தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் விமானம்

வீரபத்திரர் கோயில், தஞ்சாவூரில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

நாயக்கர் காலக் கோயில்களுள் வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு எதிரில், அகழிக்கு வெளியே அதனையொட்டி அமைந்துள்ள இரண்டு கோயில்களில் தென் புறம் இக்கோயில் உள்ளது. [1]

வரலாறு[தொகு]

கோயில் நுழைவாயில்

முதல் நாயக்க மன்னராகிய செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கோவிந்த தீட்சிதர் முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் ஒட்டக்கூத்தரைப் போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். [1] இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2]

இறைவன்[தொகு]

கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். கும்பகோணம் வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. [1] இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர் 613 007, 1997
  2. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, அருள்மிகு வீரபத்திரசாமி திருக்கோயில், ப.230-235, வ.எண்.55