உள்ளடக்கத்துக்குச் செல்

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
புவியியல் ஆள்கூற்று:10°14′49″N 78°45′07″E / 10.246930°N 78.751915°E / 10.246930; 78.751915
பெயர்
புராண பெயர்(கள்):திருமெய்யம்
பெயர்:திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:திருமயம்
மாவட்டம்:புதுக்கோட்டை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சத்தியமூர்த்தி, திருமெய்யர்
உற்சவர்:அழகியமெய்யர்
தல விருட்சம்:ஆல மரம்
தீர்த்தம்:சத்ய புஷ்கரணி
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி பௌர்ணமி தேர். பத்து நாட்கள்,ஆடிபூரம் திருவிழா பத்து நாட்கள், கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் விழாக்களும் உண்டு
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
வரலாறு
தொன்மை:1000 முதல் 2000 ஆண்டுகள்

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 106 ஆம் திருப்பதியாகும். இவ்வூர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் முத்தரையர்கள் ஆட்சிக்காலத்தில் அகழப்பட்ட குடைவரைக்கோவில் என்று கருதப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 21.3 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 25.7 கி.மீ தொலைவிலும், திருக்கோஷ்டியூரிலிருந்து 33.4 கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 66.4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 622507 ஆகும். இவ்வூரின் புவியமைவிடம் 10°14'40.55"N அட்சரேகை 78°44'46.33"E தீர்க்க ரேகை ஆகும்.

இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.[1]

ஆதிரங்கம்[தொகு]

[2] சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

மூலவர் சத்தியமூர்த்தி[தொகு]

இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.[1]

திருமெய்யம் குடைவரை[தொகு]

திருமயம் நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள சத்தியகிரி மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளுள் கீழ்புறத்தில் உள்ள குடைவரை திருமெய்யர் என்னும் சத்தியமூர்த்தி பெருமாளுக்கான கருவறையாகத் திகழ்கிறது. இப்பகுதியை ஆண்டுவந்த முத்தரையர் கோமரபைச் சேர்ந்த அரசி பெருந்தேவி இந்தக் குடைவரையை விரிவாக்கி மண்டபம் கட்டியுள்ள செய்தியினை இங்குள்ள கல்வெட்டு சான்று பகர்கிறது. முத்தரையர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், போசாளர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களின் ஆட்சிக் காலங்களில் இக்குடைவரைக் கோவில், திருச்சுற்று, மண்டபங்கள், திருக்குளம், என்று விரிவாக்கம் பெற்றுள்ளது.

பள்ளிகொண்ட பெருமாள் கருவறை[தொகு]

இக்குடைவரைக் கோவிலின் மூலவரான ’திருமெய்யர்’, ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர் ஆவார். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆகும். திருமெய்யம் குடைவரையின் பின்சுவரை ஒட்டி, 22 அடி நீளம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாள் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலையை சற்றே உயர்த்திய நிலையில், மேற்கில் தலைவைத்து, கிழக்கில் கால்நீட்டியவாறு, ஆதிசேசன் என்ற பாம்பணையில் அரிதுயில் கொள்ளும் போகசயன நிலையில் காட்சிதருகிறார். ஐந்துதலை சேசநாகம் பெருமாளின் தலைக்குமேலே படமெடுத்துக் குடையமைத்துள்ளது. பெருமாளின் நீட்டிய வலது கை பின்புறம் பாம்பணையை அனைத்தவாறும், இடது முழங்கை மடங்கிய நிலையில், விரல்கள் இடது மார்பைச் சுட்டியவாறும் காட்டப்பட்டுள்ளன. பெருமாளின் காலடியில் பூதேவி அமர்ந்து அஞ்சலி முத்திரை காட்டுகிறார். பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து எழும் தாமரைத் தண்டின் உச்சியில் மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்த நிலையில் நான்முகன் நான்கு கரங்களுடன் காட்சிதருகிறார். நான்முகனின் இருபுறமும் தட்சனும் அக்னியும் காட்டப்பட்டுள்ளனர். நான்முகனின் இருபுறமும், பெருமாளின் ஆயுத-புருசர்களாகிய, பாஞ்சஜன்யன், சுதர்சனன், சாரங்கன், நந்தகன், மற்றும் கவுமோதகி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். சேசநாகம் அமைத்துள்ள குடையின் பின்னால் வணங்கிய நிலையில் கருடன் கமனாசனத்தில் உள்ளார். இப்பகுதியிலேயே மார்க்கண்டேயனும், விசுவக்சேனனும் காட்டப்பட்டுள்ளனர். சற்றே அருகில் காட்டப்பட்டுள்ள சிற்பம் பிருகு முனிவருடையதாகும். பெருமாள் கால்நீட்டியுள்ள பகுதிக்கு மேலே சூரியனின் தலையும், சந்திரனின் தலையும், சற்று அடுத்து ரோகிணி எனக்கருதப்படும் பெண்ணின் சிற்பமும் காணப்படுகின்றன. இதனை அடுத்து நான்கு இசைக்கலைஞர்கள் (Celestial Musicianas) காட்டப்பட்டுள்ளனர்.[3] [4]

மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

தாயார் உஜ்ஜீவனத்தாயார்[தொகு]

இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம்; பல வாழ்க்கை நலன்களும் விளையும்; பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடனடியாக பலனளிக்கும் பரிகாரத் தலம் இத்தாயாரின் சந்நிதி. இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும்.[1]

பழங் காலத்தில் தினமும் இரவில் தாயாருக்கு புட்டும் பாலும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வரும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் பண வசதி இன்மையால் இது நின்றுவிட்டது.[2]

தல வரலாறு[தொகு]

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.[1]

புராண வரலாறு[தொகு]

 • திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
 • சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
 • சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.[1]

சைவ வைணவ ஒற்றுமை[தொகு]

திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.

சத்திய புஷ்கரணி[தொகு]

இது அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கருதப்படுகிறது.

இந்த சத்திய புஷ்கரணி திருமாலின் அஷ்டாச்சரம் போல எண் கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டியவர் காரைக்குடி மெ.முருகப்ப செட்டியார் மகன் இராமநாதன் செட்டியார். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1919.[5]

கல்வெட்டுகள்[தொகு]

திருமெய்யம் பெருமாள் கோவில் வளாகத்தில் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 14 கல்வெட்டுகளை புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதி பதிப்பித்துள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 22 ஆம் தொகுதி, பிரிவு இரண்டில் ஒரு கல்வெட்டும், நா.வள்ளி என்பவாரால் நான்கு கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.[6]

குடைவரையின் காலம்[தொகு]

பிற்காலக் கல்வெட்டு ஒன்று, குடைவரையின் சீரமைத்தலைப் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு திருமெய்யம் கோவிலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இக்கல்வெட்டு விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. முத்தரையர்கள், பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாக விளங்கினர். விடேல் விடுகு என்பது இவர்கள் சூடிக்கொண்ட பட்டப்பெயராகும். சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி இக்குடைவரையின் முகப்பை ஒட்டித் தூண்கள் அமைத்து சீரமைத்துள்ள செய்தி இக்கல்வெட்டில் பதிவாகி உள்ளது.[6] புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் 13 ஆம் எண்ணுடன் பதிவாகியுள்ள இக்கல்வெட்டே திருமெய்யம் கோவில் கல்வெட்டுகளுள் காலத்தால் முந்தையது ஆகும். ஆகவே இக்குடைவரைக் கோவிலின் தொன்மை இக்கல்வெட்டின் காலத்திற்கும் முந்தையது ஆகும்.[7]

திருமங்கையாழ்வார் பாடிய தலம்[தொகு]

ஆழ்வார்கள் பாடியருளிய (மங்களாசாசனம் செய்யப்பட்ட) 108 திவ்ய தேசங்களுள் திருமெய்யம் 106ஆவது திவ்யதேசம் ஆகும். ஆழ்வார்களால் பாடல்பெற்ற 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமெய்யமும் இவற்றுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.[8] திருமெய்யரைப் போற்றி திருமங்கை ஆழ்வார் பாடியருளிய ஒன்பது பாசுரங்கள் பெரியதிருமொழி (பாசுரம் எண்: 1090, 1206, 1524, 1660, 1760, 1852, 2016,) திருக்குறுந்தாண்டகம் (பாசுரம் எண்: 2050) மற்றும் சிறிய திருமடல் (பாசுரம் எண்: 2674) ஆகிய தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன. திருமங்கையாழ்வார் திருமெய்யம் பெருமாளை எட்டு இடங்களில் "மெய்யமலையான்," "திருமேய மலையாளன்" "திருமெய்ய மலையாளர்", "மெய்ய மலையாளர்", "மெய்யம் அமர்ந்த பெருமாள்", "மெய்ய மணாளர்", "மெய்யத்து இன்னமுத வெள்ளம்" என்றெல்லாம் போற்றியுள்ளார் (பார்வை: திருமங்கயாழ்வார் பாசுரங்கள்: திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126)[6].[1]

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சிற்பக்கலை சிறப்பு[தொகு]

தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.[1]

வேண்டுதல்கள்[தொகு]

குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்.[1]

பலன்கள் : தொன்நம்பிக்கைகள்[தொகு]

இத்தலம் பரிகார தலமாக பல்வேறு பிரச்சனைகளுக்குக் கூறப்படுகிறது.[2]

 • மனநிலை பாதிப்பு
 • திருமணத்தடங்கல்
 • கணவன் மனைவி ஒற்றுமையின்மை

நேர்த்திக்கடன்[தொகு]

 • உஜ்ஜீவனத்தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல். வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல்.
 • பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல்.

திருவிழா[தொகு]

 • வைகாசி பௌர்ணமி தேரோட்டம். பத்து நாட்கள் திருவிழா.
 • ஆடிபூரம் திருவிழா, பத்து நாட்கள் திருவிழா. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
 • கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்கள் சிறப்பு உடையது.[1]

மங்களாசாசனம்[தொகு]

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஒரு பாசுரம்:

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும்
காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச்
சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே.[1]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் தினமலர்
 2. 2.0 2.1 2.2 குமுதம் ஜோதிடம்;20.11.2009;
 3. மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1 இரா.கலைக்கோவன், மு.நளினி. வரலாறு.காம்
 4. மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 2 இரா.கலைக்கோவன், மு.நளினி வரலாறு.காம்
 5. அரு.சுந்தரம். நகரத்தார் அறப்பணிகள். மணிமேகலை பிரசுரம். p. 242.
 6. 6.0 6.1 6.2 மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3 இரா.கலைக்கோவன், மு.நளினி. வரலாறு.காம்
 7. Cave Temples of Pandya Country. Latha, V (2005). Art and Ritual. New Delhi. Sharada Publishing House. ISBN 8188934224
 8. திருமங்கையாழ்வார் தினமலர் பிப்ரவரி 04, 2011
 1. அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்- 622 507 புதுக்கோட்டை மாவட்டம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]