வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகீப் அல் அசன் (Shakib Al Hasan, வங்காள மொழி: সাকিব আল হাসান, பிறப்பு: மார்ச் 24 1987) ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள்(All-rounders) தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பன்முக ஆட்டக்காரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

2015ஆம் ஆண்டு ஐசிசியின் தேர்வு, பன்னாட்டு மற்றும் இருபது20 ஆகிய மூன்று தரவரிசைகளிலும் முதலிடம் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 13 ஜனவரி 2017 அன்று, தேர்வுப் போட்டியில் வங்காளதேச மட்டையாளர்களில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் (217) பதிவு செய்தார். நவம்பர் 2018 இல், தேர்வுப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் பந்துவீச்சாளர் ஆனார். ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 199 ஆட்டங்களில் 6,000 ஓட்டங்கள் எடுத்து 200 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேக பன்முக ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் உலககிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் இவர் மட்டுமே.