உள்ளடக்கத்துக்குச் செல்

சைக்சு–பிக்கோ ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சைக்சு–பிக்கோ ஒப்பந்தம்
Sykes–Picot Agreement
சைக்சு, பிக்கோ ஆகியோர் கையொப்பமிட்ட வரைபடம், காம்பனின் 9 மே 1916 கடிதத்தில் கிரே என்பவருக்கு இணைக்கப்பட்டுள்ளது.
சைக்சு, பிக்கோ ஆகியோர் கையொப்பமிட்ட வரைபடம், காம்பனின் 9 மே 1916 கடிதத்தில் கிரே என்பவருக்கு இணைக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்டது 3 சனவரி 1916
நிறைவேற்றம் 9–16 மே 1916
இடம்
வரைவாளர்
  • பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் மார்க் சைக்சு
  • பிரெஞ்சு மூன்றாம் குடியரசு பிரான்சுவா சியார்சசு-பிக்கோ
கைச்சாத்திட்டோர்
  • பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் எட்வர்டு கிரே
  • பிரெஞ்சு மூன்றாம் குடியரசு பவுல் காம்போன்
நோக்கம் முத்தரப்பு நாடுகள் உதுமானியப் பேரரசைத் தோற்கடிப்பதில் வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் முன்மொழியப்பட்ட செல்வாக்கு, கட்டுப்பாட்டுப் பகுதிகளை வரையறுத்தல்.

சைக்சு–பிக்கோ ஒப்பந்தம் (Sykes–Picot Agreement) என்பது 1916 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஓர் இரகசிய ஒப்பந்தமாகும். உருசியா, இத்தாலி ஆகியவற்றின் ஒப்புதலுடன், முதலாம் உலகப் போரில் உதுமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தால் அதன் மாகாணங்களை எவ்வாறு தங்களுக்குள் பிரித்துக் கொள்ளலாம் என்பதை இவ்வொப்பந்தம் வரையறுக்கிறது.

முதலாம் உலகப் போரின் போது உதுமானியப் பேரரசைத் தோற்கடிப்பதில் முத்தரப்பு நாடுகள் வெற்றி பெறும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது, மேலும் அதன் பிரிவினையைப் பற்றிச் சிந்தித்து தொடர்ச்சியாக நடைபெற்ற இரகசிய ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இது அமைந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் முதன்மைப் பேச்சுவார்த்தைகள் 1915 நவம்பர் 23 - 1916 சனவரி 3 காலப்பகுதியில் நடந்தன, அந்த நாளில் பிரித்தானிய, பிரெஞ்சு அரச அதிகாரிகளான மார்க் சைக்சு, பிரான்சுவா சியார்சசு-பிக்கோ ஆகியோர் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பாணையில் கையெழுத்திட்டனர்.[1][2] இந்த ஒப்பந்தம் அந்தந்த அரசாங்கங்களால் 1916 மே 9, 1916 மே 16 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்டது.[3]

இந்த உடன்பாடு அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே உள்ள உதுமானிய மாகாணங்களை பிரித்தானிய, பிரான்சியக் கட்டுப்பாடுப் பகுதிகளாக திறம்படப் பிரித்தது. பிரித்தானிய, பிரான்சியக் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகள் சைக்சு-பிக்கோ கோட்டால் பிரிக்கப்பட்டன.[4] இந்த ஒப்பந்தம், இன்று தெற்கு இசுரேல், பாலத்தீனம், ஜோர்தான், தெற்கு ஈராக்கு என அழைக்கப்படும் பகுதிகளை இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டிற்கு ஒதுக்கியது, அத்துடன் மத்தியதரைக் கடலுக்கான தமது போக்குவரத்தை வலுப்படுத்த கைஃபா, ஏக்கர் துறைமுகங்களை உள்ளடக்கிய கூடுதல் சிறிய பகுதியையும் அது ஒதுக்கியது.[5][6][7] அதேவேளை, தென்கிழக்கு துருக்கி, குர்திஸ்தான் பகுதி, சிரியா, லெபனான் ஆகியவற்றை பிரான்சு தனது கட்டுப்பாட்டிற்குள் ஒதுக்கியது.[7]

இவற்றை விட, சசோனவ்-பாலியோலாக் ஒப்பந்தத்தின் விளைவாக, 1915 கான்ஸ்டண்டினோபில் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட கான்ஸ்டண்டினோபில், துருக்கிய நீரிணைகள் ஆகியவற்றுடன் கூடுதலாக மேற்கு ஆர்மீனியாவை உருசியப் பேரரசு பெற இருந்தது.[7] இத்தாலி 1917 இல் செயிண்ட்-சான்-டி-மௌரிய ஒப்பந்தத்தின் மூலம் சைக்சு–பிக்கோ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து, தெற்கு அனத்தோலியாவைப் பெற்றது.[7] பின்னர் கட்டளைப் பாலத்தீனத்தை விட சிறிய பரப்பளவைக் கொண்ட பாலத்தீனப் பகுதி, ஒரு "சர்வதேச நிர்வாகத்தின்" கீழ் வரவிருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் 1918 ஆம் ஆண்டு ஆங்கிலோ-பிரான்சிய மோடஸ் விவேண்டி உடன்படிக்கைக்கு அடிப்படையாக நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது, இது லெவண்டில் ஆக்கிரமிக்கப்பட்ட எதிரிப் பிரதேச நிர்வாகத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியது. இன்னும் விரிவாக, 1918 இல் உதுமானியப் பேரரசின் தோல்வியைத் தொடர்ந்து உதுமானியாவின் பிளவுகளுக்கு மறைமுகமாக வழிவகுத்தது. போருக்குப் பிறகு, பிரான்சியர்கள் பாலத்தீனம், மோசுல் ஆகியவற்றை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். சைக்சு-பிக்கோ கட்டமைப்பைத் தொடர்ந்து ஏப்ரல் 1920 சான் ரெமோ மாநாட்டில் லெவண்ட், மெசொப்பொத்தேமியாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டன; பாலத்தீனத்திற்கான பிரித்தானிய ஆணை 1948 வரை நீடித்தது, மெசொப்பொத்தேமியாவிற்கான பிரித்தானிய ஆணை ஈராக்குடனான இதேபோன்ற ஒப்பந்தத்தால் மாற்றப்பட இருந்தது, சிரியா, லெபனானுக்கான பிரெஞ்சு ஆணை 1946 வரை நீடித்தது. அனத்தோலியப் பகுதிகள் ஆகத்து 1920 செவ்ரெசு ஒப்பந்தத்தால் ஒதுக்கப்பட்டன; இருப்பினும், இந்த இலக்குகள் 1919–23 துருக்கிய விடுதலைப் போர், அதைத் தொடர்ந்து லொசேன் ஒப்பந்தம் ஆகியவற்றால் முறியடிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fromkin, David (1989). A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire and the Creation of the Modern Middle East. New York: Owl. pp. 286, 288. ISBN 978-0-8050-6884-9.
  2. Martin Sicker (2001). The Middle East in the Twentieth Century. Greenwood Publishing Group. p. 26. ISBN 978-0275968939. Retrieved July 4, 2016 – via Google Books.
  3. "International Boundary Study; Jordan – Syria Boundary" (PDF). Archived from the original (PDF) on 2009-03-27. Retrieved 2009-05-08. p. 8.
  4. Peter Mansfield, British Empire magazine, Time-Life Books, no 75, p. 2078
  5. Eugene Rogan, The Fall of the Ottomans, p. 286
  6. "Sykes-Picot Agreement - World War I Document Archive". wwi.lib.byu.edu. Archived from the original on 2009-04-26. Retrieved 2009-09-23.
  7. 7.0 7.1 7.2 7.3 Alexander Mikaberidze (2011). Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia [2 volumes]: A Historical Encyclopedia. ABC-CLIO. pp. 861–. ISBN 978-1-59884-337-8.

வெளி இணைப்புகள்

[தொகு]