திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகளந்த பெருமாள் திருக்கோவில்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி மாவட்டம்
அமைவு:திருக்கோவிலூர்
கோயில் தகவல்கள்
உற்சவர்:ஆயனார், கோவலன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000-2000 வருடங்களுக்கு முன்

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

தொன்மம்[தொகு]

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.


கோயில் அமைப்பு[தொகு]

இந்தக் கோயில் கீழ்க் கோடியல் உள்ள கோபுரமானது பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.

கோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள் விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோயில்களிலே காண்பது இல்லை. இந்தப் பிராகாரத்திலேயே லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதி. இன்னும் ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன. இரண்டாவது பிராகாரம் கல்யாண மண்டபம் எல்லாம் கடந்து புஷ்ப வல்லித் தாயார் சந்திதி உள்ளது.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.


பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்[தொகு]

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகப்பெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலப்பெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

வெளி இணைப்புகள்[தொகு]