திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 10°58′N 78°40′E / 10.96°N 78.67°E / 10.96; 78.67
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்
கோவிலின் நுழைவாயில்
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்
Location in Tamil Nadu
ஆள்கூறுகள்:10°58′N 78°40′E / 10.96°N 78.67°E / 10.96; 78.67
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவு:தமிழ்நாடு, இந்தியா
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழ் கட்டிடக்கலை

திருவெள்ளறை என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.[1] இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

அமைந்துள்ள இடம்[தொகு]

இக்கோயில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பேருந்து வழியில் 20 கி.மீ. தொலைவில் மண்ணச்சநல்லூருக்கு அருகில் திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு, திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயில் காண்போரைப் பிரமிக்க வைக்கும். நந்தவனங்கள், கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின்பகுதியில் பாறையைக் குடைந்து தூண்களுடன் இரு சிறு அறைகள் குகை போலக் காணப்படுகின்றன.

பெருமாள்[தொகு]

புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். சக்கரம்- ப்ரயோக சக்கரம்.

மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர ஏழு மூலவர்கள் உள்ளனர். மேலே பெருமாளின் வலது பக்கம் சூரியனும் இடது பக்கம் சந்திரனும் பெருமாளுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பெருமாளின் வலது பக்கம் கருட பகவானும் இடது பக்கம் ஆதிசேஷனும் மனித ரூபத்தில் நின்றுக்கொண்டு பெருமாளை சேவித்த படி இருக்கின்றனர். கீழே அமர்ந்தபடி பெருமாளின் வலது பக்கம் மார்க்கண்டேய மஹரிஷி மோட்சத்திற்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார் இடது பக்கம் பூமாதேவி தாயார் உலக நன்மைக்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மூலவர் பெருமாள் பெரிய உருவத்துடன் இருக்கிறார். அவருக்கு கீழே ஒரே சிம்மாசனத்தில் உற்சவர் செந்தாமரைக் கண்ணனும் பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.

உற்சவர் செந்தாமரைக் கண்ணனுக்கும் பங்கஜவல்லி தாயாருக்கும் வருடத்தில் சித்திரை-கோடை பூச்சாற்று உற்சவம் (இந்த உற்சவம் மட்டும் பங்கஜவல்லி தாயாருக்கு கிடையாது, பெருமாளுக்கு மட்டும் தான் ) , வைகாசி-வசந்தோற்சவம், ஆடி- ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசி-பவித்ர உற்சவம், ஐப்பசி- ஊஞ்சல் உற்சவம், பங்குனி- பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்கள் நடைபெறும்.

தாயார்[தொகு]

தாயார் பங்கயச்செல்வி என்கிற பங்கஜவல்லி தாயார். இந்த ஊரில் தாயாருக்கு ஆதிபத்யம். அதாவது செங்கோல் ஆட்சி தாயாருக்கு தான். புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். மாலை தாயார் சூரிய அஸ்தமனத்திற்குள் மூலஸ்தானம் சேர்ந்து விடுவார். பெருமாள் வாகன புறப்பாடு அல்லது அன்றைய தினத்திற்கான புறப்பாட்டை முடித்து விட்டு நாழி கேட்டான் வாயில் அருகில் நின்று தாயாருக்கு ஏன் நேரம் ஆனது என கூறிய பின் மூலஸ்தானம் சேருவார். தனிக்கோவில் நாச்சியார் செங்கமலவல்லி தாயார் (செண்பகவல்லி அல்ல). வருடத்தில் ஒரே ஒரு நாள் - பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று செங்கமலவல்லி தாயார்-பெருமாள்-பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி கண்டருளுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் இத்தனை நாள் பெருமாளின் வலது புறம் இருந்த பங்கஜவல்லி தாயார் அந்த இடத்தை செங்கமலவல்லி தாயாருக்கு விட்டு கொடுத்து தான் பெருமாளின் இடது புறத்தில் அமர்வார்.

செங்கமலவல்லி தாயாருக்கு வருடத்தில் சித்திரை அல்லது வைகாசி- கோடை பூச்சாற்று உற்சவம், ஆடி- ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசி-நவராத்திரி உற்சவம், ஐப்பசி- ஊஞ்சல் உற்சவம், பங்குனி- சேர்த்தி உற்சவங்கள் நடைபெறும்.

பங்கஜவல்லி தாயாருக்கு பெருமாளுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும் (கோடை பூச்சாற்று உற்சவம் தவிர) நடக்கும்.

பெயர்க்காரணம்[தொகு]

இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.[2]

தீர்த்தம்[தொகு]

திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.

விமானம்[தொகு]

விமலாக்ருதி விமானம்.

சிறப்பம்சம்[தொகு]

எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதகிரி என்றும் பெயர் வந்தது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் ஆதிபத்யம். இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’.

இக்கோவிலுக்கு பெருமாள் தரிசிக்க செல்லும் பொழுது முதலில் 18 இருக்கும். இவை 18 பகவத்கீதை அத்யாயங்களை குறிக்கிறது. இதை ஏறிய உடன் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. இவரை சேவித்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். பின் வரும் 4 படிகள் 4 வேதங்களை குறிக்கிறது. பின் வரும் 5 படிகள் பஞ்சபூதங்களை குறிக்கிறது. பின் வரும் 8 படிகள் அஷ்டாக்க்ஷர மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணா ) குறிக்கிறது. பின் வரும் 24 படிகள் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிக்கிறது. இதற்கு பின்பே பெருமாளை சேவிக்க இயலும். அதாவது இத்தனை விஷயங்களை விட உயர்ந்தவர் இந்த பெருமாள்.

மங்களாசாசனம்[தொகு]

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். மொத்தம் 24 பாசுரங்கள்.

திருவெள்ளறை அழகன் (பெரியாழ்வார் பாசுரம் 192 - காப்பிடல்)

இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார், சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய், அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்

—பெரியாழ்வார், 192வது பாசுரம், பெரியாழ்வார் திருமொழி

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் ஆக்கம் பெற்றுள்ளதை அவர்கள் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மதுராந்தக உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய  ஸ்ரீ  கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல் ,

வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவேரி நாட்டிலரமியத்துப்

பறியாத தூணிலை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றானே!

சுந்தரபாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றிய போது அங்கிருந்த எல்லா மண்டபங்களை இடித்து தள்ளினான் ஆனால் அக்காவேரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது 16 தூண்களை உடைய மண்டபத்தை ஏனென்றால் அந்த மண்டபம் சோழ மன்னன் கரிகாலனை பாடியமைக்காக பட்டினப்பாலை பாடிய உருத்திரக்கண்ணருக்கு பரிசாக அளித்தது என்று விளக்குகிறது மேற்கொண்ட கல்வெட்டு பாடல்.

கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில்  "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது,

ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

பண்டெய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Pundarikakshan Temple : Pundarikakshan Pundarikakshan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.