மேகலாவின் பாண்டுவம்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map
மேகலா பாண்டுவம்சிகளின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்[1]

மேகலாவின் பாண்டுவம்சிகள் (Panduvamshis of Mekala) ) அல்லது பாண்டவர்கள் 6 -7 ஆம் நூற்றாண்டுகளில், இன்றைய இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மேகலா பகுதியை ஆண்ட இந்திய வம்சத்தினர் ஆவர். இது மைக்கால் மலையைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கியது. சைவர்களான இவர்கள், பழம்பெரும் பாண்டவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர். இவர்கள் குப்தர்களின் நிலப்பிரபுக்களாகவும், தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இதை உறுதியாகக் கூற முடியாது.

காலம்[தொகு]

வம்சத்தின் கல்வெட்டுகள் நாட்காட்டி சகாப்தத்திற்கு பதிலாக மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளில் தேதியிடப்பட்டுள்ளன. எனவே, பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் பிற சான்றுகளின் அடிப்படையில் வம்சத்தின் ஆட்சிக் காலத்தை நிர்ணயம் செய்துள்ளனர். [2]

பாண்டுவம்சிகளின் பம்ஹானி கல்வெட்டில் உள்ள ஒரு சரணம் "நரேந்திரா" என்ற வார்த்தையைக் கொண்டுள்ளது. இது சில அறிஞர்களால் வாகாடக மன்னர் நரேந்திரசேனனைப் பற்றிய மறைக்கப்பட்ட குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.[3] இந்தக் கல்வெட்டின் அடிப்படையில், பாண்டுவம்சி மன்னர் பரதபாலனின் தலைவராக நரேந்திரசேனன் இருந்தார் என்று கல்வெட்டு நிபுணர் பகதூர் சந்த் சாப்ரா கருதினார். நரேந்திரசேனனின் மகன் இரண்டாம் பிருத்விசேனனின் கல்வெட்டுகள், அவனது தந்தையின் கட்டளைகளை தெற்கு கோசலம், மேகலா மற்றும் மாளவப் பிரபுக்கள் கடைப்பிடித்ததாகக் கூறுவதால் இந்தக் கோட்பாடு உறுதிப்படுத்தப்படுகிறது.[4] சாப்ராவின் கூற்றுப்படி, கல்வெட்டு நரேந்திரசேனனின் மேலாதிக்கத்தை "சமமான சொற்களில்" குறிப்பிடவில்லை, ஏனென்றால் நரேந்திரசேனனின் மேலாதிக்கத்தை பரதபாலனின் ஒப்புதலானது பெயரளவுக்கு இருந்தது. மேலும் மேகலா நடைமுறையில் ஒரு தன்னாட்சி மாநிலமாக இருந்தது. [5] நரேந்திரசேனனின் தேதியின் அடிப்படையில், சாப்ரா முதல் பாண்டுவம்சி மன்னன் ஜெயபாலன் அறியனை ஏறியதை பொ.ச. 400 என வரையறுத்தார். இந்த கோட்பாட்டின் படி, பாண்டுவம்சிகள் 5 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.[4] வரலாற்றாசிரியர் அஜய் மித்ரா சாஸ்திரி சாப்ராவின் கோட்பாட்டை மறுக்கிறார். வம்சத்தின் கல்வெட்டுகளில் உள்ள " நரேந்திரா " (அதாவது "ராஜா") என்ற சொல் பாண்டுவம்சி மன்னர் சுரபாலன் என்ற உதிர்னவைரனவைக் குறிக்கிறது. வாகாடக மன்னர் நரேந்திரசேனன் அல்ல என்கிறார். [6] பம்ஹானி கல்வெட்டு உதிர்னவைரவனால் வெளியிடப்பட்டது என்று சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார். பரதபாலனால் அல்ல; நிலப்பிரபுத்துவத் தலைவர்கள் உதிர்னவைரவனின் காலில் விழுந்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது உதிர்னவைரன் தன்னை ஒரு முக்கிய ஆட்சியாளராகக் கருதியதைக் குறிக்கிறது. [7]

பம்ஹானி கல்வெட்டின் படி, பரதபாலனின் இராணி லோகபிரகாஷா கோசலாவின் அமரராஜா குலத்திலிருந்து வந்தவர். முந்தைய அறிஞர்கள் இந்த குடும்பத்தை கோசலத்தின் பாண்டுவம்சிகள், சரபபுரியர்கள் , சூரர்கள் என்று பலவிதமாக அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தட்சிண கோசல பகுதியை ஆண்டனர். இருப்பினும், வியாக்ரராஜா என்ற ஆட்சியாளரின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த அடையாளங்கள் இனி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்படவில்லை. வியாக்ரராஜாவின் மல்கர் கல்வெட்டு அவரை 'அமரர்ய' குலத்தின் உறுப்பினராக விவரிக்கிறது. இது 'அமரராஜ' குலத்தைப் போலவே தெரிகிறது. [8]

கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், மேகலாவின் பாண்டுவம்சிகளின் கல்வெட்டுகள் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை விட முந்தையவை என்று கூற முடியாது. [9] சாஸ்திரி ஜெயபாலனை சுமார் பொ.ச. 500-525 என வரையறுக்கிறார். ஜெயபாலனும் அவரது மகன் வத்சராஜனும் குப்தர்களின் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டதாகவும், குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வத்சராஜனின் மகன் நாகபாலன் இறையாண்மையை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கருதுகிறார். [9]

பிரதேசம்[தொகு]

பாண்டுவம்சிகள் வரலாற்று மேகலா பகுதியை ஆட்சி செய்தனர். இது மைக்கால் மலையைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கியது. அதன் பெயர் 'மேகலா' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. [10] முக்கிய பாண்டுவம்சி பிரதேசமானது இன்றைய மண்டலா, ஷட்டோல் , பிலாஸ்பூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. [11]

வம்சத்தின் தலைநகரின் இருப்பிடம் உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அதன் கல்வெட்தலைநகரைப் குறிப்பிடவில்லை. இது இன்றைய பந்தாவ்கரில் அமைந்துள்ளது என வரலாற்றாசிரியர் வி.வி.மிராஷி கருதுகிறார். [2] மிராஷி பாண்டுவம்சிகளை முந்தைய வம்சத்துடன் இணைத்தார். அதன் கல்வெட்டுகள் பந்தாவ்கரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் 'மகாசேனாபதி' (இராணுவத் தளபதி) பத்ரபாலனையும் அவரது மகன் வைஷ்ரவணனையும் குறிப்பிடுகின்றன. இவர்களை மிராஷி ஜெயபாலனின் மூதாதையர்கள் என்று ஊகித்தார். [12] இருப்பினும், மிராஷியின் கோட்பாடு "பத்ரபாலன்" என்ற பெயரை "பத்ரபாலா" என்று தவறாகப் படிப்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், ஒரு தனித்துவமான வம்சத்தை உருவாக்கிய மாகா மன்னர்களுடன் பந்தாவ்கர் தலைவர்களை இணைக்க வலுவான சான்றுகள் உள்ளன. எனவே, மிராஷியின் அனுமானம் ஏற்கத்தக்கது அல்ல. [13] வரலாற்றாசிரியர் கே.டி. வாஜ்பாய், இன்றைய மல்கரில் தலைநகரம் அமைந்திருந்ததாக நம்பினார். வாஜ்பாயின் கூற்றுப்படி, பண்டைய காலத்தில் இது சரபபுரம் என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், இந்த கோட்பாட்டை ஆதரிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. [2]

அரசியல் வரலாறு[தொகு]

மேகலாவின் ஆரம்பகால ஆட்சியாளர்கள் குப்தர்கள் அல்லது வாகாடகர்களின் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம்.[14] ஏழு மன்னர்கள் எழுபது ஆண்டுகள் மேகலாவை ஆண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இது மேகலாவின் பாண்டுவம்சிகளைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம்.[6]

வம்சத்தின் கல்வெட்டுகள் அதன் நிறுவனர் ஜெயபாலன் பாண்டவர்களின் பரம்பரையில் பிறந்தார் என்று கூறுகிறது. மேலும் குடும்பத்தை சோமாஸ்ய வம்சம் என்றும் விவரிக்கிறது. தெற்கு கோசலையின் பாண்டுவம்சிகளைப் போலவே, மேகலாவின் பாண்டுவம்சிகளும் "பாண்டவர்" மற்றும் "சோம-வம்சம்" ( சந்திர வம்சம் ) என அறியப்பட்டனர். [15] ஜெயபாலன் "ராஜா" 'சிதிபதி -திலக' ("ஆளும் தலைவர்களில் முதன்மையானவர்") ஆகிய பட்டங்களை பெற்றிருந்தார். [6]

ஜெயபாலனின் மகனும் வாரிசானவருமான வத்சராஜா 'க்ஷிதிஷா' மற்றும் நிர்பதி ("ராஜா") என்ற பட்டங்களை பெற்றிருந்தார்.[16] பம்ஹானி கல்வெட்டு இவரை 'வத்சேசுவரர்' (வத்ச நாட்டின் இறைவன்) என்று விவரிக்கிறது. இது பாண்டவர்களின் வழித்தோன்றல் என்று கூறப்படும் புகழ்பெற்ற வத்ச நாட்டு மன்னன் உதயணனுடன் ஒப்பிடுவதாகத் தெரிகிறது. கல்வெட்டில் வத்சராஜனின் இராணுவ வெற்றிகள் பற்றிய தெளிவற்ற குறிப்புகள் உள்ளன. [17] எடுத்துக்காட்டாக, அவர் "தனது சொந்தக் கைகளின் வீரத்தால் எதிரிகளைத் தாக்கினார். மேலும் அவரது எதிரிகளின் வீடுகளுடன் இணைந்த தோட்டங்களை காட்டு மிருகங்கள் நிறைந்ததாக ஆக்கினார்" என்று கூறுகிறது. [16]

அடுத்த ஆட்சியாளரான நாகபாலன் வத்சராஜா மற்றும் துரோண-பட்டாரிகாவின் மகனாவார். [17] பாண்டுவம்சி கல்வெட்டுகளின்படி, இவர் 'மகாராஜா' என்ற பட்டத்தை வைத்திருந்தார். இது இவரது முன்னோடிகளை விடஇவர் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதைக் குறிக்கிறது: முந்தைய மன்னர்கள் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம். மேலும் நாகபாலன் ஒரு இறையாண்மை நிலையை அடைந்தார். [18] பம்ஹானி கல்வெட்டு இவரை பிராமணர்கள், குருக்கள், பல்வேறு கடவுள்கள் மற்றும் உயர்ந்த தெய்வீகத்திற்கு அர்ப்பணித்த ஒரு சைவர் என்று விவரிக்கிறது. இவரது குதிரைகள் மற்றும் யானைகளின் நகர்வுகளை விவரிக்கும் இவரது இராணுவ வெற்றிகள் பற்றிய தெளிவற்ற குறிப்புகளும் இதில் உள்ளன. [17]

இந்திர-பட்டாரிகாவைச் சேர்ந்த நாகபாலனின் மகனான பரதபாலன், 'மகாராஜா' என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார். [18] இவர் இந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். மேலும் வம்சத்தின் கல்வெட்டுகள் இவரை எதிரிகளை அழிக்கும் கடவுளான இந்திரனுடனும், பிரகாசத்தில் அக்னியுடனும் ஒப்பிடுகின்றன. இந்திர-பட்டாரிகாவில் இருந்து இவரது பிறப்பு, பார்வதியிலிருந்து சிவனின் மகன் கார்த்திகேயனின் பிறப்புடன் ஒப்பிடப்படுகிறது. மல்கர் கல்வெட்டு இவரை புராண பரதனுடன் ஒப்பீடு செய்கிறது. இந்த விளக்கங்கள் இவர் தனது எதிரிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்றதாகக் கூறுகின்றன.[18] இவரது தந்தையைப் போலவே, பம்ஹானி கல்வெட்டு இவரை பிராமணர்கள் போன்றவற்றுக்கு அர்ப்பணித்த ஒரு சைவர் என்று விவரிக்கிறது. மேலும் இவரது இராணுவ வெற்றிகளும் தெளிவற்ற முறையில் குறிப்பிடுகிறது. சடங்கு பலிகளின் போது இவர் தங்கத்தைப் பரிசாகப் பெற்றதாக கல்வெட்டு கூறுகிறது.[17] கல்வெட்டு இவரது இராணியை லோகபிரகாஷா என்று பெயரிடுகிறது (இருப்பினும், ஒரு விளக்கத்தின்படி, இது ஒரு பெயர் அல்ல, ஆனால் ஒரு விளக்கமான சொல், "உலகப் புகழ்பெற்ற" என்று பொருள்படும். [19] ) இது இராணியை 'அமராஜா-குலஜா' என்று விவரிக்கிறது. "தெய்வீக குடும்பத்தில் பிறந்தவர்" அல்லது "அமராஜா குடும்பத்தில் பிறந்தவர்" என்று பலவிதமாக விளக்கப்படுகிறது. இச்சூழலில் தெற்கு கோசலை என அடையாளம் காணக்கூடிய கோசலையில் இராணி பிறந்தாள்.[17] இது இராணியை புனித நதியான ஜஹான்வியுடன் (அதாவது கங்கை ) ஒப்பிடுகிறது. மேலும் இவர் மதக் கடமைகளைச் செய்ததன் மூலமும், தனது மகன்கள் மற்றும் பேரன்கள் காரணமாகவும் உலகப் புகழ் பெற்றதாகக் கூறுகிறது.[20]

பரதபாலனுக்குப் பிறகு இராணி மகாதேவியின் மகனான உதிர்னவைரன் சூபலனின் மல்கர் கல்வெட்டு, தனது முன்னோடிகளைப் போலவே பிராமணர்களுக்கு அர்ப்பணித்த ஒரு சைவன் என்று விவரிக்கிறது. [21] இவரது கல்வெட்டுகள் இவர் "தனது எதிரிகளை வேரோடு பிடுங்கினார்" என்று கூறுகின்றன. மேலும் இவரால் அடிபணிந்த பல நிலப்பிரபுத்துவ தலைவர்கள் இவரது "தாமரை போன்ற பாதங்களை" ஆர்வத்துடன் தேய்த்தனர் என்கிறது. [6]

வீழ்ச்சி[தொகு]

நிலப்பிரபுத்துவ ஆட்சியாளரான 'இந்திரராஜா' என்பவரின் கல்வெட்டு சத்தீசுகரில் உள்ள மல்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு இந்திரராஜனின் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், உள்ளடக்கம், எழுத்து, மொழி, நடை போன்றவற்றின் அடிப்படையில், உதிர்னவைரன் வழங்கிய பம்ஹானி மற்றும் மல்கர் கல்வெட்டுகளைப் போலவே உள்ளது.[22] இது துரோணகாவால் பொறிக்கப்பட்டது. மேலும் உதிர்னவைரனின் கல்வெட்டுகள் மிகிரகனால் பொறிக்கப்பட்டது; துரோணகர், மிகிரகன் ஆகிய இருவரும் பொற்கொல்லரான ஈசுவரனின் மகன்கள். இந்தச் சான்றுகள் இந்திரராஜா உதிர்னவைரருடன் தொடர்புடையவர் என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும் இந்த உறவின் தன்மை உறுதியாக இல்லை. இந்திரராஜாவின் தலைப்பு ( சமந்தா ) அவர் பாண்டுவம்சிகளுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் கல்வெட்டில் உள்ள மேலாதிக்கத்தின் பெயர் விடுபட்டது அவர் ஓரளவு சுதந்திரமாக இருந்ததைக் குறிக்கிறது. உதிர்னவைரனுடைய ஆட்சியின் முடிவில் பாண்டுவம்சி அதிகாரம் குறைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் செழித்தோங்கினார். ஆனால் இவர் பாண்டுவம்சியின் ஆட்சியை முற்றிலுமாக ஆட்சி செய்யும் அளவுக்கு வலிமை பெறவில்லை என்று வரலாற்றாசிரியர் அஜய் மித்ரா சாஸ்திரி ஊகிக்கிறார். [23]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]