முதலாம் உலகப் போர்
முதலாம் உலகப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மேல் இடமிருந்து வலமாக: சொம்மே யுத்தத்தில் பிரித்தானிய செசயர் தரைப்படைப் பிரிவு (1916); மத்திய கிழக்கு போர் முனைக்குப் புறப்படும் உதுமானிய அரபு ஒட்டகப் படைப்பிரிவு (1916); அல்பியோன் நடவடிக்கையின் (1917) போது செருமனியின் எஸ். எம். எஸ். குரோசர் குர்புர்சுது கப்பல்; வெர்துன் யுத்தத்தின் போது செருமானிய வீரர்கள் (1916); உருசியர்களின் பிரிசேமைசில் முற்றுகைக்கு (1914–15) பிறகு; மொனாசுதிர் தாக்குதலின் போது பல்கேரியத் துருப்புக்கள் (1916). |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
நேச நாடுகள்:
| மைய சக்திகள்: | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
|
|
||||||||
பலம் | |||||||||
மொத்தம்: 4,29,28,000[1] | மொத்தம்: 2,52,48,000[1] | ||||||||
6,81,76,000 (ஒட்டு மொத்தம்) | |||||||||
இழப்புகள் | |||||||||
|
|
முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன. சண்டைகளில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2.3 கோடி இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கை, பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக 50 இலட்சம் குடிமக்கள் இறந்தனர்.[2] உதுமானியப் பேரரசுக்குள் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் 1918 இன்புளுவென்சா தொற்றுப் பரவல் ஆகியவற்றின் காரணமாகத் தசம இலட்சங்களில் மேலும் பலர் இறந்தனர். போரின் போது இராணுவ வீரர்களின் பயணம் காரணமாக நோய்த் தொற்றானது கடுமையானது.[3][4]
1914க்கு முன்னர் ஐரோப்பிய உலக வல்லமைகள் முந்நேச நாடுகள் (பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன்) மற்றும் முக்கூட்டணி நாடுகள் (செருமனி, ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலி) ஆகிய இரு பிரிவாகப் பிரிந்து இருந்தன. ஆத்திரியா-அங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டைக் காவ்ரீலோ பிரின்சிப் என்ற ஒரு போசுனிய செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து, பால்கன் குடாவில் இருந்த பதட்டங்கள் 28 சூன் 1914 அன்று போராக உருவெடுத்தன. ஆத்திரியா-அங்கேரி செர்பியாவை இதற்குக் குற்றம் சாட்டியது. இது சூலை பிரச்சினைக்கு இட்டுச் சென்றது. சண்டையைத் தவிர்ப்பதற்காக ஒரு வெற்றியடையாத முயற்சியாக நடந்த பேச்சுவார்த்தையே சூலைப் பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது. 28 சூலை 1914 அன்று ஆத்திரியா-அங்கேரி செர்பியா மீது போரை அறிவித்தது. செர்பியாவின் தற்காப்பிற்காக உருசியா வந்தது. ஆகத்து 4ஆம் தேதி வாக்கில் செருமனி, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகியவை அவற்றின் காலனிகளுடன் போருக்குள் இழுக்கப்பட்டன. நவம்பர் 1914இல் உதுமானியப் பேரரசு, செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகியவை மைய சக்திகள் என்ற அமைப்பை உருவாக்கின. 26 ஏப்ரல் 1915இல் பிரிட்டன், பிரான்சு, உருசியா மற்றும் செர்பியாவுடன் இத்தாலி இணைந்தது. இவை முதலாம் உலகப் போரின் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
1914இல் செருமானிய உத்தியானது தனது படைகளைப் பிரான்சை ஆறு வாரங்களில் தோற்கடிப்பதற்குப் பயன்படுத்தி, பிறகு அவற்றைக் கிழக்குப் போர்முனைக்கு நகர்த்தி உருசியாவையும் அதே போல் தோற்கடிப்பது ஆகும்.[5] எனினும், செப்டம்பர் 1914இல் மர்னே என்ற இடத்தில் செருமானியப் படை தோற்கடிக்கப்பட்டது. மேற்குப் போர் முனையின் பக்கவாட்டில் இரு பிரிவினரும் எதிர்கொண்டதுடன் அந்த ஆண்டு முடிவடைந்தது. மேற்குப் போர்முனை என்பது ஆங்கிலேயக் கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து வரையில் தோண்டப்பட்டிருந்த ஒரு தொடர்ச்சியான பதுங்கு குழிகள் ஆகும். 1917 வரை மேற்கிலிருந்த போர் முனைகளில் சிறிதளவே மாற்றம் நிகழ்ந்து. அதே நேரத்தில், கிழக்குப் போர் முனையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டன. ஆத்திரியா-அங்கேரி மற்றும் உருசியா ஆகிய இரண்டு நாடுகளுமே பெரும் அளவிலான நிலப்பரப்பை வென்றும் இழந்தும் வந்தன. மற்ற முக்கியமான போர் அரங்குகளானவை மத்திய கிழக்கு, இத்தாலி, ஆசியா பசிபிக் மற்றும் பால்கன் பகுதி ஆகியவை ஆகும். பால்கன் பகுதியில் பல்கேரியா, உருமேனியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் போருக்குள் இழுக்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு முழுவதும் உருசியா மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகிய இரு நாடுகளுமே பெரும் அளவிலான உயிரிழப்புகளைக் கிழக்கில் சந்தித்தன. அதே நேரத்தில், கலிப்பொலி மற்றும் மேற்குப் போர் முனையில் நேச நாடுகளின் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. 1916இல் வெர்துனில் நடைபெற்ற செருமானியத் தாக்குதல்கள் மற்றும் சொம்மேயின் மீது நடத்தப்பட்ட பிராங்கோ-பிரித்தானியத் தாக்குதல் ஆகியவை சிறிதளவே பலனைக் கொடுத்து, ஏராளமான இழப்புகளுக்கு இட்டுச் சென்றன. அதே நேரத்தில், உருசியப் புருசிலோவ் தாக்குதலானது ஆரம்பத்தில் வெற்றிகரமாக அமைந்த போதும் பிறகு நிறுத்தப்பட்டது. 1917இல் உருசியாவில் புரட்சி ஏற்படும் நிலை இருந்தது. பிரெஞ்சு நிவெல் தாக்குதலானது தோல்வியில் முடிந்தது. பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானியப் படைகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தன. இது பங்கெடுத்த அனைத்து நாடுகளுக்கும் வீரர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. கடுமையான பொருளாதார அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்தது. நேச நாடுகள் கடல் முற்றுகை நடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறைங்கள் செருமனியைக் கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் முறையைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றன. இதனால் 6 ஏப்ரல் 1917 அன்று முன்னர் நடுநிலை வகித்த ஐக்கிய அமெரிக்கா போருக்குள் இழுக்கப்பட்டது.
உருசியாவில் 1917 அக்டோபர் புரட்சியில் போல்செவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மார்ச் 1918இல் பிரெசுது-லிதோவ்சுகு ஒப்பந்தத்துடன் போரில் இருந்து வெளியேறினர். பெருமளவு எண்ணிக்கையிலான செருமானியத் துருப்புகளை விடுதலை செய்தனர். இந்த மேற்கொண்ட வீரர்களைப் பயன்படுத்திச் செருமனியானது மார்ச் 1918இல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், பிடிவாதமான நேச நாடுகளின் தற்காப்பு, கடுமையான இழப்புகள் மற்றும் இராணுவப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. நேச நாடுகள் ஆகத்து மாதத்தில் நூறு நாட்கள் தாக்குதலைத் தொடங்கிய போது ஏகாதிபத்தியச் செருமானிய இராணுவமானது தொடர்ந்து கடுமையாகச் சண்டையிட்டது. ஆனால், நேச நாடுகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்த மட்டுமே அவர்களால் முடிந்தது. அதைத் தடுக்க இயலவில்லை.[6] 1918இன் இறுதியில் மைய சக்திகள் சிதைவுறத் தொடங்கின. 29 செப்டம்பர் அன்று பல்கேரியாவும், 31 அக்டோபர் அன்று உதுமானியர்களும், பிறகு 3 நவம்பர் அன்று ஆத்திரியா-அங்கேரியும் போர்நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. தாய் நாட்டில் செருமானிப் புரட்சியை எதிர் நோக்கி இருந்தது, கிளர்ச்சியில் ஈடுபடத் தயாராக இருந்த தனது இராணுவம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டது ஆகியவை காரணமாக 9 நவம்பர் அன்று இரண்டாம் வில்லியம் தனது பதவியைத் துறந்தார். புதிய செருமானிய அரசாங்கமானது 11 நவம்பர் 1918இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இது போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தத் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீது 1919-20ஆம் ஆண்டின் பாரிசு அமைதி மாநாடானது பல்வேறு ஒப்பந்தங்களை விதித்தது. இதில் பலராலும் அறியப்பட்ட ஒன்று வெர்சாய் ஒப்பந்தமாகும். 1917இல் உருசியப் பேரரசு, 1918இல் செருமானியப் பேரரசு, 1920இல் ஆத்திரியா-அங்கேரியப் பேரரசு மற்றும் 1922இல் உதுமானியப் பேரரசு ஆகியவற்றின் கலைப்புகள் பல்வேறு மக்கள் எழுச்சிகளுக்கு இட்டுச் சென்றன. போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோசுலாவியா உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன. இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ள ஒரு சில காரணங்கள், போருக்கு இடைப்பட்ட காலங்களின் போது இந்த எழுச்சி மூலம் ஏற்பட்ட நிலையற்ற தன்மையைக் கையாள்வதில் அடைந்த தோல்வி ஆகியவை செப்டம்பர் 1939இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பில் முடிந்தது.
பெயர்கள்
[தொகு]உலகப் போர் என்ற சொற்றொடரானது முதன் முதலில் செப்டம்பர் 1914இல் செருமானிய உயிரியலாளர் மற்றும் தத்துவவாதியான ஏர்ன்ஸ்ட் ஹேக்கலால் முதலில் பயன்படுத்தப்பட்டது. 20 செப்டம்பர் 1914 அன்று த இன்டியானாபொலிஸ் ஸ்டார் பத்திரிகையில், "'ஐரோப்பியப் போர்' என்று அனைவரும் பயந்த இந்தப் போரின் போக்கு மற்றும் தன்மையானது … முழுவதும் பொருள் படக்கூடிய வகையில் முதலாம் உலகப் போர் என்றாகும் என்பதில் சந்தேகமில்லை"[7] என்று அவர் எழுதினார்.
முதலாம் உலகப் போர் என்ற சொற்றொடரானது சார்லசு ஏ கோர்ட் ரெபிங்டன் என்கிற ஒரு பிரித்தானிய இராணுவ அதிகாரியால் அவரது நினைவுக் குறிப்புகளுக்குத் தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டது. இக்குறிப்புகள் 1920இல் பதிப்பிக்கப்பட்டன. தனது நாட்குறிப்பில் 10 செப்டம்பர் 1918 அன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அதிகாரியான ஜான்ஸ்டோனுடன் இதைப் பற்றி விவாதித்ததற்காக இவர் குறிப்பிடப்படுகிறார்.[8][9] இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் 1914-1918இன் நிகழ்வுகள் பொதுவாகப் பெரிய போர் அல்லது எளிமையாக உலகப் போர் என்று அறியப்பட்டன.[10][11] 1914 ஆகத்து மாதத்தில் த இன்டிபென்டன்ட் என்ற பருவ இதழானது, "இது தான் அந்தப் பெரிய போர். இப்போர் இப்பெயரைத் தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது" என்று எழுதியது.[12] அக்டோபர் 1914இல் கனடா நாட்டுப் பருவ இதழான மெக்லீன் இதே போன்று, "சில போர்கள் தங்களுக்குத் தாமே பெயரைக் கொடுத்துக் கொள்கின்றன. இது தான் அந்தப் பெரிய போர்" என்று எழுதியது.[13] அக்கால ஐரோப்பியர்கள் இப்போரை, "போரை நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்று குறிப்பிட்டனர். மேலும், "அனைத்துப் போர்களையும் நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்றும் விவரித்தனர். அதற்கு முன்னர் நடந்திராத அளவில் இது நடைபெற்றது, அழிவு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக இது இவ்வாறு அழைக்கப்பட்டது.[14] 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்குப் பிறகு இச்சொற்றொடர்கள் தரப்படுத்தப்பட்டன. பிரித்தானியப் பேரரசின் கனடா நாட்டவர் உள்ளிட்ட வரலாற்றாளர்கள் "முதலாம் உலகப் போர்" என்ற பெயரை விரும்பிப் பயன்படுத்தினர். அமெரிக்கர்கள் "உலகப் போர் ஒன்று" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர்.[15][not in citation given]
பின்னணி
[தொகு]
முதலாம் உலகப் போருக்கு முந்தைய நிகழ்வுகள்
|
அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணிகள்
[தொகு]19ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தில் முக்கிய ஐரோப்பியச் சக்திகள் தங்களுக்கு மத்தியில் ஒரு திடமற்ற அதிகாரச் சம நிலையைப் பேணி வந்தன. இது ஐரோப்பிய இசைக் கச்சேரி என்று அறியப்படுகிறது.[16] 1848க்கு பிறகு இந்நிலைக்கு, மிகச்சிறந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று அழைக்கப்பட்ட பிரித்தானியப் பின்வாங்கல், உதுமானியப் பேரரசின் இறங்கு முகம், ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் கீழ் புருசியாவின் வளர்ச்சி ஆகிய பல்வேறு காரணிகள் சவால் விடுத்தன. 1866இல் ஆத்திரிய-புருசியப் போரானது செருமனியில் புருசியாவின் ஆதிக்கத்தை நிறுவியது. 1870-71இன் பிராங்கோ-புருசியப் போரில் பெற்ற வெற்றியானது புருசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு செருமானியப் பேரரசாக செருமானிய அரசுகளை ஒருங்கிணைக்கப் பிஸ்மார்க்குக்கு அனுமதி வழங்கியது. 1871 தோல்விக்குப் பழிவாங்க அல்லது இழந்த அல்சேசு-லொரைன் மாகாணங்களை மீட்டெடுப்பது ஆகியவை அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிரெஞ்சுக் கொள்கையின் முதன்மையான பகுதிகளாக உருவாயின.[17]
பிரான்சைத் தனிமைப்படுத்தவும், இருமுனைப் போரைத் தவிர்க்கவும் ஆத்திரியா-அங்கேரி, உருசியா மற்றும் செருமனி ஆகிய நாடுகளுக்கு இடையில் மூன்று பேரரசர்களின் குழுமத்துடன் பிஸ்மார்க் பேச்சுவார்த்தை நடத்தினார். 1877-1878இன் உருசிய-துருக்கியப் போரில் உருசியா வெற்றி பெற்றதற்குப் பிறகு, பால்கன் குடாவில் உருசிய ஆதிக்கம் குறித்து எழுந்த ஆத்திரிய ஐயப்பாடுகள் காரணமாக இந்தக் குழுமமானது கலைக்கப்பட்டது. ஏனெனில், பால்கன் பகுதியைத் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆத்திரியா-அங்கேரி கருதியது. பிறகு செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி 1879இல் இரட்டைக் கூட்டணியை ஏற்படுத்தின. 1882இல் இதில் இத்தாலி இணைந்த போது இது முக்கூட்டணியானது.[18] மூன்று பேரரசுகளும் தங்களுக்கு மத்தியிலான எந்த ஒரு பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரான்சைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தங்களின் குறிக்கோளாகப் பிஸ்மார்க்குக்கு இருந்தது. உருசியாவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு முயற்சிகள் 1880இல் பிஸ்மார்க்கின் இந்த நிலைக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கிய போது, 1881இல் அவர் குழுமத்தை மீண்டும் உருவாக்கினார். இது 1883 மற்றும் 1885இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1887இல் இந்த ஒப்பந்தம் காலாவதியான போது, பழைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக மறு காப்பீட்டு ஒப்பந்தம் என்ற ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பிஸ்மார்க் ஏற்படுத்தினார். பிரான்சு அல்லது ஆத்திரியா-அங்கேரியால் செருமனி அல்லது உருசியா ஆகிய இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தாக்கப்பட்டால் இரு நாடுகளுமே நடு நிலை வகிக்க வேண்டும் என்பதே இந்த இரகசிய ஒப்பந்தமாகும்.[19]
செருமனி அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படையாக உருசியாவுடனான அமைதியைப் பிஸ்மார்க் கருதினார். ஆனால், 1890இல் இரண்டாம் வில்லியம் கைசராகப் பதவிக்கு வந்த பிறகு அவர் பிஸ்மார்க்கை ஓய்வு பெறும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினார். அவரது புதிய வேந்தரான லியோ வான் கேப்ரிவி மறு காப்பீட்டு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டாமென அவரை இணங்க வைத்தார்.[20] கூட்டணிக்கு எதிராகச் செயலாற்றப் பிரான்சுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கியது. பிரான்சு 1894இல் உருசியாவுடன் பிராங்கோ-உருசியக் கூட்டணி, 1904இல் பிரிட்டனுடன் நேசக் கூட்டணி மற்றும் இறுதியாக 1907ஆம் ஆண்டு ஆங்கிலேய-உருசியக் கூட்டத்தில் முந்நேச நாடுகள் கூட்டணி ஆகியவற்றில் கையொப்பமிட்டது. இவை அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாத போதும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் நீண்டகாலமாக இருந்த காலனிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததன் மூலம் பிரான்சு அல்லது உருசியா தொடர்பான எந்த ஒரு எதிர்காலச் சண்டையிலும் பிரிட்டன் நுழையும் என்ற வாய்ப்பை இது உருவாக்கியது.[21] 1911ஆம் ஆண்டின் அகதிர் பிரச்சினையின் போது, செருமனிக்கு எதிராகப் பிரான்சுக்குப் பிரித்தானிய மற்றும் உருசிய ஆதரவானது இவர்களின் கூட்டணியை மீண்டும் வலுவுடையதாக்கியது. ஆங்கிலேய-செருமானிய நட்பற்ற நிலையை அதிகமாக்கியது. நாடுகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளை அதிகமாக்கியது. இது 1914இல் போராக வெடித்தது.[22]
ஆயுதப் போட்டி
[தொகு]1871ஆம் ஆண்டுக்குப் பிறகு செருமானியத் தொழில்துறை வலிமையானது, ஓர் ஒன்றிணைந்த அரசின் உருவாக்கம், பிரெஞ்சு இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் அல்சேசு-லொரைன் பகுதி இணைக்கப்பட்டது ஆகியவற்றால் பெருமளவு அதிகரித்தது. இரண்டாம் வில்லியமால் ஆதரவளிக்கப்பட்ட கடற்படைத் தளபதி ஆல்பிரெட் வான் திர்பித்சு பொருளாதார சக்தியின் இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியச் செருமானியக் கடற்படையை உருவாக்க விரும்பினார். உலகக் கடற்படை முதன்மை நிலைக்குப் பிரித்தானிய அரச கடற்படையுடன் இது போட்டியிடலாம் என்று கருதினார்.[23] உலகளாவிய அதிகாரத்திற்கு ஓர் ஆழ்கடல் கடற்படையை வைத்திருப்பது என்பது முக்கியமானது என்று ஐக்கிய அமெரிக்கக் கடற்படை உத்தியாளர் ஆல்பிரெட் தாயெர் மாகனின் வாதத்தால் இவரது எண்ணங்கள் தாக்கத்துக்கு உள்ளாயின. திர்பித்சு இவரது நூல்களையும் செருமானியத்திற்கு மொழி பெயர்த்தார். அதே நேரத்தில், வில்லியம் தனது ஆலோசகர்கள் மற்றும் மூத்த இராணுவத்தினருக்கு இதைப் படிப்பதைக் கட்டாயமாக்கினார்.[24]
எனினும், இது ஒரு உணர்ச்சிப் பூர்வமான முடிவாகவும் இருந்தது. அரச கடற்படையை வில்லியம் மதிக்கவும் செய்தார். அதை விட முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் கடற்படை முதன்மை நிலை தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் வரை ஐரோப்பாவில் பிரிட்டன் தலையிடாது என பிஸ்மார்க் கணித்தார். ஆனால், 1890இல் அவரது பதவி நீக்கம் செருமனியில் கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. ஆங்கிலேய-செருமானிய கடற்படை ஆயுதப் போட்டிக்குக் காரணமாகியது.[25] திர்பித்சு பெருமளவிலான பணத்தைச் செலவழித்த போதும், 1906இல் எச். எம். எஸ். திரெத்நாட் போர்க்கப்பலின் அறிமுகமானது பிரித்தானியர்களுக்கு அவர்களது செருமானிய எதிரிகளுடன் ஒப்பிடும் போது ஒரு தொழில்நுட்ப அனுகூலத்தை வழங்கியது. இந்த தொழில்நுட்ப இடைவெளியைப் பிரித்தானியர்கள் என்றுமே இழக்கவில்லை.[23] இறுதியாக, இந்த ஆயுதப் போட்டியானது பெருமளவிலான வளங்களை ஒரு செருமானியக் கடற்படையை உருவாக்குவதற்கு வழி மாற்றியது. பிரிட்டனுக்குச் சினமூட்டக்கூடிய அளவுக்குச் செருமானிய கடற்படை உருவாகியது. ஆனால் அதை தோற்கடிப்பதற்காக அல்ல. 1911இல் வேந்தர் தியோபால்டு வான் பெத்மன் கோல்வெக் தோல்வியை ஒப்புக்கொண்டார். இது 'இராணுவத் தளவாடத் திருப்பு முனைக்கு' இட்டுச் சென்றது. அப்போது அவர் செலவுகளை கடற்படையிடமிருந்து இராணுவத்திற்கு வழி மாற்றினார்.[26]
அரசியல் பதட்டம் குறைந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, 1905இன் உருசிய-யப்பானியப் போரில் அடைந்த தோல்வியில் இருந்து உருசிய மீளும் என்ற செருமானியக் கவலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த புரட்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரெஞ்சு நிதியுதவியால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 1908ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஒரு பெருமளவிலான தொடருந்து மற்றும் உட்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. குறிப்பாக, செருமனியின் மேற்கு எல்லைப் பகுதிகளில் இந்த விரிவாக்கம் நடைபெற்றது.[27] உருசியாவுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்த தங்களது இராணுவத்தைச் சரி செய்ய செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி தங்களது துருப்புகளை வேகமாக நகர்த்துவதில் கவனம் செலுத்தின. அரச கடற்படையுடன் போட்டியிடுவதை விட உருசியாவுடனான இந்த இடைவெளி அச்சுறுத்தலைச் சரி செய்வது மிக முக்கியமானதாகச் செருமனிக்கு இருந்தது. 1913இல் செருமனி தன் நிரந்தர இராணுவத்தினரின் அளவை 1,70,000 துருப்புகள் அதிகப்படுத்தியதற்குப் பிறகு, பிரான்சு அதன் கட்டாய இராணுவச் சேவையை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டித்தது. இதே போன்ற நடவடிக்கைகள் பால்கன் பகுதி நாடுகளாலும், இத்தாலியாலும் எடுக்கப்பட்டன. இது உதுமானியர்கள் மற்றும் ஆத்திரியா-அங்கேரி அதிகரிக்கப்பட்ட செலவினங்களை மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றது. செலவீனங்களைப் பிரித்துக் குறிப்பிடுவதில் உள்ள வேறுபாடுகள் காரணமாக சரியான அளவு செலவினங்கள் கணிப்பதற்கு கடினமானவையாக உள்ளன. இந்தச் செலவினங்கள் தொடருந்து போன்ற குடிசார் உட்கட்டமைப்புத் திட்டங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், தொடருந்துகள் இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், 1908 முதல் 1913 வரை ஆறு முக்கிய ஐரோப்பியச் சக்திகளின் இராணுவச் செலவினமானது நேரடி மதிப்பில் 50%க்கும் மேல் அதிகரித்தது.[28]
பால்கன் சண்டைகள்
[தொகு]1914க்கு முந்தைய ஆண்டுகளில், மற்ற சக்திகள் உதுமானிய இறங்கு முகத்தில் இருந்து அனுகூலங்களைப் பெற விரும்பியதன் காரணமாகப் பால்கன் பகுதியில் ஒரு தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்பட்டன. சிலாவிய சார்பு மற்றும் மரபு வழி உருசியாவானது தன்னை செர்பியா மற்றும் பிற சிலாவிய அரசுகளின் பாதுகாப்பாளராகக் கருதிய அதே நேரத்தில், உத்தியியல் ரீதியாக மிக முக்கியமான பொசுபோரசு நீர் இணைப்பை, குறிக்கோள்களை உடைய ஒரு சிலாவிய சக்தியான பல்கேரிய கட்டுப்படுத்துவதை விட ஒரு பலவீனமான உதுமானிய அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்பியது. கிழக்குத் துருக்கியில் உருசிய தனக்கென சொந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. பால்கன் பகுதியில் உருசியச் சார்பு நாடுகள் தங்களுக்கிடையே பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. இதை சமநிலைப்படுத்துவது என்பது உருசியக் கொள்கை உருவாக்குபவர்கள் இடையே பிரிவை உண்டாக்கியது. இது பிராந்திய நிலையற்ற தன்மையை அதிகப்படுத்தியது.[29]
தங்களது பேரரசு தொடர்ந்து நிலை பெற்றிருக்கப் பால்கன் பகுதி மிக முக்கியமானது எனவும், செர்பிய விரிவாக்கமானது ஒரு நேரடியான அச்சுறுத்தல் எனவும் ஆத்திரிய அரசியல் மேதைகள் கருதினர். 1908-1909க்கு முந்தைய உதுமானிய நிலப்பரப்பான போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆத்திரியா இணைத்த போது போஸ்னியா பிரச்சனையானது தொடங்கியது. ஆத்திரியா 1878ஆம் ஆண்டிலிருந்து போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆக்கிரமித்திருந்தனர். பல்கேரியா உதுமானியப் பேரரசில் இருந்து சுதந்திரம் அடைந்ததாக இதே நேரத்தில் அறிவித்தது. ஆத்திரியாவின் இந்த ஒரு சார்புச் செயலானது ஐரோப்பிய சக்திகளால் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இதை எவ்வாறு சரி செய்வது என்ற ஒத்த கருத்து ஏற்படாததால் ஐரோப்பிய சக்திகள் இதை ஏற்றுக்கொண்டன. சில வரலாற்றாளர்கள் இது ஒரு முக்கியமான பிரச்சனை அதிகரிப்பாகக் கருதுகின்றனர். பால்கன் பகுதியில் உருசியாவுடன் எந்த ஒரு ஆத்திரிய ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் இது முடித்து வைத்தது. அதே நேரத்தில் பால்கன் பகுதியில் தங்களது சொந்த விரிவாக்கக் குறிக்கோள்களைக் கொண்டிருந்த செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளுடனான ஆத்திரியாவின் உறவையும் மோசமாக்கியது.[30]
1911-1912இல் நடந்த இத்தாலிய-துருக்கியப் போரானது உதுமானியப் பலவீனத்தை வெளிப்படுத்திய போது பதட்டங்கள் அதிகரித்தன. இது செர்பியா, பல்கேரியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் இணைந்து பால்கன் குழுமம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு இட்டுச் சென்றது.[31] 1912-1913இல் நடந்த முதலாம் பால்கன் போரில் பெரும்பாலான ஐரோப்பியத் துருக்கி மீது இந்தக் குழுமமானது தாக்குதல் ஓட்டம் நடத்திச் சீக்கிரமே கைப்பற்றியது. இது வெளிப்புறப் பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.[32] அத்திரியாத்திக்கில் இருந்த துறைமுகங்களைச் செர்பியா கைப்பற்றியதால், 21 நவம்பர் 1912 அன்று ஆத்திரியா பகுதியளவு படைத் திரட்டலை ஆரம்பித்தது. கலீசியாவில் இருந்த உருசிய எல்லையின் பக்கவாட்டில் இராணுவப் பிரிவுகளைத் திரட்டியதும் இதில் அடங்கும். அடுத்த நாள் நடந்த ஒரு சந்திப்பில் இதற்குப் பதிலாகத் துருப்புகளைத் திரட்ட வேண்டாம் என உருசிய அரசாங்கம் முடிவெடுத்தது. தாங்கள் இன்னும் தயாராகாத ஒரு போரில் வலுக்கட்டாயமாக ஈடுபட உருசியர்கள் விரும்பவில்லை.[33]
1913ஆம் ஆண்டு இலண்டன் ஒப்பந்தத்தின் வழியாக மீண்டும் கட்டுப்பாட்டை நிலை நாட்ட பெரிய சக்திகள் விரும்பின. இந்த ஒப்பந்தப்படி சுதந்திர அல்பேனியா உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்கேரியா, செர்பியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகள் விரிவடைந்தன. எனினும், வெற்றியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் 33 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் பால்கன் போருக்குக் காரணமாயின. 16 சூன் 1913 அன்று செர்பியா மற்றும் கிரேக்கம் மீது பல்கேரியா தாக்குதல் நடத்தியது. இதில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது. செர்பியா மற்றும் கிரேக்கத்திடம் பெரும்பாலான மாசிடோனியாவையும், உருமேனியாவிடம் தெற்கு தோப்ருசாவையும் பல்கேரியா இழந்தது.[34] இதன் விளைவானது பால்கன் போரில் அனுகூலங்களைப் பெற்ற செர்பியா மற்றும் கிரேக்கம் போன்ற நாடுகள் கூட "தங்களுக்குரிய ஆதாயங்களைப்" பெறுவதில் ஏமாற்றப்பட்டதாகக் கருதும் நிலையில் இருந்தது. இதில் தனது வேறுபட்ட நிலையையும் ஆத்திரியா வெளிக்காட்டியது. செருமனி உள்ளிட்ட மற்ற சக்திகள் இதைத் தங்களது மனக் கலக்கத்துடன் கண்டன.[35] கலவையான மற்றும் சிக்கலான இந்த மனக்குறை, தேசியவாதம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவை 1914க்கு முந்தைய பால்கன் பகுதி "ஐரோப்பாவின் வெடிமருந்துக் கொள்கலம்" என்று பின்னர் அறியப்பட்டதற்குக் காரணமாயின.[36]
முன் நிகழ்வுகள்
[தொகு]சாராயேவோ அரசியல் கொலை
[தொகு]28 சூன் 1914 அன்று ஆத்திரியாவின் பேரரசர் பிரான்சு யோசோப்பின் வாரிசாகக் கருதப்பட்ட இளவரசர் பிரான்சு பெர்டினான்டு புதிதாக இணைக்கப்பட்ட மாகாணங்களான போஸ்னியா எர்செகோவினாவின் தலைநகரான சாரயேவோவுக்கு வருகை புரிந்தார். இளவரசரின் வாகனங்கள் செல்லும் வழிக்குப் பக்கவாட்டில் இளம் போஸ்னியா என்று அறியப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஆறு அரசியல் கொலைகாரர்கள்[m] கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது எண்ணம் இளவரசரைக் கொல்வதாகும். செர்பிய கருப்புக் கை உளவு அமைப்பில் இருந்த தீவிரப் போக்குடையவர்களால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை இவர்கள் கொண்டிருந்தனர். இளவரசரின் இறப்பானது போஸ்னியாவை ஆத்திரிய ஆட்சியில் இருந்து விடுதலை செய்யும் என்று அவர்கள் நம்பினர். எனினும், அதற்குப் பிறகு ஆட்சி யாரிடம் இருக்குமென்பதில் அவர்களிடம் சிறிதளவே கருத்தொற்றுமை இருந்தது.[40]
நெதெல்சுகோ கப்ரினோவிச் இளவரசரின் சிற்றுந்து மீது ஒரு கையெறி குண்டை வீசினான். இளவரசரின் உதவியாளர்கள் இருவருக்குக் காயம் ஏற்படுத்தினான். உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஊர்திகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தன. மற்ற கொலைகாரர்களும் வெற்றியடையவில்லை. ஆனால், 1 மணி நேரத்திற்குப் பிறகு காயமடைந்த அதிகாரிகளைப் பார்த்துத் திரும்பிக் கொண்டிருந்த பெர்டினான்டின் சிற்றுந்தானது ஒரு தெருவில் தவறான முனையில் திரும்பியது. அங்கு காவ்ரீலோ பிரின்சிப் நின்று கொண்டிருந்தான். அவன் முன்னோக்கி நகர்ந்து கைத் துப்பாக்கி மூலம் இரண்டு குண்டுகளைச் சுட்டான். பெர்டினான்டு மற்றும் அவரது மனைவி சோபியாவுக்கு ஆபத்தான காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீக்கிரமே அவர்கள் இருவரும் இறந்தனர்.[41] பேரரசர் பிரான்சு யோசப்பு இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்து இருந்த போதிலும், அரசியல் மற்றும் தனி மனித வேறுபாடுகள் காரணமாக பேரரசருக்கும், இளவரசருக்கும் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. அவரது முதல் குறிப்பிடப்பட்ட கருத்தானது, "நம்மை மீறிய சக்தியானது அதன் பணியைச் செய்துள்ளது. ஐயோ! இதில் என்னால் நன்னிலையில் வைத்திருக்க எதுவும் கிடையாது" என்பது எனப் பேரரசர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[42]
வரலாற்றாளர் சபைனெக் செமனின் கூற்றுப்படி, பேரரசரின் எதிர்வினையானது மிகப்பரவலாக வியன்னாவில் எதிரொலித்தது. அங்கு "இந்நிகழ்வானது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஞாயிறு 28 சூன் மற்றும் திங்கள் 29 அன்று மக்கள் கூட்டங்கள் எதுவுமே நடைபெறாதது போல இசையைக் கேட்டுக்கொண்டிருந்தன."[43][44] எவ்வாறாயினும், அரியணைக்கான வாரிசின் கொலையின் தாக்கமானது முக்கியத்துவமானதாக இருந்தது. வரலாற்றாளர் கிறித்தோபர் கிளார்க் இதை "வியன்னாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றிய, 9/11 விளைவு போன்ற வரலாற்றில் முக்கியத்துவமுடைய ஒரு தீவிரவாத நிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.[45]
போஸ்னியா எர்செகோவினாவில் வன்முறை பரவுதல்
[தொகு]இதைத் தொடர்ந்து சாராயேவோவில் இறுதியாக நடந்த செர்பியர்களுக்கு எதிரான கலவரங்களை ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் ஊக்குவித்தன. இதில் போஸ்னியா குரோசியர்கள் மற்றும் போஸ்னியாக்குகள் இரண்டு போஸ்னிய செர்பியர்களைக் கொன்றனர். செர்பியர்களுக்குச் சொந்தமான ஏராளமான கட்டடங்களை சேதப்படுத்தினர்.[46][47] சாராயேவோவுக்கு வெளிப்புறம், ஆத்திரியா-அங்கேரியின் கட்டுப்பாட்டிலிருந்த போஸ்னியா எர்செகோவினாவின் மற்ற நகரங்கள், குரோசியா மற்றும் சுலோவேனியாவிலும் செர்பிய இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நடத்தப்பட்டன. போஸ்னியா மற்றும் எர்செகோவினாவில் இருந்த ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் சுமார் 5,500 முக்கியமான நபர்களைக் கைது செய்து, விசாரணைக்காக ஆத்திரியாவுக்கு அனுப்பினர். இதில் 700 முதல் 2,200 வரையிலான செர்பியர்கள் சிறையில் இறந்தனர். மேலும், 460 செர்பியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெரும்பாலும் போஸ்னியாக்குகளைக் கொண்டிருந்த சுத்சோகார்ப்சு என்ற ஒரு சிறப்பு படைத்துறை சாராப் பிரிவினர் உருவாக்கப்பட்டு, செர்பியர்களுக்கு எதிரான கொடுமைகளைச் செயல்படுத்தினர்.[48][49][50][51]
சூலை பிரச்சினை
[தொகு]அரசியல் கொலையானது சூலை பிரச்சினையைத் தொடங்கி வைத்தது. ஆத்திரியா-அங்கேரி, செருமனி, உருசியா, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு மாத தூதரக நடவடிக்கைகளே சூலை பிரச்சினை என்று அழைக்கப்படுகின்றன. செர்பிய உளவு அமைப்பினர் பிரான்சு பெர்டினான்டின் கொலையைச் செயல்படுத்த உதவினர் என்று நம்பிய ஆத்திரிய அதிகாரிகள் போஸ்னியாவில் செர்பியர்களின் தலையீட்டை முடித்து வைக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்பினர். போர் ஒன்றே இதை அடைய ஒரு சிறந்த வழி என்று கருதினர்.[52] எனினும், செர்பியாவின் தொடர்பு சம்பந்தமாக உறுதியான ஆதாரங்கள் எதுவும் ஆத்திரிய வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை. செர்பியத் தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்ட கோப்பானது பல தவறுகளை உள்ளடக்கி இருந்தது.[53] 23 சூலை அன்று செர்பியாவுக்கு ஆத்திரியா இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஏற்கத்தகாத 10 கோரிக்கைகளை செர்பியாவிடம் பட்டியலிட்டு, சண்டையைத் தொடங்க அதை ஒரு சாக்கு போக்காக ஆத்திரியா பயன்படுத்தியது.[54]
சூலை 25 அன்று இராணுவத்தை ஒருங்கிணைக்கும் பொது ஆணையை செர்பியா வெளியிட்டது. ஆனால் செர்பியாவுக்குள் உள்ள, இரகசியமாக அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு வாய்ப்புள்ள காரணிகளை ஒடுக்குவதற்கும், அரசியல் கொலையுடன் தொடர்புடைய செர்பியர்கள் மீதான புலனாய்வு மற்றும் நீதி விசாரணையில் ஆத்திரிய பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்குமான அதிகாரத்தை வழங்கும் இரு நிபந்தனைகள் தவிர மற்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் செர்பியா ஒப்புக்கொண்டது.[55][56] இது நிராகரிப்புக்கு நிகரானது என்று கூறிய ஆத்திரியா தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. மறுநாள் பகுதியளவு இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. சூலை 28 அன்று செர்பியா மீது போரை ஆத்திரியா அறிவித்தது. பெல்கிறேட் மீது வெடிகலங்களை செலுத்த ஆரம்பித்தது. சூலை 25 அன்று போருக்கான ஆயத்தங்களை தொடங்கிய உருசியா 30ஆம் தேதி அன்று செர்பியாவுக்கு ஆதரவாக பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது.[57]
உருசியாவை வலிய சென்று தாக்குதல் நடத்தும் நாடாக உருவப் படுத்தி அதன் மூலம் செருமனியின் எதிர்க்கட்சியான பொதுவுடமை ஜனநாயக கட்சியின் ஆதரவை பெரும் நோக்கத்தில் பெத்மன் கோல்வெக் சூலை 31 வரை போருக்கான ஆயத்தங்களை தொடங்கவில்லை.[58] 12 மணி நேரத்திற்குள் "செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரிக்கு எதிரான அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு" உருசிய அரசாங்கத்திடம் ஒரு குறிப்பு பிற்பகலில் செருமனியால் வழங்கப்பட்டது.[59] பிரான்சு நடுநிலை வகிக்க வேண்டும் என்ற செருமனியின் மேற்கொண்ட கோரிக்கையானது பிரான்சால் நிராகரிக்கப்பட்டது. பிரான்சு பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. ஆனால் போரை அறிவிப்பதை தாமதப்படுத்தியது.[60] இரு பக்கங்களில் இருந்தும் போரை எதிர்பார்த்து இருப்பதாக செருமானிய இராணுவ தலைமையானது நீண்ட காலமாக கருதி வந்தது; சிலியேபென் திட்டமானது 80% இராணுவத்தை பயன்படுத்தி மேற்கே பிரான்சை தோற்கடித்து விட்டு, பிறகு அதே இராணுவத்தை கிழக்கே உருசியாவுக்கு எதிராக போரிட பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தியலை கொண்டிருந்தது. இதற்கு படையினரை வேகமாக நகர்த்த வேண்டிய தேவை இருந்ததால் அதே நாள் பிற்பகலில் இராணுவ ஒருங்கிணைப்புக்கான ஆணைகள் செருமனியால் வெளியிடப்பட்டன.[61]
சூலை 29 அன்று நடந்த ஒரு சந்திப்பில் 1839ஆம் ஆண்டின் இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் பெல்ஜியத்திற்கு பிரிட்டன் கொடுத்த உறுதிமொழிகளின் படியான, பெல்ஜியம் மீதான செருமனியின் ஒரு படையெடுப்புக்கான எதிர்ப்பை இராணுவப்படை மூலம் வெளிப்படுத்துவது என்பது தேவையில்லை என பிரித்தானிய அமைச்சரவை குறுகிய வேறுபாட்டுடன் முடிவெடுத்தது. எனினும் இது பெரும்பாலும் பிரிட்டன் பிரதமர் அசுகுயித்தின் ஒற்றுமையை பேணும் விருப்பத்தாலேயே நடந்தது. அவரும் அவரது மூத்த அமைச்சர்களும் பிரான்சுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். அரச கடற்படையானது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தலையிடுவதற்கு பொதுமக்களிடையே நிலவிய கருத்தும் வலிமையாக ஆதரவளித்தது.[62] சூலை 31 அன்று பிரிட்டன் செருமனி மற்றும் பிரான்சுக்கு குறிப்புகளை அனுப்பியது. பெல்ஜியத்தின் நடு நிலைக்கு மதிப்பளிக்குமாறு அவற்றிடம் கோரியது. பிரான்சு மதிப்பளிப்பதாக உறுதி கொடுத்தது. செருமனி பதிலளிக்கவில்லை.[63]
ஆகத்து 1 அன்று காலையில் உருசியாவுக்கு செருமனி விடுத்த இறுதி எச்சரிக்கையானது ஒரு முறை காலாவதியான பிறகு இரு நாடுகளும் போரில் ஈடுபட்டன. அதே நாள் பிறகு இலண்டனில் இருந்த தனது தூதர் இளவரசர் லிச்னோவ்சுகியின் தகவலின் படி செருமனியின் வில்லியமுக்கு கொடுக்கப்பட்ட தகவலானது, பிரான்சு தாக்கப்படாவிட்டால் பிரிட்டன் தொடர்ந்து நடுநிலை வகிக்கும், மேலும் அயர்லாந்தில் அப்போது நடந்து கொண்டிருந்த தாயக ஆட்சி பிரச்சனையில் பிரிட்டன் ஈடுபட்டிருந்ததால் போரில் கூட ஈடுபடாது என்பதாகும்.[64] இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்த செருமனியின் வில்லியம் செருமனியின் முப்படை தளபதியான தளபதி மோல்ட்கேவுக்கு "ஒட்டு மொத்த இராணுவத்தையும் கிழக்கு நோக்கி அணிவகுக்க செய்" என ஆணையிட்டார். மோல்ட்கேவுக்கு கிட்டத்தட்ட நரம்பியல் பிரச்சினை வரும் அளவுக்கு இது அழுத்தத்தை கொடுத்தது என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோல்ட்கே "இதை செய்ய முடியாது. தசம இலட்சங்களில் இராணுவ வீரர்களை திடீரென ஆயத்தம் செய்து களமிறக்க இயலாது" என்றார்.[65] தன்னுடைய உறவினர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜிடமிருந்து தந்திக்காக காத்திருக்கலாம் என செருமனியின் வில்லியம் அறிவுறுத்திய போதும் தான் தவறாக புரிந்து கொண்டதை லிச்னோவ்சுகி சீக்கிரமே உணர்ந்தார். தகவலானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்த பிறகு வில்லியம் மோல்ட்கேயிடம் "தற்போது நீ உன் விருப்பப்படி செய்" என்றார்.[66]
பெல்ஜியம் வழியாக தாக்குவதற்கான செருமானிய திட்டங்களை அறிந்த பிரெஞ்சு தலைமை தளபதியான யோசப்பு சோப்ரே அத்தகைய ஒரு தாக்குதலை முறியடிக்க எல்லை தாண்டிச் சென்று பிரான்சு முன்னரே தாக்குதற்கான அனுமதியை தனது அரசாங்கத்திடம் கேட்டார். பெல்ஜியத்தின் நடுநிலை மீறப்படுவதை தவிர்ப்பதற்காக அத்தகைய எந்த ஒரு முன்னேற்றமும் ஒரு செருமானியப் படையெடுப்புக்குப் பின்னரே வரும் என்று அவருக்கு கூறப்பட்டது.[67] ஆகத்து 2 அன்று செருமனி இலக்சம்பர்க்கை ஆக்கிரமித்தது. பிரெஞ்சு பிரிவுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. ஆகத்து 3 அன்று செருமனி பிரான்சு மீது போரை அறிவித்தது. பெல்ஜியம் வழியாக சுதந்திரமாக செல்வதற்கான வழியைக் கோரியது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகத்து 4 காலை அன்று செருமானியர்கள் படையெடுத்தனர். இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் உதவ வருமாறு பெல்ஜியத்தின் முதலாம் ஆல்பர்ட் வேண்டினார்.[68][69] பெல்ஜியத்தில் இருந்து பின்வாங்குமாறு செருமனிக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை பிரிட்டன் விடுத்தது. எந்த ஒரு பதிலும் பெறப்படாமல் நள்ளிரவு இந்த எச்சரிக்கை காலாவதியான பிறகு, இரு பேரரசுகளும் போரில் ஈடுபட்டன.[70]
போரின் போக்கு
[தொகு]எதிர்ப்பு தொடங்குதல்
[தொகு]மைய சக்திகள் நடுவே குழப்பம்
[தொகு]மைய சக்திகளின் உத்தியானது போதிய தொடர்பின்மை காரணமாக பாதிப்புக்கு உள்ளானது. செர்பியா மீதான ஆத்திரியா-அங்கேரியின் படையெடுப்புக்கு உதவுவதாக செருமனி உறுதியளித்தது. ஆனால் இது குறித்த விளக்கத்தின் பொருளானது வேறுபட்டது. முன்னர் சோதனை செய்யப்பட்ட படையிறக்கும் திட்டங்கள் 1914ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இந்த திட்டங்கள் அதற்கு முன்னர் பயிற்சிகளில் என்றுமே சோதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆத்திரியா-அங்கேரிய தலைவர்கள் உருசியாவிடம் இருந்து தங்களது வடக்கு முனையை செருமனி தாக்கும் என நம்பினர். ஆனால், ஆத்திரியா-அங்கேரியானது அதன் பெரும்பாலான துருப்புகளை உருசியாவுக்கு எதிராக பயன்படுத்தும் என்றும், அதே நேரத்தில் தான் பிரான்சை கையாளலாம் என்றும் செருமனி எண்ணியது.[71] இந்த குழப்பமானது ஆத்திரியா-அங்கேரியானது அதன் படைகளை உருசிய மற்றும் செர்பிய முனைகளுக்கு இடையில் பிரித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியது.
செர்பியா மீதான படையெடுப்பு
[தொகு]12 ஆகத்தில் தொடங்கி, ஆத்திரியர் மற்றும் செர்பியர் செர் மற்றும் கோலுபரா ஆகிய யுத்தங்களில் சண்டையிட்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆத்திரியாவின் தாக்குதல்கள் அதற்கு கடுமையான இழப்புகளை கொடுத்ததுடன் முறியடிக்கவும் பட்டன. ஒரு விரைவான வெற்றியை பெரும் ஆத்திரியாவின் நம்பிக்கையை இது குலைத்தது. போரில் நேச நாடுகளின் முதல் பெரும் வெற்றியை இது குறித்தது. இதன் விளைவாக ஆத்திரிய தன்னுடைய படைகளில் குறிப்பிடத்தக்க அளவை செர்பிய போர் முனையில் நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. இதனால் உருசியாவுக்கு எதிரான ஆத்திரியாவின் முயற்சிகள் பலவீனம் அடைந்தன.[72] 1914ஆம் ஆண்டு படையெடுப்பில் செர்பியா ஆத்திரியாவைத் தோற்கடித்ததானது 20ஆம் நூற்றாண்டின் சிறிய நாடு பெரிய நாட்டை வீழ்த்திய முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.[73] 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தரையில் இருந்து வானத்தில் சுடுவதன் மூலம் ஓர் ஆத்திரிய போர் விமானமானது சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இந்த படையெடுப்பானது விமான எதிர்ப்பு போர் முறையின் முதல் பயன்பாட்டைக் கண்டது. மேலும், 1915ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் செர்பிய இராணுவமானது வீரர்களின் காயங்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக அவர்களை பத்திரமாக மீட்ட முதல் செயல் முறையையும் இப்போர் கண்டது.[74][75]
பெல்ஜியம் மற்றும் பிரான்சில் செருமானிய தாக்குதல்
[தொகு]1914ஆம் ஆண்டு படைகளை ஒருங்கிணைத்த பிறகு செருமானிய இராணுவத்தின் 80% பேர் மேற்குப் போர் முனையில் நிறுத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் கிழக்கே ஒரு மறைப்பு திரையாக செயல்படுவதற்காக நிறுத்தப்பட்டனர். இந்த திட்டத்தின் அலுவல் பூர்வமான பெயரானது இரண்டாம் ஔப்மார்ச் மேற்கு என்பதாகும். இது பொதுவாக சிலியேபென் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1891ஆம் ஆண்டு முதல் 1906ஆம் ஆண்டு வரை செருமானிய தலைமை தளபதியாக இருந்த ஆல்பிரட் வான் சிலியேபென் என்பவர் உருவாக்கியதன் காரணமாக இத்திட்டம் இவ்வாறு அறியப்பட்டது. தங்களது பகிரப்பட்ட எல்லை தாண்டி ஒரு நேரடித் தாக்குதலை நடத்துவதற்குப் பதிலாக, செருமானிய வலது பிரிவானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாக வேகமாக முன்னேறிச் செல்லும். பிறகு தெற்கு நோக்கி திரும்பி பாரிசை சுற்றி வளைக்கும். சுவிட்சர்லாந்து எல்லைக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தை பொறியில் சிக்க வைக்கும். இது ஆறு வாரங்கள் எடுக்குமென சிலியேபென் மதிப்பிட்டார். இதற்குப் பிறகு செருமானிய இராணுவமானது கிழக்கு நோக்கி திரும்பி உருசியர்களைத் தோற்கடிக்கும்.[76]
இந்த திட்டமானது அவருக்கு பின் வந்த இளைய எல்முத் வான் மோல்ட்கேயால் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டது. சிலியேபென் திட்டப்படி மேற்கில் இருந்த 85% செருமானிய படைகள் வலது பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தன. எஞ்சியவை எல்லையை தற்காத்துக் கொண்டிருந்தன. தன்னுடைய இடது பிரிவை வேண்டுமென்றே பலவீனமாக வைத்ததன் மூலம் "இழந்த மாகாணங்களான" அல்சேசு-லொரைனுக்குள் பிரெஞ்சுக்காரர்களை ஒரு தாக்குதல் நடத்த இழுக்க முடியும் என இவர் நம்பினார். இது உண்மையில் அவர்களது திட்டமான 17இல் குறிப்பிடப்பட்ட உத்தியாக இருந்தது.[76] எனினும் பிரெஞ்சுக்காரர்கள் இவரது இடது பிரிவின் மீது மிகுந்த அழுத்தத்துடன் முன்னேறுவார்கள் என்று இவருக்கு கவலை ஏற்பட்டது. மேலும் செருமானிய இராணுவமானது அதன் 1908 அளவிலிருந்து 1916 அளவில் அதிகரித்திருந்ததால் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான படைகளின் பகிர்ந்தளிப்பை 85:15 என்பதிலிருந்து 70:30 என்று இவர் மாற்றியமைத்தார்.[77] செருமானிய வணிகத்திற்கு டச்சு நடுநிலையானது தேவையானது என்று இவர் கருதினார். நெதர்லாந்து வழியாக ஊடுருவுவதை நிராகரித்தார். இதன் பொருளானது பெல்ஜியத்தில் ஏதாவது தாமதங்கள் ஏற்பட்டால் ஒட்டு மொத்த திட்டத்தையும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பதாகும்.[78] வரலாற்றாளர் ரிச்சர்டு கோம்சின் வாதத்தின்படி இந்த மாற்றங்களின் பொருளானது வலது பிரிவானது தீர்க்கமான வெற்றியை பெறுவதற்கு போதிய அளவு பலம் உடையதாக இல்லை என்பதாகும். இது அடைய இயலாத இலக்குகள் மற்றும் கால அளவுக்கு இட்டுச் சென்றது.[79]
மேற்கில் தொடக்க செருமானிய முன்னேற்றமானது மிகுந்த வெற்றிகரமாக இருந்தது. ஆகத்து மாத இறுதியில் நேச நாடுகளின் இடது பிரிவானது முழுமையாக பின் வாங்கிக் கொண்டிருந்தது. இந்த பிரிவில் பிரித்தானிய சிறப்பு படையும் இருந்தது. அதே நேரத்தில் அல்சேசு-லொரைனில் பிரெஞ்சு தாக்குதலானது அழிவுகரமான தோல்வியாக இருந்தது. இதில் பிரஞ்சுக்காரர்களுக்கு 2.60 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் எல்லைப்புற யுத்தத்தின்போது ஆகத்து 22 அன்று கொல்லப்பட்ட 27,000 வீரர்களும் அடங்குவர்.[80] செருமானிய திட்டமிடலானது பரந்த உத்தி அறிவுறுத்தல்களை கொடுத்தது. அதே நேரத்தில் போர்முனையில் இந்த உத்திகளை செயல்படுத்த இராணுவ தளபதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரத்தையும் வழங்கியது. இது 1866 மற்றும் 1870இல் நன்றாக பலன் அளித்தது. ஆனால் 1914இல் வான் குலுக் தனது சுதந்திரத்தை ஆணைகளை மீறுவதற்கும், பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த செருமானிய இராணுவங்களுக்கு இடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தினார்.[81] பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்கள் இந்த இடைவெளியை பாரிசுக்கு கிழக்கே செருமானிய முன்னேற்றத்தை முதலாம் மர்னே யுத்தத்தில் செப்டம்பர் 5 முதல் 12 வரை தடுத்து நிறுத்துவதற்கு அனுகூலமாக பயன்படுத்தினர். செருமானியப் படைகளை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி தள்ளினர்.
1911இல் உருசிய இராணுவ தலைமையான இசுத்தவுக்காவானது இராணுவத்தை ஒருங்கிணைத்து 15 நாட்களுக்குள் செருமனியை தாக்குவதென பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்புக்கொண்டது. இது செருமானியர்கள் எதிர்பார்த்ததை விட 10 நாட்கள் முன்னர் ஆகும். 17 ஆகத்து அன்று கிழக்கு புருசியாவுக்குள் நுழைந்த இரண்டு உருசிய இராணுவங்கள் அவர்களது பெரும்பாலான ஆதரவு காரணிகள் இன்றி இதை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்த போதும் இவ்வாறாக திட்டமிடப்பட்டது.[82] 26 முதல் 30 ஆகத்துக்குள் தன்னன்பர்க்கு யுத்தத்தில் உருசிய இரண்டாவது இராணுவமானது நிறைவாக அழிக்கப்பட்ட போதும் உருசிய இராணுவத்தின் முன்னேற்றமானது செருமானியர்கள் அவர்களது 8வது கள இராணுவத்தை பிரான்சிலிருந்து கிழக்கு புருசியாவுக்கு மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. இது மர்னே யுத்தத்தில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தது.[சான்று தேவை]
1914இன் இறுதியில் பிரான்சுக்குள் வலிமையான தற்காப்பு நிலைகளை செருமானிய துருப்புக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. பிரான்சின் உள்நாட்டு நிலக்கரி வயல்களில் பெரும்பாலானவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. தாங்கள் இழந்ததை விட 2,30,000 மேற்கொண்ட இராணுவ இழப்புகளை பிரான்சை அடையச் செய்தன. எனினும் தொடர்பு பிரச்சினைகள் மற்றும் தலைமையின் கேள்விக்குரிய முடிவுகள் ஒரு தீர்க்கமான முடிவானது செருமனிக்கு சாதகமாக ஏற்படுவதை வீணாக்கின. அதே நேரத்தில் ஒரு நீண்ட, இருமுனை போரை தவிர்க்கும் முதன்மை இலக்கை அடைவதிலும் செருமனி தோல்வி அடைந்தது.[83] ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செருமானிய தலைவர்களுக்கு தெரிந்தபடி, இது ஒரு முக்கிய தோல்விக்கு சமமானதாக இருந்தது. மர்னே யுத்தத்திற்கு பிறகு சீக்கிரமே பட்டத்து இளவரசரான வில்லியம் ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளரிடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் போரில் தோல்வியடைந்து விட்டோம். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் நாங்கள் தற்போதே தோல்வியடைந்து விட்டோம்."[84]
ஆசியா பசிபிக்
[தொகு]30 ஆகத்து 1914 அன்று நியூசிலாந்து செருமானிய சமோவாவை ஆக்கிரமித்தது. இதுவே தற்போதைய சுதந்திர நாடான சமோவா ஆகும். 11 செப்டம்பர் அன்று ஆத்திரேலிய கடற்படை மற்றும் இராணுவ சிறப்புப்படையானது நியூ பிரிட்டன் தீவில் இறங்கியது. இந்த தீவானது அந்நேரத்தில் செருமானிய நியூ கினியாவின் பகுதியாக இருந்தது. 28 அக்டோபர் அன்று செருமானிய விரைவுக் கப்பலான எஸ்எம்எஸ் எம்டன் உருசிய விரைவு கப்பலான செம்சுக்கை பெனாங் யுத்தத்தில் மூழ்கடித்தது. செருமனி மீது சப்பான் போரை அறிவித்தது. பசிபிக்கில் இருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றியது. இந்த நிலப்பரப்புகளே பின்னாளில் தெற்கு கடல்கள் உரிமைப் பகுதிகள் என்று அழைக்கப்பட்டன. திசிங்தாவோவில் இருந்த சீன சாண்டோங் மூவலந்தீவில் அமைந்திருந்த செருமானிய ஒப்பந்த துறைமுகங்களையும் சப்பான் கைப்பற்றியது. தன்னுடைய விரைவு கப்பலான எஸ்எம்எஸ் கெய்செரின் எலிசபெத்தை திசிங்தாவோவில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ள வியன்னா மறுத்தபோது சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீதும் போரை அறிவித்தது. இந்த கப்பலானது திசிங்தாவோவில் நவம்பர் 1914 அன்று மூழ்கடிக்கப்பட்டது.[85] சில மாதங்களுக்குள்ளாகவே அமைதிப் பெருங்கடலில் இருந்த அனைத்து செருமானிய நிலப்பரப்புகளையும் நேச நாடுகள் கைப்பற்றின. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வணிக பகுதிகள் மற்றும் நியூ கினியாவில் இருந்த சில தற்காப்பு பகுதிகள் மட்டுமே இதில் எஞ்சியவையாக இருந்தன.[86][87]
ஆப்பிரிக்க படையெடுப்புகள்
[தொகு]ஆப்பிரிக்காவில் போரின் சில முதன்மையான சண்டைகள் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானிய காலனி படைகளை ஈடுபடுத்தியதாக இருந்தன. ஆகத்து 6 முதல் 7 வரை செருமானிய பாதுகாப்பு பகுதிகளான தோகோலாந்து மற்றும் கமேரூன் ஆகியவற்றின் மீது பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய துருப்புக்கள் படையெடுத்தன. 10 ஆகத்து அன்று தென் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த செருமானிய படைகள் தென் ஆப்பிரிக்காவை தாக்கின. அங்கொன்றும் இங்கொன்றுமான மற்றும் வன்மையான சண்டையானது எஞ்சிய போர் முழுவதும் தொடர்ந்தது. முதலாம் உலகப்போரின்போது செருமானிய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த கர்னல் பால் வான் லோட்டோவ்-ஓர்பெக் தலைமையிலான செருமானிய காலனி படைகள் கரந்தடிப் போர்முறையை பின்பற்றின. ஐரோப்பாவில் போர் நிறுத்த ஒப்பந்தமானது செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் அவை சரணடைந்தன.[88]
நேச நாடுகளுக்கு இந்தியாவின் உதவி
[தொகு]போருக்கு முன்னர் இந்திய தேசியவாதம் மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியமயத்தை தனது அனுகூலத்திற்கு செருமனி பயன்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. 1914ஆம் ஆண்டுக்கு பின்னரும் தொடர்ந்த இந்த கொள்கையானது இந்தியாவில் எழுச்சிகளை தூண்டியது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நியேதர்மயர்-கென்டிக் பயணமானது மைய சக்திகளின் பக்கம் போரில் இணையுமாறு ஆப்கானித்தானை தூண்டியது. எனினும் இந்தியாவில் எழுச்சி ஏற்படும் என பிரிட்டன் அஞ்சியதற்கு மாறாக போரின் தொடக்கமானது இந்தியாவில் தேசியவாத நடவடிக்கைகளில் குறைவு ஏற்பட்டதை கண்டது.[89][90] பிரித்தானிய போர் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என்பது இந்திய சுயாட்சியை விரைவுபடுத்தும் என காங்கிரசு மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பெரும்பாலும் நம்பியதே இதற்குக் காரணம் ஆகும். இந்த உறுதிமொழியானது 1917இல் இந்தியாவுக்கான பிரிட்டனின் செயலாளராக இருந்த மாண்டேகுவால் அப்பட்டமாக கொடுக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.[91]
1914இல் பிரித்தானிய இந்திய இராணுவமானது பிரிட்டனின் இராணுவத்தை விடவும் பெரியதாக இருந்தது. 1914 மற்றும் 1918க்கு இடையில் 13 இலட்சம் இந்திய வீரர்களும், பணியாளர்களும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சேவையாற்றினர் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசாங்கமும் அதன் சமஸ்தான கூட்டாளிகளும் பெரும் அளவிலான உணவு, நிதி மற்றும் வெடி மருந்தை பிரிட்டனுக்கு அளித்தன. ஒட்டு மொத்தமாக மேற்குப் போர்முனையில் 1.40 இலட்சம் வீரர்களும், மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேரும் சேவையாற்றினர். இதில் 47,746 பேர் கொல்லப்பட்டனர். 65,126 பேர் காயமடைந்தனர்.[92] போரால் ஏற்பட்ட இழப்புகள், போர் முடிந்ததற்குப் பிறகு இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதில் பிரித்தானிய அரசாங்கம் அடைந்த தோல்வி ஆகியவை காந்தி மற்றும் பிறரால் தலைமை தாங்கப்பட்ட முழுமையான சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது.[93]
மேற்கு முனை (1914 - 1916)
[தொகு]பதுங்கு குழி போர் தொடங்கியது
[தொகு]வெட்ட வெளி போர் மீது முக்கியத்துவத்தை கொடுத்த போருக்கு முந்தைய இராணுவ உத்திகளும், தனி நபர் துப்பாக்கி வீரர் போர் முறையும் 1914இல் வெளிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்ட போது அவை வழக்கொழிந்தவை என நிரூபணமாயின. முள்கம்பி, இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற ஒட்டு மொத்த காலாட்படையின் முன்னேற்றத்தை தடுக்கும் வல்லமை கொண்ட வலிமையான தற்காப்பு அமைப்புகளின் உருவாக்கத்திற்கு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சக்தி வாய்ந்த சேணேவி ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனுமதியளித்தன. சேணேவியானது யுத்தகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது. வெட்ட வெளி நிலப்பரப்பை கடப்பது என்பதை இராணுவங்களுக்கு மிகவும் கடினமாக்கியது.[94] கடுமையான இழப்புகளை சந்திக்காமல் பதுங்கு குழி அமைப்புகளை உடைத்து முன்னேறுவதற்கான உத்திகளை உருவாக்குவதில் இரு பிரிவினரும் கடுமையாக போராட்டத்தை சந்தித்தனர். எனினும் தகுந்த நேரத்தில் வாயு போர்முறை மற்றும் பீரங்கி வண்டி போன்ற புதிய தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை தொடங்க தொழில்நுட்பம் உதவியது.[95]
செப்டம்பர் 1914இல் முதலாம் மர்னே யுத்தத்திற்கு பிறகு நேச நாட்டு மற்றும் செருமானிய படைகள் ஒன்றை மற்றொன்று சுற்றி வளைப்பதில் முயற்சி செய்து தோல்வி அடைந்தன. இந்த தொடர்ச்சியான நகர்வுகள் பின்னர் "கடலை நோக்கிய ஓட்டம்" என்று அறியப்பட்டன. 1914இன் முடிவில் ஆங்கிலேய கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து எல்லை வரை இருந்த தடையற்ற பதுங்கு குழி நிலைகளின் கோட்டின் பக்கவாட்டில் இரு எதிரெதிர் படைகளும் ஒன்றை மற்றொன்று எதிர்கொண்டன.[96] எங்கு தங்களது நிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனபதில் செருமானியர்கள் பொதுவாக வெற்றியடைந்த காரணத்தால் அவர்கள் எப்பொழுதுமே உயரமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதே நேரத்தில் அவர்களது பதுங்கு குழிகளும் நன்றாக கட்டமைக்கப்பட்டவையாக இருந்தன. பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பதுங்கு குழிகள் ஆரம்பத்தில் "தற்காலிகமானவையாக" கருதப்பட்டன. செருமானிய தற்காப்பை நொறுக்கும் ஒரு தாக்குதல் வரையிலுமே அவை தேவைப்பட்டன.[97] அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி போரின் வெற்றி தோல்வியற்ற நிலையை மாற்ற இரு பிரிவு நாடுகளுமே முயற்சித்தன. 22 ஏப்ரல் 1915 அன்று இரண்டாம் இப்பிரேசு யுத்தத்தில் செருமானியர்கள் கேகு மரபை மீறி மேற்குப் போர்முனையில் முதல் முறையாக குளோரின் வாயுவை பயன்படுத்தினர். சீக்கிரமே பல்வேறு வகைப்பட்ட வாயுக்கள் இரு பிரிவினராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. எனினும் இவை என்றுமே ஒரு தீர்க்கமான, யுத்தத்தை வெல்லும் ஆயுதமாக நீடிக்கவில்லை. போரின் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய மற்றும் நன்றாக நினைவு படுத்தப்பட்ட கோரங்களில் ஒன்றாக இது உருவானது.[98][99]
பதுங்கு குழி போர் தொடருதல்
[தொகு]அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு பிரிவினரும் ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்த இயலாமல் இருந்தனர். 1915 முதல் 1917 முழுவதும் பிரித்தானிய பேரரசும், பிரான்சும் செருமனியை விட அதிகப்படியான உயிரிழப்புகளை சந்தித்தன. இதற்கு காரணம் இரு பிரிவினரும் தேர்ந்தெடுத்த முடிவுகளே ஆகும். உத்தி ரீதியில் செருமனியானது ஒரே ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது, நேச நாடுகள் செருமானிய கோடுகள் வழியாக உடைத்து முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தன.
1916 பெப்ரவரியில் வெர்துன் யுத்தத்தில் பிரெஞ்சு தற்காப்பு நிலைகள் மீது செருமானியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலை திசம்பர் 1916 வரை நீடித்தது. செருமானியர்கள் ஆரம்பத்தில் முன்னேற்றங்களை பெற்றனர். ஆனால் பிரெஞ்சு பதில் தாக்குதல்கள் நிலைமையை மீண்டும் கிட்டத்தட்ட தொடக்க புள்ளிக்கு கொண்டு வந்து நிறுத்தின. பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் செருமானியர்களும் அதிகமான இழப்பை சந்தித்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் 7[100] முதல் 9.75 இலட்சம்[101] வரை உயிரிழப்புகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பிரெஞ்சு மன உறுதி மற்றும் தியாகத்தின் ஓர் அடையாளமாக வெர்துன் கருதப்படுகிறது.[102]
சொம்மே யுத்தம் என்பது 1916ஆம் ஆண்டின் சூலை முதல் நவம்பர் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆங்கிலேய-பிரெஞ்சு தாக்குதலாகும். பிரித்தானிய இராணுவத்தின் வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த ஒற்றை நாளாக1 சூலை 1916 கருதப்படுகிறது. பிரித்தானிய இராணுவமானது 57,470 பாதிப்புகளை சந்தித்தது. இதில் 19,240 பேர் இறந்ததும் அடங்கும். ஒட்டு மொத்தமாக சொம்மே தாக்குதலானது 4.20 இலட்சம் பிரித்தானியர்கள், 2 இலட்சம் பிரெஞ்சு மற்றும் 5 இலட்சம் செருமானியர்கள் இறப்பதற்கு இட்டுச் சென்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.[103] உயிரிழப்பை ஏற்படுத்தியதில் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை. பதுங்கு குழிகளில் பரவிய நோய்களே இரு பிரிவினருக்கும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய காரணிகளாக அமைந்தன. பதுங்கு குழிகளின் இருந்த மோசமான வாழ்வு நிலை காரணமாக எண்ணிலடங்காத நோய்களும், தொற்றுக்களும் பரவின. இவற்றில் பதுங்கு குழி கால் நோய், வெடிகல அதிர்ச்சி, சல்பர் மஸ்டர்டால் ஏற்பட்ட கண்பார்வை இழப்பு அல்லது எரிகாயங்கள், பேன், பதுங்கு குழி காய்ச்சல், கூட்டிகள் என்று அழைக்கப்பட்ட உடல் பேன் மற்றும் எசுப்பானிய புளூ ஆகியவையாகும்.[104][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
கடற்போர்
[தொகு]போரின் தொடக்கத்தில் செருமானிய விரைவு கப்பல்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடந்தன. இறுதியில் இவற்றில் சில, நேச நாடுகளின் வணிக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. பிரித்தானிய அரச கடற்படையானது அமைப்பு ரீதியாக இத்தகைய விரைவு கப்பல்களை வேட்டையாடியது. அதே நேரத்தில் நேச நாடுகளின் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதில் பிரித்தானிய அரச கடற்படைக்கு இயலாமை இருந்த காரணத்தால் சில அவமானங்களையும் ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக இலகுரக விரைவு கப்பலான எஸ். எம். எஸ். எம்டன் செருமானிய கிழக்கு ஆசிய கப்பல் குழுவின் ஒரு பகுதியாக கிங்தாவோவில் நிறுத்தப்பட்டிருந்தது. இது 15 வணிக கப்பல்கள், மேலும் ஓர் உருசிய விரைவு கப்பல் மற்றும் ஒரு பிரெஞ்சு போர்க் கப்பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தது அல்லது மூழ்கடித்தது. செருமனியின் பெரும்பாலான குழுக் கப்பல்கள் செருமனிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எம்டன் நவம்பர் 1914இல் கோரோனெல் யுத்தத்தில் இரண்டு பிரித்தானிய கவச விரைவு கப்பல்களை மூழ்கடித்தது. இறுதியில் திசம்பரில் நடைபெற்ற பால்க்லாந்து தீவு யுத்தத்தில் கிட்டத்தட்ட முழுவதுமாக எம்டன் அழிக்கப்பட்டது. செருமனியின் எஸ். எம். எஸ். திரெசுதன் போர்க்கப்பலானது அதன் சில துணைக் கப்பல்களுடன் தப்பித்தது. ஆனால் மாசா தியேரா யுத்தத்திற்கு பிறகு அவையும் அழிக்கப்பட்டன அல்லது சிறைப்படுத்தப்பட்டன.[105]
சண்டை தொடங்கிய பிறகு சீக்கிரமே செருமனிக்கு எதிராக ஒரு கடல் முற்றுகையை பிரிட்டன் தொடங்கியது. இந்த உத்தியானது பலனளிக்க கூடியது என நிரூபணம் ஆகியது. இது முக்கியமான இராணுவ மற்றும் குடிமக்களுக்கு தேவையான பொருட்களின் வழியை வெட்டி விட்டது. முந்தைய இரண்டு நூற்றாண்டுகளின் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களால் குறிப்பிடப்பட்டு சர்வதேச சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தவற்றை இந்த முற்றுகையானது மீறியிருந்த போதும் இது பலனளிக்கக் கூடியதாக இருந்தது.[106] பெருங்கடலின் ஒட்டு மொத்த பகுதிகளுக்கும் எந்த ஒரு கப்பலும் நுழைவதை தடுப்பதற்காக பிரிட்டன் சர்வதேச நீர்ப்பரப்பில் கண்ணி வெடிகளை பதித்தது. இது நடு நிலை வகித்த நாடுகளின் கப்பல்களுக்கும் கூட ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.[107] பிரிட்டனின் இந்த உத்திக்கு சிறிதளவே எதிர்ப்பு கிளம்பியதால், தன்னுடைய வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறைக்கும் இதே போன்று சிறிதளவே எதிர்ப்பு இருக்கும் என செருமனி எதிர்பார்த்தது.[108]
சூட்லாந்து யுத்தம் (செருமானிய மொழி: ஸ்காகெராக்ஸ்லாக்ட், அல்லது ஸ்காகெராக் யுத்தம்) என்பது 1916 மே அல்லது சூன் மாதத்தில் தொடங்கியது. போரின் மிகப்பெரிய கடற்படை யுத்தமாக மாறியது. போரின்போது முழு அளவில் போர் கப்பல்கள் மோதிக்கொண்ட ஒரே ஒரு யுத்தமாக இது திகழ்ந்தது. வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. செருமனியின் உயர் கடல் கப்பல் குழுவானது துணைத்தளபதி ரெயினார்டு சீரால் தலைமை தாங்கப்பட்டது. இது தளபதி சர் யோவான் செல்லிக்கோவால் தலைமை தாங்கப்பட்ட பிரிட்டனின் அரச கடற்படையின் பெரும் கப்பல் குழுவுடன் சண்டையிட்டது. இந்த சண்டையானது ஒரு நிலைப்பாடாக இருந்தது. செருமானியர்களை அளவில் பெரியதாக இருந்த பிரித்தானியக் கப்பல் குழுவானது பக்கவாட்டில் சென்று சுற்றி வளைத்தது. ஆனால் தாங்கள் சந்தித்த இழப்புகளை விட பிரித்தானிய கப்பல் குழுவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி விட்டு செருமானியக் கப்பல் குழுவானது தப்பிச்சென்றது. எனினும் உத்தி ரீதியாக பிரித்தானியர்கள் கடல் மீதான தங்களது கட்டுப்பாட்டை நிலை நாட்டினர். போர் காலத்தின் போது பெரும்பாலான செருமானிய கடற்பரப்பு குழுவானது துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.[109]
வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட வணிக கப்பல் வழிகளை வெட்டிவிட செருமானிய நீர்மூழ்கி யு கப்பல்கள் முயற்சித்தன.[110] நீர்மூழ்கி போர்முறையின் இயல்பு யாதெனில் அவற்றின் தாக்குதல்கள் பெரும்பாலான நேரங்களில் எச்சரிக்கை கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டன. இதனால் வணிக கப்பல்களின் மக்கள் உயிர் பிழைப்பதற்கு சிறிதளவே வாய்ப்பு இருந்தது.[110][111] ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. செருமனி தனது போர்முறை விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்தது. 1915இல் பயணிகள் கப்பலான ஆர். எம். எஸ். லூசிதனியாவின் மூழ்கடிப்புக்குப் பிறகு பயணிகள் கப்பல்களை இலக்காகக் கொள்ள மாட்டோம் என செருமனி உறுதியளித்தது. அதே நேரத்தில் பிரிட்டன் தனது வணிகக் கப்பல்களில் ஆயுதங்களை பாதுகாப்புக்காக பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக "விரைவு கப்பல் சட்டங்களின்" பாதுகாப்புக்குள் வணிகக் கப்பல்கள் வர இயலாமல் போனது. விரைவு கப்பல் விதிகளானவை எச்சரிக்கையையும், கப்பலில் உள்ளவர்கள் "ஒரு பாதுகாப்பான இடத்திற்கு" செல்வதையும் உறுதி செய்ய வலியுறுத்தின. அதே நேரத்தில் கப்பல் மூழ்கினால் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் படகுகள் இத்தகைய தரத்தை பூர்த்தி செய்யவில்லை. [112]இறுதியாக 1917ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறை என்ற ஒரு கொள்கையை செருமனி பின்பற்ற ஆரம்பித்தது. அமெரிக்கர்கள் இறுதியாக போருக்குள் நுழைவார்கள் என்பதை உணர்ந்த பிறகு அது இதைச் செய்தது.[113][110] ஒரு பெரிய இராணுவத்தை அயல்நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா நகர்த்துவதற்கு முன்னர் நேச நாடுகளின் கடல் வழிகளை அழிக்க செருமனி முயற்சித்தது. இதில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், இறுதியாக செருமனி தோல்வியடைந்தது.[110]
யு வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தலானது 1917ஆம் ஆண்டு குறைந்தது. அந்நேரத்தில் வணிகக் கப்பல்கள் போர்க் கப்பல்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு குழுவாக பயணித்தன. இந்த உத்தியானது யு கப்பல்களுக்கு இலக்குகளை கண்டுபிடிப்பதை கடினமாக்கியது. இது இழப்புகளை பெருமளவு குறைத்தது. நீருக்கடியில் உள்ள அதிர்வுகளை கண்டுபிடிக்கும் கருவி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மேல் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்யும் நுட்பம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்த போர்க்கப்பல்கள் நீரில் மூழ்கியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வெற்றிகரமாக ஓரளவு தாக்குவதற்கு வாய்ப்பு உருவானது. பொருட்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதை இந்த கப்பல் குழுக்கள் மெதுவாக்கின. ஏனெனில் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படும் வரை வணிகக் கப்பல்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த காத்திருப்புகளுக்கு தீர்வாக புதிய வணிகக் கப்பல்களை உருவாக்கும் ஒரு விரிவான திட்டமானது செயல்படுத்தப்பட்டது. துருப்புக்களை கொண்டு செல்லும் கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை விட மிகுந்த வேகத்தில் பயணித்தன. வட அத்திலாந்திக்கு பெருங்கடலில் இவ்வகை துருப்பு கப்பல்கள் குழுக்களாக பயணிக்கவில்லை.[114] யு கப்பல்கள் 5,000க்கும் மேற்பட்ட நேச நாடுகளின் கப்பல்களை மூழ்கடித்தன. அதே நேரத்தில் 199 நீர்மூழ்கி யு கப்பல்களும் இந்த நடவடிக்கைகளின் போது மூழ்கின.[115]
யுத்தத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப்போர் கண்டது. எச். எம். எஸ். பியூரியசு வானூர்தி தாங்கிக் கப்பலானது சோப்வித் கேமல் எனும் போர் விமானங்களை பயன்படுத்தி சூலை 1918இல் தொண்டெர்ன் என்ற இடத்தில் செப்பலின் வான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு எதிராக ஒரு வெற்றிகரமான ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியது. மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான ரோந்துக்காக பிலிம்ப் எனப்படும் வான் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப் போர் முதன் முதலாக கண்டது.[116]
தெற்கு போர் அரங்குகள்
[தொகு]பால்கன் பகுதியில் போர்
[தொகு]உருசியாவை கிழக்கில் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் செர்பியாவை தாக்குவதற்கு தன் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஆத்திரியா-அங்கேரியால் பயன்படுத்த முடிந்தது. கடுமையான இழப்புகளை சந்தித்ததற்குப் பிறகு செர்பியாவின் தலைநகரான பெல்கிறேடை ஆத்திரியர்கள் குறுகிய காலத்திற்கு ஆக்கிரமித்திருந்தனர். கோலுபரா யுத்தத்தில் நடத்தப்பட்ட ஒரு செர்பிய பதில் தாக்குதலானது ஆத்திரியர்களை செர்பியாவிலிருந்து 1916ஆம் ஆண்டின் இறுதியில் துரத்துவதில் வெற்றியடைந்தது. 1915ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கு ஆத்திரியா-அங்கேரியானது அதன் இராணுவ சேம கையிருப்பு படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் சண்டையிடுவதற்கு பயன்படுத்தியிருந்தது. எனினும் செர்பியா மீதான தாக்குதலுக்கு தங்களுடன் இணைவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்ததன் மூலம் செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய தூதர்கள் எதிர் தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்தனர்.[118] ஆத்திரியா-அங்கேரிய மாகாணங்களான சுலோவீனியா, குரோவாசியா மற்றும் பொசுனியா ஆகியவை செர்பியா, உருசியா மற்றும் இத்தாலியுடனான சண்டையில் ஆத்திரியா-அங்கேரிக்கு துருப்புக்களை வழங்கின. அதே நேரத்தில் மான்டினீக்ரோ செர்பியாவுடன் இணைந்தது.[119]
செர்பியா மீது 14 அக்டோபர் 1915 அன்று பல்கேரியா போரை அறிவித்தது. மக்கென்சென் தலைமையிலான 2.50 இலட்சம் வீரர்களைக் கொண்ட ஆத்திரியா-அங்கேரிய இராணுவம் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த தாக்குதலில் தன்னை இணைத்துக் கொண்டது. தற்போது பல்கேரியாவையும் உள்ளடக்கியிருந்த மைய சக்திகள் ஒட்டு மொத்தமாக 6 இலட்சம் துருப்புகளை செர்பியாவுக்கு அனுப்பியிருந்தன. செர்பியாவானது ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான காலத்தில் வெல்லப்பட்டது. இரு முனைகளிலும் போரில் சண்டையிட்டு கொண்டிருந்த மற்றும் தோல்வியடையும் நிலையை எதிர் நோக்கி இருந்த செர்பிய இராணுவமானது வடக்கு அல்பேனியாவுக்குள் பின் வாங்கியது. கொசோவா யுத்தத்தில் செர்பியர்கள் தோல்வியடைந்தனர். 6-7 சனவரி 1916இல் மோச்கோவக் யுத்தத்தில் அத்திரியாத்திக் கடற்கரையை நோக்கி பின்வாங்கிக் கொண்டிருந்த செர்பியர்களுக்கு மான்டினீக்ரோ படையினர் பக்கவாட்டு பாதுகாப்பை அளித்தனர். ஆனால் இறுதியாக ஆத்திரியர்கள் மான்டினீக்ரோவையும் வென்றனர். உயிர் பிழைத்திருந்த செர்பிய வீரர்கள் கப்பல் மூலம் கிரேக்கத்திற்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர்[120]. இந்த வெற்றிக்கு பிறகு செர்பியாவானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியாவால் பிரித்துக் கொள்ளப்பட்டது.[121]
1915ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பிரெஞ்சு-பிரித்தானிய படையானது கிரேக்கத்தின் சலோனிகாவில் உதவி அளிப்பதற்காகவும், கிரேக்க அரசாங்கத்தை மைய சக்திகளுக்கு எதிராக போரை அறிவிக்கச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காகவும் வந்திறங்கியது. எனினும் செருமனிக்கு ஆதரவான கிரேக்க மன்னர் முதலாம் கான்சுடன்டைன் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்த எலெப்தெரியோசு வெனிசெலோசின் அரசாங்கத்தை நேச நாடுகளின் சிறப்பு படை வருவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்தார்.[122] கிரேக்க மன்னர் மற்றும் நேச நாடுகளுக்கு இடையிலான உரசலானது கிரேக்கம் பிரிக்கப்படும் நிலை வரை தொடர்ந்து அதிகரித்தது. மன்னருக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்த பகுதிகள் மற்றும் சலோனிகாவில் நிறுவப்பட்ட வெனிசெலோசின் புதிய மாகாண அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் இறுதியாக கிரேக்கம் பிரிக்கப்பட்டது. தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏதென்சில் நேச நாட்டு மற்றும் கிரேக்க அரசு படைகளுக்கு இடையிலான ஓர் ஆயுதச் சண்டைக்கு பிறகு கிரேக்க மன்னர் பதவி விலகினார். இந்த சண்டையானது நோவம்விரியானா என்றும் அறியப்படுகிறது. கிரேக்க மன்னருக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் அலெக்சாந்தர் அவரது பதவிக்கு வந்தார். சூன் 1917 அன்று நேச நாடுகள் பக்கம் கிரேக்கம் அலுவல் பூர்வமாக போரில் இணைந்தது.
மாசிடோனிய போர் முனையானது தொடக்கத்தில் பெரும்பாலும் மாறாததாக இருந்தது. கடுமையான இழப்புகளை தந்த மொனசுதிர் தாக்குதலைத் தொடர்ந்து 19 நவம்பர் 1916 அன்று மீண்டும் பிதோலாவை கைப்பற்றியதன் மூலம் மாசிடோனியாவின் சில பகுதிகளை பிரெஞ்சு மற்றும் செர்பிய படைகள் கைப்பற்றின. இது இப்போர் முனைக்கு ஒரு நிலைத் தன்மையை கொடுத்தது.[123]
பெரும்பாலான செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய துருப்புக்கள் பின் வாங்கியதற்கு பிறகு செப்டம்பர் 1918இல் வர்தர் தாக்குதலில் செர்பியா மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் இறுதியாக ஒரு முன்னேற்றத்தை அடைந்தன. தோபுரோ உச்சி யுத்தத்தில் பல்கேரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பல்கேரிய இராணுவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொழுது 25 செப்டம்பருக்குள் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் எல்லையை தாண்டி முதன்மை பல்கேரியாவுக்குள் நுழைந்தன. நான்கு நாட்களுக்கு பிறகு 29 செப்டம்பர் 1918 அன்று பல்கேரியா தோல்வியை ஒப்புக் கொண்டது.[124] செருமானிய உயர் தலைமையானது இதற்கு எதிர்வினையாக எல்லை கோட்டை தற்காப்பதற்காக துருப்புகளை அனுப்பியது. ஆனால் ஒரு போர் முனையை மீண்டும் நிறுவுவதற்கு இந்த துருப்புகள் மிகவும் பலவீனமானவையாக இருந்தன.[125]
மாசிடோனிய போர் முனையானது மறைந்து விட்டதன் பொருள் யாதெனில் புடாபெசுட்டு மற்றும் வியன்னாவுக்கான வழியானது நேச நாடுகளின் படைகளுக்கு தற்போது திறந்து விடப்பட்டது என்பதாகும். இன்டன்பர்க்கு மற்றும் லுதென்தோர்பு ஆகியோர் உத்தி மற்றும் திட்ட சமநிலையானது தீர்க்கமாக மைய சக்திகளுக்கு எதிராக முடிவானதை குறிப்பிட்டனர். பல்கேரியா வீழ்ச்சியடைந்து ஒரு நாளுக்குப் பிறகு உடனடி அமைதி உடன்படிக்கைக்கு வலியுறுத்தினர்.[126]
உதுமானியப் பேரரசு
[தொகு]உருசியாவின் காக்கேசிய நிலப்பரப்புகள் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவுடனான பிரிட்டனின் தொடர்புகளுக்கு உதுமானியர்கள் அச்சுறுத்தலாக விளங்கினார். சண்டையானது தொடர்ந்த போது போரில் ஐரோப்பிய சக்திகள் கவனம் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உதுமானியப் பேரரசு பூர்வகுடி ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய கிறித்தவ மக்களை ஒழிக்கும் ஒரு பெரிய அளவிலான இனப் படுகொலையை நடத்தியது. இவை ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய இனப் படுகொலைகள் என்று அறியப்படுகின்றன.[127][128][129]
பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் தம் அயல் நாட்டு போர் முனைகளை கலிப்பொலி (1915) மற்றும் மெசொப்பொத்தேமிய (1914) படையெடுப்புகளின் மூலம் தொடங்கினர். கலிப்பொலியில் உதுமானியப் பேரரசானது வெற்றிகரமாக பிரித்தானிய, பிரெஞ்சு, மற்றும் ஆத்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ பிரிவினரை வெற்றிகரமாக முறியடித்தது. மெசொப்பொத்தேமியாவில் மாறாக உதுமானியர்களின் கூத் முற்றுகையில் (1915-16) பிரித்தானிய தற்காப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, மார்ச் 1917இல் பிரித்தானிய ஏகாதிபத்திய படைகள் மீண்டும் ஒருங்கிணைந்து பகுதாதுவை கைப்பற்றின. மெசொப்பொத்தேமியாவில் பிரித்தானியர்களுக்கு உள்ளூர் அரேபிய மற்றும் அசிரிய வீரர்கள் உதவி செய்தனர். அதே நேரத்தில் உதுமானியர்கள் உள்ளூர் குர்து மற்றும் துருக்கோமன் பழங்குடியினங்களை பயன்படுத்தினர்.[130]
மேலும் மேற்கே 1915 மற்றும் 1916இல் சூயஸ் கால்வாயானது உதுமானிய தாக்குதல்களில் இருந்து தற்காக்கப்பட்டது. ஆகத்து மாதத்தில் ஒரு செருமானிய மற்றும் உதுமானியப் படையானது உரோமானி யுத்தத்தில் ஆத்திரேலியா-நியூசிலாந்து காலாட் படை பிரிவு மற்றும் பிரித்தானிய இராணுவத்தின் 52வது (தாழ்நில) காலாட் படை பிரிவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு எகிப்திய சிறப்பு படையானது சினாய் தீபகற்பம் முழுவதும் முன்னேறியது. திசம்பரில் மக்தபா யுத்தம் மற்றும் சனவரி 1917இல் எகிப்திய சினாய் மற்றும் உதுமானிய பாலத்தீனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எல்லையில் நடந்த இராப்பா யுத்தத்தில் உதுமானியப் படைகளை உந்தித் தள்ளியது.[131]
உருசிய இராணுவங்கள் காக்கேசிய படையெடுப்பில் பொதுவாக வெற்றி பெற்றன. உதுமானிய ஆயுதப்படைகளின் உச்ச தளபதியான என்வர் பாஷா வெற்றி மற்றும் அதிகாரம் மீது உயரவா உடையவராக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. உருசியாவிடம் முன்னர் இழந்த பகுதிகள் மற்றும் நடு ஆசியாவை மீண்டும் வெல்வது குறித்து கனவு கண்டார். எனினும், இவர் ஒரு பலவீனமான தளபதியாக இருந்தார்.[132] 1 இலட்சம் வீரர்களைக் கொண்டு திசம்பர் 1914இல் காக்கேசியாவில் உருசியர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை இவர் தொடங்கினார். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்த உருசியர்களின் நிலைகளுக்கு எதிராக குளிர்காலத்தில் ஒரு தாக்குதலை நடத்துவதற்கு இவர் வலியுறுத்தினார். சரிகமிசு யுத்தத்தில் இவர் தனது படைகளில் 86 சதவீதத்தை இழந்தார்.[133]
உதுமானியப் பேரரசானது செருமானிய உதவியுடன் திசம்பர் 1916இல் பாரசீகம் (தற்போதைய ஈரான்) மீது படையெடுத்தது. காசுப்பியன் கடலுக்கு அருகில் இருந்த பக்கூவை சுற்றியிருந்த எண்ணெய் வளங்களுக்கான பிரித்தானிய மற்றும் உருசிய தொடர்பை வெட்டிவிடும் முயற்சியாக அது இதைச் செய்தது.[134] வெளிப்படையாக பாரசீகமானது நடுநிலை வகித்து வந்தது. எனினும், நீண்ட காலமாக பிரித்தானிய மற்றும் உருசிய செல்வாக்கு பகுதியாக இருந்தது. உதுமானியர்கள் மற்றும் செருமானியர்களுக்கு குர்து மற்றும் அசேரி படைகளும், கசுகை, தங்கிசுதானிகள், லுர்கள் மற்றும் கம்சே போன்ற முதன்மையான ஈரானிய பழங்குடிகளின் ஒரு பெரும் அளவிலான எண்ணிக்கையுடையவர்களும் உதவி புரிந்தனர். அதே நேரத்தில் உருசியர்கள் மற்றும் பிரித்தானியர்களுக்கு ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் உதவி புரிந்தன. பாரசீக படையெடுப்பானது 1918ஆம் ஆண்டு வரை நீடித்தது. உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு ஒரு தோல்வியாக இது முடிவடைந்தது. எனினும், 1917இல் போரில் இருந்து உருசியா பின்வாங்கிய நிகழ்வானது உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் படைகளுக்கு ஒரு தொடர்ச்சியான தோல்விகளை கொடுத்த ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் இராணுவ பொருட்கள் வழங்கும் வழிகள் துண்டிக்கப்பட்டது, எண்ணிக்கை குறைவு, ஆயுதம் குறைவு மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால் பாதிப்படைந்தன. இதன் காரணமாக அப்படையினர் வடக்கு மெசபத்தோமியாவில் இருந்த பிரித்தானிய கோடுகளை நோக்கி சண்டையிட்டவாறே தப்பித்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.[135]
1915 - 1916இல் உருசிய தளபதியாக இருந்த தளபதி யுதேனிச்சு ஒரு தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் பெரும்பாலான தெற்கு காக்கேசியாவில் இருந்து துருக்கியர்களை துரத்தி அடித்தார்.[133] 1916ஆம் ஆண்டின் படையெடுப்பின் போது எருசுரும் தாக்குதலில் உருசியர்கள் துருக்கியர்களை தோற்கடித்தனர். மேலும் திராப்சோனையும் ஆக்கிரமித்தனர். 1917இல் உருசியாவின் மாட்சி மிக்க கோமான் நிகோலசு காக்கேசிய போர்முனைக்கான தலைமையை ஏற்றார். வெற்றி பெற்ற நிலப்பரப்புகளுக்கு உருசிய ஜார்ஜியாவில் இருந்து ஒரு தொடருந்து வழித்தடத்தை ஏற்படுத்த நிகோலசு திட்டமிட்டார். இதன் மூலம் 1917ஆம் ஆண்டுக்கான ஒரு புதிய தாக்குதலுக்காக இராணுவ பொருட்கள் கொண்டு வரப்படலாம் என எண்ணினார். எனினும், மார்ச் 1917 (இது புரட்சிக்கு முந்தைய உருசிய நாட்காட்டியில் பெப்ரவரி என்று குறிப்பிடப்படுகிறது) பெப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து ஜார் மன்னர் பதவி விலகினார். புதிய உருசிய காக்கேசிய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது.
பிரித்தானிய அயல்நாட்டு அலுவலகத்தின் அரேபிய பிரிவால் தூண்டப்பட்ட அரபுக் கிளர்ச்சியானது சூன் 1916இல் தொடங்கியது. இதன் முதல் சண்டையாக மெக்கா யுத்தம் நடைபெற்றது. மெக்காவைச் சேர்ந்த சரீப் உசைன் இதற்கு தலைமை தாங்கினார். திமிஷ்குவை உதுமானியர்கள் சரணடைய வைத்ததுடன் இது முடிவடைந்தது. மதீனாவின் உதுமானிய தளபதியான பக்ரி பாஷா மதீனா முற்றுகையின் போது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தாக்குப் பிடித்தார். பிறகு சனவரி 1919இல் சரணடைந்தார்.[136]
இத்தாலிய லிபியா மற்றும் பிரித்தானிய எகிப்து ஆகிய நாடுகளின் எல்லையின் பக்கவாட்டில் அமைந்திருந்த செனுச்சி பழங்குடியினமானது துருக்கியர்களால் தூண்டப்பட்டு ஆயுத உதவி பெற்றது. இப்பழங்குடியினம் நேச நாட்டு துருப்புகளுக்கு எதிராக ஒரு சிறு அளவிலான கரந்தடிப் போர் முறையை தொடுத்தது. செனுச்சி படையெடுப்பில் இப்பழங்குடியினத்தை எதிர்ப்பதற்காக 12,000 துருப்புகளை அனுப்பும் நிலைக்கு பிரித்தானியர்கள் தள்ளப்பட்டனர். 1916ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த கிளர்ச்சியானது இறுதியாக நொறுக்கப்பட்டது.[137]
உதுமானிய போர் முனைகளில் ஒட்டு மொத்த நேச நாட்டுப் போர் வீரர்களின் இழப்பானது 6.50 இலட்சம் வீரர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த உதுமானிய இழப்பானது 7.25 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3.25 இலட்சம் பேர் இறந்தனர். 4 இலட்சம் பேர் காயமடைந்தனர்.[138]
இத்தாலிய போர் முனை
[தொகு]1882இலேயே முக்கூட்டணியில் இத்தாலி இணைந்திருந்த போதும், இதன் பாரம்பரிய எதிரியான ஆத்திரியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமானது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. பின் வந்த அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தன. 1915ஆம் ஆண்டு தான் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டன.[139] திரெந்தினோ, ஆத்திரிய கரைப் பகுதி, ரிசேகா மற்றும் தால்மேசியா ஆகியவற்றில் இருந்த ஆத்திரிய-அங்கேரிய நிலப்பரப்பு மீது இத்தாலிய தேசியவாதிகளுக்கு விருப்பம் இருந்தது. 1866ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எல்லைகளை பாதுகாப்பதற்கு இப்பகுதிகள் மிகவும் இன்றியமையாதவை என கருதப்பட்டன.[140] 1902ஆம் ஆண்டு பிரான்சுடன் உரோம் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது. இந்த உடன்படிக்கைப் படி பிரான்சை செருமனி தாக்கினால் இத்தாலி நடுநிலை வைக்கும் என்பதாகும். முக்கூட்டணியில் இத்தாலியின் பங்கை இந்த உடன்படிக்கை ஒன்றுமில்லாததாக்கியது.[141]
1914ஆம் ஆண்டு போர் தொடங்கிய போது முக்கூட்டணியானது இயற்கையில் தற்காப்புத் தன்மை உடையது என இத்தாலி வாதிட்டது. செர்பியா மீதான ஆத்திரியாவின் தாக்குதலுக்கு உதவுவதற்கு தான் உடன்படாது என்றும் கூறியது. செப்டம்பரில் துருக்கி மைய சக்திகளின் ஒர் உறுப்பினரான போது மைய சக்திகளின் பக்கம் இத்தாலி இணைவதற்கு எதிர்ப்பானது மேலும் அதிகரித்தது. 1911ஆம் ஆண்டு முதல் லிபியா மற்றும் தோதேகனீசு தீவுகளில் இருந்த உதுமானிய பகுதிகளை இத்தாலி ஆக்கிரமித்திருந்தது.[142] இத்தாலிய நடுநிலைமையை மாற்றுவதற்காக மைய சக்திகள் இத்தாலிக்கு பிரெஞ்சு பாதுகாப்பு பகுதியான துனீசியாவை கொடுக்க முன் வந்தன. இதற்கு பதிலாக போரில் உடனடியாக இத்தாலி நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்தின. அதே நேரத்தில் ஆத்திரிய நிலப்பரப்பு மீதான இத்தாலியின் கோரிக்கை மற்றும் தோதேகனீசு தீவின் மீதான இறையாண்மை ஆகியவற்றுக்கு நேச நாடுகள் ஒப்புக் கொண்டன.[143] இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் இந்த பிரிவுகள் ஏப்ரல் 1915இன் இலண்டன் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. இத்தாலி முந்நேச நாடுகள் பக்கம் இணைந்தது. 23 மே அன்று ஆத்திரியா-அங்கேரி மீது போரை அறிவித்தது.[144] 15 மாதங்கள் கழித்து செருமனி மீதும் போரை அறிவித்தது.
1914க்கு முந்தைய கால கட்டத்தில் இத்தாலியின் இராணுவமானது ஐரோப்பாவிலேயே பலவீனமானதாக இருந்தது. அதிகாரிகள், பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆகியவற்றில் பற்றாக்குறை இருந்தது. போதிய அளவு போக்குவரத்து வசதிகள் மற்றும் நவீன ஆயுதங்களும் இதனிடம் இல்லாமல் இருந்தன. ஏப்ரல் 1915ஆம் ஆண்டு வாக்கில் இந்த குறைகளில் சில சரி செய்யப்பட்டன. ஆனால் இலண்டன் ஒப்பந்தத்தால் கோரப்பட்ட ஒரு பெரும் தாக்குதலுக்கு இத்தாலி இன்னும் தயாராகாமலேயே இருந்தது.[145] அதிகப்படியான எண்ணிக்கையில் இருந்த வீரர்களை கொண்டிருந்த இத்தாலியின் அனுகூலத்தை கடுமையான நிலப்பரப்பானது குறைத்தது. பெரும்பாலான சண்டையானது கடல் பரப்பில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்த ஆல்ப்ஸ் மற்றும் தோலோமைத்து மலைப் பகுதிகளில் நடைபெற்றது. அங்கு பதுங்கு குழிகளை அமைக்க பாறைகளையும், பனிக் கட்டிகளையும் வெட்ட வேண்டியிருந்தது. மேலும், துருப்புகளுக்கு இராணுவ பொருட்களை வழங்குவதும் ஒரு முதன்மையான சவாலாக இருந்தது. நன்றாக வகுக்கப்படாத உத்திகள் இந்த பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கின.[146] 1915 மற்றும் 1917க்கு இடையில் இத்தாலிய தளபதியான லுயிகி கதோர்னா இசோன்சோவுக்கு பக்கவாட்டில் ஒரு தொடர்ச்சியான முன் கள தாக்குதல்களை மேற்கொண்டார். எனினும், இதில் சிறிதளவே முன்னேற்றம் கண்டார். ஏராளமான வீரர்களை இழந்தார். போரின் முடிவில் சண்டையில் இழந்த ஒட்டு மொத்த இத்தாலிய வீரர்களின் எண்ணிக்கையானது சுமார் 5.48 இலட்சமாக இருந்தது.[147]
1916ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தங்களது இசுதிராபே படையெடுப்பில் ஆத்திரியா-அங்கேரியர்கள் அசியாகோவில் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் சிறிதளவே வெற்றி பெற்றனர். அவர்கள் இத்தாலியர்களால் தைரோலுக்கு மீண்டும் உந்தித் தள்ளப்பட்டனர்.[148] மே 1916இல் தெற்கு அல்பேனியாவை இத்தாலிய படைப் பிரிவினர் ஆக்கிரமித்து இருந்த போதும், அவர்களது முதன்மையான இலக்காக இசோன்சோ போர் முனை திகழ்ந்தது. ஆகத்து 1916இல் கோரிசியா கைப்பற்றப்பட்டது. பிறகு இந்த போர் முனையானது அக்டோபர் 1917 வரை யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தது. கபோரெட்டோவில் ஓர் ஒன்றிணைந்த ஆத்திரியா-அங்கேரியப் படையானது ஒரு பெரும் வெற்றியை பெற்றதற்கு பிறகு, இத்தாலிய தளபதி பதவியானது கதோர்னாவிடம் இருந்து ஆர்மாண்டோ தயசிடம் கொடுக்கப்பட்டது. அவர் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பின் வாங்கி பியாவே ஆற்றின் பக்கவாட்டில் தனது நிலைகளை அமைத்து தற்காக்க ஆரம்பித்தார்.[149] சூன் 1918இல் ஓர் இரண்டாவது ஆத்திரிய தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. அக்டோபர் மாத இறுதியில் மைய சக்திகள் தோல்வியடைந்து விட்டது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. 24 அக்டோபர் அன்று விட்டோரியோ வெனெட்டோ யுத்தத்தை தயசு தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் பிடிவாதமான எதிர்ப்பை சந்தித்தார்.[150] ஆனால் ஆத்திரியா-அங்கேரி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காரணத்தால் இத்தாலியிலிருந்து அங்கேரிய படைப் பிரிவினர் தாங்கள் குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.[151] இதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, மேலும் பலரும் இவ்வாறு கூற ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது. இத்தாலியர்கள் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை பிடித்தனர்.[152] 30 நவம்பர் அன்று வில்லா கியுசுதி போர் நிறுத்த ஒப்பந்தமானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலிக்கு இடையிலான சண்டைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அத்திரியாத்திக்கு கடலுக்கு பக்கவாட்டில் திரியேசுதே மற்றும் பிற பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இத்தாலிக்கு அப்பகுதிகள் 1915இல் கொடுக்கப்பட்டன.[153]
உருமேனிய பங்கெடுப்பு
[தொகு]1883ஆம் ஆண்டு முக்கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இரகசியமாக ஒப்புக்கொண்ட போதும் 1912 - 1913 பால்கன் போர்களில் பல்கேரியாவிற்கு மைய சக்திகள் ஆதரவளித்ததன் காரணமாக உருமேனியாவுக்கும், மைய சக்திகளுக்கும் கருத்து வேறுபாடானது அதிகரித்து வந்தது. அங்கேரியால் கட்டுப்படுத்தப்பட்ட திரான்சில்வேனியாவில்[154] உருமேனிய இன சமூகங்களின் நிலை குறித்தும் உருமேனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மொத்த மக்கள் தொகையான 50 இலட்சத்தில் 28 இலட்சம் உருமேனிய இனத்தவரை திரான்சில்வேனியா உள்ளடக்கி இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[155] உருமேனியாவின் ஆளும் வர்க்கத்தினர் செருமானிய ஆதரவு மற்றும் நேச நாட்டு ஆதரவு பிரிவுகளாக இருந்தனர். 1914இல் உருமேனியா தொடர்ந்து நடு நிலை வகித்தது. உருமேனியாவும் இத்தாலியைப் போலவே, செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் பிரகடனம் செய்தால் அப்போரில் உருமேனியாவும் இணைய வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை என்று கூறியது.[156] இந்நிலையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உருமேனியா பேணி வந்தது. அதே நேரத்தில் இராணுவ பொருட்கள் மற்றும் ஆலோசகர்களை உருமேனிய நிலப்பரப்பு வழியாக எடுத்துச் செல்வதற்கு செருமனி மற்றும் ஆத்திரியாவுக்கு உருமேனியா அனுமதி அளித்து வந்தது.[157]
செப்டம்பர் 1914இல் திரான்சில்வேனிய மற்றும் பனத் உள்ளிட்ட ஆத்திரியா-அங்கேரிய நிலப்பரப்புகளுக்கு உருமேனியா கொண்டிருந்த உரிமையை உருசியா ஒப்புக்கொண்டது. இப்பகுதிகளை உருமேனியா வாங்கியது பரவலான பொது மக்களின் ஆதரவை பெற்றது.[155] ஆத்திரியாவுக்கு எதிராக உருசியாவின் வெற்றியானது ஆகத்து 1916இன் புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் நேச நாடுகள் பக்கம் உருமேனியா இணைவதற்கு இட்டுச் சென்றது.[157] கருதுகோள் இசட் என்று அறியப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் உருமேனிய இராணுவமானது திரான்சில்வேனியாவுக்குள் ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டது. அதே நேரத்தில், தெற்கு தோபுருசா மற்றும் கியூர்கியூ ஆகிய பகுதிகள் மீது ஒரு வேளை பல்கேரியா பதில் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் திட்டமிட்டது.[158] 27 ஆகத்து 1916 அன்று உருமேனியர்கள் திரான்சில்வேனியாவை தாக்கினர். அம்மாகாணத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதிகளை ஆக்கிரமித்தனர். பிறகு, முன்னாள் செருமானிய தலைமை தளபதி பால்கன்கயனால் தலைமை தாங்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட செருமானிய 9ஆம் இராணுவத்தால் மீண்டும் அங்கிருந்து உந்தித் தள்ளப்பட்டனர்.[159] ஓர் ஒன்றிணைந்த செருமானிய-பல்கேரிய-துருக்கிய தாக்குதலானது தோபுருசா மற்றும் கியூர்கியூ பகுதிகளை கைப்பற்றியது. எனினும், பெருமளவிலான உருமேனிய இராணுவமானது சுற்றி வளைக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. புக்கரெஸ்டுக்கு பின் வாங்கியது. புக்கரெஸ்ட் 6 திசம்பர் 1916 அன்று மைய சக்திகளிடம் சரண் அடைந்தது.[160]
போருக்கு முந்தைய ஆத்திரியா-அங்கேரியின் மக்கள் தொகையானது உருமேனியர்களை சுமார் 16 சதவீதமாக உள்ளடக்கி இருந்தது. போர் தொடர்ந்த நேரத்தில் ஆத்திரியா-அங்கேரிக்கான அவர்களது விசுவாசமானது மங்க ஆரம்பித்தது. 1917ஆம் ஆண்டு வாக்கில் ஆத்திரிய ஏகாதிபத்திய இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற 3 இலட்சம் வீரர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் உருமேனிய இனத்தவர்களாக இருந்தனர்.[161] உருசிய பேரரசால் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளில் இருந்து உருமேனிய தன்னார்வ பிரிவானது உருவாக்கப்பட்டது. இப்பிரிவினர் 1917இல் உருமேனியாவிற்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்.[162][163][n] இவர்களில் பலர் மரசுதி, மரசெசுதி மற்றும் ஒயிதுசு ஆகிய இடங்களில் சண்டையிட்டனர். அங்கு உருசிய ஆதரவுடன் உருமேனிய இராணுவமானது மைய சக்திகளின் ஒரு தாக்குதலை தோற்கடித்தது. சில நிலப்பரப்புகளையும் கூட மீண்டும் கைப்பற்றியது.[166] அக்டோபர் புரட்சியானது போரில் இருந்து விலகும் நிலைக்கு உருசியாவை தள்ளியதற்கு பிறகு, உருமேனியா தனித்து விடப்பட்டது. 9 திசம்பர் 1917 அன்று உருமேனியா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.[167] இதற்கு பிறகு சீக்கிரமே, அருகில் இருந்த உருசிய நிலப்பரப்பான பெச்சராபியாவில் போல்செவிக்குகள் மற்றும் உருமேனிய தேசியவாதிகளுக்கு இடையில் சண்டை ஆரம்பித்தது. உருமேனிய தேசியவாதிகள் தங்கள் நாட்டினரிடமிருந்து இராணுவ உதவியை வேண்டினர். உருமேனிய நாட்டினரின் தலையீட்டுக்குப் பிறகு பெப்ரவரி 1918இல் சுதந்திரமான மால்தோவிய சனநாயக குடியரசானது உருவாக்கப்பட்டது. இக்குடியரசு உருமேனியாவுடன் இணைவதற்கு 27 மார்ச் அன்று வாக்களித்தது.[168]
7 மே 1918 அன்று மைய சக்திகளுடன் உருமேனியா புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. பெச்சராபியா மீதான உருமேனிய இறையாண்மையை அங்கீகரித்ததற்கு பதிலாக, கார்பேதிய மலைகளில் இருந்த கணவாய்களின் கட்டுப்பாட்டை ஆத்திரியா-அங்கேரிக்கு அளிப்பதற்கும், செருமனிக்கு எண்ணேய் சலுகைகளை கொடுப்பதற்கும் இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் இருந்தன.[169] பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும், உருமேனியாவின் முதலாம் பெர்டினான்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். அவர் நேச நாடுகளின் ஒரு வெற்றிக்காக நம்பிக்கை கொண்டிருந்தார். 10 நவம்பர் 1918 அன்று நேச நாடுகளுக்கு ஆதரவாக உருமேனியா போரில் மீண்டும் நுழைந்தது. 11 நவம்பர் 1918இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி புக்கரெஸ்ட் ஒப்பந்தமானது அலுவல் பூர்வமாக ஏற்பதற்கு உரியதல்ல என்று அறிவிக்கப்பட்டது.[170][o] 1914 மற்றும் 1918க்கு இடையில் ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தில் 4 - 6 இலட்சம் வரையிலான உருமேனியா இனத்தவர்கள் சேவையாற்றினர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1.50 இலட்சம் பேர் யுத்த களத்தில் கொல்லப்பட்டனர். தற்போதைய உருமேனிய எல்லைகளுக்குள் உட்பட்ட ஒட்டு மொத்த இராணுவ மற்றும் குடிமக்களின் இறப்பானது 7.48 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[172]
கிழக்குப் போர் முனை
[தொகு]ஆரம்ப நடவடிக்கைகள்
[தொகு]பிரான்சுடன் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, போரின் ஆரம்பத்தில் உருசியாவின் திட்டமானது ஆத்திரிய கலீசியா மற்றும் கிழக்கு புருசியாவுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரே நேரத்தில் முன்னேறுவது ஆகும். கலீசியா மீதான உருசியர்களின் தாக்குதலானது பெரும்பாலும் வெற்றிகரமாக இருந்த போதிலும், படை வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வேகம் காரணமாக உருசியர்கள் பெரும்பாலான தங்களது கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாமல் இதை செய்தனர். மேற்குப் போர் முனையில் இருந்து செருமனி அதன் துருப்புகளை இடமாற்றுமாறு கட்டாயப்படுத்தும் உருசியர்களின் குறிக்கோளானது இந்த படையெடுப்புகளால் அடையப்பட்டது. எனினும், கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாத காரணங்களானவை தன்னென்பர்க்கு மற்றும் மசூரிய ஏரிகளில் முறையே ஆகத்து மற்றும் செப்டம்பர் 1914இல் உருசிய தோல்விகளுக்கு காரணமாயின. இதன் காரணமாக கிழக்கு பகுதியில் இருந்து கடுமையான இழப்புகளுடன் பின் வாங்கும் நிலைக்கு உருசியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.[173][174] 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் கலீசியாவில் இருந்தும் அவர்கள் பின் வாங்கினர். மே 1915இன் கோர்லிசு-தர்னோவு தாக்குதலானது உருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மீது படையெடுக்க மைய சக்திகளுக்கு வாய்ப்பளித்தது.[175] 5 ஆகத்து அன்று வார்சாவாவை இழந்த நிகழ்வானது உருசியர்கள் அவர்களது போலந்து நிலப்பரப்புகளை அப்படியே விட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளியது.
கிழக்கு கலீசியாவில் ஆத்திரியர்களுக்கு எதிராக வெற்றிகரமான சூன் 1916 புருசிலோவ் தாக்குதல் நடைபெற்ற போதும்,[176] இராணுவ பொருட்களின் பற்றாக்குறை, கடுமையான இழப்புகள் மற்றும் தலைமைத்துவ தோல்விகள் ஆகியவை உருசியர்கள் தங்களது வெற்றியில் இருந்து முழுவதுமாக மிகு நலன் பெறுவதிலிருந்து தடுத்தன. எனினும், போரின் மிக முக்கியமான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். வெர்துனில் இருந்து செருமானிய வீரர்களை இடமாற்றியது, இத்தாலியர்கள் மீது இருந்த ஆத்திரியா-அங்கேரிய அழுத்தத்தை விடுவித்தது மற்றும் 27 ஆகத்து அன்று நேச நாடுகளின் பக்கம் உருமேனியா போரில் நுழைவதற்கு இணங்க வைத்தது ஆகியவற்றுக்கு இது காரணமானது. ஆத்திரியா மற்றும் உருசியா ஆகியவற்றின் இரு இராணுவங்களுக்கும் இடரார்ந்த பலவீனத்தை ஏற்படுத்த இந்த தாக்குதல் காரணமானது. இவர்களது இழப்புக்களின் காரணமாக இரு இராணுவங்களின் தாக்குதல் ஆற்றலும் பெருமளவு பாதிக்கப்பட்டது. போர் மீதான நல்லெண்ணமும் உருசியாவில் படிப் படியாக தகர்க்கப்பட்டது. இறுதியாக இது உருசிய புரட்சிக்கு வழி வகுத்தது.[177]
போர் முனையில் ஜார் மன்னர் தொடர்ந்து இருந்ததால் உருசியாவில் மக்களிடையே அமைதியின்மை அதிகமானது. உருசிய போர் முனையானது பேரரசி அலெக்சாந்திராவால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இவரது அதிகரித்து வந்த ஆற்றலற்ற ஆட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை 1916இன் இறுதியில் பரவலான போராட்டங்களுக்கு வழி வகுத்தது.[சான்று தேவை]
மைய சக்திகளின் அமைதி முயற்சிகள்
[தொகு]12 திசம்பர் 1916 அன்று வெர்துன் யுத்தம் மற்றும் உருமேனியாவிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த ஒரு மிருகத் தனமான 10 மாதங்களுக்கு பிறகு நேச நாடுகளுடன் ஓர் அமைதியை ஏற்படுத்த செருமனி முயற்சித்தது.[178] எனினும், ஒரு "போலித் தனமான போர் சூழ்ச்சி" என எந்த வித யோசனையும் இன்றி இந்த முயற்சியானது நிராகரிக்கப்பட்டது.[178]
இதற்கு பிறகு சீக்கிரமே ஐக்கிய அமெரிக்க அதிபரான ஊட்ரோ வில்சன் ஓர் அமைதி ஏற்படுத்துபவராக தலையீடு செய்ய முயற்சித்தார். இரு பிரிவினரும் தங்களது கோரிக்கைகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு வேண்டினார். பிரித்தானிய பிரதமர் லாய்ட் ஜார்ஜின் போர் தொடர்பான அமைச்சரவையானது செருமனி அளிக்க வந்த வாய்ப்பை நேச நாடுகளுக்கு இடையில் பிரிவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி என கருதியது. ஆரம்ப சீற்றம் மற்றும் பெருமளவு விவாதத்திற்குப் பிறகு வில்சனின் குறிப்பை ஒரு தனி முயற்சி என எடுத்துக் கொண்டது. "நீர்மூழ்கி சீற்றங்களை" தொடர்ந்து செருமனிக்கு எதிராக போருக்குள் நுழையும் தருவாயில் ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது என்ற சமிக்ஞையை இது காட்டியது. வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு அளிக்க வேண்டிய ஒரு பதில் கொடுத்து நேச நாடுகள் விவாதித்த அதே நேரத்தில் கருத்துகளை "நேரடியாக பரிமாறிக் கொள்ளும்" ஒரு முயற்சிக்கு ஆதரவாக செருமானியர்கள் வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு மட்டம் தட்டும் முறையில் மறுப்பு தெரிவித்தனர். செருமானிய பதில் குறித்து அறிந்த நேச நாட்டு அரசாங்கங்களுக்கு 14 சனவரி அன்று வெளியிடப்பட்ட அவற்றின் பதிலில் தெளிவான கோரிக்கைகளை கேட்க சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பாதிப்புகளை மறு சீரமைப்பு செய்தல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இருந்து வெளியேறுதல், பிரான்சு, உருசியா மற்றும் உருமேனியா ஆகியவற்றுக்கு நிவாரண தொகை அளித்தல், ஒவ்வொரு தேச குடிமகன்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் கொள்கை ஆகியவற்றை கோரின.[179] இத்தாலியர்கள், இசுலாவியர்கள், உருமேனியர்கள், செக்கோஸ்லோவாக்கியர்கள் ஆகியோரை விடுவித்தல் மற்றும் ஒரு "சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த போலந்தை உருவாக்குதல்" ஆகியவற்றையும் இந்த கோரிக்கைகள் உள்ளடக்கி இருந்தன.[179] பாதுகாப்பு குறித்த கேள்வியை பொறுத்த வரையில் எதிர் கால போர்களை தடுக்கும் அல்லது தாக்கத்தை குறைக்கும் பொருளாதார தடைகளுடன் கூடிய உத்தரவாதங்களை எந்த ஓர் அமைதி உடன்படிக்கைக்கும் ஒரு நிபந்தனையாக நேச நாடுகள் கோரின.[180] இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட கோரிக்கைகளையும் செருமனி முன்வைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு நேச நாடுகள் செருமனியின் வாய்ப்பளிப்பை நிராகரித்தன.
1917; முதன்மை நிகழ்வுகளின் காலவரிசை
[தொகு]மார்ச் முதல் நவம்பர் 1917: உருசியப் புரட்சி
[தொகு]1916இன் இறுதியில் போரில் இழந்த ஒட்டு மொத்த உருசியர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 50 இலட்சமாக இருந்தது. இவர்களில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் அல்லது கைது செய்யப்பட்டும் இருந்தனர். முதன்மை நகரப் பகுதிகள் உணவு பற்றாக்குறைகள் மற்றும் விலைவாசியால் பாதிக்கப்பட்டிருந்தன. மார்ச் 1917இல் ஜார் மன்னர் நிக்கலாசு பெத்ரோகிராதில் நடந்த ஓர் அலை போன்ற வேலை நிறுத்தங்களை கட்டாயப்படுத்தி ஒடுக்குமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார். ஆனால் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துருப்புகள் மறுத்தன.[181] புரட்சியாளர்கள் பெத்ரோகிராது சோவியத் என்ற மன்றத்தை உருவாக்கினர். இடது சாரிகள் அரசை கைப்பற்றும் நிலை வரலாம் என்று அச்சமடைந்த உருசியாவின் துமா அவையானது பதவியிலிருந்து விலகுமாறு நிக்காலசை கட்டாயப்படுத்தியது. உருசிய இடைக்கால அரசை நிறுவியது. இடைக்கால அரசானது போரை தொடரும் உருசியாவின் ஒப்புதலை உறுதி செய்தது. எனினும், பெத்ரோகிராது சோவியத் மன்றமானது கலைக்கப்பட மறுத்தது. போட்டி அதிகார மையங்களை உருவாக்கியது. குழப்பம் மற்றும் அமளிக்கு காரணமானது. இதன் காரணமாக முன் கள வீரர்கள் மன உறுதி குலைந்து போரிட மறுக்கும் நிலை அதிகரித்தது.[182]
1917இன் கோடை காலத்தில் உருமேனியாவை போரில் இருந்து வெளியேற்றுவதற்காக மைய சக்திகள் அகத்து வான் மக்கென்சென் தலைமையில் உருமேனியாவில் ஒரு தாக்குதலை தொடங்கின. இதன் காரணமாக ஒயிதுசு, மரசுதி மற்றும் மரசெசுதி ஆகிய இடங்களில் யுத்தங்கள் நடைபெற்றன. இதில் மைய சக்திகளின் 10 இலட்சம் துருப்புகள் பங்கெடுத்தன. இந்த யுத்தங்கள் 22 சூலை முதல் 3 செப்டம்பர் வரை நடைபெற்றன. இறுதியாக உருமேனிய இராணுவமானது வெற்றி பெற்றது. துருப்புகளை இத்தாலியப் போர் முனைக்கு மாற்ற வேண்டியிருந்ததால் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட அகத்து வான் மக்கென்செனால் இயலவில்லை.[183]
ஜார் மன்னர் பதவி விலகியதற்கு பிறகு செருமானிய அரசாங்கத்தின் உதவியுடன் விளாதிமிர் லெனின் தொடருந்து மூலம் சுவிட்சர்லாந்தில் இருந்து உருசியாவுக்குள் 16 ஏப்ரல் 1917 அன்று அழைத்துச் செல்லப்பட்டார். அதிருப்தி மற்றும் மாகாண அரசாங்கத்தின் பலவீனங்கள் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சியின் பிரபலம் அதிகரிப்பதற்கு வழி வகுத்தது. இக்கட்சி போரை உடனடியாக நிறுத்த கோரியது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு திசம்பரில் செருமனியுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. முதலில் செருமானிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள போல்செவிக்குகள் மறுத்தனர். ஆனால் உக்ரைன் வழியாக செருமானிய துருப்புக்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி அணி வகுத்து வந்த போது புதிய அரசாங்கமானது பிரெசுது-லிதோவுசுக் ஒப்பந்தத்திற்கு 3 மார்ச் 1918 அன்று ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தமானது பின்லாந்து, எசுதோனியா, லாத்வியா, லித்துவேனியா, மற்றும் போலந்தின் பகுதிகள் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்புகளை மைய சக்திகளுக்கு அளித்தது.[184] இந்த மிகப் பெரிய செருமானிய வெற்றி நிகழ்ந்த போதும், செருமானியர்களின் இளவேனிற்கால தாக்குதல் தோல்வியில் முடிந்ததற்கு, பிடிக்கப்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தேவைப்பட்ட மனித வளமானது செருமானியர்களிடம் இல்லை என்பதும் ஒரு பங்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மைய சக்திகளின் போர் முயற்சிக்கு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவே உணவு அல்லது பிற பொருட்களை இந்த ஒப்பந்தம் பெற்றுத் தந்தது.
உருசியப் பேரரசு போரில் இருந்து விலகிய பிறகு கிழக்குப் போர் முனையில் உருமேனியா தான் தனித்து விடப்பட்டதை உணர்ந்தது. மே 1918இல் மைய சக்திகளுடன் புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. உருமேனியா மற்றும் மைய சக்திகளுக்கு இடையிலான போரானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி நிலப்பரப்புகளை ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியாவிற்கும், எண்ணெய் சேமக் கையிருப்புகளை செருமனிக்கு குத்தகைக்கும் உருமேனியா விட வேண்டியிருந்தது. எனினும், உருமேனியாவுடன் பெச்சராபியா ஒன்றிணைவதை மைய சக்திகள் அங்கீகரித்ததையும் இந்த நிபந்தனைகள் உள்ளடக்கி இருந்தன.[185][186]
ஏப்ரல் 1917: ஐக்கிய அமெரிக்கா போரில் நுழைகிறது
[தொகு]ஐக்கிய அமெரிக்கா நேச நாடுகளுக்கு போர் பொருட்கள் வழங்குவதில் ஒரு முதன்மை வழங்குனராக திகழ்ந்தது. ஆனால், 1914இல் தொடர்ந்து நடு நிலை வகித்தது. இதற்கு பெரும் பகுதி காரணம் போரில் ஐக்கிய அமெரிக்கா ஈடுபடுவதற்கு உள்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு ஆகும்.[187] போருக்கான ஆதரவை உருவாக்க வில்சனுக்கு தேவைப்பட்டத்தில் செருமானிய நீர்மூழ்கி தாக்குதலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக திகழ்ந்தது. இதில் அமெரிக்க உயிரிழப்புகள் மட்டும் ஏற்படாமல் கப்பல்கள் கடலுக்குள் செல்ல மறுத்ததால் வணிகமும் முடங்கியது[188]. 7 மே 1915 அன்று ஒரு செருமானிய நீர்மூழ்கி கப்பலால் பிரித்தானிய பயணிகள் கப்பலான லூசிதனியா மூழ்கடிக்கப்பட்ட போது 128 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அதிபர் ஊட்ரோ வில்சன் செருமனி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார். வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறையை ஐக்கிய அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என்று எச்சரித்தார். ஆனால், போருக்குள் உள்ளிழுக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.[189] ஆகத்து மாதத்தில் எஸ் எஸ் அரபிக் என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டு, மேலும் அமெரிக்கர்கள் இறந்ததற்கு பிறகு செருமனியின் வேந்தர் பெத்மன் கோல்வெக் இத்தகைய தாக்குதல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டார்.[190] எனினும், பிரித்தானிய தடை வளைப்புகளுக்கு எதிர் வினையாக 1 பெப்ரவரி 1917 அன்று வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறையை[p] பயன்படுத்துவதை செருமனி மீண்டும் தொடங்கியது.[192]
24 பெப்ரவரி 1917 அன்று ஊட்ரோ வில்சனிடம் சிம்மர்மன் தந்தியானது அளிக்கப்பட்டது. இந்த தந்தி சனவரி மாதத்தில் செருமானிய வெளிநாட்டு அமைச்சர் ஆர்தர் சிம்மர்மனால் உருவாக்கப்பட்டிருந்தது. இதை பிரித்தானிய உளவுத்துறையினர் வழிமறித்து பொருள் அறிந்தனர். இத்தந்தியை தங்களது அமெரிக்க ஒத்த நிலையினருடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே உருசிய போல்செவிக்குகள் மற்றும் பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து தேசியவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வந்த சிம்மர்மன், பஞ்சோ வில்லா போர் பயணத்தின் போது அமெரிக்க ஊடுருவல்களால் மெக்சிக்கோவில் எழுந்த தேசியவாத எண்ணங்களிலிருந்து தான் மிகு நலன் பெற முடியும் என நம்பினார். ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ஒரு போரில் உதவி வழங்குவதாக மெக்சிகோ அதிபர் கரன்சாவுக்கு அவர் உறுதிமொழி அளித்தார். மேலும், டெக்சஸ், நியூ மெக்சிகோ, மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகளை மீண்டும் மெக்சிகோ கைப்பற்றுவதற்கு உதவுவதாக உறுதிமொழி அளித்தார். எனினும், இந்த வாய்ப்பானது உடனடியாக கரன்சவால் நிராகரிக்கப்பட்டது.[193]
6 ஏப்ரல் 1917 அன்று நேச நாடுகளின் ஒரு "தோழமை சக்தியாக" செருமனி மீது ஐக்கிய அமெரிக்க பேரவையானது போர் பிரகடனம் செய்தது.[194] ஐக்கிய அமெரிக்க கடற்படையானது இசுகாட்லாந்தின் இசுகாபா நீரிணைப்புக்கு ஒரு போர்க்கப்பல் குழுவை பெரிய கப்பல் குழுவுடன் இணைவதற்காக அனுப்பியது. கப்பல்களுக்கு என பாதுகாப்பை கப்பல்களையும் அனுப்பியது. ஏப்ரல் 1917இல் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையானது 3 இலட்சத்துக்கும் குறைவான வீரர்களையே கொண்டிருந்தது. இதில் தேசிய காவலர் பிரிவுகளும் அடங்கும். அதே நேரத்தில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு இராணுவங்கள் முறையே 41 மற்றும் 83 இலட்சம் வீரர்களை கொண்டிருந்தன. 1917ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை சட்டமானது 28 இலட்சம் வீரர்களை இராணுவத்தில் சேர்த்தது. இவ்வளவு எண்ணிக்கையிலான வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும், ஆயுதம் வழங்குவதும் ஒரு பெரிய இராணுவ உபகரண சவாலாக இருந்த போதிலும் இவ்வாறு சேர்த்தது. சூன் 1918 வாக்கில் 6.67 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க சிறப்பு படையின் உறுப்பினர்கள் பிரான்சுக்கு கப்பல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் இந்த எண்ணிக்கையானது 20 இலட்சத்தை எட்டியது[195]. எனினும், அமெரிக்காவின் செயல் உத்தி கொள்கையானது 1914க்கு முந்தைய கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இன்னும் இருந்தது. 1918ஆம் ஆண்டு வாக்கில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த ஆயுதங்கள் எனும் உத்தியிலிருந்து கிட்டத்தட்ட ஓர் உலகம் தொலைவில் இது அமைந்திருந்தது.[196] ஐக்கிய அமெரிக்க தளபதிகள் ஆரம்பத்தில் இத்தகைய யோசனைகளை ஏற்றுக் கொள்வதில் மெதுவாகவே செயல்பட்டனர். இது ஐக்கிய அமெரிக்கா கடுமையான இழப்புகளை சந்திப்பதற்கு இட்டுச் சென்றது. போரின் கடைசி மாதத்திலேயே இத்தகைய குறைபாடுகள் சரி செய்யப்பட்டன.[197]
செருமனி நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தனது உள்ளார்ந்த நம்பிக்கையையும் தாண்டி, அமைதியை உருவாக்குவதில் ஐக்கிய அமெரிக்கா ஒரு முன்னணி பங்கை ஆற்றுவதை உறுதி செய்வதற்காக வில்சன் போரில் ஈடுபட்டார். இதன் பொருள் யாதெனில், இவரது நேச நாடுகள் விரும்பியதைப் போல பிரித்தானிய அல்லது பிரெஞ்சு பிரிவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு மாறாக, அமெரிக்க சிறப்பு பிரிவானது ஒரு தனியான இராணுவ படையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.[198] 1914ஆம் ஆண்டுக்கு முந்தைய "வெட்டவெளி போர் முறையின்" ஓர் ஆதரவாளராகிய அமெரிக்க சிறப்புப் படை தளபதி யோவான் ஜே. பெர்சிங்கால் இது வலிமையாக ஆதரிக்கப்பட்டது. பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர் சேணேவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை, தவறாக வழி நடத்தப்பட்ட மற்றும் அமெரிக்க "தாக்குதல் உத்வேகத்துடன்" பொருந்தாத ஒன்று என பெர்சிங் கருதினார்.[199] 1917இல் கடுமையான இழப்புகளைச் சந்தித்த இவரது நேச நாடுகளின் விருப்பத்திற்கு எதிராக அமெரிக்க துருப்புக்களின் கட்டுப்பாட்டை அமெரிக்காவே வைத்திருப்பதற்கும், தனியான பிரிவுகளாக இயங்கும் வரையில் அமெரிக்க துருப்புகளை முன் கள கோட்டிருக்கு அனுப்புவதற்கு இவர் மறுப்பும் தெரிவித்தார். இதன் விளைவாக போரில் முதல் முக்கிய ஐக்கிய அமெரிக்க ஈடுபாடானது 1918இன் செப்டம்பர் இறுதியில் நடைபெற்ற மியூசே-அர்கோன் தாக்குதல் இருந்தது.[200]
ஏப்ரல் முதல் சூன்: நிவெல்லேயின் தாக்குதலும், பிரெஞ்சு இராணுவம் கலகம் செய்தலும்
[தொகு]வெர்துன் யுத்தமானது பிரெஞ்சு காரர்களுக்கு கிட்ட தட்ட 4 இலட்சம் வீரர்களின் இழப்பைக் கொடுத்தது. கொடுமையான சூழ்நிலையானது வீரர்களின் மனப்பான்மையை பெரிதும் பாதித்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஒழுங்கீன நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது. இந்நிகழ்வுகள் சிறிதளவே நடைபெற்ற போதும், தங்களது தியாகங்கள் தங்களது அரசாங்கம் அல்லது உயரதிகாரிகளால் பாராட்டப்படவில்லை என வீரர்கள் மத்தியில் இருந்த ஓர் எண்ணத்தை இது பிரதிபலித்தது.[201] ஒட்டு மொத்த போரின் உளவியல் ரீதியாக மிகுந்த சோர்வை ஏற்படுத்தக் கூடியதாக வெர்துன் யுத்தம் இருந்ததாக போரிட்ட இரு பிரிவினருமே கூறினர். இதையறிந்த பிரெஞ்சு தளபதி பிலிப் பெதைன் இராணுவ பிரிவுகளை அடிக்கடி இடம் மாற்றினார். இந்த செயல்முறையே நோரியா முறைமை என்று அறியப்படுகிறது. பிரிவுகளின் சண்டையிடும் ஆற்றலானது பெருமளவுக்கு குறையும் முன்னரே அவை யுத்தத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதை இது உறுதி செய்த அதே நேரத்தில், இதன் விளைவு யாதெனில், பிரெஞ்சு இராணுவத்தின் ஒரு பெரும் அளவிலானோர் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர் என்பதாகும்.[202] 1917ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீரர்களின் மனப்பான்மையானது, நல்ல சண்டை வரலாறுகளை கொண்ட இராணுவ பிரிவுகளிலும் கூட, நொறுங்கக் கூடியதாக இருந்தது.[203]
திசம்பர் 1916இல் மேற்குப் போர் முனையில் பிரெஞ்சு இராணுவங்களின் தளபதியாக பெதைனுக்கு பதிலாக இராபர்ட்டு நிவெல்லே நியமிக்கப்பட்டார். ஒரு கூட்டு பிரெஞ்சு-பிரித்தானிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாம்பெயின் மாகாணத்தில் ஓர் இளவேனிற்கால தாக்குதலுக்கு திட்டமிடத் தொடங்கினார். தன்னுடைய முதன்மை இலக்கான செமின் தேசு தேம்சு சாலையை கைப்பற்றுவது ஒரு பெரும் திருப்பு முனையை கொடுக்கும் என்றும், 15 ஆயிரத்திற்கும் மேலான வீரர் இழப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.[204] எனினும், சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் செருமானிய உளவுத்துறையினர் இதன் உத்தி மற்றும் கால குறிப்புகள் குறித்து நன்றாக தகவல் அளிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இவ்வாறாக இருந்த போதிலும் 16 ஏப்ரல் அன்று தாக்குதல் தொடங்கிய போது பிரெஞ்சுக்காரர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கான அனுகூலங்களைப் பெற்றனர். பிறகு இன்டன்பர்க்கு கோட்டின் புதிதாக கட்டப்பட்ட மற்றும் மிகுந்த வலிமையான தற்காப்புகளால் பிரெஞ்சுக்காரர்களின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டது. நிவெல்லே முன் கள தாக்குதல்களை தொடர்ந்தார். 25 ஏப்ரல் வாக்கில் பிரெஞ்சுக்காரர்கள் கிட்டத்தட்ட 1.35 இலட்சம் வீரர்களை இழந்தனர். இதில் 30,000 வீரர்கள் இறந்ததும் அடங்கும். இதில் பெரும்பாலானோர் முதல் இரண்டு நாட்களில் இழக்கப்பட்டனர்.[205]
அர்ரசு என்ற இடத்தின் மேல் இதே சமயத்தில் நடத்தப்பட்ட பிரித்தானிய தாக்குதல்கள் இதை விட வெற்றிகரமாக இருந்தன. எனினும், ஒட்டு மொத்தமாக போரில் இது சிறிதளவே தாக்கத்தை அளிப்பதாக இருந்தது.[206] முதல் முறையாக ஒரு தனிப்பிரிவாக செயல்பட்ட கனடா நாட்டு பிரிவினர் விமி மலைச்சரிவை யுத்தத்தின் போது கைப்பற்றினர். கனடா நாட்டவருக்கு ஒரு தேச அடையாள உணர்வை உருவாக்கியதில் ஒரு திருப்பு முனை தருணமாக பல கனடா நாட்டவர்களால் இது பார்க்கப்படுகிறது.[207] நிவெல்லே தனது தாக்குதலை தொடர்ந்த போதிலும் 3 மே அன்று வெர்துனில் சில மிக கடினமான சண்டைகளில் ஈடுபட்டிருந்த 21வது பிரிவானது யுத்தத்திற்கு செல்ல கொடுக்கப்பட்ட ஆணைகளுக்கு மறுப்பு தெரிவித்தது. இது பிரெஞ்சு இராணுவ கலகங்களை தொடங்கி வைத்தது. சில நாட்களுக்குள்ளாகவே "கூட்டு ஒழுங்கீன" செயல்களானவை 54 இராணுவ பிரிவுகளுக்கு பரவின. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இராணுவத்திலிருந்து விலகினர்.[208] இந்த கொந்தளிப்பானது கிட்டத்தட்ட முழுவதுமாக காலாட்படையினர் மத்தியில் மட்டுமே நடைபெற்றது. அவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் அரசியல் சார்பற்றவையாக இருந்தன. தாயகத்தில் இருக்கும் தங்களது குடும்பங்களுக்கு நல்ல பொருளாதார உதவி, வாடிக்கையான இடைவெளிகளில் விடுமுறை ஆகியவற்றையும் இது உள்ளடக்கியிருந்தது. இதை நிவெல்லே ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தார்.[209]
பெரும்பாலான வீரர்கள் தங்களது சொந்த நிலைகளை தற்காக்க தொடர்ந்து எண்ணம் கொண்டிருந்த போதிலும், தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுக்க அவர்கள் மறுத்தனர். இராணுவ தலைமை மீது இருந்த நம்பிக்கையானது ஒட்டு மொத்தமாக இல்லாமல் போனதை இது பிரதிபலித்தது.[210] 15 மே அன்று நிவெல்லே தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பெதைன் தளபதியானார். கடுமையான தண்டனை கோரிக்கைகளை தடுத்தார். இராணுவ வீரர்களுக்கான சூழ்நிலையை முன்னேற்றுவதன் மூலம் அவர்களது மனப்பான்மையை மீண்டும் நிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். சரியான எண்ணிக்கையானது தற்போதும் விவாதிக்கப்படும் அதே நேரத்தில், உண்மையில் வெறும் 27 வீரர்கள் மட்டுமே கலகத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிற 3,000 பேர் பல்வேறு வகையான காலங்களைக் கொண்ட சிறை வாசத்துக்கு அனுப்பப்பட்டனர். எனினும், இந்நிகழ்வின் உளவியல் தாக்கங்களானவை நீண்ட காலத்துக்கு தொடர்ந்தன. "பெதைன் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தூய்மைப்படுத்தினார்...ஆனால் அவர்கள் பிரெஞ்சு போர் வீரனின் இதயத்தை பாழாக்கி விட்டனர்" என்று ஒரு மூத்த இராணுவ வீரர் இந்நிகழ்வைப்பற்றி குறிப்பிட்டார்.[211]
திசம்பரில் மைய சக்திகள் உருசியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இவ்வாறாக மேற்கில் பயன்படுத்த ஒரு பெரும் எண்ணிக்கையிலான செருமானிய துருப்புகளை விடுதலை செய்ய வைத்து பெற்றன. செருமானிய வலுவூட்டல் படைகள் மற்றும் புதிய அமெரிக்க துருப்புகள் போருக்குள் கொட்டப்பட்ட போது, போரின் முடிவானது மேற்குப் போர்முனையில் தீர்மானிக்கப்படும் என்பது உறுதியானது. ஒரு நீண்டகாலம் இழுக்கக்கூடிய போரை தங்களால் வெல்ல முடியாது என மைய சக்திகள் அறிந்திருந்தன. ஓர் இறுதியான திடீர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட வெற்றிக்கு அவை அதிகப்படியான நம்பிக்கையைக் கொண்டிருந்தன. மேலும், ஐரோப்பாவில் சமூக கொந்தளிப்பு மற்றும் புரட்சி குறித்து இரு பிரிவினரின் அச்சமானது அதிகரித்து கொண்டு வந்தது. இவ்வாறாக, இரு பிரிவினரும் ஒரு தீர்க்கமான வெற்றியை சீக்கிரமே பெற வேண்டும் என விரும்பினர்.[212]
1917இல் ஆத்திரியாவின் பேரரசர் முதலாம் சார்லசு பெல்ஜியத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் சகோதரரான சித்துசுவை ஓர் இடையீட்டாளராக பயன்படுத்தி பிரெஞ்சு பிரதமர் கிளமென்சியேவுடன் தனியான அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு இரகசியமாக முயற்சித்தார். இதை செருமனிக்கு தெரியாமல் இவர் செய்தார். இத்தாலி இந்த முன்மொழிவுகளை எதிர்த்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த போது இவரது முயற்சியானது செருமனிக்கு தெரிய வந்தது. இது ஒரு தூதரக அழி செயலுக்கு இட்டுச் சென்றது.[213][214]
உதுமானியப் பேரரசு சண்டை, 1917-1918
[தொகு]1917 மார்ச் மற்றும் ஏப்ரலில் முதலாம் மற்றும் இரண்டாம் காசா யுத்தங்களில் எகிப்திய சிறப்புப் படையின் முன்னேற்றத்தை செருமானிய மற்றும் உதுமானியப் படைகள் நிறுத்தின. எகிப்திய சிறப்புப் படையானது உரோமானி யுத்தத்தில் ஆகத்து 1916இல் தங்களது நடவடிக்கையை தொடங்கி இருந்தது.[215][216] அக்டோபர் மாத இறுதியில் சினாய் மற்றும் பாலத்தீன படையெடுப்பானது மீண்டும் தொடரப்பட்டது. இப்படையெடுப்பில் தளபதி எட்மன்ட் ஆலன்பேயின் 20வது பிரிவு, 21 ஆவது பிரிவு மற்றும் பாலைவன குதிரைப்படை பிரிவானது பீர்சேபா யுத்தத்தை வென்றது.[217] முகர் மலைச்சரிவு யுத்தத்தில் ஒரு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு உதுமானிய இராணுவங்கள் தோற்கடிக்கப்பட்டன. திசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் எருசேல போரில் மற்றொரு உதுமானிய தோல்விக்குயை தொடர்ந்து எருசேலமானது கைப்பற்றப்பட்டது.[218][219][220] இதே நேரத்தில் 8வது இராணுவத்தின் தளபதியாக தனது பணியில் இருந்து பிரியேட்ரிச் பிரேய்கர் கிரெஸ் வான் கிரெசென்ஸ்டெயின் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பிறகு தேசாவத் பாஷா தளபதியானார். ஒரு சில மாதங்களுக்கு பிறகு பாலத்தீனத்தில் உதுமானிய இராணுவத்தின் தளபதியாகிய எரிக் வான் பால்கன்கயனுக்கு பதிலாக ஓட்டோ லிமன் வான் சாண்டர்ஸ் தளபதியானார்.[221][222]
1918இன் தொடக்கத்தில் முன் கள போர் கோடானது நீட்டிக்கப்பட்டது. 1918 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பிரித்தானிய பேரரசின் படைகளால் நடத்தப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் திரான்ஸ் யோர்தான் தாக்குதல்களை தொடர்ந்து யோர்தான் பள்ளத்தாக்கானது ஆக்கிரமிக்கப்பட்டது.[223] மார்ச்சில் எகிப்திய சிறப்பு படையின் பெரும்பாலான பிரித்தானிய காலாட்படை மற்றும் சேம கையிருப்பு குதிரைப் படையினர் இளவேனிற்கால தாக்குதலின் விளைவாக மேற்குப் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர். பிறகு அவர்களுக்கு மாற்றாக இந்திய இராணுவ பிரிவுகள் அனுப்பப்பட்டன. பல மாதங்கள் மறு ஒருங்கிணைப்பு மற்றும் கோடை கால பயிற்சியின் போது உதுமானிய முன் கள போர் கோட்டின் பகுதிகள் மீது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தாக்குதலுக்கு தயாராகுவதற்காகவும், புதிதாக வருகை புரிந்த இந்திய இராணுவ காலாட்படைக்கு புதிய சூழலைப் பழக்கப்படுத்துவதற்காகவும் நேச நாடுகளுக்கு மிகுந்த அனுகூலத்தை தரக் கூடிய நிலைகளை பெறும் வகையிலே, இந்த தாக்குதல்கள் போர் கள கோட்டினை வடக்கே இன்னும் உந்தித் தள்ளியது. செப்டம்பர் மாத நடுப் பகுதி வரை பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கு இவ்வாறாக இணைக்கப்பட்ட படையானது தயாராகாமல் இருந்தது.[சான்று தேவை]
மறு ஒருங்கிணைக்கப்பட்ட எகிப்திய சிறப்புப் படையானது ஒரு மேற்கொண்ட குதிரைப்படை பிரிவுடன் செப்டம்பர் 1918இல் மெகித்தோ யுத்தத்தில் உதுமானியப் படைகளின் அமைப்பை உடைத்தது. இரண்டு நாட்களில் மெதுவாக குண்டு மாரி பொழிந்த பீரங்கிகளால் ஆதரவளிக்கப்பட்ட பிரித்தானிய மற்றும் இந்திய காலாட் படையினர் உதுமானிய முன்கள போர் கோட்டினை உடைத்தனர். துல்கர்மில் இருந்த உதுமானியப் பேரரசின் 8வது இராணுவத்தின் தலைமையகத்தை கைப்பற்றின. மேலும், தபுசோர், அரரா ஆகிய இடங்களிலிருந்த தொடர்ச்சியான பதுங்கு குழி கோடுகளையும், நபுலுசுவில் இருந்த உதுமானிய பேரரசின் 7வது இராணுவத்தின் தலைமையகத்தையும் கைப்பற்றின. காலாட்படையினரால் உருவாக்கப்பட்ட முன்கள கோட்டின் உடைப்பின் வழியாக பாலைவன குதிரைப்படை பிரிவானது பயணம் செய்து. கிட்டத்தட்ட ஓய்வின்றி தொடர்ச்சியாக, ஆத்திரேலிய இலகுரக குதிரைப் படை, பிரித்தானிய சேம கையிருப்பு குதிரைப்படை, இந்திய ஈட்டியாளர்கள் மற்றும் நியூசிலாந்து குதிரைப்படை துப்பாக்கியாளர்களின் பிரிவு ஆகியோரால் செசுரீல் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது, இவர்கள் நாசரேத், அபுலா மற்றும் பெய்சன், செனின், மத்திய தரைக்கடல் கரையிலிருந்த அய்பா, எசசு தொடருந்து இருப்புப் பாதையில் யோர்தான் ஆற்றுக்கு கிழக்கே இருந்த தரா ஆகிய இடங்களை கைப்பற்றின. திமிஷ்குவுக்கு வடக்கே செல்லும் வழியில் கலிலேயக் கடலில் அமைந்திருந்த சமக் மற்றும் திபேரியு ஆகிய இடங்களும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், நியூசிலாந்து தளபதி சய்தோரின் படையான ஆத்திரேலிய இலகுரக குதிரைப் படை, நியூசிலாந்து குதிரைப்படை துப்பாக்கி வீரர்கள், இந்திய, பிரித்தானிய மேற்கிந்திய தீவுகள் மற்றும் யூத காலாட்படையினர் யோர்தான் ஆற்று பாதைகள், எஸ் சால்ட் அம்மான் மற்றும் சிசா எனும் இடத்தில் உதுமானியப் பேரரசின் பெரும்பாலான 4வது இராணுவத்தை கைப்பற்றின. அலெப்போவுக்கு வடக்கே சண்டையானது தொடர்ந்து கொண்டிருந்த போது, அக்டோபர் இறுதியில் கையொப்பமிடப்பட்ட முத்ரோசு போர் நிறுத்த ஒப்பந்தமானது உதுமானியப் பேரரசுடன் இருந்த சண்டைகளை நிறுத்தியது.[சான்று தேவை]
1918: முதன்மை நிகழ்வுகளின் காலவரிசை
[தொகு]செருமானிய இளவேனிற்கால தாக்குதல்
[தொகு]மேற்குப் போர் முனையில் 1918ஆம் ஆண்டு தாக்குதலுக்காக திட்டங்களை (குறிப்பெயர் மைக்கேல் நடவடிக்கை) லுதென்தோர்பு உருவாக்கினார். ஒரு தொடர்ச்சியான, தோற்று ஓடுவது போல் நடித்தால் மற்றும் முன்னேற்றங்களை கொண்ட இளவேனிற்கால தாக்குதலானது பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைகளை பிரிப்பதற்காக நடத்தப்படும் என திட்டமிடப்பட்டது. பெருமளவிலான ஐக்கிய அமெரிக்க கப்பல்கள் வருவதற்கு முன்னரே போரை முடிக்க செருமானிய தலைமைத்துவமானது எண்ணியது. 21 மார்ச் 1918 அன்று செயின் குயின்டினுக்கு அருகில் உள்ள பிரித்தானிய படைகள் மீதான தாக்குதலுடன் நடவடிக்கையானது தொடங்கியது. அதற்கு முன்னர் கண்டிராத 60 கிலோமீட்டர் முன்னேற்றத்தை செருமானியப் படைகள் சாதித்தன.[224]
பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய பதுங்கு குழிகள் உண்மையான ஊடுருவல் உத்திகளான குதியேர் உத்திகளை பயன்படுத்தி உட்புகப்பட்டன. செருமானிய தளபதி ஆசுகார் வான் குதியேரின் உத்திகளான இவற்றுக்கு இவ்வாறான பெயர் கொடுக்கப்பட்டது. தனித்துவமாக பயிற்சி அளிக்கப்பட்ட புயல் துருப்பு வீரர்களின் பிரிவுகளை பயன்படுத்தி இவை நடத்தப்பட்டன. முன்னர், தாக்குதல்களானவை நீண்ட தூர சேணேவி வெடிகல வீச்சு மற்றும் ஏராளமான படை வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் என அமைந்திருந்தன. எனினும், 1918ஆம் ஆண்டில் இளவேனிற்கால தாக்குதலில் லுதென்தோர்பு சேணேவியை குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார். எதிரிகளின் பலவீனமான நிலைகள் மீது காலாட்படையினரின் சிறிய குழுக்களை ஊடுருவச் செய்ததன் மூலம் தன்னுடைய நடவடிக்கையை செய்தார். இவர்கள் ஆணை வழங்கும் மற்றும் பொருட்களை வழங்கும் பகுதிகளை தாக்கினர். கடுமையான எதிர்ப்பை கொடுத்த நிலைகளை தவிர்த்து விட்டு முன்னேறினர். பிறகு மிகுந்த கனரக ஆயுதங்களை உடைய காலாட்படையினர் இந்த தனித்துவிடப்பட்ட நிலைகளை அழித்தனர். இந்த செருமானிய வெற்றியானது பெருமளவுக்கு திடீர் தாக்குதல்களை சார்ந்திருந்தது.[225]
போர் களமானது பாரிசிலிருந்து 120 கிலோ மீட்டர்களுக்குள் வந்தது. மூன்று கனரக குருப் தொடருந்து துப்பாக்கிகள் 183 வெடிகலங்களை தலைநகரம் மீது வீசின. இது ஏராளமான பாரிஸ் குடிமக்கள் தப்பித்து ஓடுவதற்கு காரணமானது. தொடக்க கால தாக்குதலானது மிகவும் வெற்றிகரமாக இருந்ததால் இரண்டாம் கெய்சர் வில்லியம் 24 மார்ச் நாளை ஒரு தேசிய விடுமுறையாக அறிவித்தார். ஏராளமான செருமானியர்கள் வெற்றி நெருங்கி விட்டதாக எண்ணினர். எனினும், கடுமையான சண்டைக்குப் பிறகு தாக்குதலானது நிறுத்தப்பட்டது. பீரங்கி வண்டிகள் அல்லது இயந்திர சேணேவிகள் இல்லாத காரணத்தால் செருமானியர்களால் தங்கள் பெற்ற நிலப்பரப்புகள் மீது தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்த இயலவில்லை. வெடி கலங்களால் துளைக்கப்பட்டிருந்த மற்றும் பெரும்பாலும் வாகனங்களால் கடக்க இயலாத நிலப்பரப்பு மீது அமைந்திருந்த நீண்ட தொலைவுகளாலும் செருமானிய இராணுவத்திற்கு உதவி பொருட்கள் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.[226]
மைக்கேல் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு ஆங்கிலேயக் கால்வாய் துறைமுகங்களுக்கு எதிராக ஜார்ஜ் நடவடிக்கையை செருமனி தொடங்கியது. சிறிய அளவு நிலப்பரப்புகளை செருமனி பெற்றதற்கு பிறகு நேச நாடுகள் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தின. பிறகு தெற்கே இருந்த செருமானிய இராணுவமானது புளுச்சர் மற்றும் யோர்க் ஆகிய நடவடிக்கைகளை நடத்தியது. பரந்த அளவில் பாரிசை நோக்கி உந்தித் தள்ளியது. ரெயிம்சு நகரத்தை சுற்றி வளைக்கும் ஒரு முயற்சியாக 15 சூலை என்று மர்னே (இரண்டாவது மர்னே யுத்தம்) நடவடிக்கையை செருமனி தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக நடந்த பதில் தாக்குதலானது நூறு நாட்கள் தாக்குதலை தொடங்கி வைத்தது. போரில் நேச நாடுகளின் முதல் வெற்றிகரமான தாக்குதலை இது குறித்தது. 20 சூலை வாக்கில் தாங்கள் தொடங்கிய இடத்திற்கே மர்னே வழியாக செருமானியர்கள் பின்வாங்கினர்.[227] சிறிதளவே சாதித்து இருந்தனர். இதற்குப் பிறகு செருமானிய இராணுவமானது என்றுமே போரில் முன்னேற்றத்தை பெறவில்லை. 1918 மார்ச் மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில் செருமானிய இழப்பானது 2.50 இலட்சமாக இருந்தது. இதில் மிகுந்த அளவு பயிற்சி அளிக்கப்பட்ட செருமானிய புயல் துருப்பு வீரர்களும் அடங்கியிருந்தனர்.
இதே நேரத்தில், செருமனி அதன் சொந்த நாட்டில் சிதைவுற்றுக் கொண்டிருந்தது. போர் எதிர்ப்பு போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன. இராணுவத்தின் உற்சாக மனப்பான்மையானது வீழ்ச்சி அடைந்தது. தொழில் துறை உற்பத்தியானது 1913ஆம் ஆண்டில் இருந்த நிலையைப் போல் பாதியளவாக இருந்தது.
நூறு நாட்கள் தாக்குதல்
[தொகு]நூறு நாட்கள் தாக்குதல் என்று அறியப்படும் நேச நாடுகளின் பதில் தாக்குதலானது 8 ஆகத்து 1918 அன்று அமியேன்சு யுத்தத்துடன் தொடங்கியது. இந்த யுத்தத்தில் 400க்கும் இருக்கும் மேற்பட்ட பீரங்கி வண்டிகள், 1.20 இலட்சத்துக்கும் மேற்பட்ட பிரித்தானிய, பிரித்தானிய மேலாட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பிரெஞ்சு துருப்புகள் பங்கெடுத்தன. முதல் நாள் முடிவில் செருமானிய கோட்டுப் பகுதியில் 24 கிலோமீட்டர் நீளமுடைய ஓர் இடைவெளி உருவாக்கப்பட்டது. தற்காப்பாளர்கள் தங்களது மனப்பான்மை வீழ்ச்சியடைந்ததை வெளிக்காட்டினர். இந்த நாளை "செருமானிய இராணுவத்தின் கருப்பு நாள்" என்று செருமனியின் லுதென்தோர்பு குறிப்பிட்டார்.[229][230][231] நேச நாடுகள் 23 கிலோ மீட்டர் வரை முன்னேறியதற்குப் பிறகு, செருமானிய எதிர்ப்பானது அதிகரித்தது. 12 ஆகத்து அன்று யுத்தமானது முடிவுக்கு வந்தது.
முற்காலத்தில் பலமுறை நடைபெற்றதைப் போல தங்களது ஆரம்பகால வெற்றியை தொடர்ந்ததைப் போல், அமியேன்சு யுத்தத்தை தொடர்வதற்கு பதிலாக நேச நாடுகள் தங்களது கவனத்தை வேறுபக்கம் திருப்பின. எதிர்ப்பு வலிமையானதற்கு பிறகு ஒரு தாக்குதலை தொடர்வது என்பது உயிர்களை வீணாக்கும் என்று நேச நாட்டுத் தலைவர்கள் தற்போது உணர்ந்தனர். ஒரு போர்க்கள கோட்டை தாண்டிச் செல்வதற்கு பதிலாக மற்றொரு பக்கம் திரும்புவது நன்மை பயக்கும் என்று உணர்ந்தனர். பக்கவாட்டு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிகரமான முன்னேற்றங்களிலிருந்து அனுகூலம் பெறுவதற்காக நேச நாட்டுத் தலைவர்கள் தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் தொடக்க உந்துதலை ஒவ்வொரு தாக்குதலும் இழக்கும் போதும், அத்தாக்குதலில் இருந்து பிறகு பின்வாங்கினர்.[232]
இத்தாக்குதல் தொடங்கியதற்கு பிறகு அடுத்த நாள் லுதென்தோர்பு கூறியதாவது: "நம்மால் இனி மேல் போரை வெல்ல முடியாது. ஆனால் இப்போரில் நாம் தோல்வியும் அடையக்கூடாது". 11 ஆகத்து அன்று கெய்சரிடம் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை லுதென்தோர்பு கொடுத்தார். கெய்சர் இராஜினாமாவை நிராகரித்தார். கெய்சர் கூறியதாவது, "நாம் நிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எதிர்ப்புக்கான நமது சக்தியின் எல்லையை கிட்டத்தட்ட நாம் அடைந்த விட்டோம். போர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்".[233] 13 ஆகத்து அன்று பெல்ஜியத்தின் இசுபா என்ற இடத்தில் இன்டன்பர்க்கு, லுதென்தோர்பு, வேந்தர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்சு ஆகியோர் இராணுவ ரீதியாக போர் முடிவுக்கு கொண்டு வரப்பட இயலாது என்பதை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அடுத்த நாளில் செருமானிய முடியரசு மன்றமானது களத்தில் வெற்றி என்பது நிகழ தற்போது வாய்ப்பில்லை என்று முடிவு செய்தது. திசம்பர் வரை மட்டுமே தங்களால் போரை தொடர இயலும் என ஆத்திரியா மற்றும் அங்கேரி எச்சரித்தன. உடனடி அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு லுதென்தோர்பு அறிவுறுத்தினார். பவாரியாவின் இளவரசர் ரூப்ரெக்து பதேனின் இளவரசர் மாக்சிமிலியனுக்கு பின்வருமாறு எச்சரித்தார்: "நமது இராணுவ நிலைமையானது மிகவும் வேகமாக மோசமடைந்து விட்டது. குளிர் காலத்தை தாண்டி போரை நம்மால் நடத்த இயலும் என என்னால் இனி மேலும் நம்ப இயலவில்லை. ஓர் அழிவு அதற்கு முன்னரே நமக்கு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது".[234]
ஆல்பெர்ட் யுத்தம்
[தொகு]பிரித்தானிய மற்றும் அதன் மேலாட்சிக்குட்பட்ட நிலப்பரப்புகளின் படைகள் இந்த படையெடுப்பின் அடுத்த கட்டமாக 21 ஆகத்து அன்று ஆல்பெர்ட் யுத்தத்தை தொடங்கின.[235] பின் வந்த நாட்களில் இந்த தாக்குதலானது பிரெஞ்சு[234] மற்றும் பிறகு மேற்கொண்ட பிரித்தானிய படைகளால் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆகத்து மாதத்தின் கடைசி வாரத்தின் போது எதிரிக்கு எதிரான ஒரு 110 கிலோமீட்டர் போர் முனையில் நேச நாடுகளின் அழுத்தமானது கடுமையானதாகவும், உறுதியானதாகவும் இருந்தது. செருமானிய பதிவுகளின் படி, "ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வந்துகொண்டிருந்த மற்றும் புயலென புகுந்த எதிரிகளுக்கு எதிரான குருதி தோய்ந்த சண்டையில் கழிந்தது. புதிய போர் கள கோடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லாமல், ஓய்வறைகளில் உறக்கமின்றி இரவுகள் கழிந்தன."[232]
இத்தகைய முன்னேற்றங்களை எதிர் கொண்ட போது 2 செப்டம்பர் அன்று செருமானிய ஒபெர்ஸ்தே கீரேஸ்லெயிதுங் ("உச்சபட்ச இராணுவ தலைமை") தெற்கே இன்டன்பர்க்கு கோட்டிற்கு பின் வாங்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட்டது. முந்தைய ஆண்டு ஏப்ரலில் தாங்கள் சுற்றி வளைத்து கைப்பற்றிய நிலப்பரப்பை சண்டையிடாமல் செருமானியர்கள் விட்டுக் கொடுத்தனர்.[236] லுதென்தோர்பு பின்வருமாறு கூறினார், "நாம் தற்போதைய தேவையை ஒப்புக் கொண்டாக வேண்டும் ... ஒட்டு மொத்த போர் முனையையும் இசுகார்பேயிலிருந்து வெசுலேவுக்கு பின்வாங்கச் செய்ய வேண்டும்."[237][page needed] 8 ஆகத்து அன்று தொடங்கிய கிட்டத்தட்ட 4 வார சண்டையில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட செருமானியர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். செருமானிய உயர் தலைமையானது போரில் தோல்வி அடைந்ததை உணர்ந்தது. திருப்திகரமான ஒரு முடிவை எட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது. 10 செப்டம்பர் அன்று இன்டன்பர்க்கு ஆத்திரியாவின் பேரரசர் சார்லசுக்கு அமைதி முயற்சிகளை செய்யுமாறு வற்புறுத்தினார். சமரசம் செய்து வைக்குமாறு நெதர்லாந்திடம் செருமனி முறையிட்டது. 14 செப்டம்பர் ஒன்று அனைத்து எதிரி நாடுகள் மற்றும் நடு நிலை வகித்த நாடுகளுக்கு ஆத்திரிய ஒரு குறிப்பை அனுப்பியது. நடு நிலை வகிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் அமைதி பேச்சு வார்த்தைகளுக்காக சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்தது. 15 செப்டம்பர் அன்று பெல்ஜியத்திடம் அமைதி உடன்படிக்கை செய்ய செருமனி முன்வந்தது. இரண்டு அமைதி வாய்ப்பளிப்புகளும் நிராகரிக்கப்பட்டன.[234]
இன்டன்பர்க்கு கோட்டை நோக்கி நேச நாடுகளின் முன்னேற்றம்
[தொகு]செப்டம்பரில் இன்டன்பர்க்கு கோட்டின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் நேச நாடுகள் முன்னேறின. வலிமையான பின்புற காவல் நடவடிக்கைகள் மூலம் செருமானியர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். ஏராளமான பதில் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இன்டன்பர்க்கு கோட்டின் நிலைகள் மற்றும் காவல் நிலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பிரித்தானிய சிறப்புப் படை மட்டுமே 30,441 போர்க் கைதிகளை பிடித்தது. 24 செப்டம்பர் அன்று பிரித்தானியர் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு நாட்டவராலும் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலானது வடக்கு பிரான்சின் செயின். குவேன்டின் நகரத்திற்கு 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் வந்தது. தற்போது இன்டன்பர்க்கு கோட்டின் பக்கவாட்டில் அல்லது பின்புறம் இருந்த நிலைகளுக்கு செருமானியர்கள் பின்வாங்கினர். இதே நாளில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தவிர்க்க இயலாதவை என பெர்லினில் இருந்த தலைவர்களுக்கு செருமனியின் உச்சபட்ச இராணுவ தலைமையானது தகவல் அளித்தது.[234]
இன்டன்பர்க்கு கோட்டின் மீதான இறுதி தாக்குதலானது 26 செப்டம்பர் அன்று அமெரிக்க மற்றும் பிரெஞ்சு துருப்புக்களால் தொடங்கப்பட்ட மியூசு-அர்கோன் தாக்குதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்த வாரத்தில் பிளாங்க் மான்ட் மலைச்சரிவு யுத்தத்தில் சாம்பெயின் என்ற நகரத்தின் வழியாக இணைந்து செயல்பட்ட அமெரிக்க மற்றும் பிரெஞ்சு இராணுவ பிரிவுகள் செருமானிய போர்க்கள கோட்டை உடைத்து கொண்டு முன்னேறின. வலிமையான உயர் நிலைகளில் இருந்து கீழிறங்கிச் செல்லும் நிலைக்கு செருமானியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இத்துருப்புக்கள் பெல்ஜிய போர் முனையை நோக்கி முன்னேறின.[238] 8 அக்டோபர் அன்று இன்டன்பர்க்கு கோடானது மீண்டும் பிரித்தானிய மற்றும் அதன் மேலாட்சிக்குட்பட்ட நிலப்பரப்புகளின் துருப்புகளால் கம்பரை யுத்தத்தில் துளைக்கப்பட்டது.[239] செருமானிய இராணுவமானது அதன் போர் முனையை சுருக்கியது. செருமனியை நோக்கி தாங்கள் பின்வாங்கிக் கொண்டிருந்த போது டச்சு போர் முனையை பின்புற காவல் நடவடிக்கைகளை சண்டையிடுவதற்காக ஒரு நங்கூரத்தை போல பயன்படுத்தியது.
29 செப்டம்பர் அன்று பல்கேரியா ஒரு தனி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட போது, மாதக் கணக்கில் கடுமையான அழுத்தத்தில் இருந்த லுதென்தோர்பு கிட்டத்தட்ட நொடிந்து போகும் நிலைக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. செருமனியால் இனி மேல் ஒரு வெற்றிகரமான தற்காப்பை நடத்த இயலாது என்பது உறுதியாகி போனது. பால்கன் பகுதியின் வீழ்ச்சியானது தன்னுடைய முதன்மையான எண்ணெய் மற்றும் உணவு வழங்கலை செருமனி இழக்க போகிறது என்பதின் அறிகுறியாக இருந்தது. ஒரு நாளைக்கு 10,000 என்ற விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க துருப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்திலும் கூட செருமனியின் சேம கையிருப்புகள் படைகள் பயன்படுத்தி முடிக்கப்பட்டிருந்தன.[240][241][242]
மாசிடோனிய போர் முனையில் முன்னேற்றம்
[தொகு]15 செப்டம்பர் அன்று இரண்டு முக்கியமான நிலைகளில் நேச நாடுகளின் படைகள் வர்தர் தாக்குதலைத் தொடங்கின. அந்த நிலைகள் தோபுரோ முனை மற்றும் தோசுரன் ஏரிக்கு அருகில் இருந்த பகுதி ஆகியவையாகும். தோபுரோ முனை யுத்தத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த உயிரிழப்புகளையே கொடுத்த ஒரு 3 நாள் நீடித்த யுத்தத்திற்குப் பிறகு செர்பிய மற்றும் பிரெஞ்சு இராணுவங்கள் வெற்றியடைந்தன. இறுதியாக போர் முனையை உடைத்து கொண்டு முன்னேறின. இது போன்ற ஒரு நிகழ்வு முதலாம் உலகப் போரில் அரிதாகவே நேச நாடுகளுக்கு நடந்தது. போர் முனை உடைக்கப்பட்ட பிறகு செர்பியாவை விடுவிக்கும் பணியை நேச நாட்டுப் படைகள் தொடங்கின. 29 செப்டம்பர் அன்று ஸ்கோப்ஜேவை அடைந்தன. இதற்கு பிறகு 30 செப்டம்பர் அன்று நேச நாடுகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பல்கேரியா கையொப்பமிட்டது. செருமானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் பல்கேரியாவின் ஜார் மன்னரான முதலாம் பெர்டினான்டுக்கு ஒரு தந்தியை பின் வருமாறு அனுப்பினார்: "அவமானம்! 62,000 செர்பியர்கள் போரின் முடிவை தீர்மானித்து விட்டனர்!".[243][244]
செர்பியாவை விடுவிக்கும் பணியை நேச நாட்டு இராணுவங்கள் தொடர்ந்தன. அதே நேரத்தில் உருமேனியாவில் இருந்து துருப்புக்களை அனுப்பியதன் மூலம் நீசு என்ற இடத்திற்கு அருகில் புதிய போர் முனைகளை நிறுவ செருமனி வெற்றியடையாத முயற்சிகளில் ஈடுபட்டது. 11 அக்டோபர் அன்று செர்பிய இராணுவமானது நீசுவுக்குள் நுழைந்தது. பிறகு பால்கன் போர் முனையை ஒருங்கிணைக்கும் பணியை செருமனி ஆத்திரியா-அங்கேரியிடம் விட்டு விட்டது. 1 நவம்பர் அன்று செர்பியப் படைகள் பெல்கிறேடை விடுவித்தன. ஆத்திரியா-அங்கேரியுடனான தமது எல்லையை தாண்ட தொடங்கின. அரசியல் ரீதியாக ஆத்திரியா-அங்கேரியானது சிதைவுற்று கொண்டிருந்தது. 3 நவம்பர் அன்று இத்தாலியுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஆத்திரியா-அங்கேரி கையொப்பமிட்டது. இவ்வாறாக ஐரோப்பாவில் செருமனியை தன்னந்தனியாக ஆத்திரியா-அங்கேரி விட்டது. 6 நவம்பர் அன்று செர்பிய இராணுவமானது சாராயேவோவை விடுவித்தது. 9 நவம்பர் அன்று நோவி சாத்தை விடுவித்தது. ஆத்திரியா-அங்கேரியின் நிலப்பரப்பில் ஆத்திரியா-அங்கேரியின் செருமானியர் அல்லாத மக்கள் தங்களுக்கென சுதந்திர அரசுகளை உருவாக்க தொடங்கினர். இதை ஆத்திரியா-அங்கேரியால் தடுக்க இயலவில்லை.
செருமானிய புரட்சி 1918-1919
[தொகு]நிகழப்போகும் செருமனியின் இராணுவ தோல்வி குறித்த செய்தியானது செருமானிய ஆயுதப்படைகள் முழுவதும் பரவியது. இராணுவ கிளர்ச்சி ஏற்படும் அச்சுறுத்தலானது அதிகமாக இருந்தது. கடற்படை தளபதி ரெயினார்டு சீர் மற்றும் லுதென்தோர்பு ஆகியோர் செருமானிய கடற்படையின் "வல்லமையை" மீண்டும் நிறுவும் ஒரு கடைசி முயற்சியில் இறங்க முடிவு செய்தனர்.
1918ஆம் ஆண்டின் அக்டோபர் மாத இறுதியில் வடக்கு செருமனியில் செருமானிய புரட்சியானது தொடங்கியது. தாங்கள் தோல்வி அடைந்து விட்டதாக நம்பிய ஒரு போரில் ஒரு கடைசி மற்றும் பெரும் நடவடிக்கை தொடங்குவதற்கு கடலுக்குள் செல்ல செருமானிய கடற்படையின் பிரிவுகள் மறுத்துவிட்டன. கிளர்ச்சியைத் தொடங்கின. வில்கெல்ம்சேவன் மற்றும் கீல் ஆகிய கடற்படை துறைமுகங்களில் தொடங்கிய மாலுமிகளின் கிளர்ச்சியானது ஒட்டு மொத்த நாடு முழுவதும் சில நாட்களுக்குள்ளாகவே பரவியது. 9 நவம்பர் 1918 அன்று ஒரு குடியரசு அமைவதாக பிரகடனப்படுத்தப்படவதற்கு இது வழி வகுத்தது. கெய்சர் இரண்டாம் வில்லியம் பதவி விலகியதற்கு சிறிது காலத்திலேயே இந்த குடியரசு அறிவிக்கப்பட்டது. செருமனி போரில் சரணடைவதற்கும் இது வழி வகுத்தது.[245][246][247][242]
புதிய செருமானிய அரசாங்கம் சரணடைகிறது
[தொகு]இராணுவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருத்தல் மற்றும் கெய்சர் மீதான பரவலான நம்பிக்கை இழப்பு ஆகியவை கெய்சர் பதவி விலகுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் வழி வகுத்தது. செருமனி சரணடைதலை நோக்கி நகர்ந்தது. பதேனின் இளவரசரான மாக்சிமிலியன் 3 அக்டோபர் அன்று செருமனியின் வேந்தராக நேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெற்றார். ஐக்கிய அமெரிக்க அதிபர் வில்சனுடன் பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கின. பிரித்தானியர் மற்றும் பிரஞ்சுக்காரர்களை விட வில்சன் செருமனிக்கு ஒப்பீட்டளவில் நல்ல நிபந்தனைகளை அளிப்பார் என்ற நம்பிக்கையில் இப்பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் செருமானிய இராணுவத்தின் மீது பாராளுமன்றத்தின் அதிகாரம் ஆகியவற்றுக்கு வில்சன் கோரிக்கை விடுத்தார்.[248] 9 நவம்பர் அன்று செருமனியை ஒரு குடியரசாக சமூக சனநாயகக் கட்சியின் பிலிப் செதேமன் அறிவித்த போது எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. கெய்சர், மன்னர்கள் மற்றும் பிற மரபு வழி ஆட்சியாளர்கள் அனைவரும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டனர். செருமனியின் பேரரசர் இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இது ஏகாதிபத்திய செருமனியின் முடிவாகும். ஒரு புதிய செருமனியானது வெய்மர் குடியரசு என்ற பெயரில் உருவானது.[249]
போர் நிறுத்த ஒப்பந்தங்களும், பணிதல்களும்
[தொகு]மைய சக்திகளின் வீழ்ச்சியானது உடனடியாக நடந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட முதல் நாடு பல்கேரியா ஆகும். 29 செப்டம்பர் 1918 அன்று சலோனிகா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அது கையொப்பமிட்டது.[250] பல்கேரியாவின் ஜார் மன்னரான முதலாம் பெர்டினான்டுக்கு அனுப்பிய தன் தந்தியில் செருமானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் இச்சூழ்நிலையை பின்வருமாறு விளக்கியிருந்தார்: "அவமானம்! 62,000 செர்பியர்கள் போரின் முடிவை தீர்மானித்து விட்டனர்!".[251][252] அதே நாள் செருமானிய உச்சபட்ச இராணுவ தலைமையானது இரண்டாம் கெய்சர் வில்லியம் மற்றும் ஏகாதிபத்திய வேந்தர் கோமான் ஜார்ஜ் வான் கெர்த்லிங் ஆகியோருக்கு செருமனி எதிர் கொண்டுள்ள இராணுவ சூழ்நிலையானது நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று தகவல் அளித்தது.[253]
24 அக்டோபர் அன்று கபோரெட்டோ யுத்தத்திற்குப் பிறகு இழந்த நிலப்பரப்புகளை வேகமாக மீட்டெடுத்த ஒரு முன்னேற்றத்தை இத்தாலியர்கள் தொடங்கினர். இது விட்டோரியோ வெனட்டோ யுத்தத்தில் முடிவடைந்தது. ஓர் ஆற்றல் வாய்ந்த சண்டை படையாக ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தின் முடிவை இது குறித்தது. இந்த தாக்குதலானது ஆத்திரியா-அங்கேரிய பேரரசின் சிதைவுறுதலையும் தொடங்கி வைத்தது. அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தின் போது புடாபெஸ்ட், பிராகு மற்றும் சக்ரெப் ஆகிய நகரங்களில் சுதந்திர அறிவிப்புகள் செய்யப்பட்டன. 29 அக்டோபர் அன்று செருமானிய ஏகாதிபத்திய அதிகார மையங்கள் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இத்தாலியிடம் வேண்டின. ஆனால் இத்தாலியர்கள் தங்களது முன்னேற்றத்தை தொடர்ந்தனர். திரெந்தோ, உதினே மற்றும் திரியேத் ஆகிய நகரங்களை அடைந்தனர். 3 நவம்பர் அன்று ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை வேண்டி வெள்ளைக் கொடியை ஆத்திரியா-அங்கேரி அனுப்பியது. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பாரிசிலிருந்த நேச நாட்டு அதிகார மையங்களுடன் தந்தி மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இவை ஆத்திரிய தளபதிக்கு அனுப்பப்பட்டன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆத்திரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தமானது பதுவா என்ற நகரத்துக்கு அருகில் உள்ள வில்லா சியுசுதியில் 3 நவம்பர் அன்று கையொப்பமிடப்பட்டது. ஆப்சுபர்கு முடியரசு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதை தொடர்ந்து ஆத்திரியா மற்றும் அங்கேரி ஆகிய நாடுகள் தனித்தனியாக போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இதைத் தொடர்ந்து வந்த நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை பயன்படுத்தி இன்சுபுருக்கு மற்றும் ஒட்டு மொத்த தைரோல் ஆகிய பகுதிகளை இத்தாலிய இராணுவமானது ஆக்கிரமித்தது.[254]
30 அக்டோபர் அன்று உதுமானியப் பேரரசு பணிந்தது. முத்ரோசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.[250]
11 நவம்பர் 1918 அன்று காலை 5:00 மணிக்கு கம்பியேக்னே நகரத்தில் ஒரு தொடருந்து பெட்டியில் செருமனியுடனான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. அதே நாள் காலை 11:00 மணிக்கு - "பதினோராவது மாதத்தின் பதினோராவது நாளில் பதினோராவது மணியில்" - ஆயுத சண்டையானது முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது மற்றும் அது பயன்பாட்டுக்கு வந்தது ஆகியவற்றுக்கு இடைப்பட்ட 6 மணி நேரத்தில் மேற்கு முனையில் இருந்த இரு எதிரெதிர் பிரிவு இராணுவங்களும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கத் தொடங்கின. ஆனால் சண்டையானது போர் முனையின் பக்கவாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தது. ஏனெனில் போர் முடிவதற்கு முன்னதாக தளபதிகள் நிலப்பரப்புகளை கைப்பற்ற விரும்பினர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு ரைன்லாந்து ஆக்கிரமிப்பானது நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்பு இராணுவங்களில் அமெரிக்க, பெல்ஜிய, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் உள்ளடங்கியிருந்தன.
நவம்பர் 1918இல் செருமனி மீது படையெடுக்க தேவையான அளவுக்கு மிகுதியான வீரர்களையும், உபகரணங்களையும் நேச நாடுகள் கொண்டிருந்தன. எனினும் போர் நிறுத்த ஒப்பந்த நேரத்தில் செருமானிய எல்லையை எந்த ஒரு நேச நாட்டுப் படையும் கடக்கவில்லை. மேற்குப் போர்முனையானது பெர்லினில் இருந்து இன்னும் சுமார் 720 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது. கெய்சரின் இராணுவங்கள் போர்க்களத்திலிருந்து நன்முறையில் பின்வாங்கின. இத்தகைய காரணிகள் இன்டன்பர்க்கு மற்றும் பிற மூத்த செருமானிய தலைவர்கள் தங்களது இராணுவங்கள் உண்மையில் தோற்கடிக்கப்படவில்லை என்ற கதை பரவுவதை சாத்தியமாக்கின. இது முதுகில் குத்தி விட்டார்கள் என்ற கதையை பரப்ப வழி வகுத்தது.[256][257] செருமனியின் தோல்விக்கு அதன் சண்டையை தொடர இயலாத தன்மை (இன்புளுவென்சா தொற்றுப்பரவல் மூலம் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டு சண்டையிட திறனற்றவர்களாக இருந்த போதும் இவ்வாறாக கூறப்பட்டது) காரணமல்ல என்றும், செருமனி "தேசப்பற்றுடன் அழைத்த அழைப்பிற்கு" பொது மக்கள் நன்முறையில் பங்களிப்பதில் அடைந்த தோல்வியே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் போர் முயற்சிக்கு எதிராக நடத்தப்பட்ட நாச வேலைகளும் காரணம் என்று குறிப்பிடப்பட்டது. இந்த நாச வேலைகளை யூதர்கள், பொதுவுடைமைவாதிகள் மற்றும் போல்செவிக்குகள் செய்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டது.
போரில் செலவழிக்க போதுமான அளவு செல்வத்தை நேச நாடுகள் கொண்டிருந்தன. 1913ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதிப்பீட்டின் படி போரில் நேச நாடுகள் ஐஅ$58 பில்லியன் (₹4,14,792.8 கோடி)யை செலவழித்தன. மைய சக்திகள் வெறும் ஐஅ$25 பில்லியன் (₹1,78,790 கோடி)யையே செலவழித்தன. நேச நாடுகளில் ஐக்கிய இராச்சியம் ஐஅ$21 பில்லியன் (₹1,50,183.6 கோடி)யையும், ஐக்கிய அமெரிக்கா ஐஅ$17 பில்லியன் (₹1,21,577.2 கோடி)யையும் செலவழித்தன. மைய சக்திகளில் செருமனி ஐஅ$20 பில்லியன் (₹1,43,032 கோடி)யை செலவழித்தது.[258]
பிறகு
[தொகு]போருக்குப் பிறகு நான்கு பேரரசுகள் மறைந்தன. அவை செருமானிய, ஆத்திரியா-அங்கேரிய, உதுமானிய மற்றும் உருசியப் பேரரசு ஆகியவையாகும்.[q] தங்களது முந்தைய சுதந்திரத்தை ஏராளமான நாடுகள் திரும்பப் பெற்றன. புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன. தங்களது துணை உயர்குடியினருடன் நான்கு அரச மரபுகள் போரின் விளைவாக வீழ்ச்சி அடைந்தன. அவை உருசியாவின் ரோமனோ, செருமனியின் கோகென்செல்லெர்ன், ஆத்திரியா-அங்கேரியின் ஆப்சுபர்கு மற்றும் துருக்கியின் உதுமானிய அரசமரபு ஆகியவையாகும். பெல்ஜியம் மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் கடுமையாக சேதமடைந்தன. பிரான்சுக்கும் இதே நிலைமை ஆனது. 14 இலட்சம் பிரெஞ்சு வீரர்கள் இறந்தனர்.[259] இதில் காயம் அடைந்தவர்கள், பிற இழப்புகள் சேர்க்கப்படவில்லை. செருமனி மற்றும் உருசியாவும் இதே போல் பாதிப்புக்கு உள்ளாகின.[1]
அதிகாரப்பூர்வமாக போர் முடிக்கப்படுதல்
[தொகு]இரு பிரிவினருக்கும் இடையிலான அதிகாரப் பூர்வ போரிடும் நிலையானது மேலும் ஏழு மாதங்களுக்கு நீடித்திருந்தது. 28 சூன் 1919இல் செருமனியுடன் வெர்சாய் ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை இந்நிலை நீடித்தது. பொது மக்கள் ஆதரவு அளித்த போதும் இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்க செனட் சபையானது அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.[260][261] 2 சூலை 1921இல் ஐக்கிய அமெரிக்க அதிபர் வாரன் கமலியேல் ஆர்டிங்கால் கையொப்பமிடப்பட்ட நாக்சு-போர்ட்டர் தீர்மானம் வரை போரில் தன் பங்கை அதிகாரப் பூர்வமாக ஐக்கிய அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வரவில்லை.[262] ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய பேரரசைப் பொறுத்த வரையில் போரானது 1918ஆம் ஆண்டின் நிகழ்கால போர் முடிவு சட்டத்தின் தீர்மானங்களின் படி முடிவுக்கு வந்தது. இச்சட்டத்தின் படி பின்வரும் நாடுகளும், அவற்றுடனான போர் முடிவுக்கு வந்த தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன:
வெர்சாய் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் உதுமானியப் பேரரசுடன் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. உதுமானியப் பேரரசானது சிதைவுற்றது. அதன் பெரும்பாலான லெவண்ட் நிலப்பரப்பானது பல்வேறு நேச நாட்டு சக்திகளுக்கு பாதுகாப்பு பகுதிகளாக அளிக்கப்பட்டது. அனத்தோலியாவில் இருந்த துருக்கிய மையப் பகுதியானது மறு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு துருக்கி குடியரசானது. 1920ஆம் ஆண்டின் செவ்ரேசு ஒப்பந்தத்தால் உதுமானியப் பேரரசானது பிரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சுல்தான் என்றுமே உறுதிப்படுத்தவில்லை. துருக்கிய தேசிய இயக்கத்தால் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. இது துருக்கி வெற்றி பெற்ற துருக்கிய விடுதலைப் போருக்கும், இறுதியாக ஒப்பீட்டளவில் கடுமை குறைவான 1923ஆம் ஆண்டின் லௌசன்னே ஒப்பந்தத்திற்கு வழி வகுத்தது.
சில போர் நினைவுச் சின்னங்கள் போரின் முடிவுத் தேதியாக வெர்சாய் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 1919ஆம் ஆண்டை குறிப்பிடுகின்றன. அப்போது தான் அயல் நாடுகளில் சேவையாற்றிய பெரும்பாலான துருப்புக்கள் இறுதியாக தாயகம் திரும்பின. மாறாக போரின் முடிவு குறித்த பெரும்பாலான நினைவு விழாக்கள் 11 நவம்பர் 1918 அன்று கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது கவனம் கொள்கின்றன.[268] சட்ட பூர்வமாக கடைசி ஒப்பந்தமான லௌசன்னே ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை அதிகார பூர்வ அமைதி ஒப்பந்தங்கள் முடிவு பெறவில்லை. லௌசன்னே ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி 23 ஆகத்து 1923 அன்று நேச நாட்டுப் படைகள் கான்சுடான்டினோபிளிலிருந்து விலகின.
அமைதி ஒப்பந்தங்களும், தேசிய எல்லைகளும்
[தொகு]போருக்கு பிறகு, போருக்கான காரணங்கள் மற்றும் அமைதியை செழிப்படையச் செய்யும் காரணிகள் மீதான கல்வி சார்ந்த கவனமானது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பொதுவாக அமைதி மற்றும் போர் சார்ந்த ஆய்வுகள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பன்னாட்டு உறவு முறைகள் ஆகியவை நிறுவனப்படுத்தப்படுத்தலுக்கு வழி வகுத்ததற்கு இது ஒரு பகுதி காரணமாக இருந்தது.[269] மைய சக்திகள் மீது ஒரு தொடர்ச்சியான அமைதி ஒப்பந்தங்களை கட்டாயப்படுத்தி ஏற்கும் படி செய்ததன் மூலம் பாரிசு அமைதி மாநாடானது அலுவல் பூர்வமாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. 1919ஆம் ஆண்டின் வெர்சாய் ஒப்பந்தமானது செருமனியுடனான உறவு முறையை கையாண்டது. அதிபர் வில்சனின் 14வது நிபந்தனையை விரிவாக்கி 28 சூன் 1919 அன்று உலக நாடுகள் சங்கமாக அதைக் கொண்டு வந்தது.[270][271]
மைய சக்திகளின் ஆக்ரோஷத்தால் "தங்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட போரின் விளைவாக நேச நாட்டு மற்றும் அது தொடர்புடைய அரசாங்கங்களும், அவற்றின் குடிமக்களும் அடைந்த அனைத்து இழப்பு மற்றும் சேதங்களுக்கான பொறுப்பை" மைய சக்திகள் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. வெர்சாய் ஒப்பந்தத்தில் இந்த வரியானது பிரிவு 231இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான செருமானியர்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும், வெறுப்புணர்ச்சியும் கொண்டதால் இந்த பிரிவானது போர் குற்றவுணர்வு பிரிவு என்று பிற்காலத்தில் அறியப்பட்டது.[272] பரவலாக செருமானியர்கள் தாங்கள் "வெர்சாய் திணிப்பு" என்று அழைத்த நிகழ்வு மூலம் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எண்ணினர். செருமானிய வரலாற்றாளர் ஆகன் சுல்சே இந்த ஒப்பந்தமானது "செருமனியை சட்டப்பூர்வ பொருளாதார தடைகளின் கீழ் கொண்டு வந்தது, இராணுவ சக்தியை குறைத்தது, பொருளாதார ரீதியாக பலவீனமாக்கியது மற்றும் அரசியல் ரீதியாக அவமானப்படுத்தியது" என்றார்.[273] பெல்ஜிய வரலாற்றாளர் லாரன்சு வான் இபெர்செலே 1920கள் மற்றும் 1930களில் செருமானிய அரசியலில் போரின் நினைவு மற்றும் வெர்சாய் ஒப்பந்தத்தால் ஏற்படுத்தப்பட்ட மையப் பங்கு மீது பின்வருமாறு கவனத்துடன் குறிப்பிடுகிறார்:
செருமனியில் போர் குறித்த குற்றவுணர்வை பரவலாக மறுத்தது, இழப்பீட்டு தொகைகள் மற்றும் நேச நாடுகள் ரைன்லாந்தை தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தது ஆகிய இரு காரணங்கள் மீதான செருமானிய வெறுப்புணர்ச்சி ஆகியவை போரின் பொருள் மற்றும் நினைவு ஆகியவற்றை பரவலாக திருத்தம் செய்வதை சிக்கலாக்கியது. "முதுகில் குத்தி விட்டார்கள்" என்ற கதை மற்றும் வெர்சாய் திணிப்பை திருத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், மற்றும் செருமானிய தேசத்தை அகற்றுவதைக் குறிக்கோளாக கொண்ட ஒரு சர்வதேச அச்சுறுத்தலின் மீது இருந்த நம்பிக்கை ஆகியவை செருமானிய அரசியலின் மையப் பகுதியாக தொடர்ந்து நீடித்தது. அமைதியை விரும்பிய குஸ்தாவ் இசுதிரேசுமன் போன்ற மனிதர்கள் கூட செருமானிய குற்றவுணர்வு என்பதை பொது இடங்களில் நிராகரித்தனர். நாசிக்களை பொறுத்த வரையில் செருமானிய தேசத்தை பழி தீர்க்கும் உத்வேகத்தை நோக்கி தூண்டும் ஒரு முயற்சியாக உள் நாட்டு துரோகம் மற்றும் சர்வதேச கூட்டு சதி திட்டம் ஆகியவை குறித்த கருத்துகளை ஏற்படுத்தினர். பாசிச இத்தாலியைப் போலவே, நாசி செருமனியும் தன்னுடைய சொந்த கொள்கைகளுக்கு அனுகூலம் விளைவிப்பதற்காக போர் குறித்த நினைவை மாற்று வழியில் பயன்படுத்த விரும்பியது.[274]
அதே நேரத்தில் செருமானிய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட புதிய தேசங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்பீட்டளவில் பெரிய ஆக்ரோஷமான அண்டை நாடுகள் சிறிய நாடுகளுக்கு எதிராக செய்த அட்டூழியங்களுக்கான அங்கீகரிப்பாக கருதின.[275] குடிமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்குவது என்பதை அனைத்து தோற்கடிக்கப்பட்ட சக்திகளுக்குமான தேவையாக அமைதி மாநாடானது மாற்றியது. எனினும், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் செருமனி மட்டுமே தோற்கடிக்கப்பட்ட சக்திகளில் சேதமடையாத பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது ஆகியவை காரணமாக அனைத்து சுமைகளும் பெரும்பாலும் செருமனி மீதே விழுந்தன.
ஆத்திரியா-அங்கேரியானது பல்வேறு அரசுகளாக பிரிக்கப்பட்டது. இவை முழுவதுமாக இல்லா விட்டாலும் பெரும்பாலும் இனங்களை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டன. ஆத்திரியா மற்றும் அங்கேரி தவிர்த்து, செக்கோஸ்லோவாக்கியா, இத்தாலி, போலந்து, உருமேனியா மற்றும் யுகோஸ்லாவியா ஆகியவை இரட்டை முடியரசில் (முன்னர் தனியாக மற்றும் தன்னாட்சியுடையதாக இருந்த குரோசியா-ஸ்லவோனியா இராச்சியமானது யுகோஸ்லாவியாவுடன் இணைக்கப்பட்டது) இருந்து நிலப்பரப்புகளை பெற்றன. இந்த விளக்கங்கள் செயின்-செருமைன்-என்-லாயே மற்றும் திரியனோன் ஒப்பந்தங்களில் உள்ளடங்கியிருந்தன. இதன் விளைவாக அங்கேரி அதன் மொத்த மக்கள் தொகையில் 64 சதவீதத்தை இழந்தது. அதன் மக்கள் தொகையானது 2.09 கோடியிலிருந்து 76 இலட்சமாக குறைந்தது. மேலும், அதன் அங்கேரிய இன மக்களில் 36% (1.07 கோடியில் 33 இலட்சம்) மக்களை இழந்தது.[276] 1910ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, அங்கேரிய மொழியை பேசியவர்கள் அங்கேரிய இராச்சியத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 54 சதவீதமாக உள்ளடங்கியிருந்தனர். நாட்டிற்குள் ஏராளமான இன சிறுபான்மையினரும் இருந்தனர். அவர்கள் 16.1% உருமேனியர்கள், 10.5% ஸ்லோவாக்கியர்கள், 10.4% செருமானியர்கள், 2.5% ருதேனியர்கள், 2.5% செர்பியர்கள் மற்றும் 8% பிறர் ஆகியோர் ஆவர்.[277] 1920 மற்றும் 1924க்கு இடையில் உருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோஸ்லாவியாவுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய அங்கேரிய நிலப்பரப்புகளில் இருந்து 3.54 இலட்சம் அங்கேரியர்கள் வெளியேறினர்.[278]
அக்டோபர் புரட்சிக்கு பிறகு 1917இல் போரில் இருந்து விலகிய உருசியப் பேரரசானது, புதிய சுதந்திர நாடுகளான எஸ்தோனியா, பின்லாந்து, லாத்வியா, லித்துவேனியா மற்றும் போலந்து ஆகியவை உருசிய நிலப்பரப்பிலிருந்து உருவாக்கப்பட்டதன் காரணமாக அதன் மேற்கு எல்லையில் பெரும்பாலானவற்றை இழந்தது. ஏப்ரல் 1918இல் பெச்சராபியாவின் கட்டுப்பாட்டை உருமேனியா பெற்றது.[279]
தேசிய அடையாளங்கள்
[தொகு]123 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து மீண்டும் ஒரு சுதந்திர நாடாக உருவானது. ஒரு "சிறிய நேச நாடாக" செர்பியா இராச்சியம் மற்றும் அதன் அரசமரபானது ஒரு புதிய பல தரப்பட்ட தேசங்களை உள்ளடக்கிய அரசின் முதன்மை பகுதியாக உருவானது. செர்பியர்கள், குரோசியர்கள் மற்றும் ஸ்லோவேனியர்களின் இராச்சியம் என உருவானது. இது பிற்காலத்தில் யுகோஸ்லாவியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சதவீதத்தின் அடிப்படையில் அதிக இழப்புகளை சந்தித்த நாடாக செர்பியா இருந்தது.[280][281][282] அங்கேரிய இராச்சியத்தின் பகுதிகளுடன் பொகேமியா இராச்சியத்தை இணைத்து செக்கோஸ்லோவாக்கியா என்ற ஒரு புதிய தேசம் உருவானது. அனைத்து உருமேனிய மொழி பேசிய மக்களையும் ஓர் ஒற்றை அரசின் கீழ் ஒன்றிணைத்ததன் மூலம் உருமேனியாவானது பெரிய உருமேனியா என்ற பெயரைப் பெற்றது.[283] உருசியா சோவியத் ஒன்றியமானது. பின்லாந்து, எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாத்வியா ஆகியவை சுதந்திர நாடுகளாக உருவானதால், அவற்றை உருசியா இழந்தது. மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசானது துருக்கி மற்றும் பல பிற நாடுகளாக உருவானது.
பிரித்தானிய பேரரசில் போரானது தேசியவாதத்தை புதிய வடிவங்களில் உருவாக்கியது. ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கல்லிப்போலி யுத்தமானது அந்த நாடுகளின் "நெருப்பால் நடைபெற்ற ஞானஸ்நானம்" என்று அறியப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட இந்த நாடுகள் சண்டையிட்ட முதல் பெரிய போராக இது இருந்தது. வெறுமனே பிரித்தானிய முடியாட்சியின் குடிமக்களாக இல்லாமல் ஆத்திரேலியர்களாக ஆத்திரேலியத் துருப்புக்கள் முதன் முதலாக சண்டையிட்ட தருணங்களில் ஒன்றாக இது இருந்தது. சுதந்திரமான தேசிய அடையாளங்கள் இந்த நாடுகளில் வலிமையானது. ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து இராணுவ பிரிவுகளின் நினைவு விழாவாக, இந்த முக்கியமான தருணமானது அன்சாக் நாள் என கொண்டாடப்படுகிறது.[284][285]
விமி மலைச் சரிவு யுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டு பிரிவுகள் முதல் முறையாக ஓர் ஒற்றை பிரிவாக ஒன்றிணைந்து சண்டையிட்டன. கனடா நாட்டவர் தங்களது நாட்டை "நெருப்பிலிருந்து வார்க்கப்பட்ட" ஒரு தேசம் என்று குறிப்பிட ஆரம்பித்தனர்.[286] "அன்னை நாடுகள்" முன்னர் தோல்வியடைந்த அதே யுத்த களங்களில் வெற்றி அடைந்ததற்கு பிறகு அவர்களது சொந்த சாதனைகளுக்காக பன்னாட்டு அளவில் முதல் முறையாக கனடா நாட்டவர்கள் மதிக்கப்பட்டனர். பிரித்தானிய பேரரசின் ஒரு மேலாட்சிக்குட்பட்ட பகுதியாக போரில் நுழைந்த கனடா, அதற்குப் பின்னரும் அவ்வாறே தொடர்ந்தது. எனினும், ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரத்தையும் அது பெற்றது.[287][288] 1914இல் பிரிட்டன் போரை அறிவித்த போது மேலாட்சிக்குட்பட்ட பகுதிகள் தாமாகவே போருக்குள் வந்தன. போர் முடிவுற்ற போது கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை வெர்சாய் ஒப்பந்தத்தில் தனித் தனியாக கையொப்பமிட்டன.[289]
உருசியாவில் பிறந்த யூதரும், இசுரேலின் முதல் அதிபருமான சைம் வெயிசுமனின் ஆதரவு திரட்டும் முயற்சி மற்றும் செருமனிக்கு ஆதரவளிக்க ஐக்கிய அமெரிக்காவை அமெரிக்க யூதர்கள் வலியுறுத்துவார்கள் என்ற அச்சம் ஆகியவை 1917ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தின் பால்போர் சாற்றுதல் அறிவிக்கப்படுதலில் முடிவடைந்தது. இதன் படி, பாலத்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை உருவாக்குவதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது.[290] முதலாம் உலகப் போரில் ஒட்டு மொத்தமாக நேச நாடுகள் மற்றும் மைய சக்திகளின் பக்கம் 11.72 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத வீரர்கள் பணியாற்றினர். இதில் ஆத்திரியா-அங்கேரியில் பணியாற்றிய 2.75 இலட்சம் பேர் மற்றும் ஜார் ஆட்சிக் கால உருசியாவில் பணியாற்றிய 4.50 இலட்சம் பேரும் அடங்குவர்.[291]
நவீன அரசான இசுரேலின் நிறுவுதல் மற்றும் தொடர்ந்து இருக்கும் இசுரேல்-பாலத்தீன பிணக்கின் வேர்கள் ஆகியவை முதலாம் உலகப் போரின் விளைவாக உருவாகிய மத்திய கிழக்கின் நிலைத் தன்மையற்ற அதிகார முறைகளில் பகுதியளவு காணப்படுகின்றன.[292] போர் முடியும் முன்னர் மத்திய கிழக்கு முழுவதும் ஓரளவுக்கு அமைதி மற்றும் நிலைத் தன்மையை உதுமானியப் பேரரசு பேணி வந்தது.[293] உதுமானிய அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு பிறகு அதிகார வெற்றிடங்கள் உருவாயின. நிலப்பகுதி மற்றும் தேசியவாதங்களுக்கான முரண்பட்ட கோரிக்கைகள் எழத் தொடங்கின.[294] முதலாம் உலகப் போரின் வெற்றியாளர்களால் வரையப்பட்ட அரசியல் எல்லைகள் சீக்கிரமே திணிக்கப்பட்டன. சில நேரங்களில் உள்ளூர் மக்களுடன் அவசரமாக செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவை திணிக்கப்பட்டன. தேசிய அடையாளங்களுக்கான 21ஆம் நூற்றாண்டு போராட்டங்களிலும் இப்பிரச்சனைகள் தொடர்கின்றன.[295][296] அரபு-இசுரேல் முரண்பாடு[297][298][299] உள்ளிட்ட மத்திய கிழக்கின் நவீன அரசியல் நிலைமைக்கு திருப்பு முனையாக அமைந்ததில், முதலாம் உலகப் போரின் முடிவில் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்டது உள்ளடங்கும். அதே நேரத்தில், உதுமானிய ஆட்சியின் முடிவானது நீர் மற்றும் பிற இயற்கை வளங்கள் மீதான பரவலாக அறியப்படாத சண்டைகளுக்கும் காரணமாக அமைந்தது.[300]
இலத்தீன் அமெரிக்காவில் செருமனியின் பெருமை மற்றும் செருமானிய கருத்துக்களானவை போருக்கு பிறகு உயர்வாகவே இருந்தன. ஆனால், போருக்கு முந்தைய நிலைகளை அவை மீண்டும் பெறவில்லை.[301][302] உண்மையில், சிலியில் போரானது தீவிரமான அறிவியல் மற்றும் பண்பாட்டு தாக்க காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இதை சிலி எழுத்தாளர் எடுவார்டோ டீ லா பர்ரா இகழ்ச்சியுடன் "செருமானிய மயக்கம்" (எசுப்பானியம்: எல் எம்பிரசமியேந்தோ அலேமன்) என்று அழைத்தார்.[301]
செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவானது நேச நாடுகளின் பக்கம் சண்டையிட்டது. ஒரு சுதந்திரமான செக்கோஸ்லோவாக்கியாவுக்கான ஆதரவை பெற விரும்பியது. 14 செப்டம்பரில் உருசியாவிலும், 1917 திசம்பரில் பிரான்சிலும் (அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர்களையும் உள்ளடக்கிய), 1918 ஏப்ரலில் இத்தாலியிலும் செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவுகள் உருவாக்கப்பட்டன. செக்கோஸ்லோவாக்கியா பிரிவு துருப்புகள் ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தை உக்ரைனின் கிராமமான சிபோரிவில் சூலை 1917இல் தோற்கடித்தன. இந்த வெற்றிக்கு பிறகு செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவுகளின் எண்ணிக்கையும், சக்தியும் அதிகரித்தது. பக்மச் யுத்தத்தில் இந்த இராணுவ பிரிவானது செருமானியர்களை தோற்கடித்தது. தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்து நிலைக்கு செருமானியர்களை தள்ளியது.
உருசியாவில் இவர்கள் உருசிய உள்நாட்டுப் போரில் அதிகமாக பங்கெடுத்தனர். போல்செவிக்குகளுக்கு எதிராக வெள்ளை இயக்கத்தினருடன் இணைந்து போரிட்டனர். சில நேரங்களில் பெரும்பாலான தெற்கு சைபீரிய தொடருந்து பாதையை கட்டுப்படுத்தினர் மற்றும் சைபீரியாவின் அனைத்து முக்கியமான நகரங்களையும் கைப்பற்றினர். சூலை 1918இல் ஜார் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தை மரண தண்டனைக்கு போல்செவிக்குகள் உட்படுத்துவதற்கு உந்திய காரணிகளில் ஒன்றாக, எக்கத்தரீன்பூர்க்குக்கு அருகில் செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவு இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. ஒரு வாரத்துக்குள்ளாகவே செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவினர் நகருக்கு வந்தனர். நகரத்தை கைப்பற்றினர். உருசியாவின் ஐரோப்பிய துறைமுகங்கள் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால் இந்த இராணுவ பிரிவினர் நீண்ட சுற்று வழியில் விளாதிவோஸ்தாக் துறைமுகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இவர்களை கடைசியாக வெளியேற்றியது செப்டம்பர் 1920இல் எப்ரோன் என்ற அமெரிக்கக் கப்பல் ஆகும்.
போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட திரான்சில்வேனிய மற்றும் புகோவினியாவைச் சேர்ந்த உருமேனியர்கள் உருசியாவில் உருமேனிய தன்னார்வல இராணுவ பிரிவினராக சண்டையிட்டனர். சைபீரியா மற்றும் இத்தாலியில் உருமேனிய இராணுவ பிரிவினராக சண்டையிட்டனர். உருசிய இராணுவத்தின் ஒரு பகுதியாக கிழக்குப் போர் முனையில் பங்கெடுத்தனர். 1917ஆம் ஆண்டின் கோடைக் காலம் முதல் உருமேனிய போர் முனையில் உருமேனிய இராணுவத்தின் பகுதியினராக சண்டையிட்டனர். செக்கோஸ்லோவாக்கிய இராணுவப் பிரிவினருடன் வெள்ளை இயக்கத்தவர்களுக்கு ஓர் ஆதரவாளர்களாக செஞ்சேனைக்கு எதிராக உருசிய உள்நாட்டு போரிலும் இவர்கள் சண்டையிட்டனர். மோன்டெல்லோ, விட்டோரியோ வெனட்டோ, சிசேமொலேட், பியாவே, சிமோன், மான்டே கிராப்பா, நெர்வேசா மற்றும் பான்டே டெல்லே அல்பி ஆகிய யுத்தங்களிலும் இத்தாலிய இராணுவத்தின் ஒரு பகுதியினராக ஆத்திரியா-அங்கேரிக்கு எதிராக சண்டையிட்டனர். 1919ஆம் ஆண்டு அங்கேரிய-உருமேனிய போரில் உருமேனிய இராணுவத்தின் ஒரு பகுதியினராக சண்டையிட்டனர்.[303][304]
1918ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தின் பிற்பகுதியில் தெற்கு காக்கேசியாவில் மூன்று புதிய அரசுகள் உருவாக்கப்பட்டன. அவை ஆர்மீனியாவின் முதலாம் குடியரசு, அசர்பைஜான் சனநாயக குடியரசு மற்றும் ஜார்ஜியாவின் சனநாயக குடியரசு ஆகியவையாகும். இவை மூன்றுமே உருசியப் பேரரசில் இருந்து தங்களது சுதந்திரத்தை அறிவித்து இருந்தன. இரண்டு பிற சிறிய அரசுகளும் நிறுவப்பட்டன. அவை நடு காசுப்பிய சர்வாதிகார அரசு மற்றும் தென்மேற்கு காக்கேசிய குடியரசு ஆகியவையாகும். இதில் முதல் அரசை அசர்பைஜான் 1918ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இணைத்துக் கொண்டது. இரண்டாவது அரசானது 1919ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க-பிரித்தானிய கூட்டு சிறப்பு படையால் வெல்லப்பட்டது. 1917-18ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் காக்கேசிய போர் முனையில் இருந்து உருசிய இராணுவங்கள் பின் வாங்கிய போது, மூன்று பெரிய குடியரசுகளும் தவிர்க்க முடியாத உதுமானிய முன்னேற்றத்தை எதிர் நோக்கி இருந்தன. உதுமானிய முன்னேற்றமானது 1918ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் தொடங்கியது. 1918ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தெற்கு காக்கேசிய ஒன்றிய குடியரசானது உருவாக்கப்பட்ட போது நேச நாடுகளுக்கு சாதகமான சார்பு நிலையானது குறுகிய காலத்திற்கு பின்பற்றப்பட்டது. ஆனால், இந்நிலை மே மாதத்தில் மாறியது. அம்மாதத்தில் ஜார்ஜியர்கள் செருமனியிடமிருந்து பாதுகாப்பு வேண்டினர். அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. ஓர் இராணுவ கூட்டணியை பெரும்பாலும் ஒத்த ஓர் ஒப்பந்தத்தை உதுமானியப் பேரரசுடன் அசர்பைஜானியர்கள் ஏற்படுத்தினர். ஆர்மீனியா தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதற்காக தனியாக விடப்பட்டது. உதுமானிய துருக்கியர்களால் ஒரு முழு வீச்சிலான ஆக்கிரமிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்தலை ஐந்து மாதங்களுக்கு எதிர் நோக்கி போராடிக் கொண்டிருந்தது. இறுதியாக சர்தராபாத் யுத்தத்தில் உதுமானியர்களைத் தோற்கடித்தது.[305]
இழப்புகள்
[தொகு]1914 முதல் 1918 வரை ஒருங்கிணைக்கப்பட்ட 6 கோடி ஐரோப்பிய இராணுவ வீரர்களில் 80 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 70 இலட்சம் பேர் நிரந்தர மாற்றுத்திறனாளி ஆயினர். 1.50 கோடி பேர் படு காயமடைந்தனர். செருமனி பணிக்கு தயாராக இருந்த அதன் மொத்த ஆண்களில் 15.1 சதவீதத்தை இழந்தது. இதே போல், ஆத்திரியா-அங்கேரி 17.1 சதவிகிதத்தையும், பிரான்சு 10.5 சதவீதத்தையும் இழந்தன.[306] பிரான்சு 78 இலட்சம் வீரர்களை போருக்காக ஒருங்கிணைத்தது. இதில் 14 இலட்சம் பேர் இறந்தனர். 32 இலட்சம் பேர் காயமடைந்தனர்.[307] உடலுறுப்புகளை இழந்து பதுங்கு குழிகளில் தப்பிப் பிழைத்த வீரர்களில் சுமார் 15,000 பேர் கோரமான முக காயங்களை பெற்றனர். இதன் விளைவாக அவர்கள் சமுதாயத்தில் அவமதிக்கப்படும் நிலைக்கும், ஒதுக்கப்படும் நிலைக்கும் ஆளாயினர். இவர்கள் கியுலேசு கசீசு என்று அழைக்கப்பட்டனர். செருமனியில் போரற்ற காலத்தை விட குடிமக்களின் இறப்பானது 4.74 இலட்சம் அதிகமாக இருந்தது. இதற்கு பெரும் பகுதி காரணம் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோய்க்கான எதிர்ப்பை பலவீனமாக்கிய ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையாகும். இந்த மிகைப்படியான இழப்புகள் 1918இல் 2.71 இலட்சம் எனவும், 1919ஆம் ஆண்டின் முதல் பாதியில் மற்றுமொரு 71,000 பேர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1919ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடல் முற்றுகையானது இன்னும் செருமனியை சுற்றி நடத்தப்பட்டு கொண்டிருந்தது.[308] போரின் முடிவில் பஞ்சத்தால் ஏற்பட்ட பட்டினி லெபனானில் சுமார் 1 இலட்சம் மக்களைக் கொன்றது.[309] 1921ஆம் ஆண்டின் உருசிய பஞ்சத்தின் போது 50 இலட்சம் முதல் 1 கோடி வரையிலான மக்கள் இறந்தனர்.[310] முதலாம் உலகப் போர், உருசிய உள்நாட்டு போர் மற்றும் இறுதியாக 1920-1922ஆம் ஆண்டின் தொடர்ச்சியான பஞ்சம் ஆகியவற்றால் ஏற்பட்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்த அழிவின் விளைவாக 1922ஆம் ஆண்டு வாக்கில் உருசியாவில் 45 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை வீடற்ற குழந்தைகள் இருந்தனர்.[311] உருசியப் புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான மன நிலை கொண்ட உருசியர்கள் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறினர். 1930களில் வட சீன நகரமான கார்பின் 1 இலட்சம் உருசியர்களை கொண்டிருந்தது.[312] மேற்கொண்ட ஆயிரக்கணக்கான உருசியர்கள் பிரான்சு, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர்.
குழப்பமான போர்க் கால சூழ்நிலைகளில் நோய்கள் பல்கிப் பெருகின. 1914ஆம் ஆண்டில் மட்டும் பேன்களால் ஏற்படும் கொள்ளை நோயான டைபசு செர்பியாவில் 2 இலட்சம் பேரை கொன்றது.[313] 1918 முதல் 1922 உருசியாவில் 2.50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 30 இலட்சம் பேர் டைபசால் இறந்தனர்.[314] 1923இல் 1.30 கோடி உருசியர்கள் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டனர். போருக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து இது ஒரு அதிகப்படியான அளவாகும்.[315] 1918ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய ஒரு பெரும் இன்புளுவென்சா கொள்ளை நோயானது உலகம் முழுவதும் பரவியது. பெருமளவிலான வீரர்கள் இடம் மாற்றப்பட்டதால் இது மேலும் அதிகமானது. இந்த வீரர்கள் பெரும்பாலும் முகாம்களில் குறுகிய இடைவெளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சரியான தூய்மையற்ற துருப்புக்களை இடம் மாற்றும் கப்பல்களாலும் இந்த நோய் அதிகமாகியது. ஒட்டு மொத்தமாக எசுப்பானிய நோயானது குறைந்தது 1.70 முதல் 2.50 கோடி வரையிலான மக்களைக் கொன்றது.[3][316] இதில் ஐரோப்பியர்கள் 26.4 இலட்சம் பேரும், அமெரிக்கர்கள் 6.75 இலட்சம் பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[317] மேலும், 1915 மற்றும் 1926க்கு இடையில் மூளை அழற்சி கொள்ளை நோயானது உலகம் முழுவதும் பரவியது. கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்களை பாதித்தது.[318][319] 1917ஆம் ஆண்டில் உருசியப் புரட்சியின் சமூக சீர்குலைவு மற்றும் பரவலான வன்முறை மற்றும், அதைத் தொடர்ந்து வந்த உருசிய உள்நாட்டுப் போர் ஆகியவை முந்தைய உருசியப் பேரரசில் 2,000க்கும் மேற்பட்ட படு கொலைகளை தொடங்கி வைத்தது. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைனில் நடைபெற்றன.[320] இந்த அட்டூழியங்களில் 60 ஆயிரம் முதல் 2 இலட்சம் வரையிலான யூத குடிமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.[321]
முதலாம் உலகப் போருக்கு பிறகு முஸ்தபா கெமாலால் தலைமை தாங்கப்பட்ட துருக்கிய தேசியவாதிகளுக்கு எதிராக கிரேக்கம் சண்டையிட்டது. லௌசன்னே ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையில் பெருமளவிலான மக்கள் இடமாற்றம் செய்யப்படும் நிலைக்கு இறுதியாக இப்போர் இட்டுச் சென்றது.[322] பல்வேறு நூல்களின் படி,[323] இக்காலத்தில் பல இலட்சக்கணக்கான கிரேக்கர்கள் இறந்தனர். இக்காலம் கிரேக்க இனப் படுகொலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.[324]
போர் குற்றங்கள்
[தொகு]போரில் வேதி ஆயுதங்கள்
[தொகு]கெய்சர் வில்லியம் கல்வி நிலையத்தில் பிரிட்சு ஏபரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றிய செருமானிய அறிவியலாளர்கள் குளோரினை ஆயுதமாக்கும் ஒரு வழிமுறையை உருவாக்கியதற்கு பிறகு, இரண்டாவது இப்ரேசு யுத்தத்தின்போது (22 ஏப்ரல் - 25 மே 1915) வேதி ஆயுதங்களை முதன்முதலாக வெற்றிகரமாக செருமானிய இராணுவத்தினர் பயன்படுத்தினர்.[r][325] நேச நாட்டு படை வீரர்களை அவர்களது பதுங்கு குழி நிலைகளிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றும் ஒரு முயற்சியாக செருமானிய உயர் தலைமையானது வேதி ஆயுதங்களின் பயன்பாட்டுக்கு அனுமதியளித்தது. இதை விட அழிவை ஏற்படுத்துகிற பொதுவான ஆயுதங்களுக்கு மாற்றாக பயன்படுத்தாமல், அந்த ஆயுதங்களுடன் சேர்த்து வேதி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.[325] சீக்கிரமே வேதி ஆயுதங்கள் போர் முழுவதும் அனைத்து முதன்மையான பங்கேற்பு நாடுகளாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக சுமார் 13 இலட்சம் இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவான உயிரிழப்புகளாக மொத்தம் 90,000 பேர் இதில் இறந்தனர்.[325] எடுத்துக்காட்டாக 1,86,000 பிரித்தானிய இழப்புகள் வேதி ஆயுதங்களால் போரின் போது ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உடலில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய சல்பர் மஸ்டர்ட் வாயுவின் விளைவாக இதில் 80% பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வாயுவானது சூலை 1917இல் செருமானியர்களால் யுத்தகளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தோலில் பட்ட உடனேயே இவை தோலை எரிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவையாகும். குளோரின் அலல்து போச்சீன் வாயுவை விட மிகக் கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன.[325] அமெரிக்க போர் இழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஏற்பட இவை காரணமாக இருந்தன. முதலாம் உலகப்போரின்போது வேதி ஆயுதங்களினால் ஏற்பட்ட உருசிய இராணுவ இழப்புகள் சுமார் 5 இலட்சமாக இருந்தது.[326] வேதி ஆயுதங்களை போரில் பயன்படுத்திய நிகழ்வானது 1899ஆம் ஆண்டின் இறப்பை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் தொடர்பான கேகு அறிவிப்பு மற்றும் 1907ஆம் ஆண்டின் தரைப் போர் தொடர்பான கேகு உடன்படிக்கை ஆகியவற்றை நேரடியாக மீறியது. இச்சட்டங்கள் அவற்றின் பயன்பாட்டை தடை செய்தன.[327][328]
உதுமானியப் பேரரசின் இனப்படுகொலைகள்
[தொகு]ஆர்மீனிய மக்களை உதுமானியப் பேரரசு இனக்கருவறுப்பு செய்தது. இதில் ஒட்டுமொத்தமான இடமாற்றங்கள் மற்றும் மரண தண்டனைகளும் அடங்கும். உதுமானியப் பேரரசின் கடைசி ஆண்டுகளின் போது நடைபெற்ற இவை இனப்படுகொலையாக கருதப்படுகின்றன.[330] போரின் தொடக்கத்தில் ஆர்மீனிய மக்களுக்கு எதிராக ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான படுகொலைகளை உதுமானியர்கள் நடத்தினர். ஆர்மீனிய எதிர்ப்பு செயல்களை கலகங்களாக சித்தரித்து மேற்கொண்ட தங்களது படுகொலைகளை நியாயப்படுத்தினர்.[331] 1915ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருசியப் படைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆர்மீனிய தன்னார்வலர்கள் இணைந்தனர். இதை தெச்சிர் சட்டத்தை (இடமாற்றும் சட்டம்) கொண்டுவர ஒரு சந்தர்ப்பமாக உதுமானிய அரசாங்கமானது பயன்படுத்தியது. பேரரசின் கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆர்மீனியர்களை சிரியாவுக்கு ஆர்மீனியர்களை 1915 மற்றும் 1918க்கு இடையில் இட மாற்றம் செய்ய இது அனுமதியளித்தது. ஆர்மீனியர்கள் வேண்டுமென்றே அவர்களது இறப்பை நோக்கி அனுப்பப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் உதுமானிய கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.[332] இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றாலும், இனப்படுகொலைக்கான அறிஞர்களின் சர்வதேச அமைப்பானது 15 இலட்சம் பேர் இறந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.[330][333] துருக்கிய அரசாங்கமானது தொடர்ந்து இனப்படுகொலையை மறுத்து வந்துள்ளது. இறந்தவர்கள் இனங்களுக்கிடையிலான சண்டை, பஞ்சம் அல்லது நோயால் முதலாம் உலகப் போரின்போது இறந்தனர் என்று வாதிடுகிறது. இந்த வாதங்கள் பெரும்பாலான வரலாற்றாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன.[334]
இக்காலத்தின்போது உதுமானியப் பேரரசால் பிற இனக் குழுக்களும் இதேபோல் தாக்கப்பட்டன. இதில் அசிரியர்கள் மற்றும் கிரேக்கர்களும் அடங்குவர். பூண்டோடு அழிக்கும் ஒரே கொள்கையின் பகுதியாக இந்த நிகழ்வுகளை சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[335][336][337] குறைந்தது 2.50 இலட்சம் அசிரியக் கிறித்தவர்கள் (மொத்த மக்கள் தொகையில் பாதி பேர்), 3.50 முதல் 7.50 இலட்சம் வரையிலான அனத்தோலியா மற்றும் பான்டிக் கிரேக்கர்கள் 1915 மற்றும் 1922 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கொல்லப்பட்டனர்.[338]
போர்க் கைதிகள்
[தொகு]போரின்போது சுமார் 80 இலட்சம் போர் வீரர்கள் சரணடைந்தனர். போர்க் கைதிகளுக்கான முகாம்களில் வைக்கப்பட்டனர். போர்க் கைதிகளை நன்முறையில் நடத்துவதன் மீதான கேகு உடன்படிக்கையைப் பின்பற்றுவதாக அனைத்து நாடுகளும் உறுதி எடுத்திருந்தன. போர்முனையில் சண்டையிட்டவர்களை விட உயிர் பிழைத்திருக்கும் அளவானது போர் கைதிகளுக்கு பொதுவாக மிக அதிகமாக இருந்தது.[339]
கைதி என்ற நிலையில் இருந்த உருசியர்களில் இழக்கப்பட்டவர்களின் அளவானது 25% முதல் 31%மாக இருந்தது (பிடிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை ஒப்பிடுகையில்). ஆத்திரியா-அங்கேரிக்கு 32%, இத்தாலிக்கு 26%, பிரான்சுக்கு 12%, செருமனிக்கு 9%, பிரிட்டனுக்கு 7%மாக இருந்தது. நேச நாடுகளின் இராணுவத்தைச் சேர்ந்த போர்க் கைதிகள் சுமார் 14 இலட்சம் பேர் இருந்தனர். இதில் உருசியர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. 25 இலட்சம் முதல் 35 இலட்சம் வரையிலான போர் வீரர்களை கைதிகளாக உருசியா இழந்தது. மைய சக்திகளின் சுமார் 33 இலட்சம் போர் வீரர்கள் கைதிகளாயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உருசியர்களிடம் சரணடைந்தவர் ஆவர்.[340]
போர் வீரர்களின் அனுபவங்கள்
[தொகு]நேச நாடுகளுக்கு சண்டையிட்ட போர் வீரர்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 4,29,28,000 ஆக இருந்தது. அதேநேரத்தில் மைய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 2,52,48,000 ஆக இருந்தது.[341][342] போரில் பிரித்தானிய போர்வீரர்கள் தொடக்கத்தில் தன்னார்வலர்களாக இருந்தனர். ஆனால் பிறகு சேவையாற்றுவதற்காக கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்படும் நிகழ்வானது அதிகரித்தது. வீடு திரும்பிக்கொண்டிருந்த அனுபவசாலி வீரர்கள் தங்களது அனுபவங்களை மற்ற போர் வீரர்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்க முடியும் என்ற நிலை அடிக்கடி இருந்ததை கண்டனர். குழுவாக ஒன்றிணைந்த இவர்கள் "அனுபவசாலி வீரர்களின் அமைப்புகள்" அல்லது "இலீசியன்கள்" என்ற அமைப்புகளை ஏற்படுத்தினர். ஒரு சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க அனுபவசாலி வீரர்களின் அனுபவங்களானவை அமெரிக்காவின் காங்கிரசு நூலகத்தால் அனுபவசாலிகளின் வரலாற்று திட்டம் என்ற திட்டத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.[343]
கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்தல்
[தொகு]பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கட்டாயப்படுத்தி இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது பொதுவானதாக இருந்தது. எனினும் ஆங்கில மொழி பேசிய நாடுகளில் இது சர்ச்சைக்குரியதாக இருந்தது.[344] குறிப்பாக சிறுபான்மையின குழுக்களுக்கு மத்தியில் இது பிரபலமாற்றதாக இருந்தது. குறிப்பாக அயர்லாந்தின் கத்தோலிக்கர்கள்[345] மற்றும் ஆத்திரேலியா,[346][347] மற்றும் கனடாவில் இருந்த பிரெஞ்சு கத்தோலிக்கர்கள் ஆகியோர் மத்தியில் இது பிரபலமாற்றதாக இருந்தது.[348][349]
ஐக்கிய அமெரிக்காவில் கட்டாயப்படுத்தி சேர்க்கும் நிகழ்வானது 1917ஆம் ஆண்டு தொடங்கியது. பொதுவாக நன்முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனியாக கிராமப்புற பகுதிகளில் ஒரு சில எதிர்ப்புகளை மட்டுமே சந்தித்தது.[350] போரின் முதல் ஆறு வாரங்களில் தொடக்க இலக்கான 10 இலட்சம் பேரில் வெறும் 73,000 தன்னார்வலர்கள் மட்டுமே இணைத்தனர். இதற்குப் பிறகு இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தன்னார்வலர்களை சேர்ப்பதற்கு மாறாக, கட்டாயப்படுத்தி ஆள் சேர்ப்பதை முதன்மையாக சார்ந்திருக்க நிர்வாகமானது முடிவு செய்தது.[351]
யுத்த கள செய்தியாளர்கள்
[தொகு]ஒவ்வொரு முக்கியமான சக்தியையும் சேர்ந்த இராணுவ மற்றும் பொது பார்வையாளர்கள் போரின் போக்கை உன்னிப்பாக பின்பற்றி வந்தனர். எதிரி தரைப்படை மற்றும் கப்பற்படைக்குள் இணைந்து செயலாற்றும் நவீன கால செய்தியாளர்களின் நிலையை ஓரளவு ஒத்த ஒரு வகையில் பலரால் நிகழ்வுகளை செய்திகளாக தெரிவிக்க இயன்றது.
பொருளாதார விளைவுகள்
[தொகு]போரிலிருந்து பெரிய மற்றும் சிறிய அளவிலான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டன. ஏராளமான ஆண்கள் போருக்குச் சென்றதால் குடும்பங்களின் நிலை கடினமானது. முதன்மையாக வருமானம் ஈட்டும் ஒருவரின் இறப்பு அல்லது இல்லாத நிலையானது அதற்கு முன்னர் இருந்திராத எண்ணிக்கையில் பெண்களை பணியாளர்களாக மாறும் நிலைக்கு தள்ளியது. அதே நேரத்தில் போருக்குள் அனுப்பப்பட்டதால் தாங்கள் இழந்த பணியாளர்களை இட மாற்றம் செய்ய வேண்டிய தேவை தொழில் துறைக்கும் இருந்தது. பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை போராட்டத்துக்கு இது உதவியாக அமைந்தது.[352]
அனைத்து நாடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் பங்கானது அதிகரித்தது. செருமனி மற்றும் பிரான்சு ஆகிய இரண்டு நாடுகளிலுமே 50%யும் தாண்டியது. பிரிட்டனில் இந்நிலையை கிட்டத்தட்ட அடைந்தது. ஐக்கிய அமெரிக்காவில் தங்களது வாங்கல்களுக்கு பணம் செலுத்த அமெரிக்க இருப்புப் பாதைகளில் தங்களது விரிவான முதலீட்டிலிருந்து பிரிட்டன் நிதி பெற்றது. பிறகு வால் ஸ்ட்ரீட்டில் இருந்து ஏராளமான அளவில் கடன்களை பெறத் தொடங்கியது. அமெரிக்கா அதிபர் வில்சன் 16ஆம் ஆண்டின் பிந்தைய பகுதியில் கடன்களை தடைசெய்யும் நிலையில் இருந்தார். ஆனால் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் நேச நாடுகளுக்கு வழங்கிய நிதியுதவியை பெருமளவுக்கு அதிகரிக்க அனுமதியளித்தார். 1919ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா இந்த கடன்களை திரும்ப செலுத்துமாறு கோரியது. இந்த திருப்பிச் செலுத்தல்களில் பகுதியளவு செருமானியப் போர் இழப்பீடுகளில் இருந்து நிதி பெற்றன. இதேபோல் செருமானிய போர் இழப்பீடுகள் செருமனிக்கு அமெரிக்கா வழங்கிய கடன்களால் ஆதரிக்கப்பட்டன. இவ்வாறு ஒரு சுற்று போல இருந்த இந்த அமைப்பானது 1931ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது. சில கடன்கள் என்றுமே மீண்டும் செலுத்தப்படவில்லை. 1934இல் முதலாம் உலகப்போர் கடனாக ஐக்கிய அமெரிக்காவுக்கு பிரிட்டன் இன்னும் ஐஅ$4.4 பில்லியன் (₹31,467 கோடி)-ஐ[s] கொடுக்க வேண்டியிருந்தது. இதில் கடைசி தவணையானது இறுதியாக 2015ஆம் ஆண்டு திரும்ப செலுத்தப்பட்டது.[353]
அத்தியாவசிய போர் மூலப்பொருட்களை பெறுவதற்கு தன்னுடைய காலனிகள் பக்கம் உதவிக்காக பிரிட்டன் திரும்பியது. பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து இவற்றை பெற்ற காலனிகளின் வழங்கும் தன்மையானது கடினமானது. ஆல்பர்ட் கிச்சன் போன்ற புவியியலாளர்கள் ஆப்பிரிக்க காலனிகளில் விலை மதிப்புமிக்க தாது பொருட்களுக்கான புதிய ஆதாரங்களை கண்டறிவதற்காக அழைக்கப்பட்டனர். கிச்சன் தற்போது கானா என்றும் அந்நேரத்தில் தங்க கடற்கரை என்றும் அழைக்கப்பட்ட பகுதியில் வெடிகலன்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மாங்கனீசின் முக்கியமான புதிய இருப்புகளை கண்டறிந்தார்.[354]
வெர்சாய் ஒப்பந்தத்தின் 231வது பிரிவானது ("போர்க் குற்றவுணர்வு" பிரிவு என்று இது அழைக்கப்படுகிறது) "செருமனி மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ஆக்ரோசத்தால் தங்கள்மீது ஏற்படுத்தப்பட்ட போரின் ஒரு விளைவாக நேச நாடுகள் மற்றும் அதன் தொடர்புடைய அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு" செருமனி பொறுப்பேற்று கொண்டதாக குறிப்பிட்டது.[355] இழப்பீடுகளுக்கு ஒரு சட்டப்பூர்வ அடித்தளத்தை இடுமாறு இதன் சொற்கள் அமைக்கப்பட்டன. இதே போன்ற ஒரு பிரிவானது ஆத்திரியா மற்றும் அங்கேரியுடனான ஒப்பந்தங்களிலும் செருகப்பட்டது. எனினும் இதில் எந்த ஒரு நாடும் இதை போர்க் குற்ற உணர்வை ஏற்றுக் கொண்டதாக புரிந்துகொள்ளவில்லை.[356] 1921இல் மொத்த இழப்பீட்டு தொகையானது 132 பில்லியன் தங்க செருமானிய மார்க்குகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் "நேச நாட்டு நிபுணர்கள் செருமனியால் இந்த தொகையை செலுத்த முடியாது" என்பதை அறிந்திருந்தனர். மொத்த தொகையானது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவானது "வேண்டும் என்றே செலுத்த இயலாததாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது" என்று குறிப்பிடப்படுகிறது. இதன் "முதன்மையான நோக்கமானது பொதுமக்களின் கருத்தை திசை மாற்றுவதாகும்... ஒட்டுமொத்த தொகையானது பேணப்பட்டு வருகிறது என்று அவர்கள் நம்பவைப்பதாகவும்" இருந்தது.[357] இவ்வாறாக 50 பில்லியன் தங்க செருமானிய மார்க்குகள் (ஐஅ$12.50 பில்லியன் (₹89,395 கோடி)) "செருமனியால் செலுத்த இயலும் என்று நேச நாடுகளால் மதிப்பிடப்பட்ட உண்மையான தொகையை பிரதிநிதித்துவப்படுத்தியது". "எனவே... செருமனியால் செலுத்தப்பட வேண்டிய ஒட்டுமொத்த இழப்பீட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தியது".[357]
இந்த தொகையானது பணமாகவோ அல்லது பொருட்களாகவோ (நிலக்கரி, மரம், வேதி சாயங்கள் போன்றவை) செலுத்தப்படலாம் என்ற நிலை இருந்தது. மேலும் வெர்சாய் ஒப்பந்தத்தின் வழியாக சில இழந்த பகுதிகளும் இழப்பீட்டு தொகையை நோக்கி வரவு வைக்கப்பட்டன. லோவைன் நூலகத்தை மறு சீரமைப்பதில் உதவுவது போன்ற பிற செயல்களும் வரவு வைக்கப்பட்டன.[358] 1929 வாக்கில் பெரும் பொருளியல் வீழ்ச்சியானது ஏற்பட்டது. உலகம் முழுவதும் அரசியல் குழப்பத்திற்கு காரணமானது.[359] 1932இல் இழப்பீடுகளை வழங்குவதானது சர்வதேச சமூகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்நேரத்தில் செருமனி 20.598 பில்லியன் தங்க செருமானிய மார்க்குகளுக்கு சமமானவற்றை மட்டுமே இழப்பீடாக செலுத்தியிருந்தது.[360] அடால்ப் இட்லரின் வளர்ச்சியை தொடர்ந்து 1920கள் மற்றும் 1930களின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட மற்றும் வாங்கப்பட்ட அனைத்து பத்திரங்கள் மற்றும் கடன்கள் இரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா எழுத்தாளர் தாவீது ஆன்டெல்மேனின் குறிப்புப்படி "செலுத்த மறுத்தது என்பது ஓர் ஒப்பந்தத்தை செல்லாததாக ஆக்கவில்லை. பத்திரங்கள், ஒப்பந்தங்கள் இன்னும் நீடித்தன." இவ்வாறாக, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1953இல் இலண்டன் மாநாட்டில் தாங்கள் கடனாக வாங்கிய நிதியை மீண்டும் செலுத்த துவங்க செருமனி ஒப்புக்கொண்டது. 3 அக்டோபர் 2010 அன்று இத்தகைய பத்திரங்கள் மீதான கடைசி தவணையை செருமனி செலுத்தியது.[t]
ஆத்திரேலிய பிரதமர் பில்லி கியூக்சு பிரித்தானிய பிரதமர் தாவீது லாய்ட் ஜார்ஜுக்கு பின் வருமாறு எழுதினார், "உங்களால் மேம்பட்ட நிபந்தனைகளை பெற இயலவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் இதற்கு வருந்துகிறேன், பிரித்தானிய பேரரசு மற்றும் அதன் கூட்டாளிகள் செய்த பெருமளவு தியாகங்களுக்கு இழப்பீடு வழங்குவது வழங்கக் கோரும் ஓர் ஒப்பந்தத்தை உறுதி செய்ய ஏதாவது ஒரு வழியை இப்போதாவது நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்." ஆத்திரேலியா £55,71,720 பவுண்டுகளை போர் இழப்பீடுகளாக பெற்றது. ஆனால் போரால் ஆத்திரேலியாவுக்கு ஏற்பட்ட நேரடி செலவீனங்கள் £37,69,93,052 பவுண்டுகளாக இருந்தன. 1930களின் நடுப்பகுதி வாக்கில் ஒருவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த ஓய்வூதியங்கள், போர் நன்மதிப்பு தொகைகள், மூழ்கடிக்கப்பட்ட நிதிக் கட்டணங்கள் மற்றும் வரிகள் ஆகியவை £83,12,80,947 பவுண்டுகளாக இருந்தன.[365] போரில் சேவையாற்றிய 4,16,000 ஆத்திரேலியர்களில் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர், மேற்கொண்ட 1,52,000 பேர் காயமடைந்தனர்.[341]
கைக் கடிகாரமானது பெண்களின் ஆபரணங்களில் ஒன்றாக இருந்து ஓர் அன்றாட நடைமுறை வாழ்வின் பொருளாக பரிணாமம் அடைய இப்போர் பங்காற்றியது. கைக் கடிகாரமானது சட்டைப்பை கடிகாரத்தை இடம் மாற்றியது. சட்டைப்பை கடிகாரத்தை பயன்படுத்த ஒரு வெறுங்கை தேவைப்பட்டது.[366] சட்டைப்பை கடிகாரங்கள் போர் நேரங்களில் ஆற்றல் மிக்கவையாக இல்லாததால் இராணுவத்தால் பயன்படுத்துவதற்காக பதுங்கு குழிக் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டன. ரேடியோவை முன்னேற்றுவதற்கு இராணுவ நிதி அளிக்கப்பட்டதானது போருக்குப்பின் ரேடியோ ஊடகங்கள் பிரபலமடைவதில் முக்கியப் பங்காற்றியது.[366]
போருக்கு ஆதரவும், எதிர்ப்பும்
[தொகு]ஆதரவு
[தொகு]பால்கன் பகுதியில் தலைவர் அன்டே துரும்பிக் போன்ற யூகோசுலாவிய தேசியவாதிகள் போருக்கு வலிமையான ஆதரவை தெரிவித்தனர். ஆத்திரியா-அங்கேரியிடமிருந்தும், பிற அயல் நாட்டு சக்திகளிடமிருந்தும் யூகோசுலாவியர்கள் விடுதலை பெறுவதையும், சுதந்திரமான யூகோசுலாவியா உருவாக்கப்படுவதையும் விரும்பினர். துரும்பிக் தலைமையிலான யூகோசுலாவிய குழுவானது பாரிசில் 30 ஏப்ரல் 1915இல் உருவாக்கப்பட்டது. ஆனால் சீக்கிரமே அதன் அலுவலகத்தை இலண்டனுக்கு நகர்த்தியது.[367] ஏப்ரல் 1918இல் செக்கோஸ்லோவாக்கிய, இத்தாலிய, போலந்து, திரான்சில்வேனிய, மற்றும் யூகோசுலாவிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒடுக்கப்பட்ட தேசியங்களின் உரோம் காங்கிரசானது சந்திப்பு நடத்தியது. ஆத்திரியா-அங்கேரிக்குள் வாழ்ந்து வந்த மக்களின் தேசிய தன்னாட்சி உரிமைக்கு ஆதரவளிக்க நேச நாடுகளை வலியுறுத்தின.[368]
மத்திய கிழக்கில் போரின் போது வளர்ந்து வந்த துருக்கிய தேசியவாதத்திற்கு எதிர்வினையாக உதுமானிய நிலப்பரப்புகளில் அரபு தேசியவாதமானது வளர்ந்தது. அனைத்து அரபு நாடுகளையும் ஒன்றிணைத்து ஓர் அரசை உருவாக்க வேண்டும் என அரபு தேசியவாத தலைவர்கள் வலியுறுத்தினர். 1916இல் சுதந்திரம் அடையும் ஒரு முயற்சியாக உதுமானியர்களால் கட்டுப்படுத்தப்பட்ட மத்திய கிழக்கின் நிலப்பரப்புகளில் அரபுப் புரட்சியானது தொடங்கியது.[369]
கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவின் ஐந்தாம் இயசு சோமாலிலாந்து படையெடுப்பில் பிரித்தானியர்களுடன் போரிட்ட துறவி அரசுக்கு ஆதரவளித்தார்.[370] அடிஸ் அபாபாவில் இருந்த செருமானிய தூதரான வான் சைபர்க் இது பற்றி கூறியதாவது, "இத்தாலியர்களை வீட்டுக்கு துரத்திவிட்டு, செங்கடல் கடற்கரையை பெற்று பண்டைய காலத்தில் இருந்த அளவுக்கு பேரரசை மீண்டும் நிறுவுவதற்கு எத்தியோபியாவுக்கு தற்போது நேரம் வந்துவிட்டது" என்றார். மைய சக்திகளின் பக்கம் முதலாம் உலகப் போருக்குள் நுழையும் தருவாயில் எத்தியோப்பியப் பேரரசானது இருந்தது. எத்தியோப்பிய உயர்குடியினர் மீது நேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சேகல் யுத்தத்தில் இயசு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் இது நடைபெறவில்லை.[371] இசுலாமுக்கு மதம் மாறியதாக இயசு மீது குற்றம் சாட்டப்பட்டது.[372] எத்தியோப்பிய வரலாற்றாளர் பகுரு செவ்தேவின் கூற்றுப்படி இயசு மதம் மாறியதாக நிருபிக்க பயன்படுத்தப்பட்ட ஆதாரமானது நேச நாடுகளால் கொடுக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த இயசுவின் ஒரு போலி புகைப்படம் ஆகும்.[373] இயசுவின் புகைப்படத்தை பிரித்தானிய ஒற்றரான டி. ஈ. லாரன்சு மாற்றியமைத்தார் என சில வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.[374]
ஆகத்து 1914இல் போர் தொடங்கியபோது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சமதர்மவாத கட்சிகள் தொடக்கத்தில் ஆதரவு அளித்தன.[368] ஆனால் ஐரோப்பிய சமதர்மவாதிகள் தேசிய வாதங்களின் அடிப்படையில் பிரிந்திருந்தனர். வகுப்புவாத சண்டை எனும் கோட்பாடானது போருக்கான அவர்களது தேசப்பற்று ஆதரவை விட அதிகமாக இருந்தது.[375] ஒரு முறை போர் தொடங்கியவுடன் ஆத்திரிய, பிரித்தானிய, பிரெஞ்சு, செருமானிய மற்றும் உருசியப் சமதர்மவாதிகள் போரில் தங்களது நாடுகளின் தலையீட்டுக்கு ஆதரவளித்ததன் மூலம் வளர்ந்து வந்த தேசியவாத நீரோட்டத்தை பின் தொடர ஆரம்பித்தனர்.[376]
போர் வெடித்ததன் மூலம் இத்தாலி தேசியவாதமானது கிளறப்பட்டது. ஒரு வேறுபட்ட அரசியல் பிரிவுகள் தொடக்கத்தில் வலிமையாக போருக்கு ஆதரவளித்தன. மிக முக்கியமான மற்றும் பிரபலமான, போருக்கான இத்தாலிய தேசியவாத ஆதரவாளர்களில் ஒருவராக கேப்ரியல் டி'அனுன்சியோ இருந்தார். இழந்த நிலப்பரப்புகளை இத்தாலி பெற வேண்டும் என்ற கொள்கையை இவர் ஊக்குவித்தார். போரில் இத்தாலி தலையிடுவதற்கு இத்தாலிய பொதுமக்களின் ஆதரவை பெறுவதற்கு உதவியாக இருந்தார்.[377] இத்தாலிய தாராளமய கட்சியானது பாலோ போசெல்லியின் தலைமைத்துவத்தின் கீழ் நேச நாடுகளின் பக்கம் போரில் தலையிடுவதற்கு ஊக்குவித்தது. இத்தாலிய தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காக தன்டே அலிகியேரி சமூகத்தை பயன்படுத்தியது.[378] போருக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என இத்தாலிய சமதர்மவாதிகள் பிரிந்து இருந்தனர். போரின் தீவிர ஆதரவாளர்களாக பெனிட்டோ முசோலினி மற்றும் லியோனிடா பிசோலட்டி உள்ளிட்டோர் இருந்தனர்.[379] எனினும், போருக்கு எதிரான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு இத்தாலிய சமதர்ம கட்சியானது போரை எதிர்ப்பதென முடிவு செய்தது. சிவப்பு வாரம் என்று அழைக்கப்பட்ட பொது வேலைநிறுத்தத்தில் இது முடிவடைந்தது.[380] முசோலினி உள்ளிட்ட போருக்கு ஆதரவான தேசியவாத உறுப்பினர்களை இத்தாலிய சமதர்ம கட்சியானது நீக்கியது.[380] தொழிற்சாலையின் உரிமையாளராக தொழிலாளர் சங்கங்களே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடைய முசோலினி, ஆத்திரியா-அங்கேரியின் இத்தாலிய மக்கள்தொகையுடைய பகுதிகள் மீண்டும் இத்தாலியிடமே வர வேண்டும் என்ற உரிமை கோரலை அடிப்படையாகக் கொண்டு போருக்கு ஆதரவு அளித்தார். போரில் தலையிடுவதற்கு ஆதரவளித்த இல் போபாலோ டி இத்தாலியா மற்றும் பாசி ரிவல்யூசனரியோ டி அசியோன் இண்டர்நேசனிசுதா ("சர்வதேச செயல்பாட்டுக்கான புரட்சி பாசி") என்ற அமைப்புகளைத் அக்டோபர் 1916இல் தொடங்கினார். இது 1919இல் பின்னர் பாசி இத்தாலியனி டி கம்பாட்டிமென்டோ என்று முன்னேற்றமடைந்தது. இதுவே பாசிசத்தின் தொடக்கமாக அமைந்தது.[381] அன்சால்டோ (ஓர் ஆயுதம் தயாரிக்கும் கம்பெனி) மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து நிதிகளைப் பெற முசோலினியின் தேசியவாதமானது அவருக்கு வாய்ப்பு வழங்கியது. போருக்கு ஆதரவளிக்க சமதர்மவாதிகள் மற்றும் புரட்சியாளர்களை இணங்க வைக்க இல் போபாலோ டி இத்தாலியாவை உருவாக்க இவருக்கு இது வாய்ப்பு வழங்கியது.[382]
தேசப்பற்று நிதிகள்
[தொகு]போர்வீரர்களின் நன்மை, அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான பெரிய அளவிலான நிதி திரட்டும் முயற்சிகள் போரில் ஈடுபட்ட இரு பிரிவு நாடுகளிலும் நடைபெற்றன. ஆணி மனிதர்கள் என்ற பிரச்சாரமானது இதற்கான ஒரு செருமானிய எடுத்துக்காட்டாக உள்ளது. பிரித்தானியப் பேரரசைச் சுற்றியும் ஏராளமான தேசப்பற்று நிதிகள் திரட்டப்பட்டன. இதில் தேசிய மதிப்பு வாய்ந்த தேசப்பற்று நிதிக் கழகம், கனடா தேசப்பற்று நிதி, குயின்ஸ்லாந்து தேசப்பற்று நிதி ஆகியவை அடங்கும். 1919 வாக்கில் நியூசிலாந்தில் இத்தகைய 983 நிதி திரட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றன.[383] ஒன்றுடன் ஒன்று கலந்தவையாக, வீணானவையாக மற்றும் முறைகேடானவையாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டதால் அடுத்த உலகப்போர் தொடங்கியபோது நியூசிலாந்து நிதிகளானவை சீரமைக்கப்பட்டன.[384] ஆனால் 2002ஆம் ஆண்டில் இத்தகைய 11 நிதி திரட்டும் நடவடிக்கைகள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தன.[385]
எதிர்ப்பு
[தொகு]போருக்கு எதிராக பேசியவர்களை பல நாடுகள் சிறையில் அடைத்தன. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் செயல்பாட்டாளர் யூஜின் தெப்சு மற்றும் பிரிட்டனில் பெர்ட்ரண்டு ரசல் ஆகியோரும் இதில் உள்ளடங்குவர். ஐக்கிய அமெரிக்காவில் 1917ஆம் ஆண்டு வேவு பார்ப்பு சட்டம் மற்றும் 1918ஆம் ஆண்டின் ஆட்சி எதிர்ப்பு தூண்டல் சட்டம் ஆகியவை இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதை எதிர்ப்பது அல்லது நாட்டிற்கு "விசுவாசமற்றது" என்று தோன்றிய எந்த ஓர் அறிக்கையையும் வெளியிடுவதை அரசு சார்ந்த குற்றமாக ஆக்கின. அரசாங்கத்தை விமர்சித்த அனைத்து பாதிப்புகளும் புழக்கத்தில் விடப்படுவதில் இருந்து தபால் தணிக்கையாளர்களால் நீக்கப்பட்டன.[386] தேசப்பற்று அற்றது என்று கருதப்பட்ட தகவல்கள் குறித்த செய்திகளுக்காக பலர் நீண்ட கால சிறைத்தண்டனைகளை அனுபவித்தனர்.
ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தேசியவாதிகள் போரில் தலையிடுவதை எதிர்த்தனர். 1914 மற்றும் 1915இல் போரில் பங்கெடுக்க பெரும்பாலான அயர்லாந்து மக்கள் ஆதரவு தெரிவித்த போதும், முன்னேறிய ஐரிய தேசியவாதிகளின் ஒரு சிறுபான்மையினர் போரில் பங்கெடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.[387] அயர்லாந்தில் சுயாட்சி பிரச்சனையின் போது போராட்டம் தொடங்கியது. இப்பிரச்சனை 1912இல் மீண்டும் வந்தது. சூலை 1914 வாக்கில் அயர்லாந்தில் உள்நாட்டு போர் வெடிக்கலாம் என்ற ஒரு கடுமையான நிலையானது இருந்தது. ஐரிய சுதந்திரத்தை நோக்கி முயற்சிக்க ஐரிய தேசியவாதிகளும், மார்க்சியவாதிகளும் முயற்சி செய்தனர். இது 1916ஆம் ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை எழுச்சியில் முடிந்தது. பிரிட்டனில் அமைதியின்மையை கிளற அயர்லாந்துக்கு 20,000 துப்பாக்கிகளை செருமனி அனுப்பியது.[388] ஈஸ்டர் பண்டிகை எழுச்சிக்கு எதிர்வினையாக அயர்லாந்தை இராணுவச் சட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய அரசாங்கமானது கொண்டு வந்தது. இருந்த போதிலும் ஒரு முறை புரட்சிக்கான உடனடி அச்சுறுத்தலானது மறைந்ததற்குப் பிறகு அரசு அதிகார மையங்கள் தேசியவாத எண்ணத்திற்கு சலுகைகளையும் அளிக்க முயற்சித்தன.[389] எனினும் அயர்லாந்தில் போரில் தலையிடுவதற்கான எதிர்ப்பு நிலையானது அதிகரித்தது. இது 1918ஆம் ஆண்டின் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கும் பிரச்சனையில் முடிவடைந்தது.
பிற எதிர்ப்பானது மனசாட்சிக்காக போrai எதிர்த்தவர்களிடம் இருந்து வந்தது. இதில் சில சமதர்மவாதிகளாகவும், சிலர் சமயவாதிகளாகவும் இருந்தனர். இவர்கள் போரிட மறுத்தனர். பிரிட்டனில் 16,000 பேர் மனசாட்சிக்காக போரை எதிர்ப்பவர்கள் என்ற நிலையை தருமாறு வேண்டினர்.[390] இதில் சிலர், மிகவும் குறிப்பாக முக்கியமான அமைதி செயற்பாட்டாளரான இசுடீபன் கோபௌசு இராணுவத்திலும் மற்றும் பிற சேவைகளிலும் பணியாற்ற மறுத்தார்.[391] பலர் தனிமைச் சிறை மற்றும், ரொட்டித் துண்டு மற்றும் தண்ணீர் மட்டும் உணவாகக் கொடுக்கப்படும் உணவுகளை உட்கொண்டு ஆண்டு கணக்கில் சிறை தண்டனை அனுபவித்தனர். போருக்கு பிறகும் கூட பிரிட்டனில் பல வேலைவாய்ப்பு விளம்பரங்கள் "மனசாட்சிக்காக போரை எதிர்த்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை" என்று குறிப்பிட்டிருந்தன.[392]
1917 மே 1 முதல் 4 ஆகிய நாட்களில் பெட்ரோகிராடைச் சேர்ந்த சுமார் 1 இலட்சம் பணியாளர்கள் மற்றும் போர் வீரர்களும், அவர்களுக்கு பிறகு பிற உருசிய நகரங்களின் போல்செவிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட பணியாளர்களும், போர் வீரர்களும் "போர் ஒழிக!" மற்றும் "அனைத்து சக்தியும் சோவியத்துகளுக்கே!" என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உருசிய இடைக்கால அரசுக்கு ஒரு பிரச்சனையாக இந்த பெரும் போராட்டங்கள் உருவாயின.[393] மிலன் நகரத்தில் மே 1917இல் போல்செவிக்கு புரட்சியாளர்கள் போரை நிறுத்துவதற்காக அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து ஈடுபட்டனர். தொழிற்சாலைகளை மூடியும், பொது போக்குவரத்தை நிறுத்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.[394] பீரங்கி வண்டிகள் மற்றும் எந்திர துப்பாக்கியுடன் மிலன் நகருக்குள் நுழையும் நிலைக்கு இத்தாலிய இராணுவம் தள்ளப்பட்டது. போல்செவிக்குகள் மற்றும் அரசின்மையாளர்களை எதிர்கொண்டது, அவர்கள் 23 மே வரை வன்முறை கலந்த சண்டையிட்டனர். அன்று இராணுவமானது நகரத்தின் கட்டுப்பாட்டை பெற்றது. கிட்டத்தட்ட 50 பேர் (மூன்று இத்தாலிய போர் வீரர்கள் உட்பட) கொல்லப்பட்டனர். 800 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.[394]
தொழில்நுட்பம்
[தொகு]முதலாம் உலகப் போரானது 20ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம் மற்றும் 19ஆம் நூற்றாண்டு போர்த் தந்திரங்களுக்கு இடையிலான ஒரு சண்டையாக தொடங்கியது. தவிர்க்க முடியாத வகையில் பெரும் எண்ணிக்கையிலான போர் வீரர் இழப்புகளை ஏற்படுத்தியது. எனினும், 1917ஆம் ஆண்டின் முடிவு வாக்கில் தற்போது தசம இலட்சக்கணக்கிலான போர் வீரர்களைக் கொண்டிருந்த முக்கிய இராணுவங்கள் நவீனமயமாக்கப்படிருந்தன. தொலைபேசி, கம்பியற்ற தகவல்தொடர்பு,[396] கவச சிற்றுந்துகள், பீரங்கி வண்டிகள் (குறிப்பாக முதல் பீரங்கி வண்டி மூலப்படிவமான சிறிய விள்ளியின் வருகையை முதல்) மற்றும் விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்தன.[397]
சேணேவியானதும் ஒரு பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. 1914இல் போர் முனைகளில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. தங்களது இலக்குகள் மீது நேரடியாக சுட்டன. 1917 வாக்கில் துப்பாக்கிகள் (மேலும் சிறு பீரங்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகளும் கூட) மூலமான மறைமுக சுடுதலானது பொதுவானதாக உருவானது. இலக்குகள் மற்றும் தூரத்தைக் கண்டறிதல், குறிப்பாக விமானங்கள் மற்றும் பொதுவாக புறந்தள்ளப்பட்ட இராணுவத்தின் கள தொலைபேசிகள் ஆகிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினர்.[398]
நிலைத்த இறக்கை வானூர்திகள் தொடக்கத்தில் இராணுவப் புல ஆய்வு மற்றும் தரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எதிரி வானூர்திகளை சுட்டு வீழ்த்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் சண்டை வானூர்திகள் உருவாக்கப்பட்டன. தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகளானவை முதன்மையாக செருமானியர்கள் மற்றும் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டன. செருமானியர்கள் முன்னர் பயன்படுத்தப்பட்ட செப்லின் எனும் வான் கப்பல்களையும் உருவாக்கினர்.[399] போரின் முடிவின்போது விமானம் தாங்கி கப்பல்களும் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டன. 1918இல் செருமனியின் தொந்தெர் என்ற இடத்தில் செப்லின் வான் கப்பல்கள் சேமவைப்பு மனையை அழிக்கும் ஓர் ஊடுருவலில் எச். எம். எஸ். பியூரியசு விமானம் தாங்கிக் கப்பலானது சோப்வித் கேமல் போர் விமானங்களை பயன்படுத்தியது.[400]
தூதரக பேச்சுவார்த்தைகள்
[தொகு]நாடுகளுக்கு இடையிலான இராணுவம் சாராத தூதரக மற்றும் பிரச்சார தொடர்புகளானவை தங்களது போர் முயற்சிக்கு ஆதரவை திரட்டவோ அல்லது எதிரிகளுக்கான ஆதரவை குறைக்கும் என்ற வகையிலோ வடிவமைக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்டுகள் முழுவதும், போர்க்கால தூதரக பேச்சுவார்த்தைகள் ஐந்து பொருள்கள் மீது கவனம் கொண்டிருந்தன: பிரச்சார திட்டங்கள்; போரின் இலக்குகளை வரையறுத்தல் மற்றும் மறு வரையறை செய்தல், போர் தொடர்ந்த காலத்தில் இது மிகவும் கடினமானதாக உருவானது; எதிரிகளின் நிலப்பரப்பின் பகுதிகளை அளிக்க முன்வருவதன் மூலம் தங்களது பிரிவுக்குள் நடுநிலை வகித்த நாடுகளை (இத்தாலி, உதுமானியப் பேரரசு, பல்கேரியா, உருமேனியா) இழுத்தல்; மையசக்தி நாடுகளுக்குள் இருந்த தேசியவாத சிறுபான்மையின இயக்கங்களை நேச நாடுகள் ஊக்குவித்தல், குறிப்பாக செக் இனத்தவர், போலந்துக்காரர் மற்றும் அரேபியர்களுக்கு மத்தியில் ஊக்குவித்தல். மேலும் நடுநிலை வகித்த நாடுகள், அல்லது ஒரு பக்கம் அல்லது மற்றொரு பக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அமைதி வாய்ப்புகள் வந்தன; இவற்றில் ஒன்று கூட நீண்ட கால, முன்னேற்றம் அடையவில்லை.[401][402][403]
மரபும், நினைவும்
[தொகு]வெடிக்காத வெடிபொருட்கள்
[தொகு]2007ஆம் ஆண்டு வரையிலும் கூட வெர்துன் மற்றும் சொம்மே போன்ற யுத்த கள தளங்களில் குறிப்பிட்ட பாதைகளில் வருகை புரிபவர்கள் தள்ளி செல்லுமாறு குறிப்பிட்ட எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. முந்தைய யுத்த களங்களுக்கு அருகில் வாழ்ந்த விவசாயிகளுக்கு வெடிக்காத வெடிபொருட்கள் தொடர்ந்து ஓர் அச்சுறுத்தலாக தொடர்ந்து நீடித்ததன் காரணமாக இவை வைக்கப்பட்டிருந்தன. பிரான்சு மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வெடிக்காத வெடிபொருட்களை கண்டுபிடிப்பவர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்களின் குழுவால் உதவி பெறப்படுகின்றனர். போரால் சில இடங்களில் தாவர வளர்ச்சியானது இன்றும் இயல்பான நிலைக்குத் திரும்பாமலேயே உள்ளது.[404]
வரலாற்றியல்
[தொகு]... "வியப்பு, நண்பா," நான் கூறினேன், "இங்கு துயரம் கொள்வதற்கு என்று எந்த ஒரு காரணமும் இல்லை."
"இல்லை," மற்றொருவன் கூறினான், "கடந்துபோன ஆண்டுகளை மட்டும் நினைத்து துயரப்படு"...— வில்ஃபிரட் ஓவன், வியப்பான சந்திப்பு, 1918[405]
நவீன போர்முறையின் பொருள் மற்றும் விளைவுகளை உணர்ந்தறியும் முதல் தோராயமான முயற்சிகளானவை போரின் தொடக்க நிலைகளின்போது தொடங்கியது. இச்செயல்முறையானது போர் முழுவதும் மற்றும் போர் முடிந்ததற்குப் பிறகும் தொடர்ந்தது. ஒரு நூற்றாண்டு கழித்து தற்போதும் கூட இது தொடர்கிறது. முதலாம் உலகப்போரை பயிற்றுவிப்பது என்பது தனித்துவமான சவால்களை கொடுத்தது. இரண்டாம் உலகப்போருடன் ஒப்பிடும்போது முதலாம் உலகப் போரானது "தவறான காரணங்களுக்காக போரிடப்பட்ட ஒரு தவறான போர்" என்று பொதுவாக எண்ணப்படுகிறது. இரண்டாம் உலகப்போரை விளக்க பயன்படுத்தப்படும் நன்மைக்கும், தீமைக்குமான சண்டை என்ற குறிப்பீட்டை இது கொண்டிருக்கவில்லை. அடையாளப்படுத்தக்கூடிய கதாநாயகர்கள் மற்றும் எதிரிகளை இது கொண்டிருக்காததால், இது பெரும்பாலும் பொருண்மை சார்ந்ததாக பயிற்றுவிக்கப்படுகிறது. போரின் வீணான தன்மை, தளபதிகளின் முட்டாள் தனம் மற்றும் போர்வீரர்களின் அப்பாவித்தனம் போன்ற வரிகளை இது கொண்டுள்ளது. போரின் சிக்கலான தன்மையானது இத்தகைய மிகவும் எளிமையான வரிகளால் பெரும்பாலும் முக்கியத்துவம் அற்றதாக ஆக்கப்படுகிறது.[404] அமெரிக்க வரலாற்றாளரும், தூதருமான ஜார்ஜ் கென்னன் இப்போரை "எதிர்காலத்தில் வளரும் தன்மையைக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டின் அழிவு" என்று குறிப்பிடுகிறார்.[406]
வரலாற்றாளர் கெதர் சோன்சின் வாதப்படி முதலாம் உலகப் போரின் வரலாற்றியலானது சமீபத்திய ஆண்டுகளின் பண்பாட்டு மாற்றத்தால் புது வலிமை பெற்றுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் தீவிரமயமாக்கப்பட்டது, இனம், மருத்துவ அறிவியல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை குறித்த முழுவதும் புதிய கேள்விகளை அறிஞர்கள் எழுப்புகின்றனர். மேலும், வரலாற்றாளர்கள் நீண்ட காலமாக விவாதித்த ஐந்து முக்கிய பொருட்கள் குறித்த நமது புரிதலை புதிய ஆய்வானது மாற்றியமைத்துள்ளது: ஏன் போர் தொடங்கியது? ஏன் நேச நாடுகள் வென்றன? அதிகப்படியான இழப்பு வீதங்களுக்கு தளபதிகள் காரணமா? பதுங்கு குழி போர் முறையின் குரூரங்களை எவ்வாறு போர் வீரர்கள் தாங்கினார்? போர் முயற்சியை உள்நாட்டு பொது மக்கள் எந்த அளவு ஏற்றுக் கொண்டு, ஆதரவளித்தனர்?.[407][408]
நினைவுச் சின்னங்கள்
[தொகு]நினைவுச் சின்னங்களானவை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் பட்டணங்களில் எழுப்பப்பட்டுள்ளன. யுத்த களங்களுக்கு அருகில் திடீரென்று உருவாக்கப்பட்ட சமாதிகளில் புதைக்கப்பட்டவர்கள், அமைப்புகளின் கவனத்தின் கீழ் அதிகாரப்பூர் சமாதிகளுக்கு படிப்படியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த அமைப்புகளில் பொதுநலவாய போர் சமாதி பணி முறை குழு, அமெரிக்க போர் நினைவு சின்னங்களின் பணி முறை குழு, செருமானிய போர் சமாதி பணி முறை குழு மற்றும் பிரான்சின் போர் நினைவுச்சின்ன அமைப்பான லே சோவனைர் பிராங்காய்சு ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதில் பெரும்பாலான சமாதிகள் போரில் தொலைந்து போன அல்லது அடையாளப்படுத்தப்படாத இறந்தவர்களுக்கான மைய நினைவுச்சின்னங்களையும் கொண்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கவை தொலைந்து போனவர்களுக்கான மெனின் நினைவுச்சின்ன வாயில் மற்றும் சொம்மே யுத்தகளத்தில் தொலைந்தவர்களுக்கான தியெப்வால் நினைவுச் சின்னம் ஆகியவை ஆகும்.[சான்று தேவை]
1915இல் கனடா நாட்டைச் சேர்ந்த ஓர் இராணுவ மருத்துவரான யோவான் மெக்ரே பிளாண்டர் புலத்தில் என்ற ஒரு கவிதையை எழுதினார். பெரும் போரில் மறைந்தவர்களுக்கு ஒரு வணக்கமாக இவர் இதை எழுதினார். 8 திசம்பர் 1915 அன்று பிரிட்டனின் பஞ்ச் இதழில் இது பதிப்பிக்கப்பட்டது. இது இன்றும் தொடர்ந்து ஒப்புவிக்கப்படுகிறது. குறிப்பாக போர்நிறுத்த நினைவுநாள் மற்றும் நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியவற்றில் ஒப்புவிக்கப்படுகிறது.[409][410]
மிசூரியின் கேன்சாஸ் நகரத்தில் உள்ள தேசிய முதலாம் உலகப் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவுச்சின்னமானது முதலாம் உலகப்போரில் சேவையாற்றிய அனைத்து அமெரிக்கர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் ஆகும். 1 நம்பர் 1921 அன்று சுதந்திர போர் நினைவுச்சின்னமானது 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டிருந்த கூட்டத்திற்கு முன்னாள் உச்ச பட்ச நேச நாட்டு தளபதிகள் உரையாற்றிய போது அர்ப்பணிக்கப்பட்டது.[411]
2014 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின்போது போர் நினைவு விழாக்களுக்கு பயன்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சிய அரசாங்கமானது குறிப்பிடத்தக்க அளவிலான நிதியை ஒதுக்கியது. இதற்கு முதன்மையான அமைப்பாக ஏகாதிபத்திய போர் அருங்காட்சியகம் திகழ்ந்தது.[412] 3 ஆகத்து 2014 அன்று பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஆலந்து மற்றும் செருமானிய அதிபர் ஜோச்சிம் கெளக் ஆகிய இருவரும் பிரான்சு மீது செருமனி போரை அறிவித்ததன் நூறாம் ஆண்டு நினைவை குறிப்பதற்காக வியேல் அர்மன்ட் என்ற இடத்தில் ஒரு நினைவு சின்னத்திற்காக முதல் கல்லை அமைத்தனர். இது செருமானிய மொழியில் கர்த்மன்சுவில்லர்கோப் என்று அழைக்கப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மற்றும் செருமானிய போர் வீரர்களுக்காக இது அமைக்கப்பட்டது.[413] போர் நிறுத்தத்தின் நூறாம் ஆண்டு நினைவு விழாக்களின்போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் செருமானிய வேந்தர் அங்கெலா மேர்க்கெல் ஆகியோர் கோம்பெய்ன் என்ற இடத்தில் போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட தளத்திற்கு வருகை புரிந்தனர். சமரசத்திற்கான பெயர் பொறிப்புக் கல்லை திறந்து வைத்தனர்.[414]
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம். இது முதலாம் உலகப் போரில் இறந்த நேச நாட்டு இராணுவங்களின் வெற்றியை நினைவுபடுத்துவதற்காக முதன்முதலில் கட்டப்பட்டது. இது புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.[415]
பண்பாட்டு நினைவில்
[தொகு]இந்தக் பிரிவு உள்ள எடுத்துக்காட்டுகளும், பார்வைகளும் முதன்மையாக பிரிட்டன் சார்ந்து கையாளப்பட்டுள்ளன. இக்கட்டுரை குறித்த இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.(சூன் 2017) |
முதலாம் உலகப்போரானது மக்களின் ஒட்டுமொத்த நினைவில் ஒரு நீடித்திருந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியா காலத்தில் இருந்து நீடித்திருந்த நிலைத்தன்மையான சகாப்தத்தின் முடிவை இது குறித்ததாக பிரிட்டனில் பலரால் இது பார்க்கப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் பலர் இப்போரை ஒரு திருப்புமுனையாக கருதுகின்றனர்.[416] வரலாற்றாளர் சாமுவேல் ஐன்சின் விளக்கத்தின்படி:
தங்கள் மனம் முழுவதும் பெருமிதம், மேன்மை மற்றும் இங்கிலாந்து ஆகிய மனக் கருத்துக்களை முழுவதுமாக கொண்டிருந்த ஒரு தலைமுறை அப்பாவி இளைஞர்கள் சனநாயகத்திற்காக இந்த உலகத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்காக போருக்குச் சென்றனர். முட்டாள் தளபதிகளால் திட்டமிடப்பட்ட முட்டாள் தனமான யுத்தங்களில் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் போரில் தங்களது அனுபவங்களால் அதிர்ச்சியும், விரக்தியும், கசப்புணர்வும் கொண்டனர். தங்களது உண்மையான எதிரிகள் செருமானியர்கள் அல்ல, ஆனால் தங்கள் நாட்டில் வாழ்ந்த தங்களிடம் பொய் கூறிய முதியவர்களே என்பதைக் கண்டனர். தங்களைப் போருக்கு அனுப்பிய சமூகத்தின் மதிப்பை அவர்கள் நிராகரித்தனர். இவ்வாறு செய்ததன் மூலம் தங்களது சொந்த தலைமுறையை கடந்த காலத்திலிருந்தும், தங்களது பண்பாட்டு மரபிலிருந்தும் பிரித்துக் கொண்டனர்.[417]
முதலாம் உலகப்போர் குறித்த மிகப் பொதுவான பார்வையாக இது உருவானது. இதைத் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்ட கலை, திரைப்படம், கவிதைகள் மற்றும் கதைகள் ஆகியவற்றால் இப்பார்வையானது நீடிக்க செய்யப்பட்டுள்ளது. ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட், பாத்ஸ் ஆப் குளோரி மற்றும் கிங்ஸ் அன்ட் கன்ட்ரி போன்ற திரைப்படங்கள் இந்த யோசனையை நீடித்திருக்கச் செய்தன. அதே நேரத்தில் போல் போர்க்காலங்களில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் காம்ரேட்ஸ், பாப்பீஸ் ஆப் பிளாண்டர்ஸ், மற்றும் சோல்டர் ஆர்ம்ஸ் ஆகியவை போர் குறித்த சமகாலப் பார்வைகளானவை பெரும்பாலும் நேர்மறையாகவே இருந்தன என்பதைக் காட்டுகின்றன.[418] இதே போல் பால் நாசு, யோவான் நாசு, கிறித்தோபர் நெவின்சன், மற்றும் என்றி டாங்ஸ் போன்றோரின் கலைகள் பிரிட்டனில் வளர்ந்து வந்த பார்வையுடன் ஒத்தவாறு போர் குறித்து ஒரு எதிர்மறையான பார்வையை சித்தரித்தன. அதே நேரத்தில் போர் காலத்தில் பிரபலமான கலைஞராக இருந்த முயிர்கெட் போன் போன்றோர் போர் குறித்து மிகுந