மைத்திரேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைத்ரேய புத்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைத்திரேய போதிசத்துவர் - காந்தார சிற்பம்
பெயர்கள்
சமஸ்கிருதம்: मैत्रेय
(மைத்ரேய)
பாளி: மேத்தேய
சீனம் பெயர்: 彌勒菩薩
(மீலே பூஸா)
ஜப். பெயர்: 弥勒菩薩
(மொரோகு பொசாட்ஸு)
திபெ. பெயர்: பிராம்ஸ் பா
கொரிய. பெயர்: 미륵보살
(மிருக் பொசால்)
தாய் பெயர்: ศรีอรายะ เมตไตรย์
(ஸ்ரீஆரய மேத்த்ராய்)
Mongolian பெயர்: Майдар
(மைதார்)

மைத்திரேயர் என்பவர் உலகத்தில் அவதரிக்க போகின்ற வருங்கால புத்தர் ஆவார். இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையாத காரணத்தினால் மைத்திரேயர் போதிசத்துவர் என அழைக்கப்படுகிறார்.

சாக்கியமுனி புத்தருக்கு அடுத்து, இவ்வுலகில் மைத்திரேயர் அவதரித்து பூரண போதி நிலையை அடைந்து உண்மையான தர்மத்தை உபதேசிப்பாரென பௌத்தர்கள் நம்புகின்றனர். தேரவாத, மகாயான, வஜ்ரயான போன்ற அனைத்து பௌத்த மத பிரிவுகளும் மைத்திரேயரின் அவதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளன.

சித்தரிப்பு[தொகு]

மைத்ரேயவியாகரணா என்ற சமஸ்கிருத நூலில், மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

மைத்திரேயரின் அம்சமாக சித்தரிக்கப்படும் புடாய்(சிரிக்கும் புத்தர்)

மைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும்பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசகுடும்பத்தினரை போல் சித்தரிக்கப்படுகிறார்.

துஷித உலகம்[தொகு]

மைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும் தியானத்தின் மூலம் அவரை தொடர்புகொள்ள இயலும் என கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார்.

பொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாக அவதரிப்பதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடைய அவதார காலத்திற்காக காத்திருப்பர்.

மைத்திரேயரின் அவதாரம்[தொகு]

மைத்திரேயர் - மதுராநகர சிற்பம்

மைத்திரெயரின் அவதாரம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தபின் நிகழும் என கருதப்படுகிறது. மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன்பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ்வுலகில் அவதரித்த ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ளலாம்.

  • பெருங்கடல்கள் அனைத்தும் மைத்திரேயர் கடக்கும் அளவுக்கு சுருங்கிப்போகும்
  • புத்தரின் பிச்சைப் பாத்திரம் துஷித உலகத்துக்கு செல்லும்
  • மனிதர்களின் ஆயுள் ஐந்து ஆண்டுகளாக குறைந்துவிடும்
  • கௌதம புத்தரின் மீதம் உள்ள அனைத்து உடற்பாகங்களும், போதிகயை சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு விடும்

மைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை உபதேசித்து, அனைத்து உயிர்களும் நற்கதி அடைய வழிவகுப்பார்.

தோற்றம்[தொகு]

மைத்திரேயர் - அமர்ந்த நிலையில்

மைத்திரேயர் என்ற சொல் மைத்ரீ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. மைத்ரீ என்றால் அன்பு என்று பொருள் (மித்திரன் என்ற சொல்லை கவனிக்க).

மைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன்முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூததிரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார்.

மைத்திரேயரின் தோற்றம் இந்து மதத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதை கவனிக்கலாம். எனவே சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என கருதுகின்றனர்.

மைத்திரேயராக நம்பப்படுபவர்கள்[தொகு]

சிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார்.

சரித்திரத்தில் மேலும் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக்கொண்டன, ஆனால் எவரையும் மக்களோ பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

General
Specific

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்திரேயர்&oldid=2051066" இருந்து மீள்விக்கப்பட்டது