தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்தின் நடுவில் கோயில்

தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர் நகரில் சிவகங்கைப் பூங்காவின் உள்ள குளத்தின் நடுவில் இக்கோயில் உள்ளது.

தளிக்குளம்[தொகு]

மூலவர் சன்னதி முன்பாக பலிபீடம் மற்றும் நந்தி. பின்புறத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில் விமானம்

பு.மா.ஜெயசெந்தில்நாதன் தன் நூலில் "தஞ்சையில் உள்ளதாலும், கோயிலையுடைய குளம் ஆதலாலும் இது தஞ்சைத் தளிக்குளம் எனப்படுகிறது. இது ஒரு வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது" [1] என்று குறிப்பிட்டுள்ளார். குடவாயில் பாலசுப்ரமணியன் தன் நூலில் "சிவகங்கைக்குளம்தான் தளிக்குளம் எனக் கூறுவதற்குப் போதுமான தெளிவான சான்றுகள் இல்லை. இது எப்போது தோண்டப்பெற்ற குளம் என்பதற்கு எந்தச் சான்றும் கிடையாது. நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஆவணங்களில் இக்குளம் பற்றிப் பேசப்படுகிறதேயன்றி, அதற்கு முந்தைய காலத்தியக் குறிப்புகள் கிடைக்கவில்லை. குளத்தின் நடுமேடையில் உள்ள சிவலிங்கம் பின்னாளில் வைக்கப்பெற்றதாகும். அத்திருமேனியைத் தளிக்குளத்து மகாதேவர் என்று கூறுவது ஏற்புடையாகாது" [2] என்று குறிப்பிட்டுள்ளார்.[கு 1]

சிறப்பு[தொகு]

குளக்கரையிலிருந்து லிங்கத்திருமேனியைப் பார்க்கலாம். லிங்கத் திருமேனிக்கு எதிரில் நந்தி, பலி பீடம் ஆகியவை உள்ளன. படகுத்துறையிலிருந்து இழுவை ரயிலில் சென்றால் குளத்தின் நடுவில் உள்ள கோயிலை அடையலாம். [1]

குடமுழுக்கு[தொகு]

சிவகங்கை பூங்கா குளத்தின் நடுவில் உள்ள சிவலிங்கசுவாமி கோயிலில் 10 நவம்பர் 2019 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள் நூலில் இத்தலத்திலுள்ள இறைவன் தளிக்குளநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இத்தலத்தைப் பற்றிய குறிப்புகளும் தந்துள்ளார். அவ்வகையில் இப்பதிவு உள்ளது. தளிக்குளத்தார் கோயில் எது என்று உறுதியான விவரம் பெறப்பட்ட பின் பதிவில் உரிய மாற்றம் மேற்கொள்ளப்படும். தற்போது இதனை சிவலிங்கசுவாமி கோயில் என்று கூறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தஞ்சாவூர் கி.பி.600-1850, அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, ப,96
  3. சிவகங்கை பூங்கா குளக் கோயிலில் குடமுழுக்கு, தினமணி, 11 நவம்பர் 2019

படத்தொகுப்பு[தொகு]