புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பத்தாவது திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில் கட்டிய கோவிலாகும்.

தல வரலாறு[தொகு]

இக்கோவிலில் வல்வில் ராமன் (சக்ரவர்த்திதிருமகன் ) - பொற்றாமறையாள் (ஹேமாம்புஜவல்லி ) ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார். இராமாயண கதையின் படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை இராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு சீதாதேவியை மீட்க வான வெளியில் கடும் சண்டை நடந்தது. தனக்கிருக்கும் இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட இராமா இராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடிய இராமன் இலட்சுமணனிடம் இராவணன் சீதையை தென்திசை நோக்கி தூக்கி செல்வதை கூறி உயிர் நீத்தார். ஜடாயு இராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தருசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று.

இடம்[தொகு]

இது குடந்தை அருகே உள்ள கோயில் ஆகும். இது கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.