கம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கம்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கம்பர் (கி.பி. 1180-1250) கம்பராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது. 'கல்வியிற் பெரியர்' என்றும், 'கவிச்சக்ரவர்த்தி' என்றும் இவருக்கு சிறப்பு பெயர்கள் உண்டு.

பிறப்பு மற்றும் பெயர்க்காரணம்[தொகு]

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். [1] எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இங்கு கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெண்ணைநல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார்.[2] இன்று கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் குலத்தில் பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் ‘கம்பன்’ என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.[1]

கம்பராமாயணமும் கம்பரும்[தொகு]

கம்பராமயணமும் சாலிவாகன வருடம் கி.பி. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.[3]. வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; [4]. அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.

எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.

சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.

கம்பரின் சிறப்பு[தொகு]

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று. கம்பர் "கவிச்சக்கரவத்தி" என்றும் புகழப்படுகிறார்.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது. [5]

கம்பனைப் பற்றிய கட்டுக்கதைகள்[தொகு]

கம்பனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உண்டு. அவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன. அவையாவன: அவன் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் ஆகும். (பூசாரிக் குலம்) ; எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும், மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.

அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறப்படும் விவரங்கள் அவ்வளவு நம்பகத்தக்கவை அல்ல. திருவொற்றியூரில் சதுரானன பண்டிதருடைய சைவமடத்தில் வள்ளி என்ற தாசியைச் சந்தித்து அவள் மீது கம்பன் காதல் கொண்டானாம். வள்ளியின்பால் கம்பன் கொண்ட காதலையும் அவனைக் காதலிக்கும் மற்றொருத்தியிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததையும் "தமிழ் நாவலர் சரிதை"யில் சில செய்யுள்கள் தெரிவிக்கின்றன. பாண்டியன், காகதிய ருத்திரன் உட்பட்ட தன் காலத்திய அரசர்கள் எல்லோராலும் கம்பன் பாராட்டப் பெற்றான். இவனுடைய பெரும் புகழ்க்கண்டு சோழ அரசனே பொறாமையடைந்து, இவனை கொன்றுவிட சதி செய்ததாகவும், தானே இருந்து அவனைக் கொலை செய்ததாகவும் கட்டுக்கதைகள் உண்டு. இவற்றை சரிபார்க்க ஆதாரங்கள் இல்லை.

கம்பனின் காலம்[தொகு]

கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.

இராமாயணம் தவிர ஏரெழுபது, சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. சிலையெழுபது வன்னியர்களின் வில்லாற்றலை சொல்லும் விதமான ,வன்னியர் குலத்து கருணாகர தொண்டைமானை பற்றி பாடப்பெற்றது. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.

இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. எனவே அவை கம்பனின் படைப்பு அல்ல என்ற கருத்தும் உள்ளது.

இவரது நூல்கள்[தொகு]

மேலும்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p3.htm
 2. Classified catalogue of Tamil printed books By John Murdoch
 3. A Comparative Grammar of the Dravidian, Or South-Indian Family of Languages by R. Caldwell
 4. The Calcutta Review, Volume 25
 5. "வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
  சயங்கொண்டான் விருத்தமென்னும்
  ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
  அந்தாதிக் கொட்டக் கூத்தன்
  கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
  வசைபாடக் காள மேகம்
  பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
  லாலொருவர் பகரொ ணாதே." - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

"கம்பன் வீட்டு கட்டு திரியும் கவி பாடும் "

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்&oldid=2100574" இருந்து மீள்விக்கப்பட்டது