உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடமுழுக்கு நாளில் (15.9.2014)கோயில் முகப்பு

வெள்ளைப் பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரின் மத்தியில் உள்ள விநாயகர் கோயில் ஆகும். திருவலஞ்சுழியிலும் வெள்ளை விநாயகர் கோயில் என்ற கோயில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்பெயரில் உள்ள கோயில்கள் இந்த இரண்டு கோயில்களும் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] தஞ்சாவூர் நகரின் மத்தியில் கீழவாசலில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நகரின் முக்கியமான விநாயகரில் இதுவும் ஒன்று. தஞ்சைப் பெரிய கோயில் அருகில் வடக்குத் திசையில் இக்கோயில் நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது.

வெள்ளை பிள்ளையார்

[தொகு]

இங்கு கணபதி வெள்ளைப் பிள்ளையாராக கிழக்கு நோக்கியுள்ளார். ’வல்லபை’யுடன் எழுந்தருளி இருப்பதால் வல்லபை விநாயகர் ஆவார். பேச்சு வழக்கில் வெள்ளைப்பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள்.[2] கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வளாகத்தில் சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். இக்கோயில் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும்.மன்னர் விஜயராகவநாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன.[3]

குடமுழுக்கு

[தொகு]

பாடகச்சேரி இராமலிங்கசுவாமிகளால் திருப்பணி செய்யப்பட்டு 1948ஆம் ஆண்டு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து 1982, 1999 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.[2] வெள்ளை விநாயகர் கோயிலில் 15.9.2014 திங்கள்கிழமை காலை குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.குடமுழுக்கையொட்டி இரவு வல்லபை அம்பாள் சமேத வெள்ளைப்பிள்ளையார் திருவீதியுலா நடைபெற்றது.[4]

வலம்புரிவிநாயகர் கோயில்

[தொகு]
குடமுழுக்கு நாளில் (4.4.2016) கோயில்

தஞ்சாவூர் கவாஸ்காரத்தெருவில் அழகிக்குளம் அருகில் வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. கருவறையில் வலம்புரி விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 4 ஏப்ரல் 2016 அன்று நடைபெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. 2.0 2.1 வெற்றி தரும் வல்லபை விநாயகர், தினமணி, வெள்ளிமணி, 29.8.2014
  3. குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997
  4. கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு, தினமணி, 16.9.2014
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thanjavur Vellaivinayagar Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் பார்க்க

[தொகு]

புகைப்படத்தொகுப்பு

[தொகு]