும் β கதிர்கள் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் என்றும் γ கதிர்கள் மின்னூட்டம் ஏதுமில்லா மின்காந்த அலைகள் என்றும் அறியப்பட்டுள்ளன.

செயற்கைக் கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்று எந்த ஒரு தனிமத்தின் கதிரியக்க ஐசோடோப்புகளையும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரியக்கம்&oldid=1569395" இருந்து மீள்விக்கப்பட்டது