திருத்தஞ்சை மாமணிக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை மாமணிக் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:நீலமேகப் பெருமாள் (விஷ்ணு)
மணிகுன்றப் பெருமாள் (விஷ்ணு)
நரசிம்மர் (விஷ்ணு)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:3
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற [1] இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம்,[2] வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.[3]

அமைவிடம்[தொகு]

இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் இருக்கிறது.

இறைவன், இறைவி பற்றிய விவரங்கள்[தொகு]

  • தஞ்சை மாமணிக் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நீலமேகப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: செங்கமலவல்லி. தீர்த்தம்:கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு இக்கோயிலின் விமானம் சௌந்தாய விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.

அவற்றுள் ஒரு பாடல்:

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து
விளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

  • மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம். இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்[4]. இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.
  • தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.

சிறப்புகள்[தொகு]

நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.[3] பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற வைணவத் திருத்தலம் இதுவாகும். தஞ்சையைப் பார்த்த வண்ணம் இறைவன் சிலைகள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணியென்றும் போற்றப்படுகிறது[3].

மூன்றுகோயில்கள் ஒரே திவ்யதேசம்[தொகு]

கீழ்க்கண்ட மூன்று கோயில்களும் ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது.

  1. அருள்மிகு மேலசிங்கப்பெருமாள் திருக்கோயில்
  2. அருள்மிகு மணிகுண்ணப்பெருமாள் திருக்கோயில்
  3. அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Hindu Pilgrimage: A Journey Through the Holy Places of Hindus All Over India. Sunita Pant Bansal.
  2. South Indian shrines: illustrated P.533. P. V. Jagadisa Ayyar.
  3. 3.0 3.1 3.2 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  4. ஸ்ரீசுதர்சனன், தஞ்சை மாவட்டத்து வைணவத்தலங்கள், மகாமகம் 1992 சிறப்பு மலர்