1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | இந்தியா பாக்கித்தான் இலங்கை |
வாகையாளர் | இலங்கை (1-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 12 |
மொத்த போட்டிகள் | 37 |
தொடர் நாயகன் | சனத் ஜயசூரிய |
அதிக ஓட்டங்கள் | சச்சின் டெண்டுல்கர் (523) |
அதிக வீழ்த்தல்கள் | அனில் கும்ப்ளே (15) |
1996 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1996 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1996) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஆறாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் வில்ஸ் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1996 பெப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, சிம்பாப்வே ஆகியவற்றுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. தேர்வு அந்தஸ்து பெறாத அணிகள் பன்னாட்டு கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 50 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆத்திரேலிய, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் இலங்கைக்கு வர மறுத்ததால் அந்தப் போட்டிகளின் புள்ளிகள் இலங்கை அணிக்கே வழங்கப்பட்டது. லாகூர் கடாபி அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி ஆத்திரேலிய அணியை 7 இலக்குகளால் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றது.
பிரிவுகள்
[தொகு]வில்ஸ் உலகக்கிண்ணத்துக்காக போட்டியிட்ட 12 நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
‘ஏ’ பிரிவு: இலங்கை, அவுஸ்திரேலியா, கென்யா, மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, சிம்பாபே. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற நாடுகளுள் 1975, 1979ம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தைச் சுவீகரித்த நாடான மேற்கு இந்தியத் தீவுகளும், 1983ல் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த இந்தியாவும் 1987ல் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்ட அவுஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டிருந்தன.
‘பி’ பிரிவு இங்கிலாந்து, நெதர்லாந்து (ஹொலன்ட்), நியுசிலாந்து, பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம். ‘பி’ பிரிவில் இடம்பெற்ற நாடுகளுள் 1992ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த நாடாக பாக்கிஸ்தான் திகழ்ந்தது.
இலங்கை அணியினர்:
[தொகு]ஆறாவது உலகக் கிண்ணத்துக்கான சர்வதேச ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை அணியினர்.
- ஆர்ஜுன ரனதுங்க (அணித் தலைவர்)
- அரவிந்த.டி.சில்வா (உப தலைவர்)
- ரொசான் மகாநாம
- சனத் ஜயசூரிய
- அசங்ககுருசிங்க
- அசான்திலக்கரத்ன
- ரொமேஸ் கலுவிதரன
- குமாரதர்மசேன
- சமிந்தவாஸ்
- பிரமோதயவிக்கிரமசிங்க
- முத்தையா முரளிதரன்
- ரவீந்திரபுஸ்பகுமார
- மாவன் அத்தபத்து
- உபுல்சந்தன
- துலிப் மென்டிஸ் (முகாமையாளர்)
- டேவிட்வட்மோர் (பயிற்சியாளர்)
கால் இறுதியாட்டம்
[தொகு]‘வில்ஸ்’ உலகக்கிண்ணப்போட்டியில் கால் இறுதியாட்டத்திற்கு ‘ஏ’ பிரிவிலிருந்து இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய அணிகளும், ‘பி’ பிரிவிலிருந்து தென்னாபிரிக்கா, பாக்கிஸ்தான், நியுசிலாந்து, இங்கிலாந்து அணியினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- முதலாவது கால் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கட்டுக்களினால் இங்கிலாந்து அணியினை தோல்வியடையச் செய்து, அரையிறுதியாட்டத்திற்கு தெரிவானது.
- இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் இந்தியா அணி 40 ஓட்டங்களினால் பாக்கிஸ்தான் அணியினை தோல்வியடையச் செய்து, அரையிறுதியாட்டத்திற்கு தெரிவானது.
- மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பத்தொன்பது ஓட்டங்களினால் தென்னாபிரிக்கா அணியினை தோல்வியடையச் செய்து, அரையிறுதியாட்டத்திற்கு தெரிவானது.
- நான்காவது கால் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி ஆறு விக்கட்டுக்களினால் நியுசிலாந்து அணியினை தோல்வியடையச் செய்து, அரையிறுதியாட்டத்திற்கு தெரிவானது.
அரையிறுதிப் போட்டி:
[தொகு]முதலாவது அரையிறுதிப்போட்டி இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் ‘ஈகில் கார்ட்ன்’ மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் எட்டு விக்கட் இழப்பிற்கு 251 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியினர் 34.1 ஓவர்களில் எட்டு விக்கட் இழப்பிற்கு 120 ஓட்டத்தினையே பெற்றனர். இப்போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் இந்தியா அணியை தோல்வியடையச் செய்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாவது அரையிறுதிப்போட்டி அவுஸ்திரேலியா, மேற்கிந்திய அணிகளுக்கிடையில் ‘முஹான்லால் பீ.ஸீ.ஏ.’ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 8 விக்கட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களையே பெற்றது. இதன் அடிப்படையில் 5 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
இறுதிப் போட்டி
[தொகு]1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி பாக்கிஸ்தான் லாகூர் நகரில் அமைந்துள்ள கடாபி ஸ்டேடியத்தில் பகல் - இரவு ஆட்டமாக இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
நாணயச் சூழற்சியில் இலங்கை அணித்தலைவர் வெற்றிபெற்றார். பகல் - இரவு ஆட்டமாகையினால் இலங்கை அணியினரே முதலில் துடுப்பெடுத்தாடுவர் என எதிர்பார்த்தனர். இருப்பினும் அவுஸ்திரேலியா அணியினை முதலில் துடுப்பாடும்படி அணித்தலைவர் அர்ஜுனா பணித்தது இரசிகர்கள் மத்தியில் ஒரு வினாவினை ஏற்படுத்தியது. காரணம் இதுவரை நடைபெற்ற 5 உலகக் கோப்பை போட்டிகளிலும் முதலில் துடுப்பாடிய அணியே வெற்றிபெற்றிருந்தது.
இறுதிப்போட்டியில் நடுவர்களாக ஸ்டீவ் பட்னர் (மேற்கிந்தியா) டேவிட் செப்பல் (இங்கிலாந்து) ஆகியோரும், 3வது நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரில் மிச்சியும் கடமை புரிந்தனர். போட்டி மத்தியஸ்தராக (இறுதித் தீர்மானத்துக்குரிய அதிகாரம் பெற்றவராக) கிளைவ் லொயிட் (மே.இந்தியா) கடமையாற்றினார்.
இறுதியாட்டத்தில் அவுஸ்திரேலியா அணியினர் குறிப்பிட்ட 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றது. மார்க்டெயிலர் 74 ஓட்டங்களையும், ரிக்கிபொன்டிங் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அரவிந்த.டி.சில்வா 42 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
இலங்கை தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. போட்டி ஆரம்பித்து 6 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக தமது ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இலங்கை இழந்தது. ஜயசூரிய 7 பந்துகளுக்கு முகங்கொடுத்து 9 ஓட்டங்களுடனும், களுவித்தரண 13 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 2வது விக்கட்டை இழக்கும்போது அணி 23 ஓட்டங்களையே பெற்றிருந்தது. இருப்பினும் அசங்க குருசிங்கää அரவிந்த டி சில்வா இருவரும் தமது துடுப்பாட்டத்தில் ஓட்ட எண்ணிக்கையினை 148 வரை அதிகரித்தனர். 31வது ஓவரில் குருசிங்க ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து அர்ஜுனா, அரவிந்த வெற்றி இலக்கை 46.2 வது ஓவரில் அடைந்தனர்.
96வில்ஸ் கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களினால் அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தது. வில்ஸ் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைப் பெற்ற அரவிந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். போட்டித்தொடரின் சிறப்பாட்டக்காரராக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Wills World Cup, 1995/96, Final". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 April 2007.
வெளி இணைப்புகள்
[தொகு]- Wills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்
- Cricket World Cup 1996 Scorecards பரணிடப்பட்டது 2012-06-12 at the வந்தவழி இயந்திரம் in CricketFundas
- Cricket World Cup 1996 from கிரிக்இன்ஃபோ