காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பவள வண்ணம் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 12°50′37″N 79°42′28″E / 12.843619°N 79.707853°E |
பெயர் | |
பெயர்: | திருப்பவள வண்ணம் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பவள வண்ணர் |
தாயார்: | பவள வள்ளி |
தீர்த்தம்: | சக்கர தீர்த்தம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்யப்பிரபந்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | உண்டு |
திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.[2]
இறைவன், இறைவி[தொகு]
இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
சிறப்புகள்[தொகு]
திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவில் பாடல் பெற்ற தலமல்ல. இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரை வழிபாடு செய்துவிட்டு பச்சை வண்ணரையும் வழிபட்டுச் செல்வதையே மரபு.[2] அச்வினி தேவதைகள் இந்தத் தலத்தில் பெருமாளை வழிபட்டதாக நம்பிக்கை.[3]
மங்களாசாசனம்[தொகு]
திருமங்கையாழ்வாரால் ஒரே ஒரு பாடலில் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய்
மதிள் கச்சியூராய், பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி
வரையினுச் சியாய் பவள வண்ணா
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே
னிங்ஙணமே யுழிதருகேனே
- திருநெடுந்தாண்டகம் 9 (2060)