வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/1

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar உச்சரிப்பு, பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார். இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு ஓட்டங்கள் எடுத்தவரும் இவர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இருவேறு துடுப்பாட்ட வடிவங்களிலும் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரர் ஆவார்.

சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த விருதைப் பெறும் முதல் நபர் மற்றும் விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில்(Hall of Fame) இடம்பெற்றார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/2
துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (Cricket World Cup) என்பது 1975ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. தொடக்கக் காலங்களில் ஒரு அணிக்கு 60 நிறைவுகள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக்கிண்ணப் போட்டிக்கு பின்னர் இது 50 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் ஆஸ்திரேலிய அணி 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டி சமனில் முடிந்தது. எனவே ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக சிறப்பு நிறைவு (Super over) முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி கூடுதலான நான்குகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. 2023ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/3

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) (பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார்). இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.

இவர் தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 800 மட்டையாளர்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சூலை 22, 2010 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும், தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஐசிசியின் புகழவையில்(Hall of Fame) இடம்பிடித்த ஒரே இலங்கை வீரர் ஆவார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/4

இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் (Lord's Cricket Ground) (பொதுவாக இலார்ட்சு) என்பது ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனின் செயின்ட். ஜான்சு வுட் பகுதியில் அமைந்துள்ள ஓர் துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதனுடைய நிறுவனர் தாமசு இலார்டு நினைவாக பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கம் மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கு சொந்தமானது. மேலும் மிடில்செக்சு கௌன்ட்டி துடுப்பாட்ட சங்கம், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம், மற்றும் ஐரோப்பிய துடுப்பாட்ட அவையின் இருப்பிடமாக இது விளங்குகிறது. ஆகத்து 2005 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)யின் தலைமையிடமாகவும் இருந்தது.

இலார்ட்சு மைதானம் "துடுப்பாட்டத்தின் தாயகம்" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு உலகின் மிகப்பழமையான விளையாட்டு அருங்காட்சியகம் உள்ளது. இந்த மைதானம் 2014ஆம் ஆண்டு தனது 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இங்கு இதுவரை மொத்தம் 5 முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றுள்ளது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/5

ரிக்கி தாமஸ் பாண்டிங் (Ricky Thomas Ponting, டிசம்பர் 19, 1974) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் அனைத்துக் காலமும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் பொற்காலமாகக் கருதப்படும் 2004 முதல் 2011 ஆண்டு வரையிலான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் 2002 மற்றும் 2011 இல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக இவர் இருந்தார். வலது கை மட்டையாளராகவும், சிறந்த களவீரராகவும், அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார்.

2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் ஸ்டீவ் வா தலமையிலான அணியில் ஒரு வீரராகவும் இடம் பெற்றிருந்தார். மேலும் 2006 மற்றும் 2009 ஆண்டுகளின் சாதனையாளர் கிண்ணப் போட்டிகளிலும் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் தலைமையில் பங்குபெற்ற 324 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 220 போட்டிகளில் (67.91%) வென்றுள்ளது. எனவே பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவராக ரிக்கி பாண்டிங் கருதப்படுகிறார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/6

சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George Bradman ஆகஸ்டு 27, 1908பிப்ரவரி 25, 2001) தெ டான் எனவும் அழைக்கப்படும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுபவர். பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டைவீச்சு விகிதமான 99.94 என்பது, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

தனது இருபத்தி இரண்டாம் பிறந்த நாளுக்கு முன்பாக இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார் குறிப்பாக அதிக ஓட்டங்கள் எடுப்பதில். இவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் ஆத்திரேலிய விளையாட்டு உலகத்தின் இலட்சிய மனிதராகப் பார்க்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. இதனால் வெற்றிகொள்ள முடியாதவர்கள் (Invincibles) என்ற சிறப்புப் பெயர் பெற்ற அந்த அணி துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த அணியாகக் கருதப்படுகிறது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/7

வசீம் அக்ரம் (Wasim Akram) (உருது: وسیم اکرم; பிறப்பு 3 சூன், 1966) என்பவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி முன்னாள் பந்து வீச்சாளர் , துடுப்பாட்ட வர்ணனையாளார் மற்றும் தொலைக்காட்சி பிரபலர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவர் இடதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அக்டோபர், 2013 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பின் 150 ஆண்டையொட்டி வெளியிட்ட தேர்வுத் துடுப்பாட்ட உலக பதினொருவர் அணியில் இடம் பெற்ற ஒரே பாக்கித்தான் வீரர் இவர் ஆவார்.

துடுப்பாட்ட வரலாற்றின் விரைவு வீச்சாளர்களில் குறிப்பிடத் தகுந்தவராகக் கருதப்படுகிறார். பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளளார். ஊஞ்சலாடும் வகையிலான பந்து வீச்சு முறையினை அறிமுகம் செய்தவர் என்றும் அதனை சிறப்பான முறையில் வீசுபவர் எனவும் பரவலாக அறியப்படுகிறார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/8

ஆஷஸ் (Ashes) என்பது பழமையான துடுப்பாட்டத் தொடர் ஆகும். தேர்வுத் துடுப்பாட்ட வகையைச் சேர்ந்த இத்தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 1882-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாறுதல்கள் இருந்தாலும் 1998 ஆண்டில் இருந்து ஒரு தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் என்ற அளவில் விளையாடப்பட்டு வருகின்றது. இது ஐக்கிய இராச்சியம் அல்லது ஆத்திரேலியா நாடுகளில் நடைபெறும். ஒருவேளை தொடர் வெற்றி/தோல்வியின்றி சமமாக முடிந்தால் அதற்கு முந்தைய தொடரில் வெற்றி பெற்றிருந்த அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொள்ளும்.

1882-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்', இங்கிலாந்து துடுப்பாட்டம் இறந்துவிட்டது, இங்கிலாந்து துடுப்பாட்டம் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என இரங்கல் செய்தியாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த இவோ பிளை அடுத்து வரும் குளிர்காலத்தில் ஆத்திரேலியா சென்று விளையாடவுள்ள தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை வென்று சாம்பலை மீட்டுக் கொண்டுவருவோம் என்று சூளுரைத்தார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/9

பிறயன் சார்லஸ் லாறா (Brian charles Lara) (பிறப்பு: மே 2, 1969) என்பவர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் பலசமயங்களில் முதல் இடத்தில் இருந்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது. மேலும் 1994 ஆம் ஆண்டில் தர்ஹாம் அணிக்கு எதிராக 501 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருவர் ஐந்து சதம் எடுப்பது அதுவே முதல் முறை. இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.

2004 ஆம் ஆண்டில் ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து வீழாமல் இருந்தார். இந்த ஓட்டங்களே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஒரு பகுதியில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.லாறா மட்டுமே நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐந்நூறு ஆகிய ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒர் நிறைவில் அதிக ஓட்டங்கள் எடுத்தவரும் லாறா தான். 2003 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் ராபின் பீட்டர்சன் வீசிய நிறைவில் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பெய்லி இந்தச் சாதனையை சமன் செய்தார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/10

சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ் (Sir Garfield St Aubrun Sobers) (பிறப்பு: சூலை 28, 1936) என்பவர் 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் காரி எனவும் காரி சோபர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். சிறந்த மட்டையாளரும் திறமைமிக்க களத்தடுப்பாளருமான இவர் அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வரலாற்றின் மிகச்சிறந்த முழுவல்லாளராக அறியப்படுகிறார்.

இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக 93 தேர்வுத் துடுப்பாட்டங்கள் விளையாடி மொத்தம் 8032 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 235 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ளார். 5000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ள வீரர்களின் வரிசையில் சராசரி அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார். மொத்தமாக 383 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28,000 ஓட்டங்களை எடுத்தும் 1,000 மட்டையாளர்களை வீழ்த்தியும் உள்ளார். துடுப்பாட்டத்தில் இவரின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அரசி இரண்டாம் எலிசபெத் இவருக்கு வீரத்திருத்தகை பட்டத்தை அளித்தார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் பார்படோசின் பத்து தேசிய நாயகர்களுள் ஒருவராக சோபர்ஸ் போற்றப்படுகிறார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/11

விராட் கோலி (Virat Kohli, ஒலிப்பு, பிறப்பு: நவம்பர் 5, 1988) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரரும் அணித்தலைவரும் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் உலகின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அக்டோபர் 2017 முதல் தற்போது வரை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். தற்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.

இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 205 ஆட்டங்களில் 10,000 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் மிக விரைவாக ஓட்டங்கள் எடுத்த அதிவேக மட்டையாளர் என்ற உலகச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அனைத்து வித போட்டிகளிலும் அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இலக்கை துரத்தும் ஆட்டங்களில் அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார். 2019 உலக்கிண்ணப் போட்டியின் போது தனது 222வது ஆட்டத்தில் 11,000வது ஓட்டத்தை எடுத்ததன் மூலம் பன்னாட்டுப் போட்டிகளில் அதிவேக மட்டையாளர் என்ற தனது உலகச் சாதனையை தக்கவைத்துக் கொண்டார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/12
ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் (ICC T20 World Cup) என்பது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) நடத்தும் இந்தத் தொடரில் தற்போது 16 அணிகள் பங்கேற்றுள்ளன, இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் தரவரிசையில் இருக்கும் முதல் பத்து அணிகளும், இருபது20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆறு அணிகளும் அடங்கும். அனைத்து போட்டிகளும் இருபது20 வகையில் விளையாடப்படுகின்றன.

இந்நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். எனினும் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்தது. தற்போது 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020ஆம் ஆண்டு இருபது20 உலக்கிண்ணத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் வென்று உலக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/13

சகீப் அல் அசன் (Shakib Al Hasan, வங்காள மொழி: সাকিব আল হাসান, பிறப்பு: மார்ச் 24 1987) ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள்(All-rounders) தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பன்முக ஆட்டக்காரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

2015ஆம் ஆண்டு ஐசிசியின் தேர்வு, பன்னாட்டு மற்றும் இருபது20 ஆகிய மூன்று தரவரிசைகளிலும் முதலிடம் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 13 ஜனவரி 2017 அன்று, தேர்வுப் போட்டியில் வங்காளதேச மட்டையாளர்களில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் (217) பதிவு செய்தார். நவம்பர் 2018 இல், தேர்வுப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் பந்துவீச்சாளர் ஆனார். ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 199 ஆட்டங்களில் 6,000 ஓட்டங்கள் எடுத்து 200 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேக பன்முக ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் உலககிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் இவர் மட்டுமே.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/14

மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் (Melbourne Cricket Ground, MCG) என்பது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் யார்ரா பூங்காவில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விளையாட்டரங்கமும் ஆகும். மேலும் இது கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது.

பன்னாட்டுத் துடுப்பாட்ட வளர்ச்சியில் மெல்போர்ன் மைதானம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக 1877 மற்றும் 1971 ஆண்டுகளில் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியும் ஒருநாள் போட்டியும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடைபெறும் பாக்சிங் டே துடுப்பாட்டம் மெல்போர்ன் மைதானத்தின் மிகப் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/15

பாட்ரிக் ஜேம்ஸ் கமின்ஸ் (Patrick James Cummins, பிறப்பு: 8 மே 1993) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் நியூ சவுத் வேல்சு மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.

கமின்சு ஒரு வலது கை விரைவு வீச்சாளரும் கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது கை மட்டையாளரும் ஆவார். இவர் 2019 நிலவரப்படி ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பன்னாட்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/16

இயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.

இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் எடுத்ததுடன் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.

வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில் இடம்பெற்றார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/17

ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன்: (James Michael Anderson, பிறப்பு: ஜூலை 30, 1982) (பொதுவாக ஜிம்மி அண்டர்சன் என்று அறியப்படுகிறார்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முன்னணி இடம் பெற்றுள்ள அண்டர்சன், 500 தேர்வு மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடத்தையும், பன்னாட்டு அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார். தற்போது ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை மொத்தம் 575 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ள அண்டர்சன், அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய தேர்வு பந்துவீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 இல் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின்போது இவரும் ஜோ ரூட்டும் இணைந்து 198 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 10வது இழப்பில் இணைந்து அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தவர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/18

பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் மூலம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை தொடர் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தால், முன்பு கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்த தொடருக்கு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களை இணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர்கள் ஆவர். தங்கள் அணிகளின் முன்னாள் அணித் தலைவர்களான இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்று உலக சாதனை படைத்தவர்களாக இருந்துள்ளனர்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/19
ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா(Jasprit Jasbir Singh Bumrah பிறப்பு: டிசம்பர் 6, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் விரைவு வீச்சாளர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மொத்தம் 28 மட்டையாளர்களை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் புரிந்தார். இவர் நேர்க்கூர் வீச்சில்(yorker) திறமை வாய்ந்தவர்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் குசராத்து மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2015-2016 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் புவனேசுவர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பிடித்தார்.இதே தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அதே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். தற்போது ஐசிசியின் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/20

பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ் (Benjamin Andrew Stokes பொதுவாக பென் ஸ்டோக்ஸ் என்று அறியப்படுகிறார்) (பிறப்பு: சூன் 4, 1991) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரரும் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் துணைத்தலைவரும் ஆவார். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்த உள்ளூர் அணிகளின் சார்பாக துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார். பன்முக ஆட்டக்காரரான இவர் வலதுகை விரைவு வீச்சாளரும் இடதுகை மட்டையாளரும் ஆவார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் மோட்டிகளில் அதிவேக இரட்டை நூறு, அதிவேக 250 மற்றும் 6-வது மட்டையாளரின் அதிகபட்ச ஓட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/21

கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரரும் அணித்தலைவரும் ஆவார். இவர் துடுப்பாட்டத்தில் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வலதுகை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராகச் செயல்படுகிறார். நியூசிலாந்திலுள்ள வடக்கு மாவட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இங்கிலாந்திலுள்ள கிளவ்செஸ்டெர்ஷயர் மற்றும் யார்க்‌ஷயர் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

2019 உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய வில்லியம்சன், தனது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு ஐசிசி 2019 உலகக்கிண்ணத்தின் தொடர் நாயகன் விருது வழங்கியது. தற்போது இவர் ஐசிசியின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும் ஒருநாள் மட்டையாளர்கள் தரவரிசையில் 6வது இடத்திலும் உள்ளார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (ICC World Test Championship) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடத்தப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இதன் முதல் பதிப்பு 1 ஆகத்து 2019இல் தொடங்கி 14 சூன் 2021 வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களிலும் தலா ஒரு போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஐசிசி எட்டியுள்ளது .

முதலில் 2013 வாகையாளர் கோப்பைக்குப் பதிலாக இத்தொடரை நடத்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பிறகு சூன், 2017இல் மீண்டும் இந்தத் தொடரை நடத்துவதற்கான முயற்சியும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக 2017 வாகையாளர் கோப்பை நடைபெற்றது. பிறகு அக்டோபர் 2017இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைத் தொடரை நடத்த தனது உறுப்பு அணிகள் ஒப்புக்கொண்டதாக ஐசிசி அறிவித்தது. அதன்படி 9 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இதன் முதல் பதிப்பு 1 ஆகத்து 2019இல் ஆஷஸ் தொடருடன் தொடங்கியது; இரண்டாம் பதிப்பு சூலை 2021 முதல் சூன் 2023 வரை நடைபெறவுள்ளது.

வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/23

ரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma, பிறப்பு: ஏப்ரல் 30 1987, இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியின் உதவித்தலைவராக உள்ளார். மும்பை அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளரும் பகுதிநேர வலது கை புறத்திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார். இவர் தற்போது உள்ள சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இவர் ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் அதிக ஓட்டங்கள் (264) எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3 முறை இருநூறு எடுத்த ஒரே வீரர் இவர் மட்டுமே. தற்போது ஐசிசியின் ஒருநாள் மட்டையாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/24

ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்தியாவிலேயே பழமையான துடுப்பாட்ட அரங்கமான இது 1864ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக விளங்குகிறது. அத்துடன் இந்தியத் துடுப்பாட்ட அணி பங்கேற்கும் பன்னாட்டுத் தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நிகழ்விடமாக விளங்குகிறது. இவ்வரங்கில் மொத்தம் 68,000 இருக்கைகள் அமைந்துள்ளன.

துடுப்பாட்டத்தின் கொலோசியம் என்று குறிப்பிடப்படும் ஈடன் கார்டன்ஸ் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட அரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உலகக் கோப்பை, உலக இருபது20 மற்றும் ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டுத் தொடர்களின் போட்டிகளும் நடந்துள்ளன. இங்கு நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/25

குமார் சொக்சானந்த சங்கக்கார (Kumar Chokshanada Sangakkara (Sinhalese: කුමාර සංගක්කාර;பிறப்பு: 27 அக்டோபர் 1977, மாத்தளை) அல்லது சுருக்கமாக குமார் சங்கக்கார என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும், தலைவர் மற்றும் இழப்புக் கவனிப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார். இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் இழப்புக் கவனிப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் இழப்புக் காப்பாளராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளார்.

சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள், நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/26

கபில்தேவ் நிகாஞ்ச் (Kapil Dev Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/27

டிரென்ட் அலெக்சாந்தர் போல்ட் (Trent Alexander Boult, பிறப்பு: 22 சூலை 1989) நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவு-நடுத்தரப் பந்துவீச்சாளரும், வலக்கைத் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் ஆகத்து 2019 நிலவரப்படி ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசயைில் 5வது இடத்திலும் உள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் 2011ஆம் ஆண்டிலும் ஒருநாள் போட்டிகளில் 2012ஆம் ஆண்டிலும் போல்ட் அறிமுகமானார். சனவரி 2016இல் ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். சூலை 2019இல் நியூசிலாந்து அணிக்காக உலகக்கிண்ணப் போட்டிகளில் மும்முறை மட்டையாளர்களை வீழ்த்திய முதல் வீரர் ஆனார்.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/28

விஸ்டன் கோப்பை (Wisden Trophy) என்பது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடக்கும் மட்டைப்பந்துப் போட்டியில் வழங்கப்படும் ஒரு கோப்பை ஆகும். இது விசுடன் நாட்குறிப்பின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1963ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்திற்கு ஏற்ப தொடர்கள் விளையாடப்படுகின்றன. ஒரு தொடர் வெற்றி-தோல்வியின்றி முடிந்தால், விஸ்டன் கோப்பையை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தக் கோப்பை வெற்றியின் அடையாளமாக வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும். பிறகு அது மீண்டும் இலார்ட்சு மைதானத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்படும். தற்போது இந்தக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வசம் உள்ளது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/29

ஜனவரி 2005இல் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தின் காட்சி

தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும்.

தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.

அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2012ஆம் ஆண்டு தேர்வு துடுப்பாட்டத்தில் பகல்-இரவு போட்டிகள் நடத்த ஐசிசி வழிவகுத்தது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/30

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதிய ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டியின் காட்சி

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (One Day International அல்லது ODI) என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே 50 நிறைவுகளை வரையறையாகக் கொண்டு விளையாடப்படும் ஒரு துடுப்பாட்ட வகையாகும். இது வரையிட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒன்று ஒதுக்கப்படுவது உண்டு.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். 1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 நிறைவுகளுடன் ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 இழப்புகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/31

2011ஆம் ஆண்டு சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் காட்சி

இருபது20 என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். இது இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளின் போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 போட்டியில் இரண்டு அணிகள் தலா ஒரு ஆட்டப் பகுதிகயைக் கொண்டிருப்பதோடு ஒரு அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் மட்டையாட வழங்கப்படுகின்றது.

இருபது20 துடுப்பாட்டப் போட்டியின் ஒவ்வொரு ஆட்டப் பகுதியும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு 3 மணி 30 நிமிடத்தில் மொத்த ஆட்டமும் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.