உள்ளடக்கத்துக்குச் செல்

ஐராவதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐராவதம் என்பது நான்கு தந்தங்கள் மற்றும் ஏழு தும்பிக்கைகள் கொண்ட வெள்ளை நிறத்தால் ஆனா ஒரு தெய்வீக யானையாகும். இது "யானைகளின் அரசன்" எனவும், தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனமாகவும் கருதப்படுகின்றது. இது அப்ரா-மதங்கா ("மேகங்களின் யானை"), நாக-மல்லா ("சண்டை யானை") மற்றும் அர்கசோதரா ("சூரியனின் சகோதரர்") என்றும் அழைக்கப்படுகின்றது. ஐராவதம் ஐராவதியின் மூன்றாவது மகனாக கருதப்படுகின்றது. அபிராமு என்ற யானை ஐராவதத்தின் மனைவியாக குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்தில் இது ஒரு பெரிய பாம்பாக சித்தரிக்கப்படுகின்றது. [1]

இந்து பாரம்பரியம்[தொகு]

இந்திரன் மற்றும் இந்திராணி ஐந்து தலை தெய்வீக யானை ஐராவதத்தின் மீது சவாரி செய்கிறார்கள் (ஓவியம் 1670-80)

ஐராவதத்தின் தோற்றம் அல்லது பிறப்பு வெவ்வேறு இந்து நூல்களின்படி மாறுபடுகின்றது. ராமாயணத்தில், ஐராவதம் ஐராவதிக்கு (காசியப முனிவரின் வழித்தோன்றல்) பிறந்தது. அதேசமயம், விஷ்ணு புராணம் ஐராவதம் பாற்கடலைக் கடைந்த போது பிறந்ததாகக் குறிப்பிடுகிறது.[2][3] மாதங்கலிலாவின் கூற்றுப்படி, கருடன் குஞ்சு பொரித்த முட்டை ஓட்டின் மீது பிரம்மா புனிதமான பாடல்களைப் பாடியபோது ஐராவதம் பிறந்தது, அதைத் தொடர்ந்து மேலும் ஏழு ஆண் மற்றும் எட்டு பெண் யானைகள் பிறந்தன என குறிப்பிடுகின்றது. பிருது ஐராவதத்தை அனைத்து யானைகளுக்கும் அரசனாக்கினான். இந்த யானைகள் மேகங்களை உருவாக்கும் திறன் கொண்டவை என்று புராணங்கள் கூறுவதால், அதன் பெயர்களில் ஒன்று "மேகங்களைப் பிணைப்பவர்" என்று பொருள்படும். இந்திரனின் புராணங்களில் நீர் மற்றும் மழையுடன் யானைகளின் தொடர்பு வலியுறுத்தப்படுகிறது மற்றும் இந்திரன்விருத்திரனை தோற்கடிக்கும் போது ஐராவதத்தில் சவாரி செய்ததாக குறிப்பிடுகின்றது.

திசைளில் ஒன்றை ஐராவதம் பாதுகாக்கிறது என்று நம்பப்படுகிறது.[4] இந்திரனின் அரண்மனையான சொர்கத்தின் நுழைவாயிலிலும் ஐராவதம் காவலாக நிற்கிறது. கூடுதலாக, திசைகளுக்கு தலைமை தாங்கும் எட்டு காவல் தெய்வங்கள் ஒவ்வொன்றும் யானை மீது அமர்ந்துள்ளன. அவற்றுள் முதன்மையானது இந்திரனின் ஐராவதம். பகவத் கீதையில் ஐராவதத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஐராவதம் பாற்கடலைக் கலக்கக் காரணமாகவும் அறியப்படுகிறது. ஒருமுறை துர்வாச முனிவர் இந்திரனுக்கு ஒரு மாலையைக் காணிக்கையாகக் கொடுத்தார், அவர் அதை ஐராவதத்திற்குக் கொடுத்தார். ஐராவதம் பின்னர் அந்த மாலையை தரையில் வீசியது. இது துர்வாசரை கோபப்படுத்தியது மற்றும் தேவர்களை முதுமை மற்றும் மரணத்திற்கு ஆளாக்கும் சாபத்தை பெற்று தந்தது. சாபத்தைத் திரும்பப் பெற, தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அழியாமையின் அமிர்தத்தைப் பெற வேண்டியிருந்தது.[5][2]

தஞ்சைக்கு அருகில் உள்ள தாராசுரத்தில் ஐராவதம் லிங்கத்தை வழிபட்டதாக நம்பப்படும் கோவில் உள்ளது. இவரின் நினைவாக ஐராவதேஸ்வரர் என்று லிங்கம் பெயர் பெற்றது. அரிய சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயில் இரண்டாம் ராஜராஜ சோழனால் (1146-73 CE) கட்டப்பட்டது.[6]

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வாட் அருணின் ("டான் கோவில்") மையக் கோபுரத்தில் இந்திரன் தனது மூன்று தலை யானையான எரவான் (ஐராவதம்) உடன்.

சமண பாரம்பரியம்[தொகு]

சமண பாரம்பரியத்தில், ஒரு தீர்த்தங்கரர் பிறந்தவுடன், இந்திரன் தனது மனைவியான ஷாசியுடன், அந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக அவர்களின் பெரிய யானையான ஐராவதத்தின் மீது ஏறி இறங்குகிறார் என நம்பப்படுகின்றது.[7]

பௌத்தம்[தொகு]

எரவான் என்பது ஐராவதத்தின் தாய் மொழி பெயர்களில் ஒன்றாகும். இது மூன்று அல்லது சில சமயங்களில் முப்பத்து மூன்று தலைகள் கொண்ட பெரிய யானையாக சித்தரிக்கப்படுகிறது, அவை பெரும்பாலும் இரண்டுக்கும் மேற்பட்ட தந்தங்களுடன் காட்டப்படுகின்றன. சில சிலைகள் தவதிம்ச சொர்க்கத்தின் அரசனான இந்திரன் எரவான் மீது சவாரி செய்வதைக் காட்டுகின்றன. புதிய ரத்தனகோசின் இராச்சியத்தின் தலைநகராக பாங்காக் நிறுவப்பட்ட காலத்தில் இதன் சின்னமாக ஐராவதம் மாறியது. இது சில சமயங்களில் லான் சாங்கின் பழைய லாவோ இராச்சியம் மற்றும் லாவோஸ் இராச்சியத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றது, அங்கு இது பொதுவாக "மூன்று தலை யானை" என்று அறியப்பட்டது மற்றும் அரச கொடியில் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ganguli, Kishori Mohan. Pratap Chandra Babu (ed.). Mahabharata.
  2. 2.0 2.1 Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  3. Williams, George M. (2008-03-27). Handbook of Hindu Mythology (in ஆங்கிலம்). OUP USA. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533261-2.
  4. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 64.
  5. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M (in ஆங்கிலம்). Rosen. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.
  6. Ali Javid; ʻAlī Jāvīd; Tabassum Javeed (2008). World Heritage Monuments and Related Edifices in India. Algora Publishing. p. 57.
  7. Goswamy, B. N. (2014). The Spirit of Indian Painting: Close Encounters with 100 Great Works 1100–1900. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08657-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதம்&oldid=3901496" இலிருந்து மீள்விக்கப்பட்டது