உள்ளடக்கத்துக்குச் செல்

சண்முகம் குகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ச. குகதாசன்
K. S. Kugathasan
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2024
முன்னையவர்இரா. சம்பந்தன்
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 அக்டோபர் 1953 (1953-10-16) (அகவை 71)
திரியாய், திருகோணமலை மாவட்டம், இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பெற்றோர்சண்முகம், தனபாக்கியம்

சண்முகம் குகதாசன் என அழைக்கப்படும் கதிரவேலு சண்முகம் குகதாசன் (பிறப்பு: 16 அக்டோபர் 1953), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் இறப்பை அடுத்து 2024 சூலை 2 இல் திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலில் இளங்கலைப் பட்டமும், அரச அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.[2] 1975 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உறுப்பினராக இணைந்து அரசியலில் இறங்கினார். 1977-ஆம் ஆண்டு முதல் காந்தீயம் அமைப்பின் திருகோணமலை மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார். அவ்வமைப்பின் மூலம் குகதாசன் 1977 இனப்படுகொலைகளினால் பாதிப்புற்ற மலையகத் தமிழ் மக்களை கொண்டுவந்து திருகோணமலை குச்சவெளி, மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் குடியமர்த்தினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட காந்தீயப் பாலர் பாடசாலைகளையும் காந்தீயம் அமைப்பின் மூலம் நடத்தி வந்தார். இவ்வமைப்பு இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குகதாசன் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[2] 1983 கறுப்பு யூலை கலவரத்தின் பின்னர் குகதாசன் தமிழ்நாடு சென்று அங்கு தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனுடன் இணைந்து, ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழகம் (OFERR) என்ற அமைப்பைத் தமிழ்நாட்டில் தொடங்கி, ஏதிலிகளாகத் இந்தியாவிற்கு வந்த இலங்கைத் தமிழருக்கு மறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.[2] இந்நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார், இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.[2]

1991-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழருக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்த வேளையில் குகதாசன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு திருகோணமலை நலன்புரிச் சங்கத்தில் இணைந்து, அதன் தலைவராகவும், செயலாளராகவும் பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார்.[2] கனடியக் குடிவரவுத் துறையின் குடியமர்வு மற்றும் இசைவாக்கத் திட்டத்தில் வேலை வாய்ப்புப் பிரிவு இணைப்பாளராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். 2010 முதல் 2017 வரை தமிழரசுக் கட்சிக் கனடாக் கிளையின் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றினார்.[2]

2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குகதாசன் தனது கனடியக் குடியுரிமையைத் துறந்து, இலங்கை திரும்பினார். மைத்திரிபால சிறிசேனவின் நல்லிணக்க அரசாங்க காலத்தில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இணைப்பாளராகவும் பணிபுரிந்தார்.[2] 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் சம்பந்தனின் இறப்பை அடுத்து குகதாசன் 2024 சூலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]

தேர்தல் வரலாறு

[தொகு]
சண்முகம் குகதாசனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல்[3] திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16,700 தெரிவு செய்யப்படவில்லை[குறிப்பு 1]
2024 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி
-
18,470 தெரிவு[4]

குறிப்புகள்

[தொகு]
  1. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் சம்பந்தனின் இறப்பை அடுத்து குகதாசன் 2024 சூலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 நாடாளுமன்ற உறுப்பினரானார் சண்முகம் குகதாசன்: வர்த்தமானி வெளியீடு, ஐபிசி தமிழ், 3 சூலை 2024
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 யார் இந்த சண்முகம் குகதாசன்..!, தமிழ்வின், 10 சூலை 2024
  3. "Parliamentary Election - 2020: Total Preferences List" (PDF). Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 38. Archived from the original (PDF) on 18 August 2024. பார்க்கப்பட்ட நாள் 21 August 2024.
  4. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகம்_குகதாசன்&oldid=4156981" இலிருந்து மீள்விக்கப்பட்டது