உள்ளடக்கத்துக்குச் செல்

போர்நிறுத்த நினைவுநாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்நிறுத்த நினைவுநாள் (Armistice Day) என்பது முதலாம் உலகப்போரில், செருமனிக்கும், அதற்கு எதிரான கூட்டுப் படைகளுக்குமிடையில் (en:Allies of World War I) போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகக் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் ஒரு நாளாகும். இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 1918 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 11 ஆம் நாள் காலை 5:45 மணிக்கு, பிரான்சில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டு, அன்று பகல் 11:00 மணிக்கு செயற்பாட்டுக்கு வந்தது.[1] அதனால் இதனை 11.11.11 என்ற குறியீட்டால் அழைப்பர். இந்த நாளின் நூறாண்டு நிறைவுற்றதை முன்னிட்டு, நூற்றாண்டு நினைவுநாள் 11 நவம்பர் 2018 இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.[2]

பொருள்

[தொகு]

Armistice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வினை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் குறிப்பிடுவர். Armistice என்ற சொல்லுக்கு "தற்போதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு, போர் நிறுத்த நாள், 1918 முதல் ஆண்டுதோறும் முதலாவது உலகப்போர் நிறுத்தம் கொண்டாடப்பட்டு வரும் நாள் (நவம்பர் 11)" என்று அகராதி கூறுகிறது.[3].

பெயர் சூட்டல்

[தொகு]

முதல் உலகப்போர் நிறைவுற்றபோது இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1,634 குழந்தைகளுக்கு போர் தொடர்பான, போர் நடைபெற்ற இடங்கள் தொடர்பான பெயர்கள் சூட்டப்பட்டன. அவை வெர்டன் (Verdun, பிரான்சில் உள்ள ஒரு இடம்), கிட்சனர் (Kitchener) மற்றும் ஹைக் (Haig), ஐக்கிய இராச்சியத்தில் அமைக்கப்பட்ட பிரித்தானிய படையின் பெயர் கிட்சனர் [4] படை), வெற்றி (Victory), அமைதி (Peace), 11 நவம்பர் 1918 அன்றோ, அந்நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளோ பிறந்த குழந்தைகளுக்கு ஆர்மிஸ்டைஸ் (Armistice), பச்சென்டாலே (Passchendaele, பெல்ஜியத்தில் உள்ள இடம்), சோமே (Somme, பிரான்சில் உள்ள சோமே ஆறு அருகில்), ஒய்பிரஸ் (Ypres, பெல்ஜியத்தில் ஒரு இடம் ஒய்பிரஸ்), ஏமியன்ஸ் (Amiens, பிரான்ஸில் உள்ள ஏமியன்ஸ்) என்றவாறு அமையும்.

இந்தியாவின் பங்களிப்பு

[தொகு]

போரில் கலந்துகொண்ட பெரும்பாலும் கல்வியறிவற்ற, வட இந்தியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய வீரர்களின் பங்களிப்பு என்பதானது முதல் உலகப்போரின் மறக்கப்பட்ட குரலாகவே தெரிகிறது. 1914 முதல் 1918 வரை நடைபெற்ற இப்போரில் பிரிட்டிஷாருடன் இணைந்து அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் போரிட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கப் படைகளின் கூட்டு எண்ணிக்கையை விட அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 34,000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தம் இன்னுயிரை ஈந்தனர். ஆனால் அவர்களின் பங்களிப்பு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.[5] போரின்போது பிரிட்டிஷாரின் பதுங்குகுழிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு போரிட்டு காயமடைந்த டர்வான் சிங் நேகி என்ற இந்திய வீரர் விக்டோரியா கிராஸ் விருதை முதன்முதலில் பெற்ற பெருமையுடையவர். அவரைப் போன்ற வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால் போரில் தோற்றிருக்க வாய்ப்புண்டு. போரில் பங்குபெற்ற இந்திய வீரர்களில் 74,000க்கும் மேற்பட்டோர் போர்க்களத்திலிருந்து திரும்பவேயில்லை.[6] இந்திய வீரர்களின் தியாகத்தினை நினைவுகூறும் வகையில் அவர்களுடைய வீரச் செயல்களுக்காக 12 மிக உயர்ந்த விருதுகள் உள்பட 13,000 பதக்கங்கள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.[7]

நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள்

[தொகு]
  • 1970களில் பதியப்பட்ட, இந்திய வீரர்களின் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய பேட்டியின் கையெழுத்துப்படிகள் பிரித்தானிய நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.[5]
  • கல்கத்தா போர் நினைவுச்சின்னத்தில் இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. இங்குள்ள இரண்டு உலகப்போர் வீரர்களுக்கான கல்லறைகளில் 95 கல்லறைகள் முதல் உலகப்போரில் உயிர் நீத்தவர்களுடையதாகும்.[8]
  • முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சு வார்த்தை, பாரீஸ் நகரில் ஒரு சொகுசு ரெயிலில் நடைபெற்றதை நினைவுகூரும் விதமாக உலகப்போர் நிறைவு 100 ஆண்டு நினைவு தினம் சிறப்பாக நடத்தப்பட்டது.[9] இந்திய ராணுவ வீரர்களின் பங்களிப்பினை நினைவுகூறும் வகையில் பிரான்சில் முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் பாரிசிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள வில்லர்ஸ் கில்ஸ் என்னுமிடத்தில் திறந்துவைக்கப்பட்டது.[10] சர்வதேச அளவில் இச்சின்னத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.[7]
  • முதல் உலகப்போரில் கலந்துகொண்ட வீரர்களின் 10,000க்கு மேற்பட்ட உறவினர்கள் விருதுகளையும், வீரர்களின் புகைப்படங்களையும் கையிலேந்தி, அவ்வீரர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபடி லண்டனில் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.[11]
  • ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் போர் நினைவுச்சின்னத்தில் இரு நிமிட அமைதி காத்து போர் வீரர்களை நினைவுகூர்ந்தனர்.[12]
  • ஆஸ்திரேலியாவில் கான்பெர்ராவில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.[13] அடெலெய்டில் விமானம் மூலம் காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு நிற பாப்பி மலர்கள் தூவப்பட்டன.[13] பிரிஸ்பேனிலும் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.[12]
  • நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.[13]
  • பெல்ஜியத்தில் யைப்ரஸ் என்னுமிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தினர்.அங்கு மெனின் கேட் என்னுமிடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னத்தில் 54,000 பிரித்தானிய வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.[14]
  • மியான்மரில் நினைவு நிகழ்வு நடத்தப்பெற்றது.[15]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Armistice: The End of World War I,1918". EyeWitness to History. Archived from the original on 26 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  2. "Armistice Day: moving events mark 100 years since end of first world war - as it happened". Guardian News and Media Limited or its affiliated companies. The Guardian. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், சென்னைப் பல்கலைக்கழகம், 1963, மறுபதிப்பு 2010
  4. From the archive, 6 August 1914: Lord Kitchener to be Secretary for War, தி கார்டியன்,6 அக்டோபர் 2014
  5. 5.0 5.1 Indians in the trenches: voices of forgotten army are finally to be heard, தி கார்டியன், 27 அக்டோபர் 2018
  6. A sacrifice remembered: on India's role in World War I, தி இந்து, 9 அக்டோபர் 2018
  7. 7.0 7.1 பிரான்ஸில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்: வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார், தினமணி, 11 நவம்பர் 2018
  8. Kolkata pays its tributes, தி இந்து, 11 நவம்பர் 2018
  9. முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் - பாரீஸ் நகரில் உலகத் தலைவர்கள் அணிவகுத்தனர், தினத்தந்தி, 12 நவம்பர் 2018
  10. தி இந்து, 11 நவம்பர் 2018
  11. 'A nation's thank you': 10,000 pay tribute to war dead in the people's procession, தி கார்டியன், 11 நவம்பர் 2018
  12. 12.0 12.1 Remembrance Day, 100th anniversary of end of World War I marked in Australia, Hong Kong, Agencia EFE, 11 நவம்பர் 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  13. 13.0 13.1 13.2 உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் - ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி, மாலை மலர், 11 நவம்பர் 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Thousands gather at Ypres for last great act of remembrance, தி கார்டியன், 12 நவம்பர் 2018
  15. World marks the centenary of the Great War Armistice, தி இந்து, 12 நவம்பர் 2018

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்நிறுத்த_நினைவுநாள்&oldid=3925480" இலிருந்து மீள்விக்கப்பட்டது