மல்கர், சத்தீசுகர்

ஆள்கூறுகள்: 21°53′38″N 82°17′6″E / 21.89389°N 82.28500°E / 21.89389; 82.28500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலாஸ்பூர் மாவட்டத்தின் மல்கரில் பொ.ச. 6-7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பீமன் கீசகன் கோயில்.

மல்கர் (Malhar) என்பது இந்தியாவின் சத்தீசுகரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். ஒரு காலத்தில் ஒரு பெரிய நகரமாக இருந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளம், 1-ஆம் நூற்றாண்டில் தலைநகரமாக செயல்பட்டது. இது கல்வெட்டுகளிலும் இந்திய இலக்கியங்களிலும் மள்ளர், மல்லாரி , சரப்பூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமகாலத்தில், இது ஒரு பழங்கால கோட்டையின் மேடுகள், இடிபாடுகள், இரண்டு மீட்டெடுக்கப்பட்ட சிவன் கோயில்கள், இந்து, சைனம், பௌத்த கோயில்களின் இடிபாடுகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் போன்ற கிராமமாக உள்ளது. இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பிலாஸ்பூரிலிருந்து தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமப்புற நிலப்பரப்பில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை 49 இலிருந்து முக்கியச் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பழங்கால விஷ்ணு[தொகு]

சங்கு, சக்கரம், கதம் ஆகியவற்றை வைத்திருக்கும் நான்கு கைகள் கொண்ட சுமார் பொ.ச. 200 வைச் சேர்ந்த விஷ்ணுவின் மிகப் பழமையான சிற்பம் மல்கரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1]

புராணக்கதைகள்[தொகு]

மல்கரில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடலேசுவரர் கோயில்

இராமாயணம்[தொகு]

பண்டைய இந்திய இலக்கியங்களிலும், இதிகாசமான இராமாயணம்', மகாபாரதம் போன்ற புராணங்களில் வட இந்தியாவின் பண்டைய கோசலை இராச்சியம் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. சூரிய குல மன்னர்கள் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு கோசலத்தை ஆண்டனர். அந்த குலத்தின் அரசரான இராமனின் குணாதிசயங்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இராமாயணம் எழுதப்பட்டது. இராமனுக்குப் பிறகு, அவனது இரண்டு மகன்களான இலவன் , குசன் ஆகிய இருவருக்கும் இராச்சியம் பிரிக்கப்பட்டது என்று இந்த புராணம் குறிப்பிடுகிறது. தெற்கு கோசலம் குசனுக்கும், வடக்கு கோசாலம் இலவனுக்கும் சென்றது. குச்ன் தனது புதிய தலைநகரான குஷஸ்தலிபுரத்தை வடக்கு மற்றும் தென்னிந்தியாவைப் பிரிக்கும் விந்திய மலைத்தொடருக்கு அருகே குஷவ்ரதே நதியில் நிறுவினார். சத்தீசுகர் மாநிலத்தின் இன்றைய பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள மல்கர் அருகே குஷஸ்தலிபுரம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மகபாரதம்[தொகு]

தனது இராணுவப் போர்களின் ஒரு பகுதியாக, சிந்து-கங்கை சமவெளிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் உள்ள இராச்சியங்களை சகாதேவன் குறிவைத்தார். தோற்கடிக்க முடியாத பீஷ்மகாவை தோற்கடித்த சகாதேவன், கோசல நாட்டு அரசனை போரில் தோற்கடித்தான். வெண்வா நதிக்கரையில் இருந்த பிரதேசங்களின் ஆட்சியாளரையும், கண்டாரகர்களையும் கிழக்கு கோசல மன்னர்களையும் தோற்கடித்தான் எனப் புராணங்கள் கூறுகிறது. [2] 

தொல்லியல் தளங்கள்[தொகு]

மல்கரில், பாடலேசுவர் கோவில், தேவ்ரி கோவில் & திண்டேசுவரி கோவில் போன்ற பல பழமையான கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழங்கால வைப்புகளும் சைன நினைவுச் சின்னங்களும் இங்கு காணப்பட்டன. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு சிலை குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் எச்சங்கள் தோராயமாக கிமு 1000 முதல் இரத்தினபுரியின் காலச்சூரிகளின் ஆட்சி வரையிலான காலப்பகுதியாகும். 10 -11 ஆம் நூற்றாண்டு கோயில்களும் காணப்படுகின்றன. அவற்றுள் பாடலேசுவர் கேதார் கோயிலும் ஒன்று. இங்கு கோமுகி சிவலிங்கம் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. காலச்சூரி ஆட்சியின்போது கட்டப்பட்ட திண்டேசுவரி கோயிலும் குறிப்பிடத்தக்கது. தியோர் கோயிலில் கலைச் சிலைகள் உள்ளன. மல்கரில் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. பழைய சிற்பங்களின் நல்ல சேகரிப்பும் உள்ளது.

சத்தீசுகர், பிலாஸ்பூரின் மல்கரிலுள்ள கோவிலில் காணப்படும் சிற்பங்கள் 2009

மல்கரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தெற்கு கோசலத்தின் பல சாம்ராச்சியங்களின் கடந்தகால வரலாறு கண்டறியப்பட்டது: [3]

  1. காலம் 1 - வரலாற்றுக்கு முந்தைய காலம் (சுமார் கி.மு 1000 முதல் 350 வரை)
  2. காலம் 2 - மௌரியப் பேரரசு, சுங்கர், சாதவாகனர் (சுமார் கி.மு 350 முதல் பொ.ச.300 வரை)
  3. காலம் 3 - சரபபுரிய வம்சம் , சோமவம்சி வம்சம் சுமார் கி.மு 300 முதல்பொ.ச.650 )
  4. காலம் 4 - சோமவம்சி வம்சம் (சுமார் பொ.ச.650 முதல் பொ.ச.900)
  5. காலம் 5 - இரத்னபுரியின் காலச்சூரிகள் (சுமார் பொ.ச. 900 முதல் பொ.ச.1300)

இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படும் "பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எச்சங்கள்" பட்டியலில் மல்கார் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. Nanditha Krishna (2009). The Book of Vishnu. Penguin Books India. பக். 25–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-306762-7. 
  2. Mahabharata, Book 2, Chapter 30
  3. Om Prakash Misra (2003). Archaeological Excavations in Central India: Madhya Pradesh and Chhattisgarh. Mittal Publications. பக். 134–135. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கர்,_சத்தீசுகர்&oldid=3590909" இருந்து மீள்விக்கப்பட்டது