உள்ளடக்கத்துக்குச் செல்

துர்வாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்வாசர்
துர்வாசர்
சகுந்தலாவுக்கு சாபமிடம் துர்வாச முனிவரின் ஓவியம்
வகைசிவபெருமான்
சகோதரன்/சகோதரிதத்தாத்ரேயர் மற்றும் சந்திரன் (சகோதரர்கள்)
நர நாராயணர்களுக்கு சாபமிடம் துர்வாச முனிவர்

துர்வாசர் இந்து தொன்மவியலில் அத்திரி முனிவருக்கும் அனுசுயாவிற்கும் பிறந்த முனிவர். இவர் உருத்திரனின் மறு அவதாரமோவென்ற அளவு முன்கோபமுடையவர். மற்ற முனிவர்களைப் போலன்றி அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர்.இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார்.காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலாவிற்கு தனது காதலனை மறக்க சபித்தவர் இவர்.

அம்பரீசனுடன் மோதல்

[தொகு]

துர்வாசருக்கும் அம்பரீசனுக்கும் இடையே எழுந்த மோதல் கிருஷ்ணரின் சரிதையான பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. அரசன் அம்பரீசன் திருமாலின் தீவிர பக்தன். வாய்மையே வெல்லும் என உறுதியாக இருப்பவன்.அவனது வேள்விகளால் மனமுவந்த திருமால் தனது சுதர்சனச் சக்கரத்தை அவனுக்கு அளிக்கிறார்.அதனால் அவனது நாட்டில் வளமை, அமைதி மற்றும் பாதுகாப்புடன் மக்கள் வாழ்கின்றனர்.

ஒருமுறை திருமாலுக்கு உகந்த 'துவாதசி விரதம்' என்ற வழிபாட்டை மேற்கொள்கிறான்.அந்த வழிபாட்டு முறைப்படி முதல்நாள் ஏகாதசி (புதுநிலவு அல்லது முழுநிலவு கழிந்த பதினோராம் நாள்)முழுவதும் உணவு உட்கொள்ளாமல் அடுத்த நாள் துவாதசி துவங்கும் நேரம் பட்டினியை முறித்து விருந்தினர்களுக்கு உணவளித்து தானும் உண்பதாகும். இத்தகைய நாளொன்றில் துர்வாச முனிவர் தமது சீடர்குழுவினருடன் வர அவருக்கு அனைத்து உபசரிப்புகளையும் அம்பரீசன் செய்கிறான். துவாதசி உண்ணாநோன்பை முறிக்கும் நேரம் அவனது விருந்தினராக இருக்க சம்மதிக்கும் துர்வாசர், தான் கங்கையில் குளித்து வரும்வரை காத்திருக்கச் சொல்லிவிட்டு செல்கிறார். துவாதசி துவங்கும் நேரம் நெருங்கியும் முனிவரைக் காணாது குழப்பத்தில் ஆழ்ந்த மன்னன் தனது குரு வசிட்டரின் அறிவுரையின்படி துளசிநீர் அருந்தி உண்ணாநோன்பை முடித்துக்கொண்டு முனிவருடன் உணவருந்த காத்திருக்கிறான்.

ஆனால் துர்வாசர் தம்மை மன்னன் அவமதித்ததாக கருதி தன் தவ வலிமை கொண்டு தலைமுடியிலிருந்து ஒரு அரக்கனை உருவாக்கி ஏவுகிறார். ஆனால் சுதர்சன சக்கரம் அந்த அரக்கனை அழிப்பதோடு அல்லாது ஏவிவிட்ட துர்வாசரையும் தாக்க வருகிறது. பிரம்மா, சிவன் ஆகியோரும் தங்களால் உதவ இயலாது என கூறுகின்றனர். திருமாலிடம் துர்வாசர் தஞ்சமடைய அவரும் கை விரிக்கிறார். பின்னர் அம்பரீசனிடமே சென்று மன்னிப்பு கேட்க அவனும் திருமாலை சுதர்சன சக்கரத்தை திரும்பப் பெற வேண்டி அவரைக் காப்பாற்றுகிறான்.

மகாபாரதத்தில் துர்வாசர்

[தொகு]

மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியிது:

ஒரு அட்சய திருதியை நாளன்று, துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசரும் அவருடைய சீடர்களும் செல்கிறார்கள் காலை நேரத்தில். நல்ல உணவு உண்டு,மனத்திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடை பெற முனைகிறார், முனிவர் துர்வாசர். தீய எண்ணத்துடன் துரியோதனன் இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்துண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றார்.துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள்அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரௌபதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ள அள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள்தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத்தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள்.அதற்குள், திரௌபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள் - இது துரியோதனின் திட்டம்.

துரியோதனன் வேண்டியபடியே துர்வாசன் பாண்டவரிடம் செல்கிறார்; மதிய உணவு தங்கள்அனைவருக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறார். துரியோதனன் எதிர் பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். கவலையுற்ற திரௌபதி கிருஷ்ணரை வேண்ட, அவர் அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரௌபதி கூறினாள். இருப்பினும் கிருஷ்ணரின் வற்புறுத்தலால் பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்; அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினார். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவனுடைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.

துர்வாசர் சாபம் மட்டுமே இடுபவர் அல்லர். தன்னை நன்றாக கவனித்துக் கொள்பவர்களுக்கு வரங்களும் கொடுத்திருக்கிறார். காட்டாக பாண்டுவின் மனைவி குந்திக்கு எந்த தேவரையும் நினைத்த மாத்திரத்தில் கூப்பிட அவர் அருளிய வரம். இந்த வரத்தின் மூலமே கர்ணன், தருமன், பீமன், அருச்சுனன் மற்றும் மாத்ரிக்கு நகுலன்,சகாதேவன் பிறக்க ஏதுவாயிற்று.

இந்திரனை சபித்தமை

[தொகு]

இந்திரன் தன் செல்வச் செழிப்பில் ஐராவதத்தில் வலம் வந்து கொண்டிருக்கையில், இலக்குமிக்கு பூசை செய்த பிரசாதமாக ஒரு மாலையை கொண்டுவந்து கொடுத்தார் துர்வாசர். தன்னிலை மறந்து இருந்த இந்திரன் மாலையை ஐராவதத்தின் தலையில் வைத்தான். மாலையின் நறுமணத்தில் பல வண்டுகள் கவரப்பட்டு மாலையை மொய்த்தன. இதனால் எரிச்சல் அடைந்த ஐராவதம் சினமுற்று மாலையைச் சுழற்றி, காலில் உழக்கிச் சிதைத்து விட்டது. கோபம் உச்சத்துக்கேறிய துர்வாசர் இந்திரனை சபித்தார். அமரர் தலைவன் ஆண்டியானான்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்வாசர்&oldid=4126068" இலிருந்து மீள்விக்கப்பட்டது