2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2003 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2003 cwcc.gif
2003 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் சின்னம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) தென்னாப்பிரிக்கா
 சிம்பாப்வே
 கென்யா
வாகையாளர் ஆத்திரேலியா (3-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்14
மொத்த போட்டிகள்54
வருகைப்பதிவு6,26,845 (11,608 per match)
தொடர் நாயகன்சச்சின் டெண்டுல்கர்
அதிக ஓட்டங்கள்சச்சின் டெண்டுல்கர் (673)
அதிக வீழ்த்தல்கள்சமிந்த வாஸ் (23)
1999
2007

2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (2003 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2003) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் 2003 ஐ.சீ.சீ துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. முதல் முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றது. 2003 பெப்ரவரி 9 முதல் மார்ச் 24 வரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இப்போட்டிகள் இடம்பெற்றன. இதில் இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை, சிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுடன், தேர்வு அந்தஸ்துப் பெறாத கென்யா, நெதர்லாந்து, நமீபியா, கனடா ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 14 அணிகள் பங்கேற்றன. தேர்வு அந்தஸ்து பெறாத அணிகள் பன்னாட்டு கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 50 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள் இடம் பெற்றன. ஜோகானஸ்பேர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இந்திய அணியை வென்று மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றது. இந்தத் தொடரில் டக்வொர்த் லூயிஸ் முறையினால் தென்னாப்பிரிக்கா அணி 1 ஓட்டங்களிலிலங்கையிடம் தோற்றது.[1]

சுப்பர்-6 நிலைப் போட்டி[தொகு]

சுப்பர்-6 நிலைப் போட்டிகளின் 6 அணிகள் தெரிவாகின. அவை: இந்தியா, அவுஸ்திரேலியா, கென்யா, இலங்கை, நியுசிலாந்து, சிம்பாபே.

அரையிறுதிப் போட்டி (Semi-Final)[தொகு]

சுப்பர் 6 அணிக்கு அவுஸ்திரேலியா இலங்கை மற்றும் இந்தியா, கென்யா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறித்த 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியால் 38.1 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 123 ஓட்டங்களையே பெற முடிந்தது. டெக்வார்ட் லுயிஸ் முறையின் அடிப்படையில் அவுஸ்திரேலியா 48 ஓட்டங்களினால் இலங்கை அணியை தோல்வியடையச் செய்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா கென்யா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய கென்யா அணி 46.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் இந்தியா அணி 91 ஓட்டங்களினால் கென்யா அணியைத் தோல்வியடையச் செய்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இறுதிப் போட்டி[தொகு]

2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிஆட்டத்திற்கு அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் தெரிவாகின. இப்போட்டி தென்னாபிரிக்க ஜொஹானஸ்பேர்க்கில் மார்ச் 23 2003ல் நடைபெற்றது. 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி அவுஸ்திரேலியா அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது. இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக ஆர்.இ. கொரிட்சனும் பங்கேற்றனர். போட்டி நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரன்ஜன்மடுகல்ல பணியாற்றினார்.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்களைப் பெற்றது. கெலிகிரிஸ்ட் 57 ஓட்டங்களையும், ஹெய்ன்ஸ் 37 ஓட்டங்களையும், ரிக்கிபொன்டிங் ஆட்டமிழக்காது 140 ஓட்டங்களையும், டி.ஆர். மார்ட்டின் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியா அணியின் முதலாவது விக்கட் 105 ஓட்டங்கள் பெற்ற நிலையிலும் 2வது விக்கட் 125 ஓட்டங்கள் பெற்ற நிலையிலும் சரிந்தன. போட்டியில் உதிரிகளாக 37 ஓட்டங்கள் பெறப்பட்டன. பந்துவீச்சில் ஹர்பஜான்சிங் 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். ஏனைய பந்துவீச்சாளர்களால் எந்தவொரு விக்கட்டையும் கைப்பற்ற முடியவில்லை.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களான சேவாக் 82 ஓட்டங்களுடனும், டென்டுல்கார் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கங்குலி 24 ஓட்டங்களுடனும், மொஹம்மட் கைப் எதுவித ஓட்டங்கள் பெறாமலும், டிராவிட் 47 ஓட்டங்களுடனும், யுவராஜ்சிங் 24 ஓட்டங்களுடனும், மொங்கியா 12 ஓட்டங்களுடனும், ஹர்பஜாங்சிங், சகீர்கான், சிரினாத், அஸீஸ்நெஹ்ரா (ஆட்டமிழக்காமல்) முறையே 7, 4, 1, 8 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். உதிரிகளாக 21 ஓட்டங்கள் பெறப்பட்டன. இந்தியா அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களினால் இந்தியா அணியை வெற்றி கொண்டு 2வது தடவையாகவும் உலக துடுப்பாட்டக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இந்தியா அணியின் விக்கட்டுக்கள் சரிந்த முறை. 1-4, 2-58, 3-59, 4-147, 5-187, 6-208, 7-209, 8-223, 9-226, 10-234. . பந்துவீச்சில் மெக்ராத் 3 விக்கட்டுக்களையும், லீ 2 விக்கட்டுக்களையும், ஹோக் 1 விக்கட்டையும், பிச்சேல் 1 விக்கட்டையும், சீமன்ட்ஸ் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

போட்டியில் ஆட்டநாயகனாக ரிக்கிபொன்டிங் தெரிவானார். தொடர் ஆட்ட நாயனாக சச்சில் டென்டுல்கார் தெரிவானார்.

இலங்கை பங்கேற்ற போட்டிகள்[தொகு]

2003 துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியில் முதல் சுற்றில் 'பி' பிரிவில் இலங்கை அணி சேர்க்கப்பட்டிருந்தது.

இலங்கை அணி எதிர்கொண்ட முதலாவது போட்டி பெப்ரவரி 10 2003ல் நியுசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 272 ஓட்டங்களைப் பெற்றது. நியுசிலாந்து அணி 45.3வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 47 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

இரண்டாவது போட்டி பெப்ரவரி 14, 2003ல் பங்களாதேஸ் அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 21.1வது ஓவரில் எதுவித விக்கட்டுக்களையும் இழக்காமல் 126 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 10 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

மூன்றாவது போட்டி பெப்ரவரி 19, 2003ல் கனடா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய கனடா அணி குறிப்பிட்ட 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 4.4வது ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 37 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 9 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

நான்காவது போட்டி பெப்ரவரி 24, 2003ல் கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய கென்யா அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியால் 45வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் கென்யா 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

ஐந்தாவது போட்டி பெப்ரவரி 28, 2003ல் மேற்கிந்திய அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணியால் குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களையே பெற்றமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை 6 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

ஆறாவது போட்டி மார்ச் 3, 2003ல் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 45 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டி டக்வேர்ட் லூயிஸ் முறையின் கீழ் சமநிலையில் முடிந்தது.

முதல் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடிய இலங்கை 4 போட்டிகளில் வெற்றியீட்டியது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது. முதலாம் சுற்றில் 18 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி சுப்பர் 6 அணிக்கு தெரிவானது.

சுப்பர் 6 அணியில் 3 போட்டிகளில் இலங்கை பங்கேற்றது. முதலாவது போட்டி அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறித்த 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 47.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா 96 ஓட்டங்களினால் இலங்கையை வெற்றிகொண்டது.

இரண்டாவது போட்டி இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 23 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் இந்தியா 183 ஓட்டங்களினால் இலங்கையை வெற்றிகொண்டது.

மூன்றாவது போட்டி சிம்பாபே, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறித்த 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 256 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாபே அணி 41.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களினால் சிம்பாபே அணியை வெற்றிகொண்டது.

ஓட்ட வீத அடிப்படையில் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Wisden - South Africa v Sri Lanka, ESPNCricinfo